கறவை மாடு வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதனத் தொழில்களில் கறவை மாடு வளர்ப்பு மிக முக்கியமானது. பால், இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கறவை மாடு வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரதம் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் இது அமைகிறது. பொருளாதார நெருக் கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கறவை மாடு வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணை மட்டத்தை எவ்வாறு உயர்த்தலாம். இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழி முறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கறவை மாடு வளர்ப்புப் பொருளாதாரம்’ என்ற இந்நூல் அமைகிறது. இந்நூல் இத்துறை தொடர்பான அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் எதிர்காலச் செயற்றிட்டங்களுக்கும். தொழில்முனைவோருக்கும், பண்ணையாளர்களுக்கும் சிறு பங்களிப்பையேனும் வழங்கக்கூடும் என்பது திண்ணம்.
இலங்கையின் கறவை மாடு வளர்ப்புப் பொருளாதாரம்', நான் கடந்த சில வருடங்களாக மாதம் தோறும் 'எழுநா' இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இலங்கையின் பொருளா தாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய துறையாகும். விவசாயத்தில் கறவை மாடு வளர்ப்பு மிக முக்கியமான கூறாகும். இலங்கையிலுள்ள மாடுகள் மிகக் குறைந்த பாலுற்பத்தியைக் கொண்டவை. அவற்றிலிருந்து கிடைக்கும் மொத்தப் பால் இலங்கையின் மொத்தப் பாற் தேவையின் 40% வரையிலேயே நிறைவு செய்கிறது. மிகுதி வெளிநாடுகளில் இருந்து ஏதோவொரு பால் வடிவத்தில் இறக்குமதியாகின்றது. இதற்காக இலங்கை பெருமளவு வெளிநாட்டுக் கையிருப்பைச் செலவு செய்ய வேண்டி ஏற்படுகிறது. மிகச் சிறந்த முறையில் கறவை மாடு வளர்ப்பைச் செய்வதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கி அந்நியச் செலாவணி இழப்பைக் குறைக்க முடியும். இந்தக் கட்டுரைகள் இலங்கையில் தற்போதுள்ள கறவை மாடு வளர்ப்புத் தொடர்பான தகவல்களையும் குறைபாடுகளையும் அவற்றை மேம்படுத்தக்கூடிய வழிவகைகளையும் ஒவ்வொரு தலைப்பிலும் ஆராய்கின்றன. சில கட்டுரைகள் சர்வதேச நாடுகளுடன் இலங்கையைத் தொடர்புபடுத்தி ஆலோசனைகளை வழங்குகின்றன. ஒரு கால்நடை வைத்தியராக எனது அனுபவங்களையும், சக கால்நடை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அனுபவங்களையும், பண்ணையாளர்களின் அனுபவங்களையும் ஒருங்கிணைத்துள்ளேன். கால்நடை வளர்ப்புத் தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு இதழ்களை இவற்றுக்குத் துணையாகப் பயன்படுத்தியுள்ளேன். இந்தத் தொகுப்பைப் படிக்கும் ஒரு பண்ணையாளரோ, கால்நடை வளர்ப்புத் தொடர்பாகப் படிக்கும் மாணவனோ, வாசகரோ இலங்கையின் கறவை மாடு வளர்ப்புத் தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
மேலும், இக்கட்டுரைகள் 2022 செப்டெம்பர் தொடக்கம் 2025 -பெப்ரவரி வரையான பல்வேறு காலகட்டங்களில் எழுதப் பட்டவையாகும். ஆகையால், அக்காலகட்டங்களுக்குரிய புள்ளிவிவரங்களும், தகவல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுரைகள் அக்காலகட்டங்களுக்குரிய நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக அசைவுகளைப் பற்றிப் பேசுவதால், அப் புள்ளிவிவரங்களிலும், தகவல்களிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
கால்நடை வளர்ப்புத் தொடர்பாக உதயன், வலம்புரி, தினக்குரல், தமிழர் பொருண்மியம், வீரகேசரி ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும் கால்நடை வேளாண்மை எனும் தமிழக இதழிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். எதிர்காலத்தில் அந்தக் கட்டுரைகளையும் தொகுப்பாக வெளியிட எண்ணியுள்ளேன். இது அச்சில் வரும் எனது இரண்டாவது புத்தகம். ஏற்கனவே 'காட்டுப் பன்றி புராணம்' எனும் விலங்கியல் தொடர்பான புத்தகத்தை எழுதியுள்ளேன். 'இலங்கையின் கறவை மாடு வளர்ப்புப் பொருளாதாரம்' எனும் இந்த நூல் வெளிவர உதவிய சகல தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கால்நடை மருத்துவர்,
சி. கிருபானந்தகுமாரன்.