கூட்டுறவு இயக்கத்தின் மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கூட்டுறவு இயக்கத்தின் மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் : போருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர்
கூட்டுறவு இயக்கத்தின் மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் : போருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர்
வை. ஜெயமுருகன் வை. ஜெயமுருகன்

2009இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கின்றன. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச்சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. போரினாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட்ட, இலங்கையின் பல பாகங்களிலும் கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்குச் சிறப்பாக உதவ முடியும். அது தொடர்பில், கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிசார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளைத் தருவது இந்நூலின் நோக்கமாகும்.

புத்தக ஆசிரியர் வை. ஜெயமுருகன்
எழுநா நூல் வரிசை 45
பக்க எண்ணிக்கை 172
வெளியீட்டு ஆண்டு 2026
பகுப்பு பொருளியலும் நிதியியலும்
அணிந்துரை

'கூட்டுறவு இயக்கத்தின் மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்' என்ற இந்த நூலை இந்தக் கார்ப்பரேட் யுகத்தில் நண்பர் ஜெயமுருகன் துணிச்சலோடு எழுதியிருக்கிறார். நம்பிக்கையோடு அதை 'எழுநா' வெளியிடுகிறது. இன்றைய சூழலில் இந்த முயற்சி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டியதே. ஆனால், இதெல்லாம் எனக்குக் கனவு போலிருக்கின்றன. ஏனென்றால், இன்றைய உலகம் வேறு விதமாகச் சிந்திக்கப் பழகியுள்ளது. அதனுடைய தேவைகள், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான யதார்த்த நிலைமை எல்லாம் எப்படியாக உள்ளன என்பதைப் பொருட்படுத்தாமல், பெருநிறுவனங்களின் பேராதாயக் கவர்ச்சி (சூழ்ச்சி)ப் பொறிக்குள் சுலபமாகவே விழுந்து விடுகின்றனர் மக்கள். தம்மை மீறிய கனவுகளுக்கு ஆட்பட்டு, தங்களைத் தொலைத்துத் தொலைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் கூட்டுறவு, மக்கள் அமைப்புகளின் முக்கியத்துவம் என்றெல்லாம் பேச விழைந்தால், அவர்கள் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு போகவே முயற்சிப்பர். இந்தப் போக்கானது மரத்தில் இருந்துகொண்டு கிளையை வெட்டுவதற்குச் சமனானது. அப்படித்தான் இன்று பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சனங்களுடைய தலைக்குள் என்ன புகுந்துள்ளது என்று தெரியவில்லை. உலகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா? வளர்ச்சிப் பாதையில் இதுவரையிலும் அது கண்டறிந்து வந்த நல்வழிகளையெல்லாம் மூடிவிட முயற்சிக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. பல நாடுகளில் கூட்டுறவு, மக்கள் நலன் போன்ற மனித விழுமியங்களுக்கும் மனித மேம்பாட்டுக்கும் மாறாகச் சிந்திக்கும் ஆட்சியாளர்கள் (வலதுசாரிகள்) அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றனர். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் உலகளாவிய நடவடிக்கைகள் இந்தக் கேள்விகளை உருவாக்கியுள்ளன. ஐ.நா. போன்ற உலகளாவிய அமைப்புகளே செயலற்றுப் போகும் அபாயநிலை ஒன்று உருவாகி வருகிறது.

கூட்டுறவு அமைப்புகள் மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டன. அதைத் தோற்றுவித்த ரோச்டேல் பயனீரும் (இங்கிலாந்து - 1844) அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களும் 'தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக, தங்கள் மூலம்' என்ற கொள்கைகளுடன் 'ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள்' என்ற கூட்டுறவுப் பண்டகசாலையைத் தொடங்கினர். இதற்கு முன் ஜெர்மனியில் 1852 ஆம் ஆண்டில் பிரான்ச் ஹெர்மன் சூல்ஸ் (Franz Hermann Schulze) என்பவரது முயற்சியால் நகர்ப்புறங்களில் சிக்கன நாணயக் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. 1864 ஆம் ஆண்டில் ரெய்பிசன் (Raiffeisen) என்பவரது முயற்சியால் கிராமப்புறங்களில் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டன. இப்படிப் பல முனைகளில் தொடர்ந்த கூட்டுறவு அமைப்புகளின் விரிவாக்கம் மக்களுடைய நலனின் அடிப்படையிலேயே அமைந்தது. எப்போதும் கூட்டுறவு அமைப்புகளின் முதன்மையான அடிப்படை மக்களைப் பங்காளிகளாகவும் பயனாளிகளாகவும் உள்ளடக்கியதாக இருந்தது. 'கூட்டுறவு' (Coop) என்ற அதனுடைய பெயரிலேயே இந்த அடிப்படை உணர்வையும், பொறுப்பையும், நோக்கத்தையும் அறிய முடியும்.

ஒரு காலத்தில் (1950களின் இறுதிப் பகுதியிலிருந்து 1990 வரை) கூட்டுறவுச் சங்கங்களும் கூட்டுறவு இயக்கமும் மக்கள் மயப்பட்டிருந்தன. இன்னும் இதை எளிதாகவும் சாராம்சமாகவும் சொல்வதென்றால், அன்று மக்களுடைய இரத்தத்தோடு கூட்டுறவுச் சங்கங்களும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாகக் கலந்திருந்தன.

என்னுடைய இளமைக்காலத்தில் (பாடசாலைப் பருவத்தில்) ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிமனிதரும் ஏதோ ஒரு வகையில் கூட்டுறவுடன் சம்பந்தப்பட்டிருந்தனர். அல்லது கூட்டுறவின் நன்மைகளைப் பெற்றிருந்தனர். சமூகத்தில் ப.நோ.கூ. சங்கம், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம், மாதர் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், பாரஊர்திக் கூட்டுறவுச் சங்கம், தென்னை-பனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் எனப் பல வகையான கூட்டுறவு அமைப்புகள் இருந்தன. இவற்றில் சில இப்பொழுதும் இயங்குகின்றன. அன்று கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அவற்றில் பணியாற்றுவோருக்கும் எங்களுடைய சமூகத்தில் முக்கியத்துவம் பெரியது. அப்போது திருமணத்துக்குத் தகுதியான, மதிப்பான ஒரு தொழிலாக கூட்டுறவு அமைப்பில் பணி செய்வது கருதப்பட்டது. பொருட்களைச் சமநிலையில், நியாய அடிப்படையில் விநியோகிப்பது மட்டுமல்லாமல், ஆடைகள் உற்பத்தி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், பனை தென்னை வளப் பொருட்களின் படைப்பாக்கம் எனப் பல வகையான உற்பத்திகளுக்கும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் கூடப் பயன்பட்டது கூட்டுறவு. கூட்டுறவு மருத்துவமனைகளும் சிறப்பாக இயங்கின. இந்த நூலில் அவ்வாறு சிறப்பான முறையில் யாழ்ப்பாணம்-மூளாயில் இன்னும் இயங்கும் மருத்துவமனை பற்றிய ஒரு கட்டுரை உள்ளது.

இப்படி எல்லா நிலையிலும் மக்களின் வாழ்வியக்கத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது கூட்டுறவு. யுத்த காலத்திலும் இயற்கை இடர் காலத்திலும் வாழ்ந்தவர்கள் கூட்டுறவின் மாண்பையும் மதிப்பையும் (பெறுமதியையும்) நன்றாக அறிவர். இப்போதும் நெருக்கடி காலத் தோழமை அமைப்பாகத் தொழிற்படுவது கூட்டுறவு மட்டுமே. அப்போது எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டுறவு அமைப்புகளின் பின்னால் சென்று வரிசை கோர்க்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அண்மைய உதாரணமாக, இலங்கையில் 2022, 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கூட்டுறவு முறையைப் பற்றிய பேச்சுகள் மேலெழுந்தன. கூட்டுறவு அமைப்புகளை மக்கள் நாடினர்.

இருந்தும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கூட்டுறவு என்பதைப் பற்றிச் சரியாகத் தெரியாது. அதனுடைய முக்கியத்துவத்தை அவர்கள் அறியும் வாய்ப்புகளும் குறைவு. அதை அறிய முற்படுவதும் குறைவு. ஆனால், ஜெயமுருகனுடைய இந்த நூல் அதைச் சரியாகச் செய்ய முற்படுகிறது. இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, சமூகத்திலுள்ள அனைவரும் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் அதனுடைய தேவைப்பாடுகளையும் அறிந்து செயற்பட வேண்டும் என்பதை வரலாற்றுத் தகவல்களோடும் உலகளாவிய சமகால நிலவரங்களோடும் இந்த நூலின் வழியாக விளக்குகிறார் ஜெயமுருகன். இந்த நூலின் முக்கியத்துவமே அதுதான்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் பல விடயங்களைப் பற்றித் தெளிவாகப் பேசுகின்றன. குறிப்பாக, 'ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு' என்பதிலிருந்து தொடங்கி 'உள்ளிருந்து உணர்தலும் சமகால நெருக்கடிகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கூட்டுறவுக் கால்நடைப் பண்ணையாளர்களின் அனுபவங்கள்', 'இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத்துறையின் வகிபாகமும்', 'இலங்கை யின் பொருளாதார நெருக்கடியும் கூட்டுறவு வங்கிகளின் தேவையும்', 'பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கி: கூட்டுறவுகளின் மீள் வருகையின் அவசியம்' வரையான முதற்பகுதி கூட்டுறவையும் சமகால நெருக்கடிகளையும் அலசுவதாக அமைந்துள்ளது.

இரண்டாவது பகுதி, 'ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணை யாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த “மந்தன்” திரைப்படம்', 'மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை: தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை', 'கூட்டுறவுக்குள் கூட்டுறவு: பிலிப்பைன்ஸ் அனுபவம்', 'மகாசக்தி சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கம்: ஆலையடிவேம்பின் சமூக-பொருளாதார-கலாசார அடித்தளம்', 'மலையகத்தில் கூட்டுறவு முயற்சிகள்' என கூட்டுறவிற்கான முன்னுதாரண நடவடிக்கைகளை முன்வைக்கின்றது. 'இலங்கையில் கூட்டுறவுத்துறையின் மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகள்' எனும் தலைப்பு இறுதிப் பகுதியாக அமைகின்றது. ஆக, இரண்டு பகுதிகளும் நமக்குச் சத்தானவை; அவசியமானவை.

பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் இன்று சவாலுக்குட்படுத்தி வருகிறது. அரசியற் தடுமாற்றங்களும் பொருளாதாரச் சிந்தனை அற்ற நிலையையும் கொண்ட இலங்கையை அது மேலும் பாதிப்படைய வைத்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு அமைப்புகளின் சாத்தியங்களைக் குறித்து ஆழமாகவும் தீவிரமாகவும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நம்முடைய அரசியல்வாதிகளுக்கு இதைப்பற்றிய அறிவும் அக்கறையும் துளியும் கிடையாது. அவர்களில் எவரும் கூட்டுறவைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஆனால் சமூகத்தில் ஆங்கங்கே கூட்டுறவின் தேவையைப் பற்றியும் அதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றியும் சிலர் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்கள்.

வை. ஜெயமுருகனும் தன் பங்கையும் பாத்திரத்தையும் கூட்டுறவு இயக்கத்தில் வைத்துச் செயலாற்றுகிறார். எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல், சாத்தியமான எல்லைவரை பயணித்து, மக்களோடும் கூட்டுறவு இயக்கங்களோடும் உறவாடிச் செயற்பாடுகளை வரைந்து நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்த நூலில் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற தன்னுடைய சிந்தனையையும், அதில் செயற்பட்டு வரும் தன்னுடைய அனுபவங்களையும் அவர் எழுதி அளித்துள்ளார். அதனால் கூட்டுறவின் முக்கியத்துவம், அதனுடைய பரிமாணங்கள், ஈழத்தில் கூட்டுறவு இயக்கத்தின் தேவை, அதனுடைய சாத்தியப்பாடுகள், உலகளாவிய அளவில் இன்னும் அது கொண்டிருக்கும் வலு எனப் பலவற்றையும் அறிவதற்கான வழிகளை ஜெயமுருகன் திறந்திருக்கிறார். இவை படிப்பதற்கும், விவாதிப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான அடிப்படைகளைக் கொண்ட ஓர் ஏற்பாடு.

ஓர் எழுத்துப் பிரதியில் இந்த மூன்று அடிப்படைப் பண்புகளும் இருப்பது அவசியமானது; சிறப்பானது. எழுதுவதோ, காண்பிப்பதோ வெறுமனே இரசிப்பதற்கானது என்பதற்குப் அப்பால், அவை செயலூக்கத்தை உண்டாக்க வேண்டும். அந்தச் செயலூக்கம் செயற்பாடாக உருமாறும் போது, செயற்பாட்டுக்கான அடிப்படைகளைக் காண்பித்து, அவை விளைவுகளாக மாற வேண்டும். அந்த நோக்கில்தான் 'எழுநா'வின் கரிசனைகளும் ஜெயமுருகனின் அக்கறைகளும் ஒருங்கிணைகின்றன என எண்ணுகிறேன். சமூகத்துக்கான நல்விளைவுகளை உருவாக்கி அளிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் இரு தரப்பும் இணைந்திருக்கின்றன. இது சிறப்பு. இத்தகைய நல்நோக்கச் செயற்பாடுகள் சமூகத்தினால் வரவேற்று ஆதரிக்கப்பட வேண்டும்.

ஜெயமுருகனைப் போல சமகாலச் சூழலில் அகிலன் கதிர்காமர், கா. சுகன்யா, வேதவல்லி செல்வரட்ணம், வி. விவேகானந்தன், த. கஜீபன், க. சுதர்சன் போன்றவர்களும் கூட்டுறவுத் துறையின் தேவை, அதைச் செயற்படுத்தும் முறைமை குறித்தெல்லாம் எழுதி வருகிறார்கள். அகிலன் கதிர்காமர் எழுதுவதோடு, கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்கான பல கருத்திட்ட வரைவுகளையும் முன்வைத்து, பரீட்சார்த்தமாகக் களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அகிலனைப் போன்ற ஒரு சமூக ஆளுமையே ஜெயமுருகனும். தாம் பெற்ற புலமைத்துவக் கல்வியையும் (அறிவையும்), தங்களுடைய ஆற்றலையும் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டவர்கள் அகிலன் கதிர்காமரும் வை. ஜெயமுருகனும் ஆவர். சமூக வயப்படுத்தலே இவர்களுடைய சிந்தனைப் புலம்.

இதில் ஜெயமுருகன் மிக நீண்டகால அனுபவத்தை உடையவர். ஜெயமுருகனின் பலவிதமான சமூகச் செயற்பாட்டுக் காலம் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலானது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அறிமுகமும் அவதானமும் ஜெயமுருகனோடும், அவரைக் குறித்தும் எனக்குண்டு. இயங்கிக் கொண்டிருப்பதே அவருடைய அடையாளம். அந்த இயக்கம் தனிமனிதரைக் கொண்டதாக அமையாமல், சமூகத்தைக் கொண்டிருப்பதே ஜெயமுருகனுடைய சிறப்பு. அந்த வகையில்தான் இந்த நூலும் அதற்கான இந்த அணிந்துரையும் அமைகிறது.

ஆம், ஜெயமுருகனுடைய ஆர்வமும் ஈடுபாடும் எப்போதும் சமூக மாற்றத்தையும் சமூகத்துக்கான நல்விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதும், அதனோடு இணைந்திருப்பதும் நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும். சமூகத்துக்கான நல்விளைவுகளே சமூக மனிதர்களாகிய நமக்கான பாதுகாப்பும் நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளுமாகும். அதைத் தவறவிடும்போது நாம் நெருக்கடிக்குள்ளாகிறோம். நெருக்கடிகளிலிருந்து மீளவே மனிதர்கள் எப்போதும் விரும்புகின்றனர். இது மனித இயல்பு மட்டுமல்ல, உயிரியல்பு. இந்த உயிரியல்பின் விதியை இந்த நூல் கொண்டுள்ளது.

கருணாகரன்
10.02.2026