மலையகத்தில் தெய்வ நம்பிக்கைகளும் ஆற்றுகைக் கலைகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
மலையகத்தில் தெய்வ நம்பிக்கைகளும் ஆற்றுகைக் கலைகளும்
மலையகத்தில் தெய்வ நம்பிக்கைகளும் ஆற்றுகைக் கலைகளும்

இந்நூல், இலங்கை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தின் வரலாற்று உருவாக்கத்தையும், அதன் விளைவாகத் தோற்றம் பெற்ற தனித்துவமான நாட்டார் வழிபாட்டு முறைகள் மற்றும் ஆற்றுகைக் கலைகளையும் மானிடவியல், சமூகவியல் நோக்கில் விரிவாக ஆராய்கிறது. தென்னிந்தியக் கிராமிய மரபுகளின் தொடர்ச்சியாகவும், பெருந்தோட்ட உற்பத்திச் சூழலின் ஒடுக்குமுறைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிரான பண்பாட்டுத் தகவமைப்பாகவும் மலையகத்தில் உருப்பெற்ற தெய்வ நம்பிக்கைகள், சடங்குகள், காமன் கூத்து, பொன்னர்-சங்கர் போன்ற ஆற்றுகைகள் பற்றிய ஒன்பது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இது உள்ளது. மலையகத் தமிழரின் தனித்துவமான பண்பாட்டையும், சமூக அசைவியக்கத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வழிகாட்டும் இந்நூல், எதிர்கால மலையக ஆய்வுகளுக்கான புதிய களங்களையும் திறவுகோல்களையும் முன்வைக்கிறது.

எழுநா நூல் வரிசை 52
பக்க எண்ணிக்கை 160
வெளியீட்டு ஆண்டு 2026
அணிந்துரை

உழைப்பும் வழிபாடும்:மலையகத் தமிழரின் பண்பாட்டுப் பயில்வு

ஒரு பண்பாட்டின் உயிர்நாடி அதன் ஆசாரங்களிலும், தொன்மங்களிலும், அச்சமூகம் தன் அன்றாட வாழ்வியலை இறைநிலையோடு பிணைத்துக்கொள்ளும் ஆற்றுகைக் கலைகளிலும் உறைந்துள்ளது. காலனிய ஆதிக்கத்தின் பொருளியல் தேவைகளுக்காகத் தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, இலங்கையின் மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்களுக்குள் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் இத்தகையதே. தாம் சுமந்துவந்த பூர்வீகப் பண்பாட்டு அடையாளங்களையும், புதிதாக அவர்கள் எதிர்கொண்ட கடுமையான பெருந்தோட்ட உழைப்புச் சூழலையும் இணைத்து, அவர்கள் கட்டியெழுப்பிய ஆன்மீக மற்றும் கலை உலகைப் பதிவு செய்கிறது இந்நூல்.

மலையகச் சூழலின் தனித்துவமே உற்பத்தி முறைக்கும் வழிபாட்டு முறைக்கும் இடையிலான நேரடித் தொடர்புதான். பயம், அனர்த்தங்கள், உழைப்பின் கடுமை ஆகியவற்றிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளத் தொழிலாளர்கள் உருவாக்கிய தெய்வங்கள், செவ்வியல் மரபுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

மலையக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி, கொட்டகலை, பத்தனை-பெய்த்லீ தோட்டத்தில் அமைக்கப்பட்ட போது, சுவீகரிக்கப்பட்ட தோட்டப்பகுதியில் இருந்த முனித் தெய்வ வழிபாட்டிடம் அகற்றப்பட்டு, எவ்வித அடையாளங்களும் இல்லாததாக்கப் பட்டது. அப்பகுதியில் வனப்புடன் கூடிய பாரிய கட்டடத் தொகுதிகள் புதிதாக அமைக்கப்பட்டன. அக்கல்லூரியின் தொடக்ககால விரிவுரையாளராக (1991) பணியாற்றிய காலத்தில் நான் அவதானித்த ஒன்று, அத்தோட்ட மக்கள் முனிச் சிறுதெய்வத்துக்காக விழா எடுக்கும் காலத்தில், கல்லூரி வளாகத்தில் முன்னர் வழிபாட்டிடம் அமைந்திருந்த இடத்தைத் துல்லியமாக இனங்கண்டு, எவ்விதத் தடயங்களும் இல்லாத அந்த வெற்றிடத்தை வணங்கிச் செல்வதாகும். அப்போதிருந்தே இந்த முனி வழிபாடு குறித்த ஆர்வம் என்னிடம் முளைவிட்டது.

அக்கல்லூரியின் பீடாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் கர்நாடக இசையும் பரதநாட்டியமும் பாடநெறிகளாக ஆரம்பிக்கப்பட்ட போது, அந்நெறிகளைக் கற்பவர்களுக்குத் துணைப்பாடமாக நாட்டாரியல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதனை நானே கற்பித்தேன். அதற்காகத் தயாரிக்கப்பட்ட குறிப்புகளை ஒட்டி, 'வரவும் வாழ்வும்' என்ற நூலை (2002) வெளியிட்டேன். அது தாங்கியிருந்த அம்சங்களின் விரிவான ஒரு நூலாக இந்நூல் வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.

பண்டைய காலத்திலிருந்தே கிராமக் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டுவரும் முனீஸ்வரனை, கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பன், முனியப்பர் எனவும் அழைப்பர். பார்வதி அம்மன் 'காத்தாயி' என்ற பெயரில் அவதரித்து, அசுரன் ஒருவனை அழிக்க லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி, சடைமுனி என ஏழு முனிகளை உருவாக்கினார். அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த அசுரனை அடக்கி வதம் செய்தனர். பின்னர், முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களைக் காக்கப் பூமிக்கு வந்தனர் என ஒரு கதை உண்டு.

இன்னுமொரு கதையில், வாழ்முனி, செம்முனி, கருமுனி, வேதமுனி, கும்பமுனி, ஜடாமுனி, நாதமுனி, முத்துமுனி, சிங்கமுனி, லாடமுனி, சன்னியாசிமுனி எனப் பதினொரு முனிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான முனிகளே கிராமங்களின் எல்லைகளில் தனியாகவும் அல்லது பெருங்கோவில்களில் பரிவாரத் தெய்வங்களாகவும் இருக்கின்றனர். தமிழகத்தின் எல்லைப்புற ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களின் ஊர்களிலும் முனி வழிபாடுகள் உண்டு.

யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்குச் செல்லும்போது, வல்லைப் பாலத்தைக் கடந்தவுடன் முனிக்கொரு கோயில் உண்டு. அக்கோயில் முனி, வல்லைவெளியைக் கடந்தவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் இருந்த பெரிய ஆலமரத்தில் வசித்துவந்ததாகவும், அதைத் தறித்ததன் பின்னர் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளனர். அவர்கள் யாவரும் மாதம் ஒருமுறை ஒன்றுகூடுவதாகக் கூறப்படுகிறது.

புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து, அவரை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்னர் முறையே சக்கோட்டை முனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவர்கள் வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வருவர். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்ப்பட்டால், பரிகலங்கள் அவர்களை அடித்துவிடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றுவர் எனக் க. கணபதிப்பிள்ளை தனது 'ஈழத்து வாழ்வும் வளமும்' நூலில் குறிப்பிடுகிறார். இங்கு முனிகளின் பெயர்கள் ஊர்களையொட்டியதாக இருப்பதைக் காண்கிறோம்.

மட்டக்களப்பில் காலமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை, அம்மன் கோயில்களில் வாழ்முனிக்கும் தனியான இடமுண்டு எனக் குறிப்பிடுகின்றார்கள். எனவே, தமிழக முனி வழிபாட்டுக் கலாசாரம் ஈழத் தமிழரை வந்தடைந்ததும், அது திரிபுற்றதும் ஆய்வுக்குரியதாகும்.

பெருந்தோட்டப் பணிகளுக்காகப் புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர்கள் சென்ற இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் முனி வழிபாட்டை நோக்கும் போது, மலேசியாவுக்கு (அன்றைய மலாயா) ரப்பர் மற்றும் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் குலதெய்வ மற்றும் காவல் தெய்வ வழிபாடாக முனி வழிபாட்டைத் தொடர்ந்தனர். தொடக்கத்தில் தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் மரத்தடிகளிலும் எளிய கற்கள் அல்லது சூலாயுதங்களை வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் குடும்ப வழிபாடுகள், பிற்காலத்தில் பெரிய பொதுக் கோயில்களாக உருவெடுத்தன. ஆரம்பகாலத்தில் 'முனியாண்டி' என்ற பெயரில் பரவலாக வழிபடப்பட்ட தெய்வம், காலப்போக்கில் ஆகம நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, 'முனீஸ்வரன்' அல்லது 'மகா முனீஸ்வரர்' என்று சிவனின் அம்சமாக உயர்த்தி வழிபடப்பட்டார்.

மலேசியாவில் இந்த முனி வழிபாடு வெறும் மதச் சடங்காக மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தங்களின் அடையாளத்தையும் பூர்வீகப் பண்பாட்டையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்துவரும் வாழ்வியல் அங்கமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் 'காமன்வெல்த் டிரைவ்' பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், தென்கிழக்கு ஆசியாவிலேயே முனீஸ்வரனுக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சீன 'டாவோயிஸ'ச் சமூக மக்களும் இந்த வழிபாட்டில் இணைந்து ஈடுபடுவது சிங்கப்பூரின் தனிச்சிறப்பாகும். பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பர்மா என்று அழைக்கப்பட்ட தற்போதைய மியான்மரில், 'பிலிக்கான்' என்ற ஊரில் முனீஸ்வரருக்கு அற்புதமான ஆலயம் உள்ளதெனவும், மக்களுக்கு நீதி, நியாயம் வழங்கி வருவதால் மக்கள் இவரை 'ஜட்ஜ் ஐயா' என்றே அழைப்பதாகவும் தெரியவருகிறது.

மொரிசியசுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் சென்றவர்களும் முனி வழிபாட்டைக் கைவிடவில்லை. அங்குள்ள சிவன், முருகன் மற்றும் அம்மன் ஆலயங்களின் வளாகங்களில் பரிவாரத் தெய்வமாகவும், கிராமப்புறப் பகுதிகள், கரும்புத் தோட்ட எல்லைகள் மற்றும் வீடுகளின் பின்புறங்களில் சிறிய பீடங்களை அமைத்து முனியை வழிபடும் வழக்கமும் இன்றும் உள்ளது.

இலங்கை வந்தவர்களும் முனி வழிபாட்டைக் காவல் தெய்வ வழிபாடாக இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள் என்பதை அருணாசலம் லெட்சுமணன், அஞ்சி முனியாண்டி வழிபாட்டின் மூலம் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுகின்றார். ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான காவல் தெய்வமாகவும், எல்லையைக் காக்கும் சக்தியாகவும் அஞ்சி முனியாண்டி வழிபடப்படுகிறார். சாதிய மற்றும் ஆகம எல்லைகளைக் கடந்து முழுச் சமூகத்தையும் ஜனநாயகபூர்வமாக ஒன்றிணைக்கும் களங்களாக முனி வழிபாட்டிடங்கள் திகழ்கின்றன என்பதையும் காண்கிறோம்.

ஆனால், கலாநிதி ஜெயசீலன் நுணுக்கமாக அவதானித்த தொழில்சார் தெய்வங்கள் குறித்த அணுகுமுறையில், நாற்று மேடையில் 'தவறணைமுனி', கொழுந்து செழிக்க 'கொழுந்துசாமி', கவ்வாத்து வெட்டும் காலத்தில் 'கவ்வாத்துசாமி', தளிர்கள் சீராக வளர 'மட்டத்துசாமி', கொழுந்து மூட்டைகளை அனுப்பிய கம்பிகளையே தெய்வமாக்கிய 'கம்பிமுனி', தொழிற்சாலை இயந்திரங்களின் சக்கரத்தைத் தெய்வமாகக் கருதிய 'றோதைமுனி” என உழைப்பின் ஒவ்வொரு கணத்திலும் புதிய தெய்வங்கள் உருவாகின என்பதை அறிந்துகொள்ளலாம். அங்கு முனிகளின் திரிபுகளை அவதானிக்கும் போது வியக்காமல் இருக்க முடியாது.

பெண்களின் முதன்மைத் தொழில்களான கொழுந்து பறித்தல், மட்டம் வெட்டுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய வழிபாடுகள் (கொழுந்துசாமி, மட்டத்துசாமி), சாத்வீகப் படையல்களுடனும் (துள்ளுமா, பொங்கல்), பெண்கள் தலைமையிலும் அமைந்தன. அதேவேளை, ஆண்களின் கவ்வாத்து மற்றும் தொழிற்சாலை சார்ந்த வழிபாடுகளில் (றோதைமுனி, கம்பிமுனி) உயிர்ப்பலியும் மது, சுருட்டுப் படையல்களும் முதன்மை பெறுவதைக் காணும் போது, மலையக மக்களின் சிறுதெய்வ வழிபாட்டுப் பண்பாட்டை இவ்வழிபாடுகள் நுணுக்கமாகப் படம்பிடிப்பதைக் காணலாம்.

மாடாசாமி என அழைக்கப்படும் சுடலைமாடன் வழிபாடும் வில்லிசையும் குறித்து மெ. கேதீஸ்வரன் எழுதிய கட்டுரை, 'மெல்கட' போன்ற பிரதேசங்களில் மாடன் வழிபாடு வில்லிசை ஆற்றுகையோடு இணைந்து பெருவிழாவாகக் கொண்டாடப்படுவதைக் காட்டுகின்றது. உடுக்கையின் துள்ளல் ஓசையும், மாடனின் கதையைக் கூறும் வில்லிசையும் சாமியாடிகளை ஆவேச நிலைக்கு (Trance) கொண்டுசென்று, கொதிக்கும் வெந்நீரில் நீராடுதல், குருதி குடித்தல் போன்ற தீவிரச் சடங்குகளாக உருப்பெறுகின்றன எனக் கட்டுரையில் காட்டுகிறார். பேராசிரியர் சி. மௌனகுரு, 'உறங்கவிடாத சுடலைமாடன்' எனும் சிறுகதையில், 'நலந்தனை' பிரதேசத்தில் ஒரு தோட்டத்தில் நிகழ்ந்த சுடலைமாடன் வழிபாட்டைக் கண்டு, அந்த நிகழ்த்துகையை ஒரு சிறுகதை போலப் பதிவு செய்தமை நினைவுக்கு வருகின்றது. மலையகத்தில் வழிபாடுகள் என்பவை வெறும் சடங்குகளாக மட்டும் எஞ்சாது, கூத்து, வில்லிசை, பஜனை போன்ற ஆற்றுகைக் கலைகளுடனும் பிணைந்துள்ளன என்பதை இந்த நூல் காட்டி நிற்பது வரவேற்கத்தக்கது.

லயத்து வாழ்க்கையின் நெருக்கடியில் அம்மை நோயை மருத்துவ நோயாக மட்டுமன்றி, மாரியம்மனின் வருகையாகப் பாவித்து, அந்நோயை வேப்பிலை, மஞ்சள், மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் மற்றும் கண்ணடக்கம் சாத்துதல் போன்ற சடங்குகள் மூலம் கையாண்ட முறைமை, அவர்களின் பண்பாட்டு உடலியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.

கம்பம் ஊன்றுதல், துளசி பறித்தல், வீதி உலா என மார்கழி மாதம் முழுவதும் நிகழும் இராமர் பஜனை, கம்ப இராமாயணக் காட்சிகளையும் நாட்டாரியல் மெட்டுகளையும் இணைத்து, மலையகக் கலை மரபைச் செழுமைப்படுத்துகிறது.

மலையகத் தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளாகவும் பண்பாட்டு அடையாளங்களாகவும் விளங்கும் பாரம்பரிய இசைக் கருவிகளும் கலை வடிவங்களும் அவர்களின் வாழ்வியலோடு மிக ஆழமாகப் பிணைந்துள்ளன. தப்பு, உடுக்கு, உறுமி, தமூர் மற்றும் செஞ்சனக் கட்டை போன்ற தோல் மற்றும் உலோக இசைக்கருவிகள் சடங்குகள், வழிபாடுகள் மற்றும் கூத்துகளில் பக்தியையும் தாள நயத்தையும் எழுப்பப் பயன்படுகின்றன. அதேவேளையில், காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, அருச்சுனன் தபசு போன்ற பிரம்மாண்டமான கூத்து வடிவங்களும், கரகாட்டம், காவடி, கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற வழிபாட்டு நடனங்களும் மக்களிடையே அறநெறிகளையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பேணிவருகின்றன.

காமன் கூத்து பொதுவாக இரவில் தொடங்கி விடியும் வரை வட்டக்களரி அமைப்பில் ஆடப்படும். குதிக்காலைக் கொண்டு தாளத்திற்கு ஏற்ப துள்ளலாக ஆடுவது இதன் சிறப்பு. மன்மதனும் ரதியும் ஒருவரையொருவர் நோக்கிப் பாடி ஆடும் 'ரதி-மதன் ஆட்டம்' உணர்ச்சிபூர்வமானது. கூத்தின் இறுதி நாளில் 'காமன் தகன விழா' (மதனை எரிக்கும் காட்சி) மிக ஆக்ரோஷமான ஆட்டத்துடன் நிகழ்த்தப்படும்.

பொன்னர் சங்கர் கூத்து (அண்ணன்மார் கதை) வழிபாட்டுச் சடங்குகளுடன் கூடிய நீண்ட ஆட்டமுறையைக் கொண்டது. வீர உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வாள் வீச்சு மற்றும் சிலம்பாட்ட முறைகள் கூத்தில் கலந்திருக்கும். இதில் வீரர்கள் வேகம் மற்றும் ஆக்ரோஷமான அடவுகளைப் (சுவடுகள்) பயன்படுத்தி வட்ட வடிவில் சுழன்று ஆடுவர்.

அருச்சுனன் தபசு கூத்து நடக்கும் இடத்தில் நீண்ட மரத்தாலான 'தவசு மரம்' (தவசு கம்பம்) நடப்பட்டிருக்கும். அருச்சுனன் வேடமிட்ட கூத்துக் கலைஞர் பாடல்களைப் பாடிக்கொண்டே, தவசு மரத்தின் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக ஏறி ஆடுவார். மரத்தின் உச்சியை அடைந்ததும் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் ஆட்டமுறை, பார்ப்போரைக் கவரும் வகையில் அமையும். பக்தியும் வீரமும் கலந்த அடவுகள், கைகாட்டும் முத்திரைகள், கம்பீரமான குரலில் பாடி ஆடுதல் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த மூன்று கூத்துகளிலுமே மத்தளம், தாளம், உடுக்கை, ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகள் பின்னணியில் பயன்படுத்தப்படுகின்றன. கலைஞர்கள் தங்களின் கால்களில் சலங்கை அணிந்து, தாளக்கட்டுக்கு (அடவுகளுக்கு) ஏற்பக் குதிக்கால்களைப் பயன்படுத்தித் துடிப்புடன் ஆடுவது இவற்றுக்குரிய பொதுவான மரபாகும்.

இவ்வாறு தாய்நிலத்தை விட்டு, பிழைப்புக்காக அந்நிய தேசங்களுக்குச் சென்றவர்கள் தமது வழிபாட்டுச் சம்பிரதாயங்களை எவ்வாறு கொண்டு சென்றார்கள் எனத் தேடிப் பார்க்கும் போது, மூன்று தரப்பினரை இனங்காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆபிரிக்க-கரீபியன் வூடூ (Voodoo) மற்றும் சான்தேரியா (Santeria) வழிபாடுகள் குறிப்பிடத்தக்கவையாகும். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட ஆபிரிக்க மக்கள், தமது பூர்வீக நம்பிக்கைகளை அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்தனர். மலையகத்தில் கங்காணி முறைமைக்குள்ளும், தேயிலை மரங்களுக்கு மத்தியிலும் 'றோதைமுனி' உருவானது போல, பெருந்தோட்ட உழைப்பில் உருவான பயத்தையும் அநீதியையும் எதிர்கொள்ளும் வூடூ சடங்குகளும் அருள்வந்து ஆடும் ஆவேச நிலை (Trance/ Possession) ஆற்றுகைகளும் அவர்களிடம் காணப்படுகின்றன.

லத்தீன் அமெரிக்காவின் சான் லா முவர்த்தே (San La Muerte) என்ற நாட்டுப்புறத் தெய்வம், ஒடுக்கப்பட்ட மக்களாலும் தொழிலாளர்களாலும் வழிபடப்படும் ஒன்றாகும். இது கத்தோலிக்கச் செவ்வியல் திருச்சபை வழிபாட்டு முறைக்கு வெளியே நின்று, எளிய மக்களின் நீதியை நிலைநாட்டும் அமைப்பாக விளங்குவது, தென் தமிழகத்திலும் மலையகத்திலும் வழிபடப்படும் சுடலைமாடன் வழக்காற்று அமைப்பை ஒத்ததாகக் கருதக்கூடியவாறு உள்ளது.

அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்கள் (Native Americans) இயற்கையின் ஒவ்வொரு பொருளிலும், உழைப்புக் கருவிகளிலும் இறைத் தன்மையைக் காண்பது போல, மலையக மக்கள் தேயிலைச் செடியையும், தேயிலைத் தொழிற்சாலைச் சக்கரத்தையும் (றோதை), கம்பியையும் தெய்வமாக வழிபட்டது, உலகளாவிய பழங்குடியினரின் 'அனிமிச' (Animism) மரபின் தொடர்ச்சியாகும்.

மலையக மக்களின் இச்சிறுதெய்வ வழிபாடுகளும் உழைப்புசார் நம்பிக்கைகளும், உலகளாவிய பழங்குடி மற்றும் குடியேற்றச் சமூகங்களின் பண்பாடுகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப்போகின்றன.

ஒரு கூறு குறித்துக் கள ஆய்வில் கிடைத்த தரவுகளை வெறுமனே வருணனைத் தன்மையில் கூறுவதைவிட, அதன் தொடக்ககால நோக்கம், காலந்தோறும் சமூக, பொருளாதார, கல்விநிலை, தொழில்நுட்பப் போக்குகளுக்கு அமைவாக அதில் நிகழ்ந்த மாற்றங்கள், அதன் நிலைபேற்றுக்கான காரணங்கள் ஆகியவற்றை இலக்கியம், மானிடவியல், வரலாறு, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்வேறு அறிவுத்துறைகளை இணைத்து, பல்துறைக் கலப்பு (Interdisciplinary) அணுகுமுறையில் நிகழ்த்தும்போதே நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் முழுமையான பயன் கிட்டும் என்பர். இந்நூல் தாங்கியுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்களிடம் அத்தகைய அணுகுமுறைப் பாங்கு இருப்பது சிலாகிக்கத்தக்கது.

நவீனமயமாக்கல், ஆகமமயமாக்கல் மற்றும் பெருந்தோட்டத் துறையின் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இத்தகைய நாட்டுப்புறச் சடங்குகளும் ஆற்றுகைக் கலைகளும் இன்று மெல்ல மெல்ல அருகிவருகின்றன. இத்தகைய முக்கியமான காலகட்டத்தில், மலையகத்தின் தெய்வ நம்பிக்கைகளையும் ஆற்றுகைக் கலைகளையும் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கிய எழுநா குழுவினர், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிய எம்.எம். ஜெயசீலன் மற்றும் கட்டுரைகளை வழங்கிய கட்டுரையாசிரியர்கள் ஆகியோர் காலத்தால் அழியாத பண்பாட்டுச் சேவையைச் செய்துள்ளனர் எனலாம். மலையகத் தமிழரின் உழைப்பையும், ஆவேசத்தையும், ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

சு.முரளிதரன்

முன்னாள் ஆணையாளர் நாயகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,

கல்வி அமைச்சு.