போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் போராட்டம் ஆழமான, அறிவியல் தளத்தில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. இந்நூல், மன்னார் மாவட்டத்தின், குறிப்பாக மன்னார் தீவின் சூழலியல் வளங்கள் மற்றும் அதன் மீது உலகளாவிய அதீத இலாப நோக்கிலான கார்ப்பிரேட் நிறுவனங்களின் கனிம வளத்திரட்சியைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளால் நிகழவிருக்கும் ஆபத்துகள் பற்றி ஆக்கபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலானது. இது, மன்னார் தீவின் கனிம மணல் அகழ்வின் உள் மற்றும் வெளி நிலைகொள் கண்ணோட்டங்களைத் தருவதோடு, திரண்ட சிந்தனைக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒரு வீட்டின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து பார்ப்பதுபோல், பரந்து விரியும் சிந்தனையையும் முன்வைக்கிறது.