கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
8 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு

October 14, 2025
கருத்துரை: துலாஞ்சனன் விவேகானந்தராஜா
கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள் பற்றிய அகத்தார் ஆய்வு

கடந்த 2025.07.20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் எழுநாவால் பிரசுரிக்கப்பட்ட க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீடு இடம்பெற்றது. 

இலங்கை வேடர் பற்றி எழுதிய செலிக்மன் தம்பதி, கணநாத் ஒபேயசேகர, ஈழத்துப் பூராடனார் முதலான புலமையாளர் வரிசையில் இணைந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர் க. பத்திநாதன். இத்துறையில் வேறெந்த முன்னோடி போலவுமில்லாமல், ‘அகத்தார்’ தரப்பில் எழுந்த முதற்குரல் என்பது இந்நூலினதும் இந்நூலாசிரியரதும் சிறப்பு.

எளிமையாக நூலாசிரியரின் குடும்பத்தினர், அவருக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்துகொண்ட நெகிழ்வூட்டும் நிகழ்வாக நூல் வெளியீடு அமைந்திருந்தது. நூல் பற்றி உரையாற்ற எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் தொட்டுச்சென்ற விடயங்கள் இவை:

1. தமிழ் பேசும் எல்லோருமே தம்மைத் தமிழராக அடையாளப்படுத்தாமல் இருக்க முடியும். இன்று பேசுமொழியிலும் பண்பாட்டிலும் தமிழரைப் போலவே முற்றாகத் தோற்றம் காட்டும் கரையோர வேடரை ஒரு சிங்களவரோ மு`ச்லிமோ, ஏன் இன்னொரு தமிழரோ கூடத் தமிழராகவே கருதுவர். ஆனால் அவர்கள் அடியாழத்தில் தம்மைத் தனித் தேசியமாகக் கருதுகிறார்கள்.

தமிழ் பேசும் சக கிழக்கிலங்கைத் தமிழரை விட மகியங்கனை – தம்பானையில் சிங்களம் பேசும் உள்நாட்டு வேடரை, அவர்கள் தங்களுக்கு நெருங்கியவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதும், தமிழரிடமிருந்து வேடர் சுவீகரித்துக்கொண்ட மாரி, காளி முதலிய தெய்வங்களை வேடர் இன்றும் ‘தமிழ்க்கலை’ என்றே வேறுபடுத்தி அழைப்பதும், இந்நூலை வாசிக்கும் ஒருவருக்குப் பிடிபடும்.

வேடரின் இந்த மனப்பாங்கைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர், தமிழ் பேசும் இலங்கைச் சோனகர் தமிழராகத் தம்மை அடையாளப்படுத்தாமல் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

2. வேடர் வாழ்வியலிலும் வரலாற்றிலும் ஏராளமான இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டும். உதாரணமாக,

அ. தமிழக மானுடவியல் அறிஞர் பக்தவத்சலபாரதி அவர்கள் இந்நூலின் அணிந்துரையில் இலங்கை வேடருக்கும் எயினர், குறவர் முதலான சங்ககாலத் தமிழ்க் குடிகளுக்குமான உறவு மானுடவியல் ரீதியில் ஒப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்கின்றார். அதை நூலாசிரியர் எதிர்காலத்தில் செய்தாக வேண்டும். 

உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதென்றால், விந்தனைப் பகுதியிலிருந்த வேடப் பெண்கள் தங்கள் ‘மாதமுறை’ காலத்தில் மட்பாண்டங்களைத் தொடுவதில்லை என்பதை செலிக்மன் எழுதியுள்ளார். இது புறநானூற்றில் ‘கலம் தொடா மகளிர்’ எனப் பதிவாகியுள்ள ஒரு தொன்மையான மரபு.

ஆ. வேடரின் தெய்வங்கள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. வேடர் தெய்வங்கள் தொகுதிகளாகவே வழிபடப்படுபவை. களுவன்கேணிச் சூழலில் ‘குமார தெய்வம்’ வழிபடப்படுவதையும், அவருக்குப் பல கலைகள் சொல்லப்படுவதையும் நூலாசிரியர் எழுதுகின்றார். வெருகல்லில் வணங்கப்படும் நீலியம்மன், மீன்நாச்சிமார் என்போர் பெண் தெய்வங்களின் தொகுதி. குஞ்சிமாப்பாவும் கப்பல் தெய்வமும் இத்தகைய தெய்வங்களே. ஒவ்வொரு இடத்திலும் பெரியசாமி என அந்தந்தத் தெய்வங்களையே சொல்கின்றனர். ஒரே கரையோர வேடர் சமூகத்தில் ஊருக்கு ஊர் ‘பெரிய தெய்வத்தில்’ வேறுபாடு ஏன் என்ற கேள்வி விரிவாக ஆராயப்பட வேண்டியது.

இ. சடங்கு மற்றும் தொன்மப் பாடல்களிலிருந்து வேடர் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும். குறிப்பாக நூலாசிரியர் கூறும் கதிர்காமம் ஊரேவ பகுதி கரையோர தமிழ் பேசும் வேடரின் மூலம் என்ற தொன்மம், களுவன்கேணியில் உள்ள ‘யக்குரே’ என்ற இடப்பெயர் என்பவற்றைச் சொல்லலாம். 

செலிக்மனின் குறிப்பில் பொலனறுவையில் இன்றும் உள்ள ‘யக்குரே’ வேடரின் முதன்மையான வதிவிடங்களில் ஒன்று. அதற்கும் களுவன்கேணி யக்குரேக்கும் உள்ள தொடர்பை விசாரிக்கலாம்.

3. ஓர் ‘அகத்தார்’ ஆய்வாக (உள்ளிருந்து ஆய்வு செய்யும் ஒருவர்), நூலாசிரியர் பத்திநாதனின் நூல் கிழக்கிலங்கை மானிடவியல் புலத்தில் தவிர்க்கவியலா இடம் பெற்றுக்கொள்கின்றது. 

ஆனால் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஓர் அகத்தார், தன் சமூகம் பற்றி ஆவணப்படுத்தும் போது, உள்ளக்கொதிப்பு ஏற்படுவது இயல்பு. அந்த ஆவேசத்தை அப்படியே வெளிவிடும் போது, புறத்தாரும் ஆய்வுலகும் அந்த அகத்தாரின் ஆய்வுப் பார்வை தொடர்பில் ஐயம் கொள்ளவேண்டி நேர்ந்துவிடும். இறுதியில் அந்த ஆய்வை பக்கச்சார்பானதாக முத்திரை குத்தவும் கூடும். ஒரு வாலிபராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் வளர்ந்துவரும் எழுத்தாளர் பத்திநாதன் இந்த இடத்தில் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இதை ஓர் ஆய்வுலகச் சகபாடியாகவும் சகோதரனாகவும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

4. நான் மேடையில் பேசாத விடயம் இது. இலங்கை வேடர் மீதான முதலாவது காலனித்துவப் போர் சோழரால் தொடுக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டவர் நூலாசிரியர். அக்கருத்தில் நான் மாறுபட்டு அவருடன் தனிப்பட உரையாடியுமுள்ளேன். 

சோழர் இலங்கையில் வேடர் மீது நிகழ்த்தியிருக்கக்கூடியது இன்றைய கலைச்சொற்களின் அடிப்படையில் காலனியாக்கமல்ல; அது விளிம்புநிலையாக்கம் அல்லது தன்மயமாக்கம் என்பது என் தரப்பு (The impact of the historic Chola invasion on the Veddas was not literal colonization, it was a process of either marginalization or assimilation).

அதேவேளை, இன்று தமிழரும் முகம்கொடுக்கும் ‘மேனிலையாக்கம்’ அல்லது ‘சங்கதமயமாக்கத்தால்’ வேடரும் எண்ணிப் பார்க்கமுடியாதளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் மறுக்கமுடியா உண்மை. மேலாதிக்கவாதிகளின் கருத்துகளைப் புறந்தள்ளி கரையோர வேடர் சமூகத்தில் ஒரு செயற்பாட்டாளராக பத்திநாதன் இவை பற்றித் தொடர்ந்தும் விழிப்பூட்ட வேண்டும்.

என் உரையை, நூல் பற்றி ‘சத்திரசிகிச்சையாற்றி’ மேற்கொள்ளப்பட்ட உரை என அங்கு கருத்துத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில் கிழக்கிலங்கையில், வளர்ந்துவரும் – நான் மதிக்கும் – என் தலைமுறையைச் சேர்ந்த – ஆய்வில் ஆர்வம் கொண்ட இளந்தலைமுறையினர் மிகச்சிலரே – பத்திநாதன் உட்பட (அந்த வகையறாவில் அடங்கும் இன்னுமிருவரும் அன்று நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள்: மொஹமட் சாக்கீர், நீலாவணை இந்திரா). அணிந்துரை எழுதிய துறைசார் அறிஞர்களான பக்தவத்சலபாரதி, சி. மௌனகுரு ஆகியோரும் எழுத்தாளர்கள் இத்ரீ`ச் முதலியோரும் கூறியது போல, பத்திநாதனின் நூல், ஒரு முதல் முயற்சி, பாராட்டுக்குரிய ஒன்று என்பதைப் புரிந்துகொண்டு, அவரது அடுத்த நகர்வு எவ்வாறு இருக்கவேண்டும் என்ற அக்கறையிலேயே நான் உரையாற்றினேன். என் உரை விமர்சனமாகக் கருதப்பட்டுவிடலாம் என்பதை உணர்ந்து தான் எனக்கு மாற்றுக்கருத்துள்ள ‘சோழக் காலனியாதிக்கம்’ பற்றிக்கூட அதில் பேசவில்லை. என்னை மீறி என் உரை, விமர்சனம் போல் தென்பட்டிருந்தால் அதற்கு பத்திநாதனிடம் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

கொவிட் – 19 பெருந்தொற்றுக் காலத்தில் வெருகல் பிரதேச செயலகத்தில் நான் கடமையாற்றிய போது, மரண வீடொன்றில் இடம்பெற்ற உத்தியா சடங்கொன்றைப் பார்த்து வியந்திருக்கிறேன். உத்தியாக்கள் நூல் வெளியீட்டு நிகழ்வின் ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நாக்குழறி உணர்ச்சி வசப்பட்டு நின்றது பத்திநாதன் அல்ல; தன் இளந்தலைமுறை பேச ஆரம்பித்து விட்டதை எண்ணி நெகிழ்ந்து பத்திநாதனில் எழுந்த ஒரு உத்தியா வேடச்சீயா தான் புளகாங்கிதத்தில் கண்கள் கலங்கி நிற்கின்றார் என்று எனக்கு அப்போது தோன்றியது.இந்த 2025 ஆம் ஆண்டில், கிழக்கிலங்கையில் உருவான காத்திரமான படைப்புகளில் ஒன்று ‘உத்தியாக்கள்’ நூல் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மேற்படிப்பின் பின்னர் இன்னும் சிறப்பான பல ஆய்வு நூல்களை நூலாசிரியர் படைக்க என் மனப்பூர்வமான வாழ்த்து!