இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவு. எனவேதான் அதனைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என அழைக்கிறோம். இனப்படுகொலை நடைபெறும் பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில் அரசற்ற தேசிய இனங்கள் எல்லாம் விடுதலை அடையலாம் என்றில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு, வெற்றி பெறுவதற்கான கடினமான பாதையாவது உண்டு. ஈழத்தமிழர் சார்ந்து காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவம் மிகவும் வலுவானது. ஈழத்தமிழர் சார்ந்த அகத்தேசிய நிலை, உள்நாட்டு நிலை, அண்டை நாட்டு நிலை, அயல் நாடுகள் மற்றும் உலக நாடுகள் சார்ந்த நிலை, புவியியல் – வரலாற்று நிலை என்பனவற்றால் அது வலுவாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை விருப்பு – வெறுப்பிற்கு அப்பால், துல்லியமாக அளவீடு செய்யும் எத்தனமாக ‘இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்’ எனும் இந்நூல் அமைகிறது.
பக்தனின் கண்ணில், மலர் பூசனைக்காகிறது; தேனீயின் கண்ணில், மலர் தேனுக்காகிறது; கவிஞனின் கண்ணில், மலர் கவிதைக்காகிறது; குரங்கின் கண்ணில், மலர் பிய்த்து வீசுவதற்காகிறது; நாயின் கண்ணில், மலர் பொருளற்றதாகிறது. இங்கு மலரும் உண்மை; மலரோடு தொடர்புற்ற மேற்படி நோக்குகளும் உண்மை. அதாவது பொருளும் உண்மை அந்தப் பொருள் சார்ந்த மேற்படி பல நோக்குகளும் உண்மை. அடிப்படையில் பொருளின்றி நோக்கு வேறுபாடுகள் இருக்க முடியாது. இருக்கும் பொருளும் இணையும் நோக்கும் சந்திக்கும் இடத்தில் செயல்வடிவம் பிறக்கிறது. இந்த வகையில் காணப்படும் இருப்புநிலை யதார்த்தத்தில் இருந்தே (Existing Given Reality) நோக்குநிலையும், செயற்பாடும், அவற்றின் சுழற்சியான விளைவுகளும் நிகழ்ந்தேறி வரலாறாகின்றன.
இச்சிறு நூல் ஈழத் தமிழர் தொடர்பாகக் காணப்படும் புவிசார் அரசியல் இருப்புநிலை யதார்த்தத்தை வேரிலிருந்து விழுது வரை இரத்தமும் தசையுமாகப் படம் பிடிக்க முற்படுகிறது. இங்கு வெளி உருவத்தைப் படம் (Photo) பிடிப்பதில் தொடங்கி, உள்ளுறுப்புகளை உப்படம் (Scanning) எடுத்தல் ஊடாக ឈប់ ឆាប់ (Genetic Map Reading or Linkage Map Reading) வரை ஈழத்தமிழர் தொடர்பான புவிசார் அரசியல் நோக்கப்படுகிறது.
अक्र យស់ ឈប់ (Geographical Location), புவிசார் அரசியல் (Geopolitics), புவிசார் அரசியல் வரலாறு (Geopolitical History), 4 យស់ គ្រប់ (Geopolitical Ideology), ល (International Politics), உலகளாவிய அரசியல் (Global Politics) என அனைத்தையும் ஊடறுத்து, ஈழத்தமிழர் தொடர்பாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலை இலங்கை இந்திய அரசியல் உறவுகள், சிங்கள பௌத்த அரசியல் முன்னெடுப்புகள், தமிழர் அரசியல் முன்னெடுப்புகள் என்பனவற்றுக்கூடாக இந்நூல் உருவரை தீட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்நூல் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் முற்றிலும் அறிவார்ந்த வகையில் விஞ்ஞானபூர்வமானது. சுமாராக ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழரின் அரசியல் முன்னெடுப்புகள் அதன் இறுதி அர்த்தத்தில் தொடர் தோல்விகளுக்கு ஊடாக அந்நியர்களின் காலடிகளில் வீழ்ந்து உருண்டு செல்கின்றன.
“சிங்கக் கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும்; தமது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றியமைத்துவிடும்”. ஆனால் ஈழத் தமிழர்கள் தமது தொடர் தோல்விகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளச் சிறிதும் தயாராகவில்லை எனத் தெரிகிறது. படிப்பினைகளை சொந்த அனுபவத்தில் இருந்து மட்டும்தான் பெறவேண்டும் என்று இல்லை.
சாணக்கியன் கூறுவது போல “உனது சொந்த அனுபவங்களில் இருந்துதான் படிப்பினைகளைப் பெறவேண்டும் என்றால் அதற்கு உனது ஆயுள் ஒன்றும் அவ்வளவு பெரிதானதல்ல; பிறரின் அனுபவங்களில் இருந்தும் படிப்பினைகளைப் பெறவேண்டும்”. அந்த வகையில் ஈழத் தமிழரின் தலைவிதியை யதார்த்தபூர்வமான புவிசார் அரசியல் அச்சில் நின்று பரந்துபட்ட உலகளாவிய அனுபவங்களுக்கு ஊடாக இரத்தமும் தசையுமான உயிரோட்டத்துடன் பார்க்குமாறு இந்நூல் வேண்டி நிற்கின்றது. இத்தகைய பார்வை ஒன்றே, ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கான ஒரேயொரு வழி வரைபடமாய் அமையவல்லது.
'ஆயிரத்தொரு எதிர்ப்புகள் எழுந்தாலும்' மேற்படி அறிவியல் முறைமை அல்லது அறிவியல் பாதை மட்டுமே ஒரேயொரு வழி என்ற முடிவை இறுதியில் அனைவரும் எட்டுவர் என்பது திண்ணம்.
“2 5 " (Know yourself/ Know thyself) என்று கூறினார் சாக்ரடீஸ் (Socrates). பிற்கால தத்துவயியல் வளர்ச்சியோடு இதனை இணைத்துப் பார்க்கையில், நீ என்பது, நீ சார்ந்த நிலம், நீர், காற்று, வானம் என அனைத்துச் சூழலோடும் இணைந்ததாகும். அதாவது நிலமின்றி நீ இல்லை; நீரின்றியும் நீயில்லை. எனவே நீ என்பது நீ சார்ந்த சூழல் அனைத்தோடும் இணைந்த ஒன்றுதான். இந்த வகையில் உன்னை நீ அறிவது என்பது நீ சார்ந்த புவியியல் சூழல், சமூக, பண்பாட்டு, வரலாற்றுச் சூழல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மொத்தத்தில் ஒரு மனிதன் என்பவன் வெறும் உருவமாக மட்டுமன்றி அவன் சார்ந்த சூழல், வாழ்நிலை, அறிவு, எண்ணம், உணவுமுறை, பண்பாடு ஆகிய அனைத்தினதும் கூட்டு வடிவம் ஆவான். இத்தகைய எண்ண ஓட்டங்களைத் தாங்கியவாறு ஈழத்தமிழ்த் தேசியம் தன்னறிவு பெறுவதற்கான நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகாலப் புவியியல் வரலாற்றுப் பின்னணியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையான அரசியல் வரலாறு ஐந்து பகுதிகளைக் கொண்ட நூலாக எழுதப்பட்டுள்ளது.
தேசமாகத் திரள்வதும் ஓர் அரசாகச் சிந்திக்க வேண்டியதும் தலையாய அம்சங்களாகும். அரசு என்பது ஓர் உயிருக்கு உரிய இயல்பைக் கொண்டது. உயிரி செயல்பூர்வமானது. அதற்கென சுயம், வளைவு, நெளிவு, சுளிவு, இயக்கம் என்பன இருக்கும். அங்கு கற்பனைக்கு இடமில்லை. ஆனால் இலட்சியவாதங்களில் கற்பனை இருக்கும். நடைமுறைக்குப் பொருந்தாத அதீதவாதங்கள், தூய்மைவாதங்கள் என்பன மேலெழுந்து கண்ணைக் கட்டிக்கொண்டு எதிரியின் சேவகனாய்ச் செயற்படும்.
பூமியில் தேசங்கள் இருந்தாலும், இது அரசுகளின் உலகம். அரசுக்கு ஊடாகவே அனைத்தும் செயற்படுகின்றன. ஒரு வகையில் அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவல்ல உள்நாட்டு, சர்வதேச நிதி நிறுவனங்கள் இருந்தாலும்கூட, அவை ஆயுதம் தாங்கிய அரசுப் படைகளின் துணைகொண்டுதான் செயற்படுகின்றன. ஆதலால் கண்மூடித்தனமான தூய இலட்சியக் கற்பனைகளுக்கு அப்பால் நடைமுறைக்குரிய ஆட்சிக்கலை நுணுக்கத்துடன் (Statecraft) சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே விடுதலை சாத்தியப்படும்.
அரசு ஓர் உயிரி என்ற நிலையில், வானத்தில் பறக்கும் பறவையேயாயினும் அதற்குத் தரைதான் அடித்தளம். ஆதலால் உயிரியல் யதார்த்தம் என்பது தரையை, தரை சார்ந்த கடலை, அவை சார்ந்த சூழலை மையமாகக் கொண்டது. இந்த வகையில் தேசமும் அதற்கு விசையான அரசும், தரை கடல் சார்ந்த பின்னணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற வகையில், அதற்குரிய யதார்த்தத்தில் வைத்து புவிசார் அரசியல் கண்ணோட்டத்துடனும் புவி அடங்கலான உலகளாவிய பரிமாணத்துடன் வைத்தும் ஈழத் தமிழரின் அரசியலையும், அவர்களைச் சூழ்ந்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையையும் இந்நூல் விவரிக்க முற்படுகிறது.
இந்த வகையில் எத்தகைய முற்கற்பிதங்களையும் தாண்டி இதனை முற்றிலும் அறிவார்ந்து, நல்மனம் கொண்டு கருத்தில் எடுக்குமாறு விடுதலை விரும்பிகளை இந்நூல் வேண்டி நிற்கின்றது.
மு.திருநாவுக்கரசு
இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் வானொலி நிகழ்வொன்றில் பிரித்தானியாவின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், “நாங்கள் பெயர் இல்லாத ஒரு குற்றத்தின் முன்னிலையில் " (We are in the presence of a crime without a name) எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அது இனப்படுகொலை -ஆங்கிலத்தில் 'Genocide' என்ற பெயரைப் பெற்றது. எனினும், சமகாலம் வரை இனப்படுகொலைக்கான "சரியான பொருளாக்கமற்ற நிலையில் இருக்கிறோம்” என்பதே எதார்த்தமானதாகும். இந்த எதார்த்தத்துக்குள்ளேயே ஈழத்தமிழர் அரசியலும் நகர்கின்றது. இதனாலேயே, சுதந்திர இலங்கையின் வரலாறு முழுவதும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வந்த இனப்படுகொலையை, முள்ளிவாய்க்கால் குருதிக்களத்திற்குள் மட்டும் சுருக்கிவிட்டனர். கடந்த 15 ஆண்டுக்கால இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையையும் அந்த ஒழுங்கினிலேயே விவாதித்து வருகின்றனர்.
ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் இனப்படுகொலை என்பது ‘துருப்புச் சீட்டாக’ அமைகின்றது. இதனைக் கையாண்டே பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலும் உருவாக்கப்பட்டது. எனினும், இனப்படுகொலைக்கான நியாயாதிக்கம் என்பது சர்வதேச அரசியல் நலனுக்குள் சிக்குப்பட்டதாகும். அத்தகைய சர்வதேச நலனுக்குள் விடுதலைக்காகப் போராடும் தேசிய இனம் தமது நலன்களையும் ஒன்றிணைக்கையிலேயே, இனப்படுகொலைக்கான நியாயாதிக்கமும் தேசிய விடுதலையும் சாத்தியமாகின்றது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர்கள், சர்வதேச நலனுக்குள் ஈழத்தமிழர் நலனை ஒருங்கிணைக்கத் தவறியுள்ளார்கள். இதற்கு, அடிப்படையில் இனப்படுகொலை பற்றிய சரியான புரிதல் இல்லாததே முதன்மைக் காரணமாகும். மேற்கின் அறிவியல் தள விளக்கங்களுக்கும், சட்டப் புரிதலுக்குள்ளேயுமே இனப்படுகொலை சார்ந்த புரிதல் சுருக்கப்பட்டிருந்தது. இனப்படுகொலை தெளிவான அரசியல் பரிமாணத்தைக் கொண்டது. சர்வதேச அரசியலின் நடைமுறைச் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்தியுள்ளன. ஓய்வுநிலையில் உள்ள சர்வதேச அரசியல் தலைவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பில் உரையாடுவது அரசியல் தார்ப்பரியத்தையே உணர்த்துகிறது.
ஈழத்தமிழர் அரசியலில் இனப்படுகொலை பற்றிய சிந்தனைக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்வதற்கான வாசிப்பையும் மு. திருநாவுக்கரசுவின் 'இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்' எனும் நூல் வழங்குகிறது. கூடுதலாக, கருத்தியலாக இனப்படுகொலைக்கான பொருளாக்கத்தைத் தர்க்கரீதியாக விளக்குகிறது.
இனப்படுகொலை பற்றிய விவாதங்கள் ஈழத்தமிழர் அரசியலில் பெருமளவுக்குச் சட்ட விளக்கங்களுடனேயே அணுகப்படுகின்றன. மாறாக, அதன் அரசியல் பெறுமதி ஒரு தரப்பால் நிராகரிக்கப்படுகின்றது. அரசியல் பெறுமதியை ஏற்றுக்கொண்டுள்ள தரப்பினரும் அகன்ற பார்வையில் இனப்படுகொலையை அணுகத் தவறியுள்ளார்கள். இந்த முரண்பாட்டுக்குள்ளே ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை சார்ந்த அரசியலில் எவ்வித முன்னேற்றங்களையும் அடையாளம் காண முடியவில்லை. அதேவேளை, தவறான கற்பிதங்களுடனேயே ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை உரையாடல் நகர்த்தப்படுகின்றது. சேதமான விதையினூடாக நல்லதொரு அறுவடையைப் பெற முடியாது. சரியான விதை இடுவது அவசியமாகும். ஈழத்தமிழர் அரசியலிலும் இனப்படுகொலை தொடர்பில் சரியான ஞானம் தேவைப்படுகின்றது. வெறுமனே முள்ளிவாய்க்காலுக்குள் இனப்படுகொலையைச் சுருக்கிவிடுவதனால், அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகளை நீதிப் போராட்டத்தில் ஒன்றிணைக்க முடியவில்லை. அதனை இந்நூல் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது.
“இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக, அது ஒரு நீண்ட கால அளவில் படிப்படியாகச் செயல்படும் பல்வேறுவிதமான ஒடுக்குமுறைகளின் விளைவாகவே நடக்கிறது.” என்ற பதிவுடனேயே அத்தியாயத்தை ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதனைக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதனூடாக விளக்குகின்றார்.
வெறுமனே இனப்படுகொலைக்கான கோட்பாட்டுப் பார்வையை வழங்குவதுடன், இந்நூல் தன் பணியை முடிவுறுத்தவில்லை. ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை வடிவங்களையும், ஈழத்தமிழர் அரசியல் பயணிக்க வேண்டிய தடங்களையும் அடையாளப்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் கற்பனாவாத எண்ணங்களுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பனாவாதங்களும், தூய்மை வாதங்களும், கடும்போக்குவாதங்களும் கவர்ச்சிகரமானவையாக மாத்திரமே அமையலாம். நடைமுறைக்குப் பொருத்தமானவையாக அமைவதில்லை. இலக்கியத்தில் அரிச்சந்திரனை இரசிக்கலாம். நடைமுறையில் அரிச்சந்திரனாக வாழ்வது கடினமானதாகும். ஈழத்தமிழர்களும் நடைமுறைக்குப் பொருத்தமான அணுகுமுறைகளைக் கையாள்வதனூடாகவே எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும். எனினும், ஈழத்தமிழர் அரசியல் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளத் தயாரில்லாத நிலைமைகளையே வெளிப்படுத்தி வருகின்றது.
“வேட்டையாடும் சிங்கக்கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும் போது தனது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றி அமைத்திடும்" என்ற விலங்கியல் உண்மையைப் பற்றி நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர்கள் திறம்பட இயங்கும் அணுகுமுறையைக் கண்டறியாமல், பழைய மாயைகளில் மூழ்கியிருப்பது அபத்தமானது.
இனப்படுகொலை சாதாரணமாக இலங்கைத்தீவின் ஆள்புல எல்லைக்குள் மட்டுப்படுவதில்லை. இனப்படுகொலை பரந்த அளவில், அதன் புவிசார் அரசியல் அமைவிடத்தைச் சார்ந்தே எழுகின்றது. இஸ்ரேல் சமூகம் வரலாற்றுரீதியாகத் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலையைச் சரியாக வெளிப்படுத்தி நீதியைப் பெற்றது; இதற்கான அடிப்படைக் காரணி அதன் புவிசார் அரசியல் அமைவிடத்திலேயே அடங்கியுள்ளது. இன்றைய 'இஸ்ரேல் அரசு' இறைவனால் வாக்களிக்கப்பட்ட நிலம் என்ற மதரீதியான ஐதீகம் காணப்படுகின்றது. அதேவேளை, அரபுக்களால் சூழப்பட்ட மேற்காசிய நிலப்பரப்பில் இஸ்ரேல் நிலப்பரப்பு இஸ்லாமிய மத நம்பிக்கைகளுடனும் தொடர்புறுகின்றது. இந்தப் பின்னணியிலேயே யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஆசிய, ஐரோப்பியக் கண்டங்களில் சுமார் 2000 வருட வரலாற்றைப் பகிர்ந்துள்ளது.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மையத்திலும், தென்னாசியாவில் விரைவான வளர்ச்சியை வெளிப்படுத்தும் இந்தியாவின் அயலிலும் அமைந்திருப்பது, புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைப் பகிர்கின்றது. இந்து சமுத்திரம் மற்றும் இந்திய நிலப்பரப்பு மீது நலன்களைக் கொண்ட அரசுகள் இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்திக்கொள்வது இயல்பாகின்றது. இதில் தென்னிலங்கை அரசு, அரசு தரப்பாக, தமது இராஜதந்திர அரசியல் நடவடிக்கை களால் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றது. எனினும், விடுதலைக்காகப் போராடும் அரசற்ற தரப்பான ஈழத்தமிழர்களே பலிக்கடா ஆக்கப்பட்டு வந்துள்ளனர். இது காலத்துக்குக் காலம் ஈழத்தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குக் காரணமாகியுள்ளது.
1980களின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமரால் ஆதரிக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்ட விடுதலை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, அதே எண்பதுகளின் இறுதியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி எடுக்கின்றார். இது தெளிவாக, பிராந்திய நலனுக்குள் ஈழத்தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டதையே உறுதி செய்கின்றது. அவ்வாறே, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த ஐ.நா. ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திற்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்தார். எனினும், குறுகிய கால இடைவெளியில் இலங்கை அரசு மேற்கின் நலனுக்கு இசையாத போது, 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றத்தைக் கையிலெடுத்தார்கள். ஈழத்தமிழர்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இலங்கையின் அமைவிடமும் தமிழர்களின் இருப்பும் புவிசார் அரசியலில் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் குறித்த புவிசார் அரசியலுக்குள்ளேயே புதைந்துள்ளது. இந்நூல் விவரிப்பது போல், இலங்கைக்கு பாக்குநீரிணை ஒருபுறம் வரமாகவும், மறுபுறம் சாபமாகவும் இரட்டைப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதானது இந்திய அரசியலையும், ஈழத்தமிழர் தலைவிதியையும் நிர்ணயிக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான அடிப்படையாக உள்ளது. இனப்படுகொலை சார்ந்த அரசியல் தீர்வும் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள் ஆழமாகப் பிணைந்துள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையாகப் பொருளாதாரமும், அதற்கு மையமாக ஊழலுமே விவாதிக்கப்பட்டன. ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரும் அந்நீரோட்டத்துக்குள் கரைந்துபோயுள்ள சூழ்நிலையையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது, ஈழத்தமிழர்களிடம் அரசியலை ஆழமாகக் கொண்டுசேர்க்காமையின் விளைவாகவே அமைகின்றது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைப் பொருளாதாரப் பிரச்சினையாகத் திசைமாற்றும் அரசியல் 2024இல் ஆரம்பிக்கப்பட்டதல்ல. மாறாக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியிருந்த மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதனூடாக இனப்பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும் என்ற பிரசாரத்தையே முன்வைத்தார்கள்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்த 'வியத்கம' அமைப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சந்தித்தது. அச்சந்திப்பில், ‘1956ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தோரின் பொருளாதாரச் சிக்கலையே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையாக' அவர்கள் சித்தரித்தனர். ஆனால் உண்மையில், தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களின் இறையாண்மையையே கேள்விக்குட்படுத்தியது. தமிழர்கள் மீதான அரசின் இந்த ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ‘வியத்கம அமைப்பிடம் இருக்கவில்லை.
இந்நூல், பொருளாதாரம் சார்ந்த பிரசாரத்திற்குள் திட்டமிட்ட வகையில் காணப்படும் பொருளாதார இனப்படுகொலையை அடையாளப்படுத்துகின்றது. ஆசிரியர் குறிப்பிடுவது போல், "மனிதன் வெறுமனே பொருளாதாரப் பிராணி அல்லன். பொருளாதாரத்துடன் கூடவே மொழி, பண்பாடு, கலை, தனித்துவம், வாழ்க்கைமுறை ஆகிய அனைத்து அம்சங்களினாலும் கூட்டாகப் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு தெளிவான சமூக வாழ்வைக் கொண்டவன்” என்பதே யதார்த்தமானதாகும். இப்பின்னணியில், பொருளாதாரத்தை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களின் ஏனைய அம்சங்களை அழிக்க நினைப்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பகுதியாகவே அமைகின்றது. நடைமுறையில், தென்னிலங்கையின் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஈழத்தமிழர்கள் மீது திட்டமிட்ட பொருளாதார இனப்படுகொலையையே அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
ஆசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் தனது முந்தைய நூலான 'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படைகள்' என்ற நூலில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அடித்தளத்தை நிறுவுகையில் இந்தியாவின் உள்ளடக்கத்தைப் பற்றி ஆழமாக விவரித்துள்ளார். 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்ற இந்நூலிலும், மகாவம்ச மனப்பாங்கு எத்தகைய வளர்ச்சியைப் பெற்று இனப்படுகொலை வரைக்கும் இழுத்துச் சென்றுள்ளது என்பதற்கான ஆழமான பார்வை வழங்கப்படுகின்றது.
மகாவம்ச மனப்பாங்கு என்பதைப் பொதுவில் வரையறுப்பதாயின், அது இந்திய எதிர்ப்புவாதமாகும். இந்தியாவின் மாற்றங்கள் இலங்கையில் தாக்கம் செலுத்தியுள்ளது. பௌத்தமும் இந்தியாவிலிருந்து பேரரசு ஆக்கிரமிப்பாகவே இலங்கைக்கு வந்தது. பின்னர், இந்தியாவில் பௌத்தத்திற்கு ஏற்பட்ட சரிவை இலங்கையில் தடுக்க, இந்திய எதிர்ப்புவாதத்தில் புனையப்பட்ட இலக்கியமே மகாவம்சம் ஆகிறது. இது அரசியல் ரீதியாகச் சிங்கள பௌத்தர்களின் மனப்பாங்கையும் அரசியல் போக்கையும் வடிவமைக்கும் ஒரு கருத்தியலாக, நடைமுறை அரசியலில் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கலாம்.
மகாவம்ச மனப்பாங்கு இனப்படுகொலைக்கு எத்தகைய கருத்தியல் தளத்தை வழங்குகின்றது என்பதற்கு ஆதாரமாக, மகாவம்சம் அத்தியாயம் 25இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை நூலாசிரியர் தொகுத்துள்ளார். “இந்தச் செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது என்று துறவிகள் மன்னனுக்குக் கூறுவதுடன், அவ்வாறு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோர் (தமிழர்) நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், மிருகங்களை விடவும் உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்” என்றவாறு பதிவு செய்யப்படுகின்றது. துட்டகாமினி-எல்லாளன் போரின் இழப்பைக் குறித்து துட்டகாமினி வருந்துகையில், பௌத்த துறவிகள் மன்னனுக்கு எடுத்துரைப்பதாக இப்பகுதி மகாவம்சத்தில் இணைக்கப்படுகின்றது. இக்கருத்தியலே 2024 வரை இலங்கை அரசியலில் நிலைத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் காலனித்துவ நாடுகளின் பொறுப்பையும், அக்காலம் தொட்டே ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு உள்ளாகி வருவதையும் இந்நூல் விவரிக்கிறது. இலங்கையைத் தனித்தீவாகவும், ஒற்றையாட்சி அலகாகவும் நிர்ணயித்ததில் பிரித்தானியர்களுக்குப் பாரிய பொறுப்புக் காணப்படுகின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் முதலில் இலங்கையைக் காலனித்துவத்திற்கு உட்படுத்திய போதிலும், இலங்கையை முழுமையாகக் கைப்பற்றியதிலும், இலங்கைக்கான நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தியதிலும் பிரித்தானியர்களுக்குப் பாரிய பொறுப்புக் காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களிடம் தனிப்பட்ட கோரிக்கைகள் இல்லாத போதிலும், கண்டி இராச்சியத்திடம் தமது தனித்துவத்தைப் பேணும் வகையில் தமது பிரதேசத்தைத் தனித்துவ அலகாகப் பேண வேண்டும் என்ற கோரிக்கை காணப்பட்டது. பின்னாளில் இலங்கையில் முதன்முறையாக சமஷ்டி தொடர்பான அபிலாசைகளும் கண்டியிலிருந்தே முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், பிரித்தானியர் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1833ஆம் ஆண்டு கோல்புறூக்-கமரன் சீர்திருத்தமே இலங்கையை ஒற்றையாட்சிக்குள் கட்டமைத்த முதலாவது ஏற்பாடாகவும் அமைகின்றது.
ஒற்றையாட்சி முறைமை ஈழத்தமிழர்களின் தனித்தன்மையை நிராகரிக்கும் அமைப்புச் சார்ந்த கூறாக அமைகின்றது. இன்றுவரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாமைக்கு, ஒற்றையாட்சி நிர்வாகக் கட்டமைப்பே பிரதான காரணமாகும். இருப்பினும், இந்த ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொண்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத்தமிழர்களை முடக்கியதன் மூலம், நடந்த இனப்படுகொலைக்குக் காலனித்துவ காலத் தமிழ் அரசியல் தலைவர்களும் பங்களித்துள்ளனர் என்பதும் நிதர்சனமாகும். குமாரசுவாமி முதல் ஜி.ஜி. பொன்னம்பலம் வரை இந்த ஒற்றையாட்சி அமைப்பைப் பாதுகாத்து வந்ததை இந்நூல் சரியான சான்றுகளுடன் விளக்குகிறது.
நூலாசிரியர் குறிப்பிடுவது போன்று, “இராமநாதன் வம்சம் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றியவர்கள் என்று ஒரு பகுதியினர் குறிப்பிடுகின்றனர். ஆயினும், பசுவில் பால் கறக்க மாட்டுக்குப் புல் போடுவது போன்றதே அது” என்பதை வரலாறு காட்டியுள்ளது. பிரித்தானியரால் அவர்களது கடல்சார் ஆதிக்க நலன்களின் பொருட்டுக் கட்டமைக்கப்பட்ட ஒற்றையாட்சி அலகு, நவீன வரலாற்றில் இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு பகுதியாகின்றது. பிரித்தானியரின் நலனைப் பாதுகாக்கத் தமிழ்த் தலைவர்களுக்குப் புல் போடப்பட்டு வந்துள்ளது.
காலனித்துவ மரபிலிருந்தும் மகாவம்சக் கருத்தியல் மனநிலையிலிருந்துமே இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு தோறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறுகின்றார்கள். இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதன் படி, “அரசியல் யாப்பு என்பது எழுதப்பட்ட வரிகளுக்குப் பின்னால் காணப்படும் அரசுகளின் நலன், வரலாற்றுப் பாரம்பரியம், பழக்கவழக்கம், நீடித்து நிலைத்துவரும் அரசியல் கலாசாரம் என்பவற்றின் கூட்டுத் திரட்சியாய் வடிவமைக்கப்படுகின்றது” என்பதே நிதர்சனமாகும். இந்தப் பின்னணியிலேயே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கையின் அரசியல் அமைப்புடன் பிணைந்ததாக உள்ளது. வெறுமனே நபர்களை மாற்றுவதனூடாக இலங்கையின் இனப்படுகொலைக் கலாசாரத்தை மாற்றிவிட முடியாது. இலங்கையின் இனப்படுகொலைக் கலாசாரத்தை மாற்றாமல் அமைதியான இலங்கையை உருவாக்க முடியாது.
தனிநபர் மாற்றங்களால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் எனும் சிந்தனை பொதுவாக இலங்கை மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழித்துவிட்டால் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற பிம்பம் தென்னிலங்கை மக்களிடம் உருவாக்கப்பட்டது. அவ்வாறானதொரு பிரசாரமே தென்னிலங்கையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நிலையான அரசாங்கத்தையும் உருவாக்க முடியவில்லை. மகிந்த ராஜபக்ச, மைத்திரி-ரணில், கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க என்ற வரிசையில் தற்போது அநுரகுமார திசாநாயக்கவைத் தெரிவு செய்துள்ளனர். எனினும், கடந்த 15 ஆண்டுகளின் அனுபவங்களில், தனிநபர் மாற்றம் இலங்கையின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதல்ல என்ற ஞானத்தைத் தென்னிலங்கை பெறத் தவறியுள்ளது.
தென்னிலங்கையின் மாயையான எண்ணங்களுக்குள்ளேயே தமிழ் மக்களும் பயணித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தல்களில், ராஜபக்ச எதிர்ப்பு என்ற ஒற்றை மனநிலையில், இனப்படுகொலை இராணுவத் தளபதி, இனப்படுகொலைப் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இனப்படுகொலை இராணுவ முகாந்திரம் எனத் தொடர்ச்சியாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தமிழ்த் தரப்பு அங்கீகாரத்தை வழங்கி வந்துள்ளது. தமிழ் மக்களுக்கான அரசியல் பிரதிநிதிகளும் மக்களை அவ்வாறே வழிநடத்தி வந்துள்ளார்கள். தமிழ் மக்களும்கூட இந்த இனப்படுகொலையை ஒரு தனிநபரை மையப்படுத்திய ஒன்றாக மட்டுமே சுருக்கிப் புரிந்துகொள்வதைக் காண முடிகிறது.
ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலையானது இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பினால் கட்டமைக்கப்பட்டதாகும். அமைப்பு மாற்றத்தைச் செய்யாது, தனிநபர் மாற்றங்களால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்படப் போவதில்லை. இலங்கையில் நிலையான அமைதியும் உருவாக்கப்படப் போவதில்லை.
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை சர்வதேச அரசியல் பரப்பில் பல கோணங்களில் நகர்த்தப்படுகிறது. ஒன்று, இனப்படு கொலைக்கு உள்ளாகிக்கொண்டுள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில், இனப்படுகொலை என்பது வெறுமனே முள்ளிவாய்க்காலுக்குள் சுருக்கப்பட்டுள்ளது. இரண்டு, பிராந்திய அரசாகிய இந்தியா, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை உள்ளூர் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் என இரு தளங்களில் தமது கட்சி நலன் மற்றும் தேசிய நலனுக்குள்ளேயே சுருக்கி உள்ளது. குறிப்பாக, 1983இல் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கலவரத்தை ஒரு 'இனப்படுகொலை' என்று அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அண்மையிலும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளமையைத் தமிழ்நாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், சர்வதேசத் தளங்களில் இந்தியாவின் உரையாடல் வேறுபட்டதாகவே அமைகின்றது. இனப்படுகொலை குறித்த கருத்துகள் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. உள்நாட்டு அரசியலில் வாக்கு வங்கியை மையப்படுத்தியும், சர்வதேச அரசியலில் இலங்கை அரசுடனான உறவை மையப்படுத்தியதாகவுமே பிராந்திய அரசியலில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை அரசியல் மட்டுப்படுகின்றது.
மூன்று, சர்வதேசக் களத்திலும் இனப்படுகொலை என்பது தெளிவான சுயஅரசியல் நலன் சார்ந்த உரையாடலாகவே மட்டுப்படுகின்றது. குறிப்பாக, சர்வதேச அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தமது ஓய்வுநிலைக் காலத்திலேயே ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை சார்ந்து குரல் கொடுப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது, சர்வதேச அரசியலில் இலங்கை அரசுடன் உலக நாடுகள் கொண்டுள்ள ஒருசார்பு உறவின் வெளிப்பாடாகவே அமைகிறது.
இத்தகைய மாறுபட்ட கோணங்களுக்குள் ஒரு தீர்வு சாத்தியமற்றதாகும். இந்தக் கோணங்களை ஒருங்கிணைப்பதற்கான அறிவியல் தளத்தை இந்நூல் வழங்குகிறது. நூலின் ஒரு பகுதியில், ஆசிரியர் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்களான இராமநாதன் மற்றும் செல்வநாயகம் ஆகியோரின் அந்திமக்காலத் தெளிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். இன்றைய தலைவர்களும் நாளைய எழுத்தாளர்களும் 'காலம் கடந்தே ஞானம் பெற்றார்கள்' என்ற குற்றச்சாட்டு தொடரக் கூடாது என்பதற்காகவே, ஈழத்தமிழர்களின் அரசியலை அறிவுபூர்வமாக அணுகும் தளங்களை இந்நூல் அமைத்துத் தருகிறது.
ஆசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் 'அரசியலை உள்வலமாகக் கற்க வேண்டும்' எனத் தனது மாணவர்களுக்குக் கூறுவதுண்டு. அதனை அவரது எழுத்துகளும் உறுதி செய்வதுண்டு. அதனையே 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' நூலிலும் பின்பற்றியுள்ளார். இந்நூலின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது, ஈழத்தமிழர் அரசியல் மீதான தவறான மாயைகளைக் களைந்து, நிஜ நிலைமையைப் புரிந்துகொண்டு அரசியலைச் சரியாக அணுக உதவும்.
ஐ.வி.மகாசேனன்
Ph.D in Political Science (DU, India) (R)
M.IR (UPDN, LK)
M.A (PolSc) (DU, India)
அரசியல் ஆய்வாளரும் வரலாற்று ஆசிரியருமான மு. திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்' என்ற நூலுக்கான முன்னோட்டத்தை எழுதுவதனால் பெரும் தகைமை கொள்கிறேன். இந்நூல் இலங்கைத்தீவின் இனப் பிரச்சினையை புவிசார் மற்றும் பூகோள அரசியலின் பின்னணியில் அணுகி விளக்குகிறது. இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை பற்றிய வரலாற்றை, கட்டமைப்பு இனப்படுகொலையை முதன்மைப்படுத்தி அணுகும் நூலாசிரியர், அதற்கான கோட்பாட்டுப் புரிதலையும் தத்துவார்த்த விளக்கங்களையும் தெளிவாக இந்நூலில் முன்வைத்துள்ளார்.
இந்நூல் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றை உலகத் தளத்திலிருந்து நோக்குவதோடு, ஈழத்தமிழரின் அரசியலில் காலங்காலமாக நிகழ்ந்துவரும் வரலாற்றுப் படிமங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைச் சாத்தியப்படுத்தின என்பதையும் ஆதாரங்களோடும், விஞ்ஞானபூர்வமான சிந்தனையோடும், அறிவியல்ரீதியான புரிதலோடும் வெளிப்படுத்துகிறது. ஒரு வரலாற்றின் அடிப்படைப் பார்வை என்பது அந்த வரலாற்றின் நியதிகளையும், வரலாற்றின் வாழ்வியல் முறைகளையும் இயங்கியல் விதிகளோடு அளவீடு செய்வதில் காத்திரமான பங்கினை வெளிப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் மீதான படுகொலை அல்லது இனப்படுகொலை என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாகவே வரலாறு முழுவதும் நிகழ்ந்துள்ளது என்பதனை நூல் பட்டவர்த்தனமாக விவரணப்படுத்துகிறது. அதன் மூலம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது அடிப்படை புவிசார் அரசியல் தளத்தோடும், பூகோள அரசியல் வியூகத்தோடும் பின்னிப்பிணைக்கப்பட்டது என்ற புரிதலை இந்த நூல் தந்திருக்கின்றது.
ஈழத்தமிழரின் அரசியல் தலைமைகள் தென்னிலங்கையோடும், பிராந்திய சக்திகளோடும், சர்வதேச சக்திகளோடும் இணைந்து பயணிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான சூழலையும் வாய்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் அங்கீகரித்துச் செயல்படுகின்ற போது, தம் இனத்தின் மீதான இனப்படுகொலையை அல்லது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை அத்தகைய தலைமைகளே முன்மொழிகின்றன என்ற விவாதத்தை இந்த நூல் துல்லியமாக வடிவமைத்துள்ளது. இத்தகைய எதிர் முரணியக்கத்தைக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் எதிர்காலச் சந்ததிக்கான அல்லது ஈழத்தமிழர்க்கு தலைமை தாங்குகின்ற தலைமைத்துவங்களுக்கான வழிகாட்டலையும் அறிவியல் ரீதியான, விஞ்ஞான ரீதியான புரிதலுடன் முன்வைக்கின்றது. அவ்வாறு முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் சக்திகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கனக்கச்சிதமாக கட்டமைக்க முயலுகின்றது.
ஈழத்தமிழரின் வாழ்வியல் எவ்வாறு கட்டமைப்பு இனப்படு கொலையினால் சூறையாடப்பட்டது என்பதை இரத்தமும் சதையுமாக அடையாளப்படுத்துவதிலும், அதன் பின்னால் உள்ள பலவீனங்களை இனங்காட்டுவதிலும் தமக்கே உரித்தான தனித்துவத்தை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நூலின் ஒவ்வொரு உள்ளடக்கமும் உலகளாவிய ரீதியிலான கோட்பாட்டு மற்றும் தத்துவார்த்த எண்ணக்கருக்களை முன்வைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இலங்கைத் தீவின் வரலாற்றினூடாகவும் விளக்குகிறது. இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை என்பது வறுமையோ, பொருளாதாரப் பிரச்சினையோ அல்லது பிராந்தியத் தளத்தில் அடையாளப்படுத்தக்கூடியதொன்றோ அல்ல என்பதை ஆதாரங்களோடு நிறுவ முயல்கின்றது. அத்தகைய நிறுவல்கள் நியாயமான, தர்க்கபூர்வமான முடிவுகளையும் அந்த முடிவுகளை நோக்கி ஈழத்தமிழர்கள் நகர வேண்டும் என்பதையும் தெளிவாக முன்வைத்துள்ளன.
இந்த நூலின் ஆசிரியர் ஈழத்தமிழருடைய வரலாற்றோடும் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்த எண்ணங்களைக் கொண்டிருப்பவர். அது மட்டுமல்லாது, அரசறிவியலில் நவீன அணுகுமுறைகளையும் உத்திகளையும் இனங்காட்டும் விதத்தில் ஆய்வுகளையும் வெளியீடுகளையும் முன்வைப்பவர். அந்தவகையில் தனித்துவமான ஒரு முறையியலை அரசறிவியலிலும் ஈழத்தமிழருடைய அரசியலிலும் இந்த நூலின் வாயிலாக முதன்மைப்படுத்தியுள்ளார். அவரது அணுகுமுறைக்கூடாகவும் சிந்தனைக்கூடாகவும் ஈழத்தமிழருடைய அரசியல் கட்டப்பட வேண்டும்.
ஈழத்தமிழரது அரசியலைப் புரிந்து கொள்ளவும், கட்டமைக்கப் பட்ட இனப்படுகொலையின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், அதிலிருந்து புதிய பரிமாணத்தைக் கட்டமைக்கவும் இந்நூல் ஆதார அம்சமாகக் காணப்படுகின்றது. இதற்கான முக்கியத்துவத்தை ஈழத்தமிழர் கொடுக்க வேண்டும். அதனூடாக ஈழத்தமிழருடைய அரசியல் பயணத்தை அறிவுபூர்வமானதாகவும் விஞ்ஞானபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாகவும் கட்டமைக்க முடியும் என்பது நிதர்சனமானதாகும்.
பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்
அரசறிவியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
11.12.2024
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறை என்பது தற்செயலாகவோ அல்லது எதிர்பாராமல் திடீரென்றோ நிகழ்ந்ததொன்றல்ல. மாறாக, அது இலங்கையின் சிங்கள-பௌத்த மத எழுச்சி மற்றும் 'மகாவம்சம்' கூறும் ‘தம்மதீப’ கோட்பாட்டின் பின்னணியில், தமிழர்களைப் படிப்படியாக அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே ஆகும் என்பதை மு. திருநாவுக்கரசு அவர்கள் தனது 'இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்' நூலின் வழியே தீர்க்கமாக நிறுவுகிறார்.
இலங்கைத் தீவின் வரலாற்றில் மொழிவழித் தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தன. இலங்கைத் தீவின் மீது இந்தியப் பேரரசர் அசோகர் பெளத்த மதப் படையெடுப்பைச் செய்தபோதும், வடக்கு-கிழக்குத் தமிழர்கள் அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவில்லை. பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று, அதனைத் தெற்கே அனுராதபுர அரசுக்குச் செல்வதற்கு வழிவிட்டார்கள். அதன் மூலம் பௌத்தம் சிங்கள தேசத்தில் பரவி நிலைபெற்றது. அதேபோல, பின்னாட்களிலே சேர, சோழர், பாண்டிய, கலிங்கர்கள் படையெடுத்தபோதும், அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத் தமிழ் மன்னர்கள் வாளேந்தவில்லை. மாறாக, அவர்களை வரவேற்று, தென்னிலங்கை நோக்கிச் செல்ல வழிகாட்டி அனுப்பினர். இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாறு இல்லை.
தென்னிந்திய மன்னர்களோடு ஈழத் தமிழர்கள் போரிடாமல் நட்புப் பாராட்டினர். இதனால், மகாநாம தேரர் இந்தியர்களை எதிர்த்தது மட்டுமன்றி, அவர்களுடன் இணக்கமாக இருந்த ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களின் பொது எதிரியாகச் சித்தரித்தார். இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்று மகாநாம தேரர் கருதியமையினால், தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சியவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூலை எழுதினார்.
தமிழின எதிர்ப்புத்தான் மகாவம்ச நூலிலே 'தம்மதீப’ கோட்பாடாக இனக்குரோத மனப்பாங்குடன் எழுதப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தபிரானால் தேர்ந் தெடுக்கப்பட்ட தீவு என்றும், அது விஜயனின் சந்ததியினருக்கே உரியது என்றும், அதன் ஆட்சி சிங்களப் பௌத்தர்களுக்கே உரித்தானது என்றும் மகாநாம தேரர் தமது விருப்பத்தை மகாவம்சம் வழியே சிங்கள மக்களிடம் பதியவைத்தார். இதனாலேயே, சிங்கள தேசம் இந்தியாவுக்கு எதிரான பகையை ஈழத் தமிழர்கள் மீது திருப்பி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. சிங்களவர்களின் இந்த இந்திய எதிர்ப்பு போரையே ஈழத் தமிழர்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
ஈழத் தமிழர்கள் இந்தியப் பெருங்கடலையும் பாக்கு நீரிணையையும் வெறும் மீன்பிடிக்கும் பகுதியாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கடல் வழிப் போக்குவரத்து, ஆட்கடத்தல் மற்றும் பொருள் கடத்தலுக்கான பாதையாகவுமே இன்றுவரை கருதி வருகிறார்கள். அதனை ஓர் அரசியல் கடலாகத் தமிழர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏன், தமிழீழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட எந்த ஒரு போராட்ட இயக்கமும் அதனை அரசியற் கடலாகப் பார்க்கவில்லை. அத்தகைய ஒரு கருத்துத்தான் ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்றுவரையும் நிலைபெற்றிருக்கிறது.
ஈழத் தமிழரின் இறுதி அரசான யாழ்ப்பாண நல்லூர் இராச்சியத்தின் மீது 1560, 1591, 1619 ஆகிய மூன்று காலகட்டங்களிலும் போர்த்துக்கேயர்களால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போர்களின் போதும், தென்னிந்திய நிலத்திலிருந்து பாக்கு நீரிணை ஊடாக சேதுபதி மன்னர்களும், குஞ்செலி மரக்காயர்களும், மதுரை நாயக்கர்களும், கரையார் படைகளும் (மறவர் படை) ஈழத் தமிழர்களுக்குக் கைகொடுக்கப் படைகளை அனுப்பினார்கள். போர்த்துக்கேயக் கடற்படை பாக்கு நீரிணையை மறித்து நின்று தென்னிந்தியாவின் உதவிகளைத் தடுத்தமையே, நல்லூர் இராச்சியம் வீழ்ச்சியடைந்ததற்கு முதன்மையான காரணமாகும்.
1619இல் நல்லூர் வீழ்ந்த பிறகும், போர்த்துக்கேயரை விரட்டி மீண்டும் நல்லூரில் ஆட்சியை அமைக்க 1620-1621களில் யாழ்ப்பாணத் தலைவர்களும், வல்வெட்டித்துறைக் கரையார் தலைவர்களும், தஞ்சாவூர் நாயக்கர் படைகளும் இணைந்து பல கிளர்ச்சிகளைச் செய்தனர். எனினும், போர்த்துக்கேயக் கடற்படை பாக்கு நீரிணையை மறித்துத் தென்னிந்திய உதவியைத் தடுத்ததால் நல்லூர் அரசை மீண்டும் நிறுவ முடியாமல் போயிற்று. ஆகவே, தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப் பட்டது தரையில் அல்ல, கடலிலேதான். ஈழத் தமிழருடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடியாழத்திலேயே வீழ்த்தப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் இறையாண்மை வீழ்ச்சியடைந்து புதையுண்ட இடமான பாக்கு நீரிணையின் அரசியல் மூலோபாயத்தில் இருந்தே, அவர்களின் இறையாண்மையை மறுபடியும் வென்றெடுக்க முடியும்.
தொடர்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஜனநாயக அரசியலில் தோல்வி அடைவதற்கான காரண காரியங்களைத் தெரிந்துகொள்ளாமல், வரலாற்றை வெற்றிகரமான பாதையில் ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது. “வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது” (History is written by the victors) என்பதற்கிணங்க, தொடர் தோல்விகளில் இருந்து விடுபட்டு வெற்றியடைவதற்கான பாதையை ஈழத் தமிழினம் கண்டிப்பாகக் கண்டறிய வேண்டிய இறுதிக் காலகட்டம் இது. குறைந்தது கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கடலின் அடியாழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் இறையாண்மையைத் தரையில் தேடும் அறிவீனம்தான் ஈழத் தமிழினத்தின் அரசியலாக உள்ளது.
ஈழத் தமிழர்களின் இறையாண்மை வீழ்ச்சியையும், விடுதலைப் போராட்டத் தோல்வியையும் கடலில்தான் தேட வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேலும் அவர், இலங்கைத் தீவை ஆக்கிரமித்து ஆளவந்த அந்நியர்களும், தற்போது ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் தமிழ் மக்களுடைய உரிமைகளைக் கடலில் புதைத்துவிட்டார்கள் என்கிறார். புவியியல் எதார்த்தத்தில் காணப்படும் கடல்சார் அரசியலின் ஆணிவேரிலிருந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் ஈழத் தமிழரின் கடந்தகாலத் தோல்விகளுக்கான அடிச்சுவடுகளையும், எதிர்கால வெற்றிகளுக்கு ஏற்ற வழிவரைபடத்தையும் இந்நூலில் அவர் வரைந்துள்ளார். இந்நூலாசிரியரின் கடந்த 40 ஆண்டுகால எழுத்துகள் அனைத்திலும் இந்தக் கடல்சார் அரசியல் நீரோட்டம் அப்படியே தெளிவாகத் தொடர்ந்து ஓடுகிறது. அறிஞர்களுடைய நூல்களில் எழுதப்பட்ட வரிகளைவிட, அந்த எழுதப்பட்ட வரிகளுக்கிடையே எழுதப்படாது விடப்பட்ட வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பர். இந்நூல், தரவுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 'எழுதப்படாத வரிகளை' ஆராய்வதை ஒரு முக்கிய அறிவியல் ஆய்வுமுறையாகக் கையாள்கிறது.
ஈழத் தமிழர்கள் பாக்கு நீரிணையில் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தைத் தெரிந்தோ, தெரியாமலோ பாக்கு நீரிணை ஊடாகவே ஆரம்பித்தனர். ஆயினும், ஈழத் தமிழர்கள் பாக்கு நீரிணையின் முக்கியத்துவத்தைத் தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை என்ற துயரகரமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவாகவே தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது. அது தோல்வியடைந்த இடம் முள்ளிவாய்க்கால் மண் அல்ல. அது முதலில் பாக்கு நீரிணையிலும், இறுதியாக இந்தியப் பெருங்கடலிலும்தான் தோல்வியடைந்தது. ஆக மொத்தத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தது தரையிலல்ல; கடலில்தான். இந்தத் தத்துவார்த்த உண்மை புரியாதவரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது என இந்நூல் கூறுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பின்தளத்தை ஈழத் தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்கு நீரிணையின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்படவில்லை. மாறாக, இந்து சமுத்திரம் எங்கள் கையில் உள்ளது என்று ஈழத் தமிழர்கள் நம்பினர். ஆயினும், மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கில் இந்து சமுத்திரத்தில் ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை என்பதை, 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத வழங்கல்களைச் செய்துவந்த விடுதலைப் போராட்டத்திற்குச் சொந்தமான 9 கப்பல்கள் இந்து சமுத்திரத்திலே தாக்கி அழிக்கப்பட்டதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். அவற்றில் மூன்று கப்பல்களைத் தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன. மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்டன என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி கடலிலே நிகழ்ந்தது என்றால், அந்தக் கடலை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதில் நாம் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது என்றால், அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, ஈழத் தமிழர்கள் கடலைக் கையாளக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் வெற்றிக்கான பாதையைக் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு பாக்கு நீரிணையும், இந்து சமுத்திர அரசியலும் அச்சாணியாக உள்ளன என்பதனால், அந்தப் பாக்கு நீரிணையையும் இந்து சமுத்திரத்தையும் இணைத்த ஒருங்கிணைந்த கடல்சார் அரசியலைத் தமிழ் மக்கள் முன்னெடுப்பதுதான் விடுதலைக்கான ஒரே வழி. “கடலைக் கையாள முடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் எதுவும் மிஞ்சாது” என்ற எழுதப்படாத, தொக்குநிற்கும் வரிகளை அடிநாதமாகக் கொண்டிருப்பதே இந்நூலின் விசேட பண்பாகும்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தத்துவார்த்த அடிப்படையிலும், வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலும் இந்நூல் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதற்கு மார்க்ஸைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதேபோல, இந்நூலைப் புரிந்து கொள்ள மு.திருநாவுக்கரசு அவர்களின் ஈழப் போராட்டப் பங்களிப்பையும், வரலாற்றுப் பின்னணியோடும் தத்துவார்த்தச் செறிவோடும் தீர்க்கதரிசனமாக அவர் எழுதிய 20க்கும் மேற்பட்ட நூல்களையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்க்கமான முடிவுகளைச் சொல்லவல்ல மு.திருநாவுக்கரசு, விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு அவ்வக்காலத்திலேயே தீர்க்கமான முடிவுகளை வழங்கிய முதன்மைச் சிந்தனையாளர் ஆவார். ஈழத் தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாற்றில், போராட்டம் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களில் எல்லாம் நெருக்கடிகளைத் தீர்க்கவல்ல அறிவியல் சார்ந்த, தத்துவார்த்தம் சார்ந்த தனது முடிவுகளை அவரது நூல்களின் மூலமாக வெளிப்படுத்தியவர்.
இலங்கை இனப்பிரச்சினையை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் ஆய்வு செய்யவும் விரும்புகிறவர்கள், மு. திருநாவுக்கரசு அவர் களின் நூல்களை வாசிக்காமல் அதை முழுமையாக நிறைவேற்ற முடியாது. அத்தகைய சிறப்புமிக்க ஆய்வாளரால் எழுதப்பட்ட இந்நூல், ஈழத் தமிழர்களுக்கான தெளிவான அரசியல் தீர்வுப் பாதையைத் தமிழ்ச் சமூகத்தின் முன் உறுதியாக வைக்கிறது.
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ எழுதிய 'குடியரசு' (The Republic) நூல், மனிதகுலத்தைப் பற்றிய ஓர் அகண்ட பிரபஞ்சப் பார்வையை முன்வைத்தது. அதன் தொடர்ச்சியாக, காலப்போக்கில் உலகம், மனிதன் மற்றும் பிரபஞ்சம் குறித்து பல முக்கிய நூல்கள் வெளிவந்தன. அந்த வரிசையில், 20ஆம் நூற்றாண்டில் ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்கா முதல் கங்கை வரை' மனிதகுலத்தின் முழுமையான வரலாற்றைப் பேசுகிறது. அதேபோன்று, அண்மைக் காலத்தில் பிரான்சிஸ் 'The Origins of Political Order' (2011) 'Political Order and Political Decay' (2014) शु நூல்கள், உலகளாவிய மனிதகுல அரசியல் ஆதிக்கத்தின் வரலாற்று வளர்ச்சியை மிக விரிவாக விவரிக்கின்றன.
அதேபோன்று, 2015இல் மு. திருநாவுக்கரசு எழுதிய 'பூகோளவாதம் புதிய தேசியவாதம்' எனும் நூல், ஈழத் தமிழர்களின் போராட்டக் கோணத்தில் நின்றுகொண்டு உலகளாவிய பார்வையை முன்வைக்கிறது. வரலாற்றையும், தத்துவங்களையும், மனிதகுலத்தின் வெற்றி-தோல்விகளையும், நீதி-நியாயங்களையும், மனித சமூகம் கடந்துவந்த வீழ்ச்சி மற்றும் எழுச்சிகளையும் ஆழமாக ஆராயும் இந்நூல், ஈழப்போராட்டத்தை மனிதகுல வரலாற்றோடு பிணைத்து இரத்தமும் சதையுமாகப் படம்பிடிக்கிறது. இதனூடாக, தமிழ் மக்களிடையே 'புதிய தேசியவாதம்' என்ற கருத்தியல் துணிச்சலாக முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று, ‘ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்' எனும் நூல், கடந்த ஒரு நூற்றாண்டு கால தத்துவம், அரசியல், பொருளாதாரம் மற்றும் போர்களைத் தத்துவார்த்த ரீதியிலும் நடைமுறைச் சாத்தியத்தோடும் ஆராய்கிறது. இந்நூலில், 'மத்திய கிழக்கில் மேற்குலகின் அழித்தொழிப்பு யுத்தம்' எனும் கருத்தை மு. திருநாவுக்கரசு மிகத் துணிச்சலோடும் தீர்க்கதரிசனத்தோடும் முன்வைத்துள்ளார். குறிப்பாக, இன்று மத்திய கிழக்கில் நடக்கும் போர்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது கூர்மையான நுண்ணறிவால் அவர் கணித்துக்கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் சரிவர எடைபோடுவதோடு, அவற்றிடையே உள்ள குறைபாடுகளையும் துணிந்து சொல்கிறது. கார்ல் மார்க்ஸ் இந்தப் பிரபஞ்சத்தின் தன்னிகரற்ற தத்துவ ஞானிதான். ஆயினும், அவருடைய தத்துவத்தில் உள்ள சரி-பிழைகளையும், குறைபாடுகளையும் நடைமுறை சார்ந்து இது முன்வைக்கிறது. இத்தகைய மிகக் காத்திரமான அந்த நூல் பலராலும் வாசிக்கப்பட்டாலும், அது பற்றிப் பொதுவெளியில் பெரியளவில் பேசப்படாமல் உள்ளது என்பது ஈழத் தமிழர் சார்ந்த அறிவியலின் துரதிர்ஷ்டமான பக்கங்களே. ஆயினும், அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கனதியும் காத்திரமும் அதிகரிக்கும் என நம்பலாம். இத்தகைய ஓர் அரிய நூலை எழுதியவர் தற்போது ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்ற இந்நூலை எழுதுகின்றபோது, அதற்கான பார்வையும், பரிமாணமும், தனித்துவமும், கனதியும் காத்திரமாக இருக்கும் என நம்பலாம்.
ஒரு சமூகத்தின் அறிவியல் கொள்ளளவு எவ்வளவோ, அதற்குள் இருந்துதான் அச்சமூகத்தினுடைய சமூகப் பிரதிநிதிகளும் தலைவர்களும் தோன்றுவர். ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் எவ்வளவோ, அந்த மட்டத்துக்கு உட்பட்டுதான் அச்சமூகத்தினுடைய அறிஞர்களும் ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் தோன்றுவர். ஆனால் விதிவிலக்காக, நம் சமூகத்தில் இந்நூலாசிரியர் போன்று ஓரிருவர் அந்தக் கொள்ளளவைத் தாண்டியும், விஞ்சியும் தோன்றியிருக்கிறார்கள். இருப்பினும், அறிவியல் மட்டத்தை விஞ்சித் தோன்றுவது என்பது அரிதினும் அரிதே. கடந்துபோன இறந்தகாலத்தைப் போற்றிப் புகழ்ந்து பேசி காலத்தைக் கழிக்கும் ஓர் இனத்திலிருந்து எப்படி முற்போக்குச் சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? எப்படி எதிர்காலத்தைப் பற்றி அவ்வினத்தால் சிந்திக்க முடியும்? அறிவியலையும் சிந்தனையையும் கடந்தகாலப் புகழ்ச்சியினால் மழுங்கடிக்கும் தமிழ்ச் சமூகம் அறிவியலில் முன்னேறுவது மிகக் கடினமானது.
அறிவியல் கண்ணோட்டமற்ற தமிழ்ச் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க எந்தவொரு உண்மையான முற்போக்காளனும் விரும்ப மாட்டான்; அங்கிருக்கும் பிற்போக்குச் சக்திகளும் அதற்கு இடமளிக்க மாட்டா. சமூகத்தை அறிவியல்மயப்படுத்த முயலும் சிந்தனையாளர்களைத் தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனம் ஓரங்கட்டி அப்புறப்படுத்திவிடும். இத்தகைய சூழ்நிலையில் தகுதியற்றவர்களே தலைமைதாங்க முன்வருவர். அந்தத் தகுதியற்றவர்களுக்குப் புகழாரம் சூட்டிப் புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் சிந்தனையற்றவர்கள் ஒன்று சேர்வர். அந்தக் கூட்டம் அறிவியலாளர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்துரத்திவிடும். அத்தகைய போக்கைக் கொண்ட ஈழத் தமிழர்களை தோல்வியடைந்த சமூகமாக உலகம் அடையாளப்படுத்துவதில் தவறில்லைதான்.
இன்றைய சூழலில் ஈழத் தமிழர்கள் கூறும் பெருமைகள் கள நிலவரத்திற்கு அப்பாற்பட்டவை; ஏனெனில், அதிகார மேலாதிக் கத்தின் கீழ் வாழும் சமூகமாகவே அவர்கள் உள்ளனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் மக்களுக்கு உண்மையான வெற்றிகளைத் தேடித்தந்த தலைவர்கள் எவரும் இல்லை என்பதே கசப்பான நடைமுறை உண்மையாகும்.
இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் புதைந்துபோன வரலாற்றுத் தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையைக் கண்டறிய முடியாது என்பதை இந்நூல் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அளவால் சிறியதாக இருந்தாலும், இந்நூல் முன்வைக்கும் ஆழமான பார்வையையும் கடல்சார் அரசியல் வழிகாட்டலையும் புரிந்துகொள்வது, தமிழ் இனத்தின் விடுதலைக்கான எதிர்காலப் பாதையைத் தெளிவுபடுத்திக் கொள்ள பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
அரசியல் ஆய்வாளர்
தி.திபாகரன், M.A.