ஈழம் சார்ந்தும் ஈழப் பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009இற்குப் பின்னர் வெளியாகிய அல்-புனைவு நூல்களை அவற்றின் சமூக-அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு இந்நூல் வெளிவருகின்றது. இதன் மூலம் தமிழ்ச் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகுகின்றன. ஈழத் தமிழர் வாழ்வு, அடையாளம், இடப்பெயர்வு, போர், போராட்டம், நிலம், பண்பாடு, தேசியம், பெண்களின் வகிபாகம், அரசியல் ஆகியவற்றோடு, ஈழத்திற்கு வெளியில் நிகழும் உலகத் தமிழ் வாழ்வியல் அனுபவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. நாடு கடந்த தமிழ் வெளியின் சமூக, அரசியல் வாழ்வியலையும் இது பிரதிபலிக்கின்றது. இலக்கிய விமர்சனம், சமூக அறிவியல் பகுப்பாய்வு மற்றும் அவதானிப்புகளை உள்ளடக்கிய கல்வியியல் அணுகுமுறையுடன், உலகளாவிய தமிழர் அனுபவத்தைப் பதிவு செய்யும் பணியையும் இந்நூல் செய்ய முயலுகின்றது.
'எழுநா' சஞ்சிகையிலும் அதன் இணையத்திலும் நான் எழுதிய 'திக்குகள் எட்டும்' தொடர் நூல் வடிவம் பெறுகின்றமை மகிழ்ச்சிக்குரியது. தாயகத்தில் இந்நூல் வெளிவருகின்றமை இரட்டிப்பு மனநிறைவிற்குரியது. இத்தொடரை நான் எழுத உந்துதல் தந்தவர் எழுநா பதிப்பாசிரியர் நண்பர் சசீவன் கணேசானந்தன். சசீவனும் பத்மநாப ஐயாவும் இத்தொடருக்கான ஆங்கிலப் புத்தகங்கள் சிலவற்றைப் பரிந்துரைத்ததோடு அனுப்பியும் வைத்திருந்தனர். ஒவ்வொரு கட்டுரைகளையும் குறித்த காலத்தில் பெற்றுப் பிரசுரிப்பது சார்ந்த தொடர்பாடல்களை எழுநா சார்பில் ஆரம்பத்தில் பவித்ராவும் பின்னர் ஜனனி மற்றும் பியூலாவும் மேற்கொண்டு வந்தனர்.
திக்குகள் எட்டும் தொடருக்கான எண்ணக்கரு (Concept) இனை கீழ்வருமாறு வரையறுத்திருந்தோம்:
'ஈழம் சார்ந்தும் ஈழப் பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009இற்குப் பின்னர் வெளியாகிய அல்-புனைவு நூல்களை அவற்றின் சமூக-அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு 'திக்குகள் எட்டும்' என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ்ச் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகுகின்றன.' இக்கருத்துருவுக்குள் உள்ளடக்கக்கூடிய வகையில் நூல்களின் தேர்வு அமைந்தது.
அடிப்படையில் இதில் பேசப்பட்ட நூல்கள் அல்-புனைவு (Non-fiction) வகைமைக்குள் வருகின்றன. கல்வியியல் ஆய்வு நூல்கள், தன்னனுபவக் கதையாடல்கள், வரலாற்று ஆய்வுகள், பகுப்பாய்வு முறையிலான தன்னனுபவ உரையாடல்கள் மற்றும் கதையாடல்கள், கள ஆய்வுகள் ஊடான சுவடிப்படுத்தல்கள் ஆகிய படைப்பு வடிவங்களைக் கொண்ட நூல்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
'பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும்' (நிம்மி கௌரிநாதன்), 'நிலவியலின் துயரம்' (லோகதாசன் தர்மதுரை), 'நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்' (ஜொகான் சண்முகரத்தினம்), 'எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள்' (என். மாலதி), 'சுதந்திர நாளில் ஒரு வெள்ளைக் கொடி' (எரிக் சூல்ஹைம்) ஆகியவை தன்னனுபவக் கதையாடல் வகைமையைச் சேர்ந்த அல்-புனைவு நூல்கள்.
'போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு: பணம் அனுப்புதலும் பண்பாட்டு நடைமுறைகளும்' (சர்வேந்திரா தர்மலிங்கம்), 'இலங்கையின் போரும் சமாதானமும்: நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்' (ஒய்வின்ட் புக்லறூட்), 'தமிழர்களும் தேசமும்: இந்திய-இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு' (மாதுரிகா இராசரத்தினம்) ஆகிய நூல்கள் கல்வியியல் ஆய்வுப் படைப்புகள்.
'இன அழிப்பிற்கெதிரான ஐ.நா. சாசனத்தினை முன்வைத்து தமிழினப் படுகொலைகள்: 1956-2008' (வடக்கு கிழக்கு மனித உரிமைகள் மையம்), 'நிலமும் நாங்களும்: பின்-போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்' (மாற்றம் அமைப்பு) ஆகியன கள ஆய்வுச் சுவடிப்பதிவுகள் எனும் வகைமைக்குள் உள்ளடங்குகின்ற நூல்களாகும். பதினைந்து பாகங்களாக எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் பத்து நூல்கள் பற்றிய திறனாய்வுப் பார்வைகள் இடம்பெற்றுள்ளன.
நூல்களின் உள்ளடக்கத்தை வாசகர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அதேவேளை மிக விரிவாகவும் எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆங்கிலத்தில் வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களை முழுமையான பரிமாணத்துடன் கொண்டு சேர்ப்பது ஒரு நோக்கம். மற்றையது, ஆங்கிலத்தில் அல்லது வேற்று மொழிகளில் வாசிப்பவர்களுக்கு அம்மூல நூல்களை வாசிக்கத் தூண்டுவதாகும். ஆய்வு மாணவர்களுக்கும் இந்நூலும் இதில் பேசப்பட்டுள்ள நூல்களும் பயனளிக்கக்கூடியவை என்று கருதுகின்றேன்.
ஈழத் தமிழர் வாழ்வு, அடையாளம், இடப்பெயர்வு, போர், போராட்டம், நிலம், பண்பாடு, தேசியம், பெண்களின் வகிபாகம், அரசியல் ஆகியவற்றோடு, ஈழத்திற்கு வெளியிலான உலகத் தமிழ் வாழ்வியல் அனுபவங்களையும் இவை உள்ளடக்கியுள்ளன. நாடு கடந்த தமிழ் வெளியின் சமூக, அரசியல், வாழ்வியலையும் இவை பிரதிபலிக்கின்றன. இலக்கிய விமர்சனம், சமூக அறிவியல் பகுப்பாய்வு மற்றும் அவதானிப்புகளை உள்ளடக்கிய கல்வியியல் அணுகுமுறையுடனும், உலகளாவிய தமிழர் அனுபவத்தைப் பதிவு செய்யும் பணியையும் ஒருசேர இந்நூல் செய்கின்றது.
ஈழத் தமிழ்ச் சூழலில் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் அறிவியக்கத் தளங்களில் கணிசமான தேக்கம் நிலவுகின்றது. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தமிழர் அல்லாத அறிவுலக, எழுத்துலகத் தரப்புகள் மற்றும் தமிழல்லாத மொழிகளில் எழுதும் தமிழ்ப் படைப்பாளர்கள் எவ்வாறான பார்வைகளை முன்வைக்கின்றனர், எவ்வாறான அறிவுத்தள ஆய்வுகள், கதையாடல்கள், உரையாடல்கள் வெளிவருகின்றன என்பதை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இன்றியமையாதது. அவற்றினை முன்வைத்து உரையாடல்கள் இடம்பெறுவது பயன்தரவல்லது. எம்மை மீளாய்வு செய்யவும், சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தவும், புத்தாக்கச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் இத்தகைய நூல்கள் பங்களிக்கக்கூடியன என்பது எனது நம்பிக்கை.
தோழமையுடன் ரூபன் சிவராஜா ஒஸ்லோ, நோர்வே
svrooban@gmail.com
05.03.2026