நூல்கள் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
யாழ்ப்பாண மருத்துவ வரலாறு
யாழ்ப்பாண மருத்துவ வரலாறு
பாலசுப்ரமணியம் துவாரகன் பாலசுப்ரமணியம் துவாரகன்

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்குக் கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்பட முடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்பு வீதம் பெருமளவுக்குக் குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில், குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்கத் தமது வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போது வரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்துத் தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்த நூல் அமைகின்றது.

புத்தக ஆசிரியர் பாலசுப்ரமணியம் துவாரகன்
எழுநா நூல் வரிசை 30
பக்க எண்ணிக்கை 168
வெளியீட்டு ஆண்டு 2025
பகுப்பு வரலாறும் தொல்லியலும்
அணிந்துரை
அறிமுகம்
நன்றியுரை

மீளுருவாக்கத்துக்கு வேண்டிய சாதனையாளர் பற்றிய சிந்தனைகள்

இலங்கைத் தமிழர் சமுதாயம் வீழ்ச்சி கண்ட ஒரு சமுதாயமாகிவிட்டது. அதை எவ்வாறு பாதுகாப்பது? எவ்வாறு மீளுருவாக்கம் செய்வது? தொடரும் சீரழிவுகளை எவ்வாறு தவிர்ப்பது? இவற்றுக்கு விடை காண்பது இலகுவானதன்று. எல்லாத் துறைகளிலும் தலைமை அற்றுப்போனமை அதற்கான பெரியதொரு காரணம்.

இவ்வாறான சமுதாயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் இன்னும் உள்ளனர். இலைமறை காய்போலத் தங்கியிருந்து அரும்பணி புரிகின்றனர். தாம் பிறந்து வளர்ந்த, தங்கள் வாழ்க்கையினை நெறிப்படுத்திய சமுதாயம் மீண்டும் எழுச்சி பெற்று இயங்குவதைக் காண்பதே அவர்களின் கனவும் நினைவுமாக உள்ளது. 

ஒரு உன்னதமான சமுதாயத்தை உருவாக்கியவர்களின் பணிகளையும் சாதனைகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் தான் இந்தக் கனவுகளைக் கைவரக்கூடிய சாதனை ஆக்கலாம். இத்தகைய நம்பிக்கையோடு அரும்பணி புரிபவர்களில் ஒருவர் இந்நூலாசிரியரான பா. துவாரகன்.

துவாரகன் சில ஆண்டுகள் மட்டுமே எமக்குப் பழக்கமானவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சில ஆண்டுகள், பட்டமளிப்பு விழாவின் சில நாட்களுக்கு பின்பாக நாம் வழங்கிய உரைகளைக் கேட்ட பின்பு, எம்மோடு அவர் அபிமான உணர்வோடு பழகத் தொடங்கினார்.

அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துப் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அருங்காட்சியகத்துப் பொறுப்பதிகாரி. அதற்கு வடிவம் கொடுத்தவரும் அவர் தான். அந்த நிறுவனம் 19 ஆம் நூற்றாண்டில் மருத்துவத்துறை வரலாற்றில் இணையிலாத சாதனை புரிந்த அமெரிக்க மிஷனரி மருத்துவரான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Samuel Fisk Green) அவர்களின் நினைவகம் போலக் காட்சி அளிக்கின்றது. அவர் வெளியிட்ட நூல்கள், எழுதிய கடிதங்கள் அவரைப் பற்றிய ஆக்கங்கள் முதலானவற்றைத் துவாரகன் தேடிப்பெற்றுக் காட்சிக்கு வைத்துள்ளார். அது அறிவும் ஆர்வமுங் கொண்ட அபிமானி ஒருவரின் உருவாக்கம். மருத்துவக் கல்லூரி மாணவரும் போதனாசிரியர்களும் அங்கு செல்லும் வேறு பலரும், மேனாட்டு மருத்துவக் கல்வி இரு நூற்றாண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திலே பரவிப் பெருஞ் செல்வாக்குப் பெற்றமையினை தெளிவுற உணர்ந்து கொள்வர். அந்த வரலாற்றை இப்பொழுது பொதுமக்களும் உணர்ந்து பெருமைப்படும் வகையிலே துவாரகன் இந்நூலை எழுதி வெளியிடுகின்றார். அந்த விடயத்தை முதன்மைப்படுத்தித் தமிழில் எழுதிய முதனூல் இதுவாகும். ஓர் ஆய்வு நூலுக்குரிய அம்சங்களை இதிலே காணலாம். வெவ்வேறான பல நூல்களிலும் மிஷனரி ஆவணச் சுவடிகளிலும் காணப்படும் விபரங்களை இந்நூல் மூலமாக அறியமுடிகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மேனாட்டுக் கல்விமுறையின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் கிறிஸ்தவ மிஷனரிமார்களின் செயற்பாடுகள் ஏதுவாயிருந்தன. அமெரிக்கன் மிஷன், வெஸ்லியன் மிஷன், அங்கிலிகன் மிஷன் (ஆங்கில திருச்சபை) ஆகிய மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த பாதிரிமார்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு வந்து நிலைகொண்டனர். வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த தலங்கள் இரண்டு, யாழ்ப்பாணத்திலும் பருத்தித்துறையிலும் அமைந்தன. ஆனாற் கிழக்கு மாகாணம் முழுவதிலும் சமயம் பரப்பும் நடவடிக்கைகள் அவர்களின் ஏகபோக உரிமையாகிவிட்டன. அங்கிலிக்கன் திருச்சபையினர் நல்லூரிலும் கோப்பாயிலும் நிலைகொண்டனர். யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரியின் செயற்பாடுகள் மிகவும் பரந்து காணப்பட்டன. வட்டுக்கோட்டை, தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, உடுவில், மானிப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி ஆகிய ஊர்களில் அவர்களின் தலங்கள் அமைந்திருந்தன.

வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் சந்திகளிலும் விவிலிய நூலின் வாக்கியங்கள் எழுதிய ஏடுகளை வழங்கிப் போதனை செய்வதனால் எதுவித பயனும் ஏற்படாது என்பதை மிஷனரிமார் உணர்ந்து கொண்டனர். கல்விநிலையங்கள் மூலமாகச் சமயம் பரப்பலாம் என்ற நம்பிக்கை அவர்களிடையில் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தொடக்கநிலைக் கல்வித் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவினார்கள். அதனால் யாழ்ப்பாணத்தில் எழுத்தறிவுடையோரின் தொகை பெருகியது.

மேனாட்டுக் கல்வியினை ஆங்கில மொழியிற் போதிப்பதற்கான கல்லூரிகள் பலவற்றை அமெரிக்க மிஷனரிமார்கள் உருவாக்கினார்கள். இதில் அவர்களே முன்னிலையில் இருந்தனர். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களுக்கு நிகரான சர்வசாஸ்திர கலாசாலையினை வட்டுக்கோட்டையில் நிறுவினார்கள். இலங்கைத் தமிழரிடையே 19 ஆம் நூற்றாண்டில் ஒரு வித்துவக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு அது ஏதுவாயிருந்தது. மேல்நாடுகளில் வளர்ச்சி பெற்ற கல்விமுறையும் மொழிப் பயிற்சியும் அறிமுகமாகித் துரிதமாகப் பரவின. அறிவியற் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆவணங்களையும் நூல்களையும் சென்றகால நிகழ்ச்சிகளையும் ஆய்வு செய்கின்ற முறை உதயமாகியது.

யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் முதலாவதான உதயதாரகையினை அமெரிக்க மிஷனரிமார் வெளியிட்டனர். முதன்முதலாக அச்சகமொன்றை மானிப்பாயில் அவர்கள் நிறுவினார்கள். பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்கு அவர்களே வழிகோரினார்கள். அவர்களால் நிறுவப்பெற்ற உடுவில் மகளிர் கல்லூரி ஆசியாவில் அமைக்கப்பட்ட விடுதி வசதிகள் பொருந்திய முதலாவது பெண்கள் கல்லூரி என்னுஞ் சிறப்பினைப் பெற்றது. நவீனகால அகராதிகளின் உருவாக்கத்திலும் அவர்களின் பங்கு முதன்மையானது. யாழ்ப்பாண அகராதி என வழங்கும் வினஸ்லோ அகராதியில் மட்டுமே தமிழ் வழக்கிலுள்ள எல்லாச் சொற்களும் அடங்கியுள்ளன.

வேறு மிஷனரிமார்கள் செய்யாத ஒரு பணியினை அமெரிக்க மிஷனரிமார் செய்தனர். மருத்துவக் கல்வியினையும் அவர்களே வழங்கினார்கள். இந்த நூல் அவற்றைப் பற்றியதாகும். அந்தக் காலத்தில் அம்மைநோய், பேதிநோய், மஞ்சள் காமாலை முதலான தொற்று நோய்கள் யாழ்ப்பாண சமுதாயத்திற் பெருங்கேடுகளை ஏற்படுத்தின. சுதேச மருத்துவரிடம் அவற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கவில்லை. சில சமயங்களில் மொத்தமான சனத்தொகையிலே 10 வீதமானோர் மாண்டனர். உடல் உபாதைகளினாலே வேறு பலர் துன்புற்றனர். மரங்களிலிருந்து விழுவதால் எலும்புகள் உடைந்து ஆற்றாது வருந்துவோர் பலர் காணப்பட்டனர்.

அமெரிக்க மிஷனரிகளான மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் நோயுற்று, ஆற்றாது அல்லற்படுவோரின் மீட்பர்களாக வந்தனர். அவர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர்கள். கிறிஸ்தவ சமயத்திலே தீராத பற்றுடையவர்கள். அவர்கள் மானுடருக்கான சேவையினைச் சமயப் பணியாகக் கருதியவர்கள்.

யாழ்ப்பாணம் வந்த மிஷனரிகளான மருத்துவரின் ஜோன் ஸ்கடர் (1820 – 1836) நாதன் வார்ட், சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (1847 – 1857, 1863 – 1873) ஆகியோர் முதன்மையானவர்கள். மேனாட்டு மருத்துவ முறையினையும் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் அறிமுகஞ் செய்து வரலாறு படைத்தனர். அமெரிக்காவிலே செல்வாக்குப் பெற்ற குடும்பகளிற் பிறந்த இம்மூவரும் பேர் பெற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பயின்று பட்டம் பெற்றவர்கள். சமய ஆர்வத்தினாற் சொந்தமான உறவுகளையும் சுகபோக வாழ்க்கையினையும் துறந்து, யாழ்ப்பாணம் வந்து, தியாக உணர்வோடு பணிபுரிந்தவர்கள் அவர்கள் குடாநாட்டு வரலாற்றில் யுக புருஷர்களாகிவிட்டனர். முன்னேற்றம் கருதிச் சேவை புரிபவர்களுக்கு முன்னுதாரணமாகிவிட்டனர்.

ஜோன் ஸ்கடர் 1820 இலே பண்டத்தரிப்பில் மருத்துவமனை ஒன்றினை உருவாக்கினார். அதுவே கிறிஸ்தவ மிஷனரிமார் உருவாக்கிய முதலாவது மருத்துவ மனையாகும். ஸ்கடர் தம்பதியரின் வீட்டிலே அநாதைகளான 40 பெண்பிள்ளைகள் தங்குமிட வசதியோடு கல்விகற்கும் வாய்ப்பினைப் பெற்றனர். பேதிநோயினைக் கட்டுப்படுத்தியதாலும் சத்திர சிகிச்சையிற் சாதனை ஈட்டியதாலும் ஸ்கடருக்குப் பேரும் புகழும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டன. 1836 ஆம் ஆண்டிலே அவர் தமிழ்நாடு சென்று அங்கு மருத்துவ மிஷனரியாகப் பொறுப்பேற்றார். அவரின் குடும்பத்தவர் பலர் தென்னிந்தியாவிலே புரிந்த அரிய சாதனைகளைப் பற்றியும் துவாரகன் இந்நூலிற் குறிப்பிட்டுள்ளார். அவரின் வம்சாவழியினரான நான்கு தலைமுறையினர் அங்கு அருஞ்சாதனைகள் புரிந்தனர். அவரின் இளைய மகனின் புதல்வியான ஐடா ஸ்கடர் வேலூரிலே பெண்கள் மருத்துவக் கல்லூரியினை உருவாக்கி வரலாற்றிலே சாதனை படைத்தார். எமது துணைக்கண்டத்தின் முதலாவது தாதிகள் பயிற்சிக் கல்லூரியிணையும் அவரே நிர்மாணித்தார்.

ஜோன் ஸ்கடர் தமிழகத்திற்குச் சென்றபின் யாழ்ப்பாணத்தில் மிஷனரிமாரின் மருத்துவப்பணி நாதன் வார்ட் என்னும் பிரபலமான மருத்துவரின் பொறுப்பாகியது. 1833 இல் யாழ்ப்பாணம் வந்த நாதன் வார்ட் வட்டுக்கோட்டையிலே தங்கிவிட்டார். அவர் மருத்துவராக மட்டுமன்றி சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார்; அங்குள்ள சர்வ சாத்திர சாலையில் மாணவர் பலருக்கு அவர் மருத்துவக் கல்வியினைப் போதித்தார்.

1846 இல் யாழ்ப்பாணத்திலே பேதி நோய் வேகமாகப் பரவியது; அதனால் 10,000 வரையான மக்கள் இறந்தனர். உவார்ட் மேற்கொண்ட சிகிச்சை தொடர்பான பணிகளின் மூலம் ஒரளவிற்குப் பல இடங்களில் நோயினைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஓரிடத்திலே சிகிச்சை பெற்ற பதினான்கு பேரில் பன்னிருவர் உயிர் பிழைத்தனர். சிகிச்சைபெற விரும்பாத 14 பேரிலே 12 பேர் இறந்துவிட்டனர்.

1846 இல் நாதன் வார்ட்டும் மனைவியும் உடல் நலக் குறைவாலே தாயகம் செல்ல நேர்ந்தது. அந்நிலையில் 1847 ஆம் ஆண்டு சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் மருத்துவ மிஷனரியாக வந்தார்.

கிறீன் பாதிரியார் 1848 இல் மானிப்பாயில் மருத்துவ மனையினையும் மருத்துவக் கல்லூரியினையும் உருவாக்கினார். அவரது தவணைக் காலம் 1847 – 1857, 1862 – 1873 என இரு பிரிவுகளைக் கொண்டது. நோய்களைக் குணப்படுத்துவதிலும் சத்திரசிகிச்சையிலும் இணையிலா சாதனையாளராக விளங்கினார். மானிப்பாயில் அவர் அமைத்த மருத்துவமனையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். மருத்துவமனை உருவாக்கப்பட்ட பின் முதலாவது 10 வருடங்களில் ஏறக்குறைய 20,000 பேருக்கு அவர் சிகிச்சை வழங்கினார். அவரது மருத்துவக் கல்லூரியிற் பயிற்சி பெற்ற 20 தமிழர்கள் மருத்துவராயினர்.

சாமுவேல் கிறீனுடைய ஆதரவோடு யாழ்ப்பாண மருத்துவமனை 1850 இல் முதலாவது அரசாங்க அதிபரான ஓக்லண்ட் டைக் (Ackland Dyke) என்பவரால் நிறுவப்பட்டது. அங்கு வருகைச் சத்திரசிகிச்சையாளராக கிறீன் பணியாற்றினார். அவரிடம் மருத்துவம் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் பலர் அதில் நியமனம் பெற்று அதன் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பொறுப்பாயிருந்தனர்.

1864 ஆம் ஆண்டு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் மேல்நாட்டு மருத்துவக் கல்வியினை தமிழ் மொழியிலே போதனை செய்வதற்கு ஏற்பாடாகியது. அமெரிக்க பல்கலைக்கழகங்களிலே பயன்படுத்தப்பட்ட மருத்துவ நூல்களை தமிழாக்கம் பண்ணும் பணியினை அதற்கு முன்பே மருத்துவ மேதையான கிறீன் ஆரம்பித்துவிட்டார். அங்காதிபாதம் அவற்றுள் முதன் முதலாக வெளிவந்த நூலாகும். தமிழ் மொழி வரலாற்றில் இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.

கிறீன் பாதிரியார் பரிசோதனை செய்து தமிழில் வெளியிட்ட நூல்கள் விஞ்ஞானம் தொடர்பான கலைச்சொல் ஆக்கத்திற்குக் கருவூலமாக அமைந்துள்ளன. அமெரிக்க மிஷனரிமாரின் கல்விப் பணிகளும் சாதனைகளும் இலங்கைத் தமிழரின் பாரம்பரியத்தின் அம்சங்களாகிவிட்டது. நிகழ்காலத்திலே மறுசீராக்கத்தினையும் வரும் காலம் பற்றிய நம்பிக்கையினையும் ஏற்படுத்துவதற்கு அவை முன்னுதாரணமாகின்றன. அவற்றை உரிய ஆவணங்களோடு நினைவுபடுத்தும் துவாரகனின் முயற்சிகள் எமது பாராட்டிற்குரியவை. இந்நூல் அவசியமாக எல்லோரும் படிக்கவேண்டிய நூலாகும்.  

சி. பத்மநாதன்,

தகைசார் வரலாற்றுத் துறைப் பேராசிரியர், 

பேராதனைப் பல்கலைக்கழகம்.

வேந்தர், 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

யூன் - 2024. 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய உபகண்டமும் ஆபிரிக்காவின் சில பகுதிகளும் சூரியன் மறையாத பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் வருகின்றன. ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ மறைபரப்பும் மிஷனரிகள் ஆசியாவுக்கு வருகிறார்கள்.

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த மிஷனரிகள் இலங்கைத் தீவுக்கும் வருகிறார்கள். இவர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட குடியேற்ற நாடுகளில் கிறித்துவ மறைபரப்புவதுடன் பாடசாலைகளை நிறுவி, கல்வி அறிவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். மெதடிஸ் மிஷன், வெஸ்லியன் மிஷன், அங்கிலிக்கன் மிஷன் முதலான மிஷனரிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சம அளவில் மிசன் பணிகளில் ஈடுபட்டனர்.

இக்காலப் பகுதியில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்த அமெரிக்க மிஷன் சங்கம் இந்தியாவுக்கு  மிஷனரிகளையும்,  மருத்துவ மிஷனரிகளையும் அனுப்பியது.

இந்தியாவையும் இலங்கையையும் நிர்வகித்து வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அமெரிக்க மிஷனரிகளை ஆரம்பத்தில் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அமெரிக்க மிஷனரிகள் இலங்கைக்கு வருகிறார்கள். அமெரிக்க மிஷனரிகள் கொழும்புக்குச் சென்று பணியாற்ற விரும்பிய போதிலும், இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் யாழ்ப்பாணத்தில் மிஷன் பணியில் ஈடுபட மட்டுமே அமெரிக்கர்களை அனுமதிக்கின்றார். இதனால் யாழ்ப்பாணம், வட இலங்கை ஆசீர்வதிக்கப்பட்டது. அமெரிக்கன் மிஷன் பாடசாலைகள் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமே தாபிக்கப்பட்டன. அமெரிக்க மிஷனரிகள் தாபித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலான அமெரிக்க மிஷன் பாடசாலைகள் 200 வருடங்கள் கடந்தும் இன்றும் புகழுடன் விளங்குகின்றன. யாழ்ப்பாணம் கல்வியில் உயர்நிலை அடைவதற்கு அமெரிக்க மிஷனரிகளே கால்கோள் இட்டனர். 

1819 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ மிஷனரி மருத்துவர் ஜோன் ஸ்கடர் அவர்களது வருகையுடன் இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேய மருத்துவம் அறிமுகமாகிப் பரவலடைய  ஆரம்பமாகிறது.  

மருத்துவர் ஜோன் ஸ்கடர் அவர்கள் இலங்கையின் முதல் மருத்துவ மிஷனரியாக மட்டுமன்றி இந்தியாவின் முதல் மருத்துவ மிஷனரியாகவும் விளங்குகிறார். ஸ்கடர் யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் தனது சிகிச்சை நிலையத்தை (டிஸ்பென்சரி) 1820 இல் ஆரம்பிக்கிறார். இதுவே உலகின் முதல் மருத்துவ மிஷனரி மருத்துவமனை என்ற சிறப்பைப் பெற்றது. 

ஜோன் ஸ்கடர் ஏறத்தாழ 16 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றினார். ஸ்கடர் இக்காலப் பகுதியில் வடபகுதியில் ஏற்பட்ட கொலரா, வாந்திபேதி முதலான தொற்று நோய்களுக்குச் சிகிச்சை அளித்து பல நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார். 

சில ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அமெரிக்க மிஷனரிகளை இந்தியாவில் செயற்பட அனுமதித்தனர். இதனால் ஸ்கடர் இந்தியாவுக்கு மருத்துவ மிஷன் பணி ஆற்றச் செல்கிறார். ஸ்கடரைத் தொடர்ந்து மருத்துவர் நேத்தன் உவோட் மருத்துவ மிஷன் பணியாற்ற யாழ்ப்பாணம் வருகிறார். 

நேத்தன் உவோட் அவர்களது மறைவைத் தொடர்ந்து அமெரிக்க மிஷன் சங்கம் மருத்துவர் கிறீன் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது. 

19 ஆம் நூற்றாண்டில் மனிதகுல வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் மருத்துவர் கிறீனுக்குத் தனித்துவமான இடம் உண்டு. இவர் ஏறத்தாழ 26 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷன் பணியில் ஈடுபடுகிறார். கிறீன் இலங்கையின் முதலாவது மேலைத்தேச (ஆங்கில) மருத்துவக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் 1848 இல் நிறுவினார். கிறீனது முதல் வகுப்பில் 3 மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற கிறீன் ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபடுகிறார். கிறீனது மாணவர்களும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்றனர். கிறீன் 1864 இல் தமிழ் மொழி மூலம் மேலைத்தேச மருத்துவம் கற்பிக்க ஆரம்பிக்கிறார். 1883 இல் மானிப்பாய் மருத்துவக் கல்லூரி மூடப்படும் வரை 113 வரையான மாணவர்கள் கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவர்களாக வெளியேறினர். 

தன்னிடம் மருத்துவம் பயின்றவர்கள் அரச உத்தியோகத்தை நாடியும் அதிக சம்பளத்தை எதிர்பார்த்தும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி அயல் தேசங்களுக்குச் சென்றதாலும் சுதேச மக்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று கருதி  தான் தமிழில் மருத்துவம் போதிக்க ஆரம்பித்ததாக கிறீன் தனது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். 

1850 இல் யாழ். போதனா மருத்துவமனையை பிரித்தானிய குடியேற்ற நாட்டு அதிகாரி சேர். பேர்சிவல் அக்லண்ட் டைக் அவர்கள் மருத்துவர் கிறீனது உதவியுடன் ஆரம்பிக்கிறார். 

கிறீன் மருத்துவராக மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சத்திரசிகிச்சை வல்லுனராகவும் விளங்கினார். மயக்கமருந்துகளோ நுண்ணுயிர்கொல்லி மருந்துகளோ அறிமுகமாகாத 19 ஆம் நூற்றாண்டில், சுதேச மருத்துவர்களால் (சித்த மருத்துவர்களால்) கைவிடப்பட்ட பலருக்கு மருத்துவர் கிறீன் சத்திரசிகிச்சை செய்து உயிர் கொடுத்தார். 

19 ஆம் நூற்றாண்டில் போஸ்டன் நகரிலிருந்து ஓர் அமெரிக்கர் நான்கரை மாதங்கள் பாய்மரப்படகில் ஆபத்து நிறைந்த சமுத்திரங்களைத் தாண்டிப் பயணஞ் செய்து, சென்னைப் பட்டினத்தை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து, தமிழ் கற்று, மேலைத்தேச மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, இந்த யாழ்ப்பாண மக்களுக்கு சேவை செய்ய ஓர் மருத்துவக் கல்லூரியை நிறுவியமை சிந்தனைக்குரியது! 

எமது மக்களுக்கு மருத்துவம் செய்யத் தேவையான மருந்துகளையும் கருவிகளையும் கொள்வனவு செய்யவும், தமிழில் மருத்துவ நூல்களை அச்சிடவும் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று அமெரிக்கர்களிடமும் ஐரோப்பியர்களிடமும் எமக்காக இரந்து, நிதி திரட்டிய கிறீன் என்ற பெருமகனை, உயிர் காத்த உத்தமனை நாம் எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும்.  

தமிழ் மக்கள் மத்தியிலே சேவை செய்யவல்ல மருத்துவர்களை அவர்கள் மத்தியிலே உருவாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  மானிப்பாயில்  மருத்துவக் கல்லூரியை நிறுவி பின்னர் தமிழைப் போதனா மொழியாக்கி ஆங்கில மருத்துவத்தின் பயனை எமது மக்கள் அநுபவிக்கக் காரணமாக இருந்த மருத்துவர் கிறீனை, தமிழ்த்தாயின் தவப் புதல்வனை, அவர் பிறந்த 200 ஆவது ஆண்டில் நினைவுகூர ஒரு வாய்ப்புக் கிடைத்தது. 

பிரசவம் பார்க்க பெண் மருத்துவர் ஒருவர் இல்லாத காரணத்தால் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று பதின்ம வயது இளம் தாய்மாரது மரணத்தைக் கண்டு பெருந் துயருற்று, தனது வாழ்வையே மருத்துவத்துக்காக அர்ப்பணித்தவரும் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் தாபகரும் உலகமருத்துவ வரலாற்றை மாற்றிய பெண்களில் ஒருவருமான மருத்துவர் ஐடா ஸ்கடர் அம்மையாரது வாழ்வின் சில நினைவுகளையும் இத்தொடரில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். மருத்துவர் ஐடா ஸ்கடர் மருத்துவர் ஜோன் ஸ்கடர் அவர்களின் பெயர்த்தி ஆவார். 

யாழ்ப்பாண மருத்துவ வரலாற்றுக் குறிப்புகளை உதயன் - சஞ்சீவி வார இதழிலும், எழுநா இணையத்தளத்திலும் 2022-2023 காலப் பகுதியில் தொடராக எழுத பிரபாவும் சசீவனும் ஆசிரிய பீடத்தினரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். 

1820 முதல் 1890 வரையான காலப் பகுதியில் இலங்கையின் வட பகுதி மேலைத்தேச மருத்துவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

பா. துவாரகன் 

 

வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி

பணிப்பாளர், 

போதனா மருத்துவமனை, 

யாழ்ப்பாணம்.

 

இ. பத்மநாப ஐயர்

 

பேரருட் கலாநிதி எஸ். ஜெபநேசன் 

இளைப்பாறிய பேராயர், 

தென்னிந்தியத் திருச்சபை, 

யாழ். பேராயம்.

 

த. பிரபாகரன் - உதயன் (சஞ்சீவி) 

 

கணேசானந்தன் சசீவன் - எழுநா 

 

சுரேந்திரா பரமிர்சன்

 

இரவீந்திரன் கீர்த்திகன்

 

கிருஷ்ணன் நயூரன்

 

ரயீந்திரன் அபிஷ்காந்த்

 

மகேந்திரன் சலூஜா

 

மயூரன் பர்மிலா