படுவான்கரை - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
படுவான்கரை
படுவான்கரை
சஞ்சயன் செல்வமாணிக்கம் சஞ்சயன் செல்வமாணிக்கம்

போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கி தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்து கிடந்த படுவான்கரைப் பிரதேச மக்களினதும், விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நுால் பேசுகிறது. பலநுாறு கேள்விகளை எழுப்பி, குற்ற உணர்ச்சியை நம்மில் பரவவிடும் மௌனத்தின் குரல்களாக இக்கதைகள் விரிகின்றன.

இலங்கையில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த பல வருடங்களாக நோர்வேயில் வசித்து வருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக்களத்தில் கணனித்துறை ஆலோசகராகப் பணியாற்றும் இவர் எழுத்து, இலக்கியம், சமூகம், பயணங்கள், புகைப்படக்கலை என்பனவற்றில் ஈடுபாடும் செயற்பாடும் உள்ளவர்.

புத்தக ஆசிரியர் சஞ்சயன் செல்வமாணிக்கம்
எழுநா நூல் வரிசை 6
பக்க எண்ணிக்கை 83
வெளியீட்டு ஆண்டு 2013
பதிப்புரை
முன்னுரை

உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங்கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டுபோன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங்களின் அழிவு, வறுமை, சமூகச் சிதைவுகள், குற்றச்செயல்கள் என்பன சமூக மட்டத்தில் உருவாகின்றன. துரதிஷ்டவசமாக இலங்கையில் 2009 மே போர் அழிவிற்குப் பின்னரும் இவ்வாறானதொரு நிலைமை உருவானது.

பொறுப்பு வாய்ந்த அதிகாரமொன்றினால் இந்நிலைமையை கரிசனையோடு அணுகித் தணிக்க முடியும். சரியான திட்டமிடலும், நேர்மையான நோக்குமிருந்தால் இச் சமூகச் சிதைவை பொருளாதார வழியிலும், உளவள ரீதியிலும் இலங்கை அரசாங்கத்தினால் அணுகியிருக்க முடியும். குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான பொறிமுறைகளையாவது ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இவ்விடயத்தில் அரசு அசமந்தப் போக்கினையே தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு அணுக்கமாக அதன் செயற்பாடுகள் ஒருபோதும் அமையப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. வெல்லப்பட்ட சமூகங்களின் கலாசார பொருளாதார சிதைவுகளை ஊக்குவிப்பதுவும், துரிதப்படுத்துவதும் அதிகாரங்கள் பரவலாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே.

இந்நிலையில் நுாலின் ஆசிரியர் சஞ்சயன் , மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதிகளுக்கு பயணம் செய்கிறார். போரில் எஞ்சிய மனிதர்களை சந்திக்கிறார். அந்த மனிதர்களின் அனுபவங்களையும், இன்றைய வாழ்வின் துயரங்களையும் பதிவு செய்கிறார். அவற்றை வெளிக்கொணர்கிறார். கூடவே அவரிடமிருந்து கேள்விகளும் எழுகின்றன. அரசினால் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தினைத் தாங்கிக்கொள்ள வேண்டியது யாருடைய பொறுப்பு என்று அவர் கேட்கிறார். இலங்கைக்கு வெளியேயான நாடுகளில் ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சி பெற்று வாழும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் போரில் சிதைந்த தமது சொந்தங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது தார்மீக கடமை என்கிறார். தவிரவும், போரின் அழிவுக்கு முன்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வலுவான கட்டமைப்புக்களோடு விளங்கிய அமைப்புக்களிடத்திலும் கேள்விகளை முன்வைக்கிறார். போருக்கு உதவியளித்த அமைப்புக்களும் மக்களும் தம் சொந்தங்களைக் கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டுகின்றார். சிதைந்தவற்றை மீளக் கட்டியமைக்க வேண்டிய பெரும் பொறுப்புடையவர்கள் புலம்பெயர் சமூகத்தவர்களே என்பதை எடுத்தியம்புகின்றார். இவ்வாறான துயரம் நிறைந்த சம்பவங்களும் கதைகளும் அவர்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையுடன் அவற்றை வெளிக்கொணர்கின்றார்.

போரின் காலத்தில் அதன் வெற்றிக்கதைகள் பெரும்பாலும், வடபகுதியை மையமுற்றே வெளியாகின. அவ்வாறே போரின் முடிவிலும் அதன் துயர நாட்களின் கதைகள் பெரும்பாலும், வன்னியை மையமுற்றே வெளிக் கொணரப்படுகின்றன. படுவான்கரை என்ற இந்நுால், போரின் சகல அடிகளையும் மௌனமாகத்தாங்கி, சிதைந்தும் அழிவுற்றும் போய், வெளிச்சொல்ல வழியேதும் அற்று தமக்குள் அழுந்திக் கொண்டிருந்த ஒரு மக்கட் கூட்டத்தின், மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தின் கதைகளை வெளிக்கொணர்கிறது. இவ்வாறான பதிவுகள், அரசால் கைவிடப்பட்ட சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறியை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் எழுநா இப்பிரதியை வெளியிடுகின்றது. அதுவும், குறிப்பாக வன்னிக்கு வெளியான சமூகத்தின் துயரத்தை வெளிக்கொணர்வது மிக அவசியமானதென எழுநா கருதுகின்றது.

எழுநா

டிசம்பர் 2012

2012 இல் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்த போது மட்டக்களப்பின் மேற்குப்பகுதியில் உள்ள படுவாங்கரை பகுதிக்கும் சென்றிருந்தேன். அங்கு வாழும் முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை பற்றியும், சந்திக்கும் சவால்கள் பற்றியதுமான நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்வது எனது நோக்கமாயிருந்தது.

அப் பயணத்தின் பின், பல கேள்விகள் எனக்குள் எழுந்தன.

ஏன் முன்னாள் போராளிகளின் இன்றைய வறுமைநிலையும், வாழ்க்கைச்சிரமங்களும், புலம்பெயர் ஊடகங்களில் அதிக கவனம் பெறுவதில்லை.? ஏன் அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்காளர்களாக இருந்த புலம்பெயர் அமைப்புக்களாலும், மற்றும் பொது அமைப்புக்களாலும், புலம்பெயர்ந்த நாடுகளின் அரசியல்வாதிகள் என கூறிக்கொள்பவர்களாலும் பொதுமக்களிடத்தில் கொண்டு செல்லப்படவில்லை?

விடுதலைக்காக தங்கள் வாழ்வினையே அர்ப்பணித்த போராளிகளை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வாறு இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துபோனது?

போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட பெரும் பொருளாதார வளமும், மக்களிடையே செல்வாக்குமுள்ள அமைப்புக்கள், ஏன் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞை சற்றேனும் இன்றி இயங்குகிறார்கள்?

கேள்விகள் நீண்டன. அவை என் மனச் சாட்சியை சுட்டன. மற்றவர்களை விடலாம், நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று மனச்சாட்சி கேட்டதன் காரணமாகவே இப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.

இதில் உள்ள இரண்டு பதிவுகள் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவை. அவையும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கைப்போராட்டங்களைக் கூறுகின்றன. ஏனையவை படுவாங்கரைக்குச் சென்று வந்த பின்னான காலத்தில் எழுதப்பட்டு எனது இணையப் பதிவுகளில் வெளியானவை.

முன்னாள் போராளிகளின் வாழ்க்கையினை நான் பதிவுசெய்யத் தொடங்கிய பின்னர் அவர்களது வாழ்க்கைத் துயரங்களை பொதுமக்கள் கூடுமிடங்களிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். அவ்வாறு எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

ஆயினும், முன்னாள் போராளிகளின் வாழ்க்கைச் சோகங்கள் பரந்தளவிளவில் புலம்பெயர்ந்த மக்களிடத்தில் பரவுவதை விரும்பாத சில புலம்பெயர் அமைப்புக்களும், மனிதர்களும் இருக்கின்றார்கள் என்பதை இப்பதிவுகளின் பின்னர் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் எனக்கு கற்றுத்தந்திருக்கின்றன.

முன்னாள் போராளிகள் பற்றிய எனது பத்திகளும், பேட்டிகளும் வெளிவந்தபின்னர் சில இணையத்தளங்கள் என் மீது அநாகரீகமான விமர்சனங்களையும், தனிமனிதச் சாடல்களையும் முன்வைத்தார்கள்.

விமர்சனங்களை ஏற்க முடியதவர்களும், சுயவிமர்சனத்திற்கு தம்மை உட்படுத்திக் கொள்ளாதவர்களும், குறுகிய கருத்துக்களைக்கொண்ட பொது அமைப்புக்களும் எம்மிடம் இருக்கின்றன. இவை எமது சமூகத்தை வளமானதோர் பாதையில் இட்டுச்செல்லப்போவதில்லை என்பது வேதனையான உண்மை.

இது தவிர, பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் பொது அரங்குகளில் கருத்துக்களை முன்வைத்து உரையாடுகின்ற பண்பு தமிழர்களிடத்தில், மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனாலேயே இன்னொருவரின் கருத்து மீதான சகிப்புத்தன்மை நம்மிடையே அற்றநிலை தொடர்கிறது. இது வளமானதல்ல என்பது எனது கருத்து.

போர்முடிவுற்று மூன்றரை வருடங்களின் பின்னான இன்றுவரை, முன்னாள் போராளிகளின் வலிகளும், வாழ்க்கைப் படுகளும் பெருமளவில் வெளியே வரவில்லை. இந் நிலை தொடருமானால், சில வருடங்களில் எமது தலைமுறையினருக்கு விடுதலைப்போரும், போரின் பின்னான காலங்களும், முன்னாள் போராளிகள் எவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளது அமைப்புக்களால் மறக்கடிக்கப்பட்டார்கள் என்ற விபரங்களும் கிடைக்காமல் போகலாம்.

இந்நிலையிலேயே எனது பயணத்தில் நான் நேரடியாக சந்தித்த போராளிகளின் கதைகளை, வாழ்க்கைப் பாதையில் அவர்களது வலியை, எவருக்கும் கேட்காத அவர்களது குரலை பதிவு செய்வது முக்கியம் எனக் கருதினேன். ஒரு இனத்தின் சரித்திரத்தை படைக்கச் சென்றவர்களின் வாழ்க்கையின் மிகவும் வேதனையான பகுதியை வெளிச்சொல்ல முயற்சித்தேன். அதனை இப்புத்தகத்தினூடாக ஆவணப்படுத்திருக்கிறேன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் எத்தனையோ நினைவெழுச்சிநாட்களும், மாவீரர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இவை ஒருபோதும் தவறானவை அல்ல. அவசியமானவையே. அதேவேளை இன்று தமது வாழ்வினை இழந்து, அங்கவீனர்களாக, நோயாளிகளாகளாக, மனப்பிறழ்வுற்றவர்களாக வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளைப்பற்றி நம்மில் யாராவது பேசுகின்றோமா? இல்லையே. ஏன்? இதற்கான காரணங்கள் என்ன?

என்னிடம் இதற்கான பதில் இல்லை எனினும், யதார்த்தமாக சிந்தித்தால், காரணம் இதுவாகவே இருக்க முடியும். அதாவது முன்னாள் போராளிகள் புலம்பெயர் அரசியற்சந்தையில் விற்பனைசெய்யப்படமுடியாத பண்டங்களாக இருக்கிறார்கள் என்பதே அது. எனவே அரசியல் வியாபாரிகளிடத்தில் இவர்கள் பற்றிய பிரஞ்ஞை சற்றேனும் இல்லாது போயிருக்கிறது.

அரசியல்வாதிகள் எப்போதும் தமக்கு இலாபத்தையும் வருமானத்தையும் தரும் கருத்துக்களையும், செய்கைகளையும் மட்டுமே ஆதரிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல.

அங்கவீனமான, பார்வையிழந்த, நோயுற்ற, வறுமையில்வாடும், உளநிலைபாதிக்கப்பட்ட போராளிகளுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு பொது வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை. அவை பற்றிய விழிப்புணர்ச்சியை முன்னைய அமைப்புக்கள் ஏற்படுத்தவில்லை. தாயக நிலத்தில் வாடும் மனிதர்களை கருத்தில் கொள்ளாமலே, இவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்குகிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. மேற்கூறியவற்றைப் பற்றி துணிந்து எவரும் பேசுவதில்லை, எழுதுவதில்லை. இருப்பினும் நாம் இது பற்றி பேசித்தான் ஆகவேண்டும். அதற்கான எனது பங்களிப்பினை இப்புத்தகத்தின் மூலமாக ஆரம்பித்துவைத்திருக்கிறேன். உங்களின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பாபாக்கிறேன். எனக்கு என்றும், மனிதாபிமானமற்ற அரசியலைவிட, மனிதாபிமானமே முக்கியத்துவமாகிறது.

இப் புத்தகமானது புனைவு எழுத்துக்களை கொண்டதல்ல. இவை கற்பனையான கதைகள் அல்ல. அனைத்தும் உண்மையானவை. இவற்றில் வருகிற மனிதர்கள் நான் நேரடியாக சந்தித்தவர்கள். துயரங்களைச் சுமந்தபடி இரத்தமும் சதையுமாக என் முன்னால் இருந்து உரையாடியவர்கள். தமது வாழ்வின் பெரும் பகுதியை விடுதலைப் போரில் கழித்தவர்கள். தமது குடும்ப உறுப்பினர்களை விடுதலைப் போரிற்காக தாரை வார்த்தவர்கள்.

இந்தப் புத்தகத்தில் வரும் குழந்தைகள் தமது அப்பாக்களைத் தொலைத்திருக்கிறார்கள். பெண்கள் தமது துணையை இழந்திருக்கிறார்கள். அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை காணாதிருக்கிறார்கள். பலர் தங்கள் அவயங்களை சிதைத்திருக்கிறார்கள். இது அவர்களது வலி, அவர்களது விரக்தி, எதிர்காலத்திற்கான முனகும் குரல்.

நான் வெறுமனே எனது மொழியில் அந்த வலிகளையும், வறுமையையும், ஆதங்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றேன்.

போராளிகளின் இன்றைய வாழ்க்கை, போருக்குப் பிறகான அவர்களது மனநிலை, வறுமை, நோய்கள், அங்கவீனங்கள் என்பவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். அத்துடன், அவர்கள் தங்களின் வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதற்காக எடுக்கும் முயற்சிகளும், சமுகம் அவர்களை பார்க்கும் பார்வையையும், எமது சமூகத்தின் வக்கிர உணர்வுகள், முன்னாள் போராளிகளின் வறுமையை எவ்வாறு தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறன என்பதையும், எழுதியிருக்கின்றேன்.

தமது வறுமையின் நிமித்தம் போராளிகள், தமது உடல் உறுப்புக்களை விற்பனை செய்வதாகச் சொல்லும் நிலையில், புலம் பெயர்ந்து வாழும் நாம் பிரஞ்ஞை பூர்வமாக இணைந்து இயங்கினால், எவ்வாறு எமது வளங்களை அவர்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதையும் நண்பர்கள் வழங்கிய உதவிகளின் மூலம் அனுபவபூர்வமாக உணர்ந்து, அவற்றையும் கோடிட்டுக் காட்டியிருகிறேன்.

இவைபற்றிய உரையாடல்களும், பிரஞ்ஞையும், செயற்பாடுகளும் எமது சமூகத்தில் ஏற்படவேண்டும் என்பதே இப் புத்தகத்தின் நோக்கமாகும்.

இவை வெறுமனே வாசிப்பு அனுபவக் கதைகள் அல்ல. ஒவ்வொன்றும் உண்மையின் தரிசனங்கள். பொழுதைப் போக்க அல்லாமல், உங்கள் உறவுகளின் வாழ்க்கையினை அறியும் ஆவலுடன் வாசிக்கத்தொடங்குங்கள். அக்கதைகளின் உள்ளே நுழையுங்கள். அலைந்து திரியுங்கள். அந்த மாந்தர்களோடு மனதார உரையாடுங்கள். அவர்களின் வேதனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் அவர்களாக இருப்பின் அந்த வாழ்வை எப்படி எதிர்கொண்டிருப்பீர்கள் என்று உங்களையே கேள்விக்குட்படுத்துங்கள்;. அப்பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் உணர்வுபூர்வமாகச் சிந்தியுங்கள். அவர்களது வாழ்க்கையுடன் உங்களின் தற்கால வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள்;. நிட்சயமாய் உங்கள் அகவிளி திறந்துகொள்ளும். என் அகவிளி திறந்து கொண்டதும் இப்படிதான்.

முடிவில், இதனை வாசிக்கும் எவருக்காவது, முன்னாள் போராளிகளுக்கு அல்லது நலிவுற்றிருக்கும் மக்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுமாயின் இப் புத்தகத்தின் நோக்கம் நிறைவடைந்திருக்கிறது என்பேன் நான்.

தோழமையுடன்

சஞ்சயன்

ஒஸ்லோ, நோர்வே

27.11.2012