
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனிடம் எழுநாவினால் வெளியிடப்பட்ட நூல்கள் கையளிக்கப்பட்டன.
நவம்பர் 21ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிவில் சமூகச் சந்திப்பின்போது, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் இணைந்து இந்நூல்களைக் கையளித்தனர்.
கையளிக்கப்பட்ட நூல்களில் ஈழத்து நாட்டார் தெய்வங்கள், மகாவம்சம், மலையகத்தில் தெய்வ நம்பிக்கைகளும் ஆற்றுகைக் கலைகளும், இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்: சுதந்திரம் வரையான காலகட்டம், வளரும் வடக்கு: இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிய பார்வைகள், நிலமும் வாழ்வும்: ஈழத்தின் சமகாலம் மீதான நுண்ணரசியல் பார்வைகள், கோ. நடேசய்யர்: கணக்குப்பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை, அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும்: மூன்றாம் உலக அனுபவம், மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம், பௌத்தமும் இலங்கையின் அரசியலும், மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள், இருத்தலின் மீது கவியும் இன்மைகள், வாசலிலே கிருசாந்தி: செம்மணி தொடர்பான கவிதைகள், இரு நூற்றாண்டு மலையகம்: வலியும் வாழ்வும், யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும் ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈழத்தின் வரலாறு, அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம், சூழலியல் மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுப் பொருண்மைகளை உள்ளடக்கிய இந்நூல்கள், ஈழத்துக் கற்கைகள் சார்ந்த எழுநாவின் வெளியீட்டுப் பங்களிப்புகளைப் பிரதிபலிக்கின்றன. இந்நூல்களைத் தமிழக அறிவுச்சூழலுடன் பகிர்ந்துகொள்ளும் முக்கியமான சந்திப்பாக இந்நூல் கையளிப்பு அமைந்தது.
