உத்தி என்றால் கன்னட மொழியிலேயே ‘மேலே’ என்று அர்த்தம் என பேராசிரியர் ரகுபதி என்னிடம் ஒரு முறை கூறினார். 1980களில் இது நடந்தது. இன்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் என் ஆய்வைப் படித்தபின் அவர் இப்படிக் கூறியமை நினைவுக்கு வருகிறது. எனது கலாநிதிப்பட்ட ஆய்வில் இந்த உத்தியாக்களைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பின் கடற்கரையோரம் வாழ்கின்ற வேடர் சமூகம், இறந்தபின் உயிரோடு மேலே வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் தம் முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடு தான் உத்தியாக்கள் வழிபாடு.
கள ஆய்விலே நான் கண்டுகொண்டது இதுதான்.
கிழக்கு இலங்கையிலே உள்ள கடற்கரையோரம் வாழ்கின்ற வேடர் மத்தியிலே நடைபெறுகின்ற சடங்கை நான் முதன்முதலில் அறிமுகம் செய்தேன் என்று நினைக்கிறேன். அவர்கள் அந்த வழிபாட்டுக்கு மட்டக்களப்பு மந்திரம் அல்லாத வேறு சில உச்சரிப்புகளைக் கூறினார்கள். அதனையும் நான் என் நூலில் பதிந்திருக்கிறேன். அந்த நூலின் பெயர் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’. நூலகம் இணையத்தில் அதனைப் பெறலாம். மட்டக்களப்பின் கரையோரம் வாழ் வேடர் குல மக்களின் குமாரத்தன் சடங்கையும், சடங்குச் செயற்பாட்டு முறைகளையும் அறிமுகம் செய்து, அவர்களின் வழிபாட்டையும் அதில் விளக்கியிருந்தேன்.
அண்மையில் அத்தகைய ஒரு வழிபாட்டைக் காண பத்திநாதன் என்னை அழைத்திருந்தார். களுவன் கேணியில் அது நடைபெற்றது. அதை அவதானித்த நான் அது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதி இருந்தேன். அது சிறிய நூல் வடிவிலும் வெளிவந்துள்ளது. 1980களில் போடப்பட்ட அச்சிறு புள்ளி பின்னர் மெல்ல வளர்க்கப்பட்டது என நினைக்கிறேன்.
2000 ஆம் ஆண்டுகளில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் இறுதி வருட ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த இன்றைய நாடக விரிவுரையாளர் ரவிச்சந்திரன் அவர்கள் முருத்தானை வேடர்கள் பற்றி ஆராய்ந்த போது இந்த உத்தியாக்கள் பற்றிக் கூறியிருந்தார். அன்று மாணவராக இருந்து பின்னால் பேராசிரியரான இன்பமோகன் அவர்களும் இதைப் பற்றி ஆராய்ந்துள்ளார்.
அந்தச் சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் இந்த வணக்க முறை பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார். அருமையான நூல் அது. அவரே அங்கு சில இடங்களில் கப்புகனாராகச் செயற்படுகிறார். அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் எம்.ஏ பயின்றவர். சித்திரலேகாவின் கீழ் தனது ஆய்வைச் செய்தார் என்பது நினைவில் உள்ளது. அது நூலாகவும் வெளிவந்துள்ளது.
பின்னர் இது பற்றி ஆராய்ந்த விஜயரத்தினமும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதுவும் நூலாக வெளிவந்துள்ளது.
2000 ஆம் ஆண்டுகளில் விளிம்புநிலை மக்கள் ஆய்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மையம் கொண்டது. அதன் விளைவுகள் இவை என நான் நினைக்கிறேன்.
இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே இப்போது (2020களில்) இளம் ஆய்வாளர் பத்திநாதன் வருகின்றார். பத்திநாதனின் துறை நாடகமும் அரங்கியலும். நாடகம் ஒரு வகையில் ஒரு நோய் தீர்க்கும் மருந்தாகும்; சடங்குகளுக்கும் இந்தப் பண்பு உண்டு. நாடகத்தின் மூலமாக நோயைத் தீர்க்கும் சடங்குகளை, அதன் தன்மைகளைக் கண்டறியப் புறப்பட்ட பத்திநாதன், தன் பிறந்து வளர்ந்த சமூகத்தில் நடந்த உத்தியாக்கள் சடங்கை நோய் தீர்க்கும் சடங்காகக் கண்டறிந்து, அதனையே தனது பட்டதாரிப் படிப்பின் ஆய்வுப்பொருள் ஆக்கினார்.
அவர் அந்தச் சமூகத்தில் இருந்து வந்தவர். அதனால் அந்தச் சடங்கு முறைகள் அவரது இரத்தத்திலேயே ஊறிக் கிடந்தன. அதனால் அவர் கூறுவதில் உண்மைத்தன்மை அதிகமாக வெளிப்படுகிறது. இதனால் உத்தியாக்கள் சடங்கும், அவர்கள் பற்றிய தகவல்களும் இன்னும் பிரகாசமாக வெளிப்படுகின்றன.
ஓர் அர்ப்பணிப்புள்ள நாடகக்காரன் சிறந்த சமூகவியலாளனாக மாறுவான் என்பது அறிஞர் கருத்து. இங்கே ஒரு நாடகக்காரனான பத்திநாதன் ஒரு சமூகவியலாளனாகவும், மானிடவியலாளனாகவும் முகிழ்வதைக் காணலாம்.
அவரது இந்த நூலான உத்தியாக்கள், கிழக்கு மாகாணக் கரையோர வேடர் சடங்குகளையும், அவர்கள் வாழ்க்கை முறைகளையும் கூறும் நூலாகும். அதற்கு முன்னுரை எழுதும்படி அவர் என்னைக் கேட்டிருந்தார். அம்முன்னுரை உங்களுக்குப் பல தகவல்களைக் கூறும்.
பத்திநாதன் எழுத்தாளராக மட்டுமின்றி, செயல்வாதியாகவும் திகழ்கிறார். கிழக்கு மாகாண வேடர் வாழ் கிராமங்கள் தோறும் அலைந்து அலைந்து தகவல்களைத் தேடியதுடன், அவர் அவர்களை ஒன்றிணைக்கிறார்; ஒரு சமூகமாக மாற்றுகிறார்; அதன் அடையாளங்களை வெளிக் கொணர்கிறார். இவ்வகையில் ஆய்வாளர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார். இப்படி இன்னும் சிலரையும் நான் அவதானிக்கிறேன்.
அவர் மாணவராக இருந்த போது அவரது செயற்பாடுகளை நான் அவதானித்திருக்கிறேன். நல்ல நாடகங்கள் சிலவற்றை மேடையில் ஏற்றி இருக்கிறார். அவர் பரீட்சைக்காகத் தயாரித்த ‘கண்ணுக்குப் புலனாகாத அரங்கு’ ஒன்றுக்குப் பரீட்சகராகச் சென்று சுவையான அனுபவங்களையும் பெற்றிருக்கிறேன்.
பத்திநாதனுக்கு இந்தியப் புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அவர் உயர்கல்வி பெறச் செல்லுகின்றார் என அறிகிறேன். இதுபற்றி அவர் எனக்குக் கூறினார். அங்கே மானிடவியல் துறை உள்ளது; அங்கு கற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை கூறினேன்; மற்றவர்களும் கூறி இருப்பார்கள்.
பல்கலைக்கழகத்தில் பயின்ற, முக்கியமாக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் பயின்ற திறமைமிக்க மாணவன் ஒருவன், நிரந்தர வேலை ஒன்று இல்லாத இடத்திலும், தன் ஆய்வைத் தளரவிடாது தொடர்ந்து செய்வது மிகப்பெரிய சாதனை. இவனைப் போன்ற இளம் தலைமுறை தான் நமது நம்பிக்கை. பத்திநாதனுக்கு என் வாழ்த்துகள். மேலும், மேலும் நீங்கள் வானத்தில் பறந்து செல்லுங்கள், புதிய திசைகளை நோக்கிப் பறவுங்கள்.