வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் - காலத்தின் தேவை கருதிய நூல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
3 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் – காலத்தின் தேவை கருதிய நூல்

October 30, 2025
கருத்துரை: பேராசிரியர். அனந்தினி நந்தகுமாரன்
வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் – காலத்தின் தேவை கருதிய நூல்

முனைவர் சின்னத்துரை ஜேம்சன் அரசகேசரி அவர்கள் எழுதிய ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூல் வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது. வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் தனித்துவமான தரைத்தோற்றங்களைக் கொண்ட அழகிய, வளமிக்க நிலப்பரப்புகளாக இருப்பதோடு மட்டுமல்லாது பரந்துபட்ட உயிர்ப்பல்வகைமையையும் கொண்டுள்ளன. இருப்பினும் அதன் அபிவிருத்தி நோக்கில், உயிர்ப்பல்வகைமையின் இருப்புப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் அரிதாகவே உள்ளன. வடக்கு – கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி பற்றிப் பலரும் தமது திட்டங்களையும் யோசனைகளையும் முன்வைக்கும் இத்தருணத்தில், இந்தப் படைப்பானது ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகியவற்றில் காணப்படும் உயிர்ப்பல்வகைமையின் பரந்துபட்ட நிலையை அறிமுகப்படுத்துவது, வாசகர்களுக்குச் சிந்தனையைத் தூண்டுவதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறிப்பாக, இந்த உயிர்ப்பல்வகைமை எவ்வாறான மனிதச் செயற்பாடுகளுடன் பிணைந்துள்ளது என்பதை, கடற்றொழில், விவசாயம், காடுசார் தொழிற்றுறைகள், குளங்களையண்டிய குடியேற்றங்கள், மற்றும் ஆறுகளையொட்டிய அபிவிருத்தி போன்றவற்றை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வவுனியா தவிர்ந்த ஏனைய ஏழு மாவட்டங்களிலும் கடல்சார் பிரதேசம் உள்ளது. வவுனியா மட்டும் தனி நிலப்பரப்பை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இங்கு விவசாயமே கிராமிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக அமைகின்றது. மற்றைய ஏழு மாவட்டங்களிலும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயத்துடன் கடற்றொழிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

இந்நூலில் காடுசார் உயிர்ப்பல்வகைமை, கடல்சார் உயிர்ப்பல்வகைமை, நன்னீர் உயிர்ப்பல்வகைமை, சுற்றாடல்சார் உயிர்ப்பல்வகைமை என்பன தனிப்பட்ட தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாது படங்களுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கு அடுத்தபடியாக, காடுசார் உயிர்ப்பல்வகைமையும் கடல்சார் உயிர்ப்பல்வகைமையும் பெருமளவில் பரந்துபட்டிருப்பதால், இங்கு சூழலியல் சுற்றுலா (Ecotourism) ஒரு முக்கிய வாழ்வாதார நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட வேண்டும். இயற்கை மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்துறை, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதோடு மட்டுமல்லாமல், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இத்தகைய சூழலில், இந்த நடவடிக்கைகளை உரிய துறையினர் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நூல் மிகவும் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒரு சூழற்றொகுதியில் வாழும் தாவரமோ அல்லது விலங்கோ மனிதனுக்கு நேரடியாகப் பயன்படுகின்றதோ இல்லையோ, அது, தான் வாழும் சூழற்றொகுதிக்கு ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்து, அந்தச் சூழற்றொகுதியின் சமநிலையைப் பேணுகின்றது. எனவே, இத்தகைய அனைத்து உயிர்களையும் மனிதராகிய நாம் அனைவரும் பாதுகாப்பதன் மூலமே உயிர்ப்பல்வகைமையைப் பேண முடியும் என்ற இன்றியமையாத கருத்தினை இந்நூலாசிரியர் மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.முனைவர் ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய உயிரியல் பிரிவில், குறிப்பாக தாவர இனப்பெருக்கத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் விவசாய ஆராய்ச்சித் துறைக்குப் பெரும்பங்காற்றி, பல்வேறுபட்ட தாவர இனங்களையும்/ பேதங்களையும் உருவாக்கி, வடக்கு – கிழக்கு விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, முழு நாட்டின் விவசாய ஆராய்ச்சித்துறைக்கும் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உருவாக்கியுள்ள இந்நூலானது, வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்திக்கான உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும் உதவுவதாக அமைகிறது. எமது அரசாங்கமும், மக்களும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கும் இந்தக் காலகட்டத்தில், முனைவர் ஜேம்சன் அரசகேசரியின் இந்த நூலானது காலத்தின் தேவை கருதிய பங்களிப்பாக அமைகின்றது.