நூல்கள் - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
மரியநாயகம் நியூட்டன் மரியநாயகம் நியூட்டன்

‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் இந் நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது.

புத்தக ஆசிரியர் மரியநாயகம் நியூட்டன்
எழுநா நூல் வரிசை 17
பக்க எண்ணிக்கை 168
வெளியீட்டு ஆண்டு 2025
பகுப்பு விவசாயமும் மீன்பிடியும்
முன்னுரை
அணிந்துரை

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், 2009 போர் முடிவுக்கு பின்னான காலத்தில் கடல், அதன் இயற்கை வளங்கள், கடல் சார்ந்த மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆறு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மூன்று கட்டுரைகள், நோர்வேஜிய மொழியில் என்னால் எழுதப்பட்ட சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றின் உள்ளடக்கம் இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், கடல் சார்ந்த சமூகம் இந்தக்கட்டுரைகளின் உள்ளடக்கத்தை இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக கூடுமான அளவுக்கு மொழியியல் ரீதியாக இலகுபடுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரைத் தொகுப்பு ‘புலமைசார்’ (அகடமிக்கல்) மயிர் பிளக்கும் ஆராய்ச்சிக்காகவோ, அல்லது விவாதங்களுக்காகவோ எழுதப்படவில்லை. மாறாக, ஒடுக்கப்படும் கடலோடி மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கும் கடலையும், அதன் வளங்களையும் பாதுகாக்கப் போராடும் சக்திகளுக்கு உரம் ஊட்டவே எழுதப்பட்டது. இலங்கை என்ற தேசத்தை முன்னிறுத்தி தேசியம் பேசும் சிங்கள, தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள், தொடர்ச்சியாக அழிவுக்குள்ளாக்கப்படும் ஈழதேசத்தின் கடல்வளங்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக, எமது கடல் வளங்களை சர்வதேச கடற்பொருளாதார - வல்லாதிக்க நாடுகள் கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். மக்களைப் பிரிப்பதற்காக மட்டும் பல வகை 'தேசியங்களை' பேசும் இவர்களின் இந்த 'பாசாங்குத் தேசிய' அரசியலை கொஞ்சமாவது வெளிச்சம் போட்டுக் காட்ட இந்தத் தொகுப்பு உதவுமென்று நம்புகிறேன்.  இந்தக் கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்படும் இயற்கையின் இயல்பான மாற்றங்கள் தவிர்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த நாட்டை ஆள்பவர்களும் ஆண்டவர்களுமே பொறுப்பு! அதேபோன்று, அரசியல் - சமூக - பொருளாதார ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் எல்லாவகை அரசியல்வாதிகளும் - எதிர்க்கட்சிகளும் கூட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தான்! இத்தொகுப்பிலுள்ள விமர்சனங்களை, மக்கள் நலனில் நின்று, இயற்கையின் பக்கம் நின்று பார்க்கும் கண்ணோட்டத்துடன் இலங்கையின் அரசியல் தரப்பினர் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். புலப்பெயர்வு காரணமாக, சரளமாக தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் நீண்டகால இடைவெளி ஏற்பட்டதனால், கட்டுரைகளில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மொழிப் பிரயோகத்திலும் இலக்கண ரீதியாகவும் சிலபல தவறுகள் இருக்கலாம். கட்டுரைகளின் உள்ளடக்கங்கள், அவை பேச வரும் விடயதானங்கள், கட்டுரை ஏற்படுத்தும் உணர்வுகள் போன்றன, மொழியியல் தவறுகளை பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு உதவும் என எதிர்பார்க்கின்றேன்.  அத்துடன், இத்தவறுகள் கட்டுரையின் உள்ளடக்கத்தை விளங்கிக்கொள்ளாமல் போவதற்கு இடையூறாக இருக்காது என்றும் நம்புகிறேன். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள், சில வருட இடைவெளியில் எழுதப்பட்டதினால் ஒரே வகையான வரலாற்றுத் தகவல்கள் சில கட்டுரைகளில் காணப்படுகின்றன. அவை வாசிப்பின் இலக்கு கருதி மாற்றம் செய்யாமல் அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளன.  இலங்கைப் பாராளுமன்றத்தின் 2023 கார்த்திகை  மாத அறிவிப்பின்படி, புதிய கடல்சார் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த சட்ட நகல் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, புதிய சட்டத்திருத்தங்கள், சர்வதேச நாடுகள் இலங்கையின் விசேட  பொருளாதார கடற்பிராந்தியத்தில் அனுமதி பெற்று (லைசென்ஸ்) மீன்பிடிக்க வகை செய்யவுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது பாரிய கடல்சார்ந்த இயற்கை, சமூக, பொருளாதார அழிவை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைகளை  விளங்கிக்கொள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.  எனது தேசத்தின் கடலையும் அதன் மக்களையும் பற்றி பேசும் இக் கட்டுரைகளைத் தமிழில் எழுதுவதற்கு எனக்கு முன்னுதாரணமாகவும், கடல்சார் நிலத்தின் எழுச்சிக் குரலாகவும் பலம் சேர்த்த தோழமை, கடலின் புதல்வன், முன்னாள் தமிழ்த் தேசியப் போராளி, அழகிரி  அவர்களுக்கும் எனது நன்றிகள்.  இந்தக் கட்டுரைத் தொகுப்பின் உள்ளடக்கத்தில் பேசப்படும்  பொருளாதாரம், சமூக வாழ்வு, அறம், அரசியல் வரலாறு, அரசியல் கண்ணோட்டம் சார்ந்து என்னை சீர்செய்தவர் சகோதரர் மனோரஞ்சன் செல்லையா அவர்கள். அவரே இதன் தொகுப்பாசிரியர். அவரின் நெறிப்படுத்தல் இன்றி இது வெளிவந்திருக்க முடியாது. அவருக்கு, கடலினதும் அது சார்ந்த மக்களினதும் சார்பாக மட்டற்ற அன்பும், நன்றியும்.  எனது அரசியற் செயற்பாடுகள், சமூகம் சார்ந்த செயற்றிட்டங்களுக்கு எப்போதும் எனக்கு கைகொடுத்து பலம் சேர்க்கும் சகோதரி, அக்காச்சி பத்ம பிரபாவுக்கும், சகோதரர் புதுமைலோலன் மஹாலிங்கம் அவர்களுக்கும் எனது அன்பையும், பாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் யாழ்ப்பாணத்தின் மெலிஞ்சிமுனை என்ற சிறிய மீன்பிடிக் கிராமத்தில் பிறந்து, எனது பதினான்காம் வயதில் ஊரை விட்டும் - பின்னர்  நாட்டை விட்டும் வெளியேறி, வட நோர்வேயில் உயர்கல்வி முடித்து, எனக்கான குடும்பத்தை அந்நாட்டில் உருவாக்கி வாழ்ந்துவரும் இன்றைய வாழ்வியல் நிலையிலும் கூட, ஈழதேசத்தின் கடலும் அது சார்ந்த உணர்வுகளும் நெருக்கமும் என்னுடனேயே தொடர்கிறது.  கடல் என்பது எனது ஆத்மாவிலும் 'இரத்தத்திலும்' ஊறிப்போன ஒன்று. தத்துவம், அரசியல், சமூகவியல், இலக்கியம், பொருளாதாரம் போன்ற எல்லா வகை அறிவியல் தளங்களிலும் - கடல் சார்ந்த விடயங்களை பேசும்போது, அது எனது மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. அந்த நெருக்கத்தை இக்கட்டுரைகள் உங்களுக்கும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.  இந்தக் கட்டுரைத் தொகுப்பின் அரசியல், மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்துகிறது. மக்களைச் சார்ந்து நின்றே அதிகாரங்களுக்கு எதிரான கேள்விகளை முன்வைக்கிறது.   சில பிரபல வெளியீட்டகங்கள் வெளியிட விரும்பியபோதும் - மேற்படி அதிகாரங்களுக்கு எதிரான விமர்சனங்கள் காரணமாக வெளியிடுவதிலிருந்து விலகிக்கொண்டன. அதேவேளை, விமர்சனங்களை விலக்கிவிட்டு வெளியிடுவதற்கு நான் தயாராகவும் இருக்கவில்லை.  இந்த நிலையில் இந்தத் தொகுப்பை எல்லாவகை ஊடகங்களினூடாகவும்  வெளியிட்டுள்ள எழுநா வெளியீட்டகத்துக்கும், அதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சசீவன் கணேசானந்தனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக! 

நியூட்டன் மரியநாயகம் 06.12.2023 - Bodø, Norway.

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” என்ற இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் ‘சுதந்திரம்’ என்ற கதையாடலின் கீழ் எப்படி இலங்கைக் குடிமக்கள் சுதந்திரமின்றி தங்கள் சுயமான தொழில் வாய்ப்புகளைப் பறிகொடுத்து தங்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவுமின்றிப் பரிதவிக்கிறார்கள் என்பதை படிப்பவர் எவரும் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றன. இந்நூலில் கட்டுரையாளர் பிரதானமாக இரண்டு விடயங்களை தனது பார்வைக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளார். ஒன்று கடலும் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும். மற்றையது சுற்றாடல் (சுற்றுப் புறச் சூழல்) மாசடைதல்.  அதனை அவர் “நீலப் பொருளாதாரம்” “கடல் விவசாயம்” “கடல் பொருளாதார அபிவிருத்தி” என்ற பார்வைக் கோணங்களுக்குள் அடக்கியிருப்பதாகத் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, சுற்றிவரக் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. அத்துடன் ஆழ் கடல், பரவைக் கடல், பாசிக் கடல், சேற்றுக் கடல் போன்று பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட சூழல்களையும் பல்வேறுபட்ட கடல் வாழ் மீன் வகைகளையும் தனது கடல் எல்லைக்குள் கொண்டிருக்கும் ஒரு நாடு. சுதந்திரமான ஆட்சியும், சுயமான பொருளாதாரத் திட்டங்களும் கொண்ட நாடாக இருந்திருந்தால் கடலுணவு ஏற்றுமதி மூலமே கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டின் வருமானமாக சம்பாதித்திருக்க முடியும். ஆனால், காலனித்துவ ஆட்சியாளர்கள் 'சுதந்திரம்' என்ற போர்வையில் இலங்கையில் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்ற ஆட்சி முறைமை 75 வருடங்களில் எமது நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. (“மக்களின் அன்றாட சீவியத்தை விட கடலின் -இயற்கை வளத்தின் பெறுமதியை விட அவர்களுக்கு சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகார வேட்கையைத் தீர்த்துக் கொள்வதுமே பெரிதாக இருக்கின்றது” – நூலில் இருந்து). இதன் பின்னணியிலேயே காலங்காலமாக கடலுடன் பின்னிப் பிணைந்து கடற்றொழில் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டிக் காத்து வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வந்த மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதனால் அனுபவிக்கும் துன்ப துயரங்களையும் விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்துரைக்கிறது இந்த நூல். 2009லிருந்து இலங்கையின் வடக்கு - கிழக்கு மீன்பிடி சமூகத்தினர் இரண்டு பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்று இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நடாத்தும் கடற் கொள்ளை. மற்றையது கடல் அட்டை வளர்ப்பு உட்பட பல் தேசிய நிறுவனங்களின் பரிசோதனை ஆராய்ச்சிக் கூடங்கள். இவ்விரு பிரச்சினைகளும் மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகும். இயற்கை அழிவு மற்றும் மாசடையும் சுற்றாடல் என்பவை முதற் குறிப்பிட்ட நடவடிக்கைகளின் பக்க விளைவுகள் ஆகும். இந்த நூல் குறிப்பாக, இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி ஊடாக அவர்களுக்குப் புரியவைப்பதற்கு முயற்சிக்கிறது. அதனூடாக இதில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும் அனைவரையும் அப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இது ஒரு ஆய்வு நூலாகவும் அதேவேளை ஒரு வரலாற்று ஆவணமாகவும் அத்துடன், மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும் காணப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள தரவுகள், புள்ளி விவரங்கள், விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் யாவுமே இதுவரை மக்களால் அறியப்படாத அல்லது அவர்கள் அறியாத வண்ணம் மறைத்துவைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது. கடல் எல்லைப் பிரச்சினையும் கடல் அட்டை வளர்ப்பு ஊடுருவல்களும் தனியே தமிழ் மீன்பிடி சமூகத்தினரை மட்டும் பாதிக்கும் விடயம் அல்ல. தென்னிலங்கை சிங்கள மீன்பிடி சமூகத்தினரையும் அதன் ஊடாக ஒட்டுமொத்த இலங்கைக் குடிமக்களையும் பாதிக்கிறது என்பதனை படிப்பவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாளர் இந்நூலைப் படைத்துள்ளார். சட்ட விரோத எல்லை தாண்டிய கடற்கொள்ளை வட பகுதி தமிழ் மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கத் தொடங்குவதற்கு முன்னரேயே கிழக்குத் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி தமிழ் சிங்கள மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கும் விதத்தில் சீனப் பல்தேசியக் கம்பெனி இழுவைக் கப்பல்களின் எல்லை தாண்டிய கடற்கொள்ளை இலங்கை அரசின் அனுமதியுடன் ஆரம்பித்து விட்டிருந்ததையும் இக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பரவலாக உலகின் பல நாடுகளில் இயற்கையையும் சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டங்கள் இயற்ற வேண்டிய தேவை அந்தந்த நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு காரணமாக உருவாகி வருகிறது. பாரிய மீன்பிடிக் கப்பல்களின் இடைவிடாத செயற்பாடுகளினால் மீனினங்களின் இனப்பெருக்கம் தடைப்பட்டு அவை முற்றாக அழிந்து போகும் ஆபத்து காணப்படுகிறது. இயந்திர இழுவைப் படகுகள் கடலடி மீன்களின் வாழ்விடங்களை நிர்மூலமாக்குவதால் மீனினங்கள் அழிந்து போகின்றன. இதனால், ஆழ்கடல் மீன்பிடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. முறைதலையற்ற கடல் அட்டை வளர்ப்பு கரையோரத் தொழில் சார்ந்த மீன்பிடி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், இவைகள் பற்றிய தெளிவான விளக்கமான புள்ளிவிவரத் தரவுகளை இந் நூலில் படித்தறிந்து கொள்ளலாம். கட்டுரையாளரின் சொந்த அனுபவங்களே படிப்பவர்களுக்கு இதனை ஒரு வரலாற்று ஆவணமாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது. அவரது தேடல்களே இதனை ஒரு ஆய்வு நூலாக கருதவைக்கிறது. அவர் கற்றுணர்ந்த தொழில்துறையே இதனை மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாகவும் ஆக்கியுள்ளது. இலங்கைக் குடிமக்களின் சுபீட்சமான சுதந்திர நல்வாழ்வை வேண்டி நிற்போர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தோழமையுடன்,

அழகிரி,

பிரான்ஸ்,

26.01.2023.

 

கடலில் இருந்து தரையை நோக்கி

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையின் சமூக அரசியல் சூழலை, அதன் உச்சந்தலை மயிரைப் பிடித்து உலுக்கியது 'அரகலய' என்ற மக்கள் எழுச்சிப் போராட்டம். அது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களையும், அவ்வதிகாரத்தை அண்டிப்பிழைத்து மக்கள் மீது சவாரி விட்டவர்களையும் அம்பலப்படுத்தி, நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியது. அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மட்டுமன்றி அரச இயந்திரத்தின் அதிகாரிகள், அரசியல் பேசும் ஊடகங்கள், அதற்கும் மேலாக இலங்கையின் மூவினச் சமூகத்தினது அரசியல் சமூகங்கள் (Polity) என்று சகலரையும் அம்பலப்படுத்தி, கேள்விக்கும் உட்படுத்தியிருக்கிறது.

அதேவேளை, 'அரகலய' என்னும் அந்த மக்கள் எழுச்சியானது ஒருவகையில் எமக்கு எம்மையே இனம் காட்டியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. எமக்கு அருகாமையில் இருந்து அரசியல் பேசும் பலரையும் அது எமக்கு இனம் காட்டியிருக்கிறது. அவர்களின் உண்மை முகங்களை வெளித்தெரிய வைத்திருக்கிறது. 'மக்கள் நலன்’ சார்ந்து அரசியல் பேசும், செயற்படும் பல புதிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது. அப்படி அறிமுகமானவர்கள்தான் நானும் நியூட்டன் மரியநாயகமும்.

கடந்த வருட (2022) ஆரம்பத்திலிருந்து ‘ஈழத்து தமிழ்' அரசியல், ‘தமிழ் ஆயுத அரசியல்', 'பொதுவான இலங்கை அரசியல்', 'உலக அரசியல்’ என பலதரப்பட்ட விடயங்களை 'க்ளப் ஹவுஸ்' என்னும் தளத்தில் பேசினோம், பகிர்ந்து கொண்டோம், விவாதித்தோம். ஆனால் 2022 மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் நெருக்கடியும் அதன் வெளிப்பாடான ‘அரகலய' என்னும் மக்கள் எழுச்சியும் ‘க்ளப் ஹவுஸ்' தளத்தில் எமது பேசுபொருளின் மையமாகியது.

இலங்கையின் அரச அதிகாரத்தின் மீதான சாதாரண மக்களின் நீண்டகால விரக்தியும், வெறுப்புமே கோபமாக 'அரகலய' எழுச்சி மூலம் வெளிப்பட்டது எனலாம். நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி, முக்கிய அமைச்சுப் பதவிகள் வகித்த ராஜபக்ச சகோதரர்கள் உட்பட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என அரசாட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தமது பதவிகளை விட்டு ஓடி ஒளியுமளவிற்கு மக்களின் கோபம் வெளிப்பட்டது. அது மட்டுமன்றி இலங்கையின் மொத்த அரசியலையுமே 'அரகலய' போராட்டம் ஒரு வகையில் 'செக் மேட்' செய்திருக்கிறது என்பதே எனது கணிப்பாகும்.

அத்தகைய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நான்கு அல்லது ஐந்து மாதகால 'மக்கள் எழுச்சி' நிகழ்வின்போது நியூட்டன் மரியநாயகம் ஆத்மார்த்தமாக, அந்த மக்களின் உணர்வுகளோடும், 'அரகலய' எழுச்சியுடனும் தன்னை அடையாளப்படுத்தினார். அது மட்டுமன்றி அந்த போராட்டக் களத்தில் நின்ற மக்களுடனும், செயற்பாட்டாளர்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அதன் மூலம் அவர் தான் யார், தான் அரசியல் ரீதியாக எதை ஆதரிக்கிறேன் என்பதை மட்டுமன்றி, தான் எதை எதிர்க்கிறேன் என்பதையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். மக்கள் நலன் சார்ந்து அரசியல் பேசும் ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில்தான் நியூட்டனின் மக்கள் சார்பு அரசியலை நான் இனம் கண்டேன்.

அந்த அடிப்படையிலேயே நியூட்டன் தனது மக்கள் சார்ந்து, இலங்கையின் கடல்சார் சமூகம் சார்ந்து தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூல் வடிவாக்கி வெளியிட இருப்பதாகச் சொன்னார். அதனைத் தொகுத்துத் தரும்படி என்னைக் கேட்ட பொழுது, நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். அவர் நிச்சயமாக, சாதாரண உழைக்கும் மக்கள் சார்ந்து, அவர்களின் உணர்வின் அடிப்படையில், அவர்கள் பக்கம் நின்று, அந்தக் கட்டுரைகளை எழுதியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவருடைய ஆறு கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் பொழுது அந்த நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டது. அவரது எழுத்தில் இருந்த நேர்மையும், அந்த மக்கள் நலன் சார்ந்து நின்று ஓங்கி குரல் எழுப்புகின்ற அந்தக் கடமை உணர்வும் என்னை ஒருமுறை மெய்சிலிர்க்க வைத்தன.

நியூட்டன், தான் 14 வயதில் இலங்கையை விட்டு வெளியேறி, நோர்வே நாட்டில் தன்னுடைய வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டாலும், கடலும், கடல் சார்ந்த மக்களும், அவர்களின் வாழ்வும், அவர்களின் உணர்வும் தன்னுடைய ஆத்மாவோடு கலந்து உணர்வுகளோடு பின்னிப் பிணைந்துள்ளது எனக் கூறுகிறார். அது எவ்வளவு உண்மை என்பதை அவருடைய எழுத்துகளை வாசிக்கின்ற பொழுது துல்லியமாக வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

சிறிய வயதிலேயே தன் சொந்த நாட்டை விட்டுச் சென்றாலும் அந்த நாட்டினுள் நடந்த மக்களுடைய அரசியல், அந்த அரசியல்களின் சரி, பிழைகளுக்கு அப்பால் அந்த மக்களுடைய உணர்வுகளுடன் அவர் ஒன்றித்திருக்கிறார். இலங்கையின் அரச அதிகாரத்தினால் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளையும், அந்த மக்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்கள் 'விடுதலைப் போராட்டம்' என்கின்ற காரணத்தை மட்டும் காண்பித்து, அந்த மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைகளையும் அவர் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். போராட்டக்காரர்கள் தங்களுடைய அரசியலை நடத்தி இறுதியில் அந்த மக்களை இருந்த இடத்திலிருந்து இன்னும் அதலபாதாளத்தில் தள்ளிவிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை போன்ற எல்லா விடயங்களையும் கடல் சார்ந்த மக்களின் அடிப்படையில் நின்று பார்த்து மனம் வெதும்புகின்ற மனித நேர்மை நியூட்டனின் எழுத்துகளில் மிளிர்கிறது. அந்த அடிப்படை நேர்மையை இந்த நூலை வாசித்து முடிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் நான் நம்புகின்றேன்.

என்னுடைய பார்வையில், இலங்கையின் தமிழ்த் தேசிய அடையாள அரசியல் என்பது ஒரு வகையில் 'தற்காப்பு தேசிய' அரசியல் என்ற வரையறைக்குள்ளேயே ஆரம்பமாகி, வளர்ந்து, போராடி, சிதைந்து அழிந்து முடிந்து விட்டது. அந்தத் 'தமிழ்த் தேசிய' அரசியலுக்கு 'உணர்ச்சி' ரீதியாக ஒரு வகைப் பலமான ஈர்ப்பும் அடிப்படையும் இருந்தது உண்மை. ஆனால் அதற்கு ஒரு அகண்ட, ஆழமான சித்தாந்த அடித்தளம் இருந்ததாக நான் பார்க்கவில்லை. அதனால்தான் ‘ஈழத்து தமிழ்த் தேசிய' அடையாளத்துக்காக 30 வருடங்களாக நடத்தப்பட்ட ‘ஜனநாயக அரசியல்' போராட்டமும், அதைத் தொடர்ந்து 30 வருடங்களாக நடந்த 'ஆயுத அரசியல்' போராட்டமும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களிடையே சகல பிரிவினரையும் 'உள்வாங்கிய தேசிய அரசியலாக' (Inclusive National Politics) இருக்க முடியவில்லை. மாறாக, தமிழ் பேசும் சமூகத்தை பல்வேறு அடிப்படைகளில் பிரித்து விடுகின்ற 'குறுந் தேசியமாக' இருந்துள்ளது. அந்த அரசியல்களின் பெரும்போக்கானது தமிழ் பேசும் சமூகத்தை இருந்ததைவிடவும் பலவீனப்படுத்திவிட்டும் சென்றுள்ளது. அந்த வகையில், அது தமிழ் பேசும் கடல்சார் மக்கள் சமூகத்தையும் பலவீனப்படுத்திச் சென்றுள்ளமை ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கான விடயமல்ல.

‘ஈழத் தமிழ்த் தேசிய' அரசியலின் சித்தாந்த வறுமையின் காரணமாக அது 'தமிழ் மொழி', 'தமிழ் இனம்', 'ஆண்ட பரம்பரை', 'தமிழர் வீரம்' என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் மக்களைத் தொடர்ந்து வைத்து அதன் மீதே தன்னைத் தகவமைத்துக்கொண்டது. 'தமிழர் தாயகம்', ‘தமிழர் நிலம்' என்று பேசப்பட்டாலும் 'தமிழர் கடல்' என்கின்ற விடயம் அவ்வளவு தூரம் பேசப்பட்டதா? என்ற கேள்வியை ஒரு முறை நாம் கேட்டுப்பார்த்துக் கொள்ளல் வேண்டும். 'தமிழர் தாயகம்', தமிழர் நிலம்’ என்பவை கூட, அங்கு வாழும் மக்கள் சமூகம், அவர்களின் நலன், அவர்களின் தனித்துவங்கள், அச்சமூகங்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு என்ற விடயங்களின் அடிப்படையில் பேசப்பட்டனவா? என்பது பெரும் கேள்விக்குறியே. எனது பார்வையின் அடிப்படையில் அவை ஒரு குறிப்பிட்ட சமூக அதிகார வர்க்கப் பிரிவினரின் ஆதிக்க நலன், அதைச் சார்ந்து நின்ற அரசியல் கட்சி நலன், அல்லது ஆயுத இயக்கத்தின் நலன் என்ற அடிப்படையிலேயே பேசப்பட்டுள்ளன, கையாளப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் வாழுகின்ற மக்களின் கணிசமான தொகையினர் கடல் சார்ந்து வாழும் சமூகத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தக் கடல் சார்ந்த சமூகமும் அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த, பிரிக்க முடியாத கடலும், கடல் சார்ந்த நிலமும் தொடர்பாக இந்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் எப்போதும் 'உருப்படியாகப் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நியூட்டன் தன் எழுத்துகளில் கூர்மையாக வைத்துள்ளார்.

வரிக்கு வரி தமிழர் தேசியம் பேசி, தமிழர் தாயகம் பற்றி பெரிதாக சிலாகித்த ஆதிக்க அரசியல் சக்திகள் 'தமிழ்த் தேசத்தின்' நிலம்சார், கடல்சார் உற்பத்தியோடும் உற்பத்தி நலனோடும் எந்தவிதப் பிணைப்பும் இல்லாதவை. அவை வடக்கு - கிழக்கின் கடலையும், கடல் சார்ந்த நிலத்தையும், அது சார்ந்த மக்களையும், வெறுமனே தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காகப் பாவித்துவிட்டு கைகழுவிவிட்டுள்ளன.

எனவேதான் இன்று, அந்த மக்கள் எந்தவித அரசியல் தலைமையுமின்றி தமது வாழ்வாதாரத்திற்கு வந்துள்ள அச்சுறுத்தலுக்கு எதிராகத் தாமே தனித்துப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கின் கடலும், கடல்சார் மக்களும், கடலோடிகளும், கடல் சார்ந்த நிலமும் இலங்கையின் உள்நாட்டுப் போர்ச்சூழலில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிர் தப்பிச் செல்வதற்கான தளமாக, வளமாகப் பாவிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் எல்லா அரசியல் இயக்கங்களினதும் சகல அரசியல், ஆயுதச் செற்பாடுகளுக்கும் இந்தக் கடல்சார் தளம் எவ்வளவு முக்கியமனதாக இருந்தது என்பதைப் புதிதாக விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் காரணமாக கடல் சார்ந்த மக்கள் இலங்கை அரச படைகளினாலும், தமிழ் ஆயுத இயக்கங்களினாலும் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதும், கடல் வயை தடைச் சட்டத்தினாலும் இன்னும் பல பாதுகாப்புக் கெடுபிடிகளினாலும் அவர்களின் நாளாந்த வாழ்வாதாரம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதும் அவர்கள் மட்டுமே முழுமையாக அறிந்த அவலமான உண்மையாகும்.

வரலாற்று ரீதியாக அந்த மக்களின் வாழ்வு, பாரம்பரியமான தொழில் உறவுகள், அந்த மக்களின் கடல் தொழிலுக்கான பாரம்பரிய பொறிமுறை. அதிலிருந்து இன்றைய நவீன தலைமுறை வரையாக அதனுடைய வளர்ச்சி, அதில் உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்கள் போன்ற எல்லாவற்றையும் மிகத் துல்லியமாகத் தன்னுடைய சுய அனுபவம், கல்விசார் புலமை, ஆய்வறிந்த தகவல்கள், அதற்கான உசாத்துணை ஆவணங்களின் உதவியுடன் தர்க்க ரீதியாக முன்வைத்துள்ளார் நியூட்டன். அவர் ஒரு புலமைசார் நபர் என்ற அடிப்படையிலும், பல்வேறு விதமான உயர் கல்வித் தகமைகளைக் கொண்டவர் என்ற அடிப்படையிலும் ஒரு கல்வியாளருக்கு, ஓர் ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் புலமைசார் தார்மீகமும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கேள்வி கேட்டிருக்கிறார். இலங்கையின் கடல் வளத்தை எதிர்காலத்தில் அழிக்கவல்ல, கடல் சார்ந்து வாழும் மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய, ஆளும் அரசாலும், அரசோடு சேர்ந்து செயற்படும் அரசியல்வாதிகளாலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி நேர்மையான ஆய்வுத் தகவல்களை வெளியிடுவது இத்துறை சார்ந்த புலமையாளர்களின் தார்மீகக் கடமை என்பதை அவர் நறுக்கென்று கூறியிருக்கின்றார்.

அதை எல்லாம் தாண்டி, 'தொப்புள்கொடி உறவு' என்று நம்பி ஆதரவு தேடி ஓடிப்போன தமிழ்நாடும் அது சார்ந்த கடல் வியாபாரிகளும், இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யும் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்யும் அடாவடித்தனத்தை நியூட்டன் 'நாசகார மீன்பிடி' என்றும், 'கடல் வளக் கொள்ளை' என்றும் துணிந்து சொல்லியிருக்கிறார். இதனால், வடக்கின் மீனவர்கள் எவ்வாறு பாதிப்படைந்து இருக்கிறார்கள், இன்று எப்படி சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பவற்றையும் அவர் தெளிவாகப் புரிய வைக்கிறார்.

இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்துத் தமது வாழ்வாதாரத்தைத் தேடும் உரித்து என்பவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது இந்தியப் பெரு முதலாளிகளின் இந்தக் 'கடல் அடாவடித்தனம்.' இந்த அநியாயத்தை எந்தவிதத்திலும் கணக்கில் எடுக்காது, இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியவாதிகள், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் கண்மூடித்தனமாக அதனை நியாயப்படுத்துவதும், ஆதரிப்பதும் மிகக் கவலைக்குரியதும் கண்டிக்கப்பட வேண்டியதும் எனக் குற்றம் சாட்டுகின்றார் நியூட்டன். இந்த அநியாயத்தைப் பற்றிப் பேசாது மௌனமாக இருக்கின்ற 'கள்ளத்தனமான' அரசியலை எந்தவித சமரசமும் இன்றி நியூட்டன் தன்னுடைய எழுத்துகளின் மூலம் பலமாகச் சாடியிருக்கின்றார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, இவ்விடத்தில் முக்கியமாக இன்னொன்றையும் கூறிவைக்க வேண்டும். இலங்கையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மிக வீரியமாக, 'தமிழ்த் தேசிய அடையாளத்தைப் பற்றிப் பேசியிருந்தாலும், எமது சமூகத்திற்குள் அந்தப் போராட்டமானது சாதிய அடையாளங்களைத் தொடர்ந்தும் பேணி வந்திருக்கின்றது. குறிப்பாக, வடக்கில் அது இன்னும் பலமாக அந்தச் சித்தாந்தத்தை தொடர்ச்சியாகப் பற்றிப் பிடித்து, பாதுகாத்து, வலுப்படுத்திவிட்டும் சென்றுள்ளது எனலாம். சாதாரணமான நாளாந்த வாழ்வில், சமூகம் தொடர்பான உரையாடல்களில், அரசியல் ரீதியான செயற்பாடுகளில் எனஎல்லாவற்றிலும் இந்தச் 'சாதியம்' என்பது உருவமாகவும் அருவமாகவும்ஒரு பிசாசைப் போல எம்மக்கள் சமூகத்தைப் பின்தொடர்ந்து வருகிறது என்பது என்னுடைய அவதானிப்பு.

நியூட்டன் மரியநாயகம் தன்னுடைய கட்டுரைகளில் இந்தக் கடல் சார்ந்த மக்களைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, வாசகர்களுக்கு, அதிலும் குறிப்பாகத் தமிழ் வாசகர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் மையப்படுத்தி, அந்த மக்களுடைய பிரச்சினைகளை அவர் பார்க்கின்றாரோ என்ற சந்தேகம் வரக்கூடும். ஆனால் இலங்கை முழுவதும் வாழும் கடல்சார் சமூகமானது வெறுமனே ஒரு குறிப்பிட்ட 'சாதியை' மட்டும் அடிப்படையாகக் கொண்ட சமூகம் அல்ல என்பது நியூட்டனுடனான எனது உரையாடல்கள் மூலமும், என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் நான் அறிந்து உறுதிப்படுத்திக்கொண்ட உண்மையாகும். எனவே, இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் எமது மனங்களுக்குள் இயல்பாகவே போடப்பட்டுள்ள சாதியப் பார்வையிலிருந்து விடுபட்டு, கடலும் கடல் சார்ந்த மக்களும், அவர்களின் வாழ்வும், அவர்கள் முகம் கொடுத்திருக்கின்ற பிரச்சினையும் என்கின்ற அடிப்படையில் இந்த நூலை வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தோழர் நியூட்டன் மரியநாயகத்தின் இந்தக் கட்டுரைகளின் உள்ளடக்கமானது இலங்கைத் தமிழர் அரசியல், இலங்கைத் தேசிய அரசியல், மற்றும் இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியல் பற்றிய காத்திரமானதொரு உரையாடல் தீயை மூட்டிவிடக்கூடிய வெம்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று நான் நம்புகின்றேன். அவர் வெறுமனே கடல் சார்ந்த மக்களின் உணர்வுக் கொந்தளிப்பை மட்டும் பதியவில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்தது மட்டுமன்றி கடல் வளத்தின் எதிர்காலத்தையே சூனியமாக்க, அதன் அடிமடியில் கைவைத்த அதிகாரத்தின் பல தரப்பினரையும், தனது கடல்சார் மக்கள் சமூகத்தின் உணர்வுகளோடு இறுக்கமாகக் கைகோர்த்த வண்ணம் துணிந்து வாதத்திற்கு இழுத்துள்ளார், சவால்விட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுடைய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் 30 ஆண்டுகால அரசியல் போராட்டத்தினதும், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினதும் முடிவில், தாம் பெற்ற வெற்றிகள் என்ன? அடைந்த நன்மைகள் என்ன? என்று கூட்டிக் கழித்துப் பார்க்கும் நிலையில் அந்த மக்கள் இல்லை. மாறாக நாம் எதையெல்லாம் இழந்து போனோம் என இழப்புகளை மட்டுமே கூட்டிப் பார்க்கின்ற நிலையிலேயே அவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்த முடிவில், அதன் பின்பு உருண்டோடிவிட்ட 13 வருட காலத்தின் பின்னர் வந்து நிற்கின்றார்கள். இந்த நிலையில், கடல் சார்ந்து வாழ்கின்ற இச்சமூகம், இலங்கையினுடைய அரச கொள்கை வகுப்பாளர்களின் சீனாவுடனான ஒப்பந்தத்தினாலும், இந்தியக் கடல் அரசியலினாலும், இலங்கை அரசாங்கத்தோடு நின்று செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்கள், அமைச்சர்களுடைய செயற்பாடுகளினாலும், அவர்களைச் சார்ந்து நிற்கின்ற அரச அதிகாரிகள், கல்விமான்கள், தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகளினாலும் தங்களுக்கு எஞ்சியிருந்த கடல்வளத்தையும் இழக்கப் போகிறோமே என்று ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சீனாவுடன் இலங்கை அரசாங்கங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களின்படி வடக்கு, கிழக்கின் கடல் சார்ந்த பகுதிகளில் நடத்தப்படுகின்ற செயற்கையான கடலட்டை வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்றவற்றினால் கடல்சார் மக்களுடைய வாழ்வுக்கும் தொழிலுக்கும் ஏற்படக்கூடிய சவால்கள், பாதிப்புகள் என்பவற்றை எந்தவித பக்கச் சார்புமின்றி நியூட்டன் கேள்வி கேட்டிருக்கின்றார். இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் இதுபற்றிப் பெரிதாக வாய் திறக்காது இருப்பது மிக மிக அபத்தமானது.

அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றுகின்ற வடக்கு, கிழக்கைச் சார்ந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவனேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தங்களுக்கு வாக்களித்த அந்தப் பிரதேசத்தின் கடல் சார்ந்த மக்களின் நலன் என்கின்ற அடிப்படையில் செயற்படாமல் இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இவர்கள் தாங்கள் பெற்ற வாக்குப் பலத்தை மக்கள் நலனுக்காகப் பாவிக்காமல், முற்றுமுழுதாக அரசு அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களின் நலன்களுக்கு அடிபணிந்து, அவர்களுக்குச் சேவகம் செய்கின்ற வகையில் செயலாற்றுவதும், தங்கள் கட்சி நலன், தங்கள் கட்சி சார்ந்து நிற்பவர்களுடைய பொருளாதார நலன் என்ற அடிப்படையில் நின்று சீன முதலீடுகளைச் செய்வதற்கான வழிவகைகளைச் செயற்படுத்துகின்ற முறைமையும் படு பாதகமானது. இந்த எல்லாத் தரப்பினரையும் தன் கூரிய விமர்சனத்தின் மூலம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறார் நியூட்டன்.

இதைச் செய்வதற்கான ஆன்ம பலத்தை அவர் தன்னுடைய மக்கள் சார் அரசியல் சிந்தனையின் நேர்மையில் இருந்தும், அந்தக் கடல் சார்ந்த மக்களின் உண்மையான உள்ளக் குமுறல்களின் அதிர்விலிருந்துமே பெற்றிருக்கின்றார் என நான் நினைக்கின்றேன். கடல்சார் மக்களிடமிருந்துவெளிக்கிளம்பும் கோபத்தையும் அவர்களுடைய எழுச்சியையும்அவர்களுடைய போராட்டத்தையும் ஆதரிக்கும் மனச்சாட்சியின் குரலாக நியூட்டன் தன்னுடைய எழுத்துகளை முன்னிறுத்தி இருப்பது இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.

இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரமும் மாற்றப்பட வேண்டும் என்ற மக்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் காலமிது. இலங்கையின் புதிய தலைமுறை ஒரு புதிய இலங்கையின் பல்லினத் தேசியம் பற்றி புதிய விதமாகச் சிந்திக்கத் தலைப்படுவதற்கான சில ஒளிக் கீற்றுகள் தெரியத் தொடங்கியுள்ளன. மூவினங்களையும் எதிரிகளாக்கி, அவர்களை மோதவிட்டு அரசியல் செய்து நாட்டை கையறு நிலைக்கு கொண்டுவந்த அரசியல்வாதிகளையும் அவர்களுக்குத் துணைபோன சித்தாந்தத்தையும் மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர்வும், ஒவ்வொருவருடைய உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்கின்ற கலந்துரையாடலும் பெரும்பான்மைச் சமூகத்தின் இளம் அரசியல் சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

இந்த நிலையில், வரலாற்று ரீதியாக இலங்கையின் பாரம்பரியக் கடல் சார்ந்த மக்களான தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் எப்படி அந்தக் கடல் சார்ந்த தொழிலைச் செய்திருக்கிறார்கள், அவர்களிடம் இருந்த பாரம்பரிய உறவென்ன, கொடுக்கல் வாங்கல்கள் என்ன, விட்டுக்கொடுப்புகள் என்ன, அவர்கள் ஐக்கியப்பட்ட இடங்கள் என்ன போன்றவற்றை நியூட்டன் சுட்டிக்காட்டுகிறார். பலரும் இன்று பேச மறந்த அல்லது பேச மறுக்கின்ற இத்தகைய விடயங்களையும் தன்னுடைய எழுத்துகளில் நியூட்டன் சுட்டிக்காட்டி இருப்பது காலத்தின் தேவையாகும். குறிப்பாக, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் கடல்சார் சமூகத்திற்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கடல்சார் சமூகத்திற்கும் இடையே இருந்த பாரம்பரிய தொழில்சார் உறவையும், அவர்கள் எப்படிப் பகிர்ந்து தொழில் செய்தார்கள், ஒருவரில் ஒருவர் தங்கி நின்று தங்களுடைய தொழிலையும் தொழில் வளங்களையும் எவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் நியூட்டன் சுட்டிக்காட்டியிருப்பது இன்று மிகவும் அவசியமானதாகும். அந்த அடிப்படையில் நியூட்டன் மரியநாயகத்தின் இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு சிங்கள மொழியிலும் அச்சிட்டு வெளியிடப்பட்டு, விவாதிக்கப்படல் வேண்டும்.

வடக்கு - கிழக்கின் தமிழ் பேசும் சமூகத்தில் கடந்த மூன்று தலைமுறையினர் 'சிங்களவனை நம்ப முடியாது, நம்பக்கூடாது' என்று எப்படி வளர்க்கப்பட்டார்களோ, அதேபோல்தான் சிங்களச் சமூகத்திலும் மூன்று தலைமுறையினர் 'இறந்துபோன தமிழனையும், புகைப்படத்தில் இருக்கும் தமிழனையும் தவிர உயிருள்ள ஒரு தமிழனையும் நம்பக்கூடாது' என விஷச் சிந்தனையூட்டி வளர்க்கப்பட்டனர். அதனால்தான் இலங்கையை ஆண்ட அரசாங்கங்கள் ஒரே சட்டங்களையும், ஒரே பாதுகாப்புப் படையினரையும் கொண்டு தத்தமது ஆட்சிகளின் கீழ் மூன்று இன மக்களையும் தனித்தனியாக கொடிய விதத்தில் அழித்துள்ளார்கள். அது மட்டுமன்றி, அந்த மூவின மக்களும் மற்றைய இனத்தின் மீது அரசினால் நடத்தப்படும் அழிவைக் கண்டும் காணாதிருப்பதற்கும், அதற்கும் மேலாக அவ்வழிவைப் பார்த்து அகமகிழவும் பழக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் சகல மக்கட் பிரிவினரதும் தனியான பிரச்சினைகளும் பொதுப் பிரச்சினைகளும் பெரும்பாலும் மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளாலேயே உருவாக்கப்பட்டன. ஆனால் மூவினங்களும் அதற்கெதிராகத் தனித்தனியாகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அல்லது அப்படிச் சிந்திக்கின்ற அளவிற்கு 'தலை கழுவப்பட்டுள்ளோம்'. அந்த அவலம் இன்னும் தொடர்கின்றது. தனித்தனியாகப் போராடி இலங்கையின் மொத்த சமூகங்களுமே தோற்றுப்போய் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. அதனால் வெற்றி அடைந்தவர்கள் யார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல. சேர்ந்து போராடுவதற்கான கூட்டுச் சிந்தனைக்கும் அதற்கான இணக்கப்பாடுகளுக்கும் இச்சமூகங்கள் வந்தே ஆகவேண்டிய காலத்தின் தேவை எம்மை உந்தித் தள்ளுவதை இலங்கையின் தமிழ்ச் சமூகங்களின் புதிய தலைமுறை புரிந்துகொள்ளல் வேண்டும். அந்த வகையில் வடக்கு, கிழக்கின் கடல் சார்ந்த மக்களின் போராட்டமும் தனித்த போராட்டத்தில் இருந்து, கூட்டுப் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். அதற்காக நியூட்டனின் இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ஏதோ ஒரு வகையில் உந்துசக்தியாக, உறுதுணையாக பயன்படுமானால் அது மிகவும் போற்றத்தக்கதாக இருக்கும்.

செல்லையா மனோரஞ்சன்
தொகுப்பாளர்,
கனடா,
2023 தை 15.