காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

August 21, 2025
கருத்துரை: எஸ். நயன கணேசன் 
காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

எஸ். நயன கணேசன் 

கடல் சார்ந்து வாழ்கின்ற இச்சமூகம், இலங்கையினுடைய அரச கொள்கை வகுப்பாளர்களின் சீனாவுடனான ஒப்பந்தத்தினாலும், இந்தியக் கடல் அரசியலினாலும் இலங்கை அரசாங்கத்தோடு நின்று செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்கள், அமைச்சர்களுடைய செயற்பாடுகளினாலும், அவர்களைச் சார்ந்து நிற்கின்ற அரச அதிகாரிகள், கல்விமான்கள் தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகளினாலும் தங்களுக்கு எஞ்சியிருந்த கடல் வளத்தையும் இழக்கப்போகின்றோமே என்று ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் (பக்கம்: 23). நீலப் பொருளாதாரம், கடல் விவசாயம் மற்றும் கடல் பொருளாதார அபிவிருத்தி என உலக நாடுகள் தம் கடல் வளத்தைப் பயன்படுத்துகையில், ஈழக்கடலின் புதல்வர்களின், குறிப்பாக வடபுலத்து மீனவச் சமூகத்தினரின் பிரச்சினைகள், தசாப்தகாலமாக, இந்து சமுத்திரத்தின் உப்பைவிட பரந்து விரிந்து, தீர்வின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றது. “எம் துயரங்களை எவரும் கண்டு கொள்வதாயில்லை” என வருந்துகின்றனர் கடலின் பழங்குடியினர்.

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் என்பவரால் எழுதப்பட்டுள்ள ‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற ஆய்வு நூல் அண்மையில் யாழ் நகரில் வெளியிடப்பட்டது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல், சட்டவிரோத மீன்பிடி, இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான கைகலப்புகள், கைது நடவடிக்கைகள் மற்றும் கடலட்டைப் பண்ணை போன்ற பல இன்னோரன்ன பிரச்சினைகள் இலங்கையின் சர்வதேச விவகார அரசியலில் மிக முக்கிய பேசுபொருட்களாய் உள்ளன. இவை அனைத்துக்கும் மிக முக்கிய காரணம் கடல் வளக்கொள்ளை என்பதே ஆய்வாளரின் ஆழமான கருத்தாகவுள்ளது. இதற்கப்பால், சீன – இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் கடலுணவுத் தேவை கருதி அவர்களால் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல், கடல் ஆதிக்கச் செயற்பாடுகள், இலங்கை அரசின் இயலாமை மற்றும் கைவிடப்பட்ட வடபுலத்து மீனவர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் மிக நேர்த்தியாகத் தக்க ஆதாரங்களுடன் விவரித்துள்ளார் நூலாசிரியர் மரியநாயகம் நியூட்டன்.

கடலுணவின்பால் வட கடல் மீன்வளம் எவ்வாறு சூறையாடப்படுகின்றது மற்றும் அதனால் எதிர்காலத்தில் கடல் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்துகளையும் விபரீதங்களையும் பற்றிய ஆய்வாளரின் பார்வை அச்சப்பட வைக்கின்றது. இந்தக் கடல் வளக்கொள்ளை அரசியல் மிகவும் ஆதிக்கம் நிறைந்தது. அதனை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்கிறார் நூலாசிரியர்.

மீன் வளக் கொள்ளையின் பின்னால் இருக்கும் அரசியலையும் நாடுகளையும் மிகத்துணிவுடன் எதிர்கொள்கின்றது இவரது தேடல். அந்த ஆளுமை, தீர்வுக்கான வழிகளுக்கு கதவுகளையும் திறக்கின்றது. ஒன்று மட்டும் புரிகிறது, கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயம், இன்று கோடாரி கொண்டு சாய்க்கப்பட வேண்டியுள்ளது. அதனை இந்நூல் நன்றாய் உணர்த்துகின்றது.

இவ் ஆய்வு, இந்தியக் கடல் வியாபாரிகளின் நாசகார மீன்பிடி காரணமாக ஏற்பட்டுள்ள எம் மீனவ சமூகத்தின் பொருளாதாரச் சீர்குலைவை வெளிக்காட்டுகிறது. இந்தியப் பெரு முதலாளிகளின் இந்தக் கடல் அடாவடித்தனத்தை எந்த விதத்திலும் கணக்கில் எடுக்கவில்லை; இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் தமிழ்த்தேசியவாதிகள், இடதுசாரிகள், முற்போக்குவாதிகளும் கண்மூடித்தனமாக அதனை நியாயப்படுத்துவதும் ஆதரிப்பதும் மிகக் கவலைக்குரியதும் கண்டிக்கப்பட வேண்டியதும் எனக் குற்றஞ்சாட்டுகின்றார் நியூட்டன்.

இந்த அநியாயத்தைப் பற்றிப் பேசாது மௌனமாக இருக்கின்ற ‘கள்ளத்தனமான அரசியலை’ எந்தவித சமரசமும் இன்றி நியூட்டன் தன்னுடைய எழுத்துகளின் மூலம் பலமாகச் சாடியிருக்கின்றார். நூல் தொகுப்பாளரான செல்லையா மனோரஞ்சன் (பக்கம்: 21) இக்கூற்று இக்கள ஆய்விற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. இலங்கையின் கடலுணவு விவசாயம் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்துகளை முன்கூட்டியே ஆதாரங்களுடன் முன்வைக்கின்றது இப்புத்தகம். அத்துடன் அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளையும் கோடிட்டுக் காட்டுகின்றது. வெகுஜனப் போராட்டங்களால் மாத்திரம் அவை சாத்தியமாகாதென்பதனையும் வலியுறுத்துகின்றது இந்தக் கடல் புத்தகம்.

இந்நூலில் குறிப்பிடப்படுகின்ற சில வல்லரசு நாடுகள், தமது கடல்களில் மேற்கொண்ட கடல்வளக் கொள்ளையினால், அக்கடல்கள் வறண்டமையை அடுத்து, எம் சமுத்திரத்தை நோக்கிப் படையெடுத்தது மட்டுமன்றி, எம் கடல் இறைமையையும் அடிமைப்படுத்திக் கொண்டுள்ளன என்பதனை தெட்டத்தெளிவாக வரிசைப்படுத்துகின்றார் ஆய்வாளர் நியூட்டன். இச்சுயலாப மீன்வளக் கொள்ளைப் போட்டாபோட்டியில் எம் கடலும் நீர்த்துப் போய்விடுமோ என்ற எழுத்தாளரின் அச்சம் தவிர்க்க முடியாததென இவ் ஆய்வுப் புத்தகம் கண்டறிந்துள்ளது.

இன்று அயல் நாடுகளினதும் வேறு வலய நாடுகளினதும் கடல்வளங்களைக் கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கும் புதிய கடல் கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும், 2003 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்து நாடுகளில் முறையே முதலாம் இடத்திலும், ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்கள். மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகியிருக்கும் நிலைபோல, இன்று இலங்கையின் தெற்கில் சீனாவானது ‘அரக்கத்தனமான’ கொள்ளையை ஆரம்பித்துள்ளது (பக்கம்: 133).

காலத்திற்கு பொருத்தமான இக்கள ஆய்வு நூல் மீனவர்கள் எதிர்நோக்கும் துயரங்களைப் பதிவு செய்துள்ளமை, அவர்களுக்கான தீர்வின் முக்கியத்துவத்தினை மேலும் மேலும் வலியுறுத்தி நிற்கின்றது.

அந்தக் கடல் மைந்தர்களின் குரல்களிலிருந்து ஒரு கூற்று…

“எவனட்டையும் நாங்க கையேந்தி சீவிச்சதாக சரித்திரமே இல்லை. இப்ப எங்களை இந்த கொம்பனிக்காரங்களிட்ட கையேந்தச் சொல்றீங்களோ? ஒரு மணித்தியாலம் மினக்கெட்டால் கடலாச்சி ஆயிரம் ஆயிரமாய் அள்ளிக்கொட்டுவாள் அதை விட்டுப்போட்டு, ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலிக்கு எங்களை மாரடிக்கச் சொல்றியளோ?” (பக்கம்: 103).