முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘பதார்த்த சூடாமணி’  
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
15 நிமிட வாசிப்பு

முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘பதார்த்த சூடாமணி’  

September 4, 2025
கருத்துரை: மா. பாரதி முத்துநாயகம்
முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘பதார்த்த சூடாமணி’  

பதார்த்தம் என்றால் உண்ணும் உணவு அல்லது அதில் பயன்படுத்தும் பொருள்கள். சூடாமணி என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இங்கே தொகுக்கப்பட்ட நூல் என்று பொருள் கொள்ளலாம். கனடாவில் வசிக்கும் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய ‘தமிழர் மருத்துவம் – ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலை மூன்று பகுதிகளாகச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து நாள்களைத் தள்ளிப் போட்டதில் சோம்பல் என்னை ஆட்கொண்டு அதை முழுமையாக முடிக்க முடியாமல் செய்துவிட்டது. இலங்கையில் ‘பதார்த்த சூடாமணி’ எனும் இந்த நூலின் முதற்பதிப்பு நடப்பாண்டில் வெளியான நிலையில் இந்தியாவிலும் விரைவிலேயே வெளியாக இருக்கிறது. 

தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி நூலின் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர முழுமையான அறிவை எதையும் பெறாதவன் நான். “பாலுண்போம் எண்ணெய் பெறில் வெந்நீரில் குளிப்போம்” என்று தொடங்கும் பாடலை 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்தபோது அதில் வரும், “மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்” என்ற வரியில், மண்ணுக்கடியில் விளையும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணமாட்டோம் என்பதைப் படிக்கும் நாள்களில், உருளைக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, சிறுகிழங்கு போன்றவற்றை விரும்பித்தின்னும் வழக்கமுடையவனாக இருந்தேன். அதன்பிறகு அவற்றை உண்ணுவதில் தயக்கம் இருந்தது. 

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவரான இருபாலைச் செட்டியார் என்பவரால் (200 ஆண்டுகளுக்கு முன்பு) தொகுக்கப்பட்ட பதார்த்த சூடாமணி என்ற நூலிலுள்ள பாடல்கள் தரும் செய்திகளை நாமறியும் பொருட்டு அதே தலைப்பிலேயே விளக்கமாகவும் விரிவாகவும் தந்துள்ளார் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள். அந்தப் பதினொரு பொருள்களாவன:

  1. குங்குமப்பூ
  2. மிளகாய்
  3. தூதுவளை
  4. மரவள்ளிக்கிழங்கு
  5. தக்காளி
  6. ஈரப்பலா (அயினிச் சக்கை போலத் தோன்றும் இதை ஆங்கிலத்தில் ‘Breadfruit’ என்று சொல்கிறார்கள்.)
  7. பப்பாளி
  8. வத்தகப்பழம் (தர்பூசணி)
  9. பறங்கிப்பூசணி
  10. சர்க்கரை வள்ளிக்கிழங்கு (வத்தாளங்கிழங்கு)
  11. அன்னாசிப்பழம்

இவற்றில் தூதுவளையைத் தவிர மற்றவை எல்லாம் 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு), ஆங்கிலேயர்களால் இங்கே கொண்டுவரப்பட்டவையாகும். அந்நிய மண்ணுக்குரிய இவற்றின் மருத்துவ அனுகூலங்களை அனுபவபூர்வமாக ஆய்ந்தறிந்து நூலாக வெளியிட்ட இருபாலைச்செட்டியாரை நன்றியுடன் நினைவுகூரத் தூண்டுகிறது இந்நூல். 

முதல் தலைப்பாகிய ‘குங்குமப்பூ’ உலகின் மிக விலையுயர்ந்த தாவரப் பொருள்களில் ஒன்று. சாமானியர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விலை! ஏன் அப்படி என்றால் இதனை உற்பத்தி செய்வதில் உள்ள அபூர்வங்கள்தான் காரணம்.

“உலகிலேயே அதி விலை கூடிய சுவையூட்டி (Spice) குங்குமப்பூ. குங்குமப்பூவின் தரத்தின் அடிப்படையிலேயே அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான குங்குமப்பூ ஒரு இறாத்தல் (454 கிராம்) 3000 அமெரிக்க டொலர் முதல் 5000 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஓரளவு தரமான குங்குமப்பூ ஒரு கிராம் 8 டொலருக்கு வாங்க முடியும். இதன்படி கணக்குப் பார்த்தால் இன்று ஒரு கிராம் குங்குமப்பூவின் விலை 2600 இலங்கை ரூபாவாகும். இது இந்தியக் காசில் 650 ரூபா….”

“குங்குமப்பூ என்பது தனிப்பூ அல்ல. பூவின் உள்ளே சிவந்த நூலிழை போன்ற மூன்று கிளைகளையுடைய சூல்முடி (பெண்குறி) காணப்படும். இந்த ‘ஸ்ரிக்மா’ (Stigma) எனப்படும் சூல்முடியே குங்குமப்பூ எனும் பெயரில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியமாகும். ஒரு அவுன்ஸ் குங்குமப்பூ தயாரிப்பதற்கு ஏறத்தாழ 14,000 ஸ்ரிக்மாக்கள் தேவைப்படும். இதன்படி ஒரு இறாத்தல் குங்குமப்பூ தயாரிப்பதற்கு 72,000 மலர்களிலிருந்து குங்குமப்பூவின் ஸ்ரிக்மாக்களைக் கைகளினால் பிரித்தெடுக்க வேண்டும். இந்த மனித உழைப்புக்கான செலவை ஓரளவு ஊகித்துக்கொள்ள முடியும். அத்தோடு வருடத்துக்கு ஒரு கிழமை மாத்திரமே இந்தத் தாவரத்தில் பூக்கள் பூக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்…”

இந்தக் குங்குமப்பூ உணவுக்குச் சுவையூட்டுவது மட்டுமல்லாமல், 

“விந்து நட்டம் தாகமண்டம் மேகசலம் சூலைகபம் 

உந்து சுரம் பித்தம் கால் உச்சி வலி – முந்து கண்ணில்

தங்கும் அப்பூவோடு உறுநோய் சந்தி இவை நீங்க வென்றால் 

குங்குமப்பூ ஓர் இதழைக் கொள்”

என்கிறது பதார்த்த குணவிளக்கம் எனும் நூல். இதன் பொருள்: விந்து இழப்பு, தாகம், சலரோகம், சளிக்கட்டு, காய்ச்சல், பித்தம், கால்வலி, உச்சிவலி, கண்ணில் பூ, வாந்தி போன்ற நோய்கள் தீர வேண்டுமானால், குங்குமப்பூவின் ஒரேயொரு இதழை உட்கொள்.

பெண்களுக்கேயுரிய இரத்தப்போக்கு மற்றும் கர்ப்பம் தொடர்பான நோய்களும் குங்குமப்பூவால் தீரும் என்று மற்றொரு பாடல் கூறுகிறது (‘குங்குமப்பூவே’ என்று சந்திரபாபு, காதலியை அழைத்துப் பாடியதன் பொருள் இப்போதல்லவா தெரிகிறது!). ஆனாலும் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு குங்குமப்பூ என்பது கைக்கும் வாய்க்கும் எட்டாத பூதான். 

தமிழர் உணவில் காரச்சுவைக்குப் பயன்படுத்தி வந்தது கறி என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட மிளகுதான். போர்த்துக்கீசியரால் தென்னமெரிக்காவில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கொண்டுவரப்பட்ட மிளகாய் இல்லாமல் இன்று எந்தச் சைவ  – அசைவ உணவும் இல்லை. மிளகாய் பொதுவாக சுவைக்காக மட்டுமே என்று கருதிக்கொண்டிருக்கும் நமக்கு அதன் மருத்துவக் குணங்களைப் பட்டியலிடும் யாழ்ப்பாண இருபாலைச்செட்டியாரின் பதார்த்த சூடாமணியிலிருந்து ஒரு பாடலைத் தருகிறார் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள்:

“தீதிலா மிளகாய்க்குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோ?”: உடலுக்கு எந்தக் கெடுதியும் செய்யாத மிளகாயின் மருத்துவக் குணங்களைச் சொல்லுகிறேன். கேட்கிறீர்களா?

“வாதமே சேடம் வாயு மந்தம் என்று இனைய எல்லாம் 

காதம் போம்!” : வாதம், சளித்தொந்தரவு, வாய்வுக்கோளாறு, மந்தம் எல்லாம் மிளகாயைப் பயன்படுத்தினால் உங்களைவிட்டு ஓடோடிப் போகும்!

“போசனங்கள் தம்மைக் கடிதினில் செமிக்கப் பண்ணும்”: உண்ட உணவை விரைவில் செரிக்கும்படிச் செய்யும். 

“போதமார் பித்தம் தோன்றும் பிரிவில் சீ மலமும் போமே!”: அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் பித்தமும் வயிற்றுப் போக்கும் ஏற்படும்.

மேலே கண்ட பதினொரு பொருள்களில் பத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள்ளும் இலங்கைக்குள்ளும் வந்தவை. தூதுவளை நமது மண்ணிற்கே உரியது. இதை எப்படி இந்த வரிசையில் இந்நூலாசிரியர் இடம்பெறச் செய்தார் என்பது கேள்வியாக இருந்தாலும் இதுவரை நாம் அறிந்திராத பல விஷயங்களையும் எடுத்து இயம்பும் இந்நூலில் அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் செய்திகள் அமைந்துள்ளன.

கொலம்பஸ் தனது முதல் கடற்பயணத்தின் போது கண்டுபிடித்தது ஒரு புதிய கண்டத்தை மட்டுமல்ல; மிளகுக்குப் பதிலாகப் பயன்படப் போகும் மிளகாயையும்தான். அவரே தனது இரண்டாவது பயணத்தின் போது கண்டறிந்தது தான் அன்னாசிப்பழம். ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவாகச் சீண்டப்படாமல் இருந்த அன்னாசிப்பழம் இன்று தமிழகத்தில் பழச்சாறுக் கடைகளில் கோலோச்சுகிறது. எலுமிச்சைச்சாறு எனும் சாதாரண ‘லெமன் ஜுஸ்’ தயாரிப்பவரும் அதில் இரண்டு அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு ‘மிக்ஸி’யில் அடித்துக்கொடுப்பது அண்மைக்காலமாகத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது (புது ருசியும் மணமும் ஒரு புறமிருக்க, இதில் வணிகத் தந்திரமும் இருக்கிறது. கூடுதலாக வசூலித்துக் கல்லாகட்ட முடியும்).

“1463 – நவம்பர் – நாலாம் நாள். கொலம்பஸ் தான் கண்டறிந்த புதிய கரீபியன் தீவு ஒன்றுக்கு ‘சாண்டா மரியா டி குவாடெலூப்’ என்ற பெயரைச் சூட்டினார். கப்பல் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக்குடிகள் படகுகளில் தண்ணீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும்…”

“…. கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பியபோது, அரசர் ஃபெர்டினாண்ட், ராணி இஸபெல்லா ஆகியோருக்குக் கொண்டுவந்த காணிக்கைகளுள் தங்கக் கட்டிகள், பூர்வீகக்குடிகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள், முகமூடிகள் என்பவற்றுடன் அன்னாசி உட்பட வெளிநாட்டுப் பழங்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் அடங்கி இருந்தன. எனினும் இவற்றுள் அரசர் ஃபெர்டினாண்டை மிகவும் கவர்ந்தது அன்னாசிப்பழமேயாகும். இதை அவர் பகிரங்கமாகவே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்கு கொண்டுவரப்பட்ட அன்னாசிப்பழங்கள் மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் பெரும் ஆதரவைப் பெற்றன. அனைத்து வகையான உணவு வகைகளிலும் அன்னாசிப்பழம் மட்டுமே பரந்துபட்ட அங்கீகாரத்தைத் தந்தது…” என்று முனைவர் பால. சிவகடாட்சம் அவர்கள் கூறுவதைப் படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கிறது. 

அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் இரண்டே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு புகுந்த இவ்வகை இறக்குமதிகள் இன்று இந்திய உணவுப்பண்பாட்டின் அம்சமாக, தவிர்க்கவும் பிரிக்கவும் முடியாத அளவுக்குக் கலந்துவிட்டன. 

ஒவ்வொன்றும் ஏதோவொரு விதத்திலாவது மக்களை இரட்சித்திருக்கிறது என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் முனைவர் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக, ஏழிலைக்கிழங்கு எனும் மரச்சீனிக் கிழங்கு! கடுமையான பஞ்சகாலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களை பசிப்பிணியால் சாகாமல் காப்பாற்றியது இந்த மரச்சீனிக் கிழங்கு. அது எந்த நாட்டிலிருந்து வந்தால் நமக்கென்ன? 

இந்தப் பட்டியலில் மணிலாக்கொட்டை எனப்படும் நிலக்கடலை இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஓட்ஸ், சோயா போன்றவை சமீபத்திய வரவுகள். அதிலும் நமது நாட்டில் விளையாத ஓட்ஸ் சாப்பிடுவது ரொம்பக் கௌரவமானது! ஆசையாக பருப்பு (ஆமை) வடை, கார வடைகளைச் சாலையோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோமே, அவற்றுக்குத் தேவையான பட்டாணிப் பருப்பை (கடலைப்பருப்பு அல்ல) கனடாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும்தான் இன்னும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். 

எதுவானாலும் நமது தட்பவெப்ப நிலைகளுக்கேற்ற, சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத விளைபொருள்களே இந்நூலில் காணப்படும் பத்துப் பொருள்களும். முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் இந்நூலின் முதற்பதிப்பு இந்த ஆண்டு ‘எழுநா’ பதிப்பாக வெளியாகியிருக்கிறது. விரைவில் தமிழ்நாட்டிலும் வெளியாக உள்ளது.