
எழுநா மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 02.05.2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்விற்கு மருத்துவர் விக்ணவேனி செல்வநாதன் தலைமை வகித்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய சமூக ஆய்வாளரான திரு. கந்தையா சண்முகலிங்கம், “பால.சிவகடாட்சம் அவர்கள் ஏட்டுப்பிரதியிலிருந்த ‘இரசவர்க்கம்’ எனும் நூற்பிரதியை அச்சில் பதிப்பித்துள்ளார். இந்நூல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்ததாகும். செகராசசேகரன் என்ற பெயருடைய மன்னனால் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் உடைய அறிஞர்களால் ஆக்குவிக்கப்பட்டது. செகராஜசேகரத்தின் ஒருசில பகுதிகளே கிடைத்துள்ளன. அழிந்து போனதாகக் கருதப்பட்ட ‘இரசவர்க்கம்’ எனும் பகுதியின் ஏட்டுப் பிரதியொன்றை இந்நூலாசிரியரின் குடும்பத்தினர் பாதுகாத்து வைத்திருந்தனர். அப்பிரதி அதிர்ஷ்டவசமாக அறிஞர் பால.சிவகடாட்சத்தின் கையில் கிடைக்கப்பெற்றது. இவ் ஏட்டுப்பிரதியினை வாசித்து அதனை அச்சு நூல் வடிவமாக்கியுள்ளார். இந்நூல் காலத்தின் கட்டாயத் தேவை“ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள், கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ நூலானது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச்சுவடியில் இருந்த விடயங்களைக்கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது.