மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கூலிவேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் ‘மலையகத் தமிழர்’ எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும், மீட்டல் செய்வதாகவும் ‘மலையகம் 200’ நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் ஏழு கட்டுரைகள் ‘இரு நூற்றாண்டு மலையகம்: வலியும் வாழ்வும்’ எனும் தலைப்பில் நூலாக வெளியாகின்றது.
'மலையகம் 200 என்பது, வெறுமனே நினைவுகூரப்பட வேண்டியதொரு நிகழ்வன்று. இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் தம்மை உரமாக்கி, இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய இலங்கை, மலையக மக்களின் ஒடுக்குதல் மிகுந்த நீண்ட வரலாற்றின் சாட்சியமே இந்த மலையகம் 200 ஆகும்.
இந்த இருநூறு வருட வரலாற்றில் (1823 - 2023) ஒரு மக்கள் சமூகத்தின் துயரம் நிறைந்த, வரலாற்றுப் பங்களிப்புமிகு காலகட்டத்தின் ஒவ்வொரு கணமும், அழியா ஆவணங்களாகவும் அம்மக்களின் வாழ்வில் நம்பிக்கையான மாற்றங்களைக் கொணர்ந்து சேர்க்கும் அர்த்தமிகு பணியாகவும் பரிமாணம் கொள்தலே தகும்.
மலையக மக்களின் வியர்வையாலும் உழைப்பினாலும் பெறப்பட்ட நிதி மூலதனேமே, இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் தொடக்கம் உள்ளக கட்டுமானங்கள், அபிவிருத்தி வரை பல்லாண்டுகளாக முக்கிய பங்களித்திருக்கிறது. இந்த உண்மையின் வழியாக, இலங்கை வாழ் மலையக மக்களுக்கு, இலங்கையைச் சேர்ந்த அனைத்து மக்களும் கடனாளிகளே! இந்த உண்மையை அறியாது, அல்லது புரிந்தும் புரியாமலும் இன்னும் இலங்கைச் சமூகங்கள் இருப்பது வெட்கக்கேடானது. மிகக் கௌரவமாக வாழ வேண்டிய இலங்கை மலையக மக்கள், மிக மோசமாக ஒடுக்கப்பட்டுள்ளதோடு, அம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பன மறுக்கப்பட்டும் உள்ளன என்பது ஒரு செய்தியன்று. இந்தக் கறுப்பு வரலாற்றின் துயரார்ந்த பக்கங்களில் இதுவும் ஒன்று.
கலை, பண்பாட்டு அமைப்பு எனும் வகையில் ‘விம்பம்’ இலங்கை மலையக மக்களின் துயரில் தன்னை ஒன்றித்து, அம் மக்களின் மீதான அனைத்து ஒடுக்குதலுக்கும் எதிராக தன்னை வெளிப்படுத்தும் வகையில், 'மலையகம் 200 - கடந்து வந்த காலமும், காலூன்றி நிற்கும் நிலமும், அந்த நிலத்தின் வலியும் வாழ்வும்’ எனும் கருப் பொருளில் சிறுகதை, ஓவியம், கட்டுரைப் போட்டிகளை நடாத்த முன்வந்தது.
2019 ஆம் ஆண்டில், 'விம்பம்’ இலங்கையில் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியை நடாத்தி, பருத்தித்துறை, ஆனைக்கோட்டை, தெல்லிப்பழை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய இடங்களில் இந்த ஓவியங்களை முன்னிறுத்தி, கண்காட்சிகளையும் நடாத்தியது. இந்த முயற்சிக்கு சமூக சக்திகள் தந்த ஆதரவும், இளம் தலைமுறை மாணவர்களது ஈடுபாடும், ‘மலையகம் 200’ இற்கான சிறுகதை, ஓவியம், கட்டுரைப் போட்டிகளை நடாத்த உந்துதலைத் தந்தன.
விம்பத்தின், ‘மலையகம் 200’ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட எமது முன்னெடுப்புக்கு, 184 ஓவியங்கள் 61 சிறுகதைகள் 46 கட்டுரைகள் வந்து சேர்ந்திருந்தன. இதன் வழியாக போட்டிக்கு வந்திருந்த படைப்புகளும் எழுத்துகளும் மலையகம் 200 வரலாற்றுக்கும் அம்மக்களின் துயரத்திற்கும் சாட்சியமாகவும், அதன் ஆன்மாவாகவும் பிரதிபலித்தன. இதனை, எமது இந்த முயற்சிக்குக் கிடைத்த பெறுபேறாகவே நாம் காண்கிறோம். அந்தவகையில் கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கட்டுரைகளும், ஆறுதல் பரிசைப் பெற்ற கட்டுரைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கட்டுரைகளும் ‘எழுநா’ இனால் தொகுக்கப்பட்டு இங்கு நூலாக்கம் பெறுகிறது.
விம்பத்தின் இந்தப் பணிக்கு பக்கபலமாக இருந்து பங்காற்றிய அனைவருக்கும், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் தோழமையும் நன்றிகளும்.
‘விம்பம்’ சார்பாக,
கே. கே. ராஜா,
இலண்டன்.