இந்நூல் இலங்கைத் தீவுக்கே உரித்தான பூர்வகுடிகள் பற்றிய ஆய்வுப் பெட்டகமாகும். தீவின் கிழக்குக் கரையோரமாக தற்காலத்தில் வாழ்கின்ற தொட்டுணரும், பார்த்துணரும் சாட்சிகளான தமிழ் பேசும் கடலோர வேடர்களின் பாண்பாட்டு அசைவியக்கங்கள், மரபார்ந்த செயன்முறைகள், சடங்கார்ந்த நடவடிக்கைகள், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள், அவர்களுக்கே உரிய நிகழ்த்து கலைகள், எதிர்கொண்டிருக்கும் காலனியச் சிக்கல்கள், மொழியின் பயன்பாடுகள், அவர்தம் வழிபாட்டின் குணமாக்கலும் அழகியலும் முதலான விடயங்கள் தகுந்த ஆதாரங்களுடன், உள்ளிருந்து மரபு மீட்கும் செயற்பாடாக ஆய்ந்தறிந்து இங்கே படைக்கப்பட்டுள்ளது.
மா கஜமா கொந்தமாய்!
இன்றைக்கு சுமார் 28,000 வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கைத் தீவில், பூர்வ குடிகளான வேடர்கள் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்களை இன்றைய ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கையின் தமிழ், சிங்கள மக்களை விடவும் வேட்டுவ மக்கள் இந்தியாவின் பிரதான ஐந்து பழங்குடிகளுடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வொன்றில் கூட வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவின் ஒடிசாவிலுள்ள சந்தால் மற்றும் ஜீவாங் பழங்குடியினருடனும், தமிழ் நாட்டின் இருளர், பணியர், பள்ளர் முதலான பழங்குடியினருடனும் வலுவான மரபணு ஒற்றுமையைப் பேணுவதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வகையான பண்பாட்டுப் போக்குகளை உடைய வேடர்கள் இலங்கையின் கிழக்குப்பக்கம் தமிழ் பேசும் வேடர்களாகவும், தென்னகத்தே சிங்களம் பேசும் வேடர்களாகவும் தற்காலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கே உரித்தான வேட மொழியானது தற்காலத்தில் அவர்களின் சடங்கு முறைமைகளுடன் மட்டும் குறுகியுள்ளது. இலங்கையில் வேடர் என்றாலே அவர்கள் சிங்கள மொழியை மட்டும் பேசுகின்ற மகியங்கனை, தம்பானை முதலான கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் மாத்திரம் தான் என்ற எண்ணப்பாடும், கொத்தும் குலையும் கட்டிய வில்லம்புடனான உருவவுமே பலரது நினைவிலும், அறிவியக்கத்திலும் இன்றுவரை உண்டு.
இன்று, இலங்கையின் கிழக்குக் கரையோரமாகவும் தமிழ் பேசும் கடலோர வேடர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கும் தனித்துவமான வாழ்க்கை முறைகள், மரபார்ந்த இயக்க நிலைகள், சடங்கார்ந்த செயன்முறைகள் உண்டு என்பதை அறிவுப்புலத்தில் பதிவு செய்வதாகவே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலைச் (எனது) சமூகமொன்றில் உள்ளிருந்து மரபு மீட்கும் முயற்சியாகவே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. எனது அரங்கக் கற்கையும், அதனூடாக முகிழ்ந்த சிந்தனைப் போக்குகளும், செயற்பாடுகளுமே வேடர் (எனது) இனக்குழு சார்ந்த மானிவிடயல் புலத்தினுள் என்னை நகர்த்தின.
தற்போது கிழக்கிலங்கையில் சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் கலப்புற்றும், கலப்புறாமலும் வாழும் தமிழ் பேசும் வேடர்களுடனான நெருக்கமான ஊடாட்டங்கள், அனுபவப் பகிர்வுகள், சடங்கு நடவடிக்கைகள், தொழில்முறை நடவடிக்கைகள் முதலான சகல களச் சந்திப்புகளின் சாரமும், அவற்றுள் காணப்பட்ட ஆற்றாமையுமே இந்நூலினைப் படைப்பதற்கான சிறந்த அனுபவங்களைக் கொடுத்தன.
இலங்கையின் கிழக்கு மாகாணமானது, வேடர்கள் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்பு, திருகோணமலை முதலான மாவட்டங்களையும் நாட்டாரியல், சமூகவியல், மானிடவியல், இனவரைவியல் முதலான ஆய்வுகளுக்கான வெளிகளையும் உள்ளடக்கிய எல்லையில்லாச் சுரங்கம் ஆகும். ஆனால் இற்றைவரைக்கும் நத்தை வேகத்திலேயே மேற்சொன்ன ஆய்வுப் பரப்புகள் நகர்கின்றமை கவலைக்குரியது. இவ்வாறான ஆய்வுகளுக்கான ஏராளமான தொட்டுணரும் சான்றுகளும், விடயப் பரப்புகளும் கடலோர வேடர்களிடம் உண்டென்பதற்கான ஓர் வலுவான நம்பிக்கையை இந்நூலைத் துய்ப்போர் பெற்றுக்கொள்ள முடியும்.
1911 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரைக்கும் பலதரப்பட்ட நூல்கள் இலங்கை வேடர்கள் பற்றி வெளிவந்திருந்தாலும் அவை நுணுக்கமான கள ஆய்வு கொண்டதாகவோ, நடைமுறைசார் வேடர் பண்பாட்டு அசைவியக்கங்களாகவோ இருக்கத் தவறியுள்ளன. அவ்வாறான பல ஆய்வுப்புலத் தவறுக்கு ஈடுகொடுப்பதாகவே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் பேசும் கடலோர வேடர் சமூகம் சார்ந்து வெளிக்கொணரப்படாத அல்லது கணக்கில் எடுக்கப்படாத சகல விடயங்களும் இச்சிறு பனுவலில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்நூலிற்கு மிகத்திறமான அணிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கிய பேரா.சி. மௌனகுரு, முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோருக்கும், சமூகச் செயற்பாட்டாளர் கணேசானந்தன் சசீவன் அண்ணாவிற்கும், எழுநா குழுமத்திற்கும், இலங்கை நூலக நிறுவனத்தினருக்கும், என்னை இவ்வுலகிற்குத் தந்த என் தாய் தந்தையருக்கும், என்னைச் சகலவிதத்திலும் நகர்த்திக் கொண்டிருக்கும் என் துணைவிக்கும், எனது களப் பயணங்களில் சகல விதத்திலும் பேருதவியாய் இருந்த என் நண்பன் மு. அரிதரனுக்கும், குவேனி பழங்குடி அமைப்பினருக்கும், எனது பாடசாலை ஆசிரியர்களுக்கும், எனது விரிவுரையாளர்களுக்கும், என்றும் என்னை வழி நடத்தும் சகல உத்தியாக்களுக்கும் எனது மனமுவந்த நன்றியும் அன்பும்.
க. பத்திநாதன்
களுவன்கேணி,
மட்டக்களப்பு,
இலங்கை.
ஆவணி - 2024
இலங்கை வேடரின் இன்றைய இனவரைவியல்
முன்னியம்பல்
கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்கிலங்கை வேடர்கள் பற்றிய தம் நூலை நம்வசப்படுத்தியிருக்கிறார். அந்நூலின் தலைப்பு ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ என்பதாகும். இவர் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பயின்றவர். அங்கு நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமாணி சிறப்புப்பட்டம் பெற்று தற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர்.
தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி ஆய்வு மாணவராக உள்ளார். இவர் கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். பல்துறை ஆர்வங் கொண்டவர். தொடர்ந்து வேடர் மானிடவியலை எழுதி வருபவர். அகத்தாராக நின்று எழுதுவது இவரின் தனிச்சிறப்பாகும். அகவயப் பார்வையும், பண்பாட்டு அடுக்குகளின் உள்ளே நின்று பொருள் காண்பதும், நுட்பமான எடுத்துரைப்பும் இவரது தனிச் சிறப்புகளாகும்.
மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், ஆய்விதழ்கள், மாநாடுகளில் வேடர் சமூகத்தின் சடங்கு, வரலாறு, வாய்மொழி இலக்கியம், பண்பாடு, நிகழ்த்து கலைகள் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். இவர் இலங்கை நூலக நிறுவனத்தில் பூர்வ குடிகள் ஆவணமாக்கல் செயற்றிட்டத்திலும் கள ஆய்வாளராகக் கடமையாற்றிவர். இவர் பல குறுநாடகங்கள் மற்றும் நெடுநாடகங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். அவ்வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர்.
இலங்கை வேடர்
மனித குலத்தின் தொல்குடிகளில் இலங்கை வேடர்களும் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இணையாகப் பண்டைத் தமிழகத்தில் வேட்டுவர் (வேடர்), கானவர், குன்றக் குறவர், கானக் குறவர் போன்றோர் அறியப்பட்டனர். பாலைத் திணையில் வாழ்ந்த எயினர்களும் அடிப்படையில் வேடர்களே. குறிஞ்சியும் முல்லையும் திரிந்ததால் பாலை ஏற்பட்டது. குறிஞ்சியில் குறவர்கள் பேசிய குறமொழியே தமிழின் முதல் கிளைமொழியாகும். இலங்கை வேடர்களின் மொழியும் ஒரு தொல் கிளைமொழியாகும். மேற்கூறிய இந்தத் தொல்குடிகளின் பண்பாடே ஆதிப் பண்பாடு.
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும், இலங்கையும் தனித்தனி நாடுகளல்ல. தொடர்ச்சியான நிலப்பகுதியாகவே இருந்தன என்கிறார் தொல்லியல் அறிஞர் தெரணியகல. முன் வரலாற்றுக் காலத்தில் (Prehistoric period) மண்ணியல், புவியியல், கற்காலக் கருவிகள், இரும்பின் பயன்பாடு, சிந்துவெளிக் குறியீடுகள், எழுத்தின் தோற்றம், கல்வெட்டுகள், தொல்குடி வாழ்வியல் என அனைத்திலும் தமிழகமும் இலங்கையும் ஒன்றாகவே இருந்துள்ளன.
இனவியலும் இத்தகைய சூழலையே காட்டுகிறது. தென்கிழக்காசியாவின் இனவியல் தொடர்ச்சி (Cline) ஆஸ்திரேலியா வரை நீண்டு செல்கிறது. இதனை நாம் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும். மத்திய ஆசியா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஹோமோ சேப்பியன்ஸ் கடலோரமாக நடந்து இந்தியா, இலங்கை ஊடாக ஆஸ்திரேலியா வரை சென்றடைந்தனர். இன்றைய மரபணு ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன.
பிரெஞ்சு மானிடவியல் அறிஞர் லூயி துய்மோன் (Louis Dumont) காட்டும் ஒப்பீடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆஸ்திரேலியாவில் வாழும் தொல்குடியான கரைரா (Kareira) மக்கள் இலங்கை, தென்னிந்தியத் தமிழர்கள் கொண்டுள்ள திராவிட உறவுமுறையைக் கொண்டுள்ளனர் என்கிறார்.
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சிந்துவெளி வாழ்விடமாகிய ராக்கிகடியில் கிடைத்த மரபணுவும், தமிழக நீலகிரி மலையில் வாழும் இருளர் தொல்குடியின் மரபணுவும் ஒன்றாக இருப்பது இன்னுமொரு வியப்பு. இதே மரபணுக்களின் தொடர்ச்சி இலங்கை வேடர்களின் ஊடாக ஆஸ்திரேலியத் தொல்குடிகள் வரை தொடர்கிறது. இந்த இனவியல் தொடர்ச்சியை இலங்கைப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அண்மையில் (2024) கண்டறிந்துள்ளனர் (காண்க: மட்டக்களப்பு நூலிலுள்ள பக்தவத்சல பாரதியின் கட்டுரை).
ஒவ்வொரு தேசத்தின் பண்பாடும் அதன் தொல்குடிகளிடமிருந்தே தொடங்குகிறது. நம்முடைய இன்றைய நாகரிக வளர்ச்சி என்பது மண்ணுக்கு மேல் நிற்கும் பூத்துக் குலுங்கும் அழகான மரம் போன்றது. ஆனால் அது மண்ணுக்கடியில் நான்கு திசைகளிலும் பரவியுள்ள வேர்களால் நிற்கிறது. வேரின்றி மரமில்லை. இலங்கையைப் பொறுத்தவரை நாகர்களும் இயக்கர்களும் தொல்குடிகள். ஆனால் அவர்கள் யாரும் இன்றில்லை. இவர்களின் வம்சாவளியாக வேடர்கள் வருகிறார்களா என்பது நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றிய மரபணு ஆய்வு முடிவுகள் நம்மிடமில்லை. ஆகவே இன்றைய தொல்குடிகள் வேடர்கள் மட்டுமே. இவர்களைக் கொண்டே வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும்.
வேடர்களும் இயற்கையும்
பாரம்பரியமான தொல்குடி வாழ்வு இயற்கையைத் தன்வயப்படுத்திக் கொண்ட ஒன்றாகும். இயற்கையும் பண்பாடும் ஒன்றையொன்று பரஸ்பரம் சார்ந்து தகவமைந்து கொள்கின்றன. வேடர்கள் எவ்வாறு தம் பண்பாட்டுச் சூழலியலைக் கட்டமைத்துள்ளனர் என்பதைப் பத்திநாதன் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார். இது ஓர் அகவயமான புரிதலாகும். ஒரு தேர்ந்த சூழலியல் வாசிப்பு நம் வசப்படுகிறது. சூழல்சார் இன வரைவியலாகவும், பண்பாட்டு உயிரியலாகவும் இந்த எடுத்துரைப்பு மிளிர்கிறது.
இயற்கைக்கும் பண்பாட்டுக்குமான ஊடாட்டமே வாழ்வாதாரத்தின் அடிப்படை. இதனைப் பத்திநாதன் வேடர் இனவரைவியல் மூலம் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். குறிப்பாக குருவிச்சை, ஒல்லித்தாவரம், சாத்தாவாரி (தண்ணீர்விட்டான் கிழங்கு), காஞ்சிரம் பழம், பக்கிளிய மரம், உளுமுந்தம் (தேனீக்களை மயக்கமுறச் செய்வது), காரை இலை, பிரண்டை, மோதிரக்கன்னி, தண்ணிக்கொடி, லாக்கடைப் பழம், நுரைப்பழம், தண்ணிச்சோத்துப் பழம் முதலானவை வேடரின் வாழ்வியல் அறிதிறனில் முக்கிய பயன்பாட்டைக் கொண்டவை. இவையனைத்தையும் பத்திநாதன் பண்பாட்டுச் சூழலியலாக உணர்ந்து, பகுத்து, எடுத்துரைக்கிறார். இது ஓர் அகவயமான தேடுதலாகும். வேடர் பண்பாட்டின் அறிதிறனைக் (Cognition) காட்டுவதாகும். இவற்றையெல்லாம் பத்திநாதன் ஒரு தேர்ந்த இனவரைவியலாகக் காட்சிப்படுத்துகிறார்.
வேடரும் காலனியமும்
காலனியமானது மைய நீரோட்டத்தையே அதிகம் பாதித்தது என எண்ணுகிறோம். உண்மையில் தொல்குடிகள் வாழும் மலைகள், காடுகளைக் காலனியம் ஆக்கிரமித்துக் கொண்டது. வேடர்களின் வாழ்வு ஒளியிழந்து, பொலிவிழந்து வாடிவிட்டது. பல நூறு ஆண்டுகளாக நிலவிவரும் வங்குரோத்து அரசியலைப் பத்திநாதன் தன் பார்வையிலும், பட்டாங்கட்டிகள் பார்வையிலும், குஞ்சப்பா போன்ற பண்பாட்டுப் பேணுநர் (Culture bearer) வழியிலும் பேசுகிறார். வேடர்களின் இயற்கை சார்ந்த அறம், வாழ்வியல் சார்ந்த அறம் பற்றிப் பேசும் இடங்கள் உன்னதமானவை.
கிழங்கு வகைகள் முதல், மீன் வகைகள் வரை இயற்கையை எவ்வாறு துய்க்க வேண்டுமென்ற சொல்லாடல் நமக்கெல்லாம் மிகச்சிறந்த படிப்பினைகள் ஆகும். பத்திநாதன் தன் அகக்குரல் வழி வேடர்களின் இனவரைவியல் அறத்தைப் பேசுகிறார். காலனியத்தின் பாரதூரங்களையும் நில ஆக்கிரமிப்புகளையும் உள்ளார்ந்த நிலையில் விவாதித்துள்ளார். தொல்குடிகளின் துயரங்களையும் அடையாள இழப்பையும் பின்காலனியப் பார்வையில் பேசுகிறார். இந்த விவாதங்கள் வேடர்களின் அடையாளச் சிக்கலையும், வாழ்வியல் நெருக்கடிகளையும் மிக நுணுக்கமாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தேசத்தைக் கட்டமைப்பதில் இன்று தொல்குடிகள் விளிம்பில் வைக்கப்படுவதன் அவலத்தை வேடர்கள் வழி உரையாடுகிறார்.
வேடர் அடையாளங்கள்
வேடர்களின் மொழி பற்றியும் பத்திநாதன் இந்த நூலில் ஒரு தனி அத்தியாயத்தில் கவனப்படுத்துகிறார். 1911 ஆம் ஆண்டு தொடங்கி வேடர்களின் மக்கள் தொகை எவ்வாறு ஏற்ற இறக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டது எனும் வரலாறு ஆர்வமூட்டுகிறது. ஆதியில் வேடர் மொழி பல தனித்துவங்களைக் கொண்டிருந்தது. ஒரு கிரியோலாகவும் காணப்பட்டது. காலகதியில் வேடர்கள் தமிழ்ப் பிரதேசங்களை அண்டி வாழ்ந்த காலத்தில் தமிழின் தாக்கத்தையும், சிங்களப் பிரதேசங்களை அண்டி வாழ்ந்ததால் சிங்களத்தின் தாக்கத்தையும் ஏற்றுக்கொண்டனர். இன்று இலங்கை நெடுகிலும் ஏறக்குறைய 40,000 வேடர்கள் இருப்பதாக ஒரு மதிப்பீடு உள்ளது. குடிமதிப்பு எடுக்கும்போது பலர் தம்மைச் சிங்களராகவும், தமிழராகவும் அடையாளங் காட்டிக் கொண்டதால் தூய வேடர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. பத்திநாதன் இதன் பின்னால் இயங்கிவந்துள்ள அடையாள இழப்புகளை நன்றாகவே விவாதித்துள்ளார். வேடர்களின் மொழி வரலாற்றையும் பேசியிருக்கிறார். மொழி வரலாற்றில் இந்தப் புரிதல் மிக முக்கியமானதாகும்.
பின்காலனிய இனவரைவியல்
இந்த நூலின் முதன்மையான பங்களிப்பு வேடர் இனவரைவியலாகும். வேடர் மானிடவியலுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. செலிக்மென் இணையர்கள் தொடங்கி காலனி இனவரைவியலாளர்கள் வரை அந்த வரைவுகள் பொதுப் புரிதல்களை விரிவாக்கின. பின்னர் கல்விப் புலம் சார்ந்த எழுத்துகள் வெளிவந்தன. இவை யாவும் புறவய முறையியல் சார்ந்தவை என்பதை நாம் அறிவோம்.
இன்றைய இனவரைவியல் என்பது பின்நவீனத்துவ இனவரைவியலாகும். இன்றைய அறிவுச் சூழலில் இது 'பண்பாட்டை எழுதுதல்' என்றே அணுகப்படுகிறது. பண்பாட்டை எழுதுதல் என்றால் என்ன? நிதியுதவி செய்யும் நிறுவனத்தின் தேவைக்காகப் பண்பாட்டை எழுதுவதா? ஆய்வாளர் உயராய்வுப் பட்டம் பெறுவதற்காக எழுதுவதா? மக்கள் நலனுக்காக எழுதுவதா? அரசுக்கும், அரசியல் சூழலுக்கும் ஏற்ப சார்ந்து எழுதுவதா? இத்தகைய இன்னும் சில கேள்விகளும் உள்ளன.
இவையனைத்திற்கும் மேலாக 'இனவரைவியல் வரைவு' என்பது நூறு வீதம் இனவரைவியலரின் எழுத்தாக இருக்கக் கூடாது. ஒரு பகுதி மட்டுமே ஆசிரியரின் எழுத்தாக இருக்க வேண்டும். மறுபகுதி மக்களின் குரலாக இருக்க வேண்டும். நூல் நெடுக ஆங்காங்கு தகவலாளிகளின் 'அகக் குரல்' ஒலிக்க வேண்டும். பண்டைய நாட்களில் இனவரைவியல் எழுதுவதன் மூலம் நூலாசிரியர் முழு அதிகாரம் பெற்றவராக விளங்கினார். ஆனால் இன்றைய பின்நவீனத்துவ இனவரைவியலில் நூலாசிரியராகிய ஆய்வாளர் 50 வீதம் அதிகாரத்தையே பெற முடியும். மறு பகுதியாகிய 50 வீதம் தகவலாளிக்கும் பயன் கிடைக்க வேண்டும். இரு தரப்பாரும் ஆசிரியராக வேண்டும். நூலட்டையில் அல்லது ஆய்வு அறிக்கையில் ஆய்வாளரின் பெயர் இருக்கும். தகவலாளிகளின் பெயர்கள் இருக்காது. ஆனால் அவர்களும் நிழல் ஆசிரியர்களாக விளங்குவார்கள். இதுவே பின்நவீனத்துவ இனவரைவியலின் சித்தாந்தம்.
பத்திநாதன் எழுதியுள்ள இந்த வேடர் இனவரைவியல் முழுக்க முழுக்க ஓர் பின்நவீனத்துவ இனவரைவியல். ஆய்வாளரும் இவரே, அகத்தாரும் இவரே. ஒவ்வோர் இயலிலும் தகவலாளிகளின் குரலை மிகப் பொருத்தமாக இந்தப் பனுவலில் நெசவு செய்திருக்கிறார். இது நிதியுதவி செய்தவருக்கோ, கலாநிதி பட்டம் வாங்குவதற்கோ, இன்ன பிற காரணங்களுக்கோ எழுதப்பட்டதல்ல. வேடர் சமூகத்தையும் பண்பாட்டையும் அவற்றின் இயல்பில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்டதாகும். வேடர்களைப் பற்றி அகத்தாரே எழுதிய முதல் இனவரைவியல் 'உத்தியாக்கள்' தான்.
இது ஒரு சுதேசி இனவரைவியல். தன்னளவில் எதற்கும் சார்பற்றது. இதில் அகவயப் பார்வையும், ஆய்வுப் பார்வையும் இணைந்துள்ளன. வேடர் பண்பாட்டை மொழிபெயர்த்ததாக அமைகிறது. இது ஒரு பண்பாட்டு மொழிபெயர்ப்பு. பக்கச் சார்பில்லாதது. இன உயர்வுவாதம் அற்றது. எழுத்தில் துல்லியத்தன்மை உள்ளது. மக்களின் மன உணர்வுகள் மெய்ப்பாடுகள் போல வெளிப்படுகின்றன. பண்பாட்டின் எண்ணக் கருக்கள் இந்தப் பனுவலில் ஊடாட்டம் நிகழ்த்துகின்றன. எடுத்துரைப்பின் சொல்லாடல்கள் நிகழ்த்து கலை போல் நம்முன் காட்சிப்படுகின்றன. இந்த இனவரைவியலில் எழுத்தும் காட்சிகளும் கலந்தே பயணிக்கின்றன. இது ஒரு தனிச்சிறப்பு எனலாம்.
வேடர் இனவரைவியல்
இனி இந்த இனவரைவியலின் முக்கியமான உள்ளடக்கம் பற்றிக் கவனிக்க வேண்டும். வேடர்களின் குடிவழமைகள், சடங்காற்றுகைகள், வழிபாட்டு முறைமைகள், சடங்குகள் மூலம் குணமாக்கல், சடங்குகள் வழி உருவாகும் உளவியலும் அழகியலும், நிகழ்த்து கலைகள் முதலானவை இந்நூலின் பேசுபொருளாகும். இந்த எடுத்துரைப்பியல் தென்கிழக்காசிய இனவரைவியலில் ஒரு புதிய வரைவாக நமக்கு வசப்பட்டுள்ளது. வேடர்கள் எனும் ஒரு தொல்குடி வாழ்வியலிலிருந்து விவாதிக்கப்படும் இந்த விடயங்கள் உண்மையிலேயே மிகவும் பெறுமதியானவை. பத்திநாதன் இந்த வரைவினை மிகுந்த நுட்பங்களுடன் அணுகியிருக்கிறார். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நூலினை வாசித்தால் முழுமையை அடையலாம்.
மனித குலத்தின் அதீத படைப்பே பண்பாடு. இது உயிருள்ளவற்றாலும் (மக்கள்), உயிரல்லாதவற்றாலும் (மக்களைத் தாண்டிய அனைத்தும்) பின்னிப் பிணைக்கப்பட்டது. மனித உடல் என்பது ஓர் உயிரி. ஆனால் இதனுள் கற்பிக்கப்பட்டுள்ள 'மனம்' என்பது உயிரல்லாதது. உயிருள்ள ஒன்றாலும் உயிரில்லாத பிற கூறுகளாலும் ஆக்கப்பட்டதே பண்பாடு. இப்பின்னணியில் மனிதர்களுக்கு உருவாகும் நோய்களை எல்லா சமூகத்தாரும் உயிரியல் ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் அணுகி நோய்களைக் குணக்குமாக்குகின்றனர்.
உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பண்பாட்டு ரீதியில் குணமாக்குதல் என்பது மனித சமூகம் கண்டுபிடித்துள்ள ஒரு பெரிய அறிவுக் கலையாகும். இதனை வேடர் சமூகத்திலிருந்து விளக்கிப் பேசுகிறார் பத்திநாதன். வழிபாடுகள், சடங்காற்றுகைகளை இயற்றுதல், கலையாடல், வாக்குரைத்தல், பேயோட்டுதல், கழிப்புச் சடங்கு செய்தல், பரிகாரம் செய்தல் முதலான இன்ன பிற வழமைகள் மூலம் அதியுச்ச உள நெருக்கடிகள் தீர்க்கப்படுகின்றன. இவற்றைப் பூசாரிமார், கப்புறாளைமார், கலையாடுவோர், பரியாரிமார், பேயாடுவோர், கட்டுச் சொல்வோர் முதலானவர்கள் செய்வதை ஓர் அடர் வரைவியலாகப் பத்திநாதன் பேசுகிறார். இதன்மூலம் ஒரு பெறுமதியான புரிதலை வழங்குகிறார்.
வேடர்களின் உத்தியாக்கள் (முன்னோர்கள்) வழிபாடும், குமாரர் வழிபாடும் மிகத் தொன்மையானவை. இவற்றின் மூலம் வேடர்கள் செய்யும் நோய் குணமாக்கல் என்பது வேடர்களின் ஆதிப்பண்பாட்டை விளக்கும் அம்சங்களாகும். இவற்றை சமகால வெளிச்சத்துடன் மிக விரிவாகத் துலங்கப்படுத்துகிறார் பத்திநாதன். இவருடைய தேர்ந்த இனவரைவியல் விவரிப்பு அறிவின் அனுபவமாக நம்மைத் தொல் பழங்காலத்திற்கு இட்டுச் செல்கிறது.
சடங்காற்றுகைகளுக்கும் நோய் குணமாக்குதல் முறைகளுக்கும் இடையே நிகழும் பண்பாட்டம்சங்கள் மிகவும் அதீதமான அறிவுக்கலை என்பதை வேடர்களின் பண்பாடு வழி கண்டோம். அவ்வாறே வேடர்கள் இயற்கையை எவ்வாறு தன்வயப்படுத்துகின்றனர் எனும் செய்முறைகள் மனிதகுலத்தின் தொல் அறிவுமுறையைக் காட்டுகின்றன.
இலங்கை வேடர்கள் இன்று வேட்டையாடுகின்றனர். தேன் சேகரித்து உண்கின்றனர். இடம்பெயரும் வேளாண் முறையில் சேனைப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடுகின்றனர். ஆக, வேட்டையாடி உணவு சேகரித்தலையும், இடம் பெயரும் வேளாண்மையையும் கொண்ட ஒரு கலப்புப் பொருளாதாரத்தைத் (Mixed economy) தம் வாழ்வாதாரமாக உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த மூன்று வகையான வாழ்வாதாரங்களை ஈட்டும் போதும் வேடர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஓர் தேர்ந்த அறிவுமுறையை கையாளுகின்றனர்.
வேடர்களின் வேட்டைத் தெய்வம் 'மாறா' ஆகும். அது ஏழு வகைப்படும். வேட்டைக்குச் செல்லும் போது இதனை வழிபட்டு அனுமதி பெற்ற பிறகே வேட்டைக்குக் கிளம்புவர். அப்போது நிகழ்த்தப்படும் புலிக்கூத்தும் அதற்கான ஆற்றுகை அம்சங்களும் இயற்கையோடு இசைதலைக் காட்டுகின்றன.
தேனெடுத்தலின் போது கரடிக்கூத்து நிகழ்த்துவது அவசியமாகிறது. இயற்கை அனைத்து உயிரினங்களுக்குமானது எனும் அறத்தை அறிதலின் ஆற்றுகை அம்சமாக கரடிக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.
சேனைப் பயிர்ச் செய்கை என்பது ஒரு புன்புல விவசாய முயற்சியாகும். காடழித்து, புனம் எரித்து, நிலத்தைப் பண்படுத்தி, பயிரிட்டு மகசூல் காணும் தருவாயில் யானைகள் சேதப்படுத்துவது வழக்கம். ஆகவே யானைகளைக் கட்டுதல் எனும் ஆற்றுகையை நிகழ்த்தி அதில் வேடர்கள் வெற்றி பெறுகின்றனர்.
மேற்கூறிய இந்த மூன்று சடங்காற்றுகைகளைப் புறத்தார் ஆய்வு செய்து கண்ட மேலோட்டமான புரிதலைப் பத்திநாதன் தன் அகவயப் புரிதலின் மூலம் கட்டுடைக்கிறார். மேலும் இந்த மூன்று வகையான ஆற்றுகைகளை தமிழ்க் காலனியம் எவ்வாறு மெல்ல உட்செரித்து விட்டது என்பதையும் மிக நுணுக்கமாக விவாதிக்கிறார். வேடர்களின் பண்பாட்டுச் சிதைவுகள் பலவற்றையும் இனங்காண்கிறார். மிகக் குறைவான புள்ளிகளை மட்டும் இங்கு நான் கவனப்படுத்தியுள்ளேன். இந்த இனவரைவியலில் நாம் தரிசிப்பதற்கு இன்னும் ஏராளமான விடயங்கள் உள்ளன.
பின்னியம்பல்
இந்த இனவரைவியலைப் 'பண்பாட்டை எழுதுதல்' எனும் இன்றைய நவீன முறையியலுடன் எழுதியிருக்கிறார் பத்திநாதன். நாகர், இயக்கர்களை விடவும் ஒரு தனித்துவமான இனக்குழுவாகப் பரிணமித்தவர்கள் வேடர்கள் என்கிறார் நூலாசிரியர். வேடர்களின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம், சிதைவு எனப் பல்வேறு அம்சங்களையும் இந்த இனவரைவியலில் நுணுகி அணுகியிருக்கிறார். தென்கிழக்காசிய இனவரைவியலில் இலங்கைத் தொல்குடிப் பண்பாட்டை அறியச் செய்யும் பத்திநாதனின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த நூலில் பத்திநாதன் விவாதித்துள்ள பல விடயங்களை வேறு எவரும் பேசவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர் ஓர் அகத்தார் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
முனைவர் பக்தவத்சல பாரதி
மேனாள் இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி.
29 - செப்டம்பர் - 2024
சமூகமயப்பட்டு முன்னெடுக்கப்படும் அறிவுருவாக்க முறைமையின் தேவை
பழங்குடிகளின் எழுச்சியும் அவர்களது அறிவு, தத்துவம் என்பவையும் உலகமயப்பட்டுக் கொண்டிருக்கும் பின்னணியில், அவர்களது வாழ்வின் அர்த்தத்தை முற்போக்கு உலகங்கள் உள்வாங்கத் தலைப்பட்டிருக்கும் சூழலில், நவீனவாதம் அல்லது நவீனமயமாக்கம் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் பேரவாவிலிருந்து விடுவித்துக் கொண்டு பல்லுயிரும் ஓம்பும் அறவாழ்வு நிழல் விரிக்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், இலங்கைப் பழங்குடிகளின் இருப்பு இன்னமும் குவேனி காலத்துச் சித்திரிப்பாகவே உள்ளும் புறமும் காணப்பட்டு வருவது சிந்திக்கப்பட வேண்டியது.
இலங்கை வேடர்கள் பற்றிய விற்பன்னர்கள் பலரது எழுத்துகள் ஆங்கிலத்திலும், தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்ப்பாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்திருக்கும் நிலையில், இவைபற்றி இலங்கை வேடர்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னமும் மிகப்பெரும் கேள்விக் குறியாகவே இருந்து வருகின்றது.
இலங்கை வேடர்கள் இன்னமும் ஆய்வுப்பொருளாகவும், காட்சிப்பொருளாகவும் கையாளப்பட்டு வருகின்றமையைக் காணமுடிகிறது. அவர்களுடனான உரையாடல்கள், பங்குபற்றல்களுடன் அவர்கள் சார்ந்த விடயங்கள் கையாளப்பட வேண்டுமென்ற அரிச்சுவடி அறிவுதானும் இலங்கைப் புலமை உலகில் இன்னமும் துளிர்விட்டதாய் இல்லை. பழங்குடி மக்களுடன் வேலை செய்வதற்கான உலகு தழுவிய நியமங்கள் இருப்பது பற்றிய அறிவை அறியாத அறிவுலகாகவே நவீன இலங்கையின் அறிவுலகம் இன்னமும் இயங்கி வருகின்றது.
நிதி வழங்குநர்களும் இவைபற்றிய கரிசனை கொண்டவர்களாக இருப்பதை அறிய முடியவில்லை. பழங்குடிகள் பற்றிய ஆய்வுகளுக்கோ அல்லது கலைப் பண்பாடு பேணுகைக்கோ அவர்களது தேவை, பங்குபற்றல் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
பழங்குடி மக்கள் எவ்வாறு தங்களது இழக்கச் செய்யப்பட்ட வாழ்வை மீட்டெடுத்துக் கொண்டும், மீளுருவாக்கிக் கொண்டும் வருகிறார்கள் என்பதை அறிவதொன்றும் இன்றைய காலகட்டத்தில் கடினமானதல்ல. எனினும் இவை பற்றிய அறிவும், அக்கறையும் அற்ற வகையிலேயே இலங்கையின் பழங்குடிகள் சார்ந்த விடயங்கள் மீதான கையாளுகை காணப்பட்டு வருகின்றது.
கல்வி, வெகுசன ஊடகங்கள் என்பவையும் இன்னமும் குவேனி காலத்து படிமங்களையே மீள் வலியுறுத்தி வருகின்றன. நவீனமயமாக்கம் என்ற காலனிய அறிவுருவாக்கத்தின் பழங்குடிகள் என்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற மேலாதிக்கப் புனைவு காரணமாக தம்மை இனங்காட்டாது உருமறைப்பு வாழ்வை வரித்துக் கொள்ளவும், அதுவே மேலான நிலை என்று நினைத்துக் கொள்ளும் வகையிலும் பழங்குடிகளின் வாழ்வு தகவமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய பின்னணியில் தமது அடையாளங்களுடன் மீளெழுவது அல்லது, மீள்வருவது என்ற அரசியல்மயப்பாடு இலங்கைப் பழங்குடி மக்கள் சமூகங்களுள் நிகழத் தொடங்கியிருப்பது கவனிப்புக்குரியது. உலக மட்டத்தில் பழங்குடிகளின் தத்துவங்களுடன் கூடிய மீளெழுகையுடன் அல்லது மீள்வருகையுடன் நிகர்த்ததாக தென்னாசியப் பழங்குடிகளுடைய அரசியல் மயப்பாடும், உரிமை எடுப்பும் இலங்கைச் சூழலில் நிகழவில்லை என்பதும் கேள்விக்குரியது.
இலங்கையின் பழங்குடிகள் தாமேயென சிங்களவர்களும், தமிழர்களும் வரலாறு உருவாக்கும் போர்க்களத்தில் பழங்குடி மக்களது உரிமைக்குரல் என்பது கண்டுகொள்ளாமல் விடுபடுவது அல்லது விலத்தி வைத்துவிடுவது அல்லது நவீனமயமாக்கத்தின் சாதகத் தன்மைகளைப் பயன்படுத்தி அவர்களை உருமாற்றம் செய்து விடுவது அல்லது தொகைத் தேவை காரணமாக தங்களது விளிம்பு வெளிகளுக்குள் ஆட்படுத்தி விடும் நிலைமைகளே வலுவானவையாக இயங்கி வருகின்றமை யதார்த்தமாக இருக்கின்றது.
இத்தகையதொரு பின்னணியில் பழங்குடி மக்கள் சார்ந்த உலக நியமங்கள் அறியப்பட்டு கடைப்பிடிக்கப்படுவதும், உள்ளிருந்து வருகின்ற குரல்களை வலுப்படுத்துவதும், அவர்கள் அவர்களுக்காக பேசுகின்ற சூழலை உருவாக்குவதும் வேண்டப்படுகிறது.
இந்தவகையில் பத்திநாதனின் எழுத்துகள் முழுவதும் உள்ளிருந்து இயங்கி எழுகின்றவையாக முனைப்புப் பெறுவது முக்கியமாகின்றது. மாறாக வெளியிருந்து அவதானித்து எழுதப்பட்டவற்றின் சில உசாத்துணைகளூடு பயணிப்பது மிகுந்த கேள்விக்குரியதும் எச்சரிக்கை கொள்ள வேண்டியதுமாகும்.
உள்ளிருந்து இயங்கி, உலகப் பழங்குடி மக்களது இயக்கங்களுடன் தொடர்புபட்டு, சமூகமயப்பட்டு முன்னெடுப்பது பொருத்தமான அறிவுருவாக்க முறையாக அமையும். இந்நூலாசிரியர் பத்திநாதனுக்கு அதற்குரிய வாய்ப்பும் தகமைப்பாடும் இருக்கின்றது.
இலங்கைப் பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து எழுந்துவரும் தங்களுடைய வாழ்வை, தங்களுடைய அடையாளங்களுடன் உரிமையாக முன்னெடுத்துவரும் போக்கிற்கு உள்ளிருந்து பங்களிக்கும் ஆளுமையாக பத்திநாதனின் வருகை முக்கியத்துவம் உடையது.
பேராசிரியர் சி. ஜெயசங்கர்
அவர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்
பத்திநாதன் தான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை அனுப்பி அதை ஒரு நூலாகத் தான் வெளியிட இருப்பதாகவும், அதற்கு ஒரு அணிந்துரை தருமாறும் என்னிடம் கேட்டுக்கொண்டார். இப்போது அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு நூல் வடிவிலே வரவுள்ளன. அந்த நூலின் பெயர் ‘உத்தியாக்கள் : கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ என்பதாகும். இங்கே மூன்று விஷயங்கள் மேல் எழுகின்றன. ஒன்று; பத்திநாதன், இன்னொன்று; உத்தியாக்கள், மூன்றாவது; கிழக்கிலங்கை கடலோர வேடர்களுடைய பண்பாட்டு அசைவுகள். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
யார் இந்தப் பத்திநாதன்?
மட்டக்களப்பு - களுவன்கேணி கிராமத்தில் இருந்து கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு நாடகமும் அரங்கியலும் பாடநெறிக்குத் தெரிவாகி வந்த ஒரு மாணவர் இவர். இந்த மாணவனை முதன்முதலாக வகுப்பிலே கண்டமை, இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.
விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு நாடகமும் அரங்கியலும் படிப்பிப்பதற்காக நான் சென்றபோது சந்தித்த ஒரு தொகுதி மாணவர்களுள் ஒருவராக அவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவருடைய தோற்றம், நடை ,உடை, பாவனை, விரிவுரை முடிவினில் சந்தேகங்களைக் கேளுங்கள் என நான் கூறிய பின்னர் அவர் என்னிடம் வினவிய வினாக்கள் என்பன என்னைக் கவர்ந்தன.
சில நாடகப் பயிற்சிகளுக்காக அந்த வகுப்பைக் குழுக் குழுவாகப் பிரித்துவிட்டபோது ஒரு குழு அவரின் கீழ் விடப்பட்டது. அந்தக் குழுவை அவர் வழிநடத்திய முறைமை, அவர்களுக்குத் தலைமை அளித்த முறைமை, அவரின் ஆளுமைக்குட்பட்டு அவரின் கீழ் எல்லோரும் பணிந்து செயற்பட்டமை, அவர் சொன்ன விஷயங்களை அவர்கள் தட்டாது செய்தமை என்பன எனக்கு அவரது ஆளுமையைக் காட்ட, அவை அவர் மீது ஒரு வித்தியாசமான ஈர்ப்பினை ஏற்படுத்தின. ஏனைய மாணவர்களிடமிருந்து வித்தியாசமானவராக அவர் தென்பட்டார்.
அந்த வகுப்பு இறுதிப் பரீட்சைக்கு அகஸ்டபோல் அறிமுகம் செய்த மறைந்திருக்கும் அரங்கப் பாணியில் (Invisible Theatre) நாடகங்கள் போட வேண்டி இருந்தது. பல நாடகங்கள் இடம்பெற்றன. அதில் ஒன்று பத்திநாதன் தயாரித்த நாடகம். அது நிர்வாகத்தை விமர்சனம் செய்யும் ஒரு நாடகம். அவரே அதனைத் தலைமைதாங்கி நடத்தினார். அதன் உண்மை நிலை அறியாத பலர் அதனை நாடகம் என அறியாது அவர் நிர்வாகத்திற்கு எதிராகக் குழப்பம் செய்கிறார் எனப் புகார் செய்தபோது அவர் நிர்வாகத்தோடு பிரச்சினைகளை எதிர்கொண்டார். நான் தலையிட்டு அதைத் தீர்த்து வைத்ததும் ஞாபகம் வருகின்றது.
அவர் தனது இறுதி வருட ஆய்வுக் கட்டுரையாக ‘வேடர்களிடையே காணப்பட்ட சடங்கு முறைகளின் குணமாக்கல் பண்பு’ பற்றி ஆராய்ந்து சமர்ப்பித்தார். அது நல்லதோர் ஆய்வுக் கட்டுரை. அதற்காக அவர் தகவல்கள் தேடிச் சென்ற போது அவர் தன்னையும், தன் சமூகத்தையும், பிற சமூகங்களையும், சடங்குகளையும் பண்பாடுகளையும் அறிந்து கொண்டார். சிறந்த நாடக அரங்கியல் கல்வி, ஒரு அர்ப்பணிப்பு உள்ள மாணவனை தேடல் நோக்குள்ள மாணவனாக மாற்றி ஒரு சமூகவியல் ஆய்வாளனாகவும் மாற்றிவிடும் என்று ஒரு அறிஞர் எழுதியது ஞாபகம் வந்தது.
இப்போது அவர் நாடக அரங்கியல் மாணவர் அல்ல. தன்னையும் தன் சமூகத்தையும் தேடிச் செல்கின்ற ஒரு மானிடவியல், இனவரைவியல், உளவியல் ஆய்வாளராக முகிழ்த்திருக்கின்றார். இத்தனைக்கும் அவருடைய துறை மானிடவியலோ, இனவரைவியலோ, உளவியலோ அல்ல. நாடக அரங்கியற் கல்வி அவரை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
உத்தியாக்கள் என்றால் என்ன? அவர்கள் யார்?
உத்தி என்றால் திராவிட மொழியில் மேலே என்று அர்த்தம். உத்தியாக்கள் என்றால் மேலே சென்றவர்கள் என்பதே அர்த்தம். அப்படியானால் மேலே சென்ற முன்னோர்கள் என்பது இதற்குப் பொருள். அதாவது இறந்த மூதாதையர் என்று நாங்கள் இதனைக் கூறலாம். இந்த மக்களை வழிபடுகின்ற ஒரு முறை தான் உத்தியாக்கள் வழிபாடு. இந்த வழிபாடு இலங்கையிலே வேடர் சமூகத்திடம் காணப்படுகிறது; மிகப் புராதனமானதும் கூட. இறந்த முன்னோர்களை வழிபடுதலே சமூகத்தின் முதல் வழிபாடு என்று மானிடவியல் கூறுகிறது. இந்த வகையிலே இந்த இறந்த முன்னோரை வழிபடுகின்ற வழிபாட்டினை இலங்கையிலே வேடர் சமூகமே ஒரு வழிபாடாகவும், சடங்கு முறையாகவும் இன்று வரை பேணி வருகின்றது எனலாம்.
இந்த வழிபாட்டினை நேராகக் காணுகின்ற, அதன் உட்பொருளை மேலும் அறிகின்ற சந்தர்ப்பம் எனக்கு அண்மையில் கிடைத்தது. அதனை ஏற்படுத்தித் தந்தவரும் இந்தப் பத்திநாதன் தான். வழிபாட்டினை நேரடியாகக் காணவும், அம் மக்களோடு உரையாடவும் ஒரு வாய்ப்பினை ஒழுங்கு பண்ணித் தந்தார். அதன் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக அவதானித்த நான் எனது பார்வையில் அந்த வழிபாடு பற்றியும் சடங்குகளை அவர்கள் நிகழ்த்திய முறைகள் பற்றியும் ஒரு சிறு நூலை எழுதியுள்ளேன். அதனை ஒரு நினைவுப் பேருரையாகவும் நிகழ்த்தியுமுள்ளேன். வழிபாடு மூலமாக அவர்கள் தங்கள் முன்னோர்கள் பலரின் கதைகளையும் தங்களின் பாரம்பரிய வரலாற்றையும் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதே அதில் நான் அவதானித்த விடயம்.
ஒரு குறிப்பிட்ட நாளிலே நிகழ்த்தப்படும் சடங்கில், இறந்த முன்னோர், உயிரோடு உலவும் சிலரின் உடம்பிலே வந்து புகுந்து அவர்கள் மூலமாக அடுத்த தலைமுறையுடன் உரையாடிச் செல்கின்ற புதுமையினை நான் அவதானித்து இருக்கிறேன். ஒருவகையில் சரித்திரத்தை தேக்கி வைக்கின்ற அல்லது ஒழுங்குபடுத்தி வைக்கின்ற ஒரு முறையியல் அந்த உத்தியாக்கள் வழிபாட்டிலே இருந்தது. இந்த உத்தியாக்கள் வழிபாட்டையே பத்திநாதன் வேடர் சமூகத்தின் அடிப்படை அடையாளமாக அல்லது பிரதானமான அடையாளமாகக் கருதுகிறார் என்பது தெரிகின்றது .
பத்திநாதனுக்கும் எனக்கும் உறவு ஏற்பட இன்னொரு காரணமும் இருந்தது. நான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக 50 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பின் சடங்கு முறைகளை ஆராயச் சென்றபோது, தளவாய் எனும் கிராமத்திலும் இன்னும் சில இடங்களிலும் வாழ்ந்த வேட வெள்ளாளர் என்பவர்கள் மத்தியிலே நிலவிய சடங்குகளை அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பிரதான தெய்வமாக இருந்தது குமார தெய்வமாகும். எனினும் அவர்கள் தமது முன்னோரான உத்தியாக்களையும் வணங்கி இருந்தனர் என்பதையும் அறிய நேர்ந்தது.
குமார தெய்வ வழிபாட்டை ஆரம்பிக்க அனுமதி தர, உத்தியாக்கள் வருவர் என்பதே அன்று என் புரிதலாக இருந்தது. எனவே என்னுடைய ஆய்விலும் குமார தெய்வமும் அதையொட்டிய சடங்குகளும், அந்தச் சடங்குகளின் நாடகத் தன்மைகளும் அதிகம் இடம்பெற்ற அளவிற்கு, உத்தியாக்கள் வழிபாடு பெரிதாக இடம்பெறவில்லை. ஆனால் அந்த வழிபாடுகள் பற்றியும் அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன். தனது ஆய்வுக்கட்டுரையை எழுத ஆரம்பித்த போது இந்தக் குறிப்புகள் பத்திநாதனுக்கு உதவியிருக்க வேண்டும் போல் தெரிகிறது. தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை எழுதுவதற்காக என்னிடம் வந்து இதுபற்றி உரையாடிய போது தான், அவருடைய தேடலை நான் அறிந்து கொண்டேன்.
அண்மையிலே அவர் என்னை அந்த உத்தியாக்கள் வழிபாட்டைக் காண களுவன்கேணி எனும் வேடர் சமூகம் வாழும் கிராமத்திற்கு அழைத்த போது, நான் அவர்களிடம் கண்ட வழிபாட்டு முறைகள் எனக்கு ஒரு புதிய தரிசனத்தைத் தந்தன. என் பழைய எழுத்துகளை மீள்பரிசீலனை செய்ய அது உதவியது.
நாடகமும் அரங்கியலும் பாடநெறி மூலம் வேடர்கள் சடங்குகளின் நாடகத்தன்மையை அறியப் புறப்பட்ட பத்திநாதன், வேடரின் வழிபாட்டினையும் அதன் குணமாக்கல் தன்மையையும் அறிந்து கொண்டதோடு தன்னையும், தான் வளர்ந்த பண்பாட்டுப் பின்னணியையும், அச்சமூகம் எதிர்கொள்ளும் இன்றைய சவால்களையும் அறியத் தொடங்கினார். அவர் அந்தச் சமூகத்தில் இருந்து வந்த முதல் நாடக அரங்கியல் பட்டதாரி ஆவார்.
குணமாக்கல் சிகிச்சை நெறியினை ஆராயப் புறப்பட்ட அவர் இயற்கைக்கும், வேடருக்குமுள்ள உறவுகள் பற்றியும், அவர்களின் இயற்கை உணவுகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் ஆராய வேண்டி வந்தது. அப்போது தான் அவர் மேலும் தெளிவு பெற்றார் என்று நான் நினைக்கின்றேன். இதன் காரணமாக அவர் கிழக்கிலங்கை வாழ் வேடர் மத்தியிலே பயணம் செய்து அவர்களைப் பூரணமாக அறியும் முயற்சியிலும், ஒன்றிணைக்கும் முயற்சியிலும் அவர்களுக்கு அவர்களைப் பற்றிய விழிப்பூட்டல் செய்வதிலும் ஈடுபடத் தொடங்கினார். ஆராய்ச்சி அவரை ஒரு செயல்வாதியாக மாற்றிய கதை இது. இதன் மூலமாக அந்த இனக் குழுமத்தின் வரலாறும், வாழ்வியலும், பண்பாடும் வெளி உலகுக்குத் தெளிவாக அறிமுகமாகத் தொடங்கின. அதன் வெளிப்பாடே இந்த நூலாகும். தான் அறிந்தவற்றையும், தேடியவற்றையும் அடிக்கடி சிறுசிறு ஆய்வுகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி அவர் வெளியிடத் தொடங்கினார். அந்தக் கட்டுரைகளை ஒன்று திரட்டி ஒரு நூலாக கொண்டு வரும் எண்ணம் அவருக்குக் கிடைத்தது. அதன் விளைவு இந்த நூல்.
அனைத்தும் நல்ல கட்டுரைகள். ஆனால் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒழுங்கற்றுக் காணப்பட்டன. அதனை ஒழுங்குபடுத்துகின்ற பொழுது அதற்குள்ளால் ஒரு இனக்குழுமத்தின் வரலாறும் பண்பாடும் வளர்ந்த விதம் தெரியும் என எண்ணி, பின்வருமாறு அதனை அமைக்க ஆலோசனை கூறினேன். அவர் அதனையேற்று சில மாற்றங்களுடன் ஒழுங்கமைத்துள்ளார்.
வேடர் சமூகம் இலங்கையில் மாத்திரம் அல்ல உலகிலேயே மிகப் புராதனமான சமூகமாகும். அதனை மானிடவியலும் வரலாறும் உறுதிப்படுத்துகின்றன. முதன்முதலாக மனிதர் கூட்டாக வாழ்ந்த பொழுது வேட்டையாடுதல் மூலமாகவே இயற்கையினை தன் வசப்படுத்த முயன்றனர். பின்னால் வந்த சமூக வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட பல்வேறு இனக் கலப்பினால் இந்த வேடுவர் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்னொரு வகையில் அச்சமூகம் பின்நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள் பூர்வீகக் குடிகள் ஆனார்கள். அவர்களை வென்று குடியேறினோர் புதுக்குடிகள் ஆனார்கள். இலங்கையிலும் வேடரே பூர்வ குடிகளாக இருந்திருக்கின்றனர். இது பற்றி இலங்கையின் மிகப்பெரிய மானிடவியலாளரான கணநாத் ஒபயசேகரா தீர்க்கமான கருத்துகளைக் கூறியுள்ளார். தனித்துவமான பண்பாட்டோடும் செல்வாக்கோடும் அந்த இனம் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பூர்வீக குடிகள் இயக்கர், நாகர் எனக் கூறுவது மரபு. அதிலும் நாகர் வந்த பிறகுதான் இலங்கையில் பண்பாடு, நாகரிகம் தோன்றின என்ற ஒரு கருத்தும் உண்டு. அதற்கு முதல் வாழ்ந்தவர்கள் இயக்கர் ஆவர். இயக்கரை வேடர் எனச் சொல்லுகின்ற ஒரு மரபும் இருந்தது. ஆனால் பத்திநாதன் இதிலிருந்து வேறுபடுகின்றார். இயக்கர் வேறு வேடர்கள் வேறு என்பது அவரது முடிவாகும். வேடர்கள் இன்று இலங்கையில் சிங்களப் பகுதிகளில் வாழும் வேடர்கள், தமிழர் பகுதிகளில் வாழும் வேடர்கள் என்று பிரிந்து கிடக்கிறார்கள். இவர்களைத் தமிழ் வேடர், சிங்கள வேடர் எனப் பிரித்துப் பார்ப்போரும் உண்டு. அவர்கள் இனத்தால் தமிழரருமன்று, சிங்களவருமன்று. அவர்கள் மொழி தமிழுமன்று சிங்களமுமன்று, அது வேடமொழி என்பது பத்திநாதனின் கருத்து. வேடரிடையே இந்த மொழிவழக்கு இன்றுமுண்டு. பல சொற்களைத் தமிழும் சிங்களமும் வேட மொழியிலிருந்தும் பெற்றுக்கொண்டன.
இந்த வேடரின் தன்மைகள் பற்றியும், பண்புகள் பற்றியும், கலைகள் பற்றியும் பலர் ஆராய்ந்து இருக்கிறார்கள். சிலிக்மேன் தொடக்கம் இன்றைய இளம் ஆய்வாளர்கள் வரை வேடர்கள் பற்றி ஆராய்ந்தோர் பலர். மட்டக்களப்பின் முதுபெரும் ஆய்வாளர்களும் ஆராய்ந்துள்ளனர். ஈழத்து பூராடனார் ‘யார் இந்த வேடர்?’ என்ற நூலை எழுதியிருக்கின்றார். வீ.சி. கந்தையா போன்றோரும் வேடர்கள் பற்றிய குறிப்புகளைத் தங்கள் நூலிலே கூறி இருக்கின்றார்கள். இந்த வரிசையில் நானும் சில குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறேன்.
இவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள்; புறத்தார் என்று நாங்கள் கூறலாம். ஆனால் பத்திநாதன் அப்படியல்ல. அவர் அந்தக் குடிக்குள்ளே இருந்து முகிழ்த்த ஒரு அறிஞர். அந்தக் குடியின் துன்பங்களை, துயரங்களை, வலிகளை, இழப்புகளை தன் முன்னோர்களுடைய வாய்மொழி மூலமாகக் கேட்டு வளர்ந்த ஒரு ஆய்வறிவாளர். இவரை நாம் அகத்தில் இருந்து வந்த ஆய்வாளர் என அழைக்கலாம்; அதாவது அகத்தார் எனலாம். எனவே இவருடைய இந்த நூலிலே ஏனையவர்களை விட மிக அதிகமாக நம்பகத்தன்மை இருக்கும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த நூல் கூறுவது எதனை?
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பூர்வ குடிகள் காலனிய ஆதிக்கம் காரணமாக தங்கள் நிலங்களை இழந்து, மொழியினை இழந்து, பண்பாட்டினை இழக்கிறார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் தம் சடங்குகளில் தேக்கி வைத்திருக்கிறார்கள். பின்னாளில் அவர்கள் தமது அடையாளத்தைத் தேடத் தொடங்கினார்கள். அடையாளங்கள் அவர்களுடைய வழிபாட்டிலே, சடங்குகளிலே காணப்பட்டன. முக்கியமாக பெண் தலைமை அங்கே இருந்தது. இந்த வழிபாடுகளிலேயே அவர்கள் தங்களுடைய நோய்களைக் குணப்படுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். அந்த வழிபாடுகளிலே அவர்களுக்கான அழகியலும், உளவியலும் கலந்து இருந்தன. அந்த வழிபாடுகள் இன்று மாறி வருகின்றன. அந்த அடையாளத்தை உரத்துச் சொல்லி அதனை மீட்டெடுக்க அவர்கள் பாடுபடுகின்றார்கள். இந்தப் பெரும் பண்பாட்டுப் போரில் அவர்கள் வெற்றியடைவார்களா? அல்லது காலத்தின் கோலத்திற்கு ஏற்ப மாறுவார்களா? அல்லது பண்பாட்டைப் பறிகொடுப்பார்களா? என்பது நமக்குத் தெரியாது. வரலாறுதான் அதை நிர்ணயிக்கும்.
காலம் தோறும் இந்த இனக்குழுமம் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு உட்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் தங்கள் அடி வேர்களை மறந்து விடாமல் தொடர்ந்து இன்றும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அவர்களை ஓர் குழுமமாக்கி அந்த அடையாளத் தனித்துவத்தோடு எப்படி வாழவைக்கலாம் என்பதனை செயல் மூலமாக்கும் கருத்தியல் பலத்தினை இந்த நூல் தருகிறது எனலாம்.
இன்னும் ஆழமாகச் சென்று பார்த்தால் இந்தத் தொல்குடிகளை மாற்றியது அல்லது ஆக்கிரமித்தது காலனியம் என்கின்ற பேரலையாகும். காலனியமென்றால் அது ஐரோப்பியர் வருகையின் பின் ஏற்பட்ட ஒன்று என்பது பொதுவான கருத்து. ஆனால் பண்பாட்டு காலனியம் என்று ஒன்று இருக்கின்றது. இந்தப் பண்பாட்டுக் காலனியம் பூர்வீக காலம் தொட்டே வேடரை தாக்கி இருக்கின்றது என்பது பத்திநாதன் உடைய வாதமாகும்.
மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால், இந்த வேடர் குழுமம் ஆரம்ப காலத்திலே தனித்துவத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது. பின்னால் வந்த திமிலர், முக்குவர், வெள்ளாளர், சோழர், நாயக்கர், இஸ்லாமியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் தொடர்ச்சியான அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தாக்குதல்களினால் இவர்களுடைய பழைய பண்பாடு மாறியது அல்லது மறைந்தது என்றே பத்திநாதன் கருதுகிறார்.
சோழப் படையெடுப்பும், பண்பாட்டு ஆதிக்கமும் மட்டக்களப்பின் பழைய பண்பாட்டையும், சமூக அமைப்பையும் மாற்றின என்ற ஒரு கருத்தும் உண்டு. அந்தப் பேரலைகளுக்குள் கிழக்கிலங்கை வேடரும் அள்ளுண்டனர். மானிடவியலில் பண்பாட்டுத் தாக்கம் என்பது ஒரு முக்கிய விடயமாகும். வலிமை வாய்ந்த பண்பாடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் பொழுது, எடுத்தும் கொடுத்தும் பரிமாறிக் கொள்ளும். ஆனால் வலிமை குறைந்த பண்பாடும், வலிமையான பண்பாடும் சந்திக்கின்ற பொழுது வலிமையான பண்பாடு இந்த வலிமை குறைந்த பண்பாட்டைத் தன்னுள் ஈர்க்கின்ற தன்மையே காணப்படுகின்றது. எனினும் அந்த வலிமை குறைந்த பண்பாடு விடாப்பிடியாகத் தன்னை தக்கவைத்துக் கொண்டு வாழும். இதனை கிழக்கிலங்கை வேடர் மத்தியிலே நாங்கள் காணுகின்றோம்.
இந்தப் பண்பாட்டு மாற்றத்துக்குப் பின்னால் இருப்பது என்ன என்பது ஒரு வினாவாகும். அதற்குப் பின்னால் இருப்பது பொருளாதார மாற்றம் என்பதை பலர் புரிந்துகொள்வதில்லை. சமூகத்தின் அடித்தளத்தை ஆராய வேண்டுமானால், மாற்றங்களை ஆராய வேண்டுமானால், அதன் ஆணிவேர்களை ஆராய வேண்டும்; அதன் வர்க்க வேர்களை ஆராய வேண்டும்.
ஒரு புராதன இனம், அந்நியர்களின் தொடர்ச்சியான அரசியல் பண்பாட்டுத் தாக்கத்தினால் நிலம் இழந்து, மொழி இழந்து, பண்பாட்டை இழப்பதும்; ஆனால் அதனை விடாப்பிடியாகப் பேணுவதும்; அவர்கள் விழிப்புணர்வு பெறும் போது தமக்கான அடையாள மீட்பைத் தேடுவதும்; புதிய அறிவியல் பார்வையில் அந்த அடையாளத்தைத் தங்களது சடங்குகளிலும், உணவுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் காண்பதும்; நம்பிக்கையோடு அதனை தக்கவைத்து மீட்டெடுக்க வைப்பதுமான ஒரு முயற்சியில் ஈடுபடுவதுமாக ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை இந்த நூல் தருகின்றது.
இந்தத் தகவல்களை வைத்துகொண்டு தேர்ந்த ஒரு நாவலாசிரியன் மிகச்சிறந்த ஒரு இனவரைவியல் அல்லது மானிடவியல் சார் நாவல் ஒன்றை எழுதலாம். அரங்கவியல் மாணவரான பத்திநாதன் வேடர் மத்தியில் வழங்கும் இந்தச் சடங்குகளையும், பண்பாட்டையும் நாடக அரங்க நோக்கில் பார்ப்பதற்கும் அப்பால், அதனை வரலாற்று மானிடவியல், பண்பாட்டு மானுடவியல் ஆகிய நோக்குகளில் அணுகி இருக்கிறார் போல் தெரிகிறது.
மானிடவியல் ஆராய்வாளர்கள் மானிடவியல் வளர்ந்த முறையினைப் பின்வருமாறு பிரித்துக் கூறுவார்கள்:
1. செயற்பாட்டியல் மானிடவியல்
2. அமைப்பியல் மானிடவியல்
3. பரிமாற்றக் கோட்பாடு
4. மாக்ஸிய மானிடவியல்
5. சூழலியல் மானிடவியல்
6. பின் நவீனத்துவ மானிடவியல்
பின்நவீனத்துவ மானிடவியல் பண்பாடைப் புறநிலை நின்று நோக்காமல், அகநிலை நின்று, குறிப்பிட்ட மக்களைக் கொண்டே பேச வைக்க வேண்டும் என்று கூறுகிறது. அது ஆய்வாளன் நோக்கில் சொல்லப்படாது அந்த மக்களின் பார்வையில் சொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. எல்லோரும் அகத்தில் இருந்து வந்துவிட முடியுமா? புறத்தில் இருந்து வந்தால் என்ன செய்வது? அவ்வாறாயின் அவன் 50 வீதமாவது அம் மக்களை அவர்கள் பார்வையில் பேச வைக்க வேண்டும் என்கிறது.
வரலாற்று எழுதியலில்,
1. கீழிருந்து வரலாற்றைப் பார்த்தல்.
2. பண்பாட்டை வைத்து வரலாற்றை எழுதும் முறை.
3. விளிம்பு நிலை மக்கள் வரலாறு.
என புதுநெறிகள் பேசப்படும் காலம் இது.
இங்கே நமது பத்திநாதன் வேடர் சமூகத்திற்கு வெளியிலிருந்து வந்தவர் அல்ல. அதற்குள் இருந்து வந்தவர். எனவே அவர் 50 வீதம் அல்ல; 100 வீதம் பேசத் தகுதியுடையவர். அந்தத் தகுதிப்பாடு பிற ஆய்வாளர்களுக்குக் கிடைக்காத ஒன்று. இங்கே அகத்தார் பேசுகிறார்கள்; உள்ளிருந்து வந்தவர்கள் பேசுகிறார்கள். ஆம், இப்போது அவர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். இது அவர்கள் பேசும் காலம். பத்திநாதன் இத்துறையில் மேலும் பயணம் செய்யவேண்டும்; உரக்கப் பேச வேண்டும். பத்திநாதனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துகளும்.
கலாநிதி சி. மௌனகுரு
ஓய்வுநிலைப் பேராசிரியர்
03.09. 2024
Maunasiththan@gmail.com