ஜூலை 20, 2025, ‘எழுநா: 30 ஆவது வெளியீடு’ கலந்துரையாடலுக்கு நண்பர், எழுத்தாளர், இதழாளர் நடராஜா முரளீதரனின் அழைப்பின் பேரில் சென்று, கலந்து, பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ‘எழுநா’ யாழ்ப்பாணத்தில் கருக்கொண்டு ரொறோண்டோ, கனடாவில் பிரசவமாகும் ஒரு மாத இதழ். சஞ்சிகைக்கும் ஜேர்ணலுக்கும் இடையிலான தன்மையுடன் வெளிவருவதாக அதை நான் கருதுவதுண்டு.

ஸ்காபரோவிலுள்ள கனடிய தமிழர் பேரவை மண்டபத்தில் (ஆம், அதே தான்!) சுமார் 4:00 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 8:00 மணிக்கு முடியும்போது சுமார் 40 பேர் முகமன் கூறி விடைபெற்றார்கள். ரொறோண்டோவின் இலக்கியக்கூட்டங்களுக்கு இது சராசரி. அரைவாசிக்கு மேல் வாராந்தரிகள்; அதாவது, வாரா வாரம் நடைபெறும் கலை இலக்கியக் கூட்டங்களில் தவறாது பிரசன்னமாகுபவர்கள். கனடாவில் தமிழை, இலக்கியத்தை, படைப்பாளியை வாழ வைப்பவர்கள்.
முதலாவதாக மூத்த படைப்பாளி கந்தையா சண்முகலிங்கம் பேசினார். இவர் ‘எழுநா’வில் பிறமொழி, பெரும்பாலும் சிங்கள, ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் தருபவர். சுமார் ஒரு மணித்தியாலம் நீண்ட பேச்சு. ஈழத்தின் பதிப்புலகில் எழுநாவின் அவசியம், அயலார் படைப்புகளை அறிந்து கொள்ளல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். கலை இலக்கியம் உறவை மேம்படுத்துகிறது; தவறான புரிதல்களால் எழும் சிக்கல்களை அவிழ்க்க உதவுகிறது என்ற சண்முகலிங்கம் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு. இலங்கையின் இரு மொழிக்காரரிடையேயும் (இருவரும் ஏறத்தாழ ஒரே இனம் என்ற வகையில் ‘இனங்கள்’ என்ற சொல்லைப் பாவிக்கவில்லை) மிக நீண்ட காலமாக இவ்வுறவு படகுப் பயணமாகவே இருந்து வருகிறது. படகு எப்போதாவது வந்தால்தான் தபால் வருமென்ற நிலை. இடதுசாரிகளுக்காகவே இப்படகும் ஓடியதாக நினைவு. இதனால் றெஜி சிறிவர்த்தன போன்ற முற்போக்குச் சிந்தனாவாதிகள் வடக்கிற்கு அறிமுகமாகினர். அதற்குக் காரணம் அவர்கள் எமது மூன்றாம் மொழியாகிய ஆங்கிலத்திலும் எழுதியமை. சண்முகலிங்கம் போன்றோர் இதைச் சாத்தியமாக்கினார்கள். ஆனால் தமிழர்களது படைப்புகள் போதுமான அளவு படகுகளில் சென்றடைந்ததற்கான தடயங்கள் இருந்ததாகவோ அல்லது அதன் அத்தியாவசியம் பற்றியோ கந்தையா சண்முகலிங்கம் போன்றவர்கள் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ‘எழுநா’ மூலமாகவே எனக்கு அவரைத் தெரியுமென்ற வகையில் அதன் வருகையும் இருப்பும் முக்கியம் பெறுகின்றன.

அடுத்து முனைவர் பால. சிவகடாட்சம் சுருக்கமாகப் பேசி கலந்துரையாடலுக்கு அழைத்தார்; எதிர்பார்த்த மாதிரி நடைபெற்றதாகத் தெரியவில்லை. பால சிவகடாட்சம் சித்த, ஆயுர்வேத வைத்தியத் துறையில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், ஏட்டுச் சுவடிகளிலிருந்து அவற்றை நவீன தமிழுக்குக் கொண்டுவருவதில் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி வருபவர். பால. சிவகடாட்சத்தின் நூல்கள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் ஏற்கனவே பிரசுரமானவை. கனடாவுக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பல வாராந்தரிகளும், மாதாந்தரிகளும் இவரை வசப்படுத்தி வைத்திருந்தன. ‘தாய் வீடு’, ‘எழுநா’ இந்த வகையில் அடங்குபவை. இதைவிட அவ்வப்போது வானொலிகள், இணையக் கருத்தரங்குகள் என்று பிரசன்னமாகுபவர். ஆனாலும் ‘எழுநா’ அவரை உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறது.
மாமூலன், ரஃபேல் ஆகிய பெயர்களில் எழுதி வரும் போல் (வரன்) சந்தியாப்பிள்ளை நாட்டாரியலில் முதுமாணிப் பட்டத்தை ஒளித்து வைத்துக்கொண்டிருந்தாலும், ஏறத்தாழ ஐரோப்பிய, கனடிய இலக்கியக் கோத்திரங்கள் அருகிப்போய்விடாது பாதுகாத்து வைக்க முயற்சிக்கும் சிலரில் ஒருவர். ‘எழுநா’ பற்றிய அவரது கருத்து ‘முன்னேற இடமுண்டு’ என்பதாகவே எனக்குப் பட்டது. அதற்கான பல்வேறு காரணங்களை அவர் முன்வைத்தார்.
அடுத்து நான். ‘எழுநா’ பற்றி எனது கருத்தில் பெரும் பகுதி எதிர்மறையானது. ‘எழுநாவில்’ வருகின்ற அனைத்துக் கட்டுரைகளும் மிகவும் கனதியான ஆய்வுத்தன்மை கொண்டவை (Academic). ஒரு ஜேர்ணல் (Journal) என்ற வகைக்குள் அடங்க வேண்டிய ஒரு நூலை சஞ்சிகை வடிவத்தில் அச்சடித்து, ஜனரஞ்சக வாசகர்களைப் பிடித்து, அவர்களைப் பலவந்தமாக முனைவர்களாக்கும் முயற்சி போலவே எனக்குத் தெரிந்தது. எந்த ஒரு பண்டத்திற்கும், அது ‘Brand’ ஆக உருமாறுமட்டுமாவது, ‘Marketability’ இருக்கவேண்டும். சஞ்சிகை வடிவத்தில் வெளிவருகின்ற ‘எழுநா’வை வாசிக்கும் ஒருவர் கவிதையையோ, சிறுகதையையோ தான் முதலில் எதிர்பார்ப்பார். மாறாக ‘சிந்துவெளி நாகரிகத்துடன்’ முதலாவது கட்டுரை ஆரம்பித்தால் அவர் அதைத் தூக்கி மாரிகால வாசிப்பிற்காக அப்பால் வைத்துவிடுவார். அதேவேளை அதை ஒரு ஜேர்ணல் வடிவத்தில் தலைப்பை (Title) முனைப்பாகக் கொண்ட வடிவமைப்புடன் ‘எழுநா’ பதிப்பக வெளியீடு என்று வெளியிட்டால், வாசகர்கள் அத்தலைப்பினாலோ அல்லது அதை ஆக்கியோனின் பெயராலோ ஈர்க்கப்பட்டு அந்நூலை வாங்குவார். அநேகமாக அவருக்கு அது உகந்த ஒன்றாகவே இருக்கும். இப்படியான முயற்சியை ‘எழுநா’ பதிப்பகம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவிட்டது என்பது உவப்பான செய்தி.
கனடாவில் ‘எழுநா’வைப் பதிப்பிப்பது நண்பர் நடராஜா முரளீதரன். ஒரு காரியத்தைப் பொறுப்பெடுத்தால் அக்காரியம் பற்றி அலசி ஆராயாது அதை முடித்து வைப்பதில் மட்டுமே அவர் குறியாகவிருப்பார். 30 ஆவது ‘எழுநா’ இதழைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வைத்துவிட்டேன் என்பதில் அவருக்கு அலாதிப் பெருமை. நூலின் உள்ளடக்கத்திற்காக அல்லாது, அவருக்காகவும், அவரின் அயராத உழைப்பைக் கெளரவிப்பதற்காகவுமே அவரிடம் இந்நூல்களை வாங்குவோர் அதிகம் (அவர் சென்றபின் திட்டுவது வேறு விடயம்!). அவரது விக்கிரமாதித்த உழைப்பிற்கான ஊதியம் அவருக்குக் கிடைப்பதில்லை – உள்ளார்ந்த குட்டிப் புழுகத்தைத் தவிர – என்பதுவே எனது ஆதங்கம்.

‘எழுநா’ இதே வடிவத்தில், கொஞ்சம் வர்ண ஜாலங்களையும் இணைத்து, யாழ்ப்பாணத்தில் இப்போது வெளியாகிறது. அதனுடைய வணிக வெற்றி பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இதன் மூலம் ஈழத்தின் பதிப்புலகத்தில் ஒரு புரட்சியைச் செய்துவிடலாமென ‘எழுநாவின்’ நிறுவுநர் சசீவன் முயற்சிப்பது போலத் தெரிகிறது. இதற்காக ஓர் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து, வழமைபோல இதை ஒரு ‘குடிசைக் கைத்தொழிலாக’ நடத்தக்கூடாது என்பதில் அவர் குறியாகவிருப்பார் போலத் தெரிகிறது. அதற்காக ‘எழுநா’வில் வரும் கட்டுரைகளைத் தொகுத்து இப்பதிப்பகத்திற்கு வேலை கொடுக்கிறார். ஒரு சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தை நிர்வகித்து வரும் அவருக்கு வணிக வித்தைகள் புதியனவல்ல. ஆனால் கனடாவில் வெளியாகும் ‘எழுநா’வுக்கான இடம் எது என்பதில் எனக்கு மயக்கம் இருக்கிறது.

கனடாவில் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த எழுத்தாளர் ஒருவர் மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். வழமை போல ஒரு பிளாஸ்டிக் பையுடன் ஒருவர் முதலாளியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டு ஓரமாக வெகுநேரம் நிற்பவராக இருந்தால் அது ஓர் எழுத்தாளராகவே இருப்பது வழமை. விற்ற 10 புத்தகங்களின் $2.50 கொமிஷனை வாங்குவதற்காக அவர் $10 பெற்றோல் செலவழித்து வந்திருப்பார். நமது இந்த எழுத்தாளர், தனது சஞ்சிகைகளில் 10 பிரதிகளை தெரிந்த ஒருவரின் பலசரக்குக் கடையில் விற்பனைக்குக் கொடுத்திருந்தார். ஒரு வார இறுதி நாளின்போது அக்கடைக்குப் போன நண்பர் தனது சஞ்சிகைகள் ஒரு கயிற்றில் மாலை போலத் தூங்குவதைக் கண்டு சந்தோசத்தில் அவற்றை எண்ணிப் பார்த்தார். 9 பிரதிகள் சாவகாசமாகத் தூங்கிக்கொண்டிருந்தன. “ஆஹா ஒன்று விற்றுவிட்டது” என முதலாளியுடன் சந்தோசமாகச் சல்லாபிக்க ஆரம்பித்ததும், முதலாளி தனது விரலைக்காட்டி “அது மேல தூங்குது” என்றுகூறி அவரது சந்தோசத்தை முடித்து வைத்தார். இது தான் கனடிய ‘இலக்கியச் சந்தை நிலவரம்’. இந்த விடயத்தில் நடராஜா முரளீதரன் வித்தியாசமானவர். முரளியைக் கண்டால் சில எழுத்தாளர்கள் விரைவாக நடப்பதற்குக் காரணமும் உண்டு. கனடாவில் ‘எழுநா’ எழுந்து நிற்பதற்கு அவரே காரணம். அது அவரைவிட விரைவாக நடக்க வேண்டும், ஓட வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறையுண்டு.
இன்றய விழாவும் வெற்றிகரமாக நடந்தேறியதற்கு அவரது உடலில் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் ‘விக்கிரமாதித்தனே’ காரணம். வாழ்த்துகள்!
நன்றி: மறுமொழி (July 22, 2025)