மலையகம் எழுகிறது - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
மலையகம் எழுகிறது
மலையகம் எழுகிறது
வி.ரி. தர்மலிங்கம் வி.ரி. தர்மலிங்கம்

இந்நூல், மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, அவர்தம் சமூகம் இந்நிலத்தில் வேரூன்றியதிலிருந்து தொண்ணூறின் ஆரம்பகட்டத்திலே மலையக மக்கள் முன்னணி அமைந்ததுவரையிலான, காலகட்டத்தின் வரலாற்றினை உள்ளடக்கியிருக்கின்றது. மலையகமக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புகளைப் பற்றிய தொகுப்பாவணமாக இதுவரை எந்நூலும் பதிப்பிலே வரவில்லை. இந்நிலையில், இந்நுால் மலையகமக்களின் வருங்காலத்திற்கான சிறந்த பாதையைச் செப்பனிட பெரிதும் பயன்படும்.

வி.ரி தர்மலிங்கம்

1941 இல் இலங்கை தலவாக்கலயில் பிறந்தார். தனது இளைமைக்காலத்திலேயே இளைஞர் தமிழ் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி, இலக்கிய கலை முயற்சிகளில் ஈடுபட்ட அவர் மலையகப் பாரம்பரியக் கலைகளுக்கு நவீன வடிவம் கொடுக்கும் முயற்சியில் பெரு வெற்றியும் கண்டிருந்தார். மலையக இளைஞர் முன்னணி, மலையக வெகுஜன இயக்கம் போன்றவற்றிலும் தன்னை இணைத்திருந்த வி.ரி தர்மலிங்கம் பின் நாட்களில் மலையக மக்கள் முன்னணியின் உதவித் தலைவராக பதவி வகித்தார்.

புத்தக ஆசிரியர் வி.ரி. தர்மலிங்கம்
எழுநா நூல் வரிசை 2
பக்க எண்ணிக்கை 91
வெளியீட்டு ஆண்டு 2013
பதிப்புரை

இலங்கையில் மலையகத் தமிழர்களின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்கின்றது. மிகவும் கடினமான சூழலில் தம்முடைய வாழ்க்கையை ஆரம்பித்த மலையக மக்கள், இன்று தனித்தேசிய இனமாக தம்மைக் கருதிக் கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஏராளமான சமூக, அரசியல் அமைப்புக்களூடாகவே இந்நிலையை அடைந்துள்ளார் கள். இது குறித்த சமூக அரசியற் பார்வையிலான வரலாற்றுப் பதிவுகள் மிகவும் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன. அதிலுங்கூட, மலையகமக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புகளைப் பற்றிய தொகுப்பாவண மாக இதுவரை எந்நூலுமே பதிப்பில் வரவில்லையென்று சொல்லலாம். அரசியற் சமனிலிகளும் சூத்திரங்களும் மாறிப்போயிருக்கும் இன்றைய காலகட்டத்திலே, இத்தகு ஆவணம் மலையக மக்களின் வருங்காலத்திற்கான சிறந்த அரசியல் பாதையைச் செப்பனிடச்செய்ய வேண்டப்படும், வரலாற்றின் படிப்பினையின் பாற்பட்ட தேவையாகும்.

இவ்வகையில் மலையக மக்கள் முன்னணியின் உதவித் தலைவராகவிருந்த மறைந்த திரு. வி. ரி. தர்மலிங்கம், சிறையிலே வைக்கப்பட்டிருந்தபோது, 1994ஆம் ஆண்டுக்காலத்தில் சரிநிகர் இதழில் 'மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்' என்ற பெயரில் தொடரொன்றை எழுதியிருந்தார். இற்றைக்குப் பதினெட்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொடராக விருந்தபோதும்; இத்தொடர் மலையகமக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முடிவுவரையிலுமான காலப்பகுதியில் செயற்பட்ட அமைப்புக்களைப் பற்றி விபரிக்கின்றது. மலையக அமைப்புக்களைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கொண்டிராத போதிலும், எதிர்கால ஆய்வுக் தேவையான அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளதாகக் கருதலாம். இவ்வகையிலே இக்காலத் தலைமுறையினர் மலையகத்தின் அமைப்பு இயக்கச் செயற்பாடுகளை அறிந்து கொள்ளும் நோக்கோடு, இந்நூலை வெளியிடுகின்றோம். இந்நூலை ஏற்கனவே ‘மலையகம் எழுகின்றது' என்ற பெயரிலே வெளியிடும் நோக்கமிருந்ததாக, திரு இரா. சிவலிங்கத்தின் கட்டுரைகளின் தொகுப்பாக வந்த 'மலையக சிந்தனைகள்' நூலிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆகையால், அப்பெயரிலேயே நாமும் வெளியிடுகின்றோம்.

இந்நூல், மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, இந்நிலத்தில் வேரூன்றியதிலிருந்து தொண்ணூறின் ஆரம்பகட்டத்திலே மலையக மக்கள் முன்னணி அமைந்தது வரையிலான, காலகட்டத்தின் வரலாற்றை உள்ளடக்கியிருக் கின்றது. மலையக வரலாற்றில் தனிமனித முயற்சி, பண்பாட்டு அமைப்புகள், பிரதேசம் சார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மொழிசார் அமைப்புகள், அரசியலமைப்புகள் என்பனவாக இவ்வமைப்புகள் விரிந்து கிடந்ததை இந்நூல் காலவரிசைப்படி தருகின்றது. மேலும், மேம்பாடு சார்ந்த வரலாற்றினை மட்டுமல்லாது, கூடவே பல்வேறு அமைப்புகளிடையே நிலவிய அரசியற்பிணக்குகளையும் அவை கூர்ப்படைந்த வகையினையும் விபரிக்கின்ற ன்றது. ஆசிரியரும் ஒரு கட்சிசார்ந்த அரசியல் செயற்பாட்டாளர் என்றளவில், வரலாற்றை வெறுமனே ஒப்பிவிக்காமல் தனது அரசியல் நிலைப்பாடு சார்ந்து விமர்சனபூர்வமாக அணுகிச் செல்கின்றார்.

இந்நூல், பருவ இதழுக்காகத் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகையால், சமயங்களிலே சொன்னவை மீளச் சொல்வது ஆசிரியருக்குத் தவிர்க்க முடியாதிருந்திருக்கலாம். ஆயினும், பதிப்புக்காகச் செம்மைப்படுத்தியபோது சீர்படுத்த ஆசிரியர் உயிருடனில்லாத காரணத்தினால், ஆசிரியரின் கருத்துக்களும் தரவுகளும் எவ்வகையிலும் பாதிக்கப்படா வண்ணம், இயன்றவரை சொல்வன மீளச்சொல்தலைச் சீர்படுத்தி நூல்வடிவுக்குப் பொருந்திய வகையிலே அமைக்க முயன்றிருக்கின்றோம். இந்நூலானது, மலையக மக்கள் மத்தியில் தோன்றிய அமைப்புக்கள் பற்றிய முழுமையான ஆய்வுக்குத் தேவையான அடிக்கல்லாக அமையும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகின்றோம்.

எழுநா

ஒக்ரோபர் 2012