இலங்கைத் தீவின் அரசியல், சமூக, இன, மத வரலாற்றைத் கட்டமைத்த மிக முக்கியமான வரலாற்றுக் ‘காவியம்’ மகாவம்சம். கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் இலங்கையில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்யும் அந்நூல், வெறுமனே ஒரு வரலாற்றுத் தொகுப்பு மட்டுமல்ல; அது நவீன இலங்கையின் தீவிர சிங்களத் தேசியவாத அரசியலின் கருத்தியல் அடித்தளமாகவும் திகழ்கிறது.
வரலாற்று ஆய்வாளர் என்.சரவணன் அவர்களின் இந்நூல், மகாவம்சத்தின் உருவாக்கம், வளர்ச்சி, எழுச்சி, நீட்சி என அது இலங்கையின் தேச உருவாக்கத்தில் ஆற்றிய வகிபாகத்தையும் அதன் பின்னாலுள்ள அரசியல், பண்பாட்டுப் பரிமாணங்களையும் 700 பக்கங்களில் ஆழமாகவும் விமர்சனபூர்வமாகவும் ஆராய்கிறது.
மகாவம்சம் எவ்வாறு கட்டப்பட்டது?
அதன் புனைவுகளும் வரலாற்று உண்மைகளும் யாவை?
தமிழ், சிங்கள இன அடையாள உருவாக்கத்தில் அதன் தாக்கம் என்ன?
தென்னாசிய வரலாற்றிலும் இலங்கையின் இனப் பிரச்சினையிலும் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு விரிவான ஆய்வு நூல்.
இலங்கை வரலாற்றின் இருண்ட பக்கத்தை ஆக்கியதில் மகாவம்சத்தின் பங்கு மிகப் பெரியது. அது மகாவம்சம் எனும் இந்தக் “காவியத்தின்” ஊடாகத் தான் நிகழ்ந்தது.
மகாவம்சத்தை எழுதுவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பல பேரைக் கொண்ட புலமையாளர் பட்டியலைத் தேடிப் பார்த்தபோது ஒரு உண்மை வெளிப்பட்டது. சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை. சிங்கள கத்தோலிக்கர்கள் கூட அதில் இடம் பெறவில்லை. இலங்கையில் ஆட்சி செய்தவர்களைப் பற்றியும், அந்த ஆட்சிக் காலங்களில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத நிலைமைகள் பற்றியும் பதிவு செய்வதே அந்தக் குழுவின் பணி.
புனைவுகள் தொகுக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஊட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு மகாவம்சம் ஒரு ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதமாகவே திகழ்கிறது.
எந்தச் “சிங்கள பௌத்தத்தின்” பேரால் ஏனையோரை அந்நியர்கள் என அழைக்கிறார்களோ, அந்தச் சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையுடன் எந்தவிதப் பூர்விகத் தொடர்பும் இல்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்தே வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தில் அடிப்படையாக இருக்கும் பாளியும் சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்தே வந்தன. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்தே வந்தது. ஆக “ரட்ட, ஜாதிய, ஆகம” என்று முன்வைக்கப்படுகிற இனம், மொழி, மதம் ஆகிய அனைத்தும் இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்து வந்தவை தான்.
இதற்கான ஆதாரங்களை மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே முன்வைக்க முடியும். ஆயினும், இலங்கைத் தீவு சிங்களவர்களின் தீவு எனவும், சிங்கள மக்களே மண்ணின் மைந்தர் எனவும், ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பௌத்தத்தைக் காக்க புத்தர் அருளிச் சென்ற தீவே இலங்கைத் தீவு எனவும் கூறும் தம்மதீப சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கவும் இதே மகாவம்சம் தான் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றும் அது தொடர்கிறது.
மகாவம்சம் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான ஆண்டுகளின் வரலாற்றைப் பேசுகிறது. ஜோர்ஜ் டேர்னர் (George Turnour) அதன் மூலப் பிரதியை 1826 ஆம் ஆண்டு மீளக் கண்டெடுத்தார். இதற்கு இப்போது இரு நூற்றாண்டுகள் நிறைவடைகின்றன. அவரது முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு 1837 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதற்கு ஏறத்தாழ நூற்றித் தொண்ணூறு ஆண்டுகள் ஆகின்றன. ஒழுங்கான ஆங்கிலப் பிரதி எனக் கருதப்படும் வில்ஹெல்ம் கைகரின் (Wilhelm Geiger) மொழிபெயர்ப்பு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தனை காலமாகியும் தமிழில் அது எங்கே?
1956 ஆம் ஆண்டு மகாவம்சம் எழுதும் பொறுப்பை அரசே முறைப்படி ஏற்றுக்கொண்டது. கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒரு மகாவம்சத் தொகுப்புத் திணைக்களம் அமைக்கப்பட்டது. இன்று வரை அத்திணைக்களம் இப்பணியைத் தொடர்கிறது. ஏலவே கட்டமைக்கப்பட்டுவிட்ட சிங்கள பௌத்த சித்தாந்தத்தை மேலும் பலப்படுத்தவும், நிறுவனமயப்படுத்தவும் அரசு அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தியது.
இந்த நூல் மகாவம்சத்தின் கட்டுக்கதைகளையும், புனைவுகளையும், ஆதாரமற்ற ஐதீகங்களையும் கட்டுடைக்கிறது. மகாவம்சம் ஏற்படுத்திய மகாநாசங்களையும், அதன் வழித்தடங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
இதுவரை ஆறு தொகுதிகள் வெளிவந்திருந்த போதிலும், தமிழில் முதலாவது பாகம் மட்டுமே விளக்கவுரைகளாக ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்துமே மகாவம்சத்தின் மூல மொழியில் இருந்து பல வேறுபாடுகளைக் கொண்டவை.
வரலாறு எழுத்தில் வடிக்கப்படத் தொடங்கிய காலத்துக்குரியவற்றை வரலாற்றுக் காலம் என்கிறோம். எழுத்தில் வடிக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் (Pre-history) என வகுப்பது வழக்கம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலமும் உண்டு. அதனை முன்னோட்டக் காலம் (Proto-history period) என அழைப்பார்கள். மகாவம்சம் எழுதிவைக்கும் யுகத்திற்குள் வந்துவிட்டது. ஆனால் தமிழில் அது எங்கே?
நான் ஒரு தொல்லியலாளன் அல்லன். ஒரு வரலாற்று அறிஞனும் அல்லன். ஒரு எழுத்தாளனாகவும், ஒரு அரசறிவியல் ஆசானாகவும், சிங்களத் தேசியவாதத்தின் கொடூரப் பக்கத்தைப் பற்றிக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கவனித்தும், பின்தொடர்ந்தும், கண்காணித்தும் எழுதி வருகிற போது கிடைத்த பல்வேறு வாசிப்பனுபவங்களும் தேடல்களுமே என்னை வரலாற்று மூலங்களின் மீது ஊடுருவத் தள்ளின.
தமிழில் இது தொடர்பான பற்றாக்குறையை உணரத் தொடங்கியபோது தான் எனது பணியின் முக்கியத்துவம் புரிந்தது. மூலாதாரங்களுடனான எனது பதிவுகளையும் ஆய்வுகளையும் பல ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும், கல்வியியலாளர்களும் மெச்சினர். அவற்றைப் பயன்படுத்தவும் செய்தனர். என்னை இத்துறையில் ஊக்குவிக்கவும் செய்தனர்.
எனது கட்டுரைகளில் உள்ள தகவல்கள் அடுத்த கட்ட ஆய்வுகளுக்கான வாய்ப்புகளை மேலும் திறப்பதாகப் பலரும் கூறினர். மறுபுறம், யுத்தத்துக்குப் பிந்திய அரசியல் சூழல் பற்றி எனக்குள் ஏற்பட்ட விரக்தி எனது சமகால அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைக் குறைக்கச் செய்தது. அதுவரை அவற்றுக்கு ஒதுக்கி வந்த நேரத்தையும் உழைப்பையும் சக்தியையும் வளங்களையும், அரசியல் வரலாற்றைச் சமூக விஞ்ஞான நோக்கிலும் மானுடவியல் பார்வையிலும் எழுதுவதற்காக ஒதுக்கத் தொடங்கினேன்.
இதற்காகவே மகாவம்சம் தொடர்பான பல நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரித்திருக்கிறேன். ஆங்கிலம், சிங்களம் மட்டுமன்றி, ஜெர்மன், பிரெஞ்சு, சியாம், கம்போடிய, இந்தி, சமஸ்கிருதம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் மகாவம்சத்தின் பிரதிகளையும் கட்டுரைகளையும் சேகரித்திருக்கிறேன். இவற்றில் பல இன்னமும் சிங்களத்தில் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படாதவை என்பதை எனது ஆய்வுகளில் அறிந்துகொண்டேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உலக மரபுரிமையாக்கப்பட்ட மகாவம்சப் பிரதிகளைப் பார்வையிடச் சென்றிருந்தபோது, பூட்டப்பட்டிருந்த பெட்டிக்குள் இருந்ததைத் தூரத்தில் இருந்து மட்டுமே கண்டேன். ஆனால் லண்டன் சென்று பிரிட்டிஷ் நூலகத்தில் அதற்கு விசேட அனுமதி பெற்று என் கைகளாலேயே தொட்டுப் பார்த்து ஆராயும் வாய்ப்பைப் பெற்றேன். அதுபோல இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் அனுப்பி வைத்திருந்த சுவடிகள் பலவற்றை லண்டனில் ரோயல் ஆசியாடிக் சொசைட்டியில் சென்று பார்வையிட்டு படியெடுத்தேன்.
இலங்கையின் தேசிய உருவாக்கத்தை நிர்ணயித்த நூலாக மகாவம்சம் திகழ்கிறது. இதன் ஊடாகத் தான் தேசியவாதச் சிந்தனையின் ஊற்றும், வளர்ச்சியும், எழுச்சியும், நீட்சியும் நிகழ்ந்தன. சகல இன, மத அதிகாரத்துவத்துக்குமான கட்டமைப்பு இதன் மூலமே நிறுவனமயப்பட்டது. அதுவே இலங்கை மக்கள் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியையும் பேணி வந்தது. நீண்டகால யுத்தத்தையும் அது நிலைநிறுத்தியது. உடல் ரீதியான காயங்களை மட்டுமன்றி மனக் காயங்களையும் அது நிலைக்க வைத்தது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஊற்றுமூலத்தைச் சரியாக ஆராய்வதற்கான பணி தமிழில் முழுமையாக்கப்படவில்லை. மகாவம்சத்தின் பாத்திரத்தைப் பலரும் ஆங்காங்கே சிறிதே விமர்சித்துக் கடந்தார்களே தவிர, ஆழமாக அணுகவில்லை. இதற்கு ஒரு காரணமும் இருந்தது. மகாவம்சம் தமிழில் எங்கும் இல்லை என்பதே அது. மூன்றாம் தரப்பு ஆதாரங்களைக் கொண்டே இதுவரை விமர்சனங்களும் ஆய்வுகளும் நிகழ்ந்தன. முதலாவது, இரண்டாவது தொகுதிகளைத் தவிர வேறெந்தத் தொகுதியும் ஆங்கிலத்திலும் இல்லை.
அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே ஆறாம் தொகுதியின் உடனடி முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதனை நான் முதலில் மொழிபெயர்த்தேன். அதன் பின்னர் ஐந்தாம் தொகுதியையும் மொழிபெயர்த்து முடித்தேன். இப்போது மீதியுள்ள தொகுதிகளையும் அவ்வாறே முடிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறேன்.
இதைச் செய்ய வேண்டியது அரசு. இன்று அரசே அப்பணியை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழில் மட்டும் அதை வெளியிடாமல் இருப்பது பெரும் தவறு. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றைச் சிங்களத்திலும் பாளியிலும் எழுதி வந்தவர்கள் தமிழைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். இனியும் அவற்றை எவராவது தமிழில் கிடைக்கச் செய்வார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கத்தான் முடியுமா? தமிழ் பேசும் மக்களின் தலைவிதியைத் தீர்மானித்த ஒன்று இது என்பது மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் தலைவிதி இதனுள் இணைந்திருக்கிறது. இதைப் பற்றித் தமிழ் பேசும் மக்கள் அறியாமல் அரசியல் எதிர்காலத்தை வடிவமைக்கத்தான் முடியுமா? தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கூட மூலப் பிரதி இன்றித் திண்டாடும் நிலை தொடரத்தான் வேண்டுமா? எனவே தான் அப்பணியைச் செய்யத் துணிந்தேன்.
நிதி வளத்தையும் ஆற்றல் வளத்தையும் வைத்திருந்தும் பல்லாண்டுகளாக மேற்கொள்ளாமல் அரசு அலட்சியப்படுத்தி வந்த ஒன்றை, தனி ஒற்றை ஆளாக நிதியும் நேரமும் உழைப்பும் சக்தியும் ஆரோக்கியமும் விலை கொடுத்து நான் மேற்கொண்டிருக்கிறேன். மொழிபெயர்ப்புக்கு அப்பால், அதன் மீதான விமர்சனத்தையும் கட்டுரைகளாக எழுதி வந்திருக்கிறேன். அவையும் வாசகருக்கு இலகுவான வழிகாட்டியாக இருக்கும். குறிப்பாக, மகாவம்சத்தின் வரலாற்றையும் கட்டமைப்பையும் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும். எனவே தான் தற்போது இந்த ஆய்வுத்தொகுப்பு நூல் அவசியப்படுகிறது.
இதன் மூலம், “மகாவம்சத்தின் தோற்றமும் அமைப்பும்”, “மகாவம்சம் ஆறாம் தொகுதியும் தமிழர் போராட்டமும்”, “தம்மதீபக் கோட்பாடு”, “மகாவம்சத்தின் அரசியல்” என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 43 கட்டுரைகள் இத்துடன் வெளியாகின்றன.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மகாவம்சம் பற்றி தாய்வீடு (கனடா), காக்கை சிறகினிலே (தமிழ்நாடு), தினக்குரல், தினகரன், Jaffna Monitor, தமிழ்மிரர் போன்ற பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றில் எழுதியவை. சில ஆய்வரங்குகளுக்காக மேலும் செழுமையாக்கப்பட்டவை. தொகுப்பாகக் கொண்டு வரும் போது அதில் உள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நேரிட்டது; அதற்காகவே நாட்கள் கடந்தன.
சில விபரங்கள் திரும்பத் திரும்ப வருவதைப் பல கட்டுரைகளில் இருந்தும் நீக்கியிருக்கிறேன். ஆனாலும் சில கட்டுரைகளில் திரும்ப வருவதைத் தவிர்க்க முடியில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இதில் உள்ள தகவல்களை இறுதியாகச் சரி பார்த்து உறுதி செய்யவும், ஒழுங்குகளைச் சரி செய்யவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
இதன் மீதான வினையாற்றும் பணியை வாசகர்களிடமே விட்டுவிடுவோம்.
எனது ஆய்வுப் பணிகளுக்கு உதவிய சந்திரா விஜயன் அவர்களுக்கும், எனது எழுத்துக்களை நூலாக்குவதில் என்னைவிட அதிக அக்கறைகாட்டித் தூண்டி இயக்கியவர் அருமைத் தோழர் கோபிநாத். பல நாட்களாக நூலை நுணுக்கமாக சரிபார்க்கும் வேலையையும் மேற்கொண்ட அவருக்கும். இலங்கை தேசிய சுவடிக் கூடம், கொழும்பு நூதனசாலை நூலகம், தேசிய நூலகம், கொழும்பு பொது நூலகம், நூலக நிறுவனம் என்பனவற்றுக்கும், லண்டனிலும் கொழும்பிலும் உள்ள ரோயல் ஆசியாடிக் சொசைட்டி நிர்வாகத்தினருக்கும், லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் மகாவம்சத்தின் மூல ஓலைச்சுவடியை நேரடியாகத் தொட்டுப் பார்வையிட்டு ஆராய வாய்ப்பளித்த பிரிட்டிஷ் நூலகத்தின் தென்னாசியத் தொகுப்புகள் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆரணி இளங்குபேரன் (Dr Arani Ilankuberan) அவர்களுக்கும், எனது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கும், பேராசிரியர் மாலனி எந்தகம அவர்களுக்கும், பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களுக்கும், பேராசிரியர் மெதகம்பிட்டியே விஜிததம்ம தேரோ அவர்களுக்கும், இந்நூலை வெளியிட முன்வந்த எழுநா, ஆதிரை தோழர்களுக்கும், இந்த நூலுக்குக் குறுகிய கால அவகாசத்தில் அணிந்துரையை எழுதித்தந்த என் நட்புக்கு உரிய பேராசிரியர் சுகிர்தராஜா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட விலை பெரிது. இறுதியில் தமக்குரிய நேரத்தைப் பறிப்பதைப் பொறுத்துக்கொள்ளும் என் செல்லக் குழந்தைகள் ஜென்னி, சோபியா ஆகியோருக்கு என் முத்தங்கள்.
என்.சரவணன்
01.09.2026
மகாவம்சம் என்ற தீக்கொளுத்தி
ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் “இலங்கை வரலாறு அன்னியர்களின் வருகையில்தான் தொடங்குகிறது” என்று வெற்றிகரமாக எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், இலங்கையின் சரித்திரத்தைப் பதிவு செய்த மகாவம்சத்தின் கண்டுபிடிப்பு இந்த வெளியாட்களின் வெற்றிக் கதையைக் குழப்பியது, குலைத்தது. மகாவம்சம் உலகின் நீளமானதும் இடைவிடாத தொடர்ச்சியுடன் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் முக்கியமான ஒன்றாகும். அதாவது, ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம பெளத்த பிக்குவினால் தொடங்கிய இந்த இலங்கையின் தேசிய மத வரலாறு எழுதும் பழக்கம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் அரசாங்க அனுசரணையு டனும் ஆசிர்வாதத்துடனும் தொடர்ச்சியான வரலாற்றுக் குறிப்பாகத் திகழ்கிறது. இதுவரை ஆறு பாகங்கள் வெளிவந் திருக்கின்றன. சோழர்களின் வரலாற்றை ஐந்து பாகங்களுடன் கல்கி முடித்தார். சிங்கள தேரவாத பெளத்தர்களால் மகாவம்சம் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதுவரை தமிழில் வெளிவந்த வெவ்வேறு முதலாம் தொகுதிகள் கூட துறைசார் நிறுவனங்களின் திட்டமிட்ட முயற்சி அல்ல, முழுவதும் தனியார் ஆர்வத்தால் உருவான வேலை. சில ஐந்து மொழிபெயர்ப்பாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தாலும், அவை முழு நூலின் திருப்பித்தல் அல்ல. ஒரு சுருக்கமான, தளர்ச்சியான, தள்ளாட்டத்தனமான தற்காலிக மொழிபெயர்ப்பு மட்டுமே.
தமிழ் மக்களின் வரலாற்றை மூடிமறைத்து, திட்டமிட்டு அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, வெறும் கற்பனைக் கதைகளை மட்டுமே சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்க்கும் ஒரு ஆபத்தான, நச்சுத்தன்மையான கருவியாகவே மகாவம்சம் மறு உருப்பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அமைதியான ஆனந்தத்திற்கும் பக்தி உணர்விற்கும் உரமாக மகாவம்சம் தொகுக்கப்பட்டது என்று அதன் முதலாம் பாகத்தில் அதை எழுதிய மகாநாமா என்ற பெளத்த பிக்கு எழுதுகிறார். இந்த வரிகளில் தொடக்கத்தில் சிங்கள தேரவாத பெளத்தர்களுக்கு என்ற இந்த வரிகளைச் சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
இந்த ‘மகாவம்சம்: வரலாறு, பண்பாடு, அரசியல்’ என்ற தொகுப்பில் என்.சரவணன் செய்கிற பெரிய வேலை, மகாவம்சத்தின் ஆறு தொகுதிகளில் பொதுமக்களுக்கு, முக்கியமாகத் தமிழருக்கு மறைக்கப்பட்ட வரலாற்றையும், இந்தப் பக்கங்களில் காணப்படும் பொருள் மாற்றிய விளக்கங்களையும் திரித்தல்களையும் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவந்ததுதான். இவரின் தொகுப்பு பத்து வருடத் தளராத வேலை. அவர் ஆவணங்களையும் ஆதாரங்களையும் எளிமையான, வாசகர்களை இழுக்கும் மொழியில் விளக்கி, புறக்கணிக்கப்பட்ட கதைகளுக்கு இன்னுமொரு வாழ்வு கொடுக்கிறார். அவர் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுக்கொண்டு கொழும்பு லோட்டஸ் கோபுரத்தின் மேல் இருந்து வரலாறு எழுதுபவர் அல்ல. சமூக நினைவில் நீக்கப்பட்ட நிகழ்வுகளைப் பொதுமக்கள் முன் கொண்டுவந்து, வரலாற்றைச் சிந்திக்கத் தூண்டும் பொது அறிவாளராகச் செயல்படுகிறவர். அது இந்தத் தொகுப்பிலும் தெளிவாகத் தெரிகிறது.
சரவணன் ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் எழுதும் வரலாற்றாளர் மட்டுமல்ல, பொது அறிவாளர். தீவிர பௌத்த மதத் தேசியவாதத்திற்கு எதிராகப் பொதுவெளியில் மிகக் கடுமையான தனித்த குரல். பௌத்தப் பேரினவாதிகள் தங்களின் நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் பரப்புவதற்கும், சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும் மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகள் நிறைந்த வரலாற்றுப் பதிவின் பின்னணியைச் சரவணன் தொடர்ந்து அவருக்கே உரிய நிதானத்துடன் சொல்லப்படாததைச் சொல்லி வைத்திருக்கிறார். வெறும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்தத் தவறான வரலாற்றுப் பார்வையைத் தன் கட்டுரைகளாலும் விவாதங்களாலும் விமர்சிக்கும் அவர், மக்களிடையே ஒரு நடுநிலையான, பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை உருவாக்க எத்தனிக்கிறார். இதன் மூலம், வரலாற்றுத் திரிபுகளைத் தகர்த்து சமூக நீதிக்கான வழிகாட்டுதலை வழங்குவது இந்த வியாசங்களில் சரவணனின் முதன்மைப் பணியாக உள்ளது.
மகாவம்சம் ஒரு அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கு, முக்கியமாகத் தமிழர்களுக்கு எதிராக உருவாக்கிப் பாதுகாத்து வரும் நச்சுத்தன்மையான ஆவணம். அவற்றை பொதுமக்களின் பார்வையில், முக்கியமாகத் தமிழரின் கவனத்திற்குப் படாமல் தொடர்ந்து மறைத்து வந்ததைச் சரவணன் அமைதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரவணனின் விமர்சனத்தின்படி, ‘தம்மதீப’ எனும் கோட்பாடு, இலங்கையின் அரசு, சமூகக் கட்டமைப்பைத் தொடர்ச்சியாக மாற்றுருவாக்கம் செய்து வந்துள்ளது. தொடக்கத்தில் ஒரு பௌத்த நாடாகவும், அதனைத் தொடர்ந்து ஒரு சிங்கள நாடாகவும், பின்னர் ஒரு சிங்கள பௌத்த நாடாகவும் பரிணமிக்கச் செய்து, இறுதியாக ஒரு ‘சிங்கள தேரவாத பௌத்த’ அரசாக நிலைநிறுத்தியுள்ளது. தீவிர பௌத்த மதத் தேசியவாதிகள் இக்கோட்பாட்டிற்கு முழுமையான நிறுவனமயப்பட்ட, அரசியலமைப்பு ரீதியிலான வடிவத்தை வழங்கி, தங்களின் பேரினவாதச் சிந்தனைகளைப் பரப்புவதற்கான ஆயுதமாக இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சரவணனின் தெளிவு நன்றாகவே தெரிகிறது.
அவரது எழுத்தின் அடிப்படைச் சிறப்பு மூன்று விடயங்களில் காணப்படுகிறது. மூல ஆவணங்களின் முறையான, தீவிரமான ஆய்வு, ஆதாரங்களின் கட்டுப்படுத்தப்பட்ட, துல்லியமான பகுப்பாய்வு, ஆராய்ச்சி முடிவுகளைச் செம்மையான, ஒழுங்கமைந்த வடிவில் முன்வைக்கும் திறன் ஆகியவையே அவை. இதற்கு உன்னதமான உதாரணம், 1936 க்கு முன் எழுதப்பட்ட முதல் மூன்று தொகுதிகளுக்கும், அதற்குப் பின் வந்த 1956 பண்டாரநாயக்க முதல் 2010 ராஜபக்ச ஆட்சிக் காலத்தை விவரிக்கும் தொகுதிகளுக்கும் இடையிலான அரசியல், மத, எண்ணியல் வேறுபாடுகளை நுண்ணாய்வுப் புலனாய்வுடன் ஆராயும் பக்கங்களே.
கடைசி இரண்டு தொகுதிகள் பதிவு செய்யும் வரலாறு தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நாட்கள். தமிழர்களின் கோரிக்கைகள் ஒரு மனநலப் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டன. அங்கொடை நோயாளிகள் போல் ஈழத் தமிழர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் போராட்டம் மனித உரிமைப் பிரச்சினையாக அல்ல, பயங்கரவாதச் செயலாகவே மதிப்பிடப்பட்டது. முள்ளிவாய்க்கால் என்கிற சொல்லே அரசு வரலாற்று நூலில் இடம் பெறவில்லை. இது கடைசி கண்டிய அரசன் விக்ரமராஜ சிங்கனுக்குச் செய்த துரோகம் பற்றிய சரித்திர விவரிப்பில் துரோகி எஹெலெபொலவின் பெயரைத் தவிர்த்தது போல்.
மகாவம்சம் தமிழர் அனுபவித்த துன்பங்களையும் அநீதிகளையும் பதிவு செய்யவில்லை. அதற்கு மாறாக, பல இடங்களில் சாய்வான பதிவுகளும் தவறான விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றிய பகுதியில், அதைத் தமிழர்கள் தாமே செய்ததாக நம்பும் வகையில் உரை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விளக்கங்கள் வரலாற்றின் உண்மையை மறைத்தும், பாதிக்கப்பட்ட சமூகத்தின் நினைவையும் குரலையும் புறக்கணித்தும் செயல்படுகின்றன.
மகாவம்சத்தில் உடனுறையும் நீடித்த அரசியல் விளைவுகள் மகாநாமரின் படைப்பின் செயலல்ல. பின்னர் வந்த கருத்தியல் வடிவமைப்பாளர்களினால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் ஒரு இடைக்காலப் புத்தகக் கதையைத் தீவின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் குறிக்கும் அரசியல் கோட்பாடாகவும் இன, மத வரவுசெலவுப் பேரேடாகவும் மறுவடிவமைத்திருக்கிறார்கள்.
இதன் முதன்மை வடிவமைப்பாளர் அனாகரிக தர்மபாலர். அவர் அதன் புராணக் கதையை வரலாற்றுப் பூர்வமான உண்மை என்றே வாசித்தார், நம்பினார். சிங்களர்கள் ஆரிய மக்கள், தீவின் முதல் உரிமை பெற்ற குடியினர் என்றும், தமிழரும் பிற சிறுபான்மையினரும் பின்னர் வந்தவர்கள், தமக்குச் சொந்தமல்லாத ஒரு பாரம்பரியத்தைக் கெடுத்தவர்கள் என்றும் அவர் கருதினார். மகாவம்சம் தொன்மையை வழங்கியது. இந்த குறிப்பேட்டை வைத்து இவர் இருண்மையான இயக்கத்தை உருவாக்கினார். பௌத்த மடத்தின் அலமாரியில் தூசு படிந்திருந்த பக்திப் பாடலை அவர் அரசியல் திட்டமாக மாற்றினார். இந்தத் திருத்த வடிவமே இன்றும் தொடர்கிறது. இந்த தர்மபாலர் இன்றைய அமெரிக்க டிரம்ப் (Trump), இங்கிலாந்து ஃபாராஜ் (Farage), இந்தியாவின் மோடி போன்றோரின் அந்த நாளைய கசப்பான அரசியல் கலவை.
ஆறாவது தொகுதிக்கு சில எதிர்ப்புகள் இருந்தன. அது சிங்களவர் பக்கமிருந்து வந்தது. முள்ளிவாய்க்கால் கொண்டான் சரத் பொன்சேகா, ஐம்பதுக்கும் மேற்பட்ட உண்மைத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். இந்த வரலாற்றை மறுஎழுதும் முயற்சியின் பின்னால் உள்ள கருத்தியல், பௌத்த தேசியவாதத்தைப் பற்றி அவர் எதையும் கேள்வி எழுப்பவில்லை. தகவல் சார்ந்த தவறுகளையே அவர் குறிப்பிட்டார். முக்கியமாகத் தன்னை ஆலோசிக்கவில்லை என்பதுதான் அவர் சொன்ன குறை.
போட்டியிடும் கருத்துக்கள், நிலையற்ற தத்துவங்கள்
மகாவம்சமும் எல்லா சமயச் சார்பு நூல்களைப் போலவே ஆழமான தத்துவங்களையும் தரக்குறைவான போதனைகளையும் நிறைந்த பிரதி. இன, மத, மொழிக் கருத்துகளை அது கொண்டுள்ளது. பின்னாளில் அவை பிறரை அடக்கும் ஆயுதமாக உறுதியடைந்தன. இலக்கிய உலகில் AK-47 என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பக்கங்களில் போட்டியிடும், ஏன் முரண்படும் தத்துவங்களும், போதனை நெறி சார்ந்த மதிப்புகளையும் கதைகளையும் விளக்கங்களையும் காணலாம். ஒரே அத்தியாயத்தில் வரும் முரண்பாட்டிற்கு ஒரு உன்னத உதாரணம் இதோ:
எல்லாளனுடன் போர் முடிந்தபின், “தன்னுடைய முடிவின் காரணமாக எண்ணற்ற மக்கள் உயிரிழந்திருக்கையில், எனக்கு எவ்வாறு எந்த ஆறுதலும் இருக்க முடியும்?” என்று துட்டகைமுனு அவதிப்பட்டபோது, அவனைத் தேற்ற வந்த எட்டு அருகதர்கள் கூறியது இதுதான். “நம்பிக்கையற்றவர்களும் தீய நடத்தையில் வாழ்ந்தவர்களும் உயர்ந்த மதிப்பாக வழங்கப்படவில்லை. அவிசுவாசிகளும் தீய வாழ்க்கை வாழ்பவர்களும் மிருகங்களை விட மேலானவர்களாக மதிக்கப்படுவதில்லை. ஆனால் உன்னைப் பொறுத்தவரை, நீ பல வழிகளில் புத்தருக்கு மகிமையைக் கொண்டு வந்திருக்கிறாய்.”
அவர்கள் மேலும் விளக்கியது. நீ கொன்றது “ஒன்றரை மனிதர்களைத்தான்.” பௌத்த மதத்தின் ‘முப்பீடங்களையும்’ ‘ஐந்து சீலங்களையும்’ முழுமையாகப் பின்பற்றிய ஒருவன் முழு மனிதனாகவும், முப்பீடங்களை (புத்தர், தர்மம், சங்கம்) மட்டும் சரணடைந்த மற்றொருவன் அரை மனிதனாகவும் கருதப்பட்டனர். அருகதர்கள் மன்னனின் பாவச் சுமையை இறந்தவர்களின் உயிரியல் மனிதத்தன்மையின் அடிப்படையில் கணக்கிடாமல், அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையி லேயே கணக்கிட்டனர். அதன்படி, பௌத்தத்தைச் சாராதவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களாகக் கருதப்பட்டதால், அவர்களைக் கொன்றது பாவமாகாது என்று துறவிகள் கூறினர்.
உன்னைப் பொறுத்தவரை, “நீ புத்தரின் தத்துவத்திற்குப் பல்வேறு வழிகளில் பெருமையையும் புகழையும் சேர்த்திருக்கிறாய். பொதுமக்களுக்கு நன்மை செய்ய தீயவர்களைத் தர்மத்தை மீறாமல் ஒரு அரசன் அழித்துவிட்டால் அது கொலையாகாது. அந்த அழிவின் எதிர்கால நன்மைகளைப் பற்றியே அவன் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால், அவன் நான்கு உயரிய உண்மைகளில் ஒன்றான துன்பத்திலிருந்தும் விடுபடுவான். பௌத்த போதனைகளுக்குப் பெருமை சேர்க்கப்போகிறவன். ஆகையினால் உன் மனதிலிருக்கும் கவலைகளை அகற்று அரசனே.” இந்த வசனங்கள் ராஜபக்ச சகோதரர்களையும், போரை நடத்திய இராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவையும் தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் ஒரு நாள் நிறுத்தினால், இந்த அறம் பிறழ்ந்த வார்த்தைகள் காப்பாற்றுமா என்று தெரியவில்லை.
பௌத்தரல்லாதவர்கள் கொல்லப்படலாம் என்று நியாயப்படுத்தியே இதே 26ஆவது அத்தியாயத்தில் இந்தச் சம்பவமும் இடம்பெறுகிறது. துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்து இலங்கையை ஒற்றையாட்சிக்குக் கொண்டுவந்த போது படைவீரர்களுக்கு அவர்களுடைய தாராதரத்திற்கு ஏற்பப் பரிசுகள் வழங்கினான். தேரபுத்தபயன் என்ற வீரன் பரிசை வாங்க மறுத்து, “இது எதற்காக, இன்னுமொரு போர் இருக்கிறது” என்கிறான். “ஒரே ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறேன், இனி எது போர்?” என்கிறான் அரசன். அதற்கு அந்தப் படைவீரன் சொன்ன பதில். “என் மனதிலிருக்கும் ஆசைகளுடன் சமரிலிருக்கிறேன். அதில் வெற்றிபெறுவது கடினம்” என்றான். இந்த வரிகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் பௌத்தர் சொன்ன தினமும் நடக்கும் உள்ளார்ந்த ஆன்மீகச் சிக்கலையும், இருத்தலியல் வேட்கையைத் தூண்டும் தடுமாற்றங்களையும் பற்றி வாகை சூடிய மயக்கத்தில் வரலாறு எழுதுகிறவர்கள் சிரமப்படப்போவதில்லை.
இதையும் சேர்க்காமல் இந்த அணிந்துரையைத் தொடர முடியாது. எதிரிகளை மனிதத்தன்மையற்றவர்களாகப் பார்ப்பது பௌத்த குருமாரின் ஏகபோக உரிமையல்ல. சமகாலச் சமாந்தரங்கள். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir), பாலஸ்தீனர்கள் ‘வாழத் தகுதியற்றவர்கள், அவர்கள் வாழக்கூடாது, அவர்கள் மனிதர்களே இல்லை’ என்றார். அதேபோல், பதவியிலிருந்து நீக்கப்பட்ட இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான யோவ் காலாண்ட் (Yoav Gallant) பாலஸ்தீனர்களை ‘மனித விலங்குகள்’ என்று குறிப்பிட்டார்.
தொகுப்பின் நிலைப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும்
சரவணனின் கட்டுரைகளைப் படிக்கும்போது ஒன்று தெளிவாகிறது. மகாவம்சம் சாதாரண நூல் அல்ல, அது ஒரு பிரம்மாண்டமான நிறுவனப் பேராற்றல். இந்தப் பிரதியின் கட்டுமானத்திற்குப் பின்னால் இலங்கை அரசின் கலாச்சார அமைப்புகள், இராணுவத்திலிருந்து இன்று பாதுகாப்புத் துறையினர் வரை எனப் பல துறைகள் ஒன்றிணைந்து, நீண்ட காலமாக ஒரே நோக்குடன் ஒரு மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கட்டமைத்து வைத்துள்ளனர். ஆகவே இந்தப் பிரதி வானத்திலிருந்து உதித்ததல்ல. அது ஒரு மிகப்பெரிய நிறுவல் சக்தி.
இந்தத் தொகையான தொகுப்பில் சில செய்திகளும் சம்பவங்களும் திரும்பத் திரும்ப வரும். பத்து வருடங்களாக எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இது பெரிய இலக்கியப் பாவம் அல்ல. ஆகையினால் சரவணன் கந்தனுக்குக் காவடி எடுக்கத் தேவையில்லை. உலர்ந்த கல்வியியல் நடையில் எழுதப்பட்டிருந்தாலும் எதிர்பார்க்காத இடத்தில், நாகேஷ் தரத்திற்கு வராவிட்டாலும் நகைச்சுவையும் உண்டு. இதில் ஆறாம் தொகுதி ஆக்கக்குழுவிற்குச் செயலாளராகச் செயல்பட்ட பேராசிரியர் மாலனி எந்தகம அவர்களின் பேட்டியைப் படியுங்கள். துறைசார் வரலாற்றுப் பேராசிரியர்களும் அறிவார்ந்த மொக்கைத்தன பாஷையில் பேசுவார்கள் என்பதற்கு ஏகாந்தமான எடுத்துக்காட்டு.
சில புத்தகங்கள் தேசிய படைகளுடன் தங்கள் நாட்டைக் காக்க அணிவகுத்துச் சென்றுள்ளன. அதில் ஒன்று, அயர்லாந்தை ஒலிவர் குரோம்வெல் (Oliver Cromwell) தாக்கியபோது அவனின் படைவீரர்கள் கால்சட்டையின் கைப்பையில் கொண்டுசென்ற சிப்பாயின் வேதாகமம் (Soldier’s Bible). விவிலியத்தில் கடவுள் போரின் கடவுளாகத் தோன்றும் வசனங்களைக் கொண்ட கைநூல் இது. இந்த வரிசையில் மகாவம்சத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்தப் புத்தகங்களுக்கு நாம் தர வேண்டிய சரியான பதில், அவற்றைப் பக்தியுடன் ஆராதிக்கவேண்டியதில்லை. மாறாக, இந்த நூல் நிலைநிறுத்தும் மூல நிகழ்வுகள், அவை ஏற்படுத்திய பொதுவான கூட்டு நினைவுகள், அதற்குப் பின் வந்த காலங்களில் அதன் ‘மூலத் தொன்மம்’ எவ்வாறு தத்துவார்த்த, கருத்தியல், தேசியவாத நோக்கங்களுக்கு மாற்றியமைக்கப்பட் டதைப் போதிமர உபதேசம் என்று ஏற்றுக்கொள்வது அல்ல. மகாவம்சம் தரும் சரித்திரச் செய்திகளையும், மத, இன கணிப்புகள், அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் அதிகார வர்க்கத்தின் சுயநலம், அல்லது வஞ்சகமான மதவாத உள்நோக் கங்களைப் பின்காலனியாதிக்க விமர்சகர்கள் சொல்வது போல் சந்தேகக் கண்ணோட்டத்துடன் ஆராய்வதேயாகும்.
இதனால், சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தது போல் எல்லா மகாவம்சப் பிரதிகளையும் திரட்டித் தீ வைக்க வேண்டும் என்று சரவணன் சொல்லவில்லை. அதன் இலக்கியச் சிறப்பை அவர் தரக்குறைவாகப் பார்க்கவில்லை. இந்தியாவையும் இலங்கையையும் பிணைக்கும் ஆழமான நாகரிகத் தொடர்புகளை முழுப் புளுகு என்று தள்ளிவிடவில்லை. அதாவது, இந்த வரலாற்றுப் பதிவின் தூய்மைப்படுத்தப்பட்ட வடிவத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்பதாகும். ஏனெனில், கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒரு பாலமாக மட்டுமே அதைக் கொண்டாடுவதை விட்டு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விலக்குதல், ஆக்கிரமிப்பு, பெரும்பான்மைவாத அரசியலை நியாயப்படுத்துவதற்காக அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்.
சரவணனின் எழுத்தில் ஒரு ஏக்கம் தெரிகிறது. இத்தகைய வரலாற்றுத் திரித்தல்களுக்கு ஏன் இன்னும் தமிழர் தரப்பில் மறுமொழிகள் இல்லை? நம்மைப் புறக்கணிக்கும், நமக்கு எதிராகச் செயல்படும் இந்தப் படைப்புகளுக்கு இணையாக, உடனடியாகவும் அழுத்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் பதிலளிக்கக்கூடிய திராணி இல்லாதவர்களாக இருக்கிறோம். ஈழத் தமிழர்களிடையே புலமைத்தன்மை இல்லை என்பதல்ல. அதிகாரமிக்க மாபெரும் கட்டமைப்பின் தாக்கத்தை உடனடியாகச் சமன் செய்ய, அதற்கு நிகராகத் தமிழர்களிடம் வலுவான கூட்டு அமைப்பு இல்லை. முறையான வரலாற்று ஆதாரங்களோ, ஆவணக் காப்பகங்களோ, நிறுவன ரீதியான ஒருமித்த கூட்டுச் சக்தியும் பேராதரவும் இல்லை. சிங்கள தேசியவாதக் குப்பை பரப்புரையைத் துப்பரவு செய்யத் தனிநபர் எழுத்துகளால் அல்லது சிறு தொகுப்புகளால் முடியாது.
இறுதியாக இரண்டு எண்ணங்கள். ஒன்று, புனித நூல்கள் மத, இன, மொழி அடிப்படைவாதிகளின் இறுதித் தஞ்சமாகவும், தப்பிக்கச் செல்லும் கடைசி ஆதாரமாகவும் செயல்படுகின்றன. மற்றது, நாகரிகத்தின் எந்தவொரு பெருந்திரட்டும் அதே நேரத்தில் கொடுங்கோன்மையின் ஆவணமாகவும் இருக்கிறது. இவை இரண்டும் மகாவம்சத்திற்கும் பொருந்தும். தொகுப்பை வாசித்த பின் இதே எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் சரவணனுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
-சச்சிதானந்தன் சுகிர்தராஜா