நூல்கள் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு
சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு

எழுத்தாளர் சடகோபன் பன்முக ஆளுமைமிக்க ஒருவராவார். அவர் சட்டத்தரணி, ஆய்வாளர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர்,  கவிஞர் என பல்துறைகளிலும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தவர். இந்நூல் அவரை ஓர் ஆய்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மிகத் திறன்மிக்க வகையில் அடையாளப்படுத்துகிறது.

கோப்பி, தேயிலை போன்ற பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுத்துவதற்கென இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் கூலித்தொழிலாளர்கள், இன்று ஒரு சமூகமாக உருவாகி, இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகப் பரிணமித்து, தேசிய நீரோட்டத்தில் ஏனைய சமூகத்தவரோடு சமமான நிலையில் ஒன்றிணைவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், இந்த நூலை அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பொருத்தமான காலகட்டத்தில் சிருஷ்டித்து வழங்கியமைக்காக நூலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராவார். அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டச் செயல்முறைக்கும் இந்நூல் வலுச்சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

எழுநா நூல் வரிசை 23
பக்க எண்ணிக்கை 296
வெளியீட்டு ஆண்டு 2025
பகுப்பு அரசியலும் மெய்யியலும்
அணிந்துரை
அறிமுகம்

எழுத்தாளர் இரா. சடகோபனின் "சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு" என்ற இந்த நூல் அவரது முன்னைய வரலாற்று நூலான ‘கண்டிச்சீமையிலே’ கோப்பிக்கால வரலாற்று நூலின் தொடர்ச்சியாக மலையக மக்களின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும். டொனோவன் மொல்ட்ரிச் அவர்களின் ‘கசந்த கோப்பிக்கால அடிமைகள்’ (Bitter Berry Bondage) என்ற  வரலாற்று நூலை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய வடிவில் உருவாக்கப்பட்டதே ‘கண்டிச் சீமையிலே’ என்ற நூலாகும். ஆனால், இந்த இரண்டாவது நூல், சுயமான ஆய்வு அடிப்படையில் கோப்பிக்குப்பின் இலங்கையின் பொருளாதாரத்தில் அறிமுகமான தேயிலை பயிர்ச்செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் அரசியல் வரலாறு பற்றிய நூலாகும்.  இதனது வடிவம்,  விடயப்பரப்பு, கதை சொல்லும் உத்தி என்பன முன்னையதைவிட, முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.

எழுத்தாளர் சடகோபன் பன்முக ஆளுமை மிக்க ஒருவர். அவர் சட்டத்தரணி, ஆய்வாளர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர்,  கவிஞர் என பல்துறைகளிலும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தவர். இந்த நூல் அவரை ஒரு ஆய்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மிகத் திறன்மிக்க வகையில் அடையாளப்படுத்துகிறது என்று கூறலாம். இந்த ஆண்டு, 2023, மலையகம் 200 என்ற மகுடம் பல இடங்களிலும், பல மட்டங்களிலும் பல தரப்பினாலும் நினைவு கூரப்படுகின்றது. இதனை ஒரு சாரார் "வேர்களை  மீட்டெடுத்தலும் உரிமைகளை வென்றெடுத்தலும்" என்று மிகப் பொருத்தமாகக் குறிப்பிட்டிருந்ததை இங்கு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

1823 ஆம் ஆண்டு கோப்பிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்துவதற்கென கொண்டுவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஒரு சமூகமாக உருவாகி இன்று தேசிய இனங்களில் ஒன்றாக பரிணமித்து தேசிய நீரோட்டத்தில் ஏனைய சமூகத்தவரோடு சமமான நிலையில் ஒன்றிணைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த நூலை அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பொருத்தமான காலகட்டத்தில்  சிருஷ்டித்து வழங்கியமைக்காக நூலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராவார். அத்துடன் தற்போது இடம் பெற்று வரும் வென்றெடுக்கும் போராட்ட செயல்முறைக்கு இந்நூல் வலுச் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

நூலின் விடயப்பரப்பு மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார,  வரலாறாகவே காணப்படுகிறது. இந்த வரலாற்று ஓட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து அந்நிகழ்வு குறித்து தனது விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் எளிய நடையில் சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்மை இதன் சிறப்பாகும். தினக்குரல் வாரப் பத்திரிகையிலும், எழுநா இதழிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இந்த தலைப்புகள் இந்த நூலுக்கு ஓர் இலக்கிய மணத்தையும் சுவையையும் உயர் பரிமாணத்தையும் தருகின்றன எனலாம். 

மலையக மக்களின் வரலாறு குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. தொழிற்சங்கவாதி எஸ். நடேசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய  “History of Upcountry Tamils  in Sri Lanka - 1993 ( இலங்கையில் மலையக தமிழ் மக்கள் வரலாறு)”, பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதிய “இலங்கை இந்தியர் வரலாறு (2001)”, ஆய்வாளர் யோகேஸ்வரி விஜயபாலனின் “Endless Inequality (2014)”, எழுத்தாளர்  மு.சி. தந்தையாவின் "சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்" (2015) முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றோடு பேராசிரியர் ராஜன் ஹூல் அவர்கள் எழுதியுள்ள “Stillborn Democracy (2022)” என்ற நூல் முழுமையான வரலாற்றை தராவிட்டாலும் 1920 இற்குப் பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்தது வரை ஒரு விரிவான புலமைசார் ஆய்வாக அமைந்துள்ளது. இவற்றுடன் ஒப்பிடுகையில் திரு. சடகோபனின் நூல் சகல வரலாற்று அம்சங்களையும் ஒருசேர உள்ளடக்கியதாகவும் அதனை எடுத்தியம்பும் பாணியில் தனக்கேயுரிய தனிச் சிறப்பையும் தொனியையும் கொண்டுள்ளதுடன் சாதாரண வாசகனை கவர்ந்து விடுவதாகவும் அமைந்துள்ளது.

இவரது நூலில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதான நிகழ்வுகளாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்டலாம். தேயிலையின் தோற்றம், தொழிலாளர்களின் வருகை, ஒரு சமூகத்தின் உருவாக்கம், இந்திய வம்சாவழி மக்களுக்கான எதிர்ப்பு, தொழிற்சங்கங்களின் தோற்றம்,  அரசியல் பிரதிநிதித்துவம் பெறுகின்றமை, ஶ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம், தாயகம் திரும்புதல் மற்றும் இம்மக்கள் மீது எவ்வாறு இனக் கலவரங்கள் முடுக்கிவிடப்பட்டு இச்சமூகம் எவ்வாறு சிதைக்கப்பட்டது போன்றவற்றை ஆதார பூர்வமாக இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் மலையிலிருந்து உருட்டி விடப்பட்டவர்கள் எவ்வாறு மலையேறி உச்சிக்கு வந்து தம் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள் என்ற வரலாற்றை இந்நூல் தெளிவாகவும் உரத்த குரலிலும் எடுத்துக் கூறுகிறது.

அத்தகைய வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கையாளும்போது அதிகளவில் இவ்விபரிப்புகள் ஒரு அரசியல் விமர்சனமாக அமைந்திருப்பதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, அதனை மீளப் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள், இதில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறு அமைந்தது என்பதை அக்காலகட்ட அரசியல் தளத்தில் இருந்து நூலாசிரியர் விமர்சிக்கின்றார். மலையக மக்கள் தலைமைகளின் வலுவற்ற எதிர்வினை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டபோது மலையக தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு பதிலாக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தால் அதன் பலன் அதிகமானதாக இருந்திருக்கும் என வாதாடுகின்றார்.  ஏன் அத்தகைய ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பது விடை காண வேண்டிய ஒரு விடயமாகவே தோன்றுகிறது.

இந்நாட்டில் சுதந்திரத்துக்கு முன்னர் இடதுசாரிகள் இத்தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணி திரட்டி பல வெற்றிகரமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியமை மற்றும் முல்லோயா போராட்டத்தின்போது கோவிந்தன் சுடப்பட்ட போராட்டமானது இடதுசாரிகளால் வழிநடத்தப்பட்டமை பலரால் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள போராட்டங்களில் ஒன்றாகும். ஆனால் 1960 இற்குப் பின்னர் ஶ்ரீமாவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போது அவர்களுடன் இணைந்து ஆட்சிபீடம் ஏறிய இடதுசாரிகள் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இனத்துவேசத்தை நோக்கிய செயற்பாட்டை சுட்டிக்காட்டி தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்தார்கள் என்பதனை வருத்தத்தோடு பதிவிடுகின்றார் நூலாசிரியர். 

அடுத்ததாக 1970 களில் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றமையையும் அதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் இறக்குமதி பதிலீட்டு கொள்கையின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியது என்பதும் மிக விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தோட்டங்கள் தேசிய மயப்படுத்தப்பட்டமை இம்மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஒரு முயற்சியாக, நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அது தோட்டக் காணிகளை கிராமிய மக்களுக்கு பங்குபோடும் முயற்சிக்கு வழி வகுத்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ இடமில்லாது போனதுடன் பிரஜாவுரிமை அற்றவர்கள் என்று காரணம் காட்டப்பட்டு அவர்கள் தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.

1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இத்தகைய அரசியல் செயல்முறையானது சிறு சிறு இன முறுகல்களாக தொடங்கி பின் 1983 இல் நாடு தழுவிய இனக்கலவரமாக வெடிக்க ஆரம்பித்தது. இது இந்தச் சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி சிதைவை மேலும் உக்கிரப்படுத்தியது எனலாம். தமது வரலாற்றுப்பூர்வமான வாழ்விடங்களை விட்டு இலங்கை தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர். அத்துடன் இந்தியாவுக்கு சென்று பலர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர் என்பதையும் இந்நூலில் மிக துன்பியல் உணர்வுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவாக, முன்னாடியே குறிப்பிட்டதைப் போல மலையில் இருந்து உருட்டி விடப்பட்டவர்கள் மலை உச்சிக்கு ஏறிச் சென்று தலை நிமிர்ந்து நிற்கின்ற நம்பிக்கை நோக்கத்தை எடுத்துக்காட்டும் இந்நூல் இன்னும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதை கூறாமல் கூறி நிற்கிறது. வேர்களை மீட்டெடுத்து உரிமைகளை வென்றெடுக்கும்  "மலையகம் -200" தொனிப் பொருளுக்கு உரம் சேர்ப்பதால் மேலும் மிளிரும் இந்நூல் எளிய எழுத்து நடை, கதை சொல்லும் உத்திகள் என்பவற்றால் சாதாரண வாசகர்களை ஈர்க்கின்ற ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. இத்தகைய நூலை காலத்துக்கு ஏற்ற வகையில் படைத்த எழுத்தாளர் சடகோபன் அவர்கள் பாராட்டுக்குரியவராக இருப்பதுடன் இவரது இத்தகு எழுத்து முயற்சிகள் தொடர வேண்டும் என்பதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

எம். வாமதேவன்,

முன்னாள் செயலாளர்,

தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும்

சமூக அபிவிருத்தி அமைச்சு.

23.08.2023

​​சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு

1823 ஆம் ஆண்டுடன் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்டு சரியாக 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் இலங்கையில் வர்த்தகரீதியாக கோப்பிப் பயிர்ச்செய்கையை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barns) என்பவருடன் இணைந்து இம்முயற்சியில் அக்கறை கொண்டிருந்த ஹென்றிபேர்ட் (Hendry Bird) என்பவர் கம்பளைக்கு அருகாமையில் சின்னப்பிட்டி (பின்னர் சின்ஹா பிட்டியானது) என்ற இடத்தில் 1823 ஆம் ஆண்டு 80 ஏக்கரில் கோப்பித் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். இதற்கென 150 கூலித்தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து தருவித்தனர். இதன் பின்னர் இலங்கையில் படிப்படியாக கோப்பிப் பயிர்ச்செய்கை பலரால் ஆரம்பிக்கப்பட்டு 1830 ஆம் ஆண்டளவில் அது பெரிய அளவில் வெற்றி அடைந்து இந்தியத் தொழிலாளர் இலங்கை நோக்கிய வரவு ஆரம்பமாகியது என்றபோதும் மேற்படி 1823 ஆம் ஆண்டு ஹென்றி பேர்டினின் முயற்சியும் அவரது கோப்பித் தோட்டமுமே மலையக மக்களின் பாரிய அளவிலான இலங்கை வருகைக்கு “கால் கோளாக” அமைகின்றது என்ற வகையில் அதனை இலங்கையில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் வரலாற்றின் ஆரம்ப வருடமாக கொள்ளலாம்.

இலங்கை முழுவதையும் பிரித்தானிய அரசாங்கம் 1815 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்பு முழு அரசு நிர்வாகத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்ட போது அரச செலவினங்களை ஈடுகட்டும் அளவுக்கு உள்நாட்டு வருமானமும் அந்நிய செலாவணி வருமானமும் போதாமல் இருந்தது. பண்டுதொட்டு அரசர் காலங்கள் முதல் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக வியாபாரப் பொருட்களாக இரத்தினக் கற்கள், யானைத்தந்தம், வாசனைத் திரவியங்களான கறுவா, ஏலம், கிராம்பு மற்றும் உப்பு என்பன இருந்து வந்துள்ளன. போர்த்துக்கேயர் காலத்தில் மன்னாருக்கு சற்று தெற்கே அரிப்பு என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் முத்து வர்த்தகத் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு அது 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது என்பதனை இலங்கை வரலாற்று ஆசிரியர்கள் அறிவர்.

ஆனால் இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் ஆட்சியானது கொழும்பு, கோட்டை, சீதாவாக்கை, செங்கடகல, கண்டி, கம்பளை என பின்னடைந்து சென்றபோது மேற்படி வர்த்தகங்கள் எல்லாம் அருகிப் போய்விட்டன. மன்னாருக்கு அருகில் இயங்கி வந்த மிகப்பெரிய முத்துக்குளிக்கும் துறைமுகமும் பாரிய அளவில் பரவிய கொலரா நோய் காரணமாக இலட்சக்கணக்கான அளவில் மக்கள் இறந்து போனதால் செயலற்றுப் போனது. எஞ்சி இருந்தவர்கள் கற்பிட்டி, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை, மற்றும் காலி, களுத்துறை, மாத்தறை வரை சென்று குடியேறினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழரும் முஸ்லிம்களும் ஆவர். அவர்களே பின்னர் தமது தமிழ் இன இந்துமத அடையாளங்களை இழந்து கரையோரச் சிங்களவர்கள் ஆனார்கள். இவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி பின்னர் சில்வா, பெரேரா, டி சொய்சா, செதோறினா, கரோலைன், றொசலின், கிரிகோரிஸ், மேதிரிஸ், அல்ஃபோன்சோ முதலான சிங்களப் பரம்பரையினர் உருவாகினர். இவர்கள் மத்தியில் அகம்படியர், சென்னைக்கு அருகில் உள்ள சாலி கிராமத்தை சேர்ந்த சாலியர்கள், சலாவ, துராவ, பரத, கரையர் முதலிய இந்தியச் சாதிகள் இருந்தன. இவர்கள் ஒருபோதும் தாம் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மீளப்பெற முயற்சிக்கவில்லை. இவர்கள் மத்தியில் இருந்துதான் பின்னர் இந்நாட்டின் ஆரம்ப அரசியல் தலைவர்களான கொல்வின் ஆர். டி. சில்வா, Dr. என் எம். பெரேரா, ஸ்டீவன்ஸ்பேட்டர் சேனாநாயக, மெரில் பெர்ணாந்து, அந்ராதி, பிலிப் குணவர்த்தன போன்ற அரசியல் தலைவர்கள் உருவாகினர் என்றபோதும் அதனை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் ஆய்வாளர்கள் நம் மத்தியில் இல்லை.

மத்திய மலைநாட்டில் மலையகத் தமிழர்களின் வருகையுடன் மலைகள், பள்ளத்தாக்குகள் மட்டம் தட்டப்பட்டு கோப்பிக் கன்றுகள் நாற்று நடப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்காக நடப்பட்ட கன்றுகள் பின்னர் ஆயிரமாக, லட்சமாக வளர்ந்து, பூத்துக்குலுங்கி, காய்த்து கோப்பிக் கொட்டைகளாகி பெரும் வர்த்தகப் பொருளாக உருவாகின. அவை சிந்தாமல் சிதறாமல் பிடுங்கி, தோலுரித்து, காயவைத்து, தூளாக்கி பெட்டிகளில் அடைத்து கொழும்புக்கும் பின்னர் லண்டனுக்கும் அனுப்பப்பட்டன. அதிலிருந்துதான் கோப்பித்தோட்ட சொந்தக்காரர்களான வெள்ளையர்கள் லட்சம் லட்சமாக பணத்தை சம்பாதித்தனர். 1815 ஆம் ஆண்டிலிருந்து 1830 ஆம் ஆண்டு வரை காற்றடித்து வெற்றுப் பெட்டியாக இருந்த குடியேற்ற நாட்டு வெள்ளைக்கார ஆட்சியினரின் கஜானா தங்கம், வெள்ளிக் காசுகளாலும் ஸ்டெர்லிங் பவுண்ட்களாலும் நிறைந்து வழிய ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் இந்த நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றமடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தினரும் ஆடம்பரத்தில் மிதக்கத் தொடங்கினர். இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்தவர்கள் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் தான் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மிக வசதியாக மறந்து போய்விட்டனர்.

அதன் பின்னர் பல பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் தேயிலை, றப்பர், கொக்கோ, கரும்பு, பருத்தி, சிங்கோனா முதலியனவும் போஸ்ட் பெய்ட், சுரங்கத்தொழில் என்பனவும் தொழில்துறைகளாக வளர்ச்சியடைந்தன. மூடை மூடையாக பணத்தைக் கட்டி தன் நாட்டுக்கு கோப்பி பெட்டிகளுடன் கப்பலேறினர். ஆனால் அவ்விதம் செல்வம் கொழிக்கச் செய்து நாட்டை பொன்னாலாக்கிய கூலிகள் என்று அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு வெள்ளையர்கள் என்ன கைமாறு செய்தனரென்றால், ஒரு பவுணை ஆயிரமாக பிரித்து அதில் 5 சதத்தை பிச்சையாக வீசி எறிந்தார்கள். 5 சதக் கூலியை பங்குபோடத் தான் எத்தனை காக்கைகள்? பெரிய கங்காணி, சின்னக் கங்காணி, சில்லறைக் கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளாக், மேற்பார்வையாளர், வீட்டுக்காரன், கள்ளுக்கடைக்காரன், சாராயக்கடைக்காரன், சில்லறைக் கடைக்காரன், உத்தரவுக் கடைக்காரன், புடவைக் கடைக்காரன், மதுரைக்காரன் இப்படி இத்யாதிப் பேர் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருந்தனர்.

‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்று ஒருவன் சொன்னான். இல்லை இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று இன்னொருவன் சொன்னான். உண்மைதான் இவர்கள் ஒருபோதும் திரவியம் தேட வந்தவர்கள் அல்லர். எப்போதும் பஞ்சத்திலும், பட்டினியிலும் அடிபட்டுக்கொண்டே இருந்தார்கள். இன்றுவரையும் அப்படியேதான் இருக்கிறார்கள். அன்று அந்த வெள்ளைக்காரன் விட்டு வீசிய 5 சதக் காசுகளும் இன்றைய பெறுமதி தான், இன்று கூட நம்மால் போராடிப் பெற முடியாது இருக்கும் ஆயிரம் ரூபாய் நாள் கூலி. ஒரு திருப்திகரமான மாதச் சம்பளத்தை பெற்று நாட்டின் ஏனைய மக்களைப் போல் மலையக மக்களும் தலை நிமிரும் போதுதான் அவர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படும்.

இந்த நாட்டின் ஏனைய குடிமக்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வீட்டில் அது ஒரு குடிசை என்றாலும்கூட சுதந்திரமாக வாழ்ந்த போது மலையகத் தமிழ் மக்களை வெறும் கூலிகள் என்ற வார்த்தையால் கொச்சைப்படுத்தி இருண்ட குகைகளான லயம் என்ற வரிசையான அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தனர். கடந்த இருநூறு வருடங்களாக இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்களும் அட்டூழியங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இவர்கள் எந்த விதத்திலும் கல்விகற்று வேறு துறைகளுக்கு போய் முன்னேறிவிடக் கூடாது என்பதில் இவர்களது தலைவர்களே மிகவும் கவனம் எடுத்துக் கொண்டனர். இலவசக் கல்வியின் பிதா என்று போற்றப்படும் டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா கூட இத்தகைய குறுகிய மனம் கொண்டவராக இம்மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க மறுத்தார்.

இந்த மக்கள் ஏனைய மக்களுடன் சேர்ந்து விடக்கூடாது என்ற கொள்கையை வகுத்து காவல் கண்காணிப்புகளை கடுமையாக போட்டு தேயிலைத் தோட்டத்துக்குள்ளேயே காலம் காலமாக கட்டி வைத்திருந்தனர். அந்த கட்டுக்காவல்கள் எல்லாவற்றையும் மீறி அவர்களில் 7 பேர் நாடாளுமன்றம் சென்று விட்டார்களே என்ற ஆதங்கத்தால் அடுத்த வருடமே அந்த மக்களின் ஒட்டுமொத்த பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்துக் கொண்டார்கள். அதன் பின்னரும் இந்த நாட்டில் இவர்களை விட்டு வைப்பது ஆபத்து என்று கூறி 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து ஒட்டுமொத்தச் சனத்தையும் இந்தியாவுக்கு ஓட்டிவிடப் பார்த்தார்கள். ஆனால் அந்த எல்லாச் சதிகளையும் சூழ்ச்சிகளையும் வென்று இன்று இந்த மக்கள் இந்த நாட்டின் நான்காவது தேசிய இனமாக வீறு கொண்டு எழுச்சி பெற்றுள்ளார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இதில் கேவலமான மற்றுமொரு கசப்பான உண்மையும் சேறுபடிந்ததாக இன்னும் இருந்து வருகிறது. அது இந்த மக்களின் தலைமைகளே இம்மக்களை வஞ்சகமாக ஏமாற்றி மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளி வந்துள்ளனர் என்பதாகும். வரலாற்றின் ஆரம்பத்திலேயே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெள்ளைக்காரனை விட அவனுடன் கூட இருந்தே இம்மக்களுக்கு குழி பறித்தவர்கள் கங்காணிகளாகவும் கணக்குப் பிள்ளைகளாகவுமே இருந்துள்ளனர். இந்தக் கங்காணிகள் பரம்பரையினரின் தொடர்ச்சியாகவே பின்னால் இவர்கள் மத்தியில் உருவான தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர்.

நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் மக்களின் நலனே தனது கொள்கையாகவும் கொண்டு செயற்பட்ட கோதண்டராமர் நடேசய்யரின் வெற்றியை படிப்படியாக தோல்வியுறச் செய்து அவரை தம் பாதையில் இருந்து அகற்றும் கைங்கரியத்தை இந்தக் கங்காணிக் கும்பலும் தொழிற்சங்கமும் மிகச் சூட்சுமமாக செய்து முடித்தன. இவர்கள் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறு 1948 ஆம் ஆண்டு தமது மக்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறித்தபோது அதனை எதிர்த்து தமது ஆதரவுச் சக்திகளை இணைத்துக் கொண்டு உரிய போராட்டங்களை முன்னெடுக்காததாகும். இரண்டாவது தவறு, மேற்படி பிரஜா உரிமை சட்டத்தால் ஏற்பட்ட தவறை திருத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானியர் பிரஜா உரிமை சட்டத்தின் போது பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என இம் மக்களை தடுத்து தவறான வழியில் திசை திருப்பியமையாகும். இந்த வரலாற்றுத் தவறுகளால் நாம் முப்பத்தைந்து ஆண்டுகளாக நடு ரோட்டில் விடப்பட்டிருந்தோம்.

மற்றுமொரு வரலாற்றுத் தவறு தொழிற்சங்க தலைமையையும் அரசியல் தலைமையையும் ஒருவரின் கையில் எடுத்து கொண்டமையாகும். இதன்காரணமாக அற்ப சலுகைகளுக்காக நமது தொழிற்சங்க வலிமையையும் பேரம்பேசும் சக்தியையும் மாறிமாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைமைகளிடம் அடகு வைத்து விட்டமையாகும். பதிலுக்கு நமது தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நாம் சகித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த அவலம் இன்றுவரை தொடர்கின்றது. இங்கே எழுகின்ற பூதாகரமான கேள்வி நமது எதிர்காலமும் இப்படித்தான் இருக்கப்போகின்றதா என்பதுதான்.

இதற்கு முன் நான் எழுதிய “கண்டிச் சீமையிலே” என்ற நூலை உங்களில் சிலராவது படித்திருக்கக்கூடும். அந்நூலில் நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் பட்ட துயரங்களின் வரலாற்றை பட்டவர்த்தனமாக கூறியிருந்தேன். அது கோப்பிக் கால வரலாற்றுடன் முற்றுப்பெற்றது. இந்த இரண்டாவது பாகம் நான் எனது முதல் நூலில் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தத் நூலுக்கும் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என நம்புகிறேன்.

இரா. சடகோபன்,
17B, Richard de soysa H.S,
Battaramulla, Srilanka. TP: 777679231
Email: shadagopan.ramiah0@gmail.com
Blogspot: www.updrf.Blogspot.com
03.08.2024