நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக்கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம்பெற்ற இந்நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவுவகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இந்நூல் ஆராய்கின்றது.
நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படி நூல் எழுதப்பெற்றதாக அறியமுடிகின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற நூலாகையால் இலங்கை, இந்திய நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவுவகைகள், குறிப்பாக மிளகாய், புகையிலை, கொய்யா என்பவை பற்றியும் இந்நூலில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
யாழ்ப்பாணத்து செகராசசேகரமன்னன் காலத்தில் ஆக்கப்பெற்ற இரசவர்க்கம் என்னும் நூல் முழுமையாக இன்னமும் கிடைக்கவில்லை என்பதை ஏற்கனவே அறியத்தந்துள்ளேன்.
அதேசமயம் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப்பொருள்களின் குணங்கள் குறித்துப்பேசும் பதார்த்த குணம் என்னும் பழம்பெரும் நூலும் கிடைக்கவில்லை. எனினும் பதார்த்த குணம் என்னும் நூலில் இருந்து கிடைத்த பாடல்களை ஆதாரமாகக்கொண்டு யாழ்ப்பாணத்தில் பதார்த்த சூடாமணி என்னும் நூலும் இந்தியாவில் பதார்த்தகுண விளக்கம், பதார்த்தகுண சிந்தாமணி ஆகிய நூல்களும் பிற்காலத்தவரால் ஆக்கப்பெற்றன. இவை பிற்காலத்தில் ஆக்கப்பெற்றுள்ளன என்பதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போரால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய் (Chili Pepper), பறங்கிப்பூசணி (Pumpkin), உருளைக்கிழங்கு (Potato), தக்காளிப்பழம் (Tomato) உட்பட பல்வேறு உணவுவகைகள் மேற்படி நூல்களில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இன்று தமிழ் மக்களின் உணவுத்தயாரிப்புகளில் தவறாமல் இடம்பிடித்துக்கொள்ளும் மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வத்தாளங்கிழங்கு என்பவற்றின் பெயரைக்கூடப் பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவற்றைத்தவிர கோவா, புறொக்கோலி, கரட், பீற்ரூட், கோலிபுளவர், லீக்ஸ் என்பவையும் எமக்கு அந்நியரால் அறிமுகப்படுத்தப்பட்டவையே என்பதை அவற்றின் பெயர்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் கவிதை வடிவிலான பதார்த்த சூடாமணியில் கூறப்பட்டுள்ள உணவுகளின் குணங்கள் பற்றி இத்தொடரில் ஆராயப்படுகின்றது. அவசியமான இடங்களில் பிற தமிழ் மருத்துவ நூல்களில் இருந்தும் ஒருசில பாடல்கள் தரப்படுகின்றன.