பசி என்பது ஓர் உயிரியல் தூண்டல்; எல்லா உயிரினங்களிடமும் நிலவும் பொதுவான பண்பியல்பும் கூட. பசி உணர்வின் எதிர்வினையாக அமைவது உணவு. எல்லா உயிரினங்களும் உணவினை உண்ணுதலை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக பழக்கப்படுத்தியுள்ளன. ஆனால் மனிதன் மட்டும் உணவினைப் பதப்படுத்தி சமைத்து உண்ணும் நடைமுறையினை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இதுவே உணவின் உடலியல் தேவையினைக் கடந்து பண்பாட்டின் பரிமாணமாக வியாபித்துள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியினரும் உணவினைத் தங்களின் பண்பாட்டு நடைமுறையின் வழியாக இனங்காண்கின்றனர். இவை அனைத்திற்கும் பின்புலமானதாக குறிப்பிட்ட மக்களின் உணவு தொடர்பான உடல், உள, சமூக, ஆன்மிக ஆரோக்கியத்தின் மீதான ஈடுபாட்டினைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில் சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மனின் மாறுபாடில்லா உண்டி எனும் நூல் தமிழர் பண்பாட்டின் உணவுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தனித்துவத்தினையும் அதன் வழியாகக் கட்டமைக்கப்படும் ஆரோக்கியமான வாழ்வின் செல்நெறிகளையும் எமக்குத் தருகின்றது.
உணவுப் பாரம்பரியம் என்பது ஒரு பிராந்தியத்தின் தனித்துவத்தைக் குறிப்பதாகும். ஏனெனில், உலகிலுள்ள அனைத்துப் பிராந்தியங்களிலும் உணவுக்கான அடிப்படை ஆதாரங்களான தானியங்களும் பிற வளங்களும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அவை அந்தந்தப் பிராந்தியத்தின் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலைமைகளுடன் பிணைந்தே காணப்படுகின்றன.
இலங்கையில் தமிழர் தொன்றுதொட்டு பாரம்பரியமாக வாழ்ந்துவரும் ஒரு பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. தமிழர் பாரம்பரியத்தின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பாரம்பரியத்தின் முதன்மையான ஒரு பண்பாட்டு அம்சமாகக் காணப்படுவது உணவு நடைமுறையாகும். நீண்ட நெடிய உணவுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பேணி வருகின்ற யாழ்ப்பாணத்து மக்களிடையே நிலவி வருகின்ற உணவுப் பண்பாட்டின் தனித்துவமான விடயங்களை ஆசிரியர் தன்னுடைய ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் இந்நூலில் முன்வைத்துச் செல்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.
பழந்தமிழ் இலக்கியமான சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரை உணவு பற்றிய பல்வேறு கருத்துகளை உள்ளடக்கியுள்ளன. இந்நிலையில் ஆசிரியர்,
“மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு”
எனும் திருக்குறளின் மருந்து எனும் அதிகாரத்தில் வரும் குறட்பாவின் முதன்மை அடிகளை முன்வைத்து தனது நூலிற்கான தலைப்பினை இட்டுள்ளார். எவ்விதத் தீங்கும் இல்லாத அமிர்தம் போன்ற உணவாகிலும் அதனை அளவோடு உண்பவன் உடலுக்கு நோய்கள் எற்படாது என்பது மேற்குறிப்பிட்ட குறட்பாவின் பொருள்.
இன்று மக்கள் எதிர்நோக்கும் உடல்சார்ந்த நோய்களுக்கு முதன்மையான அடிப்படை மக்கள் தாம் உண்ணும் உணவு பற்றிச் சிந்திக்கத் தவறுவதே ஆகும். எமது முன்னோர்கள் தங்களது உணவின் தன்மைகளை, அவற்றினைத் தமது உணவாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிவகைகளை அனுபவத்தின் வழிகொண்டு எமக்குரைத்துள்ளனர். ஆனால் இன்று உலகமயப்பட்டுச் செல்லும் நுகர்வுப் பண்பாட்டின் விளைவுகளால் எம்மிடையே நிலவும் உணவுப் பழக்கவழக்கங்கள் பெரிதும் மாற்றத்திற்குள்ளாகுவதுடன் அவற்றின் விளைவான நோய்களும் எமக்கு ஏற்படுகின்றன.
இந்நிலையில், ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் நூலின் வழியாக ஆசிரியர் சுதர்மன் பாரம்பரியமான உணவின் தனித்துவங்களையும், அவற்றில் மறைந்துள்ள போசணைகளையும், அவற்றினைத் தயாரிப்பதற்கான பாரம்பரிய வழிமுறைகளையும் மிக எளிமையாக எழுதியுள்ளாரர்.
‘மாறுபாடில்லா உண்டி’ எனும் இந்நூலானது யாழ்ப்பாணத்தின் முதன்மை வலைத்தள ஊடகம் ‘எழுநா’ எனும் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது. இந்நூலில் 14 அத்தியாயங்கள் உண்டு. இவற்றில் மாறுபாடில்லா உண்டி, யாழ்பாணப் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள், பசியும் பிணியும் போக்கும் அரிசி எனத்தொடங்கி யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுப் பழக்கவழக்கங்களை முதன்மைப்படுத்தும் வகையிலான 14 கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.
முதலாவது அத்தியாயமான ‘மாறுபாடில்லா உண்டி’ உணவின் தனித்துவத்தின் சிறப்பியல்புகளை சித்த மருத்துவ நோக்கில் விளக்குவதுடன், அதனைத் தொடர்ந்து வரும் யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் என்னும் அத்தியாயம் யாழ்ப்பாண மக்களின் உணவு நடைமுறையின் ஒழுங்கினை சித்த வைத்தியப் பாரம்பரிய நூல்களினை மேற்கோள்காட்டி விளக்கிச்செல்கின்றது.
அத்தியாயம் மூன்று முதல் அத்தியாயம் ஒன்பது வரையாக உள்ள அனைத்துக் கட்டுரைகளும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய அரிசி, தானியம் மற்றும் சிறுதானியம், எண்ணை வகை, கிழங்கு மற்றும் இலைவகைகள் சார்ந்த உணவுகளின் தனித்துவமான பண்பியல்களையும் அவற்றினைத் தயாரிக்கும் பாரம்பரிய முறைகளையும் விவரிப்பதுடன், அவை தொடர்பாக சித்த மருத்துவ நூல்கள் கூறுவனவற்றையும் எமக்குத் தருகின்றன.
மேலும் அத்தியாயம் 10 இல், பாலும் பால் சார்ந்த உணவுகள் பற்றியும் ஆசிரியர் விரிவாகவே விளக்கிக் கூறுகின்றார். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பசுப்பால் அது சார்ந்த ஏனைய தயாரிப்புகள், எருமைப்பால், வெள்ளாட்டுப்பால் போன்றவற்றிலுள்ள போசணைக் கூறுகளையும் அவற்றின் தனித்துவங்களையும் எளிமையான முறையில் விளங்கிக்கொள்ளும் வகையில் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் சைவ உணவுக்குள்ள முக்கியத்துவம் போன்றே அசைவ உணவுக்கும் உண்டு. இந்நிலையில் நூலாசிரியர் சுதர்மன் அசைவ உணவுகள், ஈழத்துக் கடலுணவுகள் தொடர்பாக அத்தியாயம் 11 மற்றும் 12 இல் விவரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வேறுபட்ட ஆட்டு வகையினங்களை இறைச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட கனிமத் தாதுக்களைக் கொண்டவை. இவையனைத்தினையும் ஆசிரியர் விரிவாகவே பதிவு செய்துள்ளார். இவ்வாறே வேறுபட்ட இறைச்சி வகைகளையும், கடல் உணவுகளையும், அவற்றில் நிலவும் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளையும் விவரித்துச் செல்கின்றார்.
உணவுத் தயாரிப்பில் சுவையூட்டிகள் முதன்மையானவை. இன்று நாம் பயன்படுத்தும் அதிகமான சுவையூட்டிகள் பல்வேறுபட்ட பக்க விளைவுகளைக் கொண்டவை. எனினும் பாரம்பரியமாகத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்ற சுவையூட்டிகள் உணவின் சுவையினை மட்டுமன்றி, உடலின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானவை. தமிழரிடையே பயன்பாட்டில் இருக்கும் மிளகு முதல் வெந்தயம் வரையாக உள்ள அனைத்துச் சுவையூட்டிகளையும் ஆசிரியர் மிகச் சுருக்கமாக விவரிக்கின்றார்.
இறுதியாக ஆசிரியர் சுதர்மன் யாழ்ப்பாணத்துப் பழவகைகளையும் பனைசார் உணவு முறைகளையும் விவரிக்கின்றார்; யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் முதன்மையான பழவகையான வேறுபட்ட வாழைப்பழங்கள், மாதுளம்பழம், மாம்பழம் போன்ற இன்னோரன்ன பழவகைகளில் உள்ளார்ந்தமாகக் காணப்படும் ஊட்டச்சத்துகளை வெளிப்படுத்துவதுடன், யாழ்ப்பாண உணவுப் பண்பாட்டிற்கெனத் தனித்துவமாக உள்ள பனைசார் உணவுகளையும் அவற்றின் மருத்துவக் குணங்களையும் இங்கு விவரிக்கின்றார்.
மருத்துவர் சுதர்மன் இந்நூலிற்கு முன்னர் எழுதிய ‘ஆகாரமே ஆதாரம்’ எனும் நூலானது அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வழியாக அவருக்குக் கிடைத்த அனுபவப் பகிர்வுகள் ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் இந்நூலை எமக்குத் தந்துள்ளது. இந்நூலானது தனியே உணவின் போசணையை மட்டுமன்றி அவற்றின் வழியாக வெளிப்படும் யாழ்ப்பாண உணவுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தனித்துவங்களையும் எமக்குக் காட்டுகின்றது.