எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது வல்லமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் 18.04.2025 அன்று, யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் வல்லமை இயக்கத்தின் பயணிகள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
ஆவணப்படத்தை பார்வையிட்ட பார்வையாளரான க.சத்தியசீலன் என்பவர் “காணாமலாக்கப்பட்டவர்களது நீண்டகாலப் பிரச்சினையை சிந்திக்க இயலாதவாறு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில், இப்போராட்டத்தை இத்திரையிடலானது மீள நினைவுபடுத்தியுள்ளது. வந்திருக்கக்கூடிய புதிய அரசாங்கம் மக்களுக்குச் சார்பான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்வதோடு, அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.