ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் - ‘உத்தியாக்கள்’
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
11 நிமிட வாசிப்பு

ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் – ‘உத்தியாக்கள்’

February 9, 2026
கருத்துரை: றிஹானா நௌபர்
ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் – ‘உத்தியாக்கள்’

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன்.

தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் அளப்பெரிய பணி ஆகும். 

வேடுவர்கள் என்றாலே மகியங்கனை – தம்பானையில் வாழ்பவர்கள், அம்பும் வில்லும் இலை குழைகளையும் அணிந்தவர்கள் என்ற பிம்பமே எம்மத்தியில் காணப்படுகிறது. ஆனால் கிழக்குக் கரையோரத்திலும் தமிழ் பேசும் வேடுவர்கள் வாழ்கின்றனர்; அவர்களுக்கும் தனித்துவமான வாழ்வியல் முறை இருக்கிறது என்பதைப் பதிவு செய்வதற்காகவே இந்நூலை வெளியிட்டதாக பத்திநாதன் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பதினொரு தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூலை எழுநா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘வாழ்வியல் அசைவும் இயற்கையும்’ என்ற தலைப்பில், பழங்குடி மக்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்வியல் பற்றியும், தற்போது அருகி வரும் மரங்கள் மற்றும் அவற்றை எதற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். பல மரங்களின் பெயர்களைக் கூட நாம் கேட்டிருக்க மாட்டோம். சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும், அவற்றை இப்போது காண முடியாமல் உள்ளது. குருவிச்சை, ஒட்டுண்ணித் தாவரம் என்பதே எங்களுக்குத் தெரியும். ஆனால் பழங்குடி மக்கள் அதிலிருந்து அதன் பூ, இலை, பழம் என அனைத்திலும் பல வகையான நன்மைகளை அடைந்துள்ளனர். குறிப்பாக அவர்களுடைய சடங்கு முறைகளில் வெற்றிலை இல்லாத போது, இதன் இலைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, இதன் விதைகளை அதிக நன்மை தரக்கூடிய மரங்களில் வைத்து, அந்த மரங்களின் பயன்களையும் சேர்த்து முளைக்கும் குருவிச்சையின் பலன்களையும் பெற்றுள்ளனர். எந்த ஒரு வகுப்பறையிலும் அமர்ந்து கற்காமல், தாம் வாழ்ந்த சூழலும் அதனுடன் தொடர்புடைய அறிவு அனுபவமும் மூலம், இவ்வாறு எத்தனையோ விடயங்களைக் கற்று, இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருக்கின்றனர்.

ஒல்லித்தாவரத்தின் தண்டை வெண்டிக்காய் போன்று சமைத்து உண்பதோடு, கிழங்கினை அவித்துப் புளி மாங்காயுடன் சாப்பிடுகின்றனர். ஒல்லிக்காய் முற்றி வரும்போது அதனுள் கடுகு போன்று விதைகள் காணப்படும். அவற்றை எடுத்துக் காயவைத்துத் தீட்டி, ஒல்லி அரிசி தயாரிப்பர். அதனை அரிசியுடன் கலந்தும் சமைக்கலாம்; அல்லது ஏனைய அரிசி மாவு, குரக்கன் ஆகியவற்றுடன் கலந்து ரொட்டியாகவோ அல்லது வேறு உணவுகளாகவும் தயாரிக்க முடியும். குளச் சுத்திகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, எல்லை விரிவாக்கம் போன்ற காரணிகளால் தற்போது இத்தாவரம் முற்றாக அழிவடையும் தருவாயில் உள்ளது.

அதேபோல சாத்தாவாரி — மருத்துவ மூலிகைகளின் அரசி. இதனை ‘தண்ணீர் விட்டான் கிழங்கு’ எனவும் அழைப்பர். கடும் வெப்ப காலங்களில் நாம் ‘ஜூஸ்’ தேடி அருந்துவது போல அல்லாது, இம்மக்கள் சாத்தாவாரியின் இலையின் சாற்றைக் குடிக்கின்றனர். இது நாவறட்சி, தாகம், வறட்டு இருமலைப் போக்கவல்லது.

‘பக்கிளிய மரம்’ என்ற ஓர் அரிய வகை மரம் பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் கண்பார்க்கும் இடமெல்லாம் இருந்த இம்மரம், தற்போது அடர்ந்த வனாந்தரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அளவிற்கு அருகிப் போயுள்ளது. இம்மரத்தின் பாலைச் சேகரித்து தடி போன்று முறுக்கி, மற்றொரு தடியுடன் இறுகக் கட்டி, தீப்பந்தம் போல் எடுத்துக் கொள்வர். இரவில் நெடுந்தூரப் பயணங்களில் தீப்பந்தமாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இறந்தவர்களைப் புதைத்துவிட்டு மண்ணில் பிரண்டைக் கொடியை ஆறு துண்டுகளாக எடுத்துச் சுற்றி வைப்பார்கள். இதற்கு இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, அது கிருமிகளை அழிக்க வல்லது; மற்றொன்று, இறந்தவர்களின் உடலை நாய், நரி போன்றவை தீண்டாமல் இருக்க. ஏனெனில் இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும்; எனவே ஒரு பாதுகாப்பிற்காக இதனை மேலே சுற்றி வைப்பார்கள்.

இந்தக் கட்டுரையை முடிக்கும்போது, பத்திநாதன் இம்மக்கள் பட்டினியால் இறந்த வரலாறே இல்லை என்று குறிப்பிடுகின்றார். சூழல் நேயமிக்க மனிதர்களாக வாழும் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ள தாவரங்களையும் குளத்து மீன்களையும் எல்லா காலங்களிலும் உண்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

காலனியம் எவ்வாறு இப்பழங்குடி மக்களின் வாழ்வியலில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது? ஐரோப்பியர் வருகை மாத்திரம்தான் இவர்களது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியதா? அதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, இம்மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதில் அதிகாரம் படைத்த சக்திகள் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளன? என்பன குறித்து இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வேடுவர் என்றாலே, காட்சிப் பொருளாகவும் அழிந்து வரும் உயிரினமாகவும் பாதுகாக்க வேண்டிய பச்சாத்தாபச் சிந்தனையுடன் பார்க்கப்படுகின்றனர் என்கிறார். மகியங்கனை – தம்பானைப் பகுதிகளை திறந்தவெளிச் சிறைச்சாலையாக அவர் குறிப்பிடுகின்றார். பல்லாயிரம் காலமாக பேசப்பட்டு வந்த பழங்குடிகளின் மொழி கூட அசிங்கமான மொழி எனக் கருதப்பட்ட நிலையும் இருந்துள்ளது.

வேடுவர்கள் என்ற சொல்லை சமூகத்தில் குறைத்து மதிப்பிடுவதற்காக, திட்டுவதற்குரிய சொல்லாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கின்றேன். இதனை மொழியியலில் ‘Language Discrimination’ எனக் குறிப்பிடுவர். ஓர் ஆடையைத் தொடர்ந்து விரும்பி அணிந்தால், “என்ன இது வேடனுக்கு வெள்ளைக் கச்சை கிடைத்தால் போல” எனக் குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு, இயற்கையை நேசித்து வாழும் இம்மக்களை எப்படிப் புரியவைக்க முடியும்?

சுதந்திரத்திற்குப் பின்னர், இவர்களின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் இலங்கை அரசு எத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, பிறப்புச் சான்றிதழில் அவர்கள் ‘வேடுவர்’ என்று பதிவிட முடியாது; ‘இலங்கைத் தமிழர்’ என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் வேட்டையாடுதல், தேன் எடுத்தல் போன்ற தொழில்களை, பிறப்புச் சான்றிதழில் ‘வேடுவர்’ என்று குறிப்பிட்டிருப்பவர்கள் மாத்திரம்தான் செய்யலாம் என்ற சட்டத்தையும் இதே அரசுதான் கொண்டு வந்துள்ளது. இதனை எழுத்தாளர் ‘முரண் நகை’ என்று குறிப்பிடுகிறார்.

இலங்கையின் பாரிய குடியேற்றத் திட்டங்களான கல்லோயா, மகாவலிக் குடியேற்றங்கள் பற்றி அவர் குறிப்பிடும்போது, “ஒரு குருவியின் கூட்டைக் கலைத்து, அதனை வர்ணஜால வேலைப்பாடுகள் கொண்ட கூட்டினுள் அடைத்து, காட்சிச் சாலையில் விடுவது போன்றது” என்கிறார்.

‘நில ஆக்கிரமிப்பு’ என்ற தலைப்பில், அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் எவ்வாறு பிற சமூகத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதையும், யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களும், சுனாமி காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களும் வாழ்ந்த இடங்கள் எவ்வாறு ஏனையோரால் கைப்பற்றப்பட்டன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலங்களை எவ்வாறு அபகரித்தார்கள் என்று எழுத்தாளர் ஒரு மூத்த பழங்குடியிடம் கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

“மன இந்தப் பாவிகள் எல்லாம் என்னவெல்லாம் செய்கிறார்கள். அதுகளைப் பொறுத்துக் கொண்டாலும் இந்தக் காடுகள், குளங்கள், கடல் வளத்த படுத்தற பாடுகளத்தாண்டா பாத்தும் கேட்டும் வாழ ஏலுதில்ல.

வெள்ளக்காரன் இருக்கக்குள்ள கூட இப்படி அத்துறுமங்கப்படுத்தல்ல.

….. காட்டுல என்ன பழம் எடுக்குற எண்டாலும் சரி அந்த மரத்துட ஒரு கந்தும் உடைக்காம ஆயனும். ஆனா இப்ப மரத்தோட வெட்டுறானுகள்.

குளத்துல மீன் புடிக்கிற எண்டாலும் இப்படித்தான்டா மன. மீன் சரியான பருவத்துக்கு வரும் வரைக்கும் ஆரும் மீன் புடிக்கப் போகக்கூடாது. சரியான பருவம் வந்ததும் பட்டாங்கட்டி அறிவிப்பார். இனி மீன் பிடிக்கப் போகலாம் எண்டு. போய் ஒரு பாடு வீசினாலே போதும். நாலு ஊட்டுக்கு மீன் வரும். ஒவ்வொரு மீனும் ரெண்டு மூணு கிலோ வரும். இப்புடி எத்தனைய மனே சொல்லலாம். காடும் குளமும் தான் நம்மட சொத்து. நாம அதுகள்ட சொத்து. ஆனா இப்ப?”

கடலோர வேடுவர்களின் குடிவழமைகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குடிக்கும் வேடுவர் தலைமையினால் குறிப்பிட்ட தெய்வம் உரித்துடையதாக ஆரம்பத்திலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குரிய சடங்குகள், வழக்காறுகளை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். காலப்போக்கில் ஏனைய இனங்களுடன் இவர்கள் இணைந்தமையால், உதாரணமாக வெள்ளாள வேடுவர், கிறிஸ்தவ வேடுவர் என்ற புதிய சமூக அடையாளங்களைத் தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்டதன் காரணமாக, அவர்களுடைய வழிபாடுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பெண்ணியம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இவர்கள் ஆரம்ப காலத்திலேயே தாய்வழிச் சமூகக் குடும்பக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். தற்போதும் கூட, இவர்களுடைய சடங்குகளுக்கு பெண் தலைமை வகிக்கின்றாள். முக்கியமான பொறுப்புகள் பெண்களிடமே உள்ளன. எப்போது இவர்களுடைய வாழ்வியல் முறை மாற்றப்பட்டு வேளாண்மை செய்யத் தொடங்கினார்களோ, அப்போது பெண்கள் வீட்டிலேயே தங்கி குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிலை தொடங்கியது; இதன் காரணமாக பெண்கள் அதிகமாக ஆண்கள்மீது சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், வழிபாட்டு முறைகளில் இப்போதும் முக்கியப் பொறுப்புகளான மடைப்பெட்டி எடுத்துவரல், நெல்குற்றல், கன்னிமார் பிடித்தல் போன்றவற்றைப் பெண்களே செய்கின்றனர்.’ என்கிறார்.

பெண் மதகுரு மருத்துவிச்சியாகவும் செயற்பட்டுள்ளார். 90 வயது மூதாட்டி ஒருவர் 650க்கு மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்திருக்கின்றார். ஒரு பெண்ணின் மாதவிடாய் நின்றுவிட்டால், அப்போதிருந்தே அவருக்குரிய பத்திய உணவு மற்றும் பராமரிப்பு தொடங்கிவிடுகிறது. “இப்ப என்ன மன எல்லா வைத்திய முறைகளும் வந்தாலும் தாயும் சாகுது பிள்ளையும் சாகுது நேரம் பார்த்து குழந்தையை வெட்டி எடுக்கின்றார்கள்.” என்பது அம்மூதாட்டியின் கூற்று. 

‘சடங்கு மற்றும் குணமாக்கல்’ என்ற தலைப்பில், அவர்களுடைய சடங்குகள் பற்றியும் குணமாக்கல் முறைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலைத்தேய வைத்திய முறைகளைப் போல கூவிக் கூவி விளம்பரப்படுத்தாமல், சாதாரணமாக நோயுண்டவருக்கும் பிணி தீர்ப்பவருக்கும் இடையிலானதாக மட்டுமே இது அமைந்துள்ளது.

“குணமாக்கல் என்பது ஒரு மீட்புக்குச் சமமான விடயமாகும். உளப் பாதிப்புற்ற ஒருவரை அவரது முன்னைய தொழிற்பாட்டு நிலைக்கு சகலவழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைகளுக்கு இது வழி வகுப்பதாக அமைகின்றது; இதனையே குணமாக்கல் என்கின்றோம்.”

நூலில் இடம்பெறும் காணாமல் போன மகனைத் தேடிய தாய் குறித்த சம்பவத்தையும், அவர் மகனைப் பற்றி இந்தச் சடங்கு முறையின் வழியாக எவ்வாறு அறிந்து கொண்டார் என்பதையும், அவருக்கு இருந்த உளச்சிக்கலிலிருந்து எவ்வாறு விடுதலை பெற்றார் என்பதையும் வாசிக்கும் போது, பிரசன்ன விதானகே அவர்களின் ‘Death on a Full Moon Day’ திரைப்படத்தின் காட்சிகள் நினைவிற்கு வந்தன. மகன் இறந்ததாக வரும் சவப்பெட்டி, அதன் பின்னர் அவருக்கு ஏற்படும் உளச்சிக்கல், அதிலிருந்து அவர் எவ்வாறு வெளிவருகிறார் என்ற திரைப்படத்தின் காட்சிகள், இந்த நூல் வாசிப்பின் போது காட்சிப்படுத்த உதவியாக இருந்தன.

பழங்குடியினர் வழிபாட்டு முறைகளில், இறந்தவர்களின் ஆன்மாவிற்காக மேற்கொள்ளப்படும் சடங்குகளும் முக்கியமானவையாக உள்ளன. மேலும் புலிக்கூத்து, கரடிக் கூத்து, யானை கட்டுதல் ஆகிய கலை வடிவங்கள் நிகழ்த்து கலைகளாகக் காணப்படுகின்றன.

இந்நூலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அந்தச் சமூகத்துக்குள்ளேயே வாழ்ந்த ஒருவரால் ஆய்வு செய்யப்பட்டது என்பதாகும். எனவே இது அகவயத் தன்மையுடையதாக இருந்து, நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

‘Avatar’ திரைப்படத்தைப் பார்த்த பின், ஒரு தார்மீகக் கோபம் எழுவது போல, இந்த நூலின் வாசிப்பின் ஈற்றிலும், எம்மீதும், எமது அபிவிருத்தித் திட்டங்கள் மீதும் கேள்வி கேட்க வேண்டிய நிலை உருவாகிறது.

கடந்த வருடம் நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில், தம் பழங்குடி மக்களுக்கு எதிரான மசோதாவை, அவர்களது பாரம்பரிய ஹக்கா பாடலைப் பாடி அந்தப் பழங்குடியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் கிழித்து எறிந்தனர். அதிலும் குறிப்பாக, ஓர் இளம் பெண் உறுப்பினரின் கண்களில் தெரிந்த கோபமும், அவர் தைரியமாகச் செயற்பட்ட விதமும், இந்நூலின் வாசிப்பின் ஈற்றில் நினைவிற்கு வந்தது.

பத்திநாதன் அவர்கள் தற்போது இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில், அவரது முதுமாணிப் படிப்பிற்காகச் சென்றுள்ளார். பழங்குடியினர் பற்றிய முதுமாணிக் கற்கை அங்குதான் உள்ளதாக, நிகழ்வில் ஏபிஎம். இத்ரீஸ் அவர்கள் பேசியபோது தெரிந்து கொண்டேன். 

உங்கள் சமூகத்திற்கும், இம்மண்ணின் பழங்குடி மக்களுக்கும், நீங்கள் இன்னும் பல படைப்புகளையும் ஆய்வுகளையும் செய்ய வேண்டும். இன்றைய உலகப் பழங்குடியினரின் தினத்தில், இதனை ஒரு வாழ்த்தாகவும் பதிவு செய்து கொள்கின்றேன்.

இந்நூல் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வினை மேற்கொள்ள என்னை அழைத்த பேத்தாளை பொது நூலகத்தினருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும், ஶ்ரீதர் அரியநாயகம் (Sridhar Ariyanayagam) அவர்களுக்கும் மிக்க நன்றி.