கொடும் அழிவுகளை விதைத்த வன்னி யுத்ததத்தின் பின்னர் தனது சொந்த நகரத்தின் மனிதர்களைத் தேடி அலைந்த தீபச்செல்வன், போரின் கொடிய நாட்கள் விழுங்கிச் செரித்த அந்த அப்பாவி மக்களின் கதைகளை அருகிருந்து இரத்தமும் சதையுமாக இந் நுாலில் பதிவு செய்திருக்கின்றார்.
இவை புனைவு எழுத்துக்கள் அல்ல. இவற்றின் ஒவ்வொரு சொற்களிலும் துயரம் ஒரு மெழுகைப் போல படிந்திருக்க, உண்மை அதன் மேல் தகித்து எரிகின்றது.
கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. போர்க் காலப்பகுதியிலும், போருக்குப் பின்பான காலப்பகுதியிலும் யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான வன்னியையும் அதன் மக்களையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்கும் முக்கியமானது.
இறுதி யுத்ததின் பாதிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளித்தெரியும் என எதிர்பார்த்த அரசு, கண்ணில் நெய்யை ஊற்றிக் கொண்டு பல்கலைக்கழகத்தையும் மாணவர்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளராக கடமையாற்றிய தீபச்செல்வன், போர்க் காலப்பகுதியிலும் போருக்குப் பின்பான காலப்பகுதியிலும் யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். யுத்தத்தின் இறுதி நாட்களில் மிக மோசமான ஊடக அடக்குமுறை நிலவியபோது யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை அவர் துணிச்சலாக வெளியே கொண்டுவந்தார்.
வெளிநாட்டுச் செய்தியாளர்களை அனுமதிக்காமலும் உள்நாட்டுச் செய்தியாளர்களை பாரபட்சம் பார்க்காமல் கொன்றும் சிறையிலடைத்தும் வந்த வேளையில், முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான வன்னியையும் அதன் மக்களையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
இவ்வகையில், தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பான அழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ் செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன் எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டு இப்பொழுது நுாலாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான எழுத்துக்களை தனித்தனிக் கட்டுரைகளாக வாசிக்கும் போது அவை வெறும் செய்திகளாக எஞ்சிப் போகக்கூடிய அபாயம் இருக்கிறது. மாறாக, ஒட்டுமொத்தமாகத் தொகுக்கப்படும் போது, பின்யுத்த காலத்தின் முக்கிய ஆவணம் என்ற நிலையை அவ் எழுத்துக்கள் அடைவதோடு, அழிந்து போன நகரத்தையும் வாழ்வழிக்கப்பட்டு எஞ்சியுள்ள நகரத்தின் மனிதர்களையும், அவர்களது வாழ்வையும் கண்முன்னே நிறுத்துக்கின்றது.
இத்தொகுப்பில், யுத்தம் விழுங்கிய மனிதர்களுடைய இன்றைய அவல வாழ்வைப் பதிவு செய்திருக்கும் அதேநேரத்தில், யுத்ததிற்கு முன்பான அவர்களுடைய செழுமையான வாழ்வும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிளிநொச்சியின் அழிவையும், அழிவின் கோரத்தையும், மனிதர்களின் துயரத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
போரிலக்கியங்களும், போர்க்கால எழுத்துக்களும் அவதானிக்கப்படும் அளவிற்கு போருக்குப் பின்பான படைப்புக்கள் கவனிக்கப்படுவதில்லை. போரில் சின்னாபின்னமாகிய நிலங்களையும் மக்களையும் போல, இலக்கியங்களும் படைப்புக்களும் கூட அனாதரவாகக் கைவிடப்பட்டுவிடுகின்றன. போருக்குப் பின்பான சமூகம் முளைவிட்டு உயிரோட்டமான இயல்புநிலையை அடைவதற்கு, போருக்குப் பின்பான படைப்புக்கள் அரசியல் வேறுபாடற்றுக் கவனிக்கப்பட வேண்டியது அவசியமானது. வலியில் இருந்து எழும் குரல்களுக்குச் சிலவேளைகளில் அரசியல் இல்லாமல் இருக்கலாம். அவற்றை வெறுமனே அரசியலற்ற முனகல்கள் என்று புறமொதுக்கிவிட முடியாது. அது வெறும் முனகல் சத்தமல்ல. முளைவெடிக்கும் ஓசை என்ற புரிதல் அவசியமானது.
தீபச்செல்வனின் இப்பதிவுகள் வெறுமனே மக்களின் துயரடர்ந்த வாழ்வை மாத்திரம் பேசவில்லை. அத்துயரத்திற்கான காரணத்தையும் அரசியலையும் தனக்குள் கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி நகரின் மக்களுக்கு, சொந்தமாக இப்பொழுது எதுவுமேயில்லை என்ற உணர்வை விதைக்கின்றது. தமது கட்டமைப்புக்களையும் சந்தோசமான வாழ்வையும் தமக்கான அரசியலையும் இழந்து சொந்த நிலைத்தில் புலம்பெயர் வாழ்வொன்றுக்காகச் சபிக்கப்பட்ட நிலையை எடுத்தியம்புகின்றது.
தீபச்செல்வனுடைய இத்தொகுப்பு கிளிநொச்சி மக்கள் எவ்வாறான வாழ்வில் இருந்து மீண்டு வந்தார்கள் என்பதை எதிர்காலத்திற்குக் கூறப்போகும் ஓர் ஆவணமாகும்.
எழுநா
டிசம்பர் 2012
போர் கிளிநொச்சி மண்ணில் பல கதைகளை உருவாக்கியிருக்கிறது. போர் அழிவும் இடப்பெயர்வும் துயரங்களும் அதற்குள்ளான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இவை என்னுடைய கதைகளல்ல. யுத்தம் தந்த வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களின் கதைகள்.நான் பிறந்து வளர்ந்த கிளிநொச்சியின் கதை. கிளிநொச்சி நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களின் கதைகள். அந்தக் கிராமத்தின் மனிதர்களின் கதைகள்.யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வாழும் நம்பிக்கையுடன் நிலத்திற்குத் திரும்பிய எனது சனங்களை தேடிச் சென்ற அனுவமும் நினைவுகளுமே இந்தக் கதைகள். நான் தேடிச்சென்ற என்னுடைய சனங்களுக்குப் பின்னால் இப்படி குருதியொழுகும் கதைகள் பல இருந்தன.
இவை புனைவற்றவை. இங்கு வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்துமே உண்மையானவை. இக் கதைகள் என்னில் ஏற்கடுத்திய பாதிப்புக்களை, கவிதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் அடக்க முடியாதிருந்த பொழுது அவற்றை அப்படி அப்படியே எழுதினேன்.
கிளிநொச்சி நான் மிகவும் நேசிக்கும் நகரம். எனது சொந்த நகரம். சிறு வயதுகளில் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் பொழுது மீண்டும் இந்த நகரத்திற்கு திரும்புவோமா?என்று ஏங்கியிருக்கிறேன். மேலும் மேலும் எங்கள் வாழ்வில் துயரம் குடிகொள்ளும் விதமாக இடப்பெயர்வுகளை தொடர்ந்து சந்தித்தோம். கட்டிய வீடுகளும் வாழ்க்கையும் மீண்டும் மீண்டும் உடைந்தன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில், போருக்குப் பின்னர் கிளிநொச்சி மீள உயிர்த்தெழுகையில் எனக்குள் இருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மீண்ட நகரத்தை பார்த்து ஆர்ப்பரித்திருக்கின்றேன். வாழ்வு மீதான நம்பிக்கையை அப்போது நகரம் தந்தது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் எங்கள் நகரம் உருக் குலைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரும் போரால் ஒட்டுமொத்த வன்னி நிலமும் சிதைந்து போனது. மீண்டெழப்போராடும் ஈழத் தமிழ் இனத்தில் அதிகம் யுத்தத்தை சந்தித்த கிளிநொச்சி நகரத்தினதும் அந்த நகரத்தின் சனங்களினதும் கிளிநொச்சிப் பிரதேச மக்களினதும் கதைகள் ஈழப்போராட்டத்தில் மிக முக்கியமானவை.இதுபோலவே ஈழத்தின் ஒவ்வொரு நகரம் பற்றிய கதைகளும் பதிவு செய்யப்படவேண்டும். ஒவ்வொரு நகரைப் பற்றியும் அங்கு வாழ்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் ஈழ மக்களின் வாழ்க்கை பற்றிய கனவுகளும் நினைவுகளும் காலங்களும் பதிவாகும். நெருக்கடியான காலத்தில் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கும் மக்களின் கதைகளை பதிவு செய்வதன் மூலம் வரலாற்றில் உண்மையை சேர்க்க முடியும்.
தீபச்செல்வன்,
கிளிநொச்சி.
24.10.2012