நூல்: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்
தொகுப்பும் தமிழாக்கமும் : கந்தையா சண்முகலிங்கம்
பதிப்பகம்: எழுநா
ஆண்டு: 2025
பக்கங்கள்: 268
விலை: 1, 500 இலங்கை ரூபா
ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்த ஒன்று. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்களைக் கொண்டுள்ளது. சிறிய தேசம் என்றாலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேச, வட்டார வேறுபாடுகளையும் அது கொண்டுள்ளது.
ஈழச் சமூகம் பற்றிய கற்கை நெறியில் அயல் பார்வைகளும், இயல் பார்வைகளும் நம்வசப்பட்டுள்ளன. இவை கணிசமான புரிதல்களைக் காட்டுகின்றன. இவை யாவற்றையும் ஒரு நேர்க்கோட்டில், சமதளத்தில் வைத்துப் புரிந்து கொள்ள இயலுமா? இயலும் என்கிறார் கந்தையா சண்முகலிங்கம். இதற்காக இவர் எடுத்துள்ள சீரிய முயற்சிதான் ‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ எனும் இந்நூல். இதன் வகைமையில் இது ஒரு மிக முக்கியமான நூல்.
நூலாசிரியர் நன்கறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். இவர் நமக்களித்துள்ள ஈழத்து இனவரைவியலும் சமூகவியலும் மிகவும் பெறுமதியானவை. இதுவரை இவர் ஒன்பது சுயமான நூல்களையும், எட்டு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். பதினேழு நூல்களும் இலங்கையின் சமூக வரலாறு, சமூகவியல், பண்பாட்டு அரசியல் சார்ந்தவை.
மதிப்புரைக்காக எடுத்துக்கொண்டுள்ள இந்நூலினை மூன்று பெரும் பிரிவுகளில் ஒழுங்கு செய்திருக்கிறார். அவை: 1. வரலாற்று நோக்கு, 2. மானிடவியல், சமூகவியல் நோக்கு, 3. அரசியல் விஞ்ஞான நோக்கு. இப்பிரிவுகளில் மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. ஈழச் சமூகத்தின் பாரிய அசைவியக்கங்களை முன்வைக்கும் வகையில் இம்மூன்று பிரிவுகளும் அவற்றில் ஒன்பது இயல்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரலாறு, சமூகம், அரசியல் என இந்நூலின் களம் விரிகிறது. ‘சாதி’ எனும் ஒரு பொருளை இந்த மூன்று கண்ணோட்டங்களில் அறியும் ஓர் அற்புதமான வாய்ப்பை இந்த நூலில் க. சண்முகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு பெறுமதியான வாசிப்பு இதன் மூலம் நமக்கு வயப்படுகிறது.
வரலாற்று நோக்குப் பிரிவில் க. அருமைநாயகம், சி. அரசரத்தினம், பஸ்தியாம்பிள்ளை ஆகிய மூன்று அறிஞர்களின் ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
நூலின் முதல் இயல் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிகள் பற்றியது. வரலாற்று ஆசிரியர் க. அருமைநாயகம் எழுதிய கட்டுரை இது. இவர் சிலகாலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பணியாற்றியவர். பின்பு இலங்கை இறைவரித் திணைக்களத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர்.
வரலாற்றாசிரியர் அருமைநாயகத்தின் கட்டுரை காலனிய காலச் சாதிய வாழ்வியலை அறிவதற்கு ஒரு மிக முக்கியமான கட்டுரையாகும். இக்கால கட்டத்தில் இரண்டு விதமான போக்குகள் ஏற்பட்டன. தொடக்கத்தில் கீழ்ச்சாதியார் முறைப்பாடுகள் கொடுக்கும் போது காலனிய நிர்வாகம் அவர்களிடம் தேசவழமை முறைகளைப் பேணுமாறு அறிவுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த கட்டத்தில் சாதி தொடர்பான விடயங்களில் நீதிமன்றங்கள் சட்ட ரீதியில் அணுகத் தொடங்கின. ஒரு முக்கியமான மாற்றமிது.
கட்டுரையாசிரியர் விவரித்துச் சொல்லும் பல்வேறு விடயங்களில் ஒரு வழக்கை இங்கு நாம் அவதானிக்கலாம். ‘தவசி கந்தன் எதிர் வயிரவன் கந்தனும் பிறரும்’ எனும் வழக்குதான் அது. இந்த வழக்கின் எதிராளிகள் அம்பட்டர் ஒருவரும், வண்ணார் ஒருவரும் ஆவர். இவர்கள் வழக்காளியின் குடிமைச் சேவகர்கள். வழக்காளி தவசி கந்தன் தனது மகளுக்குக் காது குத்தும் சடங்கை ஏற்பாடு செய்திருந்தார். அச்சடங்கில் எதிராளிகள் இருவரும் மரபுக்கு மாறாகப் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
சடங்கில் கலந்து கொண்டு கௌரவிக்க வந்த வழக்காளியின் உறவினர்களும் நண்பர்களும் மேற்படி குடிமக்கள் இருவரும் இல்லாத சடங்கு வீட்டில் சாப்பிட மாட்டோம் என்று கூறியதோடு, வழக்காளிக்கு அன்பளிப்புகள் ஏதும் கொடுக்காமல் திரும்பி விட்டனராம். இதனால் வழக்காளிக்கு 1 பவுன் 4 சிலிங் பண நட்டம் ஏற்பட்டது என வழக்குத் தொடர்ந்தார். மாவட்ட நீதிமன்றம் எதிராளிகளைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கியது. ஏற்பட்ட நட்டத்தை வழங்க உத்தரவிட்டது. எதிராளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி கண்டனர். அந்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் விவரங்களைக் கட்டுரையில் விரிவாகக் கூறியிருக்கிறார் க. சண்முகலிங்கம்.
காலனிக் காலத்தில் நிகழ்ந்த இன்னும் பல சாதிய அசைவியக்கங்களை இக்கட்டுரையில் அருமைநாயகம் விரிவாகப் பேசுகிறார். மேலும், உரோமன் கத்தோலிக்கர், லூதர் மார்க்கத்தினர், புரட்டஸ்தாந்திய கிறித்தவர்கள் ஆகியோர் சாதிய முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்த வரலாற்றையும் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார். யாழ்ப்பாணச் சாதிய வரலாற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அலசும் இக்கட்டுரை ஓர் அரிய ஆவணமாகும். ஒரு கண் திறப்பாகவே அமைகிறது.
இயல் இரண்டு பேராசிரியர் அரசரத்தினம் எழுதியது. இவர் இங்கிலாந்தில் மூன்றாண்டுகள் (1954 – 1956) ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். பேராதனை, மலாயா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் பணியாற்றியவர். 1998 இல் காலமானார்.
18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வேளாளர் சாதியின் சமூக வரலாற்றை ஆராய முனைந்த அரசரத்தினம் 800 ஆண்டு கால வரலாற்றையே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வரலாற்றில் யாழ்ப்பாணச் சாதிகளை விவசாயச் சாதிகள், கைவினைச் சாதிகள், கரையோரச் சாதிகள் என மூன்றாக வகைப்படுத்தி அவற்றின் அசைவியக்கங்களை வெகு நுட்பமாக அலசுகிறார். தொடக்க காலத்தில் இந்த மூன்று உற்பத்தித் துறைகள் சார்ந்த சாதிகள் தனித்துவமாகவும், சுதந்திரமாகவும் இயங்கின என்கிறார்; தன்னாட்சியுடன் (Autonomous) விளங்கின என்கிறார். பின்னர் இத்தன்மை மாறி வேளாளர் சாதி ஒரு மேலாதிக்கச் சாதியாக பலம் பெற்று மற்ற சாதிகளைப் பின்னுக்குத் தள்ளியது எனும் வரலாற்றை விளக்குகிறார்.
பேராசிரியர் அரசரத்தினம் தனது விடயப் பொருளை மிக விரிவாகவும், நுட்பமாகவும் ஆராய்ந்து புகழ் பெற்றவர் என்பதாலேயே க. சண்முகலிங்கம் இக்கட்டுரையை மென்தழுவலாகத் தமிழாக்கம் செய்து நமக்களித்துள்ளார். யாழ்ப்பாணச் சமூக வரலாற்றை நான்கு கட்டங்களில் அலசுகிறார் அரசரத்தினம். அவை: 1. ஆரம்பகாலம் (13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு), 2. ஆரியசக்கரவர்த்திகள் காலம் (13 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1619 வரை – யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைவது வரை), 3. காலனிய ஆட்சிக்காலம் (கி.பி. 1619 தொடங்கி விடுதலை வரை). 4. சுதந்திரத்திற்குப் பிறகான காலம். இக்காலப் பதிவுகளில் 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வேளாளர் ஒரு மேலாதிக்கச் சாதியாக மேலாண்மை பெற்றனர். இதனை அரசரத்தினம் நுணுகி விளக்கியிருப்பது பெறுமதியானது. வரலாற்றியல் கண்ணோட்டத்தில் வடக்கிலங்கையில் சாதிகளை விளங்கிக் கொள்ள இது ஓர் அருமையான கட்டுரையாகும். ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பும் நமக்கு வாய்த்துள்ளது.
அடுத்ததாக, மூன்றாவது இயலாக அமைவது ‘வட இலங்கையில் சாதி: 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு’. இந்த ஆய்வைச் செய்தவர் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை. இவர் பேராதனை, இலண்டன் பல்கலைக் கழகங்களில் வரலாறு பயின்றவர். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கலைப்பீடாதிபதி வரை பதவி உயர்வு பெற்றவர்.
இவரது கட்டுரை வட இலங்கையில் சாதிகள் பிரித்தானிய கால அரசின் கொள்கைகளாலும், நடைமுறைகளாலும் கண்ட எதிர்வினைகள், மாற்றங்கள் பற்றி ஆராய்கிறது. குறிப்பாக, பிரித்தானியக் காலனிய நிர்வாகம் சாதி உறவுகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்வு கண்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் நுணுகி ஆராய்கிறது. ஆங்கில நிர்வாகம் சமூக நீதியில் (Social Justice) அக்கறை காட்டியது. பிறப்பின் அடிப்படையில் சாதிபேதம் காட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும் சாதிய மரபுகளை விரைந்து மாற்றுவதால் நிர்வாகத்திற்கு இடையூறுகள் வரும் என்பதையும் கணித்தது. ஆங்கில ஆட்சி இலங்கையில் 1796 இல் தொடங்கியது. ஆயினும் 1833க்குப் பின்னரே அவ்வாட்சியின் கொள்கைகளிலும், நடைமுறைகளிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. பஸ்தியாம்பிள்ளை 1833 முதல் 50 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டுமே இக்கட்டுரையில் நுண்ணாய்வு செய்திருக்கிறார். இக்கட்டுரையை நூலாசிரியர் சண்முகலிங்கம் மிக நேர்த்தியாக மூலக் கட்டுரையை வாசிப்பது போன்று ஆய்வு நடையின் அழகோடு எடுத்துரைக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால் இந்நூலின் முதற் பகுதியாக விளங்கும் வரலாற்றுப் பிரிவில் உள்ள மூன்று கட்டுரைகளும் பொருள் ரீதியிலும், கால ரீதியிலும் வெவ்வேறானவை. ஆனால் சாதிய அசைவியக்கத்தை அறிவதில் இவை காட்டும் நுட்பங்கள் பெறுமதியானவை. சண்முகலிங்கம் அவருடைய நீண்டகாலப் புலமையாலும் அனுபவத்தின் ஊடாகவும் மூன்று மிக முக்கிய கட்டுரைகளை நமக்கு மென்தழுவலாக ஆக்கித் தந்துள்ளார்.
நூலின் இரண்டாம் பகுதி சமூகவியல், மானிடவியல் பற்றியது. இதிலுள்ள நான்கு கட்டுரைகளில் மூன்று வெளிநாட்டு அறிஞர்களால் எழுதப்பட்டவை. மற்றொன்று பேராசிரியர் பேரின்பநாயகம் எழுதியது. இவர் அமெரிக்காவில் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
ஆண்ட்ரூ கென்னத் டேவிட் எழுதியுள்ள முதல் கட்டுரை ‘மறைந்திருக்கும் சக்தி: யாழ்ப்பாணத்துப் பெண்களின் பண்பாடு, சமூக – பொருளாதாரத் தகுதி’ பற்றியது. யாழ்ப்பாணம் மயிலிட்டி கிராமத்தில் 1973, 1980 காலகட்டத்தில் களப்பணி செய்து சிகாகோ பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ஆய்வின் ஒரு பகுதியே இக்கட்டுரை. மனித சமூகத்தில் சமபாதியாக விளங்கும் பெண்கள் பண்பாட்டில் எவ்வாறான வகிபாகத்தில் வாழ்கிறார்கள் என்பது மானிடவியல் கற்கை நெறியில் ஒரு முக்கியமான களமாகும். தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய களங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணத்தில் அது எவ்வாறு தொழிற்பட்டிருந்தது என்பதை கென்னத் டேவிட் ஆராய்ந்திருக்கிறார். புறத்தளத்தில் பெண்கள் கீழ்ப்பணிதலையும் (அடிமை போன்றது), விலகி நிற்றலையும் (துறவு போன்றது) கொண்டுள்ளனர். ஆனால் அகவயத் தளத்தில் அவள் தனக்குள் சக்திமிக்கவளாக விளங்குகிறாள். சமூகத்தின் பொது வெளியில் ஒதுங்கி இருந்தாலும், குடும்ப வாழ்வில் முக்கிய முடிவு எடுப்பவளாய் இருக்கிறாள். புறத்தே அடிமையாகத் தோன்றும் பெண், அகத்தில் சக்தியுடையவளாக இருப்பது முரண் உறவு கொண்டதல்ல என்பதை மானிடவியல் நோக்குடன் அணுகுவது ஒரு நுண்ணாய்வு எனலாம். சடங்கியல் வாழ்வில் பெண்கள் கொண்டுள்ள குறியீட்டு அர்த்தங்களையும் இந்த ஆய்வில் அகழ்ந்து காட்டுகிறார். மேலும், பெண்கள் பருவம் அடைவது முதல் மாதவிடாய் நின்று விடுதல் வரை அவர்கள் மீது குடும்பமும் சமூகமும் காட்டும் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் இரண்டையும் மிக நேர்த்தியாக ஆராய்கிறார்.
இந்த ஆய்வின் அடுத்த பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் நியமப் பகுப்பாய்வை (Normative Analysis) அலசுகிறார். ஒவ்வொரு பண்பாட்டிலும் அர்த்தக் குறியீடுகள் நிரம்பிக் காணப்படும். அவை யாவும் அப்பண்பாட்டின் விழுமியக் கோட்பாட்டை (Theory) உள்ளுறையாக வைத்திருக்கும். இதனைக் கென்னத் டேவிட் கட்டுப்பட்ட சாதிய உறவுகள், கட்டுப்படாத சாதிய உறவுகள் ஆகிய இரண்டோடும் இணைத்துக் காட்டுகிறார். யாழ் குடா பண்பாட்டை ஆராய்வதில் கென்னத் டேவிட் ஒரு புதிய முறையியலை வகுத்துள்ளார். அதனை நூலாசிரியர் க. சண்முகலிங்கம் நம் வசப்படுத்தியுள்ள விதம் பாராட்டுதலுக்குரியது. ஒரு தேர்ந்த சமூக அறிவியல் பார்வையோடும் மொழியோடும் தந்துள்ளார்.
நூலின் அடுத்த இயல் மைக்கல் பாங்ஸ் எழுதியது. இவர் சிறுப்பிட்டி, நீர்வேலி, கிளிநொச்சி ஆகிய இடங்களில் 1952 தொடங்கி ஆய்வு செய்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் செய்த கலாநிதிப் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இது. உண்மையில் சாதிகளுக்கிடையில் நிலவும் பரஸ்பர உறவுகள், சார்புநிலை, விலகியிருத்தல், விலக்கி வைத்தல், தீண்டாமை, படிநிலை எனப் பல வகையான அசைவியக்கங்களைப் பேசும் கட்டுரை இது. ஓர் உயிரோட்டமுள்ள சமூக இயங்கியலை இக்கட்டுரையில் காணலாம். வடக்கிலங்கை மானிடவியலாக இது அமைகிறது.
இக்கட்டுரையில் மைக்கல் பாங்ஸ் தமிழகத்தின் தஞ்சாவூர்ப் பகுதியோடு யாழ்ப்பாணத்தை ஒப்பிட்டுக் காட்டுவது ஒரு கூடுதல் புரிதலாகும். அவர் சாதிகளின் பெயர்களை வெளிப்படையாகவே கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஆனால் க. சண்முகலிங்கம் அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மானிடவியல் மரபில், அதிலும் சாதியம் பற்றிய ஆய்வுகளில் அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பகுப்பாய்வின் துல்லியத் தன்மைக்கும் புரிதலுக்கும் அது வழிவகுக்கும்.
இருப்பினும் மைக்கல் பாங்ஸ் காட்டும் புதிய வெளிச்சம் பிரமிப்பாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் கண்ணால் காண முடியாத ஒரு சாதி பற்றி விவரிக்கிறார். அவர்கள் இரவில் பனை ஓலையை இழுத்துக் கொண்டு தெருவில் செல்வார்களாம். மறுநாள் அந்தத் தடத்தில் யாரும் நடக்க மாட்டார்களாம். தீண்டத்தக்க சாதியினர் பயப்படும் சாதியாராக இவர்கள் உள்ளனர். பகலில் பலருடைய கண்ணில் படமாட்டார்களாம். அவர்கள்தான் தீண்டத்தகாத சாதிகளாகிய பள்ளர், நளவர், பறையர் ஆகியோரின் வண்ணார். தமிழகத்தில் திருநெல்வேலி வட்டாரத்தில் வாழும் இவர்களைப் பற்றி ஜே.எச். ஹட்டன் எழுதியிருப்பதை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.
சமூக வாழ்வில் சாதிகளுக்கிடையில் நிலவும் சடங்கியல் உறவு, உலகியல் உறவு, கேரளத்தில் நம்பூதிரி ஆண்களுக்கும், நாயர் பெண்களுக்கும் உள்ள உறவு போன்று, யாழ் குடாவில் வேளாளருக்கும் கோவியர் பெண்களுக்கும் இருந்த உறவு, பிராமணர்களுக்கும் வேளாளருக்கும் இருந்த தெளிவற்ற புதிர், கிராமங்களின் கட்டமைப்பு, கிராம ஐக்கியம் (Unity) முதலான எண்ணற்ற கருத்தினங்களை ஆழமாக இக்கட்டுரையில் விசாரணை செய்திருக்கிறார் மைக்கல் பாங்ஸ்.
அடுத்ததாக இராபர்ட் பேரின்பநாயகம் எழுதியுள்ள ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ பற்றிய கட்டுரை ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. இக்கட்டுரையாசிரியர் நியூயார்க்கில் மானிடவியல் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இவர் 1965 ஆம் ஆண்டு மானிடவியல் ஆய்விதழில் (Anthropology Quarterly) எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு இங்கு ஏழாவது இயலாக உள்ளது. வாழ்வியல் சடங்குகள், நாட்டார் கோயில்கள், பெருநெறிக் கோயில்கள் ஆகிய அனைத்திலும் சமூகம், சமயம், சடங்கு ஆகிய மூன்றும் கொண்டுள்ள உறவு நிலைகளைக் கூர்ந்து நோக்கியுள்ளார்.
நூலின் இறுதிப் பகுதி ‘அரசியல் விஞ்ஞான நோக்கு’ என அமைகிறது. இதில் இரண்டு இயல்கள் உள்ளன. ஒன்று பிறையன் பவ்வன்பேர்ஜர் எழுதியது. வடக்கிலங்கையில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலய நுழைவுப் போராட்டம் பற்றியது இவருடைய கட்டுரை. பவ்வன்பேர்ஜர் யாழ்குடாவில் சாவகச்சேரியில் 1973 – 1975 காலப்பகுதியில் செய்த ஆய்விது. இவர் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் நொக்ஸ் கல்லூரியில் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். கதிர்காம யாத்திரை பற்றியும் இவர் ஆய்வு செய்தார். ‘தமிழ்ப் பண்பாட்டில் சாதி: இலங்கையில் சூத்திரர்களின் மேலாதிக்கத்தில் சமயத்தின் அடித்தளம்’ (Caste in Tamil Culture: The Religious Foundations of Sudra Domination in Sri Lanka, 1972) எனும் ஆய்வையும் இவர் மேற்கொண்டார்.
இந்த நூலின் இறுதிக் கட்டுரை ‘யாழ்ப்பாணத்தில் வேளாளர் வரலாறும் பிற சமூகங்களுடன் அதன் உறவும்’ பற்றியது. இக்கட்டுரையாளர் ஆல்பிரட் ஜெயரட்ணம் வில்சன். இவர் கொழும்பில் பயின்று, பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் இக்கொனொமிக்ஸ் (LSE) நிறுவனத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியல் துறையின் முதலாவது பேராசிரியராகப் பொறுப்பேற்றவர். இறுதியில் கனடாவில் பணியாற்றியவர் (1972 – 1995).
வேளாளர் சமூக வரலாற்றை ஏற்கனவே கென்னத் டேவிட், மைக்கல் பாங்ஸ், அரசரத்தினம் ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இச்சூழலில் ஏ.ஜே. வில்சன் அரசறிவியல் கோணத்தில் ஆராய்கிறார். இந்த ஆய்வு மூலம் 1619க்குப் பிந்தைய வரலாற்றைப் பெரிதும் கவனப்படுத்துகின்றார். ஏனெனில் இந்த ஆண்டில்தான் யாழ்ப்பாண இராச்சியம் வீழத் தொடங்கியது. இதற்குப் பின்னர் 400 ஆண்டுக் காலத்தில் வேளாளர் சாதியில் பல சாதிகள் சங்கமிக்கத் தொடங்கின. இந்த ஒருங்கிணைவும் கலப்பும் அச்சாதியில் நான்கு வகையான சமூகத் தகுதிகள் கொண்ட குழுக்களை உருவாக்கின. அவை: 1. முதலியார், 2. காணிக்காரர்கள் (நிலவுடைமையாளர்), 3. நடுத்தர, சிறு காணியாளர், 4. சிற்றுடைமை உழுகுடிகள்.
கட்டுரையின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிறசாதிகள் பற்றியும் ஆராய்கிறார். மொத்தத்தில் இந்த இறுதி இயல் யாழ் குடா சமூகத்தின் கட்டமைப்பையும் இயங்கியலையும் வேறொரு பார்வையில் பரிசீலிக்கிறது. ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கிறது.
இந்த நூல் பல வகைகளில் முக்கியத்துவம் கொண்டதாகும். ஈழத் தமிழ்ச் சமூகத்தை அறியாமல் தமிழ்ச் சமூகத்தை முழுமையாக அறிய முடியாது. இந்தியத் தமிழகமும், இலங்கைத் தமிழகமும் பூகோள ரீதியில் தனித்தனி நாடுகளில் இருந்தாலும், இவையிரண்டும் சமூக பண்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட அகண்ட தமிழ்ப் பிரதேசமாகும். இந்நிலையில் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தை வரலாற்று ரீதியிலும், சமூகவியல்/ மானிடவியல் ரீதியிலும், அரசறிவியல் ரீதியிலும் ஒன்றிணைத்து அறிவது ஓர் அரிய வாய்ப்பாகும்.
இதனைச் சாத்தியமாக்கியுள்ள நூலாசிரியர் க. சண்முகலிங்கம் பெரும் பாராட்டுக்குரியவர். மிகச் சிறந்த ஒன்பது கட்டுரைகளை மென்தழுவலாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இந்த வகையில் ஏற்கனவே சில நூல்களை நமக்குத் தந்திருந்தாலும் இந்நூல் தனி மதிப்புடையது. இத்தகைய மேலும் பல ஆக்கங்களைத் தமிழில் தர வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.