நூல்கள் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
மாறுபாடில்லா உண்டி
மாறுபாடில்லா உண்டி
தியாகராஜா சுதர்மன் தியாகராஜா சுதர்மன்

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

அதிகாரம் – மருந்து, குறள் எண் – 945.

எந்தவிதத் தீங்கும் இல்லாத அமிர்தம் போன்ற உணவாகிலும் அதனையும் அளவோடு உண்பவன் உடலுக்கு நோய்கள் ஏற்படாது. இதனால் அவனது உயிருக்கும் எந்தவிதப் பாதிப்புமில்லை என்கின்றார் திருவள்ளுவர். இக்குறளினை அடியொற்றி யாழ்ப்பாணத்துச் சித்தமருத்துவர் இருபாலைச் செட்டியார் இயற்றி, யாழ்ப்பாணத்தின் ஏழாலை எனும் ஊரைச்சேர்ந்த சித்தமருத்துவர் ஐ. பொன்னையா பிள்ளை அவர்களால் 1927 இல் பதிப்பிக்கப்பெற்ற வைத்திய விளக்கம் என்னும் ‘அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி’ என்னும் நூலில் உள்ள உணவுவகைகளை அடிப்படையாகக்கொண்டு ‘மாறுபாடில்லா உண்டி’ என்னும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் நாம் நோயணுகாது வாழ்வதற்கு உதவும். எனினும், ஒவ்வொருவரும் தனிப்பட்டரீதியாக அவரவர் உடலமைப்பு, உடற் தொழிற்பாடு, நோய்நிலைகள் என்பவற்றுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனையுடன் செயற்படுதலும் வேண்டும்.

புத்தக ஆசிரியர் தியாகராஜா சுதர்மன்
எழுநா நூல் வரிசை 25
பக்க எண்ணிக்கை 208
வெளியீட்டு ஆண்டு 2025
பகுப்பு சுதேசியமும் பாரம்பரிய மருத்துவமும்
முன்னுரை
அணிந்துரை
அறிமுகம்
முடிவுரை
நன்றியுரை

எனது முதல் நூலான ‘ஆகாரமே ஆதாரம்’ என்னும் நூல் சித்தமருத்துவத்தில் உணவு தொடர்பான அறிமுகத்தை நவீன உணவு விஞ்ஞானத்துடன் நான் பெற்றுக்கொண்ட அறிவு அனுபவத்தின் அடிப்படையில் தொட்டிருந்தது. இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பும் நேர்மறையான கருத்துக்களும் ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் தொடர் கட்டுரைகளை ‘எழுநா’ இணையத்தளத்தில் எழுத உந்துதாலாக அமையப்பெற்றது. இத்தொடர் கட்டுரைகளை எழுநா குழுவினர் நூலாக்கி பேருதவி நல்கியுள்ளனர்.

இந்நூலானது மக்களின் ஆரோக்கியமான நோயில்லா வாழ்வுக்கு வழிகாட்டியாக இருக்கும். குறிப்பாக இன்று அதிகரித்துள்ள தொற்றா நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதுடன், இவை தொடர்பில் எமது உணவு முறைகளில் மேலதிக ஆய்வுகளைத் தூண்டி, எமது பாரம்பரிய நூல்களில் உள்ள கருத்துக்களை நாம் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வழியமைக்கும்.

எமது பாரம்பரிய நூல்களில் பாடல்களாகவே மருத்துவக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் அவற்றினை உரை நடையில் பாடலுடன் சேர்த்தே தந்துள்ளேன். காரணம் பாடல்களின் முழுமையான விளக்கத்தை என்னால் முடிந்தவரையே இந்நூலில் இலகு படுத்தியுள்ளேன். தமிழ் மற்றும் ஆன்மிக நூல்கள், மருத்துவ நூல்கள் பலவற்றைக் கற்றாலே இம் மருத்துவப் பாடல்களில் உள்ள கருத்துக்களை முழுமையாக எங்களால் புரிந்துகொள்ள முடியும். எனது உரை நடையில் சிறு தவறுகள், விளக்கக் குறைவு இருந்தாலும் அவற்றினை இப்பாடல்கள் சரி செய்யும். அத்துடன் வருங்காலச் சந்ததிக்கு இது ஒரு ஆவணப்படுத்தலாகவும் அமையும்.

இயன்றவரை நவீன உணவு விஞ்ஞானக் கருத்துக்களையும் சேர்த்தே இந்நூல் உங்கள் முன் வருகின்றது. பல இடங்களில் அதிகமான சித்தமருத்துவச் சொல்லாடல்களை தவிர்க்கமுடியாது பயன்படுத்தியிருந்தாலும், இது மக்களுக்கு தங்கள் ஆரோக்கியத்தை  பேண உதவியாக இருக்கும். குறிப்பாக ஆர்வலர்கள், மாணவர்களுக்கு உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

தமிழரின் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம் கூறும் மருத்துவக் கருத்துகளில், உணவு மூல வகைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், அவற்றின் மருத்துவக் குணங்கள் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகின்றன என்பதைப் பற்றி அழகாக இந்நூலில் எழுதியுள்ளார் எனது மாணவனான  மருத்துவர்  தியாகராஜா  சுதர்மன்.

இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனது ஆரோக்கியம் தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கும் உணவு தொடர்பில், முன்பே சித்தர்களால் கூறப்பட்ட விடயங்கள் இன்றளவும் பயன் தருகின்றன. இவ்வாறு சித்தர்களால் கூறப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாடு  ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியத்தை நல்கும் என்பதை இந்நூல் வெளிப்படுத்தி  நிற்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்து சித்தமருத்துவ நூலான ‘அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி’ எனும் நூலினை ஆதாரமாகக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக உணவுப் பயன்பாட்டில் இருந்த உணவுகளை தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புவகைகள் மற்றும் மரக்கறி வகைகள், அசைவ உணவு வகைகள், பால்  பால்சார் உணவுகள், சுவையூட்டிகள், பழங்கள், பனைசார் உணவுகள் என வகைப்படுத்தி அவற்றின் சாதக - பாதகங்களை இந்நூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு இவர் கற்ற  சித்தமருத்துவ பட்டப் படிப்பு, உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் கல்வி என்பனவோடு இதுவரை காலமும் பெற்றுக்கொண்ட  அனுபவங்களும் உதவியிருக்கின்றன.

இந்நூலில் கூறப்பட்டுள்ள, பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் சுவையூட்டிகள், அவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் என்பனவற்றை எமது சமுதாயம் எவ்விதம் நோயின்றி வாழ்வற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது பெருவியப்பினையும் தமிழர் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பினையும் ஏற்படுத்துகின்றது.

எழுநா, இவ்வளவு விடயங்களையும் தொடராக தமது ஊடாக இணையத்தளத்தின் மூலம் தந்தது மட்டுமன்றி, அவற்றினை நூலாகவும் தருவது தமிழ்ச் சமுதாயத்தின் மீதும் எமது பாரமபரியத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றுதலே காரணமாகும்.

‘மாறுபாடில்லா உண்டி’ என்னும் இந்நூல் தமிழர்களது தொன்மையை மீட்டெடுப்பது மட்டுமன்றி நோய்கள் பெருகியிருக்கும் இக்காலத்தில் நோய்கள் அணுகாது வாழவும், நோய்களை கட்டுக்குள் வைத்திருந்து இவ் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடவும் உதவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டு இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

ஏற்கனவே ‘ஆகாரமே ஆதாரம்’ என்னும் உணவு தொடர்பான நூலினையும், திருவாசகம், திருமந்திரம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘அன்பே சிவம்’ என்னும் குறுங்கதைகள் கொண்ட நூலினையும் வெளியிட்டுள்ள நூலாசிரியரின் சிறப்பான  பணிகள் மேன்மேலும்  தொடர வாழ்த்துகிறேன். 

திருமதி. லோகநாயகி கணேந்திரன்

ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்.

 

 

“மாறுபாடில்லா உண்டி” என்னும் தலைப்பில், அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள எமது பாரம்பரிய உணவு மூலப்பொருட்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான நன்மை, தீமைகளை ஏனைய நூல்கள், மற்றும் நவீன உணவு விஞ்ஞான ரீதியிலான கட்டுரைகள், நூல்கள் என்பவற்றின் துணைகொண்டு எனது அனுபவத்துடன் பல்வேறு தலையங்கங்களின் தந்துள்ளேன்.

இங்கு உணவு மூலப்பொருட்களின் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்களின் பெறுமானங்கள் அவற்றின் தனியான நிலைகளிலேயே தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகை, உணவு தயாரிக்கும் முறை, அவற்றுடன் சேர்க்கும் பொருட்கள், அவ்வுணவுகளுடன் சேர்த்து உண்ணும் உணவுகள் மற்றும் உண்ணும் காலம், அளவுகள், தொடர்ச்சியான பாவனை என்பவற்றின் அடிப்ப்டையில் இவ்வுணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்களின் பெறுமானங்கள், ஒவ்வாமைத் தன்மைகள் என்பன மாறுபடலாம்.

எமது பாரம்பரிய உணவுப்பழக்கம் அல்லது பாரம்பரிய உணவு முறைமையானது நீண்டகால அவதானம், அதன்மூலம் பெறப்பட்ட அனுபவத்தின் மூலமும், சித்தர்கள், சித்த மருத்துவர்கள், நூலோர்கள் மூலம் பெற்றுக்கொண்ட அறிவு வாயிலாகவும் பெறப்பட்டவை. எமது பிரதேச பருவகாலங்களுக்கு ஏற்பவும் எமது தொழில்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும், எமது பிரதேசங்களில் கிடைக்கும் உணவு மூலப்பொருட்களுக்கு ஏற்பவும் தொடர் மாற்றங்களுக்கூடாக உருவாகப் பெற்றவையே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள்.

எனவே பாரம்பரிய உணவு முறைகள் ஆரோக்கியமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் சில உணவு முறைகள் இக்கால வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபாடு அடைய வேண்டியது என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். முக்கியமாக அருகிவரும் அல்லது குறைந்து வரும் உடல் உழைப்புக்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் இன்றியமையாததாகும். அதிகளவில் மாப்பொருளைக் கொண்ட தானியங்கள் எமது பாரம்பரிய உணவில் பிரதான இடத்தைக் கொண்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டு முறைமையும், அளவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகின்றது. 

எனவே உணவு முறைமைகளைக் கையாளும்போது உரிய மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டியது இன்றியமையாததாகும். 

ஆரோக்கியமான நீண்ட வாழ்வு என்பது என்னைப் பொறுத்தவரை பரம்பரை, உணவு முறை, மனநிலை, உடல் உழைப்பு/ பயற்சி, சூழல் என்பவற்றில் தங்கியுள்ளது. இவை ஐந்தும் நன்நிலையில் இருத்தல் அவசியம். ஏதேனும் ஒன்றில் மாறுபாடுகள் இருப்பின் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படலாம். இங்கு பரம்பரை என்பது எங்களில் தங்கியிருப்பதில்லை. ஆனால் எமக்குப் பின்னான பரம்பரை எங்களில் தங்கியுள்ளது. அதேபோல் பரம்பரையின் ஆரோக்கிய நிலையினை அறிந்து ஏனைய நான்கினையும் ஒழுங்கான முறையில் பேணி, நாம் ஆரோக்கியமாக வாழ்வதுடன் எமது பரம்பரையையும் இயன்றவரை ஆரோக்கியமாக வாழ வழிசெய்திடுவோம்.

 

‘மாறுபாடில்லா உண்டி’ எனும் தலைப்பில் கட்டுரைகளை தொடராக வெளியிட்ட எழுநா குழுவினருக்கும், எழுநா தளத்துடன் என்னை அறிமுகப்படுத்திய நண்பர், உதயன் நாளிதழின் பிரதம ஆசிரியர் த. பிரபாகரன் அவர்களுக்கும், கட்டுரைகளை வாசித்து ஊக்கப் படுத்தியவர்களுக்கும், என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தி அனைத்துக்கும் உதவியாக இருந்த எனது குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் என்றும் உரித்தாகும்.