பசுமை எனும் பேரபாயம்: சூழலியல் பற்றிய மறுபார்வை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
3 நிமிட வாசிப்பு

பசுமை எனும் பேரபாயம்: சூழலியல் பற்றிய மறுபார்வை

December 8, 2025
கருத்துரை: மோகன தர்சினி
பசுமை எனும் பேரபாயம்: சூழலியல் பற்றிய மறுபார்வை

தோழர் மீநிலங்கோ தெய்வேந்திரன் எழுதி, ‘எழுநா’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘பசுமை எனும் பேரபாயம்’ என்கிற நூல். இதன் விலை: 1400 இலங்கை ரூபாய். இலங்கைச் சூழலில் சூழலியம் சார்ந்து வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல் இது. உலகமயம் என்கிற மாயக்கரம் எல்லை தாண்டி மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற பெயரில் கொள்ளையிடுகின்றன. மிதமிஞ்சிய வளச்சுரண்டல் எம் நாடுகளைப் பாலைவனமாக்கக் காத்திருக்கிறது.

இந்தச் சூழலில் அபிவிருத்தித் திட்டங்கள், பசுமைத் திட்டங்கள் என்பன எவ்வாறு சாமானிய மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை இந்நூல் பேசுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல இயற்கையின் ஏனைய உயிர்களும் எவ்வாறு முதலாளித்துவத்தின் பேராசையாலும், மனிதர்களின் மிதமிஞ்சிய நுகர்வாலும் பாதிப்படைகின்றன என்று பேசுகிறது இந்நூல்.

மார்க்சியம் சூழலியல் சார்ந்து பேசியிருப்பது குறைவு எனும் கருத்து பலருக்கு உண்டு. ஆனால் சூழலியம் பற்றிய அடிப்படையான எண்ணக்கருவை ஏங்கல்ஸ் ‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய படிநிலைகளில் உழைப்பின் பாத்திரம்’ எனும் தன் சிறிய நூலில் பேசுகின்றார். சூழலியத்தின் பைபிள் அந்த நூல்.

“நாம் இயற்கையைக் கண்மூடித்தனமாக மாற்றி அமைக்கும் போது, அதன் இயல்பான சமநிலை குலைகிறது; இந்தச் சமநிலைக் குலைவின் விளைவுகள் இறுதியில் மனித இனத்தையே தாக்குகின்றன.” என்கிறார் ஏங்கல்ஸ். அதன் விளைவுகளை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். 

“இயற்கையின் மீது நாம் பெற்ற ஒவ்வொரு வெற்றியும், உண்மையில் ஒரு பகுதி வெற்றி மட்டுமே. அந்த வெற்றியின் விளைவுகள் எதிர்பாராத திசைகளில் நமக்கே திருப்பித் தாக்கும்.” (ஏங்கல்ஸ்)

“மனிதர்கள் தங்கள் நெருக்கடியான, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இயற்கையைப் பயன்படுத்தினர்; அவர்கள் நீண்டகால விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அதனால் தான் பின்னர் எதிர்மறை விளைவுகள் தோன்றின.” (ஏங்கல்ஸ்)

ஏங்கல்சின் இந்த அடிப்படை எண்ணக்கருவினூடாக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மறுவிசாரணை செய்கின்றது இக்கட்டுரைகள் (மகாவலி அபிவிருத்தித் திட்டம், மேல் கொத்மலைத் திட்டம், சம்பூர் அனல்மின் நிலையம், சுண்ணாகம் நிலத்தடி நீர்).

பசுமை எனும் எண்ணக்கரு ஒரு கொடுங்கனவு எனப் பேசுகிறது முதலாவது கட்டுரை. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்த கதை, பல அறியாத் தகவல்களுடன், எமது கடல் பல தசாப்தங்களுக்கு மீண்டெழ முடியாத இயற்கைப் பேரிடரைச் சந்தித்திருப்பதைப் பற்றி பேசுகிறது. சூழலியல் சுற்றுலா, நீலப்புரட்சி பற்றிய கட்டுரைகள் இயற்கைச் சூழலை எவ்வாறு அவை பாதிக்கின்றன என்பதைப் பற்றி பேசுகின்றன. இறுதிக் கட்டுரையான ‘வளமான பசுமைத் தாயகத்தின் எதிர்காலம்’ இந்த இயற்கைச் சூழலைப் பத்திரமாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.

இதிலிருக்கும் ஒவ்வொரு கட்டுரையையும் மிக விரிவாக, தனித்தனியாகப் பேச வேண்டும். தமிழ்ச்சூழலில் இந்நூல் மிகப் பெறுமதியானதும் அனைவரும் வாசிக்க வேண்டியதுமான நூலாகும். எமது ஊரில், பாடசாலைகளில் கலந்துரையாடப்பட வேண்டிய நூல் இது. அனைவரையும் இந்நூலை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரை செய்கிறேன். சூழல் பற்றிய நமது பார்வையை மறுசீரமைக்க இந்நூல் உதவும்.

நமது அடுத்த தலைமுறையான மாணவர் சமூகத்திடம் இந்நூலைக் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களது சூழலியல் பார்வை சீர்ப்படுத்தப்படும் போது மட்டுமே இந்தப் பூமி நிலைத்திருக்கும்.