ஈழத்துக் கீழைக்கரை வரலாறு: பொ.பி 12ஆம் நூற்றாண்டு வரை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
ஈழத்துக் கீழைக்கரை வரலாறு: பொ.பி 12ஆம் நூற்றாண்டு வரை
ஈழத்துக் கீழைக்கரை வரலாறு: பொ.பி 12ஆம் நூற்றாண்டு வரை
விவேகானந்தராஜா துலாஞ்சனன் விவேகானந்தராஜா துலாஞ்சனன்

ஈழத்துக் கீழைக்கரை, பூர்வீக மரபுகளாலும் பண்டைய குடியேற்றங்களாலும் உருவான, தனித்துவமான வரலாற்றுப் பண்பாட்டுப் பகுதியாய் விளங்குகிறது.

‘ஈழத்துக் கீழைக்கரை வரலாறு: பொ.பி. 12ஆம் நூற்றாண்டுவரை’ எனும் இந்நூல், பொறிப்புகள், எழுத்தாவணங்கள், தொன்ம மரபுகளையும் ஏனைய தமிழ், சிங்கள, ஆங்கில வரலாற்றுச் சான்றுகளையும் ஒப்பீட்டுப் பார்வையில் ஆய்ந்து இப்பகுதியின் வரலாற்றைப் புதுமையான கண்ணோட்டத்தில் முன்வைக்கிறது.

பொ.பி. 12ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு சமூகங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைப் பதிவுசெய்யும் இந்நூல், இலங்கை வரலாற்றாய்வில் ஒரு முக்கியமான பங்களிப்பாக அமைந்துள்ளது.

புத்தக ஆசிரியர் விவேகானந்தராஜா துலாஞ்சனன்
எழுநா நூல் வரிசை 48
பக்க எண்ணிக்கை 324
வெளியீட்டு ஆண்டு 2026
பகுப்பு வரலாறும் தொல்லியலும்
முன்னுரை
அணிந்துரை

மனிதன் கதைசொல்லி விலங்கு. அன்றாடம் என்பது மனிதனுக்குக் கதைகள் இல்லாமல் நகர்வதில்லை. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்னையர் நிலாச்சோறு ஊட்டும் போது ஆரம்பிக்கும் கதையிலிருந்து, இறுதி மூச்சு பிரியும் வரை, மனிதவாழ்வு கதைகளின் பெருக்கு மீது தான் அலை பாய்ந்தபடி செல்கிறது. சாதாரணமாகப் பேசுவதையே, “கதைத்தல்” என்று புழங்கும் ஈழத்தமிழர் மத்தியிலோ கதைகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை.

இப்போதெல்லாம் அரசியல் செயற்பாடு, அடையாள முன்னிறுத்துகை, கருத்தியல் செயற்பாடு என்றெல்லாம் கதை வேறொரு பரிணாமம் எடுத்திருக்கிறது. அந்தக் கதைக்கு “வரலாறு” என்று பெயர். பழைய சம்பவங்களைக் கூறுதல், அந்தச் சம்பவங்களைத் தொகுத்தல், நினைவுமீட்டல், கண்டு பிடித்தல், ஆவணப்படுத்தல் முதலிய விடயங்கள் உள்ளடங்கிய அத்தனையுமே வரலாறு தான். ஆனால் வரலாறு இன்று ஒரு அறிவியல் துறை. பழைய நிகழ்வுகளுக்கான மூலகாரணிகளையும் அந்நிகழ்வுகளின் விளைவுகளையும் விஞ்ஞானக் கருவிகள், ஆய்வுக் கருதுகோள்கள் கொண்டு கேள்விக்குள்ளாக்குவதும், பகுப்பாய்வு செய்வதும், விளக்குவதும் கூட வரலாற்றின் பணி தான்.

வேதனை என்னவென்றால், கதைகளைக் கேட்டு வளரும் நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வரலாறு நமக்குப் பிடித்தாற்போல் இருக்க வேண்டும், ஓர் இராசகுமாரனும் ஓர் அரக்கனும் அதில் கட்டாயம் இருக்கவேண்டும். நமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும், எதிர்த்தரப்பு தோற்கவேண்டும் என்றெல்லாம் நாம் இன்று வரலாற்றுக்கு வரையறைகள் விதிக்கிறோம். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத வரலாற்றைப் பொய் என்று முத்திரை குத்தி, அதற்கு மாற்றாக நமக்குப் பிடித்தாற்போல் இன்னொரு “வரலாற்றை” கட்டியெழுப்புகிறோம். அதை உண்மை என்று நிறுவப் படாதபாடு படுகிறோம்.

கசப்பான உண்மையை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். கதையும் வரலாறும் முற்றிலும் வேறுவேறானவை. கதைகளை யாரும் உருவாக்கிக் கொள்ளலாம். அதை நம்புவதும் மறுப்பதும் எவருக்குமுள்ள சுதந்திரம். ஆனால், வரலாறு கதைகளை விட மெய்யானது. பக்கச்சார்பாலோ, நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாலோ என்றோ நிகழ்ந்த வரலாறு மாறாது, மாறவும் கூடாது. விஞ்ஞானத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் மூலம் நிரூபிக்கப்படுவதால், வரலாறு திருத்தமானது. எவர் மீதும் ஓரம் சாராது வெளிப்படுவதால் அது இரக்கமற்றது. இரக்கமற்றது என்பதாலேயே அது தூய்மையானது.

மீமாந்தத் தன்மையுள்ள (Supernatural) புராணக்கதைகளை உண்மையாக நடந்தவை என்று நம்புவதற்கும், அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்ந்தன என்று உறுதியாகச் சொல்வதற்கும், சமய ரீதியாக எவருக்கும் பூரண உரிமை உண்டு. ஆனால், இந்த மாய மந்திரங்களுக்கோ, அதிசயங்களுக்கோ வரலாற்றில் இடமில்லை. ஒருவேளை, ஒருவர் வரலாற்றுப்பாத்திரம் என்பது நிரூபிக்கப்பட்டு, அவருடைய வரலாற்றில் அற்புதச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றைக் குறியீடாகப் (Symbolic) புரிந்துகொண்டு, அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான விதத்தில் விவரிக்க முயன்றபடி தான், ஒரு வரலாற்றாய்வாளன் தன் ஊகத்தை முன்வைக்கவேண்டும். சொந்த சமய நம்பிக்கைகளையோ, மீமாந்த அற்புதங்களையோ அப்படியே ஏற்றுக்கொண்டு அவன் ஒரு வரலாற்றைச் சொல்ல முற்படுவான் என்றால், அது வரலாறே அல்ல, கதையே தான். ஏனென்றால், வரலாறு கறாரானது. யதார்த்தத்தில் தீவிரமாகத் தங்கியிருப்பது.

ஆனால் வரலாற்றுக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. எழுத்தாவணங்கள், வாய்மொழி மரபுரைகள், தொல்லியல் சின்னங்கள் என்பவற்றில் கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்துத்தான் வரலாறு கட்டியெழுப்பப்படுகிறது. தரவுகள் கிடைக்காத இடங்கள் வரலாற்றில் இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த இடைவெளிகளை நிரப்புபவை அந்த வரலாற்றைக் கட்டியெழுப்பும் ஆசிரியனின் ஊகங்கள் தான்.

கிடைக்கும் சான்றுகளில் தனக்குப் பொருத்தமானதென ஆசிரியன் கருதும் சான்றொன்றின் மூலம் உருவாக்கப்படும் ஊகமே அவ்விடைவெளியை நிரப்புகிறது. இங்குதான் வரலாறு தூய்மையிழக்கின்றது.

எவ்வாறு, வரலாற்றின் வாசகர்கள் தமக்குப் பிடித்த “கதை”களை வரலாற்றில் எதிர்பார்க்கக் கூடாதோ, அவ்வாறே வரலாற்று ஆசிரியனும், தனக்குப் பிடித்த “கதை”யை வரலாறு என்ற பெயரில் எழுதிவிடுபவனாக இருக்கக்கூடாது. வரலாற்றை எழுதும் போது அவன் தன் தரப்பு - பிற தரப்பு என்ற பேதமின்றி நடுநிலை நின்று ஆராய்ந்தே பொருத்தமான சான்றுகளை ஊகத்துக்கு எடுக்க வேண்டும். அது முடியாதவிடத்தில் சாத்தியமான அத்தனை சான்றுகளையும் சுட்டிக்காட்டி, “இவற்றில் என் ஊகம் இது” என்று தெளிவாகச் சுட்டிக்காட்டி, அந்த வரலாற்று இடைவெளியை அப்படியே பேணலாம். அவனை அடுத்துவரும் இன்னொரு வரலாற்றாசிரியன் பின்பொருநாள் திருத்தமான துருப்பைக் கண்டடையும் போது அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவனுக்குச் சௌகரியமாக இருக்கும்.

எனவே, ஊகங்கள் நம்பகத்தன்மை கொண்டதாக - முக்கியமாக நடுநிலை வாய்ந்தவையாக இருக்க வேண்டும். ஒருவேளை வரலாற்றாய்வாளன் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவனாக இருந்து, தன் தரப்பிற்கு உரிமைக்குக் குரல் கொடுப்பதற்காக வரலாற்றாய்வு செய்கின்றான் என்றால் கூட, அவன் செய்யவேண்டியது, குறித்த சிக்கலை நடுநிலையோடு ஆராய்ந்து, அதன் நிறை - குறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தன் தரப்புக்கு ஏன் நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களைப் பொதுவெளியில் முன்வைப்பது தான்.

ஆனால் இது பெரும்பாலும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் தனக்கென ஒரு கருத்தியல் வைத்திருக்கிறான். அதை நிறுவுவதற்கே அவன் வரலாற்றை ஆயுதமாக எடுக்கிறான். எனவே தன் கருத்தியலையே ஊகமாக்கி வரலாற்றை நிரவிவிடுகின்றான். அவனது பக்கச்சார்பான ஓர் ஊகம் வரலாறாக மாறிவிடுகின்றது. இப்படி, வரலாற்றாசிரியன் ஒருவனுக்கு இருக்கக்கூடாத முன்முடிவு, பக்கச்சார்பு, கருத்துத்திணித்தல் முதலிய இயல்புகளுடன் தான் தமிழிலே பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மார்க்சிய, திராவிட, தமிழ்த்தேசிய, இந்துத்துவக் கருத்தியல்களைக் கொண்ட வரலாற்றாசிரியர்களின் சொந்தக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பல ஊகங்கள், மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரலாறு என்றே நம்பப்பட்டு இன்று தமிழர் வரலாறாகத் தரமுயர்ந்து விட்டிருக்கின்றன.

களப்பிரர் காலம் இருண்ட காலம், எண்ணாயிரம் சமணர்கள் சம்பந்தரால் கழுவேற்றிப் படுகொலை செய்யப்பட்டனர், இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அரசர்களும் தமிழ் ஆக்கிரமிப்புகளை எதிர்த்த பௌத்தத் தேசியவாதிகள் என்றெல்லாம் இப்படிப் பிரபலமடைந்த வரலாற்று ஊகங்கள் ஏராளம். இன்னும் சாதிய, மத, பிரதேச, இன ரீதியாக வகுப்புவாதச் சிந்தனை கொண்ட வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட பல வரலாற்று ஊகங்களால் தமிழ் அறிவுத்துறைக்கு விளைந்த விளைந்துகொண்டிருக்கும் இழப்பு கொஞ்சநஞ்சமல்ல.

இப்படிச் சொல்வதை வாசகர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. குறுங்குழுக்கள் சார்ந்த வரலாறு எழுதப்படவே கூடாது என்றோ, இன்றுவரை தமிழில் நல்ல வரலாறு எழுதப்படவே இல்லை என்றோ இந்நூலாசிரியன் கூறவரவில்லை. இவன் சொல்லவருவதெல்லாம், வரலாறு வரலாறாகவே எழுதப்பட, பொருத்தமான சான்றுகள் கிடைக்காதவிடத்து, அந்த இடைவெளிகள் இடைவெளிகளாகவே பேணப்பட வேண்டும் என்பதைத் தான். குறுங்குழுக்கள் சார்ந்த நுண் வரலாறுகளே இன்று மானுடப் பெருவரலாற்றைத் தெளிவாக எழுத ஏராளமான சான்றுகளைத் தந்திருக்கின்றன. சாதிய, பிரதேச, மத, இனத்துவ நுண் வரலாறுகள் எழுதப்படத்தான் வேண்டும். ஆனால், அவற்றை எழுதும் ஆசிரியன் தன் கருத்தியலை இயன்றவரை அதில் புகுத்தாது தவிர்க்க வேண்டும்.

அல்லது இப்படியும் சொல்லலாம். குறித்த கருத்தியலை வரித்துக்கொண்ட ஆசிரியன் எழுதும் ஒரு வரலாறு, எதிர்க்கருத்தியல்களைக் கொண்ட வாசகர்களால் வாசிக்கப்படும் போதும், மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். அதில் எதிர்க்கப்படுகின்ற அல்லது விமர்சிக்கப்படுகின்ற விடயங்கள் இருக்கலாம். ஆனால் புலமைசார் துறையினர் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும்படி, இட்டுக்கட்டிய பொய்களையோ, பக்கச்சார்பான முன்முடிவுக் கருத்துகளையோ அவன் வரலாறாக எழுதிவிடக்கூடாது.

தனக்குரிய கருத்தியலை வரலாற்றுக்குள் அவன் நுழைக்கும் போது அந்த வரலாற்றைப் புலமைசார் உலகம் முழுமையாக அங்கீகரிக் காது. அவ்வாறு அங்கீகாரம் பெறத்தக்க வரலாறுகளே தமிழ்கூறு நல்லுலகுக்குச் சமகாலத்தில் அதிகம் தேவைப்படுபவையாக இருக்கின்றன. ஆக, வரலாற்றை எழுதப்புகும் வரலாற்றாசிரியன் சற்று அப்பால் தன்னைத் தள்ளி நிறுத்திய பின்பே வரலாற்றை எழுதவேண்டும்.

இனி தலைப்புக்கு வருவோம். “ஈழத்துக் கீழைக்கரை வரலாறு” எனும் இந்நூல், இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் ஆராயப்போகும் ஒரு நூலாகும். கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறப்போகும் நூல் இது.

இப்போது இந்நூலாசிரியனுக்கு மிகப்பெரிய சவால் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஒரு வரலாறு எப்படி எழுதப்படக்கூடாது என்பதையும், ஒரு வரலாறு எப்படி பக்கச்சார்பற்றதாக, விஞ்ஞான அளவீடுகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவன் தன் வாசகருக்கு தெளிவாக வரையறுத்துக் கூறியிருப்பதால், அவன், தான் கூறிய வரையறைக்கேற்பவே சரியாக வரலாற்றை எழுதுகின்றானா என்பதை நோட்டம்விட்டு விமர்சிக்கும் உரிமையை அவனது வாசகர்கள் இப்போது பெற்றிருக்கிறார்கள். எனவே வாசகர்கள் எதிர்மறையாக விமர்சிக்காதவாறு வரலாற்றை திருத்தமாக எழுதவேண்டிய ஒரு சவால் அவன்முன் வைக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, இந்நூல் முன்வைக்கும் சில முடிவுகளும் பரிந்துரைகளும் தேசியவாதக் கருத்தியல்களைக் கொண்ட, பாரம்பரிய மரபுரைகளை முடிந்த முடிபாக நம்பும் சில வாசகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சான்றுகள், புலமைத்தள உரையாடல்கள், உலகளாவிய ஆய்வுத் தராதரங்கள் என்பவற்றால் கட்டமைக்கப்படுவதே உண்மையான வரலாறு என நம்புபவன் இந்நூலாசிரியன் என்ற வகையில், இந்நூலில் ஏற்கமுடியாத, அல்லது நிரூபிக்க முடியாத பார்வைகளைக் காணும் வாசகர்கள் தாராளமாக காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கலாம், நூலாசிரியனிடம் கலந்துரையாடலாம்.

இந்நூலில் இரு விடயங்களைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். பழைமையைப் பேணுவதில் ஒரு சீர்மை இருக்க வேண்டும் என்பதற்காக இந்நூலில் பழைய மட்டக்களப்பு மாவட்டத்தின் “பற்று” நிருவாகப் பிரிவுகள், இன்றைய பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இதில் சில நெகிழ்வுப் போக்குகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பற்று முறைமை முற்றாக மறைந்துபோன பின்னர் உருவான பிரதேச செயலகப் பிரிவுகளான காத்தான்குடி, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, அம்பாறை என்பன, பொருத்தப்பாடு கருதியும், உத்தியோகப்பற்றற்ற ரீதியிலும், முறையே மண்முனைப்பற்று கிழக்கு, கரைவாகுப்பற்று, அக்கரைப்பற்று மத்தி, வேகம்பற்று என்றவாறு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்று வழக்கிழந்துவிட்ட “கரைவாகு மேற்கு” முதலிய நிருவாகப் பிரிவுகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. இவையும் இவை போன்ற ஏனைய நிருவாகப் பிரிவினைகளும் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளவை என்பதையும், இவற்றை வரலாற்று ரீதியில் திருத்தமானவையாகக் கொண்டு ஆராய வேண்டிய கடப்பாடெதுவும் வாசகர்களுக்கு இல்லை என்பதையும் நூலாசிரியன் முன்கூட்டியே சொல்லிக்கொள்ள விரும்புகிறான்.

மேலும், பலருக்கு பொறுமையிழப்பை ஏற்படுத்தலாம் எனும் போதும், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுத்துக் குறியீடுகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறான். இது கிரந்தம் தவிர்ப்பதிலும் தமிழை செய்யறிவு யுகத்தில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதிலும் என்னென்ன தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை எதிர்வினைகள் மூலம் அறிவதற்கான சோதனை முயற்சியும் கூட.

நூலுக்கு அருமையான அதேவேளை விரிவான அணிந்துரை யொன்றை வழங்கிய பேரா. சி. மௌனகுரு ஐயா அவர்களுக்கு என் வந்தனம். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் பெரும்பேறுடையவன். கூடவே, கீழைக்கரையின் வரலாற்றை எழுதவும் ஆராயவும் முயன்ற சீ.ஓ. கனகரெத்தினம், வீ.சீ. கந்தையா, வித்துவான் கமலநாதன் தம்பதியினர், அட்டப்பள்ளம் சி. கணபதிப்பிள்ளை, எஃப்.எக்`ச்.சீ. நடராசா, க. மகேசுவரலிங்கம், வெல்லவூர்க் கோபால், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி, ஈழத்துப் பூராடனார், தங்கேசுவரி அம்மையார், கு. தனபாக்கியம் அம்மையார் உள்ளிட்ட அறிஞர்களையும், புலமைத்தளத்தில் முக்கிய குறிப்புகளை விட்டுச்சென்ற பேரா. சி. பத்மநாதன், கா. இந்திரபாலா, பேரா. கிரு `ச்ணரா சா, பரமு பு`ச்பரெட்ணம், கணநாத் ஒபேசேகர, செனரத் பரணவிதான, ரணவெல்ல, டெனி'ச் மக்கில்வ்ரே, மார்க் விட்டேகர், லெஸ்டர் ஆர். ஹெய்ட் உள்ளிட்ட கல்வித்துறை அறிஞர்களையும் இவ்விடத்தில் எனக்கான வழிகாட்டிகளாக நினைந்து பணியக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்நூல் தொடராக வெளியான போதும் பின்னர் தற்போது நூலாக வெளிவரும்போதும் பல்வேறு விதங்களில் உதவிய சசீவன் கணேசானந்தன், கபில்தேவ் 'ச்ரானி'ச்ல'ச், பவித்ரா மாயழகு, சனனி உள்ளிட்ட எழுநா குழுவினருக்கும், நூல் வடிவமைப்புச் செய்த ரவீந்திரன் கருப்பையாவுக்கும், வெளியீட்டுப் பங்காளரான மானுடம் நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

தாய் கண்ணகிக்கும் அவள் கோவில் கொண்டு வீற்றிருக்கும் தாய் மண் தம்பிலுவில்லுக்கும் தாய்மொழி தமிழுக்கும் தமரென நீங்காத என் குடும்பத்தவர்க்கும் திருக்கோவில் பதியுறையும் அறுமுகச்சிவனுக்கும் என் அன்பு.

வி.துலாஞ்சனன்,

மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு.

vthula27@gmail.com

2025.08.09

மட்டக்களப்பு வரலாற்று எழுத்தியலில் ஒரு புதிய பார்வை

“ஈழத்துக் கீழைக்கரை வரலாறு” என்பது இந்நூலின் பெயர். நூலின் ஆசிரியர் வி. துலாஞ்சனன். இந்த நூல் என்ன நுதலுகிறது? யார் இந்த நூலாசிரியர் துலாஞ்சனன்?

ஈழத்துக் கீழைக்கரை வரலாறு என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதியின் வரலாறு ஆகும். இந்நூலில் வரலாற்று ஆரம்ப காலத்திலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 12 ஆம் நூற்றாண்டு வரையான வரலாறு கூறப்படுகிறது. இதனை எழுதியவர் அரச பணியில் உயர்தரத்திலான இலங்கை நிர்வாக சேவை அதிகாரி. இவர் தமது எழுத்துகளால் பண்பாட்டு ஆய்வாளராயும் வரலாற்று ஆய்வாளராயும் புலமை உலகில் அறியப்படுபவர். இந்நூலுக்கு முன்னுரை வரைந்து தருமாறு துலாஞ்சனன் கேட்டிருந்தார். வெறுமனே முன்னுரையாக அன்றி, நாம் ஐந்து தலைப்புகளில் இந்நூல் பற்றி விரிவான பார்வை ஒன்றை மேற்கொண்டுள்ளோம். அவையாவன:

1. இந்நூலில் கூறப்படுபவை யாவை?

2. இக்கூற்றுகளுக்கூடாக மேல் எழுவது என்ன?

3. மரபுவழி வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து துலாஞ்சனன் மாறுபடும் இடங்கள் யாவை?

4. இதில் விடுபட்டவை அல்லது மேலும் நுனித்து நோக்கப்பட வேண்டியவை யாவை?

5. இதை எழுதும் துலாஞ்சனனின் தகைமைகள் யாவை?

1. இந்நூலில் கூறப்படுபவை

13 தலையங்கங்களையும் எழுத்துக்கு வழிகாட்டும் மூலங்களையும் துணைமூலங்களையும் கொண்டு 300இற்கு மேற்பட்ட பக்கங்களில் அமைந்த இந்நூலில் அமைப்பை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம்.

ஒருபகுதி கீழைக்கரை பற்றிய வரைவிலக்கணம், அக்கீழைக்கரையின் வரலாற்றை அறிய உதவும் வரலாற்று ஆதாரங்கள், எழுத்து ஆதாரங்கள், தொன்மைச் சான்றுகள், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

இன்னொரு பகுதி கீழைக்கரையின் வரலாற்றைக் கூறுகிறது.

வரலாற்றுக்காலம் தொடக்கம் கீழைக்கரையில் சிற்றரசுகள் தோன்றியமை, அதன்பின் நடந்த அனுராதபுரப் பேரரசின் உதயம், முன்னைய அனுராதபுர காலத்தில் கீழைக்கரை அதன் கீழ் இருந்தமை, பின்னைய அனுராதபுரக் காலத்தில் கீழைக்கரையின் நிலைமை என விரிந்து பத்தாம் நூற்றாண்டில் சோழ ஆட்சியின் கீழ் கீழைக்கரை வந்தமையும் கூறப்படுகிறது.

ஆதாரங்களை முதலில் விரிவாகத் தந்து அந்த ஆதாரங்களை விளக்கி அவற்றை வியாக்கியானிப்பதன் மூலம் கீழைக்கரை வரலாற்றைக் கட்டமைக்க முயலுகிறார் ஆசிரியர். தரவுகளை வைத்துக்கொண்டு அதற்கு விளக்கம் அளித்து ஒரு கோட்பாட்டை உருவாக்குவது ஆய்வாளர்களின் வழமையான கடமை. அந்த முறையினை ஆசிரியர் இங்கு மேற்கொள்கின்றார்.

ஒரு வகையில் ஒரு கதையைக் கூறுவது போல இது அமைந்தாலும் ஆய்வுத் தகவல்களை அதிகமாக வழங்குகின்ற கதை இது. கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக உணர்ந்தவர் நூலாசிரியர் என்பதற்கு அவர் கூறுகின்ற பின்வரும் கூற்றுச் சான்றாக அமைகின்றது.

“கதையும் வரலாறும் முற்றிலும் வேறு. வெவ்வேறு அளவில் கதைகளை யாரும் உருவாக்கிக் கொள்ளலாம். அதை நம்புவதும் மறுப்பதும் எவருக்கும் உள்ள சுதந்திரம். ஆனால் வரலாறு அப்படிப்பட்டதல்ல. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் வரலாறு மாறாது. விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட கருவிகளின் மூலம் நிரூபிக்கப்படுவதால் வரலாறு திருத்தமானது. எவர் மீதும் ஓரம் சாராது வெளிப்படுத்தப்படுவதால் அது இரக்கமற்றது. இரக்கமற்றது என்பதால் அது தூய்மையானது” என்பது ஆசிரியருடைய அடிப்படையான வாதம்.

இந்த வாதத்தின் மேல் தான் அவர் தன் கருத்துகளைக் கட்டமைக்கின்றார். இந்த வார்த்தைகள் வரலாற்று உண்மை மீது அவர் கொண்ட பற்றினையும் பிடிப்பினையும் காட்டுகின்றது.

ஈழத்துக் கீழைக்கரை என்பது யாது? என்ற விளக்கம் தெளிவாக ஆரம்பத்தில் கூறப்படுகிறது. இலங்கையின் கீழ் மாகாணமே இங்கு கீழைக்கரை எனப்படுகிறது. அதாவது ஈழத்தின் கிழக்குத் திசையில் அமைந்த கரையோரப் பகுதி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்ற மூன்று பிரதேசங்களும் ஒருங்கிணைந்த பகுதி. இந்த மூன்றும் இணைந்த கீழைக்கரை ஓர் ஆட்சிப் பிரிப்பா? அதாவது நிர்வாகப் பிரிப்பா? அல்லது ஒரு பண்பாட்டுப் பிரிப்பா? என்பது ஒரு முக்கிய வினா.

இங்கு நிலவும் பொதுப் பண்பாடுகளைக் கொண்டு இதனை ஒரு பண்பாட்டுப் பிரதேசமாக கொண்டனர் புலமையாளர்கள்.

மட்டக்களப்புத் தேசம் (வீ.சி. கந்தையா)

மட்டக்களப்பு மாநிலம் (கணபதிப்பிள்ளை)

மட்டக்களப்புப் பிரதேசம் (மௌனகுரு)

போன்ற சொல்லாடல்கள் மட்டக்களப்புப் பற்றிய ஆய்வுப் புலமைத்தளத்தில் நிகழ்ந்தன என்று கூறும் துலாஞ்சனன், கிழக்கு மாகாணத்தின் முன்னைய தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்காத முக்கியமான பண்பாட்டு அம்சங்களை இலங்கையின் கிழக்குக் கரையில் மேற்கு நாட்டவர் கண்டு அவற்றைப் பொதுமைப்படுத்திக் காட்டினர் என்கிறார்.

மேலை நாட்டார் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கண்ட விடயங்களாவன:

1. பிராமணரோ வேளாளரோ அல்லாத இங்கு, ஆதிக்கத்துடன் வாழும் ஏனைய சமூகங்கள்.

2. தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலே காணப்படும் தாய்வழிக் “குடி" அடையாளங்கள்.

இந்த இரண்டு விடயங்களும் அடங்கிய புவியியல் பிராந்தியத்தையே இலங்கையின் கிழக்குக்கரை என வெளிநாட்டு மானிடவியல் ஆய்வாளரான மைக்கில்றே வரையறுக்கிறார் எனக் கூறும் துலாஞ்சனன், அதனை விரித்து, சிங்கள மக்கள் குடிபுகுந்த பாணமையையும் இணைத்து தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் என மூவின மக்கள் வாழ்ந்த பிரதேசம் கீழைக்கரை எனக் கொணர்ந்து,

“கொட்டியாரக் குடாவுக்கும், குமுக்கன் ஆற்றுக்கும், வங்கக் கடலுக்கும், விந்தனைக் காட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலும் தாய்வழிக் குடி மரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டு நுண் பிராந்தியங்களால் ஆனதும், கிறிஸ்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும், அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு கீழைக்கரையாகும்” என்று வரையறுக்கிறார்.

மட்டக்களப்புப் பற்றிய பிரதேசப் பண்பாட்டு வரைவிலக்கணத்தைக் கூறுகையில் துலாஞ்சனன் முன்னைய ஆய்வாளரிடமிருந்து வேறுபட்டவராகவும் காணப்படுகிறார். இந்த முடிவு வெறும் உணர்வுபூர்வமான முடிவல்ல. அவரது ஆராய்ச்சியால் அவர் வந்தடைந்த முடிவு என்பதுடன், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான ஒரு முடிவு ஆகும்.

இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று, மூன்றாவது அத்தியாயமாக அமையும் “கீழைக்கரையின் நிலவியல்” என்னும் அம்சமாகும்.

கீழைக்கரையின் நிலம், நிலவியல் என்பன கீழைக்கரையின் வரலாற்றை நிர்ணயிப்பதில் வகித்த பங்கினை அவர் விவரிக்கிறார். அதற்கு அடுத்து கீழைக்கரையின் வரலாற்றை அறியும் வரலாற்றுச் சான்றுகளைத் தருகிறார். பொறிப்புச் சான்றுகள், கல்வெட்டுகள், புதைபொருள் சான்றுகள் என்பவற்றுடன் கீழைக்கரையின் வரலாற்றை அறிய உதவும் சிங்கள மொழி இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்கள், ஐரோப்பியக் குறிப்புகள் என்பனவும் தரப்படுகின்றன. இவற்றுக்கும் மேலாக கறாரான மரபுவழி வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் எடுக்காத,

ஊர்த் தொன்மங்கள்

சமூகத் தொன்மங்கள் (சீர்பாதர், சோனகர், கரையோர வேடர்)

வழிபாட்டு இலக்கியத் தொன்மங்கள்

எனத் தொன்மங்களையும் வரலாற்று ஆவணமாக எடுக்கிறார். இதனால் இவரது ஆய்வு ஏனையோரிலிருந்து வேறுபடுகிறது. தொன்மங்களுக்குள்ளும் வரலாறு புதைந்து கிடக்கிறது. ஆனால் அவற்றைத் தோண்டுவோர் தான் மிகக் குறைவு.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும், முக்கியமாக நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டும் நூலாசிரியரால் நுணுக்கமாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு பற்றிய கட்டுரைகளிலும் வழக்கறிஞர் போல அவர் நுணுக்கமாக தன் வாதங்களை எடுத்துரைக்கும் முறையும், வாதாடும் முறையும் அவரது சிந்தனையின் சிறப்பினைக் காட்டுகின்றன.

இரண்டாம் பகுதியான வரலாற்றைக் கூறும் பகுதியில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தக் கீழைக்கரையில் மக்கள் வாழ்ந்த தடங்கள், அதன் பின்னர் ஏற்பட்ட நாகக் குடியிருப்புகள், நாக வேள்புலங்களின் தோற்றம், அதன் பின்னர் எழுந்த அனுராதபுரப் பேரரசின் தோற்றம், உருகுணையுடன் அதற்கு இருந்த தொடர்பு என்பன கூறப்படுகின்றன. இறுதிப் பகுதியில் பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக்குள் கீழைக்கரை வந்தமையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் கூறப்படுகின்றன.

இவ்வண்ணமாக மட்டக்களப்பின் வரலாற்றைத் தனக்கு முந்திய ஆய்வாளர்களின் வழி சென்று விளக்கி, அதேவேளை அவர்களின் ஆய்வு முடிவுகளையும், அதன் சரி பிழைகளையும், விமர்சித்து தன் ஆய்வு முடிவுகளை முன்வைக்கின்றார். அவர் வைக்கும் ஆய்வு முடிவுகளைத்தான் நான் "ஒரு புதிய பார்வை” என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

2. இந்த எழுத்துகளூடாக மேலெழும் சிறப்பு அம்சங்கள்

(I) பெரும்பாலும் ஈழ வரலாற்று ஆசிரியர்கள் அதிகம் அழுத்தாத கீழைக்கரைவின் நிலவியல், விஸ்தாரமாகக் கூறப்படுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். உலகம் மிகவும் பரந்தது. கடலாலும் தரையாலும் உருவான இந்த உலகு பலவகை நிரப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இயற்கை காலந்தோறும் இந்த நிலப்பரப்புகளை வடிவமைத்து வந்துள்ளது என்பது நிலவியலாளர்கள் முடிவு. பாலைவனம் தொடக்கம் தரைக்கூடாகக் கரையோரப் பிரதேசங்கள் வரை உலக நிலம் பரந்து விரிந்து கிடக்கிறது. தாம் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளுள்ள இடத்தில் மக்கள் கூட்டம் குடியேறுவதே இயல்பு. வரலாறு தோறும் இது நிகழ்ந்துள்ளது. அல்லது ஓரளவு வாழும் வசதியுள்ள இடத்தில் குடியேறிய பின்னர் தமக்கேற்ப அப்பிரதேசத்தை அச்சமூகம் வளப்படுத்தியும் கொள்ளும்.

கீழைக்கரையில் இயல்பாகவே வளம் நிறைந்திருந்தது. அங்கு ஓடும் ஆறுகள், பரந்து விரிந்த செழுமையான காடுகள், வளப்படுத்தப்பட்ட வயல்கள் அல்லது வயலாக வளப்படுத்தக்கூடிய தரைகள், தீவுகள், கழிமுகங்கள், அதன் மண்வளம், சிறப்பாக அதன் காலநிலை பற்றி ஆசிரியர் மிகவும் விவரமான தகவல்களைத் தருகின்றார். வரலாற்றையும் பண்பாட்டையும் உருவாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பவை நில அமைப்பும் காலநிலையும் ஆகும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களை மையங்கொண்டு எழுந்த தொல்காப்பிய இலக்கண நூல் மக்கள் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்த நிலம், காலம் என்பன பற்றிக் கூறுகின்றது. நிலத்தின் கருப்பொருட்களை முக்கியமாக அது கூறுவதை இங்கு நினைவு கூருவோம். அவ்வகையில் கீழைக்கரையின் நில இயல்பு, இயற்கை வளம் என்பன மிகத் துல்லியமாக விவரிக்கப்படுவது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

கீழைக்கரையின் வரலாறு, பண்பாட்டு உருவாக்கலில் பாதைகள் முக்கிய இடம்பெறுகின்றன. ஐரோப்பியத் தேசாதிபதி ஆட்சியின் போது தான் இலங்கையில் பாதைகளும் பாலங்களும் அமைக்கும் வழக்கம் உருவாகியது எனப் படித்துள்ளோம். எம்மத்தியில் அன்றும் அரசியல், சமூக, பண்பாட்டு இணைப்புகளுக்கான பாதைகள் இருந்தனவாயினும், நீர்வழிப்பாதைகளே இவற்றுக்கு மிக முக்கிய பங்கு ஆற்றின.

மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை எனப் பெயர்பெற்ற பேராறுகளையும் பல நூற்றுக்கணக்கான சிற்றாறுகளையும் உடையது இலங்கை பூமி. அக்காலத்தில் இவையே தொடர்புவழிப் பாதைகளாக இருந்தன என்பது துலாஞ்சனன் வைக்கும் இன்னொரு சிறப்பான கருத்தாகும். கீழைக்கரையின் தெற்கிலிருந்து வடக்கே திருமலை வரை ஆறுகள் ஊடாகப் பயணம் பண்ணும் சாத்தியப்பாடுகளை இயற்கை கொடுத்திருந்தது. இதனூடாகவே புதிய சமூகங்களின் வருகையும் வணிகமும் பண்பாட்டுக் கலப்பும் ஏற்பட்டதுடன், அரச படையெடுப்புகளும் ஏற்பட்டன என துலாஞ்சனன் வாதிப்பதும் இன்னொரு சிறப்பம்சமாகும்.

(II) வரலாற்று ஆதாரங்களுக்கு அவர் தொன்மங்களையும் வழிபாட்டு முறைகளையும் பயன்படுத்துகிறார். மரபுவழியில் வரலாறு எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் எழுத்தாவணம், புதைபொருள் என்பனவற்றையே பிரதான ஆதாரங்களாகக் கொள்வர். ஆனால் வாய்மொழியாகத் தலைமுறை தோறும் கடத்தப்படும் வாய்மொழிக் கதைகளிலும், தலைமுறை தலைமுறையாகப் பேணப்படும் வழிபாடுகளிலும் வரலாற்றுத் தகவல்கள் பொதிந்து கிடப்பதை மிகச்சிலரே ஏற்றுக்கொள்வர்.

அவ்வாறு ஏற்றுக்கொண்டு அத்தகவல்களை நுணுகி ஆய்ந்து அதற்குள் இருக்கும் வரலாற்றுத் தகவல்களை வரலாற்றெழுத்தியலுக்குப் பிரயோகிப்போர் மிகமிகச் சிலரே. அத்தகையோராலேயே வரலாற்றெழுத்தியல் முழுமை பெறுகிறது. செழுமையடைகிறது. இந்தப் போக்கு இன்று முக்கியமான போக்காகும். இந்த வகையில் துலாஞ்சனன் தொன்மங்களையும் வழிபாட்டிலக்கியங்களையும் வரலாற்று மூலமாக இங்கு பயன்படுத்துகிறார். முக்கியமாக சோனகர் தொன்மம், வேடர் தொன்மம் ஆகியவற்றிலும் வரலாற்றைத் தேடுகிறார்.

வழிபாட்டு இலக்கியங்களை ஆதாரமாகக் கொள்ளுமிடத்து கீழைக்கரை நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்களில் கரையோர வேடரால் வணங்கப்படுகின்ற குமாரர், நீலியம்மன், குஞ்சிமாப்பா, மீன் நாச்சியார், சலவைத் தொழிலாளர் சமூகம் வழிபடும் பெரியதம்பிரான், நீலாசோதையன், பெரியசாமி, குருகுலக் கரையார் உள்ளிட்ட சமூகங்களால் வணங்கப்படும் கடல் நாச்சியம்மன் முதலான தெய்வங்களின் சடங்குப்பாடல்களில் வரலாற்றுக்கான ஆதாரங்களாகக் கிடைக்கக்கூடிய சில தொன்மங்கள் கிடைக்கின்றன எனத் தொட்டுக்காட்டுகிறார். இது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

(III) முக்கியமாக அவர் மட்டக்களப்புப் பூர்வ வரலாறு பற்றி செல்வராஜகோபால் எழுதிய கருத்தான “மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கணபதிப்பிள்ளைப் புலவரின் கற்பனை” எனும் கருத்தை நுணுக்கமாக ஆராய்ந்து சுவையாக விவாதித்து அந்நூல் புலவரின் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது என்று வாதிட்டு நிறுவுகிறார். அத்தோடு மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும் தொன்மங்களை ஆராய்வதற்கான வழிமுறைகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஆய்வுகள் இந்நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்று.

(IV) இந்த நூலில் ஏழாவதாக அமையும் நாடுகாட்டுப் பரவணிகல்வெட்டு எனும் அத்தியாயம் முக்கியமானதும் சுவாரசியமானதும் சிந்திக்க வைப்பதற்கான செய்திகளைத் தருவதுமான ஒரு முக்கிய அத்தியாயமாகும். நாடுகாடு என்பது, நாடு ஒன்று காடான ஒரு பெரும் கதை. அது ஒரு பெரும் சமூக வரலாற்று நிகழ்வொன்றைக் கூறும் இன நினைவுக் கதையாகும். வரலாறு என்பது நினைவுகளிலும் உண்டு என்பதற்கு இவ்வத்தியாயம் ஓர் உதாரணமாகும்.

இந்தக் கல்வெட்டினை இலண்டன் அருங்காட்சியகத்தில் கண்டெடுத்து 1976ஆம் ஆண்டு பேராசிரியர் பத்மநாதன் ஒரு கட்டுரையாக வெளியிட்டார். மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும் தகவல்களுக்கு மேலதிகமான அல்லது விளக்கமான தரவுகளைத் தரும் கல்வெட்டு இது. ஆனால் பத்மநாதனுக்கு முன்னரேயே நெவில் என்பவர் இது பற்றி 1887இல் இரண்டு கட்டுரைகள் வரைந்து உள்ளார் என்றும், அவரது அந்த கட்டுரைகள் இந்த நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டைப் புரிந்துகொள்ள மேலும் உதவியாக இருக்கின்றன என்றும், காரணம் அவர் வாழ்ந்த காலமும் அவருக்கும் மக்களுக்குமான ஊடாட்டம் என்றும் துலாஞ்சனன் கூறுகிறார்.

இந்த நெவில், 1847 தொடக்கம் 1897 வரை இலங்கையில் பணியாற்றிய பிரித்தானிய அரச அலுவலராவார். நாடுகாட்டுப் பரவணி பற்றிய நினைவுகள் முற்றிலும் மறையாத காலத்தில் வாழ்ந்த உள்ளூர் மக்களைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர் இந்த நெவில். இவற்றால், அவரது குறிப்புகள் நாடுகாட்டுப் பரவணியைப் புரிந்துகொள்ள இன்று வழி அமைக்கின்றன எனக் கூறி, பேரா. பத்மநாதன் கட்டுரையுடன் இதனை ஒப்பிட்டு, அதனை வாசிக்கையில் மட்டக்களப்பு வரலாற்றில் புரியாதிருந்த பல மர்மத் திரைகள் விலகுகின்றன என்கிறார் துலாஞ்சனன்.

நாடுகாடு என்பது இன்றைய அம்பாறை மாவட்டம் இறக்காமத்துக் கிராமத்தை மையமாகக் கொண்டு உகணை, அம்பாறை நகரம், மல்வத்தை உள்ளிட்ட இடங்களையும் வடக்கே நாதனை, அதாவது இன்றைய வெல்லாவெளி ஆகிய இடங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரிவாகும். அதற்குள்ளே அம்பாறை, உகணை, தமணை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் அடங்கி இருக்கின்றன என்பதைக் கூறுகிறார். அதனுடைய தொடர்ச்சியான வளர்ச்சி பற்றியும் அவர் உரைக்கிறார்.

சீதாவக்கையிலிருந்து குடியேறிய சிங்கள அரச குடும்பங்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மூலம் நாடுகாட்டுப் பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவானது பற்றியும் அவர் தகவல் தருகிறார். அங்கே பல குழப்பங்கள் ஏற்பட்டதனால் இனி நாடுகாட்டில் யாரும் குடியிருக்கக்கூடாது என்று கண்டி அரசன் ஆணையிட்டதையும் அந்நூல் கூறுவதாகக் கூறுகிறார். நாடுகாடு என்பது நாடானது காடான ஒரு கதையாகும். இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவலாகும். நாடுகாட்டுக் கல்வெட்டின் பிரதான கதாநாயகன் ராஜபக்ச முதலியார். இவருக்கும் சோனகர் முதலான குலங்களுக்கும் இடையே உள்ள உறவும் இதிலே கூறப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பும் சேனைப் பயிர்ச்செய்கைகளும் இருந்திருக்கின்றன. வாய்மொழியாக வந்த கதைகளூடாக இச்சமூகத்தைப் பற்றி பெரும் தகவல்கள் கிடைக்கின்றன. இன்னும் பல புதிய செய்திகளை நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுத் தருகின்றது. நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டில் வரும் இரண்டு முக்கியமான தகவல்கள் பற்றி துலாஞ்சனன் தரும் செய்திகள் முக்கியமானவை. ஒன்று குலக்கலப்பு, இன்னொன்று குல முரண்பாடுகள். இந்த இரண்டு செய்திகளையும் திறவுகோலாகக் கொண்டு முழு மட்டக்களப்பு வரலாற்றையும் மறுவாசிப்புச் செய்தால் மட்டக்களப்பு வரலாறு பற்றி மேலும் ஒரு வெளிச்சம் கிடைக்கும். இந்த அத்தியாயத்திலே செல்லாப்பற்று வேடர், பரவர், சான்றார் சமூகங்கள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

நாடுகாடுப் பிரதேசம் ஒரு தனி அரசியல் அலகாக உருவாகுவதைக் கண்டி மன்னன் தடுத்தமை இதில் தெரிகிறது. இந்த நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுப் பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஈழத் தமிழ்ச் சமூகமும், சிறப்பாக மட்டக்களப்புப் புலமை உலகும் பெரிதாக அறியவில்லை. துலாஞ்சனனுக்கும் இக்கருத்து உண்டு என்பது அவர் எழுத்தில் தெரிகிறது. அவ்வாசிப்பையும், நெவிலின் வாசிப்பையும் நமக்குத் தந்து அங்குள்ள சில வழமைகளையும் அதன் மூலம் துலாஞ்சனன் நமக்குத் தருகிறார்.

அவர் கூறுகின்ற பட்டம் கட்டிய முதலியார், பட்டம் கட்டாத முதலியார் என்ற பிரிப்புகளும் புதிதான தகவல்கள் ஆகும். மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும், மட்டக்களப்புப் பற்றிய வரலாற்றை எழுதியோருடைய வரலாற்று நூல்களும் தராத பல நுணுக்கமான புதிய ஆராய்ச்சிக்குரிய தகவல்களை நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுத் தருவதாகக் கூறி, அதற்கு முக்கியம் கொடுப்பது இந்த நூலின் மிக முக்கிய அம்சமாகும்.

(V) இதன் இரண்டாவது பகுதியை அவர் பின்வருமாறு பிரிக்கின்றார்.

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை

இயக்கர், நாகர் குடியிருப்புகள் தோன்றிய காலம்

சிற்றரசுகளின் காலம்

அனுராதபுர அரசின் தோற்ற காலம்

சோழர் காலம்

10ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றை வரிசைப்படுத்தி கீழைக்கரை அரசியல் வரலாற்றை அல்லது ஆட்சி வரலாற்றை தொடர்ச்சியாகவும் நேர்கோட்டிலும் கட்டமைக்க முயல்கின்றார். இதன் சிறப்பம்சம் யாதெனில், இவர் இதற்காகப் பயன்படுத்தும் தகவல்கள் ஆகும்.

ஏற்கனவே முறையான வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆர்வம் கொண்ட ஆய்வாளரும் கிழக்கு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதைபொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண வரலாறு பற்றி இலங்கை வரலாற்றுக்கு மேலும் வளம் சேர்க்கும் பல செய்திகளைத் தந்துள்ளனர். இந்திரபாலா, குணசிங்கம், பத்மநாதன், புஸ்பரட்ணம், கௌரி, மௌனகுரு, இன்பமோகன், சந்திரசேகரன், சாந்தி கேசவன், குணபாலசிங்கம் போன்ற பல்கலைக்கழக ஆய்வாளர்களும் வி.சீ. கந்தையா, செல்வராஜகோபால், கோபாலசிங்கம், தங்கேஸ்வரி போன்றோரும் இன்னும் பலரும் இதில் முக்கியமானவர்கள்.

இவர்களின் கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி, தான் கண்டெடுத்த - புதிதாகக் கற்றறிந்த தகவல்களையும் இணைத்து, ஒரு புதிய வரலாற்றைக் கட்டமைக்க இவர் எடுக்கும் எத்தனம் இதில் இன்னொரு சிறப்பம்சமாகும்.

(VI) இலங்கை அரச ஆதிக்க வரலாற்றை அவர் தொடர்ச்சியாக ராசரட்டைக்கும் ருகுண அரசுக்கும் இடையே நடந்த போட்டியாகக் கட்டமைக்க முயல்வதாகத் தெரிகிறது. ராசரட்டையைக் கைப்பற்றிய சோழப் பேரரசு, பொலனறுவையைத் தமது அரசதானியாக்கியதும், திருக்கோவிலைத் தமது கடற்படைத்தளங்களில் ஒன்றாகக் கொண்டதும், ருகுண அரசைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி என அவர் கூற வரும் கருத்தும் ஒரு முக்கிய அம்சமாக எனக்குப் படுகிறது. இது பற்றி அண்மைக்காலச் சரித்திர ஆய்வுகளும் பல இடம்பெற்றுள்ளன.

(VII) தன் ஆய்வுக்குதவிய ஆதாரங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் கீழைக்கரை பற்றி அறிய உதவிய முதன்மைச் சான்று கள், துணைச் சான்றுகள் என வகைப்படுத்தி, தான் இதற்காக வாசித்த நூல்களைத் தந்துள்ளார்.

முதன்மைச் சான்றுகளில் 12 முக்கிய நூல்களும் துணைச் சான்றுகளில் 130இற்கு மேற்பட்ட நூல்களும் அடங்குகின்றன. ஈழத்து வரலாற்று நூல்களில் வாசிப்புப் பயிற்சியுடைய பலருக்கு அவர் இங்கு ஆதாரமாகக் கொண்ட நூல்கள் மிக முக்கியமான நூல்கள் என்பது சட்டெனப் புலப்படும். சில ஆய்வாளர்கள் தொகைக்காக பின்னிணைப்பாக பல நூல்களைத் தருவதும் உண்டு. ஆனால் உள்ளடக்கத்தையும் முதன்மை துணை நூல்களையும் வாசித்திருப்போர் அல்லது வாசிப்போர், இவர் தரும் அனைத்துச் சான்றுகளும் கீழைக்கரை வரலாற்றைப் புதிதாக நோக்க துலாஞ்சனனுக்கு எப்படி உதவின என்பதை அறிய முடியுமாயிருப்பதோடு, துலாஞ்சனனின் பரந்த வாசிப்புக்கும் தேடலுக்கும் அவை சான்றாகவும் நிற்கின்றன. இது இந்நூலின் இன்னோர் சிறப்பம்சமாகும்.

(VIII) இவ்வளவையும் ஆராய்ந்து கூறிவிட்டு அவர் இதுவே முடிந்த முடிவு எனக் கூறவில்லை. சோழராட்சிக் காலத்தோடு இந்நூலை முடிக்கும் இவர் சோழராட்சி பற்றிக் கூறும் நறுக்கான விமர்சனம் முக்கியமானது.

"பத்தாம் நூற்றாண்டுகளில் உரோகணத்தின் அதிகாரப் போர் இன்னும் தெற்காக நகர்ந்து தென்னிலங்கையில் நிலவி இருந்தது. இன்னாளில் கிழக்கு உரோகணம் அனுராதபுர அரசின் ஆட்சியின் கீழ் நேரடியாக வந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் உரோகணத்திலிருந்து முற்றாக அதன் உறவை அறுக்கும் அளவுக்கு சமய, பண்பாட்டு, அரசியல் மாற்றங்கள் திகவாவி மண்டலத்தில் ஏற்பட்டன. சோழப் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து 200 ஆண்டுகளில் இடம்பெற்ற மாகோன் படையெடுப்பும் கீழைக்கரையின் பண்பாட்டையும் சமூக அமைப்பையும் முற்றாகப் புரட்டிப்போட்டு விட்டது.”

அவர் இறுதியாக முடிக்கும் போது அவரது நிலைப்பாட்டைக் கூறுகிறார்.

“எதிர்காலத்தில் வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது இந்த வரலாற்றில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொலனறுவை அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இங்கு இடம்பெற்ற பல்வேறு குலக் கலப்புகள், அதன் வழியே உருவான இன்றைய கீழைக்கரைச் சமூகம் என்பன இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய சுவையான புலங்கள்."

சரித்திர ஆய்வில் பல்கலைக்கழகக் கல்விமான்கள் போல, சரித்திரப் பேராசிரியர்கள் போல, வரலாற்று எழுத்தியலில் முறையான பயிற்சி பெறாத துலாஞ்சனன், குறிப்பாக வரலாறு, பண்பாட்டுத் துறைகளிலும், சிறப்பாக கிழக்கிலங்கைப் பண்பாட்டு வரலாற்றிலும் ஆர்வங்கொண்டு தனது பரந்த-ஆழ்ந்த தொடர்ச்சியான உழைப்பின் மூலம் கற்றலின் மூலம் கிடைத்த ஆதாரங்களை வைத்து வாதித்து கீழைக்கரை பற்றி இந்நூலைத் தந்துள்ளார். இதனை நாம் மட்டக்களப்பு வரலாற்றெழுத்தியலில் ஒரு பாய்ச்சல் என அழைப்பதில் தவறில்லை.

3. மரபுவழி ஆய்வாளர்களிடமிருந்து துலாஞ்சனன் வேறுபடும் இடங்கள்

கிழக்கிலங்கை பற்றி இதுவரை பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றை நாங்கள் அகத்தார் ஆய்வு புறத்தார் ஆய்வு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அகத்தார் என்போர் ஈழத்து ஆராய்ச்சியாளர்கள். புறத்தார் என்போர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

கிழக்கு மாகாணம் பற்றிய ஆவணங்கள் அல்லது ஆய்வுத் தரவுகளைத் தரும் இலக்கியங்கள் பற்றி நூல்கள் பல வெளிவந்துள்ளன. மட்டக்களப்பு அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு பற்றிக் கூறும் நூல்களும் பல வெளிவந்துள்ளன.

கிழக்கு மாகாணம் பற்றிய தகவல்களைக் கூறும் இலக்கியங்களும், போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய, தமிழ் நிர்வாகிகள் எழுதி வைத்த குறிப்புகளும், அவற்றை ஒட்டி உள்நாட்டு அறிஞர்கள் 1900ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை எழுதிய நூல்களும், பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கிழக்கு மாகாணம் பற்றிச் செய்த ஆய்வுகளும், பிறநாட்டு மானிடவியலாளர்கள் எழுதிய நூல்களும் என, பல நூல்கள் கிழக்கு மாகாணம் பற்றி வெளிவந்துள்ளன.

இவற்றை நாம் வரலாறு கூறும் நூல்கள், பண்பாடு கூறும் நூல்கள், சமூகம் பற்றிக் கூறும் நூல்கள் என்ற மூன்று வகைக்குள் அடக்கிவிடலாம்.

மட்டக்களப்பு வரலாற்றைக் கூறும் நூல்கள் பல்கலைக்கழகங்களில் முறையாக ஆய்வுமுறையியல் பயின்ற ஆய்வாளர்களாலும், அத்தகைய பயிற்சியை முறையாகப் பயிலாத ஆய்வாளர்களாலும் எழுதப்பட்டு வந்துள்ளன. இந்தவகை ஆய்வாளர்களிடமிருந்து துலாஞ்சனன் வேறுபடும் இடங்கள் மிக முக்கியமானவை.

(I) முதலாவது, அவர் கீழ் மாகாணத்தை கீழைக்கரையென கூற வருவது. “கீழைக்கரை” என்ற பெயரை கிழக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டவர் இட்டபோதும், தமிழில் அதனை அவர் அறிமுகம் செய்வதும், அதனை நிறுவ வாதிப்பதும், அதனைச் சிறப்பான முறையில் நிறுவுவதும், அவர் முன்னையோரில் இருந்து வேறுபடும் ஒரு முக்கியமான இடமாகும்.

(II) அடுத்து, கிழக்கு மாகாணம் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் அதன் காலநிலை, சூழல், இயற்கைவளம் என்பன எவ்வாறு அதன் வரலாற்று, பண்பாட்டு, சமூக அமைப்புகளுக்கு பலம் வாய்ந்த பின்னணியாக இருந்தன என்பதை அதிகம் அழுத்திக் கூறவில்லை. ஆனால் துலாஞ்சனன் நிலவியல், சூழல், காலம் எனும் அந்தப் பின்னணியில், கீழைக்கரை வரலாற்றை வைத்துப் பார்ப்பது அவர் ஏனைய ஆய்வாளரிடமிருந்து வேறுபடும் ஓர் இடமாகும்.

இந்த இடத்திலே எனக்கு இந்திய வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் ஞாபகம் வருகிறார். “முற்கால இந்தியா” எனும் மகத்தான நூலொன்றை எழுதிய அவர், அதன் முதல் அத்தியாயமான "நிலத்தோற்றமும் மக்களும்” என்ற துவக்கப்பகுதியை,

காலமும் வெளியும்

வடபுல மலைகள்

சிந்து கங்கைச் சமவெளி

தீபகற்பம்

கடற்கரைப் பகுதி

எல்லைகள்

போக்குவரத்து

தட்பவெட்பமும் விவசாயமும்

குடித்தொகை

சமூக வகைப்பாடுகள்

வேட்டையாடுவோர், உணவு சேகரிப்போர்

கால்நடை மேய்ப்போர்

விவசாயிகள்

நகர மாந்தர்

சாதிகளின் உருவாக்கம்

என்பனவற்றை உள்ளடக்கிய ஒரு பெரும் அத்தியாயமாக அமைத்து, இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு பெரிய பின்னணியைத் தருகிறார்.

இந்தக் கீழைக்கரை நூலை வாசித்த போது எனக்கு ரொமிலா தாப்பரின் முற்கால இந்தியாவை வாசித்த அனுபவம் கிடைத்தது. ரொமிலா தாப்பர் அளவுக்கு விஸ்தாரமாக துலாஞ்சனன் செல்லவில்லை ஆயினும், நில அமைப்பு, காலநிலை, முக்கியமாக நீர்வழிப் பாதை என்பன கீழைக்கரையின் வரலாற்று உருவாக்கம், பண்பாட்டு உருவாக்கங்களுக்கு எத்துணை அளவு பின்னணியாகவும் ஆதாரமாகவும் அமைந்தன எனக் கூறவருவதும் விவரிப்பதும் ஏனைய ஆய்வாளர்களிடமிருந்து இவர் வேறுபடும் இன்னொரு புள்ளியாகும்.

(III) மரபுவழி ஆய்வாளர்கள், கீழைக்கரை வரலாற்று ஆதாரங்களாகக் கல்வெட்டுகளையும் புதைபொருட்களையும் கறாரான ஆய்வுத் தகவல்களாக கொள்ள, இன்றைய நவீன பண்பாட்டு ஆய்வாளர்கள் போல துலாஞ்சனனும் தொன்மங்களையும், வாய்மொழி மரபுகளையும், வழிபாட்டு இலக்கியங்களையும், கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களையும் வரலாற்று ஆதாரமாகக் கொள்ள முயல்கிறார். இது அவர் மரபுவழி வரலாற்று, பண்பாட்டு ஆய்வாளரிடமிருந்து மாறுபடுகின்ற மற்றொரு இடமாகும்.

(IV) மற்றெந்த மரபுவழி ஆய்வாளர்களிடமிருந்தும் வேறுபட்டு, மட்டக்களப்பு மான்மியம் பற்றியும், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு பற்றியும் அவர் வைக்கும் விவாதங்களும், அவர் தரும் புதிய விளக்கங்களும், முடிவுகளும் மிக முக்கியமானவை ஆகும்.

(V) மட்டக்களப்பின் மக்களாக அவர் பல இன மக்களையும் கொள்ளுவதும், அவர்களது வரலாறு பற்றிக் கூறுவதும், கீழைக்கரையை ஒரு பல்லினச் சமுதாயமாக வரலாற்று அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும், தன் முன்னோர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையிலும் கட்டமைப்பதும், அதற்கான மேலதிக சான்றுகளைத் தருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(VI) மட்டக்களப்பின் சாதி அமைப்பைப் பற்றிக் கூறிய சில வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளனர். சாதிகளின் வரலாறு பற்றிப் பல நூல்களும் வந்துள்ளன. எனினும், இவர் சிறப்பாக அந்தச் சாதி அமைப்பிலே அதிகம் எழுத்தில் கூறப்படாத விளிம்புநிலை மக்களையும், அடிநிலை மக்களையும், அவர்களது வழிபாட்டு அம்சங்களையும், அவர்களுக்கிடையே நிகழ்ந்த வழிபாட்டின் கலப்புகளையும் கூற வருவது சிறப்பானதாகும்.

(VII) கீழைக்கரை வரலாற்றை வழக்கமாகப் பலர் புராண, இதிகாச மரபுகளிலிருந்து தொடங்குவர். ஆனால் துலாஞ்சனன் கற்காலத்திலிருந்து சிற்றரசுகள் உருவாகி, பெரிய அரசுகளின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், பத்தாம் நூற்றாண்டில் பேரரசு ஒன்றின் தாக்கத்தால் அந்நிலப்பகுதி மீள்கட்டமைப்பை பெற்றுக்கொண்டது என வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் முடிவு செய்கிறார்; இது அவரது தனித்துவத்தைக் காட்டுகிறது.

(VIII) கீழைக்கரை வரலாற்றை எழுதும்போது அவர் நுண்மாண் நுழைபுலத்துடன், கிடைக்கின்ற தரவுகளுக்குள் புகுந்து, உறவாடி, மல்லுக்கட்டித் தோண்டித் தருகின்ற புத்தம் புதிய தகவல்கள், மரபுவழி ஆய்வாளர்கள் திரும்பிப் பார்க்காத பக்கங்கள் ஆகும். அக்கருத்துகள் கீழைக்கரை வரலாற்றை மேலும் கட்டமைப்பதற்கு மிக உதவியாக உள்ளன. இந்தப் புதிய சிந்தனைகளை எடுத்துரைப்பதிலும் அவர் மரபுவழி ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றார்.

இந்த உற்றுநோக்க வேண்டிய விடயங்களை, விவரமாக ஒரு தனிக்கட்டுரையாகக் கூட எழுதலாம். அணிந்துரை என்பதால் இங்கு நான் அந்த விவரங்களைத் தவிர்த்துக் கொள்கிறேன்.

4. இதில் விடுபட்டவை அல்லது மேலும் நுனித்து நோக்கப்பட வேண்டியவை

கீழைக்கரை வரலாறு என்பது மரபுவழி வரலாற்றெழுத்தியல் போக்கில் அந்தப் பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாறாகும். அதற்கும் மேலால் அங்கு வாழும் மக்களின் வரலாறே உண்மை வரலாறாகும். மக்கள் இன்றி மன்னர் இல்லை. இவ்வகையில் கீழைக்கரையில் வாழ்ந்த, வாழும் மக்கள் யார் என முதலில் வரையறை செய்துகொள்வோம்.

அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சாதிக் குழுமப் பெயர் தரப்பட்டுள்ளது. மரபுநிலையிலும், தொழில் அடிப்படையிலும் இது கொடுக்கப்பட்டுள்ளது. இச்சாதி அமைப்பை நாம் வசதி கருதி மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை என வகுத்துக் கொள்ளலாம்.

இதில் மேல்நிலையிலும், இடைநிலையிலும் வாழும் மக்களின் வரலாறு ஓரளவு கிடைக்கின்றது. முக்கியமாக மேல்நிலையில் இருப்பவர்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள வேளாளர், முக்குவர், சீர்பாதக்காரர் ஆகியோரின் வரலாறுகளும், இடைநிலையில் உள்ளவர்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கரையார் வரலாறும், பொற்கொல்லர் வரலாறும் ஓரளவு கிடைக்கின்றன. மட்டக்களப்பு மான்மியமும், மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும் இவர்களைப் பற்றி அதிகம் கூறுகின்றன.

மெக்கில்வ்ரே, வைற்றாகர் ஆகியோரும் முக்குவர், சீர்பாதர் வரலாற்றை ஆராய்ந்ததுடன், அது தவிர்த்த ஏனையவர்களின் வரலாறுகளையும் ஆராய முற்பட்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களும் கீழைக்கரைச் சமூகத்தில் உட்புகுந்து, அதன் அடியாழம் வரை சென்றாரில்லை. சென்றிருப்பின், அவர்கள் ஆய்வுகள் வேறு தோற்றம் காட்டியிருக்கும். மட்டக்களப்பின் சாதி அமைப்பு இன்னும் விவரமாக ஆராயப்படவில்லை என்பதே நான் இங்கு கூற வருவது. அந்தச் சாதி அமைப்புக்குள்ளே, அது மாறிவந்த வரலாற்றுக்குள்ளே, கீழைக்கரையின் சமூக வரலாறு, மக்கள் வரலாறு புதைந்து கிடக்கிறது. அது நுணுக்கமாக ஆராயப்படுகையில், மட்டக்களப்பு அல்லது கீழைக்கரை வரலாற்றெழுத்தியல் இன்னும் பல மடங்கு நீட்சி பெறும்.

துலாஞ்சனன் முன்வைக்கும் குலக்கலப்பு, குல முரண்பாடு எனும் கோட்பாடுகளை இந்தச் சாதியமைப்பின் தன்மை, வளர்ச்சி, மாற்றம் என்பனவற்றில் நிறையக் காணலாம். இச்சாதிகளுள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சாதியினர் சுதந்திரமாக வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இடைக்காலத்தில் முக்கியமாக சோழர் ஆட்சியின் போதும், மாகோன் ஆட்சியின் போதும், இவை வேறு வடிவம் பெற்றிருக்கலாம். அதன் எச்சசொச்சங்களை இன்று கோவில் உரிமைகளில் காணுகிறோம். பிற்காலத்தில் அயல் நாட்டார் ஆட்சியினாலும், இன்றைய மாற்றங்களாலும், இவை மாறி, சடங்காலும் மரபுகளாலும் கட்டுப்படுத்தப்பட்டாலும், யதார்த்தத்தில் சுதந்திரமாக வாழும் அந்த அடிநிலை மக்களை இன்றும் காண்கிறோம். கோவில் இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அது இரண்டு விதமாகச் செயற்படுவது போலத் தோன்றுகிறது. சாதி அமைப்பை, குடிப்பெருமையை இறுக்கமாகக் கட்டிக் காக்கின்றன சில கோவில்கள். சாதி அமைப்பைத் தகர்த்து சமத்துவமாக்குகின்றன சில கோவில்கள். கடவுள் பெயரால் காரியம் சாதிப்பது வெகு இலகுவல்லவா?

மாகோன், இருந்த சாதி அமைப்பையும், கோவிலிலுக்குக் கட்டுப்பட்ட சாதிகளையும் கூறி, அவர்களுக்கிருந்த உரிமைகளை இது இதுதான் என வகுத்து, அவற்றை மீறுவோர் சிவத்துரோகம் செய்தவர்களாவர் என சிவநாமம் கொண்டு பயமுறுத்தியும் வைத்துள்ளான். குறித்த கல்வெட்டு இவ்வகையில் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை.

மட்டக்களப்பு மான்மியம், கரையார், துலுக்கர், காராளர், வேடுவர், முக்குகர், கோவிலார், பண்டாரப்பிள்ளை, திமிலர், சேணியர், அமலர், அம்பட்டர் எனச் சாதிப்பிரிவுகளையும், அச்சாதிகளுக்கான அடையாளக் குறிகளையும், கோவில் கடமைகளையும் வரையறுத்துள்ளது.

மட்டக்களப்பு மான்மியம் போடி கல்வெட்டில் குலவிருது கூறும்போது சொன்ன 22 சாதிகளுக்குள்ளும் சிறைக்குடிகளாகக் கூறப்பட்ட சாதிகளும் உண்டு, சிறைக்குடிகள் அல்லாத சாதிகளும் உண்டு. அங்கு கூறப்பட்ட 30 சாதிகளுள் 17 சாதிகள் சிறைக்குடிகளானால், ஏனைய 13 சாதிகளும் சிறைக்குடிகள் அல்லாத சாதிகள் எனலாம்.

மட்டக்களப்பு பற்றிய கையேட்டை எழுதிய எஸ்.ஓ. கனகரத்தினம் பல சாதிகளைத் தருகிறார். இச்சாதிகள் பற்றிய வரலாற்று நூல்களும் பிற்காலத்தில் நம்மிடையே நம் காலத்தில் தோன்றியிருக்கின்றன. முக்கியமாக பொற்கொல்லர் பற்றிய வரலாறு, கரையார் பற்றிய வரலாறு, சாண்டார் வரலாறு, சீர்பாதர் வரலாறு, வேடுவர் வரலாறு, அம்பட்டர் வரலாறு பற்றி ஓரிரு நூல்கள் எழுதும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பலவும், பல்வேறு கிராமங்கள் பற்றிய நூல்களும் வெளிவந்துள்ளன. ஆனால் பிரதான வரலாற்று நீரோட்டத்தில் இந்த வரலாறுகள் கணக்கெடுக்கப்படுவதில்லை. சமூகக் கட்டமைப்பிற்குள் இவர்கள் பிரதானப்படுத்தப்படுவதும் இல்லை.

கடையர் எனும் சுண்ணாம்பு சுடுபவரின் சமூகம் ஒன்று இருந்திருக்கிறது. அந்தச் சமூகம் கீழைக்கரையின் கட்டுமானத் துறையில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. அச்சமூகம் வரலாற்றுப் போக்கில் இதர சமுகங்களுடன் கலந்து, கரைந்து, அருகிவிட்டது. சலவைத் தொழிலாளர் மட்டக்களப்பில் வாழைச்சேனை தொடக்கம் அக்கரைப்பற்று, பொத்துவில் வரை 20இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களின் பெரிய தம்பிரான் வணக்கம் பெருந்தெய்வ வணக்கமாக மேற்கிளம்பியுள்ளது. சலவைத் தொழிலாளரின் அடையாளமான புன்னைச்சோலைக் காளி அம்மன் கோவில் இன்று மட்டக்களப்பில் ஒரு பெருங்கோவிலாக பிரமாண்டமாக எழுந்துள்ளது. சகல சாதி மக்களும் இன்று அங்கு சென்று வழிபடும் அந்தஸ்தை அது பெற்றிருக்கிறது.

தம்மை நம்பி என அழைக்கும் நளவர் சமூகம் தமக்கென ஒரு வரலாற்றுத் தொன்மக் கதையையும், கோவிலையும் கொண்டு கீழைக்கரையின் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

பறையறையும் வள்ளுவ சமூகம் தங்கள் தொன்மக் கதைகளை வைத்துக்கொண்டு, சமூக ஏற்றத்தாழ்வினால் பறையினால் சமூகத்தில் குறைத்து மதிப்பிடப்படுவதை உணர்ந்து, அந்தப் பறைகளை நொருக்கியுள்ளனர். சில கிராமங்களில் பறையறையும் சமூகத்தினர் தமக்கு வழங்கப்பட்ட நிலத்தைப் பண்படுத்த முயன்றபோது, அவ்வுரிமை பறிக்கப்பட்டுத் துரத்தப்பட்டதால், அவர்களில் பலர் இஸ்லாமியராக மாறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இவர்களைப் போலவே, சவரம் செய்யும் தொழிலாளர் சமூகமும் தமக்கு முன்னைய நிலமானிய சமூகம் வகுத்த மரணவீட்டுக் கடமைகளைக் குலத்தொழிலாகச் செய்யும் வழமையைக் கைவிட்டுவிட்டது.

கீழைக்கரை வரலாற்றில் மிக முக்கியமாக இடம்பெறும் சமூகக் குழுக்களில் வேடர், பறங்கியர், குறவர், சக்கிலியர் ஆகியோரும் முக்கியமானவர்கள். நகர சுத்தித் தொழிலாளரின் முக்கிய தெய்வமான கருமாரி அம்மன் ஏறாவூரில் தனக்கான தொன்மக் கதைகளுடன் அங்கு வாழும் சகல மக்களையும் இணைக்கிறது. இச்சமூக மக்கள் யாவரும் தத்தமக்கென பல தொன்மக் கதைகளைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் வரலாறுண்டு. அவை அவர்களது நினைவுகளில், சமயச் சடங்குகளில், தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

கீழைக்கரை வேடருக்கே உரியதென்று வாதிக்கின்ற ஆய்வுகளும் தோன்றத் தொடங்கியுள்ளன. அண்மைக்காலமாக கரையோர வேடர் பற்றிய ஆய்வுகள் மேலெழுகின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகள், அவர்கள் வழிபடும் தெய்வங்கள் பற்றிய தொன்மங்கள் நமக்குப் புராதன காலத்துச் செய்திகள் பலவற்றைக் கூறுகின்றன. அருமையான சரித்திரச் செய்திகள் அங்கு புதைந்து கிடக்கின்றன. வேடர்கள் போன்ற பழங்குடிகளின் பண்பாடு மற்றும் வரலாறு அழிக்கப்பட்டு, பிறகு உருவான அரசுகளால் மீண்டும் கட்டமைக்கப்பட்ட புதிய குடிகள், பூர்விக குடிகளாகக் கட்டமைக்கப்பட்டது உண்டு.

இவையெல்லாம் மக்கள் வரலாறுகள். இவையெல்லாம் இணைந்தது தான் கீழைக்கரை வரலாறு. இதுவரை கட்டமைக்கப்பட்ட மட்டக்களப்பு வரலாற்றில், இந்தச் சமூகங்கள் பற்றி ஆங்காங்கே சில குறிப்புகள் வெளிவந்துள்ளன. ஆனாலும், சமூக இயக்கத்தில் இவர்கள் வகித்த பங்கு, நடத்திய போராட்டம், சந்தித்த மாற்றங்கள், சில சாதிகள் கரைந்து போன விதம் என அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உள்ளடக்கியது தானே மட்டக்களப்புச் சமூக வரலாறு. இவை யாவற்றையும் விஸ்தாரமாக உள்ளடக்காமல் எழுதப்படுகின்ற மட்டக்களப்பு வரலாறு முழுமையான வரலாறு ஆகாது.

அரசியல் வரலாறாக எழுதப்படுகின்ற வரலாறு, மக்கள் வரலாறாக எழுதப்படுகையில், அது உயர் மக்களாகக் கருதப்படுவோர் வரலாறாக அல்ல; அடிநிலை மக்களின் வரலாற்றையும் உள்ளடக்கிய அரசியல் சமூக வரலாறாக எழுதப்பட வேண்டும். துலாஞ்சனன் இவற்றின் சில பகுதிகளைத் தொட்டுச் சென்றுள்ளார். இருண்ட அந்தப் பக்கங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். வேடர், சலவைத் தொழிலாளர் மத்தியில் வழங்கும் தொன்மங்களையும் வரலாற்று ஆவணங்களாகக் கொள்கின்றார்.

இந்த வரலாறுகளை விரிவாக அறியும் முயற்சிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2000ஆம் ஆண்டுகளிலே, விளிம்புநிலை மக்கள் ஆய்வு என்ற வகையிலே நடத்தப்பட்டன. இன்று அவை தொடர்கின்றதோ தெரியவில்லை. நமது வரலாற்று அறிஞர்கள் பலர், முக்கியமாக ஈழத்துத் தமிழறிஞர்கள், அந்தப் பக்கம் பார்க்கச் சற்றுத் தயங்குகின்றனர். அல்லது அதைப் பேசப் பிரியப்படுகிறார்களில்லை. இதற்கான சமூகவியல், அரசியல், பண்பாட்டுக் காரணிகள் இன்னும் ஆராயப்படவில்லை. இந்த ஆய்வுகள் அதிகம் ஊக்கப்படுத்தப்படுவதுமில்லை. துலாஞ்சனன் போன்ற பன்முகப் பார்வையும், சமூக அக்கறையும், பரந்த நோக்கமும் கொண்ட ஆய்வாளர்கள் அந்தப் பக்கமும் தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும். ஏனெனில், வரலாற்றெழுத்தியலில்,

கீழிருந்து ஆய்வு

விளிம்புநிலை மக்கள் பார்வையில் ஆய்வு

அடிப்புறமக்கள் பார்வையில் ஆய்வு

என புதிய வரலாற்று எழுத்தியல் செல்வாக்குற்று வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதையும் மறந்துவிடலாகாது.

துலாஞ்சனன் அவர்கள் விடுபட்ட இந்தப் பக்கத்தையும் சேர்த்துக்கொண்டு, முழு மக்களையும் உள்ளடக்கிய வரலாறாகக் கீழைக்கரை வரலாற்றை எழுத வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். சகல மக்களையும் சமமாக மதிக்கும் உயரிய நோக்கும், வரலாறு சமூக ஒற்றுமைக்கு உதவ வேண்டும் என்ற உன்னத எண்ணமும் கொண்ட வரலாற்றாசிரியர்களால் இது சாலும். இந்த நூல் அந்நோக்கத்தை அண்டிவருகிறது. எனவே, அவர் அத்தகைய வரலாற்றை இந்நூலின் இரண்டாம் பாகத்தில் எழுதுவார் என்ற பெருநம்பிக்கையும் எனக்கு உண்டு. அதற்கான தகைமைகளும் அவருக்கு உண்டு.

5. துலாஞ்சனின் தகைமைகள்

துலாஞ்சனனையும், துலாஞ்சனனின் தகைமைகளையும் அறிந்து கொள்வது, இந்த நூலை மேலும் புரிந்துகொள்ள உதவும். தம்பிலுவில் கிராமத்தில் 1991ஆம் ஆண்டு துலாஞ்சனன் பிறந்தார். அப்படியானால், அவருக்கு இப்போது வயது 34. மிக மிக இளமையான வயது. செயலாற்றும் வயது. அவரது பெயர் அற்புதமான ஒரு சிங்களப் பெயர் என்றால் ஆச்சரியம் அடைவீர்கள். சிங்களத்தில் துலங்ஜன் என்றால் “ஒளிர்கின்ற கண் மை” என்று பொருள். தமிழில் அதனை மாற்றி “மைங்கண்ணான்” என்றும் அவர் எழுதி வருவதாகச் சொன்னார். இவ்விடத்தில், தனது வடமொழிப் பெயரான வேதாசலம் என்ற பெயரை மறைமலை என மாற்றிக்கொண்ட மறைமலை அடிகளார் (வேதம் மறை, அசலம் - மலை), பரிதிமால் கலைஞன் என தன் பெயரை மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி (சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞன்) ஆகியோர் ஞாபகம் வருகிறார்கள்.

துலாஞ்சனனின் அப்பா விவேகானந்தராஜா தேசிய சேமிப்பு வங்கியிலே முகாமையாளராகக் கடமையாற்றி ஓய்வு கொண்டவர். அம்மா சுசிலா. விதுர்ஷனா லோகிஸ் எனும் ஆசிரியரான ஒரு மூத்த சகோதரியும் உண்டு. துலாஞ்சனின் துணைவியார் மருத்துவர் ஷேமங்கரி. தற்போது கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கலாநிதிப் பட்டப்படிப்புக் கற்றுக்கொண்டிருக்கிறார். கணவனுக்கு உறுதுணையாக அமைந்த ஓர் ஆய்வாளர். துலாஞ்சனனது மாமியார் பேராசிரியை சாந்தி கேசவன், எனக்குப் பிடித்தமான மாணவி. பல ஆய்வுநூல்களை எழுதிய கல்வியாளர். இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், இந்த அருமையான குடும்பச்சூழலே அவரை இன்னுமின்னும் எழுத ஊக்கப்படுத்துகிறது என்பதாலேயே.

கிழக்கிலங்கையிலே, அம்பாறை மாவட்டத்திலேயே, தம்பிலுவில் கிராமத்தில் பிறந்த துலாஞ்சனன் அந்த ஊரிலேயே கற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் மூலக்கூற்று உயிரியலிலும், உயிர் இரசாயனவியலிலும் விஞ்ஞானமாணி பட்டத்தை முடித்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகமும், முகாமைத்துவமும் துறையில் முதுமாணி பட்டம் முடித்திருக்கிறார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செயல்விளக்குநராகப் (Demonstrator) பணிபுரிந்து, தற்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக (உதவிப் பிரதேச செயலாளர், வெல்லாவெளி) இருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானக் கல்வி, பின்னர் நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டம் என, முறையாக அத்துறைகளைப் பயின்ற துலாஞ்சனன், தனக்கு விருப்பமான சமூகவியல், வரலாற்றுத் துறைகளை முறையாகப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வாய்ப்பு ஏற்படாமை துரதிர்ஷ்டமே. ஆனால், இதன் முறையியலைத் தானாகத் தேடி, அவர் பயின்று கொண்டார். அவர் பல்கலைக்கழகத்தில் வேறு துறைகளில் பெற்ற ஆய்வுப்பயிற்சிகள் வரலாறு எழுதுவதற்கான ஓர் ஆய்வு மனப்பாங்கை அவருக்கு அளித்தன எனலாம்.

துலாஞ்சனனுக்கு இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஈடுபாடு வந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு. அவர் உரையாடும்போது அடிக்கடி கூறுவது போல, அவர் பிறந்த மண்ணும் சூழலும் அதற்கு ஒரு காரணமாகும். இவர் பிறந்தது தம்பிலுவில் கிராமத்தில். சைவமும் தமிழும், கிராமிய வழிபாடுகளும், மரபும் செழித்த மண் அது. வில்லியம்பிள்ளை, குஞ்சித்தம்பிப் புலவர் முதலிய கல்விமான்கள் கடந்தகாலத்தில் அவ்வூரில் வாழ்ந்திருக்கிறார்கள். இலங்கையின் பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோவில்களில் ஒன்றான தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் அங்கே இருக்கிறது. ஆகமமுறை சாராத நாட்டாரியலையும், சாதிய இயக்கம் சார்ந்த சமூகவியலையும் சிறுவயதிலிருந்தே கவனிப்பதற்கான சூழலை அந்தக் கோவில் இவருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கூடவே, கண்ணகியின் சிலப்பதிகாரமும் அதன் ஈழத்து வடிவமான கண்ணகி வழக்குரையும் அவருக்குச் சிறுவயதிலிருந்து அறிமுகம் ஆனதும் ஒரு காரணம்.

இந்த நூலை எழுதுவதற்கான பயிற்சியையும், அறிவையும், தகவலையும் அவர் பெற்ற விதம் சுவாரசியமானது. கீழைக்கரை எனும் இந்த நூலில் குறிப்பிடப்படும் நிலப்பகுதியில், மூன்றில் இரண்டு பாகத்தை அடக்கி இருக்கின்ற “மட்டக்களப்புத் தேசம்” என்னும் பழைய சிற்றரசின் தலைமை வழிபாட்டிடமாக விளங்கிய திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், தேசத்துக்கோவில் என அழைக்கப்பட்டது. இது இவரது ஊருக்கு அயலிலுள்ள திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் நிர்வாகத்தில் முதன்மை இடம்பெறும் “வண்ணக்கர்” என்ற பதவியை வகித்தோர் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்தவர்களே. அந்த மரபு சார்ந்து, இளவயதில் இவருக்குக் கிடைந்த சித்திரவேலாயுத சுவாமி கோவில் அனுபவங்கள் பெரும் வரப்பிரசாதமாக இருந்தன. இதனால், அகத்துள் இருந்து ஆய்வாளராக எழுதுகின்ற ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த கோவில் பற்றியும் கல்வெட்டுகள் பற்றியும் அவர் ஆராய முற்பட்ட பொழுது தான் வரலாற்றின் மீது அவருக்கு காதல் உண்டானது.

இவரது அம்மாவினுடைய அப்பா மாணிக்கம் சங்கரப்பிள்ளை நல்ல குரல் வளம் வாய்ந்தவர் என அறிகிறோம். அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை என்றாலும், கந்தபுராண படனத்திலும், கண்ணகி வழக்குரை பாடுவதிலும் அந்தப் பகுதியிலே நிகரற்றவராக இருந்திருக்கிறார். அவரது சிறு நூலகத்திலே திருவாசகம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பெரியபுராணம் முதலிய சைவ நூல்களும், கண்ணகி வழக்குரை, அம்மன் காவியங்கள் முதலிய உள்ளூர் இலக்கியங்களும் நிறைந்து இருந்தன எனச் சொல்லும் அவரது பேரப்பிள்ளைக்கு, சிறுவயதிலிருந்து அவரோடு மிகுந்த நெருக்கம் உண்டு. அறிவு நிறைந்த பாட்டன் கிடைப்பது குழந்தைகளுக்கு ஒரு பெருவரம். அந்த வரம் பெற்றவர் நமது துலாஞ்சனன்.

தன் மடியில் அந்தக் குழந்தையான துலாஞ்சனனை வைத்து, அவர் சொன்ன கதைகள் சிறுவயதிலேயே துலாஞ்சனனின் உள்ளத்தில் இலக்கிய ஆர்வத்தையும் வரலாற்று ஆர்வத்தையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் அவனுக்கு வாசிப்புப் பசி ஏற்பட்டதும், அந்தச் சிறுவன் வாசிக்கத் தொடங்கினான், நூல்களின் காதலனானான். இப்படி சமயம், இலக்கியம், வரலாறு ஆகிய இந்த மூன்று துறைகளும் இந்தச் சிறுவன் உள்ளத்தில் சிறுவயதில் ஆழப்பதிந்தன.

இதன் வெளிப்பாடுகளாக, இந்தச் சிறுவன் வாலிபனானதும் சின்னச் சின்ன கட்டுரைகள் எழுத தொடங்கினான். இந்த மரபுவழிப் பார்வையோடும் அனுபவத்தோடும் வளர்ந்த துலாஞ்சனன், பல்கலைக்கழகம் சென்றபோது வித்தியாசமான ஆய்வு முறைமைகளுக்கும், நுணுக்கமான பார்வைகளுக்கும், விமர்சனபூர்வமான பார்வைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பின்னணியில் உள்ளூர்க் கதைகளையும், உள்ளூர் மரபுகளையும் பார்த்தபோது துலாஞ்சனனின் ஆய்வு வித்தியாசமாயிற்று.

இதற்கு முன், துலாஞ்சனன் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். ஒன்று “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” எனும் நூலாகும். அதில் சிவன் பற்றி வரும் கருத்துகள், தகவல்கள் என்பன சிவவழிபாட்டு ஆய்வாளருக்குப் புதுமையானவை. அதிலுள்ள பல கருத்துகளை பல சைவ சமயத்தவர்கள் முகச்சுழிப்போடு தவிர்க்கவியலாது ஏற்றுக்கொண்டனர். துலாஞ்சனனின் எடுத்துரைப்பு முறைமை அத்தகையது. அந்நூல் சிவவழிபாடு எவ்வாறு தென்னாசியா முழுவதும் மத்தியதரைக் கடலிலும் பரவி இருந்தது என்பதையும், எவ்வாறு அது வரலாற்றுப்போக்கில் வளர்ந்து பல்வேறு கிளைகளாகவும், தத்துவங்களாகவும் பல பிரிவுகள் பெற்றது என்பதையும் காட்டுகின்ற ஒரு பெரும் ஆய்வு நூலாகும். மானிடவியல் பார்வை மூலம் சைவ வளர்ச்சியை, பரம்பலை அவர் அதில் ஆராய்ந்திருந்தார். அப்போதுதான் எனக்கு துலாஞ்சனன் அறிமுகமானார்.

அந்த நூல் அறிமுக விழாவில் ஒரு நீண்ட உரையை நான் நிகழ்த்தியமை ஞாபகம் வருகிறது. அந்த நூலை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள, சிவவழிபாட்டு ஆய்வு நூல்கள் பலவற்றை நான் மேலும் வாசிக்கவேண்டி இருந்தது. ஆய்வாளர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்த அந்த நூல், துலாஞ்சனனை அடையாளம் காட்டியது. ஓர் ஆய்வுச் சகபயணி எனக்குக் கிடைத்தார்.

பரந்து விரிந்த பரம்பொருளாகச் சமயஞானிகளால் வர்ணிக்கப் படும் சிவனை ஆய்வுக்குள் அடக்க முயன்ற துலாஞ்சனன் பின்னர், தான் வாழ்ந்த, தான் அனுபவித்த, தான் புரிந்துகொண்ட, மட்டக்களப்புப் பற்றி ஒரு சிறுநூல் எழுதி வெளியிட்டார். அதன் தலைப்பு “மட்டுக்களப்பு எட்டுப் பகுதி” என்பதாகும். கிழக்கிலங்கை வரலாற்றை இன்னொரு கோணத்தில் பார்த்த நூல் அது. அதுவரை கிழக்கிலங்கை பற்றி வந்த நூல்களில் இருந்து பல விடயங்களில் அது மாறுபட்டு இருந்தது. அந்நூல் பற்றி நான் ஒரு நீண்ட கட்டுரையும் எழுதியுள்ளேன்.

நவீன தமிழ் இலக்கியம் துலாஞ்சனனுக்குப் பிடித்தமானது. சமூகவியல், மானிடவியல் என்பன அவர் விரும்பி வாசிக்கும் ஒரு துறை. இளம் வயதில் கூத்துக்கலைஞனாகவும் அவர் இருந்திருக்கிறார். நான் முதலில் மேடையில் ஆடிய கூத்து பாசுபதாஸ்திரம், அதிலே வேடனாகத் தோன்றினேன். அப்போது எனக்கு 15 வயது. தனது 13 வயதிலேயே, அதே கூத்து தம்பிலுவில் மேடையிடப்பட்ட பொழுது, அதில் அவர் வேடனாகத் தோன்றி நடித்ததாகச் சொன்னதை இப்போது யோசித்துப் பார்க்கின்றேன்.

தொலைபேசியில் சிலவேளைகளில் நீண்ட உரையாடல் நடத்துவோம். அண்மையில் அவரிடம் கேட்டேன், “இப்போது என்ன வாசிக்கிறீர்கள்?” என்று. அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியம் தந்தது. “ஹிரியண்ணா எழுதிய இந்திய தத்துவஞானம் வாசித்துக் கொண்டிருக்கிறேன், சேர்” என்றார். “ஹிரியண்ணா சிந்தனைப் பள்ளி ஒருபுறம் என்றால், தத்துவவியல் அறிஞர் ராதாகிருஷ்ணனின் மாணவரான சட்டோபாத்யாயாவின் சிந்தனைப் பள்ளி இன்னொரு புறம். அதனையும் சேர்த்து வாசியுங்கள்” என்று கூறிச் சில நூல்களை அறிமுகம் செய்தேன். மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

இதுதான் துலாஞ்சனன்.

தனக்கென ஒரு கொள்கையை அவர் வாசிப்பினாலும் அனுபவத்தினாலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அந்தக் கொள்கையில் இறுக்கமாக நிற்காமல், ஏனையவற்றையும் படிக்கும், அறியும், ஆர்வம் அவரிடம் அதிகம் காணப்படுகிறது. இந்த மனப்பான்மை அவருக்கு மேலும் அறிவைத் தருகிறது. இதனால் பன்முக ஆய்வு நெறிகளையும் தனது ஆய்வில் பிரயோகிக்கும் ஓர் ஆய்வாளராக அவர் வளர்ந்து வருகிறார்.

இன்னொரு வகையில் சொன்னால், பல்கலைக்கழக மரபுவழி ஆய்வாளர்களுக்கு வெளியே பிரகாசிக்கும் மிக முக்கியமான ஆய்வாளர்களுள் ஒருவராக அவர் எனக்குக் காட்சி தருகிறார். இந்திய வரலாற்றிலே கோசாம்பி போன்றவர்கள் முறையாக வரலாற்று அறிவைப் பெற்றவர்கள் அல்ல. அவருடைய அடிப்படைக் கல்வி கணிதமாகும். ஆனால் அவர் எழுதிய வரலாற்று நூல்கள் இந்திய வரலாற்றை இன்னொரு கோணத்தில் அணுகுவதற்கு உறுதுணையாக இருக்கும் நூல்களாகும்.

கோசாம்பி, ரொமிலா தாப்பர் போன்றவர்கள் இந்தியாவில் மட்டும் தானா பிறக்க முடியும்? இலங்கையிலும் துலாஞ்சனன் போன்றவர்கள் முன்மாதிரியாகத் தோன்ற இயலும் என்பதை இந்தநூல் காட்டி நிற்கிறது. கீழைக்கரை வரலாற்றில் அல்லது இலங்கை வரலாற்றில், பண்பாட்டில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு புதிய படைப்புகளைத் தரும் போது, நான் துலாஞ்சனன் பற்றிக்கூறிய கூற்று மிகை அல்ல என்பது உறுதிப்படுத்தப்படும்.

துலாஞ்சனன், உங்களைப் போன்ற அர்ப்பணிப்பு மிக்க இளம் ஆய்வாளர்கள் இலங்கையில் இன்னும் பலர் தோன்ற வேண்டுமென ஆசைப்படுகிறேன். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி வேகம் கொள்வதாகுக!

ஓய்வுநிலைப் பேராசிரியர், சி.மௌனகுரு

maunasiththan@gmail.com

05.08.2025