“தான் பிறந்த மண்ணின் மீது அபாரமான அபிமானமும், எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள் மீது ஆழ்ந்த புலமைத்துவமும் இல்லாவிடின் இப்படியானதொரு வியத்தகு படைப்பை உருவாக்கியிருக்க முடியாது.”
கொழும்பு குமரன் புத்தக இல்லமும் எழுநா, ஆதிரை நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621 – 1948’ என்ற நூலை எனது நண்பர் விசாகன் மூலம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தனது மாணவர்களின் துணையோடு ஒரு பேராசிரியரால் வெளியிடப்பட வேண்டிய இந்த நூல் கூறும் பொருள், ஒரு தனிமனித பிரயாசையுடன உருவாக்கப்பட்டு வெளிவருவதென்பதே பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இந்த நூலை உருவாக்க உபயோகிக்கப்பட்ட உசாத்துணை நூல்களின் பட்டியலே ஒரு நூல் நிலையத்தை நிறைத்துவிடும் என்பதைக் காணும்போது இந்நூலைப் படைத்த நூலாசிரியரின் பகீரத உழைப்புப் புலனாகிறது.
இந்த நூலின் பொருள் கி.பி. 1621 ஆம் ஆண்டிற்கும் 1948 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 327 ஆண்டுக்கால யாழ்ப்பாண நகரத்தின் பரிணாம வளர்ச்சி. இக் காலப்பகுதி யாழ்ப்பாண நாடு அந்நிய ஐரோப்பியரின் ஆட்சியின் கீழிருந்த காலப்பகுதி ஆகும். யாழ்ப்பாண வரலாற்றில் இக்காலப்பகுதி பற்றிய விரிவான நூல்கள் அருகியே காணப்படும் இக்கால கட்டத்தில் இந்த நூலின் வரவு ஒரு வரப்பிரசாதமாகும்.
சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதுபோல யாழ்ப்பாணப் பகுதியின் நாகரிக வளர்ச்சி ஐரோப்பிய ஆட்சியின் பின்விளைவு என்ற கருத்தாக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இவர்கள் வரலாற்றுக்கால நாகரிக வளர்ச்சியின் பின்னணித் தத்துவத்தை அறிந்திராதவர்கள் என்றே கூறவேண்டும். 1970 ஆம் ஆண்டில் அமெரிக்க பென்சில்வேனிய பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தொல்லியலாய்வாளர்கள் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளும், அங்கே கண்டெடுக்கப்பட்ட கருவூலப் பொருட்களின் கதிரியக்கக் கரிம ஆய்வுகளும் கி.மு. 1350 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் ஆதி இரும்புக் காலத்தைய பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களின் குடியிருப்புகள் ஏற்பட்டுவிட்டதையும், அதைத் தொடர்ந்த தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் நகரமயமாக்கம் ஏற்பட்டுவிட்டதையும் எடுத்துக்காட்டுகின்றன.
2017-18 ஆம் ஆண்டில் பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரும், UNESCO தொல்லியல் நன்னெறிக்கோட்பாட்டின் தலைவருமான றொபின் கொனிங்ஹாம் தலைமையில் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் கி.மு. ஆயிரத்தாண்டு காலத்திலேயே பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய மக்கள் இப்பிரதேசத்தில் குடியிருந்ததையும், கி.மு. 500 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் யாழ்ப்பாணப் பட்டினம் ஒரு புராதன நகரமாகிவிட்டதையும் எடுத்துக்காட்டியது. யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளும், அதிலிருந்து பெற்ற தொல்கலைக் கருவூலப் பொருட்களும் வெளிக்கொணர்ந்த யாழ்ப்பாணக் கோட்டைக்கு அடியே கிடக்கும் புராதன யாழ்ப்பாணப் பட்டினத்தின் புதையல், வட இலங்கையின் பாரம்பரிய மரபுரிமைப் பொக்கிக்ஷம் (Monumental Heritage of Northern Sri Lanka) என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது. இந்த அகழ்விற்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் 2017 இல் வெளிவந்த தனது அகழ்வாய்வு அறிக்கையில் பின்வருமாறு பதிவு செய்திருந்தார் (From ‘Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of the Indian Ocean Trade’ in Essays in Buddhism and Buddhist Monastic Archaeology, Buddha Rashmi Vesak Volume 2018, Sri Lanka Central Cultural Fund):
“மேற்கு – கிழக்கு ஆசிய உலகங்களையும், கிழக்கு ஆபிரிக்காவையும், அரேபியாவையும், மத்தியதரை நாடுகளையும், தென்சீனக் கடற் பகுதியையும் இணைத்த கடல்வழிப் பட்டுப் பாதையின் கேந்திர மையமாக அமைந்தது யாழ்ப்பாணம். சமீபகாலத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகள், ஆரம்பகாலக் குடியிருப்புக் காலத்திலிருந்து பதினாறாம் நூற்றாண்டின் காலனியாதிக்கத் தொடர்புவரை, சர்வதேச வர்த்தக வலைப்பின்னலில், யாழ்ப்பாணம் அளித்த மகத்தான பங்களிப்பை விளங்கிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது”.
நகர உருவாக்கம்
உலக வரலாற்றில் ‘நகர உருவாக்கம்’ என்பது வேறுபட்ட காலப்பகுதிகளை உள்ளடக்கிய படிநிலை வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. தொல்பழங்கால நகர உருவாக்கம், பண்டைய நகர உருவாக்கம், இடைக்கால நகர உருவாக்கம், நவீன நகர உருவாக்கம் என நான்கு வேறுபட்ட நிலைகளை இதில் காண்கிறோம்.
தொல்பழங்கால நகர உருவாக்கம் செம்புக்கால யுகத்தைச் சேர்ந்தது: இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கி.மு. 1500 வாக்கில் இது முடிவு பெறுகிறது. உதாரணம்: சுமேரிய, சிந்துவெளி நகரங்கள்.
அடுத்த இரண்டாவது அலை நகர உருவாக்கம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் நிறைவு பெறுகிறது. கந்தரோடை, யாழ்ப்பாணப் பட்டினம், அநுராதபுரம், மகாகமம் ஆகியவற்றின் நகரமயமாக்கம் இக்காலகட்டத்திற்குரியன.
மூன்றாம் கட்ட மத்தியகால நகரமயமாக்கம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகி கி.பி. 1600 ஆம் ஆண்டுக்காலம் வரை நீடித்தது. இக் காலப்பகுதியில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆரியச்சக்கரவர்த்தி அரச வம்சத்தினரின் கீழ் உருவான ‘யாழ்ப்பாண இராச்சியத்தின்’ சிங்கைநகர், நல்லூர் ஆகிய நகரங்கள் மத்தியகால நகரங்களாகும்.
நான்காம் கட்ட நவீன நகரமயமாக்கம்தான் ஐரோப்பியர் கால ஆட்சியின்கீழ் உருவான யாழ்ப்பாணப் பட்டணம். இதில் ஒரு காலகட்டத்து நகரமாக்கலின் பண்புகளை மற்றொரு காலத்துடன் ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வு காண்பது வரலாற்று – நெறி பேணிய ஒப்பீட்டாய்வு அல்ல.
“யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் காலடி வைப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணப் பட்டினம் அல்லது அதையொத்த பெயர்கொண்ட ஒரு நகரம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன” என தனது முன்னுரையை ஆரம்பிக்கும் ஆசிரியரின் கூற்றை சமீப காலத்தைய யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகள் ஐயந்திரிபற நிரூபிக்கின்றன. இன்று யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் இருக்கும் ‘பண்ணை’ என்ற இடப்பெயர், அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப் பண்ணையின் பெயரின் (World Market) எச்சமாகவே தோன்றுகிறது.
இந்த நூலை ஆசிரியர் மயூரநாதன் ஐந்து முக்கியமான பகுதிகளாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். இந்த வரிசையிலேயே இந்நூற்பொருளின் முக்கிய பகுதிகளைப் பார்த்து மதிப்பிடலாம்.
1. அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியேற்றங்கள் ஆரம்பித்த காலப்பகுதியை அவர்கள் உபயோகித்த மட்பாண்டங்களின் காலக்கணிப்பிலிருந்து கிரகிக்க முடிகிறது. அந்த வகையில் கந்தரோடை கறுப்பு – சிவப்பு மட்பாண்டம் கி.மு. 1350 ஆம் ஆண்டுக் காலத்தையும், யாழ்ப்பாணக் கோட்டை கறுப்பு – சிவப்பு மட்பாண்டம் கி.மு. 1000 ஆண்டுக் காலத்தையும் (கொனிங்ஹாமின் திருத்திய கணிப்பு) தருகின்றன. இம்மட்பாண்டங்கள் சாதாரண மக்கள் உபயோகித்த ஆரம்பகால மட்கலன்கள். இந்த மட்கலன்களின் காலப்பகுதியை இவ்விடங்களில் மக்கள் குடியேற்றங்கள் ஆரம்பித்த காலங்களாகக் கொள்ளலாம்.
யாழ்ப்பாண மாவட்டம் வடமாகாணத்தின் 11.5 வீத நிலப்பரப்பைக் கொண்டிருந்த போதிலும், மாகாணத்தின் 55 சதவீதமான மக்கள் தொகையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்ந்திருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த மக்கள் செறிவே யாழ்ப்பாணம் இலங்கையின் பெரிய நகரங்ளுள் ஒன்றாக வளர்ந்ததற்கான காரணிகளுள் ஒன்று என எடுத்துக்காட்டியிருப்பது முக்கியமான தகவல்.
வரலாற்றில் யாழ்ப்பாணத்தைக் குறிக்க எழுந்த பெயர்களில் ‘பட்டினம்’ அல்லது அதன் திரிபுகளைப் பின்னொட்டுகளாகக் கொண்ட பெயர்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. திருமாணிக் குழிக்கல்வெட்டிலும் சரி, திருப்புகழிலும் சரி, யாழ்ப்பாண நாயன் பட்டினம் (யாழ்ப்பாண அரசனின் பட்டினம்) என்ற அடிகளில் வரும் ‘பட்டினம்’ என்ற சொற்பதம், இது கடற்கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் என்பதைக் காட்டுகிறது.
பேராசிரியர் பரணவிதான எழுதிய ‘வட இலங்கையின் ஆரிய இராச்சியம்’ என்ற கட்டுரையில் ‘யாபாபடுன’ என்ற பெயரின் தோற்றத்தை ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார். வட இலங்கையை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் நாட்டையோ, தலைநகரத்தைப் பற்றியோ நிக்காய – சங்கிரஹா எதையுமே கூறவில்லை. ‘யாழ்ப்பாணம்’ பற்றிய தகவல் கி.பி. 1450 இற்கும், கி.பி. 1465 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட செலலிஹினி – சந்தேஸ, கிரா – சந்தேஸ, கோகில – சந்தேஸ ஆகிய சிங்களச் செய்யுள் நூல்களிலே காணப்படுகிறது. ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அவரது சுவீகார மகனான இளவரசன் சப்புமால் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டமை பற்றிய புகழுரை இவற்றில் காணப்படுகிறது. இவை கூறும் சமகாலத் தகவல்கள் (Contemporary Accounts), ஆரியச்சக்கரவர்த்திகள் ‘யாபாபடுன’ எனப்பட்ட இன்றைய யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தவர்கள் என அறியத்தருகின்றன. இலங்கையிலுள்ள எழுத்துப் பதிவுகளில் ‘யாபாபடுன’ என்ற பெயர் இந்தச் செய்யுட்களிலேயே முதலில் இடம்பெறுகிறது. ‘யாபாபடுன’ என்ற பெயர் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சிப்பீடத்தை மட்டுமின்றி, அவர்களின் ஆட்சிப்பரப்பையும் குறிப்பிடுகிறது. இந்தப் பெயர் குறிப்பிடுவது போல இது ஒரு துறைமுக நகரமாகும்.
கொட்டகம கல்வெட்டு
தென்னிலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டகம என்ற இடத்தில் H.C.P. பெல் என்ற ஆங்கிலேயத் தொல்லியலாளரால் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, யாழ்ப்பாண அரசின் ஆரியச்சக்கரவர்த்தி ஒருவன் தென்னிலங்கை அரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி பெற்றதை எடுத்துரைக்கிறது. தமிழில் எழுதப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டிற்குரியதாகக் கணிக்கப்படுகிறது (Bell, H.C.P. 1904: 85, South Indian Inscriptions, Vol. IV, p. 496).

இக்கல்வெட்டில் காணப்படும் வாசகம் இது:
“சேது
கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக் கைமேற்றிலதம் பாரித்தார் – பொங்கொலிநீர் (ச்)
சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.”
இக்கவிதையின் பொருள்: யாழ்ப்பாண அரசர்கள் சேதுகாவலர்கள் என அழைக்கப்பட்டமையால் ‘சேது’ என்ற பதம் அவர்களைக் குறிப்பிடுகிறது. அனுரேசர் – சிங்கள அரச தலைநகரான அநுரையில் (அநுராதபுரத்தில் அல்லது சிங்கள அரசர்களின் தலைநகரில்) வாழும் – மடமாதர் பொங்குகடல் நீர் ஆர்ப்பரிக்கும் சிங்கை நகரத்து ஆரியனது பிரசைகள் அல்லர். அவர்களின் கண்களிலிருந்து உதிரும் நீர் கூரிய வேல்களைப் போல ஒளிருகிறது. அணிகலன்கள் அணிந்த தாமரை மலர் போன்ற கரங்களால் எள் நீரூற்றினார்கள் (இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்கு). (Rasanayagam, C. 1926: p. 364).
இக்கல்வெட்டுக் கூறும் பாடல் சிங்கை ஆரியனது படைகளோடு போரிட்டு இறந்த போர் வீரர்களுக்குச் செய்யப்பட்ட இறுதி மரியாதையை எடுத்துரைக்கிறது. தென்னிலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டகமவில் இது கண்டெடுக்கப்பட்டபடியினால் அங்கிருந்த ஓர் அரசனோடு சிங்கை நகரத்து ஆரியச்சக்கரவர்த்தி போரிட்டிருக்க வேண்டும். அநுராதபுரத்தில் சிங்கள அரசர்களின் ஆட்சி முடிவுற்ற பின்னரும் தென்னிலங்கையில் வேறு இடங்களிலிருந்த அரசர்களையும் அநுரையர் என அழைக்கும் வழக்கம் இருந்தது.
இக்கல்வெட்டில் வரும் ‘பொங்கொலிநீர்ச் சிங்கைநகர்’ என்ற பதம் ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசிருக்கை இருந்த இடம் கடற்கரையிலிருந்த ஒரு நகரம் என்பதைக் காட்டுகிறது. மேலும், பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களைக் காட்டிலும், சமகாலத்தைய கல்வெட்டுகள் தரும் தகவல்கள் நம்பகரமானவை.
பிற ஆதாரங்கள்
பதினைந்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனுடைய (1422-1461) கல்வெட்டுகளிலும் ‘சிங்கையும் அனுரையும்’ (அனுராதபுரம்) என இலங்கை அரசுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சான்றுகளை நோக்குமிடத்து யாழ்ப்பாண வரலாற்றின் முற்பட்ட கட்டத்திலே இராச்சியத்தின் தலைநகர் ‘சிங்கைநகர்’ என்ற இடம் என்பது தெளிவாகின்றது (Annual Report on Epigraphy, Madras, 1912, No.4).
யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவற்றில் ‘சிங்கை நகர்’ தலைநகராகக் கூறப்படுகிறது. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும், பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும் (ஞானப்பிரகாசர், 1928: பக் 106-107).
இபின் பத்தூதா – கி.பி. 1344
கி.பி. 1344 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த அரேபிய யாத்திரிகரான இபின் பத்தூதா இலங்கை அரசனான ஆரியச்சக்கரவர்த்தியை ‘பத்தல’ என்ற நகரத்தில் சந்தித்ததாகவும், அந்த அரசனிடத்தில் ஏராளமான முத்துகள் இருந்ததாகவும், அந்த அரசனின் உதவியோடு அவனளித்த பல்லக்கில் பாதபங்கய மலை வரையும் பயணம் செய்ததாகவும் தனது பிரயாண ஏடான ‘ரெஹ்லா’வில் (Rehla) குறிப்பிட்டிருக்கிறார் (Husian, M. 1976: pp 217-224). ஆரியச்சக்கரவர்த்தி என்ற அரசனின் பெயர் இடம்பெறும் ஆதி இலக்கியப் பதிவு இதுவாகும். ‘பத்தல’ என இபின் பத்தூதா குறிப்பிடும் நகரம், ‘பட்டினம்’ (யாழ்ப்பாணப் பட்டினம்) என்பதன் திரிபே என பரணவிதான கருதியுள்ளார் (Paranavitana, S. 1961: p. 208).
சிங்கை நகர் இருந்த இடம்
யாழ்ப்பாண வரலாற்றாசிரியர்களினிடையே சிங்கைநகர் எங்கே இருந்தது என்பது பற்றி வேறுபட்ட பல கருத்துகள் இருந்தன. சிலர் அது வல்லிபுரத்தில் இருந்ததாகவும், சிலர் யாழ்ப்பாண நகரில் இருந்ததாகவும், சிலர் பூநகரியில் இருந்ததாகவும் கூறியிருந்தனர். இன்னும் சிலர் நல்லூர்தான் சிங்கைநகர் என்றும் கூறியிருந்தார்கள். நல்லூர் ‘பொங்கொலி நீர்க்கரை’ நகரம் அல்ல.
கி.பி. 1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாளின் படையெடுப்பைப் பற்றிக்கூறும் சந்தேஸ நூல்கள் யாழ்ப்பாண அரசர்களின் அரசிருக்கை இருந்த இடம் ‘யாபாபட்டுன’ என்றே கூறுகின்றன. அது முன்னர் ‘யாழ்ப்பாணப் பட்டினம்’ எனப்பட்ட இன்றைய யாழ்ப்பாணம் என பரணவிதான எடுத்துக்காட்டியிருந்தார் (Paranavitana, S. 1961: 174). கி.பி. 1450 இல் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்பதை சுவாமி ஞானப்பிரகாசரும் எடுத்துக்கூறியிருந்தார் (ஞானப்பிரகாசர், 1928: பக். 106-107).
இதிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினம் (யாபாபட்டுன) இருந்த இடத்தில் அமைந்திருந்த அரசிருக்கையே இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் ‘சிங்கைநகர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாற்றுக்கருத்துக் கூறுபவர்கள் எல்லா இலக்கிய ஆதாரங்களையும் சரிவரப் படித்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சமீபகாலங்களில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் இது ஒரு புராதன துறைமுக நகரம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இதன் பிரகாரம் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்கள் முதலில் ‘சிங்கைநகர்’ என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்தும், கி.பி. 1450 இன் பின்னர் நல்லூர் நகரிலிருந்தும் ஆட்சி புரிந்தார்கள் என்பதே ஆதாரபூர்வமான கணிப்பாகும்.
2. நல்லூர்க்காலம் (1450 – 1619 வரை)
நல்லூர் இன்றைய யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால், யாழ்ப்பாண நகரின் வளர்ச்சியை வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்வதற்கு, போர்த்துக்கேயருக்கு முற்பட்டகால நல்லூர் நகர வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். மத்தியகால ‘யாழ்ப்பாண இராச்சியத்தின்’ தலை நகரங்களுள் ஒன்று என்ற வகையில் நல்லூர் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசிருக்கை சிங்கைநகரில் இருந்த காலப்பகுதியிலேயே நல்லூர் அந்த அரசுக்குரிய மற்றொரு நகரமாக இருந்திருக்கலாம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து வந்த பாண்டியப் படையெடுப்பைத் தொடர்ந்தே யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் அரச வம்சம் ஆரம்பமாகிறது. ஆரியச்சக்கரவர்த்தி என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டிய நாட்டு அரசில் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள் என்பது பேராசிரியர் பத்மநாதனின் கலாநிதிப்பட்ட ஆய்வுரை தரும் தகவல் (Pathmanathan, S. 1978: 173 – 179).
ஆரம்பத்தில் பாண்டியப் படையினர் இந்த நாட்டுக்கு வந்த காலத்தில் அப்பாண்டியப் படைகளின் இராணுவத்தளமாக நல்லூர் இருந்திருக்கிறது. அக்காலப்பகுதியில் தமிழகத்தில் துருக்கிய, விஜயநகரப் படையெடுப்புகளைத் தொடர்ந்து சமூக, பொருளாதார நிறுவனங்கள் சிதைவுற்று சீரழிந்த சமயத்தில், அப்போர் வீரர்களோடு வணிகர்கள், மாலுமிகள், கலைஞர்கள், பிராமணர்கள் என்போர் யாழ்ப்பாணத்திற்கு வந்து குடியேறியுள்ளார்கள். இதன் காரணமாக பலதரப்பட்ட கைவினைஞர்களும், பல வகையான கலைத்தொழிலாளர்களும் வட இலங்கையில் காணப்பட்டார்கள் (Pathmanathan, S. 1978: 194 – 195).
முதலாவது சிங்கையாரிய மன்னனின் புனிதப் பதவியேற்புப் (Consecration) பற்றி கைலாயமாலை தரும் விவரங்கள் சரியானதாக இருக்கலாம். சிங்கையாரிய மன்னனுக்கு முடிசூட்டும் அவனது முதல் மந்திரியான பாண்டி மழவன், பாண்டி நாட்டுப் படைத்தலைவர்களில் ஒருவன்.
அக்காலத்தில் நல்லூரிலிருந்த பிரசித்தி பெற்ற கைலாயநாதர் கோயில் முதலாவது சிங்கையாரிய மன்னனால் கட்டப்பட்டது என்ற தகவலையும் கைலாயமாலை தருகிறது. யாழ்ப்பாண அரசின் மிகப்பெரிய கோயிலான இந்த ஆலயம் போர்த்துக்கேயரால் முழுமையாக அழிக்கப்பட்டது. அதனுடைய அடித்தள அத்திவாரங்களின் கற்களும் நீக்கப்பட்டு வேறிடங்களின் கட்டுமானங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டதனால் இக்கோயிலின் கட்டடக்கலை அம்சங்களையோ, கட்டட அளவுகளையோ அறியமுடியாமல் இருக்கிறது.
நல்லூரின் அமைவிடம், அதன் நகர எல்லைகள், எல்லைக் கோயில்கள், பாதுகாப்பு அரண்கள், நகரத்தின் அமைப்பு, கோட்டை மதில், வீதிகள், அங்கிருந்த இரவுச் சந்தை என்பன விவரமாகக் கூறப்படுகிறது. நகரம் நான்கு காற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அப்பகுதிகளிலிருந்த முக்கிய அம்சங்கள் கூறப்படுகின்றன.
நல்லூர் நகரின் வடகிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனான சங்கிலி மன்னனின் பெயரைத்தாங்கிய ‘சங்கிலித் தோப்பு’ எனப்படும் நிலப்பகுதி காணப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஒரு நிலப்படத்தில் இந்நிலப்பகுதி ‘பாண்டிய மாளிகை’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். யாழ்ப்பாணத்து அரசின் ஆரியச்சக்கரவர்த்திகள் பாண்டிய நாட்டைப் பூர்விகமாகக் கொண்டபடியினால் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
நல்லூரின் வடமேற்குக் காற்பகுதியில் பண்டார மாளிகை, பண்டாரக் குளம் என்ற பெயரைக் கொண்ட பகுதிகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண அரசன் முதலாம் சங்கிலி மன்னனின் மகன் புவிராஜன் பண்டாரம் (1582-1591) போர்த்துக்கேயரின் இரண்டாவது படையெடுப்பின்போது அவர்களோடு போரிட்டு, கைது செய்யப்பட்டு, சிரச்சேதம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவற்றைத் தவிர நல்லூர்க்காலக் கந்தசாமி கோயிலின் அமைவிடம் தொடர்பான சிக்கல்கள், நல்லூர் நகர வீதிகள், மற்றும் நல்லூர்க்காலக் குடியிருப்புகளான வண்ணார்பண்ணை, அரியாலை, கொழும்புத்துறை, கரையூர் போன்ற முக்கியமான நிலப்பகுதிகள் மற்றும் நல்லூர்ப் பகுதிகளில் வாழ்ந்த அரசர், அந்தணர், வணிகர், வீரர் மற்றும் பலவகைப்பட்ட கைத்தொழில் புரிவோர் என்பன போன்ற விவரங்கள் விளக்கப்படங்களுடன் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
3. போர்த்துக்கேயர் காலம் (1619 – 1658)
நவீன யாழ்ப்பாணத்தின் நகர உருவாக்கம் போர்த்துக்கேயர் காலத்தில்தான் ஆரம்பமானது. 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் முதலில் நல்லூர் பெரிய கோயிலில் (நல்லூர் கந்தசாமி கோயில்? கைலாயநாதர் கோயில்?) தங்களது தலைமையகத்தை அமைத்திருந்தனர். அவ்விடத்தின் பாதுகாப்பின்மையை உணர்ந்த போர்த்துக்கேய ஆட்சிச் சபையினரின் ஆலோசனைப்படி தளபதி பிலிப்-த-ஒலிவேரா போர்த்துக்கேயரின் தலைமையகத்தை அங்கிருந்து பண்ணைத்துறைக்கு மாற்ற முடிவு செய்தான். ஒரு கோட்டை கட்டுவதற்கு தகுதியான இடம் பண்ணைத்துறை என முடிவு செய்யப்பட்டது. இது பற்றியும், கோட்டையின் அமைப்பு பற்றிய விவரங்களும் மிக விரிவாக, தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலில் கூறப்படுகிறது.
1658 ஆம் ஆண்டின் போர்த்துக்கேய நிலப்படத்தை மூலமாகக்கொண்டு, தனது விளக்க வரைபடங்களுடன், அன்றைய யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தை ஆசிரியர் விவரித்துள்ளார். போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரம், கோட்டையை மையப்புள்ளியாகக் கொண்டு அமைக்கப்பட்டது. கோட்டை, நாற்பக்க வடிவில் அதன் தெற்கு மதில் கடல்நீரேரியை ஒட்டி அமைந்திருந்தது. கோட்டைக்குள் அரச நிர்வாகக் கட்டடங்கள், இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், புதுமை மாதா தேவாலயம் என்பன இருந்தன. இதைத்தவிர யாழ்ப்பாண நகரத்தை மூன்று பிரிவுகளாகப் பார்க்கலாம். கோட்டைக்குக் கிழக்குப் பக்கத்தில் அமைந்த போர்த்துக்கேயரின் குடியிருப்புப் பகுதி, கோட்டைக்கு மேற்கில் அமைந்த வெளிப்பகுதி, கோட்டைக்கு வடக்கே முற்றவெளிக்கு அப்பால் அமைந்த சுதேச மக்களின் நகரப்பகுதி, அக்காலக் குடியிருப்புகளும், வீதிகளும், கட்டடங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதுவரை எவருமே குறிப்பிடாத முக்கியமான பல தகவல்களைக் கொண்ட இப்பகுதியை ஆசிரியர் வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார்.

போர்த்துக்கேயரின் நிலப்படத்தில் கோட்டைக்கு நேர் வடக்கே ஐரோப்பியரல்லாதோரின் நகரம் எனக்குறித்துள்ள பகுதி இன்றைய பெரியகடைப் பகுதியில் அல்லது அதற்கு மிக அண்மையில் இருந்திருக்கிறது. தென்னிந்திய வணிகப் பிரிவினரதும், கைப்பணியாளர்களினதும் வாழ்விடங்களாகவும், தொழிலகங்களாகவும் இவ்விடம் இருந்திருக்கலாம். குறிப்பாகப் பண்ணைத்துறையில் இறங்கும் பொருட்களை விற்பனைக்காக பிற இடங்களுக்கு எடுத்துச்செல்லும் முன்னர் இவ்விடத்திலிருந்த சேமிப்பு மண்டபங்களில் வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனக் கூறப்பட்டிருக்கிறது.
குடியேற்றவாதம்
ஆங்கிலத்தில் ‘காலனித்துவம்’ என்பது இன்னொரு தேசத்தின் மீது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியல் அதிகாரக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தங்கள் தேசமக்களை அங்கே குடியமர்த்தி, பொருளாதார ரீதியாக அவர்களின் இயற்கை வளங்களைச் சுரண்டி எடுத்துக்கொள்வதாகும் (Colonialism is the policy or practice of acquiring full or partial political control over another country, occupying it with settlers, and exploiting it economically). இக்கருத்தாக்கமே தமிழில் குடியேற்றவாதம் எனப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த போர்த்துக்கேயர் நமது வளங்களைச் சுரண்டியெடுத்தார்கள் என்பதைத் தவிர ‘குடியேற்றவாதிகள்’ என்ற தலைப்பு அவர்களுக்குப் பொருந்துமோ என்பது தெரியவில்லை. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த போர்த்துக்கேயரை அரசாங்க ஊழியர்கள், படையினர், மதகுருக்கள், வணிகர்கள், கைத்தெழிலாளர், அவர்களது குடும்பங்கள் ஆகிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம். அவர்கள் ஆட்சிபுரிந்த 39 ஆண்டுக்காலத்தில் தங்கள் சாதாரண தேசமக்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றினார்கள் எனக் கூறமுடியாது. சாதாரண போர்த்துக்யே குடும்பங்களோ, அவர்களின் பிள்ளைகளோ, பெண்களோ, பாடசாலை செல்லும் சிறுவர்களோ இருந்தர்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.
4. ஒல்லாந்தர் காலம் (1658 – 1795)
இலங்கையில் கண்டியரசனின் வேண்டுகோளின்படி போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக வந்த ஒல்லாந்த டச்சுக்காரர், போர்த்துக்கேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கையின் கரையோரப் பகுதிகளை படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டார்கள். மட்டக்களப்பு, காலி, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய பின்னர் இறுதியாக 16 மார்ச் 1658 இல் யாழ்ப்பாணக் கோட்டையை ரிஜ்குளொவ் வான் கோயன்ஸ் தலைமையில் முற்றுகையிட்டனர். கோட்டைக்குள்ளிருந்த போர்த்துக்கேய அதிகாரிகள் சரணடைய மறுத்தனர். இந்த முற்றுகை 99 நாட்கள் வரை நீடித்தது. கோட்டையைத் தகர்த்து போர்த்துக்கேயரை அடிபணியவைக்க அவர்களால் முடியவில்லை. இறுதியில் குடிநீர், உணவு, மருந்துகள் இன்றி அவர்கள் 24 ஜூன் 1658 அன்று சரணடைந்தார்கள் (De Queyroz, 1992: pp. 996 – 998).
ஆசிரியர் தரும் ஒல்லாந்தரின் புதிய கோட்டை அமைப்புப் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாகவும், தகவல் விளக்கமாகவும், கற்பிப்பதாகவும் உள்ளன. அக்காலத்திற்குரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒல்லாந்தரின் இந்த இலட்சியக் கோட்டை கிழக்கு நாடுகளில் உள்ள கோட்டைகளுள் பலம்மிக்கதாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
கோட்டைக்குள் அமைக்கப்பட்ட சிலுவை வடிவிலான தேவாலயம் தனித்துவமான கட்டட அமைப்பைக் கொண்டது. நடுவில் சதுரமான ஒரு மண்டபத்திலிருந்து நான்கு திசைகளிலும் நான்கு மண்டபங்கள் பிரிந்து சிலை வடிவில் சென்றன. இத்தேவாலயத்தின் தூண்கள், வளைவுகள், முக்கோண முகப்பு முகடுகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்ட டச்சுக் கற்களினால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் முதலாவது புரட்டஸ்தாந்து தேவாலயம் இதுவாகும்.
நகர விரிவாக்கம்
1770 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு நிலப்படத்தின் உதவியோடு ஒல்லாந்தர் காலத்தைய யாழ்ப்பாண நகர விரிவாக்கம் கூறப்படுகிறது. ஒல்லாந்தரின் 137 ஆண்டுக்கால ஆட்சியில் யாழ்ப்பாண நகரம் பரப்பளவில் விரிவடைந்ததாகச் சொல்ல முடியாது என்பதைத் தகுந்த சான்றுகளோடு மயூரநாதன் எடுத்துரைக்கிறார்.
“போர்த்துக்கேயர் காலத்தைய கோட்டைக்கு மேற்கேயிருந்த பகுதியும், முன் வீதிக்கும் கோட்டைக்குமிடையில் இருந்த கட்டடங்களும் ஒல்லாந்தரால் அகற்றப்பட்டமையால், போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரத்தைவிட ஒல்லாந்தர் நகரம் அளவில் சுருங்கிச் சிறிதானது என்றே கூறவேண்டும்” என்கிறார் ஆசிரியர். ஆனால் இப்பகுதிக்குள் இருந்த வெற்று நிலங்களில் வீடுகளைக் கட்டியதால் மக்கள் செறிவு அந்த நகர எல்லைக்குள் அதிகரித்திருக்கும் எனக் கூறுகிறார். ஒல்லாந்தர் நகரத்திலோ, அதற்கு அருகாமையிலோ ஐரோப்பியர் அல்லாதோர் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாண நகரத்தில் பெரிய அளவில் வணிகம் வளர்ச்சியடைவதற்கு வழியிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒல்லாந்தர்காலக் கட்டடங்களை விவரிக்கும் போது கோட்டைக்கு வெளியே இருந்த நீதிமன்றம், ஆதரவற்ற பிள்ளைகளுக்கான இல்லம், கட்டளைத் தளபதியின வீடு, பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், நீண்ட மதில்களுடன் கூடிய ஐரோப்பியர்களுக்கான மயானம் என்பவை பதிவாகியிருக்கின்றன. இன்றைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருக்கும் இடத்தில் கட்டடங்கள் இருப்பதை ஒல்லாந்தர்கால நிலப்படங்கள் காட்டுகின்றன. இன்றைய வேம்படி வீதிக்கு வடக்கே வெஸ்லியன் மிசன் இல்லம் இருந்த இடத்தில் கட்டம் இருந்ததை 1787 இல் வரையப்பட்ட நிலப்படம் காட்டுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாண நகருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்திருக்கின்றன. “அரசின் மிக உயர்ந்த பதவியை வகிப்பதற்கு மாணவர்களை இத்தீவிலேயே பயிற்றுவிக்க முடிந்தது என்பது இலங்கையில் ஒல்லாந்தரின் கீழான கல்வி முறையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது” என இ.எச். வன்டவால் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
நகரச் சூழல்
ஒல்லாந்தர் ஆட்சிகால ஆரம்பத்திலிருந்தே நகரத்திற்கு வெளியே இருந்த நிலங்களை வேளாண்மைக்காகவும், குடியிருப்புத் தேவைக்காகவும் ஒல்லாந்த இனத்தவருக்கு வழங்கியதை அக்கால அறிக்கைகளிருந்தும், நிலப்படங்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. இப்பகுதியில் உருவான குடியிருப்புகள் அரச உதவியுடனும், சில அவ்வாறு இல்லாமலும் வளர்ச்சியடைந்துள்ளன. மணிக்கூட்டு வீதியை அண்டி நெசவாளர்களான ‘சேணியர்’ குடியேற்றம் குறிக்கப்பட்டிருக்கிறது ஆகிய தகவல்கள் தரப்படுகின்றன.
அக்கால நிலப்படம் ஒன்றில் சின்னக்கடை, பெரியகடை, வண்ணார்பண்ணைச் சிவன் கோயில், ‘ரோமன் தேவாலயம்’ எனப் பெயர் குறித்த மூன்று கட்டடங்கள் என்பன காணப்படுகின்றன. இதிலிருந்து ஒல்லாந்தர் காலத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட சில இந்துக் கோயில்கள் திரும்பக் கட்டப்பட்டிருக்கலாம்.
யாழ்ப்பாண மக்கள் பாரம்பரியமாக விவசாயம், மீன்பிடித்தொழில் ஆகிய அடிப்படைப் பொருளாதார நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தார்கள். வணிக முயற்சிகள் குறிப்பாக முஸ்லிம்கள், செட்டிமார் மற்றும் தென்னிந்திய மலையாளத்தினர் வசமாக இருந்தன. இவர்களுள் செட்டிமாரும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்தனர்.
நல்லூர் செமினரி, தேவாலயம்
1692 தொடக்கம் 1722 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு மத போதகர்களை உருவாக்குவதற்காக ஒரு செமினரியை நல்லூரில் அமைத்திருந்தார்கள். ஒரு வரைபடத்தில் தேவாலயம், போதகரின் வீடு, 24 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிடப் பாடசாலை, ஒல்லாந்த ஆசிரியரின் வீடு என்பன குறிக்கப்பட்டிருப்பதை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
செமினரியின் வரைபடத்தில் பகரவடிவில் காணப்படும் கேணி இன்றைய ‘யமுனா ஏரி’. வரைபடத்தில் இக்கேணியை முப்புறமும் சூழ்ந்த ஒரு மண்டபம் காட்டப்படுகிறது. இக்கேணியை ‘மரங்களோடு கூடிய வெட்டப்பட்ட குளம்’ என்றும், நடுவில் அமைந்த மண்டபத்தை ‘கேட்போர் கூடம் அல்லது மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான இடம்’ எனவும் குறிப்பிடுகிறது. இந்த விவரங்களைப் பார்க்கும்போது ‘யமுனா ஏரி’ ஒல்லாந்தரால் வெட்டப்பட்டதாக எண்ணத் தோன்றுகிறது. ‘யமுனா ஏரி’ என்ற பெயர், இது பண்டைய நல்லூர்க் கோயிலின் கேணியாக இருக்கலாம் என்ற யூகத்தில், நமது சரித்திராசிரியர்கள் கொடுத்த பெயராகும்.
ஒல்லாந்தப் பாதிரியார் போல்டேயஸ் எழுதிய நூலில் குறிப்பிடப்படும் ஒல்லாந்தரின் நல்லூர்க் கோவிற்பற்றுத் தேவாலயத்தின் படம் மண்ணினால் கட்டப்பட்டு, ஓலை வேய்ந்த கூரைகளைக் கொண்டிருக்கிறது. இது தற்போதைய புனித யாக்கோபு தேவாலயம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது என்ற கருத்தே இன்றைய வரலாற்றாய்வாளர்களிடம் வலுவாக இருந்தாலும், இதை உறுதி செய்வதற்கு மேலும் சான்றுகள் தேவை என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
சங்கிலித் தோப்பு
சங்கிலித் தோப்பு வளைவு என்பது இன்றைய பருத்தித்துறை வீதியை அண்டி, அதன் கிழக்குப்பக்கத்தில் அமைந்துள்ள சங்கிலித் தோப்பின் நுழைவாயில் முகப்பு அகும்.

ஒரு காலத்தில் இது யாழ்ப்பாண அரசர்களின் மாளிகைக்கான வாசல் எனக் கருதப்பட்டிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில் இது ஒல்லாந்தர்காலக் கட்டடம் என்ற கருத்து உருவாகிவிட்டது. இது ஒல்லாந்தர் ஆட்சியில் தளபதி அந்தோனியோ மென்ஸிஸ் என்பவனின் நிர்வாகத்தில் முதன் மந்திரியாகவிருந்து, பின்னர் அரசுக்கு எதிராகச் சதி செய்து மரணதண்டனை பெற்ற பூதத்தம்பி முதலியாரின் மாளிகை நுழைவாசல் என்ற கருத்தும் உண்டு. இப்பகுதியிலுள்ள குளத்துக்கு அருகில் ஒரு கட்டடத்தின் அத்திவார அழிபாடு காணப்படுகிறது. இது நுழைவாயிலுக்கு நேர் எதிரே காணப்படுவதால், இக்கட்டடம் அமைந்த வளவின் சுற்றுமதிலில் இருந்த நுழைவாயில் அமைப்பே இன்று எஞ்சியுள்ள சங்கிலித் தோப்பு நுழைவாயில் என ஊகிக்கப்படுகிறது.
மந்திரி மனை
சங்கிலித்தோப்பு வளைவுக்கு அண்மையில், பருத்தித்துறை வீதிக்கு மேற்கே ‘மந்திரி மனை’ எனப்படும் பழைய கட்டடமொன்று உள்ளது. இதன் முன்புறத்தில் உள்ள கலப்புக் கட்டடக்கலை முகப்பு இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவமான கட்டடக் கலை அமைப்பாகும்.
5. பிரித்தானியர் காலம் (1795 – 1948)
பிரித்தானியர்களின் நீண்டகால ஆட்சி, கால அடிப்படையில் நான்கு பிரிவுகளாகக் கூறப்படுகிறது. அதன் முக்கியமான அம்சங்கள் மட்டும் இங்கே மதிப்புரை செய்யப்படுகின்றன.
போர்த்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் அரச நிர்வாகக் கட்டடங்களும், அரச ஆளுநர்களின் கட்டடங்களும் கோட்டைக்குள்ளே இருந்தன. ஆனால் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் முக்கியமான அரச நிர்வாகக் கட்டடங்கள் கோட்டைக்கு வெளியிலேயே அமைக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தினரின் தலைமை நிலையமாக விளங்கியது.
கோட்டைக்குக் கிழக்கே அரைமைல் தொலைவில் இருந்த புறக்கோட்டையில் ஐரோப்பியர்களும், உள்ளூர் மக்களுடனான தொடர்பினால் பிறந்த சந்ததியினரும் வாழ்ந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தைய நகரப்பகுதி அதிக மாற்றமின்றி தொடர்ந்திருந்தது.
1803 ஜனவரி முதல் அரச நிர்வாக அலுவலகங்கள் மக்கள் சென்றடையக்கூடிய வகையில் கச்சேரி என்ற பெயரில், சுண்டிக்குழியில், பழைய பூங்கா இருக்கும் பகுதியில் அமைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புறத்தில் அரசாங்க அதிபரின் வசிப்பிடமும் உருவாக்கப்பட்டது. இந்நிலத்தை தனது சொந்தப் பணத்தில் வாங்கிய அரசாங்க அதிபர் பேர்சிவல் டைக் அதன் ஒரு பகுதியை தனது வசிப்பிடமாக்கினார். மிகுதி நிலத்தை பழைய பூங்காவாக, இராணி விக்ரோறியாவின் அன்பளிப்பாக, யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கினார்.
மாகாணத் தலைநகரம்
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம் ஒரு மாகாணத் தலைநகராக வளர்ச்சியடைந்தது. புறக்கோட்டைப் பகுதி முக்கியமடைந்து கோட்டைப் பகுதியின் முக்கியத்துவம் பின்னடைந்தது. 1800 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரித்தானிய வீரர்களையும், அரச நிர்வாகப் பணியாளர்களையும் தவிர ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் நகரில் குடியேறியிருந்தார்கள்.
கேர்ணல் பேட்டன் பார்பட், பேர்சிவல் அக்லண்ட் டைக், ருவைன்ஹாம் ஆகிய பிரித்தானிய நிர்வாகிகள் மேற்கொண்ட முற்போக்கு நடவடிக்கைகளால் அரசியல், சமுதாய, நீதித் துறைகளில் அபார வளர்ச்சி காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான புதிய பாடசாலைகள், புதிய தேவாலயங்கள், புதிய அரச பணித்துறைகள் என்பன நகரத்தின் தோற்றத்தை நவீனமயப்படுத்தின.
கல்வி வளர்ச்சி
1816 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கோட்டைக்குச் சமீபமாக யாழ்ப்பாண முற்றவெளியிலிருந்த ஒல்லாந்தர்கால அனாதை இல்லக் கட்டடத்தையும், லூதரன் சிற்றாலயக் கட்டடத்தையும் விலைக்கு வாங்கிய வெஸ்லியன் மிக்ஷன் பாதிரிமார், 1817 இல் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார்கள். இது 1834 இல் யாழ்ப்பாண மத்திய பாடசாலை எனப் பெயர் மாற்றமடைந்து, இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியாக விளங்குகிறது. யாழ்ப்பாண வெஸ்லியன் மிக்ஷன் பாதிரிமார், யாழ்ப்பாண மத்திய பாடசாலையை ஆரம்பித்த 1834 ஆம் ஆண்டில், பெண்களுக்கான வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையையும் ஆரம்பித்து வைத்தார்கள்.
1818 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த யோசேப் நைற் என்ற பிரித்தானிய அங்கிலிக்கன் சபையைச் சேர்ந்த பாதிரியார், 1823 இல், முதலில் நல்லூரில், ‘நல்லூர் ஆங்கிலக் கல்விக்கூடம்’ என்ற பெயரில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். 1845 ஆம் ஆண்டில் இப்பாடசாலை சுண்டிக்குழிக்கு ‘சுண்டிக்குழிக் கல்விக்கூடம்’ என்ற பெயரில் மாற்றப்பட்டு, 1891 இல் பரியோவான் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதே நிறுவனத்தினரால் 1896 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பெண்களுக்கான ஆங்கிலக் கல்லூரி ‘சுண்டிக்குழிப் பெண்கள் கல்லூரி’ எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1868 ஆம் ஆண்டின் மோர்கன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி கிறிஸ்தவர் அல்லாதோரின் ஆங்கிலப் பாடசாலைகளுக்கும் அரசாங்க உதவி பெறும் வாய்ப்புக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்து ஆங்கிலப் பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உருவாயின. வண்ணார்பண்ணை சைவ ஆங்கிலப் பாடசாலை (1869), கொழும்புத்துறை இந்துக் கல்லூரி (1874), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1890) என்பன குறிப்பிடத்தக்கவை.
யாழ். வைத்தியசாலை
1850 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண ஆபத்துதவிச் சங்கம் இன்றைய மணிக்கூட்டுக் கோபுர வீதிக்கருகாமையில் ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தது. 1857 – 58 ஆம் ஆண்டுகளில் அரசாங்க உதவியுடன் விரிவாக்க வேலைகள் இடம்பெற்று, பெண் நோயாளர்களுக்கான ஒரு பிரிவும் அமைக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டில் இந்த வைத்தியசாலை இலங்கை அரசினால் பெறப்பட்டு 1907 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண குடிசார் மருத்துவ வைத்தியசாலையாக ஆக்கப்பட்டது.
இந்துக் கோவில்கள்
போர்த்துக்கேயரால் முன்னர் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களைத் திரும்பக் கட்டுவதற்கான அனுமதியை பிரித்தானிய அரசினர் வழங்கியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து பெரிதும், சிறிதுமான பல இந்துக் கோயில்கள் யாழ்ப்பாணக் கிராமங்களில் உருவாகின.
யாழ்ப்பாண நகரில் மீளுருவாக்கம் பெற்ற கோயில்களில் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தர் காலத்திலேயே இது உருவாகியிருந்த போதிலும், பிரித்தானியர் காலத்தில் இக்கோயில் வண்ணார்பண்ணைப் பகுதியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. அக்காலத்தில் ஒல்லாந்த அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வைத்திலிங்கம் செட்டியார் என்பவர் தனது தனிப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி இக்கோயிலைக் கட்டுவித்தார்.
ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர்க் கந்தசாமி கோயிலை மீளக் கட்டிய போது அது ஒரு சிறிய கோயிலாகவே இருந்தது. பின்னர் மேலும் நிலம் வாங்கி, கோவில் பெரிதாக விரிவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் கோயில் செங்கல்லிலாலான கருவறையையும், ஓரிரு மண்டபங்களையும் கொண்டதாக இருந்திருக்கக்கூடும். பிரித்தானியர் காலத்திலேயே இக்கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது.
யாழ் ஸ்ரீ வெங்கடேச வரதராசப் பெருமாள் கோயில் வண்ணார்பண்ணையின் தென்கிழக்குப் பகுதியில் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ளது. மக்கள் இதைப் பொதுவாக ‘பெருமாள் கோயில்’ என்றே அழைப்பர். இக்கோயிலின் விரிவாக்கம் 1835, 1878 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. மார்கழி மாதத்தில் சேமக்கலம் அடித்து திருப்பாவை பாடிய வண்ணம் நடைபெறும் பஜனை ஊர்வலம் இன்றுவரை நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் கோட்டை மதிலுக்கு அருகில் முற்றவெளியில் சிறுதெய்வ வழிபாட்டுக்கான ஒரு கோயில் முற்காலத்திலேயே இருந்ததாக அறியமுடிகிறது. இதுவே இன்றைய முனியப்பர் கோயிலாக இருக்கலாம் என ஆசிரியர் கருதுகிறார். 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் படையினர் பழங்கள், பூக்கள், தானியங்களை வழங்கி இத்தெய்வத்தை வழிபட்டதாக அறிய முடிகிறது.
கத்தோலிக்க வழிபாட்டிடங்கள்
ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப்பகுதியில் உருவான சில கத்தோலிக்கத் தேவாலயங்களைத் தவிர, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் புதிய தேவாலயங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணப் பேராலயம் 1780களில் மதம் சார்ந்த கெடுபிடிகள் தளர்ந்த பின்னர் இன்றைய யாழ்ப்பாணப் பேராலய வளவுக்குள் ஆரம்பமானதாக அறிய முடிகிறது. 1789இல் முறையான தேவாலயக் கட்டட வேலைகள் ஆரம்பமாகி 1794ஆம் ஆண்டில் கட்டடம் நிறைவு பெற்றது. அக்காலத்தில் இதற்கு புனித மரியாள் தேவாலயம் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தது.
அடைக்கல மாதா தேவாலயம் 1802 ஆம் ஆண்டில் ஆரம்பமானதாக அறியப்படுகிறது. 1907 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் மிகப் பெரியதான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. 1796 – 1833 காலப்பகுதியில் கட்டடத்தில் மேம்பாடுகள் இடம்பெற்றன. 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் இத்தேவாலயக் கட்டடம் பயன்பாட்டில் இருந்தது.
புனித யாகப்பர் தேவாலயம் ஐரோப்பியர் நகரத்திற்கும், குருநகருக்கும் இடையே அமைந்துள்ளது. இங்கே ஒரு கத்தோலிக்கக் குருவானவரை அடக்கம் செய்த 1783 ஆம் ஆண்டிற்குரிய ஒரு கல்வெட்டு காணப்படுவதனால் அதற்கு முன்னரே இத்தேவாலயம் இருந்திருக்கும் எனலாம். தற்போதைய தேவாலயத்திற்கு 1861 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
புனித யாகப்பர் தேவாலயத்திற்கு 100 மீட்டர் அப்பால் தென்கிழக்கில் வங்கசாலை வீதியில் அமைந்த இத்தேவாலயத்தின் தோற்றம் குறித்த தகவல்கள் இல்லை. இந்தத் தேவாலயம் யாழ்ப்பாண இராச்சியகாலத்தில் முதன்முதலாக கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய கடையர் சமூகத்தவருக்கு உரியது.
புரட்டஸ்தாந்து நிறுவனங்களின் தேவாலயங்கள்
16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கொள்கைகளை மறுத்து, கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றதனால் இவர்கள் புரட்டஸ்தாந்தர் (Protestants) என அழைக்கப்பட்டனர். பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணத்தற்கு வந்த வெஸ்லியன் மிசனரிகள் தமது தலைமையகத்தை முதலில் நல்லூரிலும் பின்னர் யாழ்ப்பாண நகரிலும் அமைத்துக்கொண்டனர்.
சுண்டிக்குழியில் போர்த்துக்கேயர் காலத்திலேயே ஒரு தேவாலயம் இருந்ததை போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டிருக்கிறார். போர்த்துக்கேயரின் தேவாலயங்களை அதே நிலையிலோ அல்லது திருத்தியோ ஒல்லாந்தரும் பயன்படுத்தியபடியினால், ஒல்லாந்தரின் சுண்டிக்குழித் தேவாலயம் அதே இடத்தில் இருந்தது எனக் கொள்ளலாம். 1801 ஆம் ஆண்டளவில் இக்கட்டடம் சிதிலமடைந்து போய்விட்டதாகத் தெரிகிறது.
இஸ்லாம் மதப் பள்ளிவாசல்கள்
ஒல்லாந்தர்கால இறுதிப்பகுதியில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த சோனகத் தெருப் பகுதியில் மூன்று பள்ளிவாசல்களை அமைத்திருந்தார்கள். முதலாம் குறுக்குத் தெருவிலிருந்த பள்ளிவாசலும் அதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் சட்டரீதியாக வழங்கப்பட்ட பின்னர் இப்பள்ளிவாசல் கட்டடங்கள் விரிவாக்கப்பட்டன. சோனகத் தெருவில் முஸ்லிம் கல்லூரி வீதி – காதி அபூபக்கர் வீதி சந்தியருகிலிருந்த முகியித்தீன் தைக்கா, பிரித்தானியர் காலத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.
இந்துமத நிறுவனங்கள்
19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் யாழ்ப்பாண நகரின் இந்துப் பகுதியாக வளர்ச்சியடைந்தது வண்ணார்பண்ணையும், அதை அண்டிய பகுதிகளுமாகும். இப்பகுதியில் அமைந்திருந்த வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் இந்துமத வளர்ச்சியின் ஒரு மையமாக அமைந்தது எனலாம். இலங்கையின் சைவசமய மறுமலர்ச்சியின் மூலவராகக் கருதப்படும் ஆறுமுக நாவலர் தனது பிரசார மையமாக இச்சிவன் கோயிலையே ஆக்கிக்கொண்டார்.
கிறிஸ்தவ மதங்களைப் போலன்றி, இந்துமத நடவடிக்கைகள் நிறுவனமயமானதாக இருக்கவில்லை. வழிபாட்டிடங்கள், கோவில்கள் என்பன தனியாருக்கோ அல்லது சிறு சாதிக் குழுக்களுக்கோ உரியனவாக இருந்தன. இதன் காரணமாக கிறிஸ்தவ நிறுவனங்களில் இருந்தது போல், மதச் செயற்பாடுகளையும் கல்வியையும் ஒருங்கிணைந்த வகையில் இந்துக்களால் முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை. இக்காலப் பகுதியில் இந்துப் பிள்ளைகளும் அவர்களது மதச் சூழலில் கல்வி கற்பதை நோக்கமாகக்கொண்டு பாடசாலைகளை நிறுவும் எண்ணம் உருவானபோது, சமயத்தின் முழுமையான வளங்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக் குறைவாகவே இருந்தது.
சைவப் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக தனது எண்ணங்களைச் செயற்படுத்த ஆறுமுக நாவலர் முதலில் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தார். 1848 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பாடசாலையில் சைவச் சூழலில் கல்வி கற்பிப்பதுடன் பாடங்கள் தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வித் தேவைகளுக்கும், தனது பிரசாரத் தேவைகளுக்குமான அச்சுக்கூடம் ஒன்றை ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலுக்கு அண்மையில் நிறுவிக்கொண்டார்.
வணிகம்
யாழ்ப்பாண நகர வணிகத்தில் வண்ணார்பண்ணை வணிகப்பகுதி முக்கிய இடம் வகித்ததாக அறிகிறோம். வண்ணார்பண்ணைச் சந்தைப் பகுதியில் பருத்தி நெசவாளர், செக்கில் எண்ணெய் வடித்து விற்பவர்கள், பொற்கொல்லர்கள் மற்றும் மீன், உள்ளி, மிளகாய், புகையிலை, மஞ்சள், கிழங்கு வகைகள், அரிசி, பிற தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், இலைகள், காய்கறிகள் ஆகியன சந்தையில் குவிந்திருந்தன என்பதை அறிய முடிகிறது.
பெரியகடைச் சந்தை
போர்த்துக்கேயர் காலத்திலேயே காங்சேகன்துறை வீதியை அண்டி ஒரு சந்தை இருந்திருக்கிறது. 1770 ஆம் ஆண்டின் ஒல்லாந்தர்கால வரைபடங்களிலும் இப்பெரியகடை இருந்ததை ஆர்.எல். புரோகியர் கூறுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். பிரித்தானியர் காலத்தில் இரண்டு பெரிய சொக்கட்டான் வடிவக் கட்டடங்களையும், இக்கட்டடங்கள் பெரிய தூண்களின் மீது தாங்கப்பட்ட மரத்தாலான கூரைச் சட்டங்களையும், ஓட்டுக் கூரைகளையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பெரும்பாலும் மரபு வழியான உற்பத்திப் பொருட்களை விற்கும் இடமாகவே இச்சந்தை விளங்கியது. மேற்குறிப்பிட்ட வணிகப் பொருட்களோடு பனம் பொருட்களை விற்கும் கடைகளும் இங்கே இருந்தன.
முதல் வங்கிக் கட்டடம்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த முதலாவது வங்கியான ‘ஓரியென்டல் பாங்க் கார்ப்பரேசனின்’ யாழ்ப்பாணக்கிளை, 1864 இல் ஐரோப்பியர் நகரப் பகுதியில், நகரத்தின் பிரதானவீதி – மூன்றாம் குறுக்குத் தெருச் சந்தியில் இருந்த ஒரு வீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, அது வெற்றிகரமாக நடைபெற்றதால், பின்னர் இரண்டாம் குறுக்குத் தெரு – கடற்கரை வீதிச் சந்தியில் ஓர் இரண்டு மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டது.
தபால் நிலையம்
1882 இல் இந்த வங்கி முறிந்து போன பின்னர், 1899 இல் இக்கட்டடத்தை அரசாங்கம் வாங்கி, அதில் யாழ்ப்பாணத் தபால் நிலையத்தை அமைத்தது. பிற்காலத்தில் முற்றவெளிக்கு எதிரே புதிய தபால் நிலையத்தைக் கட்டும்வரை, யாழ்ப்பாணத் தபால் நிலையம் பழைய வங்கிக் கட்டடத்திலேயே நடைபெற்று வந்திருக்கிறது.
உள்ளூராட்சிச் சபை
யாழ்ப்பாண நகருக்கான ஒரு மாநகரசபையை நிறுவும் வாய்ப்புகள் 1860களில் இருந்தும் அது செயற்படுத்தப்படவில்லை. ‘சுகாதாரத்துக்கும் மேம்பாட்டுக்குமான உள்ளூர்ச்சபை’ என்ற அமைப்பு 1906 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையின் தலைவராக அரசாங்க அதிபர் செயற்பட்டார். ஆரம்பத்தில் கச்சேரி நிர்வாகத்தின் பொறுப்பிலிருந்த சுகாதாரத்தைப் பேணுதலும் மேம்படுத்தலும்; மாவட்ட வீதிக்குழுவின் பொறுப்பிலிருந்த வீதிகள், வடிகால்கள், தெரு விளக்குகளை நிறுவிப் பேணுதல் ஆகிய பணிகள் இச்சபையின் பொறுப்பிற்கு வந்தன. பலதரப்பட்ட வரிகளையும் இவர்கள் அறவிட்டார்கள்.
1923 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து யாழ். நகரம் உள்ளூர் ஆட்சி நகரப் பகுதிச் சபையாக (Urban District Council) உயர்ந்தது. இச்சபையில் தேர்தல் மூலம் தெரிவான 8 உறுப்பினர்களும், 4 நியமன உறுப்பினர்களும் இருந்தார்கள். இவர்களுடன் அரசாங்க அதிபரும் சபையின் உறுப்பினராக இருந்தார். ஜனவரி 1940 ஆம் ஆண்டில் இச்சபை 12 அங்கத்தவர்களைக் கொண்டு உயர்வு பெற்றது. இச்சபையின் இருப்புக்காலத்தில் நீர் வழங்கல், வடிகால், கழிவகற்றல், மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி ஆகியவற்றை நிர்வகிப்பதில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
போக்குவரத்து – தொடர்வண்டிச் சேவை
ஆனையிறவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடர்வண்டிப் பாதை வழித்தடம், ஆனையிறவுக்கும் சாவகச்சேரிக்கும் இடையிலான வழித்தடம் என்பன குறித்த நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், 1902 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் புகையிரத நிலையம் நிறுவப்பட்டது. முதலாவது புகையிரத வண்டி 1905 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
யாழ்ப்பாண நகரில் அமைத்த தொடர்வண்டி நிலையம் ஒரு மேடை மட்டும் கொண்டு சிறியதாக இருந்தது. இக்காலத்தில் இச்சேவையைப் பயன்படுத்திய மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து, கூடிய வருமானத்தைக் கொடுத்திருந்த போதிலும் 1930 ஆம் ஆண்டுவரை வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை.
மோட்டார் வண்டிகளும் யாழ்ப்பாண வீதிகளும்
யாழ்ப்பாணத்திற்கு எந்த ஆண்டில் முதலாவது மோட்டார் வண்டி வந்தது என்பது தெரியவில்லை. 1920களில் ஒஸ்ரின், போஃர்ட், மொரிஸ் மைனர் ஆகிய அக்காலத்தைய தரமான வண்டிகள் (Vintage cars) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துவிட்டன. 1921 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண பொது வேலைகள் திணைக்களத்தின் பராமரிப்பிலிருந்த பெரும்பாலான வீதிகள் மோட்டார் வண்டிப் போக்குவரத்திற்கு பொருத்தமானவையாகத் தரம் உயர்த்தப்பட்டன. 1926 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரத்திலிருந்து காங்கேசன்துறை, பருத்தித்துறை, பலாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் முக்கிய வீதிகள் பாரவூர்திகள் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டன.
பேருந்துச் சேவை – பேருந்து நிலையம்
1923 – 1926 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் தனியார் இயக்கிய பேருந்துகளும், மோட்டார் வண்டிகளும் யாழ்ப்பாணத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கியது பற்றித் தகவல்கள் இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். தொடர்ந்து பொதுப் பேருந்துச் சேவைகள் அறிமுகமாயின. 1928 ஆம் ஆண்டின் நிலப்படம் பெரியகடைக்கு அருகே பேருந்து நிலையத்தைக் குறித்துக் காட்டுவதனால், அதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பேருந்துகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன எனக் கொள்ளலாம்.
திரைப்பட அரங்குகள்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாண நகரத்தில் பல திரைப்பட அரங்குகள் தோன்றிவிட்டன. ரோயல் தியேட்டர், மகேந்திரா ரோக்கீஸ், ரீகல் தியேட்டர் என்பன ஆரம்பகாலத் திரையரங்குகளாகும்.
பூங்காக்கள்
1943 ஆம் ஆண்டில் வைத்தியர் சுப்பிரமணியம் முற்றவெளிக்கு அண்மையில் ஒரு நிலத்தை வாங்கி, அதை ஒரு பொதுமக்கள் பூங்காவாக உருவாக்கி அதன் நிர்வாகப் பொறுப்பை யாழ்ப்பாண நகரசபையிடம் கையளித்தார்.
யாழ்ப்பாண வைத்தியசாலை விரிவாக்கம்
1907 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண வைத்தியசாலை, அரசினரால் குடிசார் மருத்துவ வைத்தியசாலையாக (Civil Hospital) ஆக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவ்வைத்தியசாலையை அரசாங்கம் கையேற்றபோது இருந்த கட்டடங்கள், இரு முன்னாள் அரசாங்க அதிபர்களின் நினைவாக பேர்சிவல் டைக், சேர் வில்லியம் துவைனம் ஆகியவர்களது பெயர்களைத் தாங்கியிருந்தன. 1915 ஆம் ஆண்டளவில் பல புதிய கட்டடங்களும், 1929 ஆம் ஆண்டில் இரு புதிய நோயாளர் விடுதிகளும் அமைக்கப்பட்டன. 1928 – 1948 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் வைத்தியசாலை, மணிக்கூட்டுக் கோபுர வீதியின் கிழக்கிலும், மேற்கிலும் கட்டடங்களைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக மணிக்கூட்டுக் கோபுர வீதி வைத்தியசாலையினூடாகச் செல்வது தடைசெய்யப்பட்டது.
யாழ்ப்பாண அருங்காட்சியகம்
யாழ்ப்பாண அருங்காட்சியகம் வடமாகாண அரசாங்க அதிபராகப் பணியாற்றிய சேர். வில்லியம் துவைனம் அவரது 91 ஆவது பிறந்தநாளில் ‘துவைனம் நினைவு அருங்காட்சியகம்’ என ஆரம்பிக்கப்பட்டு, 1869 – 1896 ஆண்டுக் காலப்பகுதியில் பரியோவான் கல்லூரி வளாகத்திற்குள் இயங்கி வந்தது. பின்னர் இந்த அருங்காட்சியகம் ‘தொல்லியல் திணைக்களத்தினரால்’ பெறப்பட்டு, பிரதான வீதியில் ஒரு கட்டடத்தில் இயங்கி வந்தது.
முடிவுரை
இந்த நூல் ஏற்கனவே நமது வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்த தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு இரண்டாவது வகைச் சரித்திர நூல் அல்ல. போர்த்துக்கேய, டச்சுக்கார, பிரித்தானிய ஆட்சிக்காலத்தைய அறிக்கைகளையும், ஆவணங்களையும், வரைபடங்களையும், சமகாலத்தைய மூல நூல்களையும் அலசி ஆராய்ந்து, அக்காலப் பகுதிகளின் ஆட்சியாளர்களினதும், குடிமக்களினதும் தேவைகளுக்கும், அரசியல், சமூக, பொருளாதார, வளர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாதுகாப்பு, நிர்வாகம், வணிகம், கல்வி, சமயம், வீதியமைப்பு, போக்குவரத்து, பொதுவசதிகள் ஆகிய பலதரப்பட்ட துறைகள் சார்ந்து யாழ்ப்பாண நகரம் வளர்ச்சியடைந்த விதம் குறித்த விரிவான விளக்கங்களை உள்ளடக்கிய நூல்.
அதுமட்டுமல்ல, இப்பொருள் பற்றி இதற்கு முன்னர் வெளிவந்த வரலாற்று நூல்களின் மெய்மையை வெளிப்படுத்தும் வரலாற்றியல் (Historiography) ஆய்வு நூல் என்ற வகையில் இது ஒரு முன்னோடி நூல். இதுவரை காலமும் வெளிக்கொணரப்படாத ஏகப்பட்ட தகவல்களை உள்ளடக்கி, நூற்றுக்கணக்கான நிலப்படங்களினதும், வரைபடங்களினதும், ஒளிப்படங்களினதும் உதவி கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நூலாசிரியரின் அயராத உழைப்புக் காணக்கிடக்கிறது.
ஒரு மண்ணின் வரலாறு அதன் மக்களைச் சென்று அடைய வேண்டும். “பல்கலைக்கழகக் கோட்டையிலே, பேராசிரியர்களின் மூளைக்குள்ளே அணிவகுத்து நிற்கும் ஆயிரமாயிரம் விவரங்களும் நிகழ்வுகளும் சரித்திரமா? அல்ல. அல்லது, நூல் நிலையங்களிலே, கனத்த அட்டைகளுக்கு இடையே, பொடி எழுத்துகளில் திணிக்கப்பட்டிருக்கும் தேதிகளும், பெயர்களும், போர்க்களங்களும் சரித்திரமா? அல்ல. மக்கள் அறிந்ததே சரித்திரம். அவர்களின் இரத்தத்தோடு இரத்தமாய்க் கலந்துவிடும் நினைவுகளே சரித்திரம்” என்கிறார் ஒரு வரலாற்றாசிரியர். அந்த வகையில் இலகுவாக விளங்கக்கூடிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் ஒவ்வொரு வாசகனின் உள்ளத்திலும் உறைந்துவிடும் என்பது உறுதி. இந்த நூல் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய வரலாற்றுப் படைப்பு ஆகும்.
‘தான் பிறந்த மண்ணின் மீது அபாரமான அபிமானமும், எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள்மீது ஆழ்ந்த புலமைத்துவமும் இல்லாவிடின் இப்படியானதொரு வியத்தகு படைப்பை உருவாக்கியிருக்க முடியாது’ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இந்த வரலாற்றியல் ஆய்வு காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கப்போகின்ற ஒரு மகத்தான படைப்பு. இது, யாழ்ப்பாண மண்ணின் வரலாற்று ஆய்வில், நூலாசிரியர் மயூரநாதனின் ஒரு மகோன்னத சாதனை என்றே கூறவேண்டும்.
அடிக்குறிப்புகள்