மலையகம், தேயிலைக் கைத்தொழிலின் உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த அம்சங்களைப் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது. மலையகச் சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சினைகளையும், தோட்டத் தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்திய கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவருகிறது. மற்றொரு கோணத்தில் நோக்கும்போது, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மலையக இளைஞர்கள், மலையகப் பெண்கள், தோட்டங்களில் வாழும் தொழிலாளர் சாராத குழுவினர் போன்றோரது பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்கின்ற கட்டுரைகளையும் இந்நூல் தன்னகத்தே தாங்கி வெளிவருகின்றமை ஒரு சிறப்பம்சம் எனலாம்.
அத்தோடு, மலையகத்தில் தேயிலைக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகளைக் கொண்டுள்ள கட்டுரைகள், இத் தொகுப்பு நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அனைத்து விடயங்களையும், ஒரு வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ஆராய்ந்து, பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதோடு, அவற்றிற்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து உருவான அறிவுசார் மரபின் அடையாளமாகப் பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்கள் விளங்குகின்றார். இவரை மலையகத்தின் முதல் தலைமுறை சார்ந்த புலமையாளர் எனக் குறிப்பிடுவது வழக்கமாகும். தமக்குப் பிறகு அந்த அறிவு மரபினை முன்னெடுப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். அவரது மாணவப் பரம்பரையொன்று உருவாகி காத்திரமான சமூகப் பங்களிப்புகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதே ஆகும். பேராசிரியர், மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த விடயங்களைத் தமது ஆய்வுப் பரப்பாகவும், சிந்தனைப் பரப்பாகவும் கொண்டு தொடர்ச்சியாக இயங்கி வந்தவர். அவரது பெரும்பாலான எழுத்துகள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருக்கின்றன. பெருந்தோட்டச் சமூகம் பற்றி அவர் ஆங்கில மொழியில் மேற்கொண்ட ஆய்வுகள் இலங்கையில் பிற சமூகங்கள் மத்தியிலும், சர்வதேச ரீதியிலும் மலையக மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுபொருளாக்கின என்றே சொல்லவேண்டும்.
பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்கள் இறுதிக் காலப்பகுதிகளில் தமிழ் மொழியிலும் எழுதத் தொடங்கினார். அவ்வாறு எழுதிய சில கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. அவற்றில் ‘தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும்’ என்ற நூல் மிக முக்கியமானதாகும். தேயிலைக் கைத்தொழில் தொடர்பான முழுமையான தகவல்களைக் கொண்ட முதலாவது தமிழ் நூலாக அதனைக் கருதமுடியும். இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்நூல் பேராசிரியர் வெளியிட திட்டமிட்டிருந்த கட்டுரை நூல்களுள் ஒன்று. எனினும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் நூலாக்கச் செயற்பாட்டையும் நிறுத்திவிட்டது. அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இந்நூல் அவரது ஏனைய நூல்கள் போலவே மிகவும் முக்கியமானது. மற்ற நூல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு. பெருந்தோட்டச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த அம்சங்களை முன்னிறுத்தும் அதேவேளை, பெருந்தோட்டச் சமூகத்தின் மேல்நோக்கிய அசைவியக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய பல முன்மொழிவுகளை அல்லது பொறிமுறைகளை அவர் இக்கட்டுரைகளில் முன்வைத்திருக்கிறார்.
பேராசிரியர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இக்கட்டுரைகளை ஈமெயில் ஊடாக அனுப்பி, இக்கட்டுரைகளை வாசித்து பின்னூட்டலை வழங்குமாறும், இவற்றை நூல்வடிவில் கொண்டுவர உதவுமாறும் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டார். அது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்ததுடன், மறுபக்கம் பேராசிரியர் எம். சின்னத்தம்பி சேரின் உயர்ந்த பண்புகளை வெளிக்காட்டியது. இக்கட்டுரைகளை இன்னும் மேம்படுத்துவற்கான ஆலோசனைகளையே அவர் எம்மிடம் கோரினார். இது அவரின் எளிமைத் தன்மையினையும், அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கு வயது, அனுபவம், தொழில்நிலை என்பன தடையல்ல என்ற உயரிய மனநிலையையும் காட்டுகின்றது. இது கற்றறிவாளர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பாகும் என்பதற்கு மிகச் சிறந்த பாத்திரமாகவே பேராசிரியர் திகழ்ந்தார்.
மலையகம்: சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் என்ற இந்த நூல் பேராசிரியர் மறைந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிவருகின்றது. நூலின் இறுதிப் பகுதி, அதேபோல, இந்த நூலுக்கான அறிமுகவுரை வழங்கிய, சின்னத்தம்பி சேருடன் மிக நெருக்கமான உறவினை மிக நீண்டகாலமாகவே பேணிவந்த, அவரது மாணவர் பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் அவர்களுக்கும், மலையகம்: சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் சிறப்புப் பார்வை என்ற பொருண்மையில் பேராசிரியரது பங்களிப்புகள் குறித்து கட்டுரை வழங்கிய, சின்னத்தம்பி சேருடன் 1980 களில் இருந்து பல்வேறு தளங்களில் பணியாற்றிய பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இந்நூல் உருவாக்க முயற்சிகள் தொடர்பாக அவ்வப்போது தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களின் மனைவி திருமதி ஜோசப்பின் அவர்களுக்கும், அண்மையில் எம்மைவிட்டு பிரிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந் நூலின் இறுதிப் பகுதி 'பேராசிரியர் எம். சின்னத்தம்பியின் நினைவுகளும் பகிர்வுகளும்' என்ற வகையில் அமைந்திருக்கின்றது. பேராசிரியர் பற்றிய நினைவுகளை அவரது மாணவ நண்பர்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரம், பேராசிரியர் ம.செ. மூக்கையா, திரு.எம். வாமதேவன், திரு.பெ. முத்துலிங்கம், திருமதி சோபனாதேவி ராஜேந்திரன், திரு.ஒ. ஆறுமுகம் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே பேராசிரியருடன் மிக நெருக்கமான உறவினைப் பேணியவர்கள் என்பதுடன் மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றியவர்கள். இந்நூல் வெளிவர வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டிய திரு.பெ. முத்துலிங்கம் மற்றும் திரு.ஒ. ஆறுமுகம் அவர்களுக்கும் நூலினை வெளியிட்ட எழுநா பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும்.
பதிப்பாசிரியர்கள்:
இரா. ரமேஷ்,
பேராதனை.
பெ. சரவணகுமார்,
தஞ்சாவூர்.
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலின் சகல பக்கங்களின் பார்வையையும் ஒரே பார்வையில் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியின் இறுதி வடிவமே இந்நூலாக உங்கள் கைகளில் தவழுகின்றது. மறைந்த பேராசிரியர் எம். சின்னத்தம்பி எந்தளவில் பெருந்தோட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அவதானித்து வந்துள்ளார், அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எப்படியான தீர்வுகளை முன்வைக்க முனைந்திருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள 18 கட்டுரைகளிலும் அவதானிக்க முடிகின்றது. இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் சில போதுமான சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளன. இன்னும் சில, எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குத் தீர்வுக்காணும் முயற்சியாக ஏறக்குறைய கொள்கைத் திட்டங்களுக்கான ஆலோசனைகள் என்றவாறு எழுதப்பட்டுள்ளன. ஏனையவைகள் மறைந்த பேராசிரியரின் சிந்தனைத்துளிகளாக, வளப்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளன எனலாம்.
எம்மைவிட்டு பிரிந்து சென்ற பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களின் தமிழ் மொழியில் இவ்வளவு அழகாக எழுதும் ஆற்றலை பிற்காலத்தில் இவரால் வளர்த்துக் கொள்ளப்பட்ட திறனாகவே பார்க்கமுடியும். ஏறக்குறைய 2000 ஆண்டு வரையிலும் இவரது எழுத்துகளும், தொடர்புகளும் ஆங்கில மொழியிலேயே காணப்பட்டன. அவற்றில் அதிகமானவை பெருந்தோட்டப் பொருளாதாரம், வேலை நிலைமைகள், பெருந்தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச நிறுவனங்களான ILO Asia Foundation, FES மற்றும் ARTEP போன்ற நிறுவனங்களின் பெரும்பாலான வெளியீடுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளது. இவர், சமகாலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவரும், மறைந்த பேராசானுமாகிய அம்பலவாணர் சிவராஜா அவர்களுடன் பெருந்தோட்ட மக்களின் இன்னோரன்ன விடயங்களை ஆழமாகக் கலந்துரையாடுவதை நான் அவதானித்துள்ளேன்.
பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களால் வெளியிட முடியாது போன கட்டுரைகள் தேடி எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில், தொழிலாளர்களின் சமூக நலன்கள், வரலாற்று ரீதியான விடயங்களை எடுத்துக்காட்டும் விளக்கங்கள், பொருளாதாரக் கட்டமைப்புகள், பெருந்தோட்டங்களில் காணப்படும் வறுமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் காணப்படுகின்றன. இவற்றோடு, தொழிற்சங்க மற்றும் அரசியல் உரிமைகள் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக, தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவம், பெருந்தோட்டங்களில் சூழல் பாதுகாப்பு, பெருந்தோட்டப் பெண்கள், மலையகத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் சமூக மாற்றம், பாதுகாப்பான உணவு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டங்களின் வளர்ச்சியில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு அங்கு வாழ்கின்ற மக்களின் சுகாதார மற்றும் சேமநலன்கள் சார்ந்த பிரச்சினையாகும். பல மாற்றங்களுக்குட்பட்ட பெருந்தோட்டக் கட்டமைப்பானது, அதாவது நூற்றாண்டுகளுக்கு மேலான பிரித்தானியப் பல்தேசிய கம்பனிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட தோட்டங்களின் நலன்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, அடிக்கடி மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டது. குறிப்பாக, தேசியமயமாக்கலின் பின்னர் அரச பெருந்தோட்டங்களில் தொழில் செய்துவந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் அரைகுறையான சுகாதார நலன்களே வழங்கப்பட்டு வந்தன. அதன் பின்னர், தனியார்மயப்படுத்திய போது, அது முழுமையாக தனியார்களின் பொறுப்பாக இடமாற்றம் பெற்றது. இவ்வாறான பல்வேறு மாற்றங்களின் பின்னரும் தொழிலாளர்களின் சுகாதாரம், போசாக்கு என்பன தேசியமட்டத்திற்குச் சமமான நிலையில் வளரவில்லை. இவர்களை இந்நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களுக்கு சமமான நிலையில் மேம்படுத்த வேண்டும் என்ற கருத்துகள் இருப்பினும், இதனை எவரும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பது இங்கு எடுத்து நோக்கப்பட்டுள்ளது.
சற்று விரிவாக ஆராயப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் வரலாறு, வெறுமனே இலங்கையோடு மட்டும் தொடர்புபட்டதாக மட்டுப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, இந்தியர்களின் சர்வதேச குடிப்பெயர்வு என்ற ரீதியிலும் ஆராயப்பட்டுள்ளது. குடிபெயர்ந்தவர்கள் இந்நாட்டில் இன்று நான்கு அல்லது ஐந்தாவது பரம்பரையினராக வாழ்ந்து வந்தாலும், இலங்கையில் உள்ள ஏனைய மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்குப் பதிலாக தனியாக, தனித்துவமான இந்தியக் கலாசாரத்தைப் பின்பற்றும் சமூகமாக வாழ்வது காரணமாக எதிர்நோக்கும் சவால்கள் இன்றுவரை நீடித்துள்ளன. ஒரு காலத்தில் படிப்பறிவு என்பதில் ஆகவும் பின்தங்கியிருந்த இம்மக்களிடையே, இன்று கல்வி கற்றவர்களும், வர்த்தகர்களுமாக வளர்ந்துள்ள ஒரு சமூகக் கட்டமைப்பும் மேலோங்கி வளர்ந்துள்ளது. இவர்கள் வாழும் பிரதேசங்களில் இவர்களது தனித்துவத்தை அங்கீகரிக்கும் மனப்பான்மை அங்கு வாழ்கின்ற பூர்வீக மக்களிடம் வளர்ச்சியடையும் வரை, இனங்களுக்கிடையிலான அமைதியின்மையைத் தடுக்கமுடியாது. மறுபுறத்தில் இந்தியர்கள் குடியேறிய கயானா, பிஜி, மொரீசியஸ் போன்ற நாடுகளில், அங்குள்ள பூர்வீக மக்களைவிட குடியேறிய இந்தியர்கள் அதிகளவாக இருந்ததும், அவர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ள முனைந்ததும், பின்னர் பூர்வீக மக்களுடன் சகவாழ்வைத் தேடிக்கொண்டதும், குடியேறிய மக்களுக்கு படிப்பினையூட்டும் நிகழ்வுகளாக ஆராயப்பட்டிருக்கின்றன.
பெருந்தோட்டக் கட்டமைப்பில் காணப்படும் பொருளாதாரப் பங்களிப்பானது எவ்வகையில் இம்மக்களின் வாழ்க்கைக்கு உந்துதல் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதைப் பேராசிரியர் எம். சின்னத்தம்பி இரண்டு கட்டுரைகளில் ஆராய்ந்துள்ளார். பெருந்தோட்டங்களில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முதலீடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ள கட்டுரையில், அம்மக்களின் நல்வாழ்விற்காக பாடசாலைகள், தொழில்பயிற்சி நிலையம் போன்ற திட்டங்களை வரிசைப்படுத்தி, அதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்கள் பற்றியும் பட்டியல் இட்டுள்ளார். பெருந்தோட்டங்களில் தேயிலையின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்வதற்கு என்னென்ன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதும் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களின் வெளியேற்றம், அவர்களது உற்பத்தித் திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன எந்தளவு உற்பத்தித் திறனோடு தொடர்புபட்டதாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம், சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எந்தளவில் மலையக மக்களின் பொருளாதாரத் துறையில் ஈடுப்பாட்டினைக் காட்டியுள்ளனர் என்பது பற்றி இவர் தரும் தகவல்கள் மிகப் பெறுமதி வாய்ந்தவையாகும். இத்தகவல்கள் இந்நூலிற்கு மணிமகுடம் போல விளங்கும் என்றும் துணியலாம். பேராசான் சின்னத்தம்பி இவ்வளவு தகவல்களையும் மிக எளிதில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தமைக்கான மிக முக்கிய காரணம், அவர் மலையகச் சமூகத்தில் கொண்டிருந்த இறுக்கமான பற்றுதலாகும் என்பதை யாவரும் அறிவர்.
இந்நூலில் உள்ளடங்கும் மற்றுமொரு முக்கிய பகுதியாக, வறுமையை மையப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இரண்டு கட்டுரைகள் விளங்குகின்றன. சோர்வின் விளிம்பில் உழைக்கும் தோட்டத் தொழிலாளர்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் பேராசிரியரின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் பெற்றுக்கொள்கின்ற வருமானத்தைச் செலவழிப்பதில் ஆரம்பகாலம் தொட்டு நிலவிவந்த முறைகளும், தோட்டங்களில் வழங்கப்படும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் எவ்வாறு அவர்களின் தெரிவுசெய்தல் மற்றும் பேரம் பேசும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்துள்ளது என்பதும் அழகாக இக்கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வறுமை நிலையை தேசிய மட்டத்தில் ஆராய்ந்து உடற்சோர்வு, சுவாசக்குழாய் தொடர்பான நோய்கள், இரத்தச்சோகை, முறையற்ற குடும்பக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் என்பவற்றுடன், தோட்ட மக்களின் வறுமை குறித்தும் தொடர்ச்சியாகத் தமது கருத்துகளைச் தெரிவித்துவரும் CEPA போன்ற நிறுவனத்தின் கருத்துகளையும் பேராசிரியர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். இவ்விரு கட்டுரைகளும் இது விடயமாக ஆராய்பவர்களுக்குப் பயனுள்ள தகவல்களாக அமையும்.
மறைந்த எம். சின்னத்தம்பி அவர்கள் மலையக மக்களின் உரிமை, போராட்டம் தொடர்பாகவும் எழுதியுள்ளமை மற்றுமொரு வகையான பெறுமதியை இந்நூலிற்கு வழங்கியுள்ளது. இந்நூலில் இது தொடர்பான நான்கு கட்டுரைகள் உள்ளன. வாக்குரிமை, வாழ்கின்ற உரிமை, வேதனம் பெற்றுக்கொள்வதில் உள்ள உரிமை போன்றவற்றோடு, தேர்தலில் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடக்கூடிய உள்ளூர்த் தலைவர்களைத் தெரிவுசெய்ய முடியாத வகையில், பல மாவட்டங்களில் பரந்து வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அபிலாசைகளைக் கோடிட்டுக் காட்டுவனவாகவும் இக் கட்டுரைகள் அமைந்துள்ளன. இந்நாடு ஒரு ஜனநாயக நாடாக வளர்ந்து வந்தபோதும், இந்த நாட்டின் ஆட்சியில் பங்குகொள்ள முடியாது போன, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த இம் மக்களின் தேவைகள் எவ்வாறு உதறித்தள்ளப்பட்டன என்பதை வரிசை முறையாக பேராசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். இனக்கலவரம் மற்றும் இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பன எத்தகைய உரிமை மறுப்பிற்கு இட்டுச்சென்றன என்பதையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில் இடம்பெறும் ‘பெருந்தோட்டத் தொழிலாளரது வேதனங்கள் ஒரு கூர்மையான ஆய்வு’ என்ற கட்டுரையும் மிக முக்கியமான ஒன்று. வேதனம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது, வேதனத்திற்கான போராட்டங்கள், வேதனங்கள் எவ்வாறு மறுக்கப்படுகின்றன, வேதனத்தின் பல்வேறு உப பிரிவுகள் எந்தளவில் இம் மக்களின் வருமான நிலையைக் காட்டுகின்றது போன்றவற்றை இக் கட்டுரையில் விளக்குகின்றார். மேலும், பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், மொத்த வருமானமாக நிர்ணயிக்கப்படும் வருமானத்தில், சுமார் 50 வீதத்தை மட்டுமே அடிப்படையில் பெற்றுக்கொள்கின்றனர் என்பதையும் இக் கட்டுரையில் எடுத்துக்காட்டுவது இங்கு நோக்கத்தக்கது.
பெருந்தோட்டங்களின் பொருளாதாரத்திற்கும் அதன் பிரதான காரணகர்த்தாவாக இருக்கும் பெண்களின் உழைப்புப் பற்றியும் இரண்டு கட்டுரைகளில் ஆராய்ந்துள்ளார். இந்நாட்டின் தொழிற்படையில் அதிக எண்ணிக்கையானவர்கள் பங்குபற்றுவது பெருந்தோட்டங்களில் மட்டுமே. இதில் ஏறக்குறைய 53 வீதமான பங்களிப்பு பெண்களுடையதாகவே காணப்படுகின்றது. ஏனைய கிராமிய சமூக, பொருளாதாரத் துறைகளில் மற்றும் அரச சேவைகளில் சுமார் 30 வீதத்திற்கு குறைவானவர்களே பங்குபற்றுபவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது உழைப்பு, அதிக நேர வேலை, வீட்டுவேலைகள், குழந்தைப் பராமரிப்பு மற்றும் கலாசார ரீதியில் மலையகப் பெண்களின் ஈடுபாடு, அதன் முக்கியத்துவம் என்பவற்றைத் தொட்டுக் காட்டும் கட்டுரையில், பெண்களின் உடல்நலம் பற்றியும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆறு அல்லது ஏழு நாட்களும், பெரும்பாலும் ஈரலிப்பான காலநிலையில், காலை முதல் மாலை வரை வேலை செய்யும் இவர்கள், பல்வேறு வகையிலான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்களாகக் காணப்படுகின்றார்கள். இது தொடர்பாக அறிஞர்களை மேற்கோள்காட்டி, பெண்களின் சுகாதாரம் எந்தளவில் ஆரோக்கியமானதாகக் கருதப்பட வேண்டும் என்பது பற்றியும், இதனாலான எதிர்கால விளைவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் பேராசிரியர் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
‘மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும் தொழில்சார் பயிற்சியும்’ என்ற கட்டுரையும் மிக முக்கியமானது. இளைஞர்களுக்கான வழிக்காட்டலை உள்ளடக்கியதாகவும் தொழில்நுட்பக் கல்வி, தொழில்சார் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது. இதில், அட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை ஓரளவிற்கு மதிப்பீடு செய்தவாறு, அதன் விரிவாக்கத்தின் அவசியம் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சென்று படித்த இளைஞர்களிடம், தமது பெற்றோர் செய்கின்ற தோட்ட வேலைகளில் குறைவான நாட்டமே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது அவர்கள் பொருத்தமான தொழிற் திறமைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு வழிகாட்டும் வகையில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கும் இரண்டு கட்டுரைகள் அமைக்கப்பட்டடுள்ளன.
இக்கட்டுரைத் தொகுப்பை அலங்கரிக்கும் மற்றுமொரு கருப்பொருள் சூழல் பாதுகாப்பு தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையாகும். தேயிலைப் பெருந்தோட்டங்களில் மீள்நடுகை செய்தல், களை எடுத்தல், கிருமி நாசினி உபயோகித்தல் போன்றவற்றினால் ஏற்படும் சூழல் மாசடைவுகள் குறித்து பேராசிரியர் தகுந்த ஆதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார். பெருந்தோட்டச் செய்கைகளுக்காக காடுகளை அழிக்கும்போது, மிகவும் வளம் மிக்க ஒரு அடி அளவிலான மண், மலையகப் பகுதிகளில் இருந்து கழுவிச்செல்லப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான நிலையில் மென்மேலும் மேற்கொள்ளப்படும் இது போன்ற பாதுகாப்பற்ற நடடிவடிக்கைகளால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும். ஆதலால் காடு வளர்த்தல், மண் பாதுகாப்பு முறைகள், பொருத்தமான வகையில் மீள் நடுகை மேற்கொள்ளல் போன்ற பயனுள்ள விடயங்களைப் பரிந்துரைப்பதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
இறுதியாக, பேராசிரியரின் அபிலாசைகளில் ஒன்றான, மலையகத்தில் அமைக்கப்பட வேண்டிய பல்கலைக்கழகத்தின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். இது பற்றிக் குறிப்பிடும் போது, ‘சலனங்கள் இல்லாத நீர் ஒரு போதும் கடலையடைய மாட்டாது’ என்கிறார். அதாவது காலத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை அடைந்து கொள்ள முடியாத ஒரு சமூகமும் நிலைத்திருப்பது சவாலானதாகும். அத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வல்லமையுடைய இளம் சமூகத்தை உருவாக்கும் பணியில் பல்கலைக் கல்வியே பெரும்பங்காற்ற முடியும் என்பது மறைந்த பேராசிரியரின் உயரிய நம்பிக்கையாகும். அவர் இறப்பதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில், பேராசான்களான சோ. சந்திசேகரன், ம.செ. மூக்கையா, தை. தனராஜ் மற்றும் எஸ். விஜேசந்திரன் ஆகியோருடன் இடம்பெற்ற மலையகப் பல்கலைக்கழகம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார். தாம் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு பல்கலைக்கழகத்தைப் பார்த்துப் பரவசமடைய முடியாது போன பேராசிரியரின் ஆசையைப் பூர்த்தி செய்வது அன்னாரின் ஆத்ம சாந்திக்கு நாம் செய்யும் பெரும் பணியாக இருக்கலாம்.
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ்
மலையகத்தின் மூத்த கல்விமானான பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களின் ஆக்கங்களை ஒரு நூலாக வெளிவருவதற்குக் காரணமாக அமைந்த கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும் பெ. சரவணக்குமாரின் முயற்சி பாராட்டத்தக்கது.
பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்கள் மலையகச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்திஜீவிகளில் முதன்மையானவராகவும், மூத்தவராகவும் திகழ்பவர். பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் அறிவியல் ஆளுமைமிக்கவராகவும், கல்விசார் மற்றும் சமூகத் தளங்களில் தனக்கெனவொரு தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவராவார். இலங்கையின் கல்விச் சமூகத்தின் மத்தியில் தனியான ஆளுமையையும், அடையாளத்தையும், ஏற்படுத்திக்கொண்டவர். அத்தோடு பொருளாதார நிபுணராகவும், பொருளியல் சார்ந்த அறிவியலில் புலமை மிக்கவராகவும், மிகச்சிறந்த பொருளியல் ஆசானாகவும், பொருளாதார ஆய்வாளராகவும் மற்றும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். 1960களிலிருந்து ஆறு தசாப்த காலம் பணியாற்றியதன் மூலம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தார்.
பேராசிரியர் இலங்கையில் உயர் கல்வித் துறையிலும், மலையகச் சமூகம் சார்ந்த அறிவியல் தளங்களிலும், தொழிற்சங்க, அரசியல் சார்ந்த விடயங்களிலும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதிலும், கொள்கை சார்ந்த விடயங்களை வடிவமைப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர். அறிவியல் ஆளுமை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுத்தாற்றல், ஆராய்ச்சித்திறன்;, தொலைநோக்குடன் கூடிய சமூகப் பார்வை, தீவிரமான சிந்தனை, செயலாற்றல் திறன், தலைமைத் தாங்கும் பண்பு, ஒரு சிறந்த ஆசிரியராக வழிகாட்டும் திறன் எனப் பல்துறை சார்ந்த பரிமாணங்களுடன்; மலையகச் சமூகத்தில் வலம் வந்தவர். அத்தகைய ஒரு மாமனிதர், அறிவியல் சிற்பி, சமூக மேதையை இன்று மலையகச் சமூகம் இழந்துள்ளது. அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள், குறிப்பாக மலையகச் சமூகம் சார்ந்த எழுத்துக்கள் இன்றும் எமது மத்தியில் பல்துறை சார்ந்த பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன.
இத்தருணத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் மலையகம் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒரு நூலாக வருவதன்மூலம் ஒரே பார்வையில் அவரது எண்ணங்களையும், கருத்துக்களையும் அறிவு சார்ந்த விடயங்களையும் வாசிப்பதற்கும், புரிந்துக்கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் ஆக்கங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்பட்ட இந்த நூலானது பல்வேறு பரிமாணங்களையும், வளர்ச்சித் தடயங்;களையும், மலையகச் சமூகத்தினர் காலம் காலமாகக் அனுபவித்த துயரங்களையும், உரிமை மறுப்புக்களையும், ஒருமித்து வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது.
இக்கட்டுரைத் தொகுப்பின் உள்ளடக்கமானது மலையகம், தேயிலைக் கைத்தொழிலின் உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த அம்சங்களைப் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது. மலையகச் சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்திய 17 கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது. மற்றொரு கோணத்தில் நோக்கும்போது, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மலையக இளைஞர்கள், மலையகப் பெண்கள், தோட்டங்களில் வாழும் தொழிலாளர் சாராத குழுவினர் போன்றோரது பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்கின்ற கட்டுரைகளையும் இந்நூல் தன்னகத்தே தாங்கி வெளிவந்துள்ளமை ஒரு சிறப்பம்சம் எனலாம்.
அத்தோடு மலையத்தில் தேயிலை கைதொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகளைக் கொண்டுள்ள கட்டுரைகள் இத்தொதுப்பு நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அனைத்து விடயங்களையும், ஒரு வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ஆராய்ந்து, பிரச்சினைகளை வெளிகொண்டு வந்துள்ளதோடு அவற்றிற்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதலாம் பகுதி 19ம் நூற்றாண்டின் கோப்பித்தோட்டம், அதன் பின் தேயிலைத் தோட்டங்களிலில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்நோக்கிய சவால்களையும், அவர்களின் மீதான சுமைகளையும்; ஒப்பிடும் நோக்கில் ஆராய்வதாக முதலாவது கட்டுரை அமைந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பிரதேசம் சாராத மக்களுடைய பொருளாதார பரிமாணங்கள் தொடர்பான தலைப்பில் எஸ். விஜேசந்திரன் அவர்களுடன் இணைந்து எழுதிய கட்டுரை, பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களினது பல்வேறுப்பட்ட அபிவிருத்தி கோணங்களையும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நிறுவன கட்டமைப்புகளையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட பல்துறை சார்ந்த சமூக மேம்பாடுகளையும் வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது.
மேலும் பெருந்தோட்ட மக்களினது சமூக நலச்சேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வறுமை மற்றும் பொருளாதார நிலை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய கட்டுரையும். கூட்டு ஒப்பந்தம் வேதனத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் தொடர்பான கட்டுரையும், மலையகச் சமூகம் காலம் காலமாக அனுபவித்து வந்துள்ள சமூகநலம் சார்ந்த பிரச்சினையையும், பின்னடைவுகளும் பொருளாதார உரிமைகள், மறுக்கப்பட்ட விடயங்களும், கூட்டு ஒப்பந்த நடைமுறைகளும், கூட்டு ஒப்பந்தத்தின் பாதக, சாதக தன்மையையும் இந்நூலிலுள்ள கட்டுரைகள் விரிவாகவே ஆராய்கின்றன.
மலையகச் சமூகத்தின் ‘பல்கலைக்கழகத்தின்’ தேவையையும், மலையகத்தில் அது அறிவியல், பொருளாதாரத் தளங்களில்; ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் யாவை என்பது தொடர்பிலும் விரிவாக ஆராய்வதாக ‘மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் மலையகத் தமிழ்மக்களது சமூக – பொருளாதார மேம்பாட்டில் அதன் பங்கும்’ என்ற கட்டுரையும், மலையக இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்;வி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும், மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளையும், தொழில்நுட்பக் கல்வி எந்தளவிற்கு மலையகச் சமூகத்தினருக்கு எட்டாக்கனியாகக் காணப்படுகின்றது என்பது குறித்து ஆராயும் ‘மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும், தொழில்சார் பயிற்சியும்’ என்ற கட்டுரையும் சிறப்பாக நோக்கத்தக்கவை.
இரண்டாம் பகுதியில், இவையனைத்திற்கும் மகுடம் சூூட்டுவதுபோல் பெருந்தோட்டச் சமூகத்தில் ஏற்பட்டுவரும் சகல மாற்றங்களும் மற்றும் சமூகத்தினது மேல்நோக்கிய நகர்வை பிரதிபலிக்கும் கட்டுரை அமைந்துள்ளது. மேற்கூறிய சமூக மாற்றங்கள் மலையகச் சமூகத்தினரது அறிவியல் பங்கேற்பின் பிரதிபலிப்பினையும், ஏறக்குறை 50 வருடங்களின் பின் இழந்த வாக்குரிமை மீள பெற்றுக்கொண்டதன் பின்னரான தாக்கங்களையும், வாக்குரிமை பலத்தினைக் கொண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் சமூகத்தில் ஏற்படுத்தி வந்துள்ள மாற்றங்களையும், யதார்த்தங்களையும் இக்கட்டுரைத் தொகுப்பில் எடுத்துக் காட்டப்பட்டியுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும். பெருந்தோட்டங்களில் தொழிலாளர் கட்டமைப்பில் 60 சதவீதத்திற்கு மேலாக தொழில் பங்களிப்பைச் செய்தும் தோட்டத்துறை சார்ந்த பெண்கள் இன்றுவரை ஒரு மிகவும் பின் தங்கிய சமூகக் குழுவினராக வாழ்வதும், அவர்கள் எதிர்நோக்கும் அவலநிலைகளும் சமூக வளர்ச்சியில் அவர்களது பின்னடைவிற்கான காரணங்கள் குறித்த விடயங்களை எடுத்துரைக்கும் கட்டுரையும் முக்கியமானதொன்று.
பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 200 வருடங்கள் அண்மித்துள்ள நிலையில் அங்கு வாழும் மக்களது பிரச்சினைகள் மட்டும் தொடர்கதைகளாக இன்றுவரை தொடர்வதும், இது காலம்வரை முழுமையாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாகக் காணப்படுவது குறித்த விவாதங்கள் ஒரு வரலாற்றுப் பதிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது விசேட அம்சமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான போக்கு, கூலிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கூட்டு ஒப்பந்தங்கள் அவற்றின் சாரம்சங்களை நோக்குவதாகவே ‘கூட்டு ஒப்பந்தங்களும் வேதனத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும்;’ என்ற திகழ்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய கூலி சார்ந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய கொள்கை சார்ந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பன போன்ற விடயங்களை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன.
இக்கட்டுரைத் தொகுப்பின் இறுதியில் பேராசிரியர் ஏ. எஸ். சந்திரபோஸ் அவர்களினால் எழுதப்பட்டுள்ள “பேராசிரியர் சின்னத்தம்பியின் மலையகம் : சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் - சிறப்புப் பார்வை” என்ற கட்டுரை பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் ஆக்கங்கள் மற்றும் சமூக பங்களிப்புக்களை மீளாய்வு செய்வதாக அமைந்துள்ளது. அது பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் பல்துறை சார்ந்த பங்களிப்புக்களையும் தொகுத்துரைப்பாதாகவும் விளங்குகின்றது.
இந்நாட்டில் ஏறக்குறைய 200 வருடகால வரலாற்றைக் கொண்டுள்ள மலையகச் சமூகத்தினர் தமக்கேயுரிய தனித்துவமான கலாசார மரபுகள்,, சமூக விழுமியங்கள், அரசியல் செயற்பாடுகள்;;, பிரதேச ரீதியான இருப்பு என்பனவற்றைக் கொண்டு, இந்நாட்டில் ஒரு தேசிய இனமாக வளர்ச்சியுற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி. கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களிலுள்ள தோட்டங்களிலும், அத்தோட்டங்களை அண்மித்துள்ள நகரங்களிலும் கொழும்பு, கண்டி மாவட்டங்களிலுள்ள நகரங்களிலும், வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர்.
இவர்கள் 1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து நீண்டகாலமாக நாடற்றவர்களாக வாழ்ந்தோடு, 2003ம் ஆண்டு முதல் இந்நாட்டில் முழு பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பின்பும் இன்றுவரை ஏனைய பிரஜைகள் மற்றும் சமூகம் சார்ந்தோர் அனுபவிக்கும் சமூக, பொருளாதார அரசியல் கலாசார உரிமைகளையும், அரசியல் சமூக நல வாய்ப்புக்களையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாத சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இரண்டு நூற்றாண்டுகளாகத் தோட்ட முகாமைத்துவத்தின் நிர்வாக கட்டமைப்புக்குள் சிக்குண்டு அடிமைகளைப்போல வாழ்ந்து வருகின்றனர். அரசின் பொதுநிர்வாக சேவைகளையும் பிரஜைகளுக்குரிய உரிமைகளையும் இவர்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். அத்தோடு, நாட்டின் தேசிய நீரோட்டத்திற்குள் உள்வாங்கப்படாத கைவிடப்பட்டுள்ள ஒரு சமூகமாகவும் காணப்படுகின்றனர். அரசு புறக்கணிப்புகளுக்கும், சமூக ஓரங்கட்டலுக்கும் ஆட்கொள்ளப்பட்டுள்ள ஒரு சமூகமாகவும் இவர்கள் வாழ்கின்றனர்.
பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களின் கட்டுரைகள் மலையக மக்களின் மேற்குறித்த அவல நிலைமைகளை முழுமையாகப் படம்படித்துக் காட்டியுள்ளன. பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் எழுத்துகளைத் தாங்கிவரும் இந்நூல் மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்நிலை குறித்த நிலைமைகளை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கும் அந்நிலைமையிலிருந்து அவர்களை வெளிகொண்டுவருவதற்கு மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்த கொள்கை முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளன.
இன்று மலையகச் சமூகம், அரசியல் ரீதியாக வளர்ச்சியுற்றுள்ள போதிலும், சமூக பொருளாதார ரீதியில்; தொடர்ந்தும் பின்தங்கியே காணப்படுகின்றது. மலையகச் சமூகத்தில் தோற்றம் பெற்று வளர்ச்சியுறும் பல்சமூக வகுப்பினரைக் கொண்ட சமூகக் கட்டமைப்பானது, அவர்களைத் தோட்ட தொழிலாளர் சார்ந்த சமூகம் என்ற நிலையினைமாற்றி ஒரு கீழ்தட்டு மத்தியதர வகுப்பினராக மாறுவதற்கு ஏற்ற சமூக மேலெழுச்சி செயற்பாட்டினைக் கொண்ட சூழ்நிலையினை இச்சமூகத்தில் இன்று எற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சமூக உருவாக்கம், சமூக மேலெழுச்சி மற்றும் இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்பு அதனோடிணைந்த சமூகமாற்றம் என்பனவற்றிற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய சமூக கருத்தியல்களையும் அபிவிருத்தி நோக்கங்களையும் புதிய சிந்தனைக் கண்ணோட்டங்களையும் நவீன மாற்றங்களையும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.
மலையக மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற அடிப்படை அபிவிருத்தி பிரச்சினைகளான கல்விக்கான வாய்ப்புக்கள், சுகாதார நிலைமைகள், வீடமைப்பு, வீட்டுரிமை, குடியியல் நிலைமைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள் சமூகப் பாதுகாப்பு, வறுமை, பொருளாதார மேம்பாடு போன்ற பல்வேறு விடயங்களை வெவ்வேறு கோணங்களில் அற்புதமாக ஆராயும் கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலாகவே இது விளங்குகின்றது. அறிவியல் சார்ந்த கருத்தியல்களைத் தனக்கே உரித்தான எழுத்தாற்றளுடன் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் எழுதியிருப்பது இந்நூலை அழங்கரித்திருப்பது மாத்திரமன்றி மலையகச் சமூகத்தவர்களின் எதிர்கால வாழ்க்கையினை செம்மைப்படுத்துவதற்கு சிறந்த ஆய்வு ஆவணமாகவும் வழிகாட்டும் நூலாகவும், கொள்கை சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய அடிப்படை ஆவணமாகவும் விளங்குகின்றது என்றே சொல்ல வேண்டும்.
எனவே, பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களினது கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் “மலையகம் : சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள்”; என்ற இந்த நூலானது மலையகச் சமூக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், அறிவியல் நோக்கில் மலையகச் சமூகத்தின் அசைவியக்கத்தை மிகச் சிறப்பாக அடையாளப்படுத்தும் ஆவணமாக என்றென்றும் விளங்கும் என நம்புகின்றேன்.
பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களின் அற்புதமான கட்டுரைகள் இன்று ஒரு நூலாக வெளிவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி, எழுத்துருவாக்கி¸ பதிப்பித்து இன்று எம்கைகளில் தவழவிட்ட கலாநிதி ஆர். ரமேஷ் மற்றும் பெ. சரவணக்குமார் அவர்களை நான் மனமுவர்ந்து பாராட்டுகின்றேன்.
பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன்
பொருளியல் மற்றும் புள்ளிவிபரத்துறை,
பேராதனைப் பல்கழைக்கழகம்.