ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறான ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமானதாகும். இலங்கையில் காணப்படும் வளச் செழிப்பு நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் பெரும் பங்காற்றக்கூடியது. மொத்த நிலப்பரப்பில் காற்பங்கிற்கும் அதிகமான பகுதியைக் கொண்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, வளங்கள் – கண்டறியப்பட்டவை அல்லது அடையாளங் காணக்கூடியவை ஆகியவை குறித்து இந்த நூல் ஆராய்கிறது. மேலும், அந்த வளங்களின் தற்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல் பற்றியும், அதன் மூலம் வடக்கு-கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு மற்றும் கடல்சார் பொருளாதாரம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்துச் சிந்திப்பதற்கான அடிப்படைக் காரணம், போரினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான இவ்விரு பிராந்தியங்களிலும் காணப்படும் பொதுமை, ஒரே இன மக்களின் கலாசாரப் பண்பாடுகள், பொருளாதார ரீதியில் வளங்கள் இருந்தும் அவை முறையாகப் பயன்படுத்தப்படாத நிலை ஆகியவையாகும். எதிர்காலத்தில் பெரும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ள பிரதேசங்களாக இவை விளங்குகின்றன.
இலங்கைப் பொருளாதாரச் செய்முறையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 45 சதவீதத்தை நிர்ணயித்து, பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிறது. இதனால், ஏனைய எட்டு மாகாணங்களும் பொருளாதார ரீதியில் அந்த மாகாணத்தின் மீது சார்ந்துள்ளன; தங்களது வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி வளர்ச்சியடைய முடியாத நிலையிலும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் சக்தி குறைந்தவையாகவும் இருந்து வருகின்றன.
அதீத இயற்கை அழகையும், சிறிய தீவுகளையும் கொண்ட வட மாகாணத்தில் சுற்றுலாத்துறை போதிய அளவில் வளர்ச்சியடையவில்லை. சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் தங்குமிடங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை மிகக் குறைந்த அளவிலேயே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலை, வளங்களும் வாய்ப்புகளும் இன்னும் முறையாகப் பயன்படுத்தப்படாததைக் காட்டுகிறது.
இந்தப் பின்னணியில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ளார்ந்த வளங்களையும், அவற்றைச் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளையும் வெளிக்கொணரும் வகையில் 'எழுநா' இதழில் தொடராகக் கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அவ்வகைக் கட்டுரைகளைத் தொகுத்து, 'வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' என்ற நூலாக வெளியிட எழுநா வெளியீட்டகம் எடுத்துள்ள முயற்சியையும் பெருமகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் வளங்கள் முக்கிய காரணியாக இருந்தாலும், கவர்ச்சிமிக்க அரசுக் கொள்கையும் செயற்பாடும் இல்லாத சூழலில் அந்தப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவாக முன்னெடுத்துச் செல்வது சாத்தியமல்ல. இதுவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குறைநிலை வளர்ச்சிக்கான பிரதான காரணமாகும். ஆகையால், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற, ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கி வழங்க வேண்டிய அரசியந்திரத்தின் பொறுப்பையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும், முதலீட்டு வாய்ப்புகளுக்கேற்ற (Appreciative Environment) சாதகமான சூழலை அனைத்து மாகாணங்களிலும் சமநிலையில் பரவலாக்க வேண்டிய அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிச் செய்முறையானது பேண்தகு நிலைமையை அடைந்து முன்னேறிச் செல்வதற்கு, வளங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தும் பிராந்திய அபிவிருத்தி முனைவுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதனை இவ் ஆய்வின் பெறுபேறாக நாம் தர்க்கபூர்வமான தகவல்கள் மூலம் நிறுவிக்கொள்ள முடிந்திருக்கிறது. இத்தகவல்களை வாசகர்களுடனும், ஆய்வாளர்களுடனும் பகிர முடிந்திருப்பது எனக்கு பெரும் திருப்தியையும் நிறைவையும் அளித்துள்ளது.
இலங்கையில் இந்நூலை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்கி, எனது கட்டுரைகளை எழுநா இதழின் வாயிலாகப் பிரசுரித்து, அவற்றை ஒரு நூலாக வடிவமைத்து வெளியிட்ட எழுநா பதிப்பகத்தாருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்நூலுக்குப் பெறுமதியான அணிந்துரைகளை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவரும், எனது பல்கலைக்கழக நண்பியுமான கலாநிதி. கமலாகுமாரி கருணாநிதி அவர்களுக்கும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரைகளை எழுதும் காலப்பகுதியில், அவற்றை உரிய நேரத்தில் முடிக்க எனக்கு ஊக்கமும் ஆதரவுமளித்த எழுநா வெளியீட்டகத்தின் ஊழியர்களான பவித்திரா, ஜனனி, பியூலா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
எம் பிராந்தியத்தின் வளங்களை வாய்ப்புகளாகக் காணும் எனது சிறிய பங்களிப்பை நூலுருவில் தங்களுக்குச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
அ.கேதீஸ்வரன், உதவி மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலகம், கிளிநொச்சி.