கோ. நடேசய்யர்: கணக்குப்பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கோ. நடேசய்யர்: கணக்குப்பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை
கோ. நடேசய்யர்: கணக்குப்பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை
எம். எம். ஜெயசீலன் எம். எம். ஜெயசீலன்

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் அசைவில் கோ. நடேசய்யரின் வகிபாகம் பற்றிக் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெளிவந்துள்ள போதிலும், அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. நடேசய்யரின் எழுத்துகளுள் கணிசமானவை சேகரிக்கப்படாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளைக் கொண்டும் புதிய மூலங்கள் சிலவற்றைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றில் நடேசய்யரின் பங்களிப்புகளும் அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. நடேசய்யரின் எழுத்துகள் பற்றிய அண்மைய கண்டுபிடிப்புகளும் மறுபதிப்புகளும் அவரின் பங்களிப்புகளை மறுமதிப்பீடுகளுக்கு உட்படுத்த வேண்டிய தேவையைத் தோற்றுவித்தன. அவ்விடைவெளியின் ஒரு பகுதியை நிறைவு செய்வதை நோக்காகக் கொண்டு நடேசய்யரின் நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் சமூக வரலாற்றுத் தளத்தில் நின்று மதிப்பிட்டுள்ள இந்நூல், புதிய உரையாடல்களுக்கான வாயிலைத் திறக்க முனைகிறது.

புத்தக ஆசிரியர் எம். எம். ஜெயசீலன்
எழுநா நூல் வரிசை 50
பக்க எண்ணிக்கை 224
வெளியீட்டு ஆண்டு 2026
பகுப்பு சமூகவியலும் மானிடவியலும்
முன்னுரை

காலனிய இலங்கையின் தனித்துவம் மிக்க ஆளுமைகளுள் ஒருவரான கோ.நடேசய்யர் பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை-அரசாங்க சபை உறுப்பினர், தொழிற்சங்கவாதி-தொழிற்சங்க ஸ்தாபகர், அரசியல் விமர்சகர், படைப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் ஆக்கபூர்வமாக இயங்கியுள்ளார். தஞ்சாவூரின் தென்ஆர்க்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர், மலையகத் தமிழரின் சமூக அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை (1920 1947: மரணிக்கும் வரை) அர்ப்பணித்துள்ளார்.

நடேசய்யரின் தொழிற்சங்கம் மற்றும் சமூக அரசியற் செயற்பாடுகள் குறித்துக் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெளிவந்துள்ளன. குமாரி ஜயவர்தன (1972, 2015), சாரல்நாடன் (1988, 1998), அந்தனி ஜீவா (1990), எஸ்.நடேசன் (1993), மு. நித்தியானந்தன், ஏ.பி. கணபதிப் பிள்ளை (2011), ரஷேல் குரியன் (2015), இரா.குறிஞ்சிவேந்தன் (2012, 2022, 2023) முதலானோரின் ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிட்டுக் கூறத்தக்கன. மேற்படி ஆய்வுகள் நடேசய்யரின் பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்ற போதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், புதிய மூலங்கள் சிலவற்றைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றில் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும் அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, மேற்படி ஆய்வுகளில் இடம்பெறுகின்ற மூலத்தரவுகளைத் தாண்டி, நடேசய்யரின் ஆளுமையை, பங்களிப்பை வெளிப்படுத்துகின்ற ஆய்வுகள் மிகமிக அரிதாகவே வெளிவந்துள்ளன. இந்த இடைவெளிகளுக்கு, நடேசய்யரின் எழுத்துகள் யாவும் முறையாக ஆவணப்படுத்தப்படாமை முதன்மையான காரணமெனலாம்.

நடேசய்யரின் நூல்கள் திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டுள்ளன. “அவரின் நூல்களைப் பெருந்தோட்ட நிர்வாகமே விலைக்கு வாங்கி எரித்துள்ளது" (Nadesan, 1993: 90); பெரிய கங்காணிமார்கள் பலர், நடேசய்யரின் நூல்களைத் தொழிலாளர்களிடம் சென்றடையா வண்ணம் தடுத்துள்ளனர். இதனை நடேசய்யரே தொழிலாளர் சட்ட புஸ்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசய்யருக்குப் பின் அவர் முன்னெடுத்த சமூக அரசியற் செயற்பாடுகள் முடங்கிவிட்டன. அவருடன் தொடர்புபட்ட எவரும் அவரை முன்னிலைப்படுத்தி அரசியற் சமூக களத்தில் மேற்கிளம்பவில்லை. "நடேசய்யரைப் போன்றவர்களின் முக்கியத்துவம் பின்னால் வந்த பல போலித் தலைவர்களாலும் அவர்களின் துதிபாடிகளாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளது” (இயக்கம்: டிசம்பர், 1977). அவரின் நூல்களும் நீண்டகாலமாக மறுபிரசுரம் பெறவில்லை. இந்நிலையால் நடேசய்யருடைய நூல்களின் புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதெனலாம். பிற்பட்ட காலத்தில், குமாரி ஜயவர்தன 'இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி' குறித்த ஆய்வில் நடேசய்யரின் பங்களிப்பினை விரிவாக மதிப்பிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்பின்பே நடேசய்யர் பற்றிய உரையாடல் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. மலையக மக்கள் இயக்கம், 'நடேசய்யரை மலையகத்தின் தொழிற்சங்க முன்னோடி' என முன்நிறுத்தி இயக்கம் பத்திரிகையில் நல்லதொரு அறிமுகக் கட்டுரையை 1977ஆம் ஆண்டு பிரசுரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சாரல்நாடன், அந்தனி ஜீவா முதலானோரின் அரிய முயற்சிகளால் நடேசய்யர் குறித்த தகவல்கள் தமிழ்ச் சூழலில் பரவலாக அறிமுகமாகின. இருப்பினும், நடேசய்யரின் எழுத்துகளைத் தொகுக்கும் முயற்சியோ நூல்களை மறுபதிப்பு செய்யும் முயற்சியோ இடம்பெறாததால் அவரின் மூல எழுத்துகள் பரவலான புழக்கத்துக்கு வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் அந்தனி ஜீவாவின் முயற்சியால் 'இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்' இரண்டாம் பதிப்பாக (2018) வெளியிடப்பட்டது. அவ்வெளியீட்டுக்குப் பின்பே இலங்கைத் தமிழ் நாடக வளர்ச்சியில் நடேசய்யரின் பங்களிப்பு பரவலான வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தனி ஜீவாவின் முயற்சியைத் தொடர்ந்து நடேசய்யரின் 'கதிர்காமம்' என்ற நூலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மறுபதிப்பாக (2020) வெளியிட்டது. அதன்பின்னர் நடேசய்யரின் 75ஆவது நினைவு ஆண்டையொட்டி 'இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்' (2022), 'தொழிலாளர் சட்ட புஸ்தகம்' (2022) ஆகிய நூல்களை இக்கட்டுரை ஆசிரியர் (எம்.எம். ஜெயசீலன்) மறுபதிப்பு செய்ததுடன் தேசபக்தனில் வெளிவந்த நடேசய்யரின் தன் வரலாற்றுப் பதிவான, 'எனது வாழ்க்கையின் நோக்கம்' என்ற தொடரையும் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். பெ. சரவணகுமார் நடேசய்யரின் 'ஒற்றன்' (2022), 'இந்தியா - இலங்கை ஒப்பந்தம்' (2022) ஆகிய நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவந்ததுடன் 2023ஆம் ஆண்டுக்கான இர. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவுப் பேருரையை, 'மலையகத்தின் சமூக உருவாக்கத்தில் கோ. நடேசய்யரும் அவரது அறியப்படாத எழுத்துகளும்' என்ற தலைப்பில் நிகழ்த்தினார். இம்மறுபதிப்புகளிலும் அவற்றையொட்டி எழுதப்பட்டவற்றிலும் இடம்பெறும் புதிய தரவுகள் நடேசய்யரின் பங்களிப்புகளை விரிந்த தளத்தில் உரையாடுவதற்கான வெளியைக் கட்டியெழுப்பியுள்ளன; ஏலவே நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில் காணப்படும் இடைவெளிகளை நிறைவு செய்ய வழிசமைத்துள்ளன. உதாரணமாக, 'இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்' என்ற நூல் குறித்த பதிவுகளைச் சுட்டிக்காட்டலாம்:

நடேசய்யர் 'இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்' என்றொரு சிறுநூலை வெளியிட்டுள்ளார் என்ற தகவல் குமாரி ஜயவர்தன அவர்களின் நூலில் இடம்பெற்றுள்ளது (1972: 344). நடேசய்யர் குறித்த விரிவான தகவல்களைத் தந்துள்ள சாரல்நாடனின் பதிவுகளில் இந்நூல் குறித்த வெளிப்படையான குறிப்புகள் எவையும் இடம்பெறவில்லை. இருப்பினும், 'தொழிலாளர் சட்ட புஸ்தகம்' குறித்த பதிவில், நடேசய்யர் 'தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும்' என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரமொன்று வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவு இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும், தொழிலாளர் சட்ட புஸ்தகம் ஆகிய நூல்கள் குறித்துச் சில ஐயங்களைத் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது. சாரல்நாடனின் பதிவைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்:

“நடேசய்யர் தனது வழமையான போக்கிலிருந்து விடுபட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். தொழிலாளர் சட்ட புஸ்தகம் என்ற பெயரில் 1929இல் வெளிவந்த அந்தப் புத்தகத்தைப் பற்றி நடேசய்யர் தனது பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார்... இந்நூலினை வாசித்தறிந்த தொழிலாளர்கள் மூன்று தோட்டங்களில் துரைமார்கள் மிரளும் அளவிற்குக் குழப்பம் விளைவித்தனர்... தன்னுடைய சட்டப் புஸ்தகம் அனைத்தையும் பெரிய கங்காணிகள் விலை கொடுத்து வாங்கித் தொழிலாளர்களிடம் போகாது பதுக்கிக் கொண்டதைக் கவனித்த நடேசய்யர், தொழிலாளர்களைச் சந்தித்து உரையாற்றும் கூட்டங்களில் 'தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும்' என்ற தலைப்பில் சட்டப் புஸ்தகத்திலுள்ள முக்கிய அறிவுரைகள் சிலவற்றை அச்சடித்துத் துண்டுப்பிரசுரங்களாக விநியோகித்தார்... தன்னை அத்தனை எளிதில் எதிரிகள் வெல்ல முடியாது என்ற நிலைமை உருவாகியிருப்பதை உணர்ந்த நடேசய்யர், மீண்டும் சட்ட புஸ்தகத்தை அச்சில் நூல் வடிவில் கொண்டு வந்தார். 1939இல் வெளியிடப்பட்ட அந்த நூல் தொழிலாளர்களின் அமோக ஆதரவைப் பெற்றது...” (சாரல்நாடன், 1988: 136-140).

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் என்ற சிறுநூல், 1928ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முதற் பதிப்பிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. இந்நூலினுடைய விரிவாக்கமாகவே 1939ஆம் ஆண்டு வெளிவந்துள்ள தொழிலாளர் சட்ட புஸ்தகம் அமைந்துள்ளது. அந்நூலின் முன்னுரையில் இடம்பெறும், “1928-ம் வருஷம் நான் ஒரு புஸ்தகம் வெளியிட்டிருந்தேன். அப்புஸ்தகங்கள் தொழிலாளர்களிடம் சேராமல் பல பெரிய கங்காணிமார்களும் முயற்சி எடுத்தார்கள். 1928-ம் வருஷத்திற்குப் பிறகு சட்டங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய சட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்புஸ்தகத்தில் சேர்த்திருக்கிறேன்” (நடேசய்யர்: 1939) என்ற குறிப்பும் அதனை உறுதிசெய்கின்றது. இந்நிலையால், சாரல்நாடனின் மேற்படி முடிவை மாற்றி எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய கண்டுபிடிப்புகளும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை ஏற்படுத்தியுள்ளன. சான்றாக, 'இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்' பற்றிய புதிய செய்திகளைக் குறிப்பிடலாம். அந்நூலில் உள்ள பாடல்கள் மீனாட்சியம்மாளால் எழுதப்பட்டவையாகும். அது குறித்த சாரல்நாடனின் பதிவு பின்வருமாறு அமைந்துள்ளது:

“1937ஆம் ஆண்டு கொழும்பு கமலா பிரஸ்ஸிலிருந்து இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம் என்ற நாடக நூலை அய்யர் வெளியிட்டார். அதில் மீனாட்சியம்மையால் இயற்றப்பட்ட பல பாடல்கள் இணைக்கப்பட்டிருந்தன... மீனாட்சியம்மை 1936இல் முழுநேர அரசியல் பிரசாரகராகிவிட்டிருந்தார். அதன் உச்சக்கட்டமாக 1937 அக்டோபர் 31இல் காலி முகத்திடலில் அவரது பாடலியற்றும் திறமைக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த அய்யர், அவரது திறமையை அதே ஆண்டில் தான் வெளியிட்ட நாடக நூலில் பயன்படுத்திக் கொண்டார்" (2015: 32)

இங்கு 1937இல் மீனாட்சியம்மாளின் பாடலியற்றும் திறமைக்குக் காலி முகத்திடலில் (பிரேஸ் கிரேடிலிக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டம்) பெரும் வரவேற்பு கிடைத்தபின்பே நடேசய்யர், அதே ஆண்டில் தான் வெளியிட்ட நாடக நூலுக்கு மீனாட்சியம்மாளின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற கருத்தினைச் சாரல்நாடன் பதிவு செய்துள்ளார். ஆனால், மேற்படி நாடகம் அச்சில் வெளிவர முன்பே அதன் பாடல்கள் மட்டும் 1931ஆம் ஆண்டு 'இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்நாடகத்தை 1928ஆம் ஆண்டே நடேசய்யர் வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளார். நடேசய்யரின் 'இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்' என்ற சிறுநூலில் அவரின் 'சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு' என்ற நூல் குறித்த விளம்பரம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்நூலில் இடம்பெறும் விளம்பரத்திற்கு அமைய ‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு' என்ற நூல் வெளிவரவில்லை. சிறிய இடைவெளிக்குப்பின் 1937ஆம் ஆண்டு 'இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்' என அந்நூல் வெளிவந்துள்ளது. திட்டமிட்டப்படி அந்நூலை வெளியிட முடியாமற்போனதால் அதில் அடங்கியிருந்த பாடல்களை மட்டும் இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு என இரண்டு பாகங்களாக முதலில் வெளியிட்டுள்ளனர். ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு' முதற்பாகத்திற்கு மீனாட்சியம்மாள் எழுதியுள்ள முன்னுரையில் இடம்பெறும் பின்வரும் குறிப்புகளும்,

"இலங்கைத் தோட்டங்களில் வேலைசெய்யும் 8 லட்சம் இந்தியத் தொழிலாளர் நிலைமையைப் பற்றி சாதாரண சனங்கள் அறிய வேண்டியது மிக்க அவசியமாகிவிட்டது. இத்தகைய பிரசாரத்திற்கு நாடகங்களே தக்க சாதனங்களாகும். அந்நோக்கம் பற்றியே தோட்டத் தொழிலாளர் நாடகம் ஒன்று எழுதப்பெற்று வருகின்றது. அந்நாடகத்தில் சேர்க்கப்பெற்றுள்ள சில பாடல்களைச் சேர்த்து, ஓர் சிறு புஸ்தகமாய் இப்புஸ்தகம் பிரசுரிக்கப் பெற்றிருக்கிறது” (மீனாட்சியம்மாள்: 1931)

அதன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் “தொழிலாளர் நாடகம் கூடிய சீக்கிரம் வெளியிடும் வண்ணம் இப்புஸ்தகங்களை வாங்கி என்னை ஆதரிப்பீர்கள் எனக் கருதுகிறேன்” என்ற குறிப்பும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் எழுத்துகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளால் மேற்கூறியவாறான புதிய வெளிச்சங்கள் ஏற்பட்டுள்ளன. இவை நடேசய்யரின் பங்களிப்பினை மீள் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய தேவையைத் தோற்றுவித்துள்ளன. அத்தேவையின் ஒரு பகுதியை நிறைவுசெய்வதாக அமைந்துள்ள இந்நூல், கிடைக்கப்பெற்றுள்ள புதிய தரவுகளின் பின்புலத்தில் நடேசய்யரின் நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் அறிமுகப்படுத்துவதையும் அவற்றைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் மதிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நடேசய்யரின் முதலாவது நூலான கணக்குப்பதிவு நூல், 1914ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அவரின் இறுதி நூலான கதிர்காமம் அவர் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் 1946ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதனால் இந்நூலுக்குக் 'கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை' என்ற உப தலைப்பு இடப்பட்டுள்ளது.

அறிமுகப் பகுதி நீங்கலாக, நடேசய்யரின் பதின்மூன்று வெளியீடுகள் பற்றிய அறிமுகமும் மதிப்பீடும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவைதவிர நடேசய்யரின் அறியப்பட்ட வேறு சில வெளியீடுகளும் உள்ளன. ஆனால், அவற்றின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நடேசய்யரியலை இன்னும் ஆழப்படுத்துவதற்கு அவ்விடுபட்ட எழுத்துகளைக் கண்டறிந்து, விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்துவது அவசியமானதாகும்.

நடேசய்யர் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் ஒரு தொடர் வளர்ச்சியாக இந்நூலில் உள்ள கட்டுரைகளை அணுகலாம். அவை நடேசய்யர் குறித்த புதிய ஆய்வு முடிவுகளுக்கான - புதிய உரையாடல்களுக்கான வாயிலைத் திறக்கத் துணைசெய்யும் என நம்புகிறேன். இதனைத் தொடராக எழுதுவதற்கான களத்தினை அமைத்துத் தந்த எழுநா குழுவினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக, சசீவன் அண்ணாவுக்கும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கட்டுரையை எழுதுவதற்குத் தூண்டிக்கொண்டே இருந்த எழுநாவின் ஜனனி, குகதர்ஷினி ஆகியோருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். இந்நூலின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து, தொடர்ந்தும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.எம்.ஜெயசீலன்