கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
7 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்

February 27, 2026
கருத்துரை: விஜயலஷ்மி இராஜமனோகரன்
கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார்.

இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நூலானது ‘இயற்கையோடு இணைந்த என் உத்தியாக்கள் அனைவரிற்கும்’ காணிக்கையாக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக ‘இலங்கை வேடரின் இன்றைய இனவரைவியல்’ என்ற அணிந்துரையை முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் எழுதியுள்ளார். இவ் அணிந்துரையில் இந்நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை வேடர்கள் பற்றியும், அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றியும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

இவ் அணிந்துரையில் ஒரு சிறிய திருத்தத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது, ஆரம்பத்தில் ‘இலங்கையும், இந்தியாவும் தனித்தனி நாடுகளல்ல; தொடர்ச்சியான நிலப்பகுதியாகவே இருந்தன என்கிறார் தொல்லியல் அறிஞர் தெரணியகல’ என்று குறிப்பிடுகிறார். இக்கருத்தினை தெரணியகலவுக்கு முன் 1912 ஆம் ஆண்டே அல்பிரட் வெக்னர் என்ற ஜேர்மன் புவியியலாளர் ‘கண்ட நகர்வுக் கொள்கை’ என்ற ஆய்வில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஓய்வுநிலைப் பேராசிரியர் மௌனகுரு அவர்கள், ‘யார் இந்தப் பத்திநாதன்?’ ‘உத்தியாக்கள் என்றால் என்ன?’ ‘அவர்கள் யார்?’ ‘இந்த நூல் கூறுவது என்ன?’ என்ற தலைப்புகளின் கீழ் ‘இவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்’ என்ற அணிந்துரையில் நூல் பற்றி ஆராய்ந்துள்ளார். பத்திநாதனைப் பற்றிக் குறிப்பிடும் போது “வேடர் சமூகத்தில் இருந்து வந்த முதல் நாடக அரங்கியல் பட்டதாரி” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நூலுக்கான அணிந்துரையாக இடம்பெறும் இவ்விரு கட்டுரைகளும் இந்நூலை மெருகேற்றுகின்றன. இந்நூலுக்கு மேலும் காத்திரத்தை ஏற்படுத்துகின்றன. இவை நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதுடன், நூலுக்கான ஒரு வழிகாட்டியாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

தொடர்ந்து ‘சமூகமயப்பட்டு முன்னெடுக்கப்படும் அறிவுருவாக்க முறைமையின் தேவை’ என்ற தலைப்பில் பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்கள் சற்றுச் சிந்திக்க வைக்கிறார். இன்றைய நவீன உலகில் “இலங்கைப் பழங்குடிகளின் இருப்பு இன்னமும் குவேனி காலத்துச் சித்தரிப்பாகவே உள்ளும் புறமும் காணப்பட்டு வருவது சிந்திக்கப்பட வேண்டியது” எனக் கூறுகிறார்.

அடுத்து, ‘மா கஜமா கொந்தமாய்!’ அதாவது ‘அனைவருக்கும் வணக்கம்’ என்ற தலைப்பில் பத்திநாதன் பேசுகிறார். இதில் இலங்கையில் வேடர்களின் ஆரம்பம் பற்றி ஆதங்கப்படுகிறார்.

அத்தியாயம் 1 இல் ‘வாழ்வியல் அசைவும், இயற்கையும்’ என்ற ஆக்கத்தின் மூலம் வேடுவ மக்களின் வாழ்க்கையில் இயற்கையின் பங்களிப்பைச் சிறப்பாக எடுத்தியம்புகிறார். படங்களுடன் பல்வேறு மூலிகைத்தாவரங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் சிறப்பான விளக்கத்தைக் கொடுக்கிறார். இத்தகைய மூலிகைத் தாவரங்கள் வேடர்கள் மத்தியில் மட்டுமல்ல, எமது பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்ததை இது எமக்கு ஞாபகமூட்டுகிறது.

ஒரு வரலாற்றை எழுதுபவர், அதாவது நூலாசிரியர், தனது ஆய்வில் 50 வீதமான பங்களிப்பினையும் தகவலாளிகள் 50 வீதமான பங்களிப்பினையும் வழங்க வேண்டும்; அத்தகைய ஆய்வுகளே முழுமை பெறும் என்றும், இரு தரப்பாரும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் முனைவர் பக்தவத்சல பாரதி கூறுகிறார். அதற்கமைய, இந்நூலில் பல்வேறு இடங்களில் வேடர் சமூகத்தின் பிரதிநிதிகளிடம் தகவல்களைப் பெற்று, அத்தகவல்களை அவர்களது பேச்சுமொழியிலேயே தந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இதன் இரண்டாவது அத்தியாயத்தில் காலனியம் பற்றிப் பேசும் போது, தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலையை வைத்தல், விகாரையை கட்டுதல் என்பன பெரும்பான்மைச் சிந்தனை ஆதிக்க மனோபாவம் என்றால், வேடர் சமூகத்தில் அவர்கள் பரந்துபட்டு வாழும் கிராமங்களில் ‘காமாட்சி அம்மன்’, ‘ஆஞ்சநேயர்’, ‘ஐயப்பன்’ போன்ற இன்னோரன்ன தெய்வங்களுக்குக் கோவில் கட்டுவதும் ஆதிக்க மனோபாவமாகாதா? என நூலாசிரியர் அங்கலாய்க்கிறார்.

நில ஆக்கிரமிப்புப் பற்றிக் கூறும்போது, மிகத் தைரியமாக, எவ்வித அச்சமுமின்றி, அம்பாறை தொடங்கி மட்டக்களப்பு, திருகோணமலை வரை நீண்டதான கரையோரங்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களால் இன்றுவரை அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். நில அபகரிப்பு மட்டுமல்ல, அவர்களது கலை, கலாசாரம், தொழில் உரிமைகள் கூட அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பழங்குடியினர் வஞ்சிக்கப்பட்டதாக நூலாசிரியர் சாடுகிறார்.

வேடுவ மொழி பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் குழு ‘இனம்’ என வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், வேடுவ மொழியானது தற்போது அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விலகி, தொழில்சார் நடைமுறைகளிலும் முன்னோர்களை வழிபடும் ‘மன்றாடல்’ போன்ற சடங்குகளிலும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சமூக – அரசியல் காரணிகளால் நிலைகுலைக்கப்பட்ட வேடுவ மக்கள், சிங்கள – தமிழ்ச் சமூகங்களைச் சார்ந்து வாழ நேரிட்டதால், இன்றைய சூழலில் சிங்களத்தையும் தமிழையும் தமது தொடர்பு மொழிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். வேடுவ மொழியில் சிங்களச் சொற்களின் சாயல் காணப்பட்டபோதிலும், அது தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டது என்பதனைப் பல்வேறு பாடல் வரிகள் மூலம் அவர் விளக்கியுள்ளார்.

வேடர் சடங்கில் பெண்ணியம் பற்றிக் கூறும் போது, வேடப் பெண்களின் பல்லாளுமை பற்றி விளக்குகிறார். வேடுவப் பெண்கள் மதகுருவாக, மருத்துவிச்சியாக, கூத்துப்பாடல், காவியப்பாடல், காவடிப்பாடல் முதலான பாடல்களைப் பாடும் பாடகிகளாகவும், மருத்துவ – மந்திர நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாகவும் காட்டப்படுகின்றனர். அதேநேரம் ஏனைய மதப் பெண்களைப் போன்று, இவர்களும் சில சந்தர்ப்பங்களில் ஆண் நிலைச் சிந்தனைக்குள் கட்டமைக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.

சடங்காற்றுகைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் தன்மைகளையும், விளைவுகளைப் பற்றியும் ‘சடங்கும் குணமாக்கலும்’ எனும் அத்தியாயத்தில் கூறுகின்றார். மனித வாழ்க்கையில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு சடங்கிலும் குணமாக்கலே இடம் பெறுகின்றது என விளக்குகிறார்.

‘கடலோர வேடரின் சடங்கியல் குணமாக்கல்’ என்னும் அத்தியாயத்தின் மூலம் வேடுவர்க்கென உள்ள குணமாக்கல் நிகழ்வுகளைப் பற்றிக் கூறுகின்றார். இக்கிரிகைகளின் போது ‘உத்தியாக்கள்’ அவர்களுக்குள் வருவதாக விளக்குகிறார். இதில் குழந்தைப் பாக்கியத்திற்கான குணமாக்கல் வழிபாடும் இடம் பெறுகிறது. குணமாக்கல் செயற்பாட்டின் மூலம் ‘உளவிடுபடு நிலை’ ஏற்படுவதாக நூலாசிரியர் நிறுவுகிறார்.

‘மட்டக்களப்பு பூர்வகுடிகளின் சடங்குவழி உளவியலும், அழகியலும்’ என்ற அத்தியாயம் சில இடங்களில் முன்பு கூறிய விடயத்தையே மீண்டும் கூறுகிறது. பல சொற்கட்டுகளும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளன.

‘கடலோர வேடர்களின் நிகழ்த்துகலைகள்’ என்ற அத்தியாயம் வேடுவர்களின் வழிபாட்டின் மூலம் ஏற்பட்ட ஆடல், பாடல், அலங்காரம், வாத்தியங்கள் பற்றிக் கூறுகின்றது. இது பற்றிய புகைப்படமே முன் அட்டையையும் அலங்கரிக்கின்றது.

பின் இணைப்பாக பூசாரிமார், கப்புறாளைமார், கலையாடுவோர், பரியாரிமார், பேயாடுவோர், கட்டுச்சொல்வோர், கடலோர வேடரின் ஆயுதங்கள், சேனை வயிரவர் சூல அமைப்புகள் போன்ற விடயங்களைக் காட்டியுள்ளார்.

வேடர் சமூகத்தில் இருந்து வந்த பத்திநாதன் இன்று எல்லோராலும் பேசப்படும் ஒருவராக விளங்குகிறார். இந்நூல் முழுவதும் வேடுவர்கள் ‘தம் ஆதிக்குடி நிலையில் இருந்து பல்வேறு தேவை கருதி விரும்பியோ, விரும்பாமலோ மாற்றம் பெறுகின்றனர்’ என்று ஆதங்கப்படுகின்றார். வேடுவர்களின் கலை, கலாசாரம், பழக்கவழக்கங்கள் எக்காரணம் கொண்டும் மாறக்கூடாது என விரும்புகின்றார்.

காலனித்துவ எதிர்ப்பு உரையாடல்கள் மற்றும் சமூக – கலாசார – அரசியல் ஆய்வுகள் போன்றவை பழங்குடி மக்களின் கலை வெளிப்பாட்டை மக்கள் மத்தியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என ஆதங்கப்படுகிறார்.

வேடுவரின் ஆதிநிலை மாறக்கூடாது என ஆதங்கப்படும் இவர், இயற்கை வழிபாடு என்ற தலைப்பில் எழுதும் போது, ‘உலக மக்களின் வாழ்க்கை முறையானது கட்டம் கட்டமாக படிநிலை வளர்ச்சியைக் கண்டு வந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற தன் வாதத்திற்கு முரணான அறிவியல் உண்மையை முன்வைக்கின்றார்.

‘உத்தியாக்கள்’ எம்மை ஒரு கணம் வேடுவ உலகிற்கு அழைத்துச் சென்று விடை கொடுக்கிறது. வேடுவர்கள் இலைகளை உடுத்தி, அம்பு வில்லுடன் காணப்படுவார்கள் என்பதைக் கடந்து, அவர்களுக்கு என ஓர் உலகம், அவர்களுக்கு என கலை, கலாசாரம், ஆடல், பாடல், மருத்துவம் என்பன உண்டு என இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எழுத்தாளருக்குப் பாராட்டுகள்! மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்!