
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழாவில், எழுநாவின் வெளியீடாகிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமாகிய இரா. சடகோபன் அவர்களின் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூல் அறிமுக நிகழ்வு, கடந்த 03.07.2026 வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு யாழ் பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் P. கோபிநாத் அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தினார்.
அவர் உரையாற்றுகையில், “சிறந்த சட்டத்தரணியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கலைஞராகவும் விளங்கும் இரா. சடகோபன், 2023 இல் இருநூற்றாண்டு வரலாற்றினைக் கடந்திருக்கும் மலையக மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி இந்நூலில் சிறப்பாக எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல விடயங்களை தெளிவாக விளக்கியிருக்கின்றார். ஒரு தலைப்பில் ‘கட்டிப்போட்ட கயிறுகளும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளும்’ என ஓர் உவமையைக் கையாண்டிருக்கின்றார். இங்கு கட்டிப்போட்ட கயிறுகளாக மலையக மக்களின் சாதி, மதம், அடிமைத்தனம் போன்ற விடயங்களை எழுத்தாளர் குறிப்பிடுகின்றார். கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளாக 3 மாதக்கூலி, 12×12 அடி லயம், கங்காணிமார் மற்றும் துரைமாரின் ஆதிக்கம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலும் அதிகாரப் பிரமிட்டுகளின் அடியில் நசுங்கிக்கிடந்த மக்கள் என்பதையும் விளக்கியிருக்கின்றார்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
