இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்
இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்
கந்தையா பகீரதன் கந்தையா பகீரதன்

இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை காலம்காலமாகக் கைக்கொள்வதனாலும் விவசாயக் கொள்கையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாததினாலும் இலங்கையின் விவசாயத்துறை எவ்வாறு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, நவீன விவசாய தொழில்நுட்பங்களை இறுக்கமான விவசாயக் கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தி விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்டவர்களும் வாசித்துப் பயன்பெறக் கூடியவாறும், தமிழ் மொழியில் விவசாயம் சார்ந்த நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் நமது விவசாயத்துறையைச் சார்ந்த இளம் சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன; அந்நாடுகள் தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்களினதும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூல் இத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

புத்தக ஆசிரியர் கந்தையா பகீரதன்
எழுநா நூல் வரிசை 16
பக்க எண்ணிக்கை 135
வெளியீட்டு ஆண்டு 2025
பகுப்பு விவசாயமும் மீன்பிடியும்
முன்னுரை
அணிந்துரை

உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகி வரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய ஒரு மிகப் பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.

வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேளாண் துறைக்குள் வளர்ச்சியடைந்த நாடுகளினால் புகுத்தப்பட்டு அதிக இலாபத்தைச் சம்பாதிப்பதோடு அந் நாடுகள் தன்னிறைவையும் அடைந்து விட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் சமூகப் பொறுப்பும் ஆகும்.

அந்தவகையில் துடிப்பான இளம் பேராசிரியர் கந்தையா பகீரதன் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற நூலில் இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீன பசுமைத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும், அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள், இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்களை ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்குக்கும், விவசாயத் துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இன்று விவசாயம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் வெளிவருவது மிகவும் குறைவு. இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்கள், தமிழ்நாட்டு அறிஞர்களினால் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் ஈழத் தமிழ் துறைசார் பேராசிரியர் ஒருவர் விவசாய விஞ்ஞானம் சார்ந்த அறிவை பாமர விவசாயிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில் இந்த நூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

பேராசிரியர் பகீரதன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாய விஞ்ஞானத் துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விவசாயம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கும் அறிவுப் பரப்பலுக்கும் சென்றவர். விவசாயத் துறையில் அதீத ஈடுபாடும் சிறந்த அனுபவமும் கொண்டவர். இத்தகைய சிறப்பு மிக்கவர், இலங்கை ஒரு பாரிய உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தருவாயில், தமது நாட்டின் இளையோருக்கு தமது நாட்டின் விவசாய வரலாற்றையும் பாரம்பரிய உணவு உற்பத்திமுறையின் நன்மை - தீமைகளையும் தெளிவுபடுத்தி, நவீன விவசாய நுட்பங்களை விளக்கி, நவீன விவசாயத்தில் நாட்டத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தி, விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கி இந்தநூலை எழுதி உள்ளார். அப்படிப்பட்ட நூலுக்கு அணிந்துரை வழங்குவது எனக்கும் பெருமை. இது போன்ற பல நூல்களை அவர் தமிழ் மொழியில் எழுதி தமிழுக்கும் விவசாயத்துறைக்கும் பெரும்பணி ஆற்ற இறைவனின் திருவருள் அவருக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பேராசிரியர் ரா. ராமன்,

உழவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர்,

இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம்,

விவசாய பீடம்,

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் - 608 002,

தமிழ்நாடு.

இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளே பழமை வாய்ந்து. இலங்கைக்கு ஆரியர் வருவதற்கு முன்னர் இருந்தே இலங்கையில் விவசாயப் பாரம்பரியம் ஆரம்பித்துவிட்டது. இந்த உலகில் வாழ்கின்ற மூத்த இனமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ள தமிழினம், மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட இனம். இதனாலேயே தான் நாமக்கல் கவிஞர், ‘தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு' என்று தமிழரை அடையாளப்படுத்தினார். வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் தமிழன் எவ்வாறு கருதினான் என்பதை திருக்குறளில் அழகாக வள்ளுவர் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்கிறார். ஒவ்வொருவரும் உண்ணும் ஒவ்வொரு கைப்பிடி உணவிலும் விவசாயினுடைய உழைப்புத் தங்கியிருக்கிறது. ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாகக் காணப்படுகிறது. 

தீவு நாடான இலங்கையானது அதன் குடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறது. விவசாய நிலப் பயன்பாடு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், இலங்கையின் விவசாயத்துறை, 8.18 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட மொத்த தொழிலாளர் படையில் 25.3% இனை மட்டுமே பயன்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத பங்களிப்பை மாத்திரமே செய்கின்றது என்பது மிகவும் மன வேதனைக்குரியது. இலங்கையில் காணப்படுகின்ற சுமார் 2.3 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலத்தில் 80 சதவீதம் நெல், மக்காச்சோளம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை உள்ளடக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1.65 மில்லியன் சிறு விவசாயிகள் சராசரியாக 2 ஹெக்டேயருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தை மேற்கொண்டு மொத்த வருடாந்த உணவு உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்குகின்றனர். அரசியல் இஸ்திரத்தன்மை இன்மை, நிலையற்ற விவசாயக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை விவசாயத் துறையில் பயன்படுத்தாமை, விவசாயத்திற்கு மதிப்பளிக்காமை, தாராள இறக்குமதி, ஊழல் போன்ற பல்வேறு காரணங்களால் இலங்கையின் பொருளாதார முதுகெலும்பான விவசாயம் உடைக்கப்பட்டு உணவுக்குகூட வேறுநாட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வேளாண்மை ஆழ வேரூன்றிய இந்தப் பூமியின் சிறு நகரான காரைநகரிலே விவசாய - வணிகக் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயது முதலே விவசாயம், கால்நடை  வளர்ப்பு, மற்றும் இயற்கையின் மீதும் ஒரு இனம் புரியாத அதீத ஈர்ப்பு இருந்து வந்திருக்கிறது. அந்த ஈர்ப்பின் சித்தமாக விவசாய விஞ்ஞானப் பிரிவில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்று பேராசிரியர் பதவியில் இருக்கும் எனக்கு, எம்முடைய விவசாயிகள் இன்று வரை பசுமைத் தொழில்நுட்பங்களை தமது பண்டைய விவசாய முறைகளுக்குள் புகுத்தவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. பரம்பரை விவசாயிகளிடம் இதனைப் பற்றிக் கேட்டபொழுது, பெரிதாகத் தெரியாது என்றார்கள். இளம் விவசாயிகளிடம் கேட்டபொழுது, விளக்கமும் போதிய அறிவும் இல்லை என்றார்கள். எனக்கு ஏமாற்றமே எஞ்சியது. இந்த அவலநிலை மாற வேண்டும் என்ற நோக்குடன் இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியில் விவசாயத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் விளக்கக் கட்டுரைகள் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். எனது சங்கடத்தைப் போக்க எழுநா முன்வந்தது. நீங்கள் எழுதுங்கள் நாங்கள் மக்களிடத்தில் சேர்க்கிறோம் என்றார்கள். எனக்கு, எரியும் அவா என்னும் நெருப்பினுள் எண்ணைய்யை ஊற்றியது போல் இருந்தது. என்னுடைய தளராத முயற்சியில், ஓய்வுநேரத்தை எல்லாம் மிகவும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி, பல்கலைக்கழகப் பேராசிரியர் என்றவகையில் எனது தமிழ்ச் சமூகத்துக்கு செய்யவேண்டிய மிக உன்னதப் பணியாக சிரம் ஏற்று மிகவும் பயனுள்ள பல தகவல்களைத் திரட்டிக்கொண்டேன். இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீனத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்த வேண்டும், நவீனத் தொழில்நுட்பங்களை புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள், இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் எனப் பல விடயங்களை உள்ளடக்கி, ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, அவற்றை 12 அத்தியாயங்களாகப் பிரித்து, விவசாயப் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டப்பின் படிப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சாதாரணப் பொதுமக்கள் என அனைவரும் வாசித்துப் பயன்பெறவும், மேலதிக பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப்பெற்று தமது பாரம்பரிய விவசாயத்தினுள் பசுமைத் தொழில்நுட்பத்தை புகுத்தவும் இயலுமான வகையில் மிகவும் எளிய உரைநடையில் இந்நூலை எழுதியுள்ளேன்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, இந் நூலை செவ்வனே எழுத உறுதுணையாக இருந்த அத்துணை உள்ளங்களுக்கும், வெளியிட உத்வேகமும் ஊக்கமும் தந்த எழுநா வெளியீட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர்  கந்தையா பகீரதன்

விவசாய உயிரியல் துறை,

விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அறிவியல் நகர்,

கிளிநொச்சி .