ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம்.
இலக்கியப் படைப்பாளி, ஓவியர், அரசியல் விமர்சகர் எனும் பன்முக இயங்குதளங்களைக் கொண்டவர் நிலாந்தன். அவரது கவிதைகள் அலாதியான மொழிதலைக் கொண்டவை. தமது வழமையான அர்த்தப் பரிமாணத்தைக் கடந்துநின்று புதிய அர்த்தப்படுத்தல்களைக் கோரி நிற்பவை.
பிரளயம் நடந்து முடிந்தபின்னும் இன்னும் அடங்கவில்லை வெம்மை. தகித்துக் கொண்டேயிருக்கின்றன மண்ணும், மக்கள் மனங்களும். அற்புதங்களுக்கான காலம் மீளவருமென்று காத்திருத்தலின் அபத்த அரிதாரங்கள் கலையத் தொடங்கியிருக்கின்றன. மௌனவெளியைக் கடந்து வலிகளின் சாட்சியங்கள் உயிர்கொள்ளத்தொடங்குகின்றன. காணொளிகளாக மட்டுமன்றி அவை படைப்பிலக்கியங்களாகவும் பிரளயத்தின் உத்தரிப்புக்களைப் பதியமிட முனைகின்றன. பிரளயம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது எவராலும் எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை. எல்லாமே காலத்தின் நாணயக் கயிற்றின் கீழ்க் கட்டுப்பட்டு, நிகரற்ற யுகத்தை சிதைக்கத் தொடங்கியிருந்தன. நிலங்கள், குடிமனைகள், சொத்துக்கள் கைவிடப்பட்டன. மரபுகள், வீரம், உணர்வுகள், மனிதம் என்பனவும் கைவிடப்பட்டவைகளில் அடக்கம். காலம் மனிதர் களைக் கைவிட்டது. மனிதர்கள் மனிதர்களைக் கைவிட்டார்கள். கைவிடப்படுதலின் காலமானது யுகமுடிவு.
யுகமுடிவுக்குப் பின்னர் அது பற்றிய பதிவிடல்களாக நிறையப் படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அவற்றில் சில பிரளயத்தை ஒற்றைக் கண்ணோடு நோக்கச் சொல்கின்றன. ஆனாலும் உண்மையின் இருகண் பார்வைகொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் நெம்புதலுடன், வலிகளோடு நம்பிக்கையின் கீற்றுக்களையும் சுமந்தபடி, பாடப்பட்டது யுகபுராணம்.
நிலாந்தன் இலக்கியப்படைப்பாளி, ஓவியர்,அரசியல் விமர்சகர் என்னும் பன்முக இயங்குதளங்களைக் கொண்டவர். அவரது கவிதைள் அலாதியான மொழிதலைக் கொண்டவை. நிலாந்தனின் சொற்கள் தமது வழமையான அர்த்தப் பரிமாணத்தைக் கடந்தவை. தமக்கான புதியதொரு அர்த்தப்படுத்தல்களைக் கோரிநிற்பவை. யுகமுடிவின் தருணங்களில் நிலாந்தனின் கைகளில் வாள்களில்லை. கேடயமில்லை. கிடைத்தவையெல்லாம் உத்தரிப்புகள் மட்டுமே. ஆனாலும் அந்த உத்தரிப்புகளின் வலிகளையே ஆயுதமாக்கி, விட்டு விலக்கமுடியாத சாட்சியமாக யுகமுடிவின் காலங்களை மீளப்படைக்கிறார். அவரது கவிதைகள் சாட்சியமளித்தலுடன் நம்பிக்கையூட்டலையும் செய்யத் தவறவில்லை.
புதிய யுகத்தின் தலைநிமிர் காலமொன்றில் பயணிக்கத் தொடங்கிய நிலாந்தன், மலக்கடலையும், மண் அணையையும், உடலங்களாலான மலையையும் சுமந்தே யுகமுடிவினைக் கடக்க முடிகிறது. யுகமுடிவின் பின்னான பொழுதுகளும் உத்தரிப்புகளையே பரிசளிக்கின்றன. துருவேறிக் கிடக்கும் இரும்புக்குவியல்களுக்கிடையே உக்கிப்போகும் கனவுகளையும், அங்கெல்லாம் வந்துபோகும் அந்நியர்களின் காலடிகளில் அவை மிதிபடுவதையும் அவர் கவிதைகளில் சொல்கிறார்.
மனிதர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போனபின்னும், சப்தரிஷிகளுக்காக காத்திருக்கும் படகுகளும், கனவின் பாடல்களைப் பதுக்கியபடி திரியும் கொட்டைப்பாக்குக் குருவிகளும் புதிய யுகத்தின் வனைதல் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கையில் உருவெடுத்து பின்னர் யுகமுடிவுச் சூரியனைபோல் உருகிச் சரிந்து வீழ்ந்து, மீளவும் சூரிய குமாரர்களுக்கான காத்திருப்போடு பாடப்படுகிறது யுகபுராணம். கிருஷ்ணனின் இன்னொரு யுக அழைப்புக்கான கானம் நிலாந்தனின் கவிதைகளாகி, யுகபுராணத்தை நிறைத்து, வழிந்தோடத்தொடங்குகிறது.
எழுநா
டிசம்பர் 2012