க. பத்திநாதனின் உத்தியாக்கள் எனும் நூல் குறித்து
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
6 நிமிட வாசிப்பு

க. பத்திநாதனின் உத்தியாக்கள் எனும் நூல் குறித்து

September 16, 2025
கருத்துரை: து. கெளரீஸ்வரன்
க. பத்திநாதனின் உத்தியாக்கள் எனும் நூல் குறித்து

மட்டக்களப்பின் களுவன்கேணியைச் சேர்ந்த க. பத்திநாதன் எனும் ஆய்வாளன் எழுதியுள்ள பழங்குடிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் பெயரில் ‘எழுநா’வினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் கிழக்கிலங்கையில் வாழும் வேடுவர்களின் கடந்தகால, நிகழ்காலப் பண்பாடுகளைக் கேட்டும், பார்த்தும், அறிந்த தகவல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது.

நவீன கல்வி, மிகப்பெரும்பாலும் அக்கல்வியைப் பெறுகின்ற மனிதரை அவர்கள் வாழும் சூழலுடன் ஒட்டி உறவாடவிடாமல் அதிலிருந்து அவர்களை அந்நியப்படச் செய்வதாகவே இயக்கம்பெற்று வருகிறது. இத்தோடு நவீன காலத்தில் பெரும்பாலும் பண்பாட்டு ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் எண்ணிக்கையில் குறைந்த இனங்களும், சமூகங்களும், தமது தனித்துவங்களை மௌனமாக மறுதலித்தும், மறந்தும், அருகே வாழும் ஆதிக்கப் பண்பாடுகளுடன் கரைந்தும் வாழுகின்ற நிலைமைகள் வலுவாகக் காணப்படுகின்றன. 

இத்தகைய நவீன கல்வி, பண்பாட்டுச் சூழல்களுக்குள் உருவாகி வளர்ந்த க. பத்திநாதன் எவ்வாறு தனது உத்தியாக்கள் (முன்னோர்கள்) பற்றிப் பேச முற்பட்டார்? இதற்குப் பின்புலமாக இருந்து, உத்வேகம் அளித்த கல்வி மற்றும் சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் எத்தகையவையாக இருந்துள்ளன? என்பதை இந்நூலின் வருகை வெளிக்காட்டி நிற்கிறது எனலாம்.

க. பத்திநாதன் நாடகமும் அரங்கியலும் கற்கவந்து அதற்கான ஆய்விற்காகத் தனது ஊரின் பழங்குடிச் சடங்குகளில் காணப்படும் குணமாக்கல் தன்மையினை ஆராயச் சென்றவர். ‘ஓடும் புளியம்பழமும் போல’ ஊருடனும் சடங்குகளுடனும் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நவீன மாணவனான பத்திநாதனுக்கு இளங்கலைமாணி ஆய்வும், அது தொடர்பான உரையாடல்களும், தனது உத்தியாக்களின் பெறுமதியை உணரச் செய்துள்ளதுடன், அதன் உள்ளே சென்று அதன் தத்துவங்களைக் கண்டறியும் ஓர்மத்தையும் வழங்கியுள்ளன எனலாம். இதனால் தனது இளங்கலைமாணிக் கற்கைக்குப் பின்னர் பத்திநாதன் ஆர்வத்துடன் கிழக்கிலங்கைப் பழங்குடிகள் பற்றிச் சுதந்திரமாகத் தேடினார், எழுதினார். இத்தகைய நிலைமாற்றத்தை இந்நூலிலுள்ள கட்டுரைகள் காட்டுகின்றன எனலாம்.

முன்கூட்டிய கருதுகோள்கள், கோட்பாட்டு வரையறைகள், ஆய்வுமுறைக் கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாகத் தேடித்தேடிப் பழங்குடிகளின் பண்பாடுகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும், அதனை எழுதும் முறைமையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவனவாக பத்திநாதனின் சில கட்டுரைகள் காணப்படுகின்றன.

ஏற்கனவே களுவன்கேணிப் பழங்குடியினர் சார்ந்து திரு.கு. சண்முகம், திரு.க. சரவணபவன் ஆகிய ஆய்வாளர்கள் தமிழில் காத்திரமான ஆய்வு நூல்களை எழுதிப் பகிர்ந்துள்ள பின்புலத்தில், இளம் ஆய்வாளனாகிய திரு.க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’ நூல் மற்றுமொரு கவனத்திற்குரியதாக வெளிவந்துள்ளது.