அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்
அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்
கந்தையா சண்முகலிங்கம் கந்தையா சண்முகலிங்கம்

இலங்கையின் இனத்துவ முரண்பாடுகளைத் தீர்வு செய்வதற்கான உபாயமாகவும், அரசியல் யாப்பு வழிமுறையாகவும் அதிகாரப்பகிர்வு (Power Sharing) முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் நீண்டகாலப் போராட்டம், அம்மக்களின் மரபுவழித் தாயகத்தில் சுயாட்சியைத் (Autonomy) தாபித்தலை நோக்கமாகக் கொண்டது. இப்பின்னணியில் அதிகாரப்பகிர்வும் சுயாட்சியும் பற்றிய மூன்றாம் உலக அனுபவம் குறித்த ஆய்வுகள் எமக்குப் பயன் உடையனவாக அமையும் எனக் கருதியே இத்தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெறும் ஆய்வுக் கட்டுரைகள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையும் சுயாட்சியையும் குறித்துக் கவனக்குவிப்பை ஏற்படுத்துவனவாக அமைகின்றன. இக்கட்டுரைகள் ‘ஒப்பீட்டுச் சமஷ்டி’ (Comparative Federalism) என்னும் விடயம் சார்ந்த கோட்பாட்டு ஆய்வுகளாகவும் அமைந்துள்ளன. இந்நூல் ‘சமஷ்டி முறைகள்’ (Federal Systems) குறித்த பயனுடைய உரையாடலுக்கு களம் அமைக்கும் என்பது எமது நம்பிக்கை.

புத்தக ஆசிரியர் கந்தையா சண்முகலிங்கம்
எழுநா நூல் வரிசை 44
பக்க எண்ணிக்கை 160
வெளியீட்டு ஆண்டு 2026
பகுப்பு அரசியலும் மெய்யியலும்
முன்னுரை

'அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும்: மூன்றாம் உலக அனுபவம்' என்னும் இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆறு உயராய்வுகளின் தமிழாக்கங்களின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகளை ஆங்கிலத்தில் எழுதியோர் கீழே குறிப்பிடப்படும் அறிஞர்களாவர்.

1. றொனால்ட். எல். வாட்ஸ்

2. லக்ஸ்மன் மாறசிங்க

3. ஜயம்பதி விக்கிரமரட்ண

4. பெர்னாட் நைட்ஸ்மன்

இவர்களுள் முதல் மூவரும் அரசியல் சட்டக் கோட்பாட்டாளர்களாவர். நான்காவதாக குறிப்பிடப்பட்டுள்ள பெர்னாட் நைட்ஸ்மன் அரசியல் புவியியல் (Political Geography), புவிசார் அரசியல் (Geo Politics), தேசிய இனங்களின் விடுதலை ஆகியன சார்ந்த முக்கியமான கோட்பாட்டாளர். இத்தொகுப்பு நூல் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை அறிவியல் நோக்கில் புரிந்துக் கொள்ள உதவுவது.

இலங்கையின் இனத்துவ முரண்பாடுகளைத் தீர்வு செய்வதற்கான உபாயமாகவும், அரசியல் யாப்பு வழிமுறையாகவும் அதிகாரப்பகிர்வு (Power Sharing) முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் நீண்டகாலப் போராட்டம், அம்மக்களின் மரபுவழித் தாயகத்தில் சுயாட்சியைத் (Autonomy) தாபித்தலை நோக்கமாகக் கொண்டது. இப்பின்னணியில் அதிகாரப்பகிர்வும் சுயாட்சியும் பற்றிய மூன்றாம் உலக அனுபவம் குறித்த ஆய்வுகள் எமக்குப் பயன் உடையனவாக அமையும் எனக் கருதியே இத்தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெறும் ஆய்வுக் கட்டுரைகள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையும் சுயாட்சியையும் குறித்துக் கவனக்குவிப்பை ஏற்படுத்துவனவாக அமைகின்றன. இக்கட்டுரைகள் ‘ஒப்பீட்டுச் சமஷ்டி' (Comparative Federalism) என்னும் விடயம் சார்ந்த கோட்பாட்டு ஆய்வுகளாகவும் அமைந்துள்ளன. இந்நூல் 'சமஷ்டி முறைகள்' (Federal Systems) குறித்த பயனுடைய உரையாடலுக்கு களம் அமைக்கும் என்பது எமது நம்பிக்கை.

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல்

இத்தொகுப்பின் முதலாவது கட்டுரை 'சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல்' என்ற விடயப்பொருள் பற்றியது. றொனால்ட். எல். வாட்ஸ் என்னும் அறிஞர் எழுதிய 'Comparing Federal Systems' என்னும் ஆய்வு நூலின் பிரதான கருத்துகளைச் சுருக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. றொனால்ட். எல். வாட்ஸ் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளைத் தமது நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆய்வுக்கான கோட்பாட்டு வரைசட்டம் (Theoretical Framework) ஒன்றைத் தந்திருக்கும் றொனால்ட் எல். வாட்ஸ் அவர்கள் தாம் ஒப்பீட்டுக்காகத் தெரிவு செய்துள்ள நாடுகளை நான்காக வகைப்படுத்துகின்றார். அந்நான்கு வகைப்பாடுகள் பின்வருவன.

1. வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் நிலைபேறுடைய சமஷ்டிகள் - 06 நாடுகள் ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டன.

2. வளர்ச்சியடைந்துவரும் பன்மொழிச் சமூகங்கள் நாடுகள். 02

3. அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டனவும் மேற்கிளர்ந்து வருவனவுமான சமஷ்டிகள் -02 நாடுகள்.

4. சமஷ்டி முறையில் இருந்து விலகிப் பிரிந்து சென்ற தேசங்கள் -02 நாடுகள்.

இம்முதலாவது கட்டுரையில் 12 நாடுகளினதும் சமஷ்டி முறைகள், ஒவ்வொன்றினதும் பிரதான இயல்புகள் பகுப்பாய்வு முறையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமஷ்டிகள் பின்வருவன.

1. ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜேர்மனி - இவற்றுள் கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் சமஷ்டி முறைகள் பற்றி மட்டும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

2. இந்தியா, மலேசியா

3. பெல்ஜியம், ஸ்பானியா

4. செக்கோஸ்லாவாக்கியா, பாகிஸ்தான்

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக்கட்டமைப்புகள்

இத்தொகுப்பு நூலின் இரண்டாவது கட்டுரை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எழுதிய 'A Survey of Structures for Power Devolution' என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையின் பிரதான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையின் முற்பகுதியில் அதிகாரப் பகிர்வுச் செயல் முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நான்கு காரணி களைக் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:

1. அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையை வகுத்தல் (Formulate a Policy for Power Devolution).

2. அதிகாரங்களை ஏற்பதற்குத் தகுதியுடைய அலகுகளிற்கான அளவுகோல்களைத் தீர்மானித்தல்.

3. அதிகாரங்களை ஏற்பவர்களை (Recipients) தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்தல்.

4. மத்தியில் உள்ள அதிகாரங்களில் எவற்றைப் பகிர்ந்தளிப்பது என்ற தெரிவைச் செய்தல்.

இந்நான்கு காரணிகள் பற்றியும் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க தரும் விளக்கங்கள் இப்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் யாப்பு மாதிரிகள் மூன்றை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் குறிப்பிட்டு அவை பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார்.

இம்மாதிரிகளாவன:

1. அதிகாரப் பகிர்வுடைய ஒற்றையாட்சி அரசு (A Unitary State with Devolved Powers)

2. கொன்பெடரேஷன் (Confederation)

3. சமஷ்டிமுறை (Federalism)

அடுத்து இம்மூன்று மாதிரிகளின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கான கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வும் தன்னாட்சியும்: சர்வதேச உதாரணங்கள் சில

இந்நூலின் மூன்றாவது கட்டுரை பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களின் (Multi-Cultural Societies) அதிகாரப்பகிர்வு அனுபவங்கள் பற்றிய ஆய்வாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட சமூகங்கள் பலவற்றின் அரசியல் தீர்வு அனுபவங்கள் வரலாற்று நோக்கில் விளக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வு, தன்னாட்சி என்ற இருவழிமுறைகள் பிரயோகிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், தோல்விகள் என்பனவும் விரிவாக இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும்

இத்தொகுப்பு நூலின் முதல் மூன்று கட்டுரைகளும் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வும், சுயாட்சியும் என்ற விடயத்தை அரசியல் - சட்ட நோக்கில் (Politico-Legal Perspective) ஆழமாக ஆய்வு செய்யும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. நான்காவதாக அமையும் பெர்னாட் நைட்ஸ்மனின் நான்காவது உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் என்னும் கட்டுரை புதியதொரு கண்ணோட்டத்தில் இவ்விடயங்களை ஆராய்கிறது. இப்புதிய கண்ணோட்டம் நான்காவது உலகம் (Fourth World), அரசு இல்லாத தேசிய இனங்கள் (Nations without a State) என்ற இரு கருத்தாக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட புதியதொரு கோட்பாடாகும். இக்கோட்பாடு சுயாட்சி, தன்னாட்சி, சமஷ்டி முறைமைகள், புதிய தேசியங்களின் (Nations) உருவாக்கம், பூகோள அரசியல் (Global Politics) என்பன பற்றி முற்றிலும் புதுமையான நோக்கு முறையை அறிமுகம் செய்கிறது.

அ) நான்காவது உலகம்

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மூன்றாம் உலக நாடுகள் (Third World Countries) என்ற கருத்தாக்கம் உருவானது. பொருளியல் வளர்ச்சி பெற்ற மேற்கு ஐரோப்பாவையும், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் முதலாவது உலகம் (First World) என்றும், சோவியத் ரஷ்யா தலைமையிலான கம்யூனிஸ்ட் நாடுகளை இரண்டாவது உலகம் (Second World) என்றும் அடையாளம் கண்ட பின்னணியிலேயே இவ்விரு உலகங்களுக்கும் வெளியே அமைந்திருந்த நாடுகளை மூன்றாவது உலகம் என வகைப்படுத்தும் சிந்தனை தோன்றியது. 1990களில் சோவியத் யூனியன் உடைவும், கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்களும் 'இரண்டாவது உலகம்' என்ற கருத்தாக்கத்தைப் பொருளற்றதாக்கியது. இப்பின்னணியிலேயே நான்காவது உலகம் என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.

1980களின் பின்னர் உலகின் தேசிய இனங்களின் (Nations) போராட்டங்கள் வலுப்பெற்றன. 1945 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 72 அரசுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 1993 இல் 191 ஆக உயர்ந்தது. இந்த 191 அரசுகளின் எல்லைக்குள் 5000 தேசிய இனங்களும் அவற்றின் வாழிடங்களும், தாயகங்களும் உள்ளடங்கி இருந்தன. 191 அரசுகளுள் 10க்கும் குறைவான அரசுகளே ஒரு தேசிய இனம், ஓர் அரசு (One Nation-One State) என்ற வரையறைக்குள் அடக்கக்கூடியனவாக இருந்தன. 'Nation State' (நேஸன் ஸ்டேட்) என்ற கருத்துக்குப் பொருத்தமற்ற பல்தேசிய இன அரசுகளாகவே (Multi-National States) உலகின் 95%மான அரசுகள் இருந்தன. தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கி அவற்றின் பண்பாட்டை உருக்குலைத்து, மேலாதிக்கம் பெற்ற தேசிய இனத்தோடு உருத்தெரியாத வகையில் இணைத்துக் கொள்ளும் கொள்கைகளை அரசுகள் பின்பற்றின.

மேற்கண்டவாறு நான்காவது உலகம் என்பதை வரையறை செய்யும் பெர்னாட் நைட்ஸ்மன் முதலாவது உலகம், இரண்டாவது உலகம், மூன்றாவது உலகம் என்ற வகைக்குள் அடங்கும் 191 நேஸன் ஸ்டேட்ஸ்களின் (Nation States) எல்லைகளுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த 5000 வரையான தேசிய இனங்களின் இருப்புக்கான போராட்டங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும், முதன்மைப்படுத்தும் கருத்தாக்கமான 'நான்காவது உலகத்தை' எமக்கு அறிமுகம் செய்கிறார்.

ஆ) அரசு இல்லாத தேசிய இனங்கள்

தேசிய இனங்களுக்கென ஓர் இயற்கைச் சூழலும் வாழிடமும் இருந்து வந்தது. உலகின் அரசுகள் தோன்றிய பின் தேசிய இனத்தின் உரிமையான இயற்கைச்சூழலையும் வாழிடத்தையும் அரசு அத்துமீறியும், அடாவடித்தனமாகவும் ஆக்கிரமிக்கிறது என வரலாற்று ரீதியாக தேசிய இனங்கள் மீதான ஆக்கிரமிப்பை நைட்ஸ்மன் விவரிக்கிறார். அவர் மேலும், முதலாளித்துவ வர்த்தக, கைத்தொழில் வளர்ச்சிகளின் விளைவாக அரசுகள் ஆக்கிரமிக்கும் குடியேற்றத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், அனல்மின் நிலையங்கள், உருக்கு, சீமெந்து ஆலைகள் என்ற வடிவில் புகுந்து தேசிய இனங்களின் வாழிடங்களைக் கைப்பற்றுவதையும் விளக்குகிறார். உலகின் 5000 வரையான தேசிய இனங்களுள் 2310 தேசிய இனங்கள் 12 பெருந்தேசங்களின் எல்லைக்குள் அடக்கப்பட்டிருப்பதை அவர் புள்ளிவிவரங்களின் மூலம் எடுத்துக்காட்டுகிறார். உதாரணமாக இந்தியா என்ற பெருந்தேசத்திற்குள் 380 தேசிய இனங்களும், இந்தோனேசியா என்ற பெருந்தேசத்திற்குள் 670 தேசிய இனங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். 12 பெருந்தேசங்களுள் (Mega-States) உள்ளடங்கிய தேசிய இனங்கள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா - 250

பிரேசில் - 210

சீனா - 150

கொலம்பியா -60

ஈகுவாடோர் - 35

இந்தியா - 380

இந்தோனேசியா - 670

மடகஸ்கார் - 20

மலேசியா - 20

மெக்சிக்கோ - 240

பெரு - 65

எம் (சையர்) - 210

மொத்தம் - 2310

5000 தேசிய இனங்களில் 46% ஆன தேசிய இனங்கள் 12 பெருந்தேசங்களுக்குள் அகப்பட்டிருப்பதை மேலே தரப்பட்டுள்ள தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெர்னாட் நைட்ஸ்மன் அவர்களின் கட்டுரை மேலே விளக்கப் பட்ட நான்காவது உலகம், அரசு இல்லாத தேசிய இனங்கள் என்ற இரு கருத்தாக்கங்களின் துணையுடன் பல்தேசிய அரசுகளின் (Multi-National States) எல்லைக்குள் அடங்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பிரச்சினையை ஆராய்கிறது.

எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு: ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல்

'பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புகளை வரைதல்: சர்வதேச அனுபவங்கள் ' (Constitution Making in Multi-Cultural Societies: Some International Experiences) எனும் தலைப்பில் ஐயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பைக் குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துகளை தமிழில் அறிமுகம் செய்வதாக இத்தொகுப்பு நூலின் 5ஆவது கட்டுரை அமைந்துள்ளது. எதியோப்பிய சமஷ்டியின் பிரதான அம்சங்களை சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.

1. வியப்பைத்தரும் இனக்குழுமப் பன்மைத்துவம்

எதியோப்பியா 80இற்கும் மேற்பட்ட இனக்குழுமங்களைக் கொண்ட தேசம். அவ்வினக்குழுக்களில் ஒரோமோ (Oromo) யாவற்றையும் விடப் பெரியது. ஒரோமோவின் சனத்தொகை மொத்த சனத்தொகையின் 34.5% ஆகும். இதற்கு அடுத்த நிலையில் அம்ஹரா (26.9%), சோமாலி (6.2%), டிக்ராய் (Tigray) (6.11%), சிடமா (4%), குறகே (2.5%), வொல்டயா (2.3%) எனப் பல தேசிய இனங்கள் உள்ளன. மொத்தச் சனத்தொகையின் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்ட அம்ஹரா முதல் மிகவும் சிறிய சனத்தொகை வீதாசாரத்தையுடைய இனக்குழுமங்களைக் கொண்ட நாடாக எதியோப்பியா விளங்குகிறது. இவ்வினக்குழுமங்களின் பேசும் மொழிகளின் எண்ணிக்கையும் எண்பதிற்கு மேற்பட்டனவாகும். மொழியை விடச் சமய வேறுபாடுகளும் அங்கு உள்ளன. எதியோப்பியாவின் இனத்துவ, மொழி, பண்பாட்டுப் பன்மைத்துவம் (Diversity) வியப்புக்குரியது.

2. குறைவிருத்தி நாடு

எதியோப்பியாவின் பண்பாட்டுப் பன்மைத்துவம் சிக்கலான அரசியல் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதற்கு மேலாக அந்நாடு ஆகக் குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள் (Least Developed Countries - LDC) என்ற வகை நாடுகளில் ஒன்று. எதியோப்பியா இனத்துவ முரண்பாடுகளோடு தீவிர வறுமையால் எழும் பிரச்சினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் தீர்வு செய்ய வேண்டிய நாடாகவும் உள்ளது.

3. அதிகாரப்பகிர்வு

எதியோப்பியா அதிகாரப்பகிர்வு மூலம் இனக்குழும முறுகல் நிலையையும் முரண்பாடுகளையும் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துவரும் நாட்டிற்கு உதாரணமாக விளங்குகிறது. சமஷ்டி முறை அந்நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் அபிவிருத்திக்கு உதவியுள்ளது.

4. வரலாறு

எதியோப்பியாவில் நவீன அரசு (Modern State) உருவாக்குவதற்கு முன்னர் இருந்த நிலைமையை விளக்குவதற்கு மென்கிஸ்டு அறபெயன் (Mengistu Arefaine) என்ற ஆய்வாளர் கூறியிருப்பதை ஜயம்பதி விக்கிரமரட்ண மேற்கோள் காட்டுகிறார்.

எதியோப்பியாவில் நவீன அரசு உருவாகும் முன் அங்கு உண்மையில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட அரசுகள் (De Facto-Autonomous States) இருந்தன. அச்சுயாட்சிப் பகுதிகள் தமது சொந்த மன்னர்களையும் ஆளுநர்களையும் கொண்டிருந்தன. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் நவீன அரசு உருவாக்கம் பெற்ற பொழுது எதியோப்பியாவின் பல்வேறு பிராந்தியங்களுக்கும் மத்திய அரசு தன் அதிகாரத்தை விஸ்தரித்தது.

நவீனத்திற்கு முந்திய சமூகங்களில் தேசிய இனங்கள் சுயாட்சியுடை யனவாய் சுயத்துவத்துடன் இயங்கின. எதியோப்பியாவின் மேலாதிக்க இனக்குழுமமான அம்ஹரா ஆட்சி அதிகாரத்தை உபயோகித்து சிறுபான்மை இனக்குழுமங்களின் உரிமைகளைப் பறித்தது. ஆட்சி அதிகாரத்தைச் சிறுபான்மை இனங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு அது மறுத்தது. 1995இல் எதியோப்பியா சமஷ்டி ஜனநாயகக் குடியரசு (The Federal Democratic Republic Of Ethiopia) எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது முக்கியமான வரலாற்றுத் திருப்பமாகும்.

5. எதியோப்பிய சமஷ்டியின் புதுமைக் கூறுகள்

எதியோப்பிய சமூகத்தை ஆழமான பிரிவுகளையுடைய சமூகம் (Deeply Divided Society) என்று கூறலாம். அந்நாட்டின் இனத்துவ முரண்பாடுகள் மொழி, பிரதேசம், மதம், இனத்துவம் (Ethnicity) என்பன சார்ந்த சிக்கல்களைக் கொண்டவை. அவை முழுமையாகக் குறுகிய காலத்தில் தீர்வு செய்யக் கூடியனவல்ல. பேரழிவைத் தரும் உள்நாட்டு யுத்தங்களைத் தவிர்த்து அந்நாட்டின் இன முரண்பாடுகளை நிர்வகித்து (Managing the Ethnic Conflict), முன்னேற்றமான எதிர்காலத்தை நோக்கி அச்சமூகத்தை பயணிக்க வைப்பதே குறுங்காலத் தேவை என்பதை அந்நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். 1995 இல் எதியோப்பியா சமஷ்டி ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் அரசியல் யாப்பு மூன்றாம் உலகின் பிற சமஷ்டிகளில் இல்லாத புதுமைக் கூறுகள் பலவற்றைக் கொண்டது. அவற்றுள் முக்கியமான கூறுகள் பின்வருவன.

அ) சமஷ்டி

எதியோப்பியாவின் அரசியல் யாப்பில் அந்நாடு ஒரு ஜனநாயக சமஷ்டிக் குடியரசு என்ற வரையறை பொறிக்கப்பட்டுள்ளது. சமஷ்டி எனும் அடையாளத்தை அரசியல் யாப்பில் பொறித்தமை அந்நாட்டின் தேசிய இனங்களுக்கும், சிறுபான்மைக் குழுக்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பாகும்.

ஆ) இனக்குழுமங்களின் அடிப்படையிலான அரசுகள்

எதியோப்பிய சமஷ்டி இனக்குழுமங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசுகளின் சமஷ்டி என அரசியல் யாப்பு வரையறை செய்துள்ளது. அச்சமஷ்டியின் உறுப்பு அரசுகளாக 9 அரசுகளை அரசியல் யாப்பு பெயர் குறித்து வரையறை செய்துள்ளது.

இ) அரசுகள் பற்றிய வரையறை

எதியோப்பியாவில் அரசியல் யாப்பின் உறுப்புரை 46 (2) அரசுகளினைக் கட்டமைக்கும் அடிப்படையைப் பின்வருமாறு வரையறை செய்துள்ளது.

அரசுகள், குடியிருப்பு முறைகள், மொழி, அடையாளம் மற்றும் மக்களின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

“மக்களின் குடியிருப்புப் பாங்கு, மொழி, அடையாளம் மற்றும் அவர்களின் சம்மதம் என்பனவற்றின் அடிப்படையில் அரசுகள் கட்டமைக்கப்படும்.”

ஈ) எதியோப்பியாவின் மக்கள் குழுமங்களை வரையறை செய்தல்

எதியோப்பிய அரசியல் யாப்பின் உறுப்புரை 39(4) அந்நாட்டின் 'Nation, Nationality, or People' மூன்று வெவ்வேறு சொற்பதங்களாக வரையறை செய்துள்ளது.

6. சுயநிர்ணய உரிமை

தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் என வரையறை செய்யப்படும் எல்லா மக்கள் சமூகங்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையன. இவ்வுரித்து நிபந்தனையற்ற உரித்துமாகும். (Unconditional Rights to Self-Determination). இந்நிபந்தனையற்ற சுயநிர்ணய உரிமை பின்வரும் கூறுகளை உள்ளடக்கியதாகும்.

அ. பிரிந்து தனிநாடாகச் செல்வதற்கான உரிமை (Right to Secession)

ஆ.தமது சொந்த மொழியில் பேசவும், எழுதவும், மொழியின் வளர்ச்சிக்காக உழைக்கவும் உள்ள உரிமை.

இ.தமது பண்பாட்டை வெளிப்படுத்தவும், வளர்க்கவும், அப் பண்பாட்டின் வரலாற்றைப் பாதுகாப்பதற்குமான உரிமை.

ஒரு தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனம், ஓர் மக்கள் (A People) என்பன முழுமையான சுயாட்சிக்கான (Self-Government) உரிமை உடையன. தமது வாழ்விடமான புவிப்பரப்பில் (Territory) அரசாங்க நிறுவனங்களை அமைக்கவும், அரசாங்கத்திலும், சமஷ்டி அரசாங்கத்திலும் சமத்துவமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்குமான உரிமை அவற்றுக்கு உண்டு.

7. அரசுகளின் அரசியல் யாப்புகள்

எதியோப்பியாவின் அரசியல் யாப்பை விட, ஒவ்வொரு அரசுக்கும் தனியான அரசியல் யாப்புகளும் உள்ளன. சமஷ்டியின் உறுப்பு அரசுகளின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாதபடியான அரசியல் சட்டப் பாதுகாப்பை அரசுகளின் அரசியல் யாப்புகள் வழங்குகின்றன.

அதிகாரப்பகிர்வு மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய உபாயங்களும், அரசியல் யாப்பு முறைகளும் எதியோப்பிய மாதிரியில் காணப் படுவதை எடுத்துக்காட்டினோம். அடுத்து இந்திய மாதிரியின் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டும் ஆறாவது கட்டுரை பற்றி நோக்குவோம்.

இந்தியச் சமஷ்டி முறை

இந்நூலின் ஆறாவது கட்டுரையான 'இந்தியச் சமஷ்டிமுறை' என்னும் கட்டுரை முன்னைய ஐந்து கட்டுரைகளையும் விடச் சிறியது. ஆயினும் அக்கட்டுரையில் கூறப்பட்ட செய்திகள் முக்கியத்துவம் உடையன. பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் விரிந்த நிலப்பரப்பு இந்தியா, பாகிஸ்தான் என இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினையின் பயனாக எழுந்த புதிய தேசம் இந்திய யூனியன் (Indian Union) என அழைக்கப்பட்டது. அரசுகளின் ஒன்றியம் என்ற இப்பெயர் இந்தியா ஒரு சமஷ்டி முறை நாடு என்பதைப் பிரகடனப்படுத்துவதாக இருந்தபோதும், மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட சமஷ்டிமுறை அரசியல் யாப்பினை உடைய நாடாகவே அது இருந்தது. சுதந்திரம் அடைந்த போது ஒடிசா (ஒரிசா என்பது முன்னைய பெயர்) மாநிலம் தவிர, இந்திய யூனியனின் வேறு எந்த மாநில அரசுகளின் மொழியும் ஒருமைத்தன்மையுடையதாக (Linguistic Homogeneity) இருக்கவில்லை என்பதை ஜயம்பதி விக்கிரமரட்ண சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் மொழிச் சமூகங்களின் (Linguistic Communities) நியாயமான கோரிக்கைகள் சுதந்திரத்திற்குப் பிந்திய தொடக்க காலத்தில் கவனிப்பைப் பெறாமல் போயின. இந்தியா சுதந்திரமடைந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரே மாநிலங்களின் எல்லைகளை மொழியடிப்படையில் மீள்வரையறை செய்தல் என்னும் முதன்மையான தேவை உணரப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘அரசுகளின் மறுசீரமைப்புச் சட்டம்' (State Reorganisation Act of 1956) மூலம் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நன்மைகள் பல எடுத்துக்காட்டுகளுடன் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

அ) தமிழ்நாடு

சுதந்திரத்தின் போது திருவனந்தபுரம், கொச்சின், மதராஸ், மைசூர் என்னும் நான்கு பகுதிகளுக்குள் தமிழ்மொழி பேசும் மக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். தமிழர்களுக்கு எனத் தனிமாநிலம் அப்போது இருக்கவில்லை. இதனால் தமிழகம் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் என்ற பிரிவினைக் கோரிக்கை தமிழகத்தில் தோன்றியது. பின்னர் இந்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டது. இதனால், 'தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கிய தனிமாநிலம் உருவாக்கப்பட்டது. பிரிவினைக் கோரிக்கை கைவிடப்பட்டது. குஜராத், பஞ்சாப், ஆந்திரம், கன்னடம், கேரளம் என்பனவும் சுதந்திரத்தின் பின் உருவாக்கப்பட்ட மொழிவழி மாநிலங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆ) வடமாநிலங்கள்

இந்தியாவின் வடமாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மூன்று மாநிலங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மக்கள் சமூகங்களை ஒன்றிணைப்பனவான சத்திஸ்கார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் ஆகிய புதிய மூன்று மாநில அரசுகள் 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.

இவற்றினை உருவாக்கும் போது பொது மொழியைப் பேசும் மக்கள் என்னும் மொழி அடையாளம் முக்கியம் பெறவில்லை. சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளே இம்மாநில அரசுகளின் உருவாக்கத்தில் முக்கியம் பெற்றன. சத்திஸ்கார் கனிம வளம் மிக்க பகுதி. மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக அது இருந்தமையால் பொருளாதார வளர்ச்சியில் அம்மாநிலம் பின்னடைந்து கஷ்டப்பட்டது. சத்திஸ்கார் தனிமாநிலம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொருளாதாரக் காரணியின் அடிப்படையிலானது. உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் என்பன பழங்குடிகள் வாழும் பகுதிகள். பண்பாடு, சாதி, பொருளாதார முறைகளின் தனித்துவ இயல்புகள் என்பன இவ்விரு மாநிலங்களின் உருவாக்கத்தின் பின்னணியில் அமைந்த காரணிகளாகும்.

இ) தெலுங்கானா

2013ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரித்துத் தெலுங்கானா என்ற தனி மாநிலத்தினை அமைக்கும் கோரிக்கைக்குச் சம்மதமளித்தது. பின்தங்கிய தெலுங்கானா மாநிலத்திற்கு நீர்ப்பங்கீடு, வரவு-செலவு ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளை வழங்குதல் போன்ற விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அம்மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் செய்யப்பட்ட முறையீடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுப் புதிய மாநில அரசு 2013இல் உருவாக்கப்பட்டது.

ஈ) யூனியன் பிரதேசங்கள்

சிறிய சமூகங்களான புதுச்சேரி, போர்த்துக்கீச காலனிகளாக இருந்த டட்ரா, நகர் ஹவேலி, டாமன் மற்றும் டியு என்பன யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டன. போர்த்துக்கீச காலனியாகவிருந்த கோவா (Goa) தனியான அரசு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

உ) இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம்

கோர்க்காலாந்து, கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் (Gorkhaland Territorial Administration) என்னும் சுயாட்சிக்கான அமைப்பு, கோர்க்கா நாடு (Gorkha National Liberation Front) என்னும் தனிநாட்டுக் கோரிக்கையை வைத்துப் போராடியதன் பயனாக 2011 ஆம் ஆண்டு கிடைத்த தீர்வு ஆகும். இதே போல் லடாக் பகுதியில் மலைப்பகுதி அபிவிருத்திக் கவுன்சில் (Autonomous Hill Development Council) என்னும் சுயாட்சி அமைப்பை இந்திய அரசு உருவாக்கியது. ஜம்மு காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் வாழும் கார்கில் பகுதிக்கு (Kargil District) தனியான கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பல்வேறு சிறுபான்மையினர்களின் உரிமைகளை மதித்துச் செயற்படுகிறது என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஊ) அசமத்துவ ஒழுங்கமைப்புகள்

ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம் என்பன பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அசமத்துவ ஒழுங்கமைப்புகள் (Asymmetrical Arrangements) என்னும் அரசியல் யாப்பு உபாயத்தைக் கையாண்டுள்ளதை இந்நூலின் முதலாவது கட்டுரையில் குறிப்பிட்டோம். இந்திய அரசியல் யாப்பிலும் அசமத்துவ அதிகாரப் பகிர்வு என்னும் ஒழுங்கமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளமை இக்கட்டுரையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசம், அசாம், மிசோராம், மணிப்பூர், நாகலாந்து ஆகியன புவியியல் ரீதியில் ஒதுக்குப்புறமான பிரதேசங்களாகும். இவை இந்தியா சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. இன்று இவை தனி மாநில அரசுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. சிக்கிம் 1974 இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டு 'இணைப்பு அரசு' (Associated State) என்னும் அந்தஸ்துடையதாக விளங்குகிறது.

முடிவுரை

'சமஷ்டி அரசியல் முறைமைகள்' என்னும் நூலை 2025 ஆம் ஆண்டு நாம் 'எழுநா வெளியீடாகப் பிரசுரித்தோம். அந்நூலில் கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம், முன்னாள் சோவியத் ஒன்றியம், யூகோசிலாவியா முதலிய 08 நாடுகளின் சமஷ்டி முறைமைகள் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டன. இப்போது நாம் வெளியிடும் 'அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும்: மூன்றாம் உலக அனுபவம்' என்னும் இத்தொகுப்பு அந்நூல் தொடக்கி வைத்த விவாதத்தை இன்னொரு தளத்திற்கு உயர்த்துவதாக அமைகிறது.

இத்தொகுப்பு நூல் இலங்கையை விடச் சிக்கலான பிரச்சினைகளையுடைய சமூகங்கள் தமது நாடுகளின் பன்மைத்துவப் பிரச்சினையை எவ்வெவ்வழிகளில் தீர்வு கண்டுள்ளன என்பதை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. அதிகாரப் பகிர்வு மூலம் இலகுவாகத் தீர்வு செய்திருக்கக்கூடிய இலங்கையின் இனப்பிரச்சினையை, இலங்கையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கங்கள், இழுத்தடிப்புகள், ஒப்பந்தங்களைக் கிழித்தெறிதல், அதிகாரப் பகிர்வு வாய்ப்புகளைத் திட்டமிட்டுப் புறந்தள்ளியமை போன்ற தந்திரங்கள் மூலம் மேலும் மேலும் சிக்கலுடையதாக ஆக்கியுள்ளமை வருத்தத்தைத் தருவதாக உள்ளது. எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட தமிழினமும், இலங்கையின் முற்போக்கு சக்திகளும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை நோக்கிய பயணத்தைத் தொடருவதைத் தவிர வேறு மாற்றுவழி இல்லை என்பதை உணர்ந்து முனைப்பான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன. இப்பின்னணியில் இவ்விடயம் குறித்த பயனுள்ள உரையாடலையும், விவாதத்தையும் முன்னெடுப்பதற்கு இந்நூல் உதவும் என்பது எமது நம்பிக்கை.

- க.சண்முகலிங்கம்