அன்பான எழுநா கூட்டுறவு புத்தக மன்ற அன்பர்களே!
வணக்கம்
‘எழுநா கூட்டுறவு புத்தக மன்றம்’, நல்ல நூல்களைத் தேடி வாசிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்கள் மத்தியில் காலத்தின் தேவையையொட்டி அவசியமானவையும், ஈழம் சார்ந்த சமூக ரீதியான சிந்தனை வளர்ச்சிக்கு வலுவூட்டும் பயன்விளைவைத் தரவல்லவையுமான நூல்களைப் பதிப்பித்துப் பரவலாக்குவதை முன்னெடுக்கும் ஒரு பணியின் அவசியம் கருதிச் செயற்பட்டு வருகிறது. எழுநா புத்தக மன்றம், கூட்டுறவு உணர்வுடனான பொறுப்புக் கூறலுடன் கூடிய தனது நூல் வெளியீட்டுச் செயற்பாட்டை, எத்தகைய இடையூறுகளுமின்றித் தொடர்ச்சியாகவும், சிறப்பாகவும், நமது வாசக சமூகத்திக்குப் பயனளிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடாத்திச் செல்லும் நோக்குடன் இயங்கிவரும் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பாகும். அந்த வகையில், கால முக்கியத்துவம் வாந்ந்த இந்தப் பணியில் இறங்கியுள்ள இந்த மன்றத்தின் வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியான இருப்பும், வாசக அன்பர்கள் ஒவ்வொருவரதும் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி வெற்றிகரமாக அமைய முடியாது என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இந்தப் பணியை அது செவ்வனே செய்வதற்கான தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாட்டுக்கு, உலகம் பரந்து வாழும் வாசிப்பில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைவரதும் மனமார்ந்த ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டி இந்த அறிவிப்பு முன்வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு புத்தக மன்றத்தின் திட்டங்கள், வெளிவந்துள்ள நூல்கள், இவ்வாண்டுக்குள் வெளிவரத் தயாராக உள்ள நூல்கள் தொடர்பாகவும் அதற்கான உங்களது அன்பான ஆதரவையும் பங்களிப்பையும் கோரிநிற்கும் ஒரு வேண்டுகோளாகவும் அமைகிறது.
எழுநாவினால் வெளியிடப்படும் நூல்கள், நமது வாழ்நிலம் பற்றியதும், வாழும் மக்கள் பற்றியதுமான சமூகம், அரசியல், வரலாறு, பண்பாடு, பொருண்மியம் என்ற பலதரப்பட்ட அம்சங்கள் பற்றிய சிந்தனைகள், செயற்திட்டங்கள், அவை பற்றிய ஆய்வுகளும் உரையாடல்களும் என்று பரந்தளவிலான விடயப் பரப்புக்களைக் கொண்டு அமைவதை நோக்கமாகக் கொண்டவை. இந்த விடையப்பரப்புகளில் எமக்கானதும் எமது மக்களுகானதுமான விரிவான, செழுமையான அறிவுத் திரட்சி இன்றி எமது மக்களது எதிர்காலம் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் நடைபோடமுடியாது என்ற வெளிப்படையான உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த அடிப்படையில் தற்போது பாரிய சமூகப் பொறுப்புணர்வுடன் எழுநாவால் மேற்கொள்ளப்படும் இந்தப் பதிப்பு முயற்சிகள் வெற்றிகரமாகவும், பயன்விளைவு மிக்கவையாகவும் அமைவது வாசிப்பின் மீதான ஆர்வம் கொண்ட அனவரதும் ஆதரவும் ஒத்துழைப்பும் மூலமாகவே காரிய சாத்தியமாக முடியும் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல; அது மறுக்க முடியாத ஒரு உண்மை.
அந்த வகையில், அத்தகைய ஒரு நோக்குடன் எழுநாவால் இப்போது வெளியடப்படும் நூல்கள் மலிவு விலையில் உங்களை வந்து சேர்வதற்கான ஒரு திட்டமாக எழுநா இப்போது நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது தான் இந்த புத்தக மன்றப் பணி!. இந்தப் பணியில் இணைவதன் மூலம் வாசக அன்பர்கள் அனைவரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்த நூல்களைத் தவறாமல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்; கூடவே இந்த முயற்சியில் நீங்களும் இணைவதால் நூல்களைத் தவறாமல் பெற்றுக் கொள்பவர்களாக மட்டுமன்றி, எழுநாவின் தொடர்ச்சியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணிக்குக்கு மாபெரும் பங்களிப்பை நல்கவும் முடியும்!
அதற்கான முதலாவதும் முக்கியமானதுமான பணிதான் வெளிவரவிருக்கும் நூல்களுக்கான சந்தாதாரர்களைப் பரவலாகவும் பலமாகவும் இந்த மன்றம் கொண்டிருப்பது. ஏனெனில் எழுநாவின் பதிப்பு நடவடிக்கைகள் இலாப நோக்குடன் முதலிட்டு நூல்களைப் பிரசுரிக்கும் ஒரு அமைப்பு அல்ல. மாறாக, முழுக்க முழுக்க இந்தப் பணி குறித்த அர்ப்பணிப்புள்ள ஆர்வலர்களது பங்களிப்பினூடாகச் செயற்பட்டு வரும் ஒரு சமூக நலன் சார்ந்து செயற்படும் அமைப்பு இது. அதன் காரணமாகவே தான் வெளிவரப் போகும் நூல்களுக்கான சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இப்போது மன்றம் இறங்கியுள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் உங்கள் ஒவ்வொருவரதும் அதற்கான பங்களிப்புக்கள் பின்வரும் வகைமைகளில், ஒன்றாவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையாகவோ உங்கள் வசதியைப் பொறுத்தும் தேவையைப் பொறுத்தும் அமையலாம்:
வெளியீடுகளுக்கான வருடச் சந்தாதாரராக இணைதல். (ஆண்டொன்றுக்கான சந்தா விபரம் ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக எவ்வளவு என்ற விபரத்தை அடுத்த பகுதியில் காணலாம்.)
உங்களது அல்லது உங்களுக்கு விருப்பமான பிரதேசங்களிலோ அல்லது பாடசாலைகளிலோ, அல்லது பல்கலைக் கழகங்களிலோ உள்ள நூலகங்களுக்கு நூல்களை அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்குவதற்காக உங்களது சந்தாவைப் பயன்படுத்துதல்.
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் அல்லது நூலின் வெளியீட்டுக்கான ஆதரவு என்ற வகையிலான நன்கொடையாக இந்தச் சந்தாப் பணத்தை வழங்குதல்.
வாசகர், எழுத்தாளர் இணைந்த கூட்டுறவு முறையிலான இந்த முயற்சிக்கு ஆதரவான நன்கொடையாக சந்தாப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் நூலை வாங்க வசதிக் குறைவான,ஆனால் வாசிக்க ஆர்வமுள்ள அன்பர்களுக்காகப் பயன் படுத்துதல்.
இது ஒரு வாசகர் எழுத்தாளர் இணைந்த கூட்டுறவுமுறையிலான சிந்தனை, அறிவு, தெளிவு, சமூக செயற்பாடு ஆகிய முக்கியமான அம்சங்களிலான ஆர்வத்தையும் தேடலையும் அர்ப்பணிப்பையும் எமது சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கிலான மிக முக்கியமான ஒரு கூட்டுறவுப் பணி!; நமது தமிழ்பேசும் மக்களது சிந்தனை எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வெற்றிகரமான எதிர்காலத்துக்குமான ஒரு அடிப்படையான பணி!
தோண்டத் தோண்டப் பெருகும் மணற்கேணி நீர்; வாசிக்க வாசிக்கப் பெருகும் அறிவு!. வாருங்கள் இணைந்து புத்தக மன்றை வளர்ப்போம்!! வாசிப்பால் உலகை மாற்றுவோம்!!!
எழுநா கூட்டுறவுப் புத்தக மன்றம்



