எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தெல்லிப்பளையிலுள்ள ‘OfERR Ceylon’ நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் 25.04.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த சிவராசா மரியறோசரி, “கடல் வளங்கள் தற்போது பல்வேறு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இதனால் சிறுதொழில் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இதனைக் கண்டுகொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் கடலில் அதிக வளங்கள் இருந்தன. தற்போது அவை அருகிக்கொண்டு செல்கின்றன. அவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் நாம் இன்று இருக்கின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணை மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றது? அது கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது.