மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிச் செல்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்த நூல் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள். மரபுரிமைச் சின்னங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள், அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்துபட்ட நோக்கில் இந்த நூல் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள். செவிவழிக் கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் எழுதப்பட்டதாக அமைகின்றது.
பாகம் ஒன்றிற்கான முன்னுரை
மரபுரிமையைப் பற்றிய பாகம் ஒன்றின் கட்டுரைகள் வடக்கின் வசந்தம் எனப் பெயரிடப்பட்ட ‘வீதி அபிவிருத்தி’ திட்டத்தின் பின்னணியில் நிகழ்ந்த பண்பாட்டு மரபுரிமை அழிப்புகள், பொதுமக்களின் விழிப்பின்மை, தமிழ் அரசியல் மற்றும் புலமைச் சமூகத்தின் வறுமை என்பனவற்றின் மீது குவிமையம் கொண்டிருந்தன.
இந்த இரண்டாம் பாகம் மேற்படி மரபுரிமை அடையாளங்களது அழிவு /அழிப்பு – சர்வதேச அரசியல் மற்றும் அதனோடிணைந்த பல்தேசிய வணிக நிறுவன மையமான உலக ஒழுங்கு - உலகமயமாதல் ஆகியவற்றின் பகைப்புலத்தில் விளிம்புநிலைப்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களது இருப்பு, அடையாள நிர்மாணம் ஆகியவற்றின் பகைப்புலத்தில் மரபுரிமைகளைப் பற்றிப் பேசுகிறது.
அதேநேரம், மரபுரிமையைப் பற்றிப் பேசுதலை ஜனநாயகப்படுத்தல், முடிந்தவரை அதனை அதன் மேட்டுக்குடித்துவத்திலிருந்து கீழிறக்குதல், பரந்துபட்ட சமூக – இனத்துவ விடுதலையின் கருவியாக, சாட்சியமாக மரபுரிமையைச் சமூகத்தில் நிலைநிறுத்தல் என்பனவற்றினை முன்னிலைப்படுத்தும் இக்கட்டுரைகள், தேச நிர்மாணத்திற்கான பொறிமுறைகளுள் ஒன்றாக மரபுரிமைகளைப் பிரேரிக்கின்றன.
அதேவேளை, மரபுரிமை பற்றிப் பேசுதல் என்பது ஆழமான அர்த்தத்தில் அரசியல் மயப்பட்டது என்ற வகையில், அரசியல் தலைமைத்துவமற்ற தமிழ் சமூத்தில் மக்கள் மயப்பட்ட அரசியலை, மக்கள் நிலைப்பட்ட செயற்பாடுகளைக் கோரி நிற்கும் பிரதான துறைகளில் ஒன்றாகவும் மரபுரிமை காணப்படுகிறது.
இக் கட்டுரைகள் அடிப்படையில் உரையாடல்கள் (DIALOGUES); அவை கருத்தாடல்களை (DISCOURSE) கட்டியெழுப்புதலை நோக்கமாகக் கொண்டவை. அவ்வகையில் சிந்திக்கும், செயற்படும் மக்கள் கூட்டமொன்றின் மீதான முதலீடாக - இடையீடாக அவை இங்கு முன்வைக்கப்படுகின்றன.
இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகின்ற கட்டுரைகள் உதயனிலும், தினக்குரலிலும், எழுநாவிலும் வெளிவந்தவை. முதலாம் பாகத்தோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் பத்தி எழுத்தின் வரையறைகளுக்குட்பட்ட நிலையில் மரபுரிமை மீதான கோட்பாட்டு ரீதியான விவாதங்களை எழுப்ப முயற்சித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் மரபரிமையின் இன/ இனத்துவமயமாக்கச் சட்டகங்கள் குறித்து அது மேலும் மேலும் விரித்துப் பேசுகிறது. அவ்வகையில் சிறுபான்மை மரபுரிமை அல்லது விளிம்புநிலையாக்கத்திற்கு உட்பட்ட ‘அரசற்ற’ மக்கள் கூட்டங்களின் மரபுரிமைகள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பண்பாட்டுப் படுகொலைச் சம்பவங்கள் அதன் விசேட கவனிப்புப் புள்ளியாக உள்ளது. எவ்வாறு இச்செயற்பாடுகள் உள்ளூர் மக்களை அவர்கள் அறியாமல் இச்செயற்பாடுகளுக்கான முகவர்களாக ஆக்கும் தந்திரோபாயங்களை உருவாக்குகின்றன என்பது உட்பட பல்தேசியக் கம்பனிகள் எவ்வாறு சொந்த மக்களிடமிருந்தே அவர்களது மரபுரிமைகளைப் பறித்து அவற்றைத் தமது தேவைகளது பகைப்புலத்தில் தகவமைத்துக் கொள்கின்றன என்பது பற்றிப் பேசும் கட்டுரைகள் அவை; எவ்விதம் அவர்களால் நுகர்வுப் பண்டங்களாக்கப்பட்டு அவற்றின் உரித்தாளர்களிடமே அவற்றை விற்பனை செய்யும் நுகர்வுருவாக்க அரசியலை மேற்கொள்கின்றன என்பது பற்றியும் பேசுகின்றன. அதேவேளை ஈழத்தமிழ் மக்களது அரசியல் மற்றும் புலமை வறுமையைப் பயன்படுத்திக் கொள்ளும் பல்தேசியக் கம்பனிகள்சார் கல்விமுறை, அதனை உலக வங்கி முதலியவற்றின் துணையோடு மேலும் வலுப்படுத்தி மேற்குலகிற்கான சமகாலக் கூலிகளை உற்பத்தி செய்யும் ஒன்றாகத் தொடர்ந்து நடுவு செய்து வருகிறது. மேற்படி நிலவரங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் உளவியலின் பரந்துபட்ட வியூகங்கள் பற்றிய எதிர்வினைகளையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. பாரிய இனவழிப்புகளின் பின்புலத்தில் மரபுரிமைப் புலத்தில் உருவாகி வரும் வன்செயல்கள், இருண்ட மரபுரிமைகள், இனப்படுகொலை அருங்காட்சியகங்கள் பற்றிய அறிமுகத்தை – முதன்மையை தமிழ்மொழி வாயிலாக இக்கட்டுரைகள் உரையாடல் தளத்திற்கு எடுத்துவருகின்றன.
பாகம் இரண்டிற்கான முன்னுரை
இரண்டாம் பாகமாக இந்நூலில் அமையும் பகுதியில் இடம்பெறும் கட்டுரைகளது பிரசுரத்திற்குக் காரணமாக இருந்த உதயன் பத்தரிகையைச் சேர்ந்த பிரபா, தினக்குரலில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த காலஞ்சென்ற பாரதி அண்ணர், தினக்குரலோடு அப்போது என்னைப் பிணைத்துவிட்ட சர்வானந்தா அண்ணர் ஆகியோருக்கும், பின்னர் அதன் தொடர்ச்சியை எழுநாவூடாகக் கொணர்ந்த நண்பர் சசீவனுக்கும் எனது முதல் நன்றிகள். அது நூலருக்கொள்கையில் மீண்டும் சசீவனுக்கும், கோபிநாத்துக்கும் எனது விசேட நன்றிகள். எழுநா இந்த நூல் முயற்சியை எடுக்காது இருந்திருந்தால் அது நூலுருக் கொண்டிருக்குமா எனத் தெரியவில்லை. கோபி, என் பழைய நூலும் பின்னைய எழுத்தோடு இணைந்து வருதலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கொண்ட கரிசனைக்கு மிகவும் நன்றி. எழுநாவைச் சேர்ந்த கபில், தர்சி, தாரணி, பவித்திரா முதலியோருக்கும், நூல் உருவாக்கத்தில் உதவிய சப்னா இக்பாலுக்கும், என்னுடைய இளம் நண்பர்களான நீக்கலஸ், திலக்சன், ஒஸ்ரின் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
இந்த இரண்டாம் பாகக் கட்டுரை ஒன்றிற்காக தபால் மூலமாகக் கிடைக்கப் பெற்ற பாராட்டுரை ஒரு விசேட பரிசு. சமூகத்தின் மூத்த பிரஜையொருவர் அதனை எழுதியிருந்தார். பின்னர் எழுநாவில் மின்வலையில் வந்தபோது சில கட்டுரைகளை ஆயிரக்கணக்கானோர் வாசித்திருக்கக் கண்டேன்; அதிசயமாக இருந்தது. வாசகர்களுக்கும் என் நன்றிக் கடப்பாடு. மரபுரிமை தொடர்பில் உரையாடப்பட வேண்டிய பல விடயங்களைக் கட்டுரைகள் உரையாடுகின்றன. ஆதலால் இங்கு பேச அதிகமில்லை.
பா. அகிலன்
71/2 கச்சேரி - நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
12.07.2025