ஈழத்து நாட்டார் தெய்வங்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
ஈழத்து நாட்டார் தெய்வங்கள்
ஈழத்து நாட்டார் தெய்வங்கள்
தி. செல்வமனோகரன் தி. செல்வமனோகரன்

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையைக் கொண்டதாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இந்நூல் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்நூலானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்கான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்நூலில் வரலாறு, விவரம் போன்ற ஆய்வு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதற்கான தரவுகள் நூல்களின் வழியும், நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு, சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

புத்தக ஆசிரியர் தி. செல்வமனோகரன்
எழுநா நூல் வரிசை 51
பக்க எண்ணிக்கை 264
வெளியீட்டு ஆண்டு 2026
முன்னுரை

ஈழத்துத் தமிழ்ச் சூழலில் பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப் பட்டு வந்தபோதும், நாட்டாரியல் தொடர்பான ஆய்வுகள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. நாட்டாரியலின் கூறுகளான பாடல்கள், கதைகள், கூத்துகள் தேடித் தொகுக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகின்ற அளவுக்குக்கூட நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுகள் முதன்மை பெறவில்லை. தமிழின் நாட்டாரியல் ஆய்வுகளில் தமிழகத்து நா. வானமாமலைக்கும் முற்பட்டவரான பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கம், பேராசிரியர் என். சண்முகலிங்கன், கலாநிதி இரா.வை. கனகரத்தினம், பேராசிரியர் வ.மகேஸ்வரன், த.சண்முகசுந்தரம் போன்ற சிலரே இவ்வாய்வுப் புலத்தில் முக்கிய பங்காற்றியவர்கள்.

ஈழத்தில், கண்ணகியே அதிகம் ஆராயப்பட்ட கிராமியத் தெய்வமாகும். தவிர, ஐயனார், கொத்தி, பிள்ளையார், முருகன், அண்ணமார் போன்ற தெய்வங்களும் ஆராயப்பட்டன. அடுத்த கட்டத்தில் வைரவர், முனி, சப்த கன்னியர், நாச்சிமார், மாரி, காத்தான் போன்ற தெய்வங்களையும் சுட்டலாம்.

நாவலரின் காலனியக் கால வருகையும், 'செட்டிச்சிக்கு (கண்ணகிக்கு) என்ன கோயில்?' என்ற வினாவும் ஈழத்து, குறிப்பாக யாழ்ப்பாணத்து, கிராமியத் தெய்வ வழிபாட்டை அழித்துவிட்டதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது. நாவலர் கூறியதை அவ்வண்ணமே ஏற்ற சமூகமாக இம்மண் இருந்ததா? நாவலர் கட்டிய கோயில் எது? நாவலர் பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட வண்ணை வைத்தீஸ்வரன், நயினாதீவு, மாவிட்டபுரக் கோயில்கள் ஆகம மரபுவழி எவ்வாறு அமைக்கப்பட்டன எனப் பல வினாக்கள் மனதில் எழுகின்றன. சீர்திருத்த சமய உருவாக்கம் நிகழும் காலந்தோறும் இவ்வாறான கருத்துநிலைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. நாவலர் மரபுக்கு மாறான கருத்துடைய வள்ளலாரும் சிறுதெய்வ வழிபாட்டை எதிர்த்தார் என்பது இங்கு கவனத்துக்குரியது.

அந்தவகையில், இந்நூல் வைரவர், முனி, காத்தவராயன் என்னும் பிரபலமான தெய்வங்களோடு, அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத அல்லது அடையாளப்படுத்தப்படாத கொத்தி, சேவகர், பெரும்படை, கரும்புக்காரன், குறிப்பன், இளந்தாரி, பெத்தப்பா, மாதா அம்மன், பூசைக்கிழவி, செவ்வாச்சி முதலான தெய்வங்களை முன்னிறுத்திய பதினெட்டுக் கட்டுரைகளைக் கொண்டமைந்துள்ளது.

இந்த ஆய்வுகள் யாவும் நேரடியாக அவ்வத்தெய்வங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் சென்று ஆராயப்பட்டவை.நெடுந்தீவு, மட்டக்களப்பின் சில பகுதிகள், மலையகம் உள்ளிட்டவற்றுக்கு நாம் செல்ல முடியாவிட்டாலும், நண்பர்களின் உதவியோடு ஆய்வு செய்யப்பட்டது. ஆக, இந்நூல் முழுமையான கள ஆய்வு அடிப்படையிலானது.

எனக்கு நாட்டாரியலில் ஈடுபாடு வரக் காரணமானவர்களுள் முதன்மையானவர் எனது அம்மம்மா; ஏழாம் வகுப்புப் படித்த கந்தையா பூரணம். இளவயதில் தன் கணவரை இழந்து, தன் ஐந்து பிள்ளைகளைத் தனித்து வளர்த்து ஆளாக்கியவர். எனக்கு ஏழு வயது இருக்கும்போது எமது தந்தையும் உயிர் துறந்தார். அம்மம்மா தாயானார்; அம்மா தந்தையானார். அம்மம்மாவின் சேலை முந்தானைதான் எனது உலகம் என்றாயிற்று. அம்மம்மா சிறந்த வாசகர். நிறைய வாசிப்பார். இரவுகளில், மதியப் பொழுதுகளில் உணவு உண்டபின், அவர் சொல்லும் பேய்க் கதைகள், புராண இதிகாசக் கதைகள், அரச கதைகள் என எங்கள் உலகம் விரியும். கோயில்கள் தோறும் நடைப்பயணம். அந்தத் தெய்வத்தின் பெருமை, தலப் பெருமை என வரலாறும் பக்தியும் விரியும். அம்மம்மா சொன்ன வைரவர், கிங்கிலியர், முனி, மாடன் முதலான கதைகளே இன்று இந்நூலுக்கு அகரமாயிற்று. அதனால், இந்நூல் அம்மம்மாவுக்கும் அவர் தந்த பசுமை நிறைந்த நினைவுகளுக்கும் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

அடுத்து, வல்லியக்கன் ஆய்வில் என்னை ஈடுபடுத்திய யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரி நண்பரும், புவியியல் ஆசிரியருமான திரு. மார்க்கண்டு மோகனகிருஷ்ணன். அவருடன்தான் வல்லியக்கன் பற்றிய ஆய்வு தொடங்கியது. அது தந்த அனுபவமும் ஈர்ப்பும் இந்த நூலாக்கத்துக்கு அடிப்படை. அவருக்கு 'நன்றி' என்ற வெற்றுச் சொல் போதாது.

திரு கணேசானந்தன் சசீவன் எழுநாவில் தொடர்ந்து எழுதுமாறு மீளமீளத் தூண்டியதன் ஊடாகத்தான் இக்கட்டுரைகள் (2024 2025) வெளிவந்தன. இன்று நூலுருவாக்கமும் பெறுகின்றன. எழுநாவில் கட்டுரைகள் வந்து கொண்டிருந்த காலத்தில் முகநூல், ‘வட்ஸ்அப்' (WhatsApp) மற்றும் தொலைபேசியிலும் நேரிலும் அதனைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி. குறிப்பாக தமிழக மானிடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி, பேராசிரியர் சுகிர்தராஜா, பேராசிரியர் மௌனகுரு, பருத்தித்துறை பா.இரகுபரன், சாவகச்சேரி ச.மார்க்கண்டு போன்ற அறிஞர்களுக்குத் தனிப்பட்ட நன்றி.

இக்கட்டுரைகள் நூலுருப்பெறத் தலைப்பட்ட போது, மிக முக்கியமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியவர் பேராசிரியர் பொ.இரகுபதி. அவருடைய ஆழ்ந்தகன்ற நுண்ணிய கருத்துகள் இக்கட்டுரைகளைச் செப்பனிட உதவின. வல்லிபுரம், திரியாய், குறிப்பன், சரிமொந்தன், கரும்புக்காரன், முனி, சோதஹம், முக்குவர், அம்பன் முதலான பெயர்களுக்கான பத விளக்கம், பிறமொழிப் பயன்பாடு பற்றிய கருத்துக்கள் முக்கியமானவை.

கிங்கரர் என்பது சிவனின் ஏவலாளர்; அவர் வேறு, யம கிங்கரர் வேறு என்ற தெளிவையும், றொட்டியாலடி என்ற இடம் பற்றிய தனது மனப்பதிவுகளையும், தொழில்சார் சொல்வழக்காறுகளையும் எடுத்துரைத்தார். குறிப்பாக, கரும்புக்காரன் தெய்வத்துக்கு உரிய ஆலிலை வடிவம் தாந்திரீகத்தோடும், தாந்திரீகத் தண்டத்தோடும் தொடர்புபடுவதை எடுத்துக்காட்டியதும், சரிமொந்தன் என்பதை மொந்தன் - முந்தன் - மூத்தவன் எனப் பொருள்கொண்டு வேடுவ மரபோடு இணைத்துச் செய்த புதிய வாசிப்பும் இந்த ஆய்வை இன்னொரு எல்லைக்கு இட்டுச் செல்கின்றன. வதன என்ற சொல் சமஸ்கிருத - தமிழ் - சிங்கள மொழிகளின் வழி 'பட்டி'யைக் குறிப்பதை விளக்கிய விதம் அற்புதமானது. அவரது அறிவுக்கு நான் தலை வணங்குகிறேன். அவருக்கு எனது அன்பும் நன்றியும். அவரோடு நான் உரையாட வேண்டுமென விரும்பிய செல்வின் அவர்களுக்கும் தொடர்பேற்படுத்தித் தந்த Dr. க.சுகுமாரன் (U.K) அவர்களுக்கும் மிக்க நன்றி.

இப்பணியில் தோள் கொடுத்து நின்ற எனது நண்பர்கள் கோ. விஜிகரன், ந.மயூரரூபன், மாணவ நண்பர்கள் சு.தாரங்கன், சி.அபிஷனா, ஈ.நவிசா, ர.சுவிந்தன், இ.மகிழினி, ஸ்ரீ. தாட்சாயினி ஆகியோருக்கும், கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி நா.வாமன் அவர்களுக்கும் நன்றி. கட்டுரையைத் தட்டச்சுச் செய்த செல்வி த.பமில்ஜா, ஈ.நவிசா, சு.தாரங்கன் ஆகியோரின் அன்புக்கும் நன்றி.

எழுநா மூலமாக கட்டுரைகளைப் பெறுவதற்குப் பொறுப்பாக இருந்த பவித்ரா மாயழகு, ஜனனி பாலசுந்தரம், பியூலா பரமேஸ்வரன், தர்சனா பிரேம்குமார், நூலாக்கத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஸ்ரனிஸ்லஸ் கபில்தேவ் ஆகியோருக்கும் நன்றி.

எனது மெய்யியல் புலத்துக்கப்பால் நாட்டாரியலில் கரிசனை கொள்வதைப் பற்றி சில அன்பர்கள் நேரடியாகவும், வேறு சிலரிடமும் எதிர்நிலைத் தளத்தில் உரையாடினர். இப்பணி எனது தனிப்பட்ட ஆர்வம் என்பதோடு, இது தமிழ் அடையாளம் தேசியப்பணி என்பதே என் கருத்தாகும்.

இரகுபதி அவர்கள் சொன்னது போல, இந்நூல் முதற்பாகம் தான்; இந்த ஆய்வுப் புலத்தில் தொடர்ந்து பயணிப்போம்.

கலாநிதி தி.செல்வமனோகரன்

தலைவர்,

சைவசித்தாந்தத் துறை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

tselvan@univ.jfn.ac.lk