
திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் மணி விழா மற்றும் சேவை நலன் பாராட்டு விழாவில், அவரது எழுநா வெளியீடாகிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் அறிமுக நிகழ்வு கடந்த 18.06.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. இ.த. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் திரு. இ. பெருமாள் கணேசன் அவர்கள் நூல் அறிமுக உரையை ஆற்றினார். நூல் குறித்து அவர் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மண்ணிலிருந்து வெளியாகியுள்ள சிறந்த ஆய்வு நூலாக இதனைக் கருதுவதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “நவீன பொருளாதாரக் கொள்கைகளை மையப்படுத்தி, ஒவ்வொரு துறையையும் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களைக் கொண்டதாக வெளிவந்துள்ள இந்நூல், சேவைத்துறையினர், நிர்வாகிகள், தொழில் முயற்சியாளர்கள், செயல்திட்ட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு சிறந்த கையேடாக அமையும்” எனக் குறிப்பிட்டார்.
நூலுக்கான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பேராசிரியர் சி. விஜயகுமார் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வெளியீடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
நூலறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




