இந்தப் புத்தகம் தன்னகத்தே கொண்டுள்ள கட்டுரைகள் வெறும் கல்விசார் வாதங்கள் அல்லது சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளின் தொகுப்பு மட்டுமல்ல. இது ஒரு வலுவான பிரதிவாதத்தின் தொகுப்பு. ‘பசுமை’ எனும் நவீனகால கவர்ச்சிப்பண்டத்தை சோதித்துப் பார்க்கும் தொகுப்பு. தெளிவு மற்றும் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், காலனித்துவத்திற்குப் பிந்தைய யதார்த்தங்களின் சாதகமான புள்ளியில் இருந்து உலகளாவிய பசுமைப் பொருளாதாரத்தை விசாரணை செய்கின்றன. முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம். சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் அரசு அதிகாரம் ஆகியவை சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை, மிகக் குறிப்பாக இலங்கையை. எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வரைபடமாக்குகின்றன. ‘பேண்தகுநிலை’, ‘அபிவிருத்தி’. பொருளாதார வளர்ச்சி’ என்ற பதாகைகளின் கீழ் என்ன விற்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், யார் பயனடைகிறார்கள். யார் செலவைச் சுமக்கிறார்கள் என்பதையும் இந்தக் கட்டுரைகள் சுட்டி நிற்கின்றன.
கலாநிதி மீநிலங்கோ, இன்று தன்னை அரசியற் புவியியலாளர் என்று அறிமுகப்படுத்துகிறார். ஆயினும், கலாநிதி மீநிலங்கோ வின் புலமைவெளி மிகப்பரந்து விரிந்தது. தொலைத்தொடர்பு மற்றும் இலத்திரனியல், அரசறிவியல், தொடர்பாடல் மற்றும் ஊடகவியல், இயற்கைக் கட்டடக்கலை,வலுச்சக்தி, சுற்றுச்சூழல், அரசியற் சூழலியல் எனப் பரந்துபட்ட துறைகளில் பட்டங்களைப் பெற்ற, ஈழம் உலகிற்குத் தந்த சமகாலப் புலமையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கலாநிதி மீநிலங்கோ.
பேசாப் பொருளைப் பேசுதல் என்பதை பலவேளைகளில் அபத்தமாகப் புரிந்துகொண்டுள்ள சமகாலச் சமூகத்தில், ஒரு புலமையாளராக தமிழ்ப்பரப்பில் அதிகம் பேசப்படாத பூகோளப் பசுமைப் பொருளாதாரம் பற்றியும், இலங்கையின் சூழலியல் மற்றும் இலங்கையின் சிலாகிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பரந்துபட்ட விமர்சனப் பார்வையோடும், கடுமையான விசாரணை அணுகுமுறையோடும் கனதியான பன்னிரண்டு கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்.
தீவிரமடைந்து வரும் காலநிலைப் பிறழ்வு, பெருமளவிலான இடப்பெயர்ச்சி, சுற்றுச்சூழல் அநீதி மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் மத்தியில், 'பசுமை' என்பது நம் காலத்தின் மிகவும் கவர்ச்சிகரமான ஆனால் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது. உலகப் பிறழ்வினைத் தடுக்க அத்தியாவசியமான வினைதீர்க்கும் மருந்தாக, குறிப்பாக மேற்குலகில், சந்தைப்படுத்தப்படும் இது, பெரும்பாலும் வெளிப்படுத்துவதைவிட அதிகமாக மறைக்கிறது. முரண்பாடுகள் நிறைந்த இந்த இருண்ட நிலப்பரப்பில்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வேரூன்றுகின்றன.
இலங்கையின் வரலாற்றில் சிலாகிக்கப்படும் 'மகாவலி அபிவிருத்தித்திட்டம்', 'மேல்கொத்மலைத் திட்டம்' ஆகிய வற்றின் மறுபக்கத்தை விசாரணைக்குட்படுத்தும் கலாநிதி மீநிலங்கோ, இலங்கையின் நீர்மின்திட்டங்கள், 'சம்பூர் அனல் மின்னிலையத்திட்டம்', சுன்னாகம் நிலத்தடி நீர், இலங்கையின் கடல்வளம், எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்.
இலங்கையில் வியாபாரப் பண்டமாகிவிட்ட சூழலியல் சுற்றுலா தொடர்பாகவெல்லாம் வலுவான கட்டுடைப்புகளையும், கனதியான பிரதிவாதங்களையும் முன்வைக்கிறார்.
இந்தப் புத்தகம் தன்னகத்தே கொண்டுள்ள கட்டுரைகள் வெறும் கல்விசார் வாதங்கள் அல்லது சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளின் தொகுப்பு மட்டுமல்ல. இது ஒரு வலுவான பிரதிவாதத்தின் தொகுப்பு. 'பசுமை' எனும் நவீனகால கவர்ச்சிப்பண்டத்தை சோதித்துப் பார்க்கும் தொகுப்பு. தெளிவு மற்றும் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், காலனித்துவத்திற்குப் பிந்தைய யதார்த்தங்களின் சாதகமான புள்ளியில் இருந்து உலகளாவிய பசுமைப் பொருளாதாரத்தை விசாரணை செய்கின்றன. முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் அரசு அதிகாரம் ஆகியவை சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை, மிகக் குறிப்பாக இலங்கையை, எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வரைபடமாக்குகின்றன. 'பேண்தகுநிலை', 'அபிவிருத்தி', 'பொருளாதார வளர்ச்சி' என்ற பதாகைகளின் கீழ் என்ன விற்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், யார் பயனடைகிறார்கள், யார் செலவைச் சுமக்கிறார்கள் என்பதையும் இந்தக் கட்டுரைகள் சுட்டி நிற்கின்றன.
இந்தக் கட்டுரைகள், காலநிலை மாற்றம், அபிவிருத்தித் திட்டங்கள், சூழலியல் என்பனவெல்லாம் வெறும் தொழில்நுட்பம் மட்டும் சார்ந்து அணுகப்பட வேண்டியவை அல்ல, அவை மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஆழமான அரசியல் மற்றும் வாழ்வியல் தாக்கங்களைக் கொண்டுள்ளவை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்த மாற்றுப்பார்வை பற்றிய பிரக்ஞை இந்த விடயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவசியமாகிறது.
காலநிலை மாற்றத்தின் காரணங்களும் விளைவுகளும் சீரற்றவை, அவை காலனித்துவச் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் ஏகாதிபத்தியத்தின் வரலாறுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பூகோள வடக்கிலிருந்து பெரும்பாலும் வெளிப்படும் மேலாதிக்கச் சொற்பொழிவுகள் இந்தச் சிக்கல்களை கார்பன் ஈடுகட்டல்கள், மறுசுழற்சி மற்றும் பசுமை நுகர்வோர் போன்ற எளிய வௌளையடிக்கப்பட்ட பதாகைகளினுள் அடக்கிவிடப் பார்க்கின்றன. 'அபிவிருத்தித் திட்டங்கள்' யாருக்கானவை?
அந்தத் திட்டங்கள் முறையாகத் திட்டமிடப்படுகின்றனவா? அந்தத் திட்டங்களின் பின்னாலுள்ள அரசியல் திட்டங்கள் என்ன, சமூகச் செலவுகள் என்ன என்பனவற்றையெல்லாம் காலாநிதி மீநிலங்கோ தீர்க்கமாக விசாரிக்கிறார். அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்ற எளிமைப்படுத்தலுக்குப் பின்னாலுள்ள சிக்கல்களை அவர் அடையாளங்காட்டுகிறார். இந்தக் கட்டுரைகள் இத்தகைய எளிமைப்படுத்தல்களுக்கு எதிரான வலுவான பிரதிவாதத்தை முன்வைக்கிறது. குறிப்பாக நெருக்கடியின் அளவையோ அல்லது அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தையோ காட்டிக் கொடுக்காத ஒரு மொழியில், கலாநிதி மீநிலங்கோ தன்னுடைய பிரதிவாதங்களை முன்வைக்கிறார்.
இந்தக் கட்டுரைகளில், கலாநிதி மீநிலங்கோ தன்னுடைய எழுத்தை ஒரு கூர்மையான விமர்சன மற்றும் விசாரணை ஆயுதமாகவும், சிந்தனைக்கு வழிகாட்டும் திசைகாட்டியாகவும் பயன்படுத்தியிருக்கிறார். அதன் மூலம் பிரபல்யமான மாயைகளைக் கடந்த, சுற்றுச்சூழல் பற்றிய நியாயமான அல்லது சீர்தூக்கிய பார்வையை நோக்கிய சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்த அவர் முனைகிறார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பலம் என்பது அதன் புலமைசார் கடுமையில் மட்டுமல்ல, சூழலியலை பொருளாதாரத்திலிருந்தும், சுற்றுச்சூழலை நீதியிலிருந்தும் பிரிக்க மறுப்பதிலும் உள்ளது. எந்தவொரு அர்த்தமுள்ள மாற்றமும், அபிவிருத்தியும் சுற்றுச்சூழல் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் முதுகில் மற்றவர்களால் கட்டமைக்கப்படக்கூடாது, மாறாக அவர்களின் தலைமை, அவர்களின் அனுபவங்கள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் உண்மைகள் மூலம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கலாநிதி மீநிலங்கோ சொல்லும் முக்கிய செய்தி.
நீங்கள் இந்தக் கட்டுரைகளின் பக்கங்களைப் புரட்டும்போது, உங்களுக்கு கோபம் வரலாம், ஆத்திரம்கூட வரலாம், ஆழமான கேள்விகள் எழலாம், முரண்பாடுகள்கூடத் தென்படலாம். கலாநிதி மீநிலங்கோ சொல்பவற்றோடு நீங்கள் இணங்கலாம், இல்லை அதனை மறுக்கலாம். பசுமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த சமகாலப் பொதுநிலையிலுள்ள பிரபல்ய கட்டமைப்புகளை கலாநிதி மீநிலங்கோ கேள்வி கேட்கிறார். தன் புலமையினால் ஆழமான சூழலியல், சமூகவியல் மற்றும் அரசியல் விசாரணையொன்றைச் செய்கிறார். நீதி இல்லாத பேண்தகுநிலை அல்லது நீதி இல்லாத அபிவிருத்தி என்பது வன்முறையின் ஒரு புதிய வடிவம் என்பதுதான் அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி. இங்கு முடிந்த முடிபுகள் எதுவும் சொல்லப்படவில்லை. அதனால்தான் இதனை நான் கலாநிதி மீநிலங்கோவின் 'பிரதிவாதம்' என்று குறிப்பிட்டிருந்தேன். இதனைத் தமிழில் எழுதியது மிகுந்த பாராட்டுக்குரியது. ஏனென்றால், யதார்த்தத்தில் இதுபோன்ற புலமைசார் படைப்புகளை தமிழில் எழுதுவதென்பது செய்நன்றிபெறா செயற்பாடோ என்ற எண்ணம் எழுவது தவிர்க்கமுடியாதது. தென்னிந்தியத் திரைப்படச் சூழலை மீறிச் சிந்திக்கத் திணறும் ஒரு சமூகத்திற்குப் பூகோளப் பசுமைப் பதாகையையும், இலங்கையின் சிலாகிக்கும் அபிவிருத்தித் திட்டங்களையும் விமர்சனக் கண்கொண்டு பார்க்கச்செய்யும் முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடுமோ என்று அயர்ச்சி கொள்ளாமல், தமிழ்ப் புலமைவெளிக்கு ஒரு வலுவான சிந்தனைத் தொகுப்பை கலாநிதி மீநிலங்கோ ஆக்கியளித்திருக்கிறார்.
மையநீரோட்ட பிரபல்ய பசுமை மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களைக் கேள்விகேட்கும், ஈழம் உலகிற்குத்தந்த புலமையாளர் கலாநிதி மீநிலங்கோவின் பலம் வாய்ந்த பிரதிவாதம் இது இதனைப் பிரசுரிக்கும் எழுநாவிற்கு என்னுடைய நன்றியும். பாராட்டும் உரித்தாகட்டும்.
Knowledge is not the prize of being right, but the path carved by doubt – it lives where questions dare to wander.
என்.கே.அஷோக்பரன் 15 - IV - 2025 மௌன்ட் லவினியா, இலங்கை.