இரசவர்க்கம்: தொடரும் சித்தமருத்துவப் பாரம்பரியம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம்: தொடரும் சித்தமருத்துவப் பாரம்பரியம்

August 26, 2025
கருத்துரை: மருத்துவக் கலாநிதி கணேஸ் ஸ்ரீதரன்
இரசவர்க்கம்: தொடரும் சித்தமருத்துவப் பாரம்பரியம்

முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாண மன்னன் செகராசசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ எனும் நூல் காலத்தின் தேவை ஆகும். யாழ்ப்பாண சிங்கை  ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கைநகர் எனும் நல்லூர் பிரதேசத்தை 13 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் ஆட்சி செய்தனர். இவர்களில் பரராசசேகரன், செகராசசேகரன் என்பவர்கள் மன்னர்களாகவிருந்த போதிலும் சிறந்த மருத்துவர்களாகவும் விளங்கினர். இவர்கள் சிங்கை இராஜதானியை 12 வட்டங்களாகப் பிரித்து நிர்வாகத்தை நடாத்தி வந்தனர். அந்தவகையில் மருத்துவமனைகள், மருத்துவக் ‘கிளினுக்’குகள் நடைபெற்றன. நோய் வராமல் பராமரிக்கும் மருத்துவமுறைகளும் நடைபெற்றன. இவ்வாறு கர்ப்பவதி கிளினிக், கர்ப்பவதி பிரசவம் என்பன சிறப்பாக நடைபெற்று வந்தன. நாட்டு மருத்துவிச்சிகள் உருவாக்கப்பட்டு கர்ப்பவதிப் பராமரிப்புகள் இடம்பெற்றன. அத்துடன் மனித ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான உணவுமுறைகள் சிறப்பாகக் கையாளப்பட்டு வந்தன. ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற கோட்பாட்டில் உணவு மூலிகைகளை இனங்கண்டு அவற்றை மருந்தாக்கி உபயோகித்தனர். இவர்களுடைய காலத்தில் மருத்துவக் குறிப்புகளை பா வடிவில் செய்யுள்களாக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருந்தனர். பொதுவாக, சித்த வைத்தியர்கள் பண்டிதர்களாக இருந்ததால், பா வடிவில் எழுதப்பட்ட மருத்துவக் குறிப்புகள் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வந்தன. தலைமுறைகளில் ஏற்பட்ட பிறழ்வு காரணமாக இவ் ஏடுகளில் பாதுகாக்கப்படாது விடப்பட்டு போயிருக்கலாம். சில ஏடுகள் இராமபாணம் போன்றவற்றால் அழிந்துபோய் இருக்கலாம். 

முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் முன்னோர்கள் தீவகம், வேலணை, நாரந்தனை, கரம்பன், ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களில் வசித்திருக்கலாம். ஏனெனில் சிங்கை அரசர்களின் வைத்தியர்கள், அவர்கள் வீழ்ச்சியுற்ற போது போர்த்துக்கேயருக்குப் பயந்து திருவடிநிழலின் ஊடாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர்கள். சிலர் தீவகப்பகுதியை  நோக்கிப் படையெடுத்தனர். அந்தவகையில், நூலாசிரியரின் வழித்தோன்றல்கள் சிங்கை மன்னர்களிலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களிடம் பல மருத்துவ ஏடுகள், பாக்கள் இருந்திருக்க வேண்டும். முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களும் இவ்வைத்தியப் பரம்பரையினர் எனலாம். இவர் விவசாயப் பட்டதாரியாகி, சித்த மருத்துவத்தை ஆவணப்படுத்துவதில் முக்கிய பங்களித்தவர். இவர் தங்களின் வழித்தோன்றல்களின் மருத்துவ ஏடுகளைப் பாதுகாப்பாக வைத்திருந்து, தன்னுடைய அறிவிற்கு ஏற்றவகையில், மாணவர்கள் இலகுவாகக் கற்பதற்காக, மூலிகைகளை அறிந்து, அவற்றில் நவீன அறிவியலைக் கலந்து, மன்னர்கள் எழுதிவைத்த மருத்துவத்தை இரசவர்க்கம் எனும் நூலில் கொண்டு வந்திருப்பது சிறப்பான விடயம். இது மட்டுமன்றி, அவர் செகராசசேகரம் எனும் சோதிட நூலுக்கும் உரை எழுதி வருகிறார். இந்தத் தரவுகள் வழியாக, நிச்சயமாக இவர்கள் சிங்கை மன்னர்களின் வழித்தோன்றல்கள் என ஊகிக்கலாம். மன்னர்கள் விட்டுச்சென்ற பணியினை நூலாசிரியர் தொட்டுச் செல்கிறார். அவருக்கு சித்தமருத்துவச் சமூகம் கடமைப்பட்டதாக இருக்கவேண்டும். ஏழாலைப் பொன்னையா அவர்கள் இன்றும் சித்த மருத்துவச் சமூகத்தோடு இருப்பது போல், பால. சிவகடாட்சம் ஐயா அவர்களும் சித்த மருத்துவச் சமூகத்தில் என்றும் நிலைத்திருப்பார்.