எழுநாவின் பதிப்பில் மரியநாயகம் நியூட்டனால் எழுதப்பட்ட’காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் தலைப்பிலான நூலானது 19.04.2025 அன்று, சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் (YMCA) வெளியிடப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் நா.இன்பநாயகம் ஆகியோரும் யாழ்.மாவட்ட கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணிச் செயலாளர் தீபன் திலீசன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டன.