வளரும் வடக்கு: இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிய பார்வைகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
வளரும் வடக்கு: இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிய பார்வைகள்
வளரும் வடக்கு: இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிய பார்வைகள்
ஜெகன் அருளையா ஜெகன் அருளையா

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரது கவனத்திற்குக் கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இந்நூலின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகள், புத்தாக்கத் தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வுகள், முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடங்கள், வடக்குப் பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சினைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் அமைகின்றது. இது வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விவரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்குப் பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

புத்தக ஆசிரியர் ஜெகன் அருளையா
எழுநா நூல் வரிசை 49
பக்க எண்ணிக்கை 284
வெளியீட்டு ஆண்டு 2026
பகுப்பு பொருளியலும் நிதியியலும்
முன்னுரை

இலங்கையில் பிறந்த நான், 1966இல், எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போது எனது குடும்பத்தினருடன் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தேன். குழந்தைப்பருவத்திலேயே இப்பிரிவு நடைபெற்றிருந்தாலும், இலங்கையை நோக்கிய இனம்புரியாத ஈர்ப்பு விவரிக்க முடியாத ஒன்று. சிறு விடுமுறைக் கால வரவுகள் போக, இலங்கையில் நீண்டகால வாழ்வொன்றை மேற்கொள்ளும் பாக்கியம் 1993இல் எனக்குக் கிடைத்தது. சில பிரித்தானிய மென்பொருள் நிறுவனங்களின் முகாமையாளராகக் கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றும் அந்த வாய்ப்பு ஏழு வருடங்களுக்குச் சாத்தியமாகியது. இக்காலத்தில்தான் கிரிஷாப்தி நாகேந்திரா என்ற அழகிய இளம்பெண்ணை நான் திருமணம் செய்தேன். 1996 இல் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். கர்ணன் என அவனுக்குப் பெயர் சூட்டினோம். 2000ஆம் ஆண்டில் நாங்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பினோம். துர்ப்பாக்கியமாக, தொடர்ச்சியான சுகவீனம் காரணமாக, கிரிஷாப்தி 2013 இல் அவரது 40ஆவது வயதில் மரணிக்க நேரிட்டது. கர்ணனுக்கு அப்போது 16 வயது. கிரிஷாப்தியின் இழப்பே என்னை இலங்கைக்குத் திருப்பி அழைத்தது. கர்ணன் பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில் மேற்கல்விக்காக இணைந்துகொண்டதும், 2015இல், நான் யாழ்ப்பாணம் வந்தேன். விவரிக்க முடியாத அந்த ஈர்ப்பே என்னை யாழ்ப்பாணம் அழைத்தது. யாழ்ப்பாணத்தில் அப்போது எனக்கு எவரையும் தெரிந்திருக்கவில்லை. எனது தந்தையின் பரம்பரை நிலமொன்றில் என் வாழ்வு மீண்டும் புத்துயிர் பெற்றது.

வடமாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு முடிந்தளவு உதவிகளை வழங்குவதே எனது குறிக்கோளாக இருந்தது. நியூயோர்க் முதல் இலண்டன் வரை அல்லது கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான அக்கறையாளர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைத் தமதாக்கிக்கொள்கிறார்களே தவிர, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் படைப்பாளிகளாக எனக்குத் தோன்றவில்லை. வாய்ப்புகளை உருவாக்கும் சிலரும், வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்கள் பலருமாக இருப்பதே பயன்களைத் தருமென்பது எனது நம்பிக்கை. எனினும், இவ்விரண்டுமே அத்தியாவசியமானவை. ஒன்று மற்றொன்றின்றி முன்னேற முடியாது. வடக்கும் யாழ்ப்பாணமும் இழந்த பல படைப்பாளிகள் உலகெங்கும் பலவிதமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறார்கள். தகுந்த வாய்ப்புகள் கிடைக்காமையால் மனம் தளர்ந்த நிலையில், வடக்கையும் யாழ்ப்பாணத்தையும் அல்லாட விட்டுவிட்டு, உள்ளூர் பணியாளர்கள் வாய்ப்புகளைத் தேடி வேறிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைத் தவிர உலகமெங்கும் மிகவும் சிறப்பாக வாழ்கிறார்கள். சவால்களும் வாய்ப்புகளும் கிடைக்காமையால், அவர்கள் வாழ்வு திசைமாறிய தேக்க நிலைகளை அடைய நேரிடுகிறது. வாய்ப்புகளே மேலும் வாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்குகின்றன. வடமாகாணத்தில் இவ்வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் ஓர் ஊக்கியாக இருக்க வேண்டுமென்பதே எனது குறிக்கோள்.

2015 இல் யாழ்ப்பாணம் திரும்பிய நான், எனது பரம்பரை நிலத்தில் எனது குடும்பத்தின் முதலீட்டில் ஒரு பல்பாவனைக் கட்டடம் ஒன்றை நிறுவினேன். நான் இங்கு வசிப்பது தவிர்ந்த மீதியான இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமான மென்பொருள் நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்களின் ஆதரவில் இயங்கும் ஒரு கனடிய அரச சார்பற்ற நிறுவனம், உள்ளூர் இளைஞர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு உணவகம் ஆகியன இக்கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளன. நுண், சிறு, மத்திம அளவிலான (MSME) நிறுவனங்களின் வழிகாட்டியாகவும், முதலீட்டாளர்கள், வருகையாளர்கள் மற்றும் மாகாண அரச அங்கங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் நான் பணியாற்றுகிறேன். இதை விடவும், இங்கு நடைபெறும் கலைப்பணிகள் மற்றும் ஆங்கில மொழி வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கும் எனது ஆதரவை வழங்கி வருகிறேன். அத்தோடு, வடக்கில் நடைபெறும் நிகழ்வுகள், முன்னெடுப்புகள் பற்றி சஞ்சிகைகளிலும் முகநூல் பதிவுகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன்.

வடக்கைப் பற்றி நிறைய எதிர்மறையான கருத்துகள் உலவுகின்றன. வடக்கின் இளையோர் பற்றியும், அதன் வாய்ப்புகள், திறன்கள், ஆற்றல்கள் பற்றியும் பல்வகையான எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. கட்டுரைகள் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும் இவ்வகையான கருத்துகளைத் தகர்த்து, வாய்ப்புகளை உருவாக்கித் தருபவர்களையும் அவற்றின் பயனாளர்களையும் இங்கு மீண்டும் வரவழைப்பதே எனது நோக்கம்.

“எதிர்காலம் எப்படி அமையுமென்று" எதிர்வுகூறும் தீர்க்கதரிசியல்ல நான். இதை வேறு பலர் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே இங்கிருப்பவை பற்றித்தான் நான் எழுதுகிறேன். மதிப்புக் கூட்டிய விவசாயப் பண்டங்களையும், பெறுமதி வாய்ந்த கடலுணவுகளையும், உலகத்தரமான மென்பொருட்களையும் ஏற்றுமதி செய்வதில் நாம் பெருவெற்றிகளைக் கண்டுள்ளோம். சொற்பமேயானாலும், வெற்றிகரமான பல வியாபார முயற்சிகள் பல்லாண்டு காலமாகச் செழிப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றின் வெற்றிகளையும் சவால்களையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் மேலும் பல அபிவிருத்தி முயற்சிகளை இங்கு கொண்டுவர வேண்டுமென்பதே எனது குறிக்கோள்.

இங்கு பிரசுரமாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் 2015 முதல் 2025 வரையான காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்டவை. எனக்குத் தமிழ் புரியாது. ஆகையால், இவை அனைத்தும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக த. சிவதாசன் அவர்களுக்கும், நூலாக வெளிக்கொண்டுவரும் எழுநாவிற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு ஏற்கெனவே இருப்பவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் எதிர்கால வரவுகளுக்கான தூண்டியாக இருக்க வேண்டுமென்பதே எனது அவா.

12.06.2026

ஜெகன் அருளையா